Revised Common Lectionary (Complementary)
7 “இப்பொழுது, மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்துக்கு உன்னைக் காவல்காரனாக நான் தேர்ந்தெடுக்கிறேன். எனது வாயிலிருந்து செய்தியை நீ கேட்டால், எனக்காக ஜனங்களை எச்சரிக்க வேண்டும். 8 நான் உனக்குச் சொல்லலாம்: ‘இந்தக் கெட்ட மனிதன் மரிப்பான்.’ பிறகு நீ எனக்காகப் போய் அவனை எச்சரிக்க வேண்டும். நீ அந்தப் பாவியை எச்சரிக்காமல் அவனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும்படி சொல்லாவிட்டால், பிறகு அவன் தான் செய்த பாவத்துக்காக மரிப்பான். ஆனால் அவனது மரணத்திற்கு நான் உன்னைப் பொறுப்பாளியாக்குவேன். 9 ஆனால் நீ அந்தப் பாவியைத் தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும்படியும், பாவம் செய்வதை நிறுத்தும்படியும் எச்சரிக்கை செய்தும் அவன் பாவம் செய்வதை நிறுத்த மறுத்துவிட்டால், பின் அவன் மரிப்பான். ஏனென்றால், அவன் பாவம் செய்தவன். ஆனால் நீ உன்னுடைய வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்கிறாய்.
ஜனங்களை அழிக்க தேவன் விரும்புகிறதில்லை
10 “எனவே, மனுபுத்திரனே, எனக்காக இஸ்ரவேல் வம்சத்தாரிடம் பேசு. அந்த ஜனங்கள் சொல்லலாம்: ‘நாங்கள் பாவம் செய்து சட்டங்களை மீறினோம். எங்கள் பாவங்கள் தாங்கமுடியாத அளவிற்குப் பாரமானவை. அந்தப் பாவங்களால் நாங்கள் கெட்டுப்போனோம். நாங்கள் உயிர் வாழ என்ன செய்யவேண்டும்?’
11 “நீ அவர்களிடம் சொல்ல வேண்டும். ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: என் உயிரின் மேல் ஆணையிடுகிறேன், நான் ஜனங்கள் மரிப்பதை, பாவிகள் கூட மரிப்பதைப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைவதில்லை. அவர்கள் மரிப்பதை நான் விரும்புவதில்லை. அந்தப் பாவி ஜனங்களும் என்னிடம் திரும்பி வருவதையே நான் விரும்புகிறேன். நான், அவர்கள் வாழ்வை மாற்றிக்கொண்டு உண்மையான வாழ்க்கை வாழ்வதை விரும்புகிறேன். எனவே என்னிடம் திரும்பி வா. தீமை செய்வதை நிறுத்து. இஸ்ரவேல் வம்சத்தாரே நீங்கள் ஏன் மரிக்க வேண்டும்?’
எ
33 கர்த்தாவே, உமது சட்டங்களை எனக்குப் போதியும்,
நான் அவற்றைப் பின்பற்றுவேன்.
34 நான் புரிந்துகொள்ள உதவும்.
நான் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
நான் அவற்றிற்கு முற்றிலும் கீழ்ப்படிவேன்.
35 கர்த்தாவே, என்னை உமது கட்டளைகளின் பாதையில் வழிநடத்தும்.
நான் அவ்வாழ்க்கை முறையை உண்மையாகவே நேசிக்கிறேன்.
36 செல்வந்தனாவதைப்பற்றி நினைப்பதைப் பார்க்கிலும் உமது
உடன்படிக்கையைப்பற்றி நினைக்க எனக்கு உதவும்.
37 கர்த்தாவே, பயனற்ற காரியங்களைப் பார்க்கவிடாதேயும்,
உமது வழியில் வாழ எனக்கு உதவும்.
38 ஜனங்கள் உம்மை மதிக்கும்படி உமது
ஊழியனுக்கு உறுதியளித்தபடியே செய்யும்.
39 கர்த்தாவே, நான் அஞ்சும் வெட்கத்தை எடுத்துப்போடும்.
உமது ஞானமுள்ள முடிவுகள் நல்லவை.
40 பாரும், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
எனக்கு நல்லவராக இருந்து, என்னை வாழவிடும்.
