Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஏசாயா 11:1-10

சமாதானத்தின் ராஜா வந்துகொண்டிருக்கிறார்

11 ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து ஒரு குழந்தை துளிர் தோன்றி வளரத் தொடங்கியது. அந்தக் கிளையானது ஈசாயின் குடும்பத்தில் வேரிலிருந்து தோன்றி வளரும். கர்த்தருடைய ஆவி அந்தச் சிறு (பிள்ளையின்) துளிர்மேல் இருக்கும். ஆவியானவர் ஞானம், புரிந்துகொள்ளுதல், வழிநடத்துதல், வல்லமை போன்றவற்றைத் தருகிறார். ஆவியானவர் அந்த பிள்ளைக்கு கர்த்தரைத் தெரிந்துகொள்ளவும், அவரை மதிக்கவும் உதவுவார். இந்தப் பிள்ளை கர்த்தருக்கு மரியாதை கொடுக்கும். பிள்ளையை இது மகிழ்ச்சி உடையதாகச் செய்யும்.

அவர் தமது கண்கண்டபடி நியாயம்தீர்க்கமாட்டார். அவர் தமது காதில் கேட்டபடி தீர்ப்பு அளிக்கமாட்டார். 4-5 அவர் ஏழை ஜனங்களை நீதியுடனும் பொறுமையுடனும் நியாயம்தீர்ப்பார். இந்த நாட்டிலுள்ள ஏழை ஜனங்களுக்குச் சரியாகத் தீர்ப்பு செய்து காரியங்களைச் செய்வார். அவர் ஜனங்களை அடிக்கவேண்டும் என்று முடிவு செய்தால், பிறகு அவர் கட்டளையிடுவார், அந்த ஜனங்கள் அடிக்கப்படுவார்கள். ஜனங்கள் மரிக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தால், அவர் கட்டளையிட, பாவிகள் கொல்லப்படுவார்கள். நன்மையும் நீதியும் இந்தக் குழந்தைக்குப் பலத்தைக் கொடுக்கும். அவை அவருக்கு இடுப்பைச்சுற்றிக் கட்டப்படும் கச்சையைப்போல இருக்கும்.

அப்போது, ஓநாய்கள் ஆட்டுக்குட்டிகளோடு சமாதானமாய் வாழும், புலிகள் வெள்ளாட்டுக் குட்டிகளோடு சமாதானமாய் படுத்துக்கொள்ளும். கன்றுக்குட்டியும் இளஞ்சிங்கமும் காளையும் சமாதானமாக ஒரே இடத்தில் வாழும். ஒரு சிறு பிள்ளை அவைகளை வழிநடத்துவான். பசுக்களும் கரடியும் சமாதானமாக சேர்ந்து மேயும். அவற்றின் குட்டிகள் ஒன்றையொன்று காயப்படுத்தாமல் சேர்ந்து படுத்துக்கொள்ளும். சிங்கமானது, பசுவைப்போன்று புல்லைத் தின்னும். பாம்புகளும் கூட ஜனங்களைக் கடிக்காது. ஒரு குழந்தை நல்லபாம்பின் புற்றினருகில் விளையாட முடியும். ஒரு குழந்தை ஒரு விஷமிக்க பாம்பின் துளையில் கையை விடமுடியும்.

இவையனைத்தும் சமாதானத்தைக் காட்டும். ஒருவரும் மற்றவரைத் துன்புறுத்தமாட்டார்கள். எனது பரிசுத்தமான மலையிலுள்ள ஜனங்கள் பொருட்களை அழிக்க விரும்பமாட்டார்கள். ஏனென்றால், ஜனங்கள் உண்மையிலேயே கர்த்தரை அறிந்திருக்கின்றனர். கடல் நிறைய தண்ணீர் இருப்பது போன்று அவர்களிடம் கர்த்தரைப்பற்றிய அறிவு நிறைந்திருக்கும்.

10 அப்போது, ஈசாயின் குடும்பத்தில் இருந்து ஒருவர் வருவார். அவர் ஒரு கொடியைப்போல இருப்பார்.

“அக்கொடி” அனைத்து நாடுகளையும் காட்டி அவரைச் சுற்றிவரும். நாடுகளெல்லாம் தான் செய்ய வேண்டியதைப்பற்றி அவரிடம் கேட்கும். அவர் இருக்கின்ற இடமெல்லாம் மகிமை நிறைந்திருக்கும்.

சங்கீதம் 72:1-7

சாலொமோனுக்கு.

72 தேவனே, ராஜாவும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும்.
    உமது நல்லியல்பை ராஜாவின் குமாரனும் அறிந்துகொள்ள உதவும்.
ராஜா உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும்.
    உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.
தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
ஏழைகளுக்கு ராஜா நல்லவனாக இருக்கட்டும்.
    திக்கற்றோருக்கு அவன் உதவட்டும்.
    அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும்.

சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் ராஜாவுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
    என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
வயலில் விழும் மழையைப்போன்றிருக்க ராஜாவுக்கு உதவும்.
    பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.
அவன் ராஜாவாக இருக்கும்போது நன்மை மலரட்டும்.
    சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.

சங்கீதம் 72:18-19

18 இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.
    தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.
19 அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்!
    அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!

