Revised Common Lectionary (Complementary)
செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
12 கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்.
நல்லோர் மடிந்துபோயினர்.
பூமியிலுள்ள ஜனங்களிடையே உண்மையான நம்பிக்கையுள்ளோர் எவருமில்லை.
2 அண்டை வீட்டாரிடம் ஜனங்கள் பொய் பேசுகிறார்கள்.
பொய்களால் அயலானைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
3 பொய் கூறும் நாவை கர்த்தர் அறுத்தெறிவார்.
தங்களையே புகழ்வோரின் நாக்குகளை கர்த்தர் துண்டித்தெறிவார்.
4 அந்த ஜனங்கள், “நாங்கள் தக்க பொய்யுரைப்போம் எங்கள் நாக்குகளின் மூலமாக, நாங்கள் பெரியவர்களாவோம்.
யாரும் எங்கள் எஜமானராக இயலாது!” என்கிறார்கள்.
5 ஆனால் கர்த்தரோ, “தீயோர் ஏழைகளின் பொருள்களைத் திருடுவார்கள்.
உதவியற்ற ஜனங்களின் பொருள்களை அபகரிப்பார்கள்.
களைப்புற்றோரை இப்போது நான் எழுந்து பாதுகாப்பேன்” என்கிறார்.
6 கர்த்தருடைய சொற்கள் உண்மையும் தூய்மையுமானவை.
நெருப்பில் உருக்கப்பட்ட வெள்ளியைப்போல் அவை தூய்மையானவை.
ஏழுமுறை உருக்கித் தூய்மையாக்கப்பட்ட வெள்ளியைப் போல் அவை தூய்மையானவை.
7 கர்த்தாவே, உதவியற்ற ஜனங்களைப் பாதுகாத்தருளும்.
இப்போதும் எப்போதும் அவர்களைப் பாதுகாப்பீராக.
8 அத்தீயோர் முக்கியமானவர்களைப் போன்று நடிப்பார்கள்.
உண்மையில் அவர்கள் போலி நகைகளைப் போன்றவர்கள்.
அவை விலையுயர்ந்ததாய் தோன்றும் ஆனால் அவை மலிவானவை.
12 ஜனங்கள் சில வழிகளைச் சரியானது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வழி மரணத்திற்கே அழைத்துச் செல்லும்.
13 ஒருவன் வெளியே சிரித்துக்கொண்டிருந்தாலும் உள்ளே சோகமாக இருக்கலாம். அச்சிரிப்புக்குப் பிறகும்கூட, அத்துயரமானது அவனோடேயே இருக்கிறது.
14 தீயவர்கள் தாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை பெறுவார்கள். நல்லவர்கள் தாம் செய்யும் நற்செயல்களுக்காக விருது பெறுகிறார்கள்.
15 முட்டாள் தான் கேட்கிற அனைத்தையும் நம்புகிறான். ஆனால் அறிவுள்ளவனோ எல்லாவற்றைப்பற்றியும் ஆழமாகச் சிந்திக்கிறான்.
16 அறிவுள்ளவன் கர்த்தரை மதித்து, தீயவற்றிலிருந்து விலகி இருப்பான். ஆனால் அறிவற்றவனோ எதையும் சிந்திக்காமல் செய்வான்; எச்சரிக்கையாக இருக்கமாட்டான்.
17 விரைவில் கோபம்கொள்கிறவன் முட்டாள்தனமான செயல்களையே செய்வான். ஆனால் அறிவுள்ளவனோ பொறுமையாக இருப்பான்.
18 அறிவற்றவர்கள் தங்கள் மூடத்தனத்திற்காகத் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அறிவாளிகளோ ஞானத்தையே வெகுமதியாகப் பெறுவார்கள்.
19 நல்லவர்கள் தீயவர்களுக்கு எதிராக வெற்றிப் பெறுவார்கள். தீயவர்கள் அவர்களின் உதவிக்காகக் கெஞ்சும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
20 ஏழைகளுக்கு அவர்களுடைய பக்கத்து வீட்டாரும்கூட நண்பர்களாக இருப்பதில்லை. ஆனால் செல்வர்களுக்கோ ஏராளமான நண்பர்கள்.
21 உனது பக்கத்து வீட்டுக்காரர்களைப்பற்றி கெட்டவற்றை நினையாதே. நீ மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், ஏழை ஜனங்களிடம் இரக்கமாக இரு.
22 தீமைபுரியத் திட்டமிடும் எவனுமே தவறு செய்தவனாகிறான். ஆனால் ஒருவன் நன்மை செய்ய முயல்வதால் நிறