Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 81

கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்களுள் ஒன்று.

81 நமது பெலனாகிய தேவனைப் பாடி மகிழ்ச்சியாயிருங்கள்.
    இஸ்ரவேலரின் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரியுங்கள்.
இசையைத் தொடங்குங்கள், தம்புராவை வாசியுங்கள்.
    வீணையையும் சுரமண்டலத்தையும் இசையுங்கள்.
மாதப்பிறப்பு நாளில் எக்காளம் ஊதுங்கள்.
    முழு நிலவின் நாளில் எக்காளம் ஊதுங்கள்.
    அப்போது நம் விடுமுறை ஆரம்பமாகிறது.
அது இஸ்ரவேலருக்கு சட்டமாக வகுக்கப்பட்டிருந்தது.
    தேவன் அக்கட்டளையை யாக்கோபிற்குக் கொடுத்தார்.
தேவன் யோசேப்பை[a] எகிப்திலிருந்து அழைத்துச் சென்றபோது அவனோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார்.
    எகிப்தில், எங்களால் புரிந்துகொள்ள முடியாத மொழியை நாங்கள் கேட்டோம்.

தேவன், “உனது தோள்களிலிருந்து பாரத்தை இறக்கியிருக்கிறேன்.
    உன்னிடமிருந்து பணியாட்களின் கூடையை விழப்பண்ணினேன்.
நீங்கள் தொல்லைகளில் சிக்குண்டிருந்தீர்கள்.
    நீங்கள் உதவிக்காகக் கூப்பிட்டீர்கள், நான் உங்களை விடுவித்தேன்.
புயல் மேகங்களில் மறைந்திருந்து உங்களுக்குப் பதிலளித்தேன்.
    மேரிபாவின் தண்ணீரண்டையில் நான் உங்களை சோதித்தேன்.”

“எனது ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
    அப்போது என் உடன்படிக்கையை உங்களுக்குத் தருவேன்.
    இஸ்ரவேலே, நான் சொல்வதை தயவாய்க்கேள்!
வேற்றுநாட்டார் தொழுதுகொள்ளும் பொய் தெய்வங்களை
    நீ தொழுதுகொள்ளாதே.
10 கர்த்தராகிய நானே உன் தேவன்.
    நான் உன்னை எகிப்திலிருந்து வரவழைத்தேன்.
இஸ்ரவேலே, உன் வாயைத் திற,
    நான் உன்னைப் போஷிப்பேன்.

11 “ஆனால் என் ஜனங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை.
    இஸ்ரவேல் எனக்குக் கீழ்ப்படியவில்லை.
12 எனவே அவர்கள் செய்ய விரும்பியதைச் செய்யுமாறு அனுமதித்தேன்.
    இஸ்ரவேலர் அவர்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.
13 என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு நடந்தால்,
    என் விருப்பப்படியே வாழ்ந்தால்,
14 அப்போது நான் அவர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பேன்.
    இஸ்ரவேலருக்குத் தொல்லை தரும் ஜனங்களைத் தண்டிப்பேன்.
15 கர்த்தருடைய பகைவர்கள் அச்சத்தால் நடுங்குவார்கள்.
    அவர்கள் என்றென்றைக்கும் தண்டிக்கப்படுவார்கள்.
16 தேவன் அவரது ஜனங்களுக்குச் சிறந்த கோதுமையை கொடுப்பார்.
    அவர்கள் திருப்தியடையும்வரை கன்மலையானவர் அவரது ஜனங்களுக்குத் தேனைக் கொடுப்பார்.”