ரோமர் 15:4-13

வேதவசனத்தினால் பொறுமையும் ஆறுதலும் உண்டாகிறது. அதனால் நாம் நம்பிக்கை உள்ளவர்களாகும்படிக்கு முன்பு எழுதப்பட்டவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதப்பட்டன. பொறுமையும் பலமும் தேவனிடமிருந்து வந்தன. இயேசு கிறிஸ்து விரும்புகிற வழியை நீங்கள் உங்களுக்குக்குள் ஏற்றுக்கொள்ள தேவனிடம் பிரார்த்திப்பேன். எனவே இதய ஒற்றுமையுடனும் ஒருமித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனைப் புகழ்வீர்கள். கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டார். எனவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தேவனுக்கு மகிமையைக் கொண்டு வரும். இதனால் யூதர்கள் தேவனுடைய இரக்கத்துக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். கிறிஸ்து யூதர்களுக்குப் பணியாளர் ஆனார். இதன் மூலம் அவர் தேவனுடைய வாக்குறுதிகள் உண்மையானவை எனக் காட்டினார். கிறிஸ்து யூதர்களின் தந்தையர்க்குக் கொடுத்த வாக்குறுதியை நிரூபித்துவிட்டார். இதனால் யூதரல்லாதவர்கள் தேவனுடைய இரக்கத்துக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது:

“யூதர் அல்லாத மக்களுக்கிடையில் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
    உமது பெயரைப் பாராட்டிப் பாடுவேன்.”(A)

10 மேலும் வேதவாக்கியம் கூறுகிறது:

“யூதரல்லாதவர்களாகிய நீங்கள் தேவனுடைய மக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடையுங்கள்.”(B)

11 மேலும் வேத வாக்கியம் கூறுகிறது:

“யூதரல்லாத நீங்கள் கர்த்தரைப் புகழுங்கள்.
    அனைத்து மக்களும் கர்த்தரைப் புகழ வேண்டும்.”(C)

12 ஏசாயா இப்படி கூறுகிறார்:

“ஈசாயின் குடும்பத்திலிருந்து ஒருவர் வருவார்.
    யூதரல்லாதவர்களை அவர் ஆள்வார்.
    அவரால் யூதரல்லாதவர்களும் நம்பிக்கை அடைவார்கள்.”(D)

13 தேவன் வழங்கும் விசுவாசம் உங்களை சமாதானத்தாலும், சந்தோஷத்தாலும் நிரப்பட்டும் என்று பிரார்த்திக்கிறேன். பிறகு உங்களுக்கு மேலும், மேலும் விசுவாசம் பெருகும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் அது நிரம்பி வழியும்.

மத்தேயு 3:1-12

ஸ்நானகன் யோவானின் திருப்பணி

(மாற்கு 1:1-8; லூக்கா 3:1-9,15-17; யோவான் 1:19-28)

அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் யூதேயாவின் வனாந்தரத்தில் வருகை புரிந்து, “உங்கள் மனதையும் வாழ்வையும் சீர்ப்படுத்துங்கள். ஏனென்றால் பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று போதனை செய்தான்.

“‘கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள்;
அவரது பாதையை சீர்ப்படுத்துங்கள்’
    என்று வனாந்தரத்தில் ஒருவன் சத்தமிடுகிறான்”(A)

என தீர்க்கதரிசியாகிய ஏசாயா குறிப்பிட்டது இந்த யோவான் ஸ்நானகனைப் பற்றிதான்.

ஒட்டக உரோமத்தால் ஆன ஆடையை அணிந்து தோல் கச்சையொன்றைத் தன் இடுப்பில் இவன் கட்டியிருந்தான். வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவன் உணவாயிருந்தன. யோவானின் போதனையைக் கேட்க எருசலேமிலிருந்தும் யூதேயா முழுவதிலிருந்தும் யோர்தான் நதிக்கரை முழுவதிலிருந்தும் மக்கள் வந்தனர். அம்மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கைச் செய்தனர். யோவான் அவர்களுக்கு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் கொடுத்தான்.

ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்கு பரிசேயர் மற்றும் சதுசேயரில் பலரும் வந்தனர். அவர்களைக் கண்டதும் யோவான், “நீங்களெல்லோரும் பாம்பின் குட்டிகள். வரப்போகும் தேவனின் கோபத்திலிருந்து தப்பிச்செல்ல உங்களை எச்சரித்தது யார்? உங்கள் மனமும் வாழ்வும் திருந்திவிட்டன என்பதை நிரூபிக்கக் கூடிய செயலை நீங்கள் செய்யவேண்டும். நாம் ஆபிரகாமின் பிள்ளைகள் எனப் பெருமை பேசித் திரியலாம் என எண்ணாதீர்கள். நான் சொல்கிறேன், ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை இங்குள்ள கற்களிலிருந்தும் உண்டாக்க தேவன் வல்லவர். 10 மரங்களை வெட்டக் கோடரி தயாராக இருக்கிறது. நற்கனிகளைத் தராத எல்லா மரங்களும் வெட்டப்பட்டுத் தீயிலிடப்படும்.

11 “உங்கள் மனமும் வாழ்வும் திருந்திவிட்டன என்பதைக் காட்ட நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் தருகிறேன். ஆனால், என்னிலும் பெரியவர் ஒருவர் வரப்போகிறார். அவர் காலணிகளை அவிழ்க்கவும் நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 12 அவர் தானியங்களைச் சுத்தம் செய்யத் தயாராக வருவார். அவர் பதரிலிருந்து நல்ல தானிய மணிகளைப் பிரித்தெடுத்துத் தன் களஞ்சியத்தில் சேர்ப்பார். பதரையோ அணைந்து போகாத தீயிலிட்டு எரிப்பார்” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center