Revised Common Lectionary (Complementary)
நூன்
105 கர்த்தாவே, உமது வார்த்தைகள்
என் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும்.
106 உமது சட்டங்கள் நல்லவை.
நான் அவற்றிற்குக் கீழ்ப்படிவேனென உறுதியளிக்கிறேன்.
நான் என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
107 கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன்.
தயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும்.
108 கர்த்தாவே, என் துதியை ஏற்றுக்கொள்ளும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
109 என் வாழ்க்கை எப்போதும் ஆபத்துள்ளதாயிருக்கிறது.
ஆனால் நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
110 தீயோர் என்னைக் கண்ணியில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள்.
ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருந்ததில்லை.
111 கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் பின்பற்றுவேன்.
அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
112 உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு நான் எப்போதும் கடினமாக முயல்வேன்.
சட்டங்களை ஜனங்கள் கேட்கிறார்கள்
23 தன்னை சந்திக்கும்படி யூதர் தலைவர்களையும் எருசலேம் தலைவர்களையும் ராஜா யோசியா அழைத்தான். 2 பிறகு ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றான். யூத ஜனங்களும் எருசலேமிலுள்ள ஜனங்களும் அவனோடு சென்றனர். ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் ஜனங்களுள் முக்கியமானவர்களும் முக்கியம் இல்லாதவர்களும் அவனோடு சென்றனர். பிறகு ராஜா உடன்படிக்கைப் புத்தகத்தை வாசித்துக்காட்டினான். இந்த சட்டப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்டது. ராஜா அதனை வாசித்தபோது ஜனங்களால் அதனைக் கேட்க முடிந்தது.
3 ராஜா (மேடை மேல்) தூண் அருகே நின்றுக் கொண்டு கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்துக்கொண்டான். கர்த்தரைப் பின்பற்றவும், அவரது கட்டளைகளுக்கும் உடன்படிக்கைக்கும் கீழ்ப்படியவும் ஒப்புக்கொண்டான். அவன் அதனை முழு மனதோடும் ஆத்துமாவோடும் செய்வதாக ஒப்புக்கொண்டான். இப்புத்தகத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியவும் ஒப்புக்கொண்டான். சுற்றி நின்ற ஜனங்களும் உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்வதாக உறுதி கூறினார்கள்.
4 பிறகு ராஜா தலைமை ஆசாரியனான இல்க்கியாவுக்கும் மற்ற ஆசாரியர்களுக்கும் வாயில் காவலர்களுக்கும் பாகாலுக்கும் அசெரியாவிற்கும் வானுலக நட்சத்திரங்களுக்கும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த சகல வழிபாட்டுப் பொருட்களையும் நீக்கி வெளியே போடச் சொன்னான். பிறகு யோசியா அவற்றை எருசலேமிற்கு வெளியே கீதரோன் வெளிகளில் எரித்துப்போட்டான். பின் அவற்றின் சாம்பலை பெத்தேலுக்கு கொண்டுவந்தனர்.
5 யூத ராஜா ஆசாரியர்களாகப் பணி செய்ய மிகச் சாதாரண ஆட்களைத் தேர்ந்தெடுத்திருந்தான். இவர்கள் ஆரோன் வம்சத்தில் உள்ளவர்கள் அல்ல. அப்பொய் ஆசாரியர்கள் மேடையில் எருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள யூத நகரங்களிலும் நறுமணப் பொருட்களை எரித்து வந்தனர். அவர்கள் பாகால், சூரியன், சந்திரன், கிரகங்கள், வானுலக நட்சத்திரங்கள் போன்றவற்றுக்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். ஆனால் இல்க்கியா அப்போலி ஆசாரியர்களைத் தடுத்து நிறுத்திவிட்டார்.