ஆதியாகமம் 24:1-27

ஈசாக்குக்கு ஒரு மனைவி

24 ஆபிரகாம் மிகவும் வயோதிபனாக இருந்தான். அவனையும், அவன் செய்த காரியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். ஆபிரகாமுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தான். அவனே ஆபிரகாமுக்குச் சொந்தமான எல்லாவற்றுக்கும் பொறுப்பானவனாக இருந்தான். ஒரு நாள் ஆபிரகாம் அவனை அழைத்து, “எனது தொடையின் கீழ் உன் கைகளை வை. நான் உன்னிடமிருந்து ஒரு வாக்குறுதியை வாங்க விரும்புகிறேன், வானத்திற்கும் பூமிக்கும் அதிபதியான தேவனாகிய கர்த்தருக்கு முன்னால் எனக்கு வாக்குறுதிக் கொடு. கானானியர்களிடமிருந்து ஒரு பெண்ணை என் குமாரன் மணந்துகொள்ள நீ அனுமதிக்கக் கூடாது. நாம் இவர்கள் மத்தியில் வாழ்கிறோம். எனினும் ஒரு கானான் தேசத்துப் பெண்ணை, அவன் மணந்துகொள்ளக் கூடாது. எனது சொந்த ஜனங்கள் இருக்கிற என் நாட்டிற்குத் திரும்பிப்போ. அங்கு என் குமாரன் ஈசாக்குக்கு மணமுடிக்க ஒரு பெண்ணைப் பார்த்து அவளை இங்கு அழைத்துக்கொண்டு வா” என்றான்.

அதற்கு அந்த வேலைக்காரன், “ஒருவேளை அந்தப் பெண் இந்த நாட்டிற்கு என்னோடு வர மறுக்கலாம். எனவே உங்கள் குமாரனையும் என்னோடு நான் அழைத்துச் செல்லலாமா?” என்று கேட்டான்.

ஆபிரகாம் அவனிடம், “இல்லை என் குமாரனை அந்த இடத்திற்கு உன்னோடு அழைத்துச் செல்லக் கூடாது. வானத்திற்கு தேவனாகிய கர்த்தர் என்னை என் தாய் நாட்டிலிருந்து இங்கு அழைத்து வந்துள்ளார். அது என் தந்தைக்கும் என் குடும்பத்திற்கும் தாய்நாடு. ஆனால் கர்த்தர் இந்தப் புதிய நாடே எனது குடும்பத்தின் தாய்நாடு என்று வாக்குறுதிச் செய்திருக்கிறார். எனவே கர்த்தர் தன் தூதனை உனக்கு முன் அனுப்புவாராக. பெண்ணைத் தேர்ந்தெடுக்க உனக்கு உதவுவார். ஆனால் அந்தப் பெண் உன்னோடு இங்கு வர சம்மதிக்காவிட்டால் உனது வாக்குறுதியிலிருந்து நீ விடுதலை பெறுகிறாய். ஆனால் என் குமாரனை மட்டும் அங்கு அழைத்துக்கொண்டு போகக் கூடாது” என்று கூறினான்.

அதன்படி, அந்த வேலைக்காரன் தன் எஜமானனின் காலடியில் தன் கையை வைத்து வாக்குறுதி செய்தான்.

பெண்ணைத் தேடுதல்

10 ஆபிரகாமின் வேலைக்காரன் பத்து ஒட்டகங்களோடு அங்கிருந்து புறப்பட்டான். அவன் தன்னோடு பலவித அழகான பரிசுப்பொருட்களையும் எடுத்து சென்றான். அவன் நாகோரின் நகரமான மெசொப்பொத்தாமியாவிற்குச் சென்றான். 11 அவன் ஊருக்கு வெளியே இருந்த கிணற்றினருகே வந்தடைந்தான். அது பெண்கள் தண்ணீர் எடுக்க வரும் மாலை நேரம். அங்கே ஒட்டகங்களைத் தங்கச் செய்தான்.

12 அவன், “என் எஜமானனின் தேவனாகிய கர்த்தாவே இன்று அவரது குமாரனுக்குப் பெண் தேட உதவி செய்யும். என் எஜமானரான ஆபிரகாம் மீது கருணை காட்டும். 13 நான் இந்தக் கிணற்றருகில் நின்றுகொண்டிருக்கிறேன். நகருக்குள் இருந்து ஏராளமான இளம் பெண்கள் தண்ணீரெடுக்க வருகின்றனர். 14 ஈசாக்குக்குச் சரியான பெண் யாரென்று அறிந்துகொள்ள நான் ஒரு சிறப்பான அடையாளத்துக்காகக் காத்திருக்கிறேன். அதாவது, நான் ஒரு பெண்ணிடம், ‘குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும்’ என்று சொல்லும்போது எந்தப் பெண், ‘குடி உன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் தருவேன்’ என்று கூறுகிறாளோ அவளையே ஈசாக்கின் மனைவியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி நடந்தால், அவளே நீர் ஈசாக்கிற்காக தேர்ந்தெடுத்த சரியான பெண் என்றும் அதன்பின் நீர் என் எஜமானன் மீது கருணை காட்டினீர் என்றும் நம்புவேன்” என்றான்.

பெண்ணைக் கண்டுபிடித்தல்

15 அந்த வேலைக்காரன் இவ்வாறு பிரார்த்தனை செய்து முடிப்பதற்குள் ஒரு இளம் பெண் தண்ணீரெடுக்க கிணற்றருகே வந்தாள். இவள் பெத்துவேலின் குமாரத்தியாகிய ரெபெக்காள். பெத்துவேல் நாகோருக்கும் மில்காளுக்கும் பிறந்த குமாரன். நாகோர் ஆபிரகாமின் சகோதரன். அவள் தோளில் குடத்தை வைத்துக்கொண்டு தண்ணீரெடுக்க வந்தாள். 16 அவள் மிகவும் அழகுள்ளவளும், புருஷனை அறியாத கன்னிகையுமாயிருந்தாள். அவள் கிணற்றருகே சென்று தண்ணீரெடுத்து தன் குடத்தை நிறைத்தாள். 17 வேலைக்காரன் அவளிடம் போய், “நான் குடிக்கக் கொஞ்சம் தண்ணீரை உன் குடத்திலிருந்து தா” என்று கேட்டான்.

18 உடனே ரெபெக்காள் தோளிலிருந்து குடத்தை இறக்கி, “இதைக் குடியுங்கள் ஐயா” என்றாள். 19 அவன் குடித்து முடித்ததும் அவள், “உங்கள் ஒட்டகங்கள் குடிக்கவும் நான் தண்ணீர் ஊற்றுவேன்” என்று சொல்லி, 20 குடத்திலுள்ள தண்ணீர் முழுவதையும் ஒட்டகம் குடிக்குமாறு ஊற்றினாள். பிறகு கிணற்றுக்குப் போய் மேலும் தண்ணீரெடுத்து வந்து எல்லா ஒட்டகங்களுக்கும் ஊற்றினாள்.

21 வேலைக்காரன் அவளை அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தான். கர்த்தர் அவனுக்கு ஒரு பதிலளித்தார் என்பதையும் அவனது பயணத்தை வெற்றிகரமானதாக்கினார் என்பதையும் உறுதிப்படுத்த விரும்பினான். 22 ஒட்டகங்கள் தண்ணீர் குடித்த பின் வேலைக்காரன் அவளுக்கு அரைச் சேக்கல் எடையுள்ள தங்கக் காதணியும், பத்து சேக்கல் எடையுள்ள இரண்டு பொன் கடகங்களையும் கொடுத்தான். 23 அவன் அவளிடம், “உனது தந்தை யார்? உன் தந்தையின் வீட்டில் நாங்கள் இரவில் தங்க இடம் உண்டா” என்று கேட்டான்.

24 அதற்கு ரெபக்காள், “என் தந்தை பெத்துவேல். அவர் நாகோர் மில்க்காள் ஆகியோரின் குமாரன்” என்றாள். 25 பிறகு அவள், “எங்கள் வீட்டில், உங்கள் ஒட்டகங்களுக்கு உணவும், உங்களுக்குப் படுக்க இடமும் உண்டு” என்றாள்.

26 வேலைக்காரன் பணிந்து கர்த்தரைத் தொழுதுகொண்டான். 27 அவன், “எனது எஜமான் ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. அவருக்கு கர்த்தர் கருணை காட்டி தமது உண்மையை நிரூபித்துள்ளார். என் எஜமானனின் குமாரனுக்கு ஏற்ற பெண்ணிடம் கர்த்தர் என்னை வழி நடத்திவிட்டார்” என்றான்.

2 யோவான்

மூப்பனாகிய நான், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணிற்கும்[a] அவளது குழந்தைகளுக்கும் எழுதுவது. நான் உங்கள் அனைவரையும் உண்மையான நற்செய்தியின்படி நேசிக்கிறேன். உண்மையை அறிந்த அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள். நம் அனைவருக்குள்ளும் இருக்கிற உண்மையால் நாங்கள் உங்களை நேசிக்கிறோம். என்றென்றைக்கும் இந்த உண்மை நம்மோடு கூட இருக்கும்.

பிதாவாகிய தேவனிடமிருந்தும், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் கிருபையும், இரக்கமும், சமாதானமும், அமைதியும் நம்மோடு இருப்பதாக. உண்மை, அன்பு, ஆகியவற்றின் மூலமாக நாம் இந்த ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம்.

உங்கள் குழந்தைகளில் சிலரைக் குறித்து அறிவதில் நான் சந்தோஷமடைகிறேன். பிதா நமக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் உண்மையின் வழியைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்து நான் சந்தோஷப்படுகிறேன். இப்போதும், அன்பான பெண்மணியே, நான் உனக்குக் கூறுகிறேன், நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். இது புதுக் கட்டளையல்ல, தொடக்கத்திலிருந்தே, நாம் பெற்ற அதே கட்டளையாகும். நாம் வாழும்படியாக அவர் கட்டளையிட்ட வழியில் வாழ்வதே அன்புகாட்டுவதாகும். தேவனின் கட்டளையும் இதுவே. நீங்கள் அன்பின் வாழ்க்கையை வாழுங்கள். தொடக்கத்தில் இருந்தே நீங்கள் கேள்விப்பட்ட கட்டளையும் இது தான்.

இப்போது உலகில் அநேக தவறான போதகர்கள் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து ஒரு மனிதனானார் என்பதை இந்தத் தவறான போதகர்கள் சொல்ல மறுக்கிறார்கள். இந்த உண்மையை சொல்ல மறுக்கிற மனிதன் தவறான போதகனும் போலிக் கிறிஸ்துவுமாயிருக்கிறான். எச்சரிக்கையாயிருங்கள்! உங்கள் செயல்களுக்குரிய நற்பலனை இழந்துவிடாதிருங்கள். உங்களுக்குரிய எல்லாப் பலன்களையும் பெறுவதில் எச்சரிக்கையாக இருங்கள்.

கிறிஸ்துவின் போதனைகளை மட்டுமே பின்பற்றுவதை ஒருவன் தொடரவேண்டும். கிறிஸ்துவின் போதனைகளை ஒருவன் மாற்றினால், அம்மனிதனிடம் தேவன் இல்லை. ஆனால் தேவனின் போதனைகளைத் தொடர்ந்து ஒரு மனிதன் பின்பற்றினால், அம்மனிதன் பிதா, குமாரன் ஆகிய இருவரையும் ஏற்றுக்கொள்கிறான். 10 ஒருவன் இப்போதனையைக் கொண்டுவராமல் உங்களிடம் வந்தால் அவனை உங்கள் வீட்டில் ஏற்காதீர்கள். அவனை வரவேற்காதீர்கள். 11 நீங்கள் அவனை ஏற்றுக்கொண்டால் அவனது தீயசெயல்களுக்கும் நீங்களும் உதவியவராவீர்கள்.

12 நான் உங்களிடம் கூற வேண்டியது மிகுதி. ஆனால் தாளையும், மையையும் பயன்படுத்த விரும்பவில்லை. பதிலாக, உங்களிடம் வர எண்ணுகிறேன். அப்போது நாம் ஒருமித்துப் பேச இயலும். அது நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். 13 தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் சகோதரியின் குழந்தைகள் தங்கள் அன்பை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center