பிறரை நேசிப்பதே பிரமாணம்
8 எதற்காகவும் மற்றவர்களிடம் கடன் படாதிருங்கள். அன்புக்கு மட்டும் கடன்படுங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத்துகிற ஒருவன் உண்மையில் சட்டமுழுவதிற்கும் அடிபணிந்தவனாய் இருப்பான். 9 இவற்றையெல்லாம் நான் எதற்காகக் கூறுகிறேன் என்றால் “விபசாரம் செய்யாதிருங்கள். கொலை செய்யாதிருங்கள். களவு செய்யாதிருங்கள். அடுத்தவர்க்கு உரிய பொருட்களை விரும்ப வேண்டாம்.”(A) சட்டவிதி இவற்றைச் சொல்கிறது. இவை எல்லா கட்டளைகளும், “தன்னை தானே நேசித்துக்கொள்வது போலவே ஒருவன் அடுத்தவனையும் நேசிக்க வேண்டும்”(B) என்று ஒரு விதியையே சொல்கின்றன. 10 அன்பானது மற்றவர்களுக்குத் தவறு செய்யாதது. எனவே, அன்பு சட்டவிதியின் நிறைவேறுதலாய் இருக்கிறது.
11 நாம் மிக முக்கியமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதால் இவற்றைக் கூறுகிறேன். நீங்கள் தூக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் இதுதான். நாம் முதலில் நம்பியதைக் காட்டிலும் இரட்சிப்பின் காலம் நெருங்கிவிட்டது. 12 “இரவு” ஏறக்குறைய முடிந்து போனது. “பகல்” அநேகமாக முளைக்கத் தொடங்கி விட்டது. எனவே இருட்டுக்குச் சொந்தமான செயல்களை விட்டுவிடுவோம். வெளிச்சத்தின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம். 13 பகலுக்குரியவர்கள் செய்யத்தக்க செயல்களைச் சீராய் நாம் செய்வோம். களியாட்டமும், குடிவெறியும், வேசித்தனமும், காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நாம் இருக்கக் கூடாது. 14 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே ஆடையாக அணிந்துகொள்ளுங்கள். உங்கள் பாவ ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வது பற்றியும் தீய காரியங்களை செய்வது பற்றியும் யோசிக்காதீர்கள்.
ஒரு மனிதன் தவறு செய்தால்
(லூக்கா 17:3)
15 “உங்கள் சகோதரனோ அல்லது சகோதரியோ உங்களுக்கு ஏதாவது தீமை செய்தால், அவர் செய்த தீமையை அவரிடம் எடுத்துக் கூறுங்கள். அதைத் தனிமையில் அவனிடம் சொல்லுங்கள். அதை அவர் கவனமாகக் கேட்பாரானால், அவர் மீண்டும் உங்கள் சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ இருக்க நீங்கள் உதவி செய்தவர்களாவீர்கள். 16 ஆனால் நீங்கள் கூறுவதைக் கேட்க அவர் மறுத்தால், மீண்டும் இரண்டு மூன்று பேருடன் சென்று நடந்தவற்றை எடுத்துச் சொல்லுங்கள். அப்பொழுது, நடந்ததை உறுதிசெய்ய இரண்டு மூன்று பேர் இருப்பார்கள். 17 அப்பொழுதும் அவன் கேட்க மறுத்தால், சபையாரிடம் சொல்லுங்கள். சபையார் சொல்வதையும் கேட்காமற் போனால், தேவ நம்பிக்கையற்றவனைப்போல் அவனை நடத்துங்கள். வரி வசூல் செய்பவனைப்போல் நடத்துங்கள்.
18 “நான் உன்மையைச் சொல்லுகிறேன். நீங்கள் இவ்வுலகில் நியாயத்தைப் பேசும்பொழுது, அது தேவனின் நியாயமாக இருக்கும். இவ்வுலகில் நீங்கள் மன்னிப்பளித்தால் அது தேவனின் மன்னிப்பாக இருக்கும். 19 மேலும், நான் சொல்லுகிறேன். உங்களில் இருவர் இவ்வுலகில் எதைக் குறித்தேனும் ஒரே மனமுடையவர்களாயிருந்தால் அதற்காக நீங்கள் பிரார்த்திக்கலாம். நீங்கள் கேட்பது பரலோகத்தில் உள்ள எனது பிதாவால் நிறைவேற்றப்படும். 20 இது உண்மை. ஏனென்றால், இரண்டு மூன்று பேர் என்னில் விசுவாசம் வைத்துக் கூடினால் அவ்விடத்தில் நான் இருப்பேன்.”
2008 by World Bible Translation Center