6 யோசியா கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அசேரா என்னும் தேவதையின் விக்கிரகத்தை அகற்றினான். அதனை நகரத்திற்கு வெளியே கொண்டு போய் கீதரோன் வெளியில் எரித்துப்போட்டான். பின் அவன் எரிந்தவற்றை அடித்து சாம்பலாக்கி சாதாரண ஜனங்களின் கல்லறையில் தூவிவிட்டான்.
7 பின் ராஜாவாகிய யோசியா கர்த்தருடைய ஆலயத்திற்குள் விபசாரம் செய்து கொண்டிருந்த ஆண்களின் வீடுகளை நொறுக்கினான். பெண்களும் அவ்வீடுகளைப் பயன்படுத்தி வந்தனர். அசேராவுக்காக என்றும் (பொய்த் தேவதைக்காக) அங்கே சிறு கூடாரங்களை அமைத்திருந்தனர். 8-9 அப்போது, ஆசாரியர்கள் எருசலேமிற்கு பலிகளைக் கொண்டு வந்து ஆலயத்திற்குள் பலியிடவில்லை. ஆசாரியர்கள் யூத நாடு முழுவதிலும் வாழ்ந்தனர். ஆனால் பொய்த் தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து பலியிட்டு வழிபாடு செய்துவந்தனர். இப்பொய் தெய்வங்களுக்கான மேடைகள் கேபா முதல் பெயெர்செபா மட்டும் நிறைந்திருந்தன. ஆசாரியர்கள் சாதாரண ஜனங்களோடு புளிப்பில்லாத அப்பங்களை உண்டு வந்தனர். எருசலேமின் ஆலயத்தில் ஆசாரியர்களுக்கென இருந்த சிறப்பு இடத்தில் அவர்கள் உண்ணவில்லை. ஆனால் ராஜா (யோசியா) அப்பொய்த் தெய்வங்களின் மேடைகளை அழித்து, அந்த ஆசாரியர்களை எருசலேமிற்கு அழைத்து வந்தான். இல்க்கியாவும் பட்டணத்து வாசலுக்குப் போகும் வழியின் இடது புறமிருந்த யோசுவாவினால் கட்டப்பட்ட மேடையை அழித்தான். (யோசுவா அந்நகரை ஆட்சி செய்தவன்).
யூத மக்கள் பஸ்காவைக் கொண்டாடியது
21 யோசியா ராஜா ஜனங்களுக்கு ஒரு கட்டளையிட்டான். அவன், “உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவைக் கொண்டாடுங்கள். உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே செய்யுங்கள்” என்றான்.
22 நியாயாதிபதிகள் இஸ்ரவேலை ஆளத் தொடங்கிய நாள் முதல் ஜனங்கள் பஸ்கா பண்டிகையை இந்த விதத்தில் கொண்டாடியதில்லை. இஸ்ரவேல் ராஜாக்களோ யூத ராஜாக்களோ இதுபோல் சிறப்பாகப் பஸ்காவை கொண்டாடவில்லை. 23 யோசியாவின் 18வது ஆட்சியாண்டில் அவர்கள் எருசலேமில் கர்த்தருக்காக பஸ்கா பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
24 யோசியா, இஸ்ரவேலிலும் யூதாவிலும் ஜனங்களால் தொழுதுகொண்டு வந்த சிறு தெய்வங்களையும் மற்ற மந்திரவாதிகளையும் குறிச்சொல்லுகிறவர்களையும் விக்கிரகங்களையும் அழித்துவிட்டான். இவன், அதனை இல்க்கியாவால் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள சட்டத்திற்குக் கீழ்ப்படியவே இவ்வாறு நடந்துக்கொண்டான்.
25 யோசியாவைப்போன்ற ஒரு ராஜா இதற்கு முன்னால் எப்போதும் இருந்ததில்லை. இவனுக்குப் பின்னும் இருந்ததில்லை. யோசியா தன் முழு மனதோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் கர்த்தருடைய பக்கம் திரும்பினான். வேறு எந்த ராஜாவும் யோசியாவைப் போன்று மோசேயின் சட்டத்தைப் பின்பற்றவில்லை.
ஆன்மாவுக்குரிய பொக்கிஷம்
4 தேவன் தன் கிருபையால் இந்தப் பணியை எங்களுக்குக்கொடுத்தார். ஆகையால் இதனை விட்டுவிடமாட்டோம். 2 ஆனால் இரகசியமானதும் வெட்கப்படத்தக்கதுமான வழிகளில் இருந்து விலகி இருக்கிறோம். நாங்கள் தந்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. தேவனுடைய போதனைகளையும் இழிவாக்குவதில்லை. நாங்கள் உண்மையைத் தெளிவாகப் போதிக்கிறோம். நாங்கள் யார் என்பதை இப்படித்தான் மக்களுக்குப் புலப்படுத்துகிறோம். இது, நாம் தேவனுக்கு முன் எத்தகைய மக்கள் என்பதையும் அவர்கள் மனதிற்குக் காட்டுகிறது. 3 நாம் பரப்புகிற நற்செய்தி மறை பொருளாக இருக்கலாம். ஆனால் அது கெட்டுப்போகிறவர்கட்கே மறை பொருளாய் இருக்கும். 4 இந்த உலகத்தை ஆள்பவனாகிய[a] சாத்தான் விசுவாசம் இல்லாதவர்களின் மனதைக் குருடாக்கினான். அவர்களால் கிறிஸ்துவின் நற்செய்தியின் ஒளியைப் பார்க்க இயலாது. கிறிஸ்துவின் மகிமைக்குரிய நற்செய்தியையும் அறியார்கள். கிறிஸ்து மட்டுமே தேவன் போன்று இருப்பவர். 5 நாங்கள் எங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர் என்றும் நாங்கள் இயேசுவுக்காக உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறோம். 6 “இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கும்” என்று தேவன் ஒருமுறை சொன்னார். எங்கள் இதயங்களில் வெளிச்சத்தை ஏற்படுத்திய தேவனும் இவரே ஆவார். தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் முகத்தில் தெரியச் செய்வதன் மூலம் அவர் எங்களுக்கு ஒளியைத் தந்தார்.
7 இப்பொக்கிஷத்தை நாம் தேவனிடமிருந்து பெற்றுள்ளோம். ஆனால் நாங்களோ பொக்கிஷத்தைத் தாங்கியுள்ள மண் ஜாடிகளைப் போன்றே இருக்கிறோம். இப்பேராற்றலானது எங்களிடமிருந்து அல்ல, தேவனிடம் இருந்தே வருகிறது என்பதை இது காட்டும். 8 எங்களைச் சுற்றிலும் தொல்லைகள் உள்ளன. ஆனால் அவற்றால் நாங்கள் தோல்வி அடையவில்லை. அவ்வப்போது செய்வது தெரியாமல் திகைக்கிறோம். ஆனால் முயற்சி செய்வதை ஒருபோதும் கைவிடவில்லை. 9 நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் தேவன் எங்களைக் கைவிடவில்லை. சில நேரங்களில் நாங்கள் தூக்கியெறியப்படுகிறோம். ஆனால் அழிந்துபோகவில்லை. 10 எங்கள் சொந்த சரீரங்களில் இயேசுவின் மரணத்தைச் சுமந்து திரிகிறோம். அதனால் எங்கள் சரீரங்களில் இயேசுவின் வாழ்வும் புலப்படவேண்டும் என்பதற்காகவே மரணத்தைச் சுமந்து திரிகிறோம். 11 நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்றாலும் இயேசுவுக்காக எப்போதும் மரண ஆபத்தில் உள்ளோம். அழியும் நம் சரீரங்களில் இயேசுவின் வாழ்வைக் காணமுடியும் என்பதற்காகவே இது எங்களுக்கு நேர்ந்திருக்கிறது. 12 ஆகையால் மரணம் எங்களுக்குள் பணிபுரிகிறது; வாழ்வு உங்களுக்குள் பணிபுரிகிறது.
2008 by World Bible Translation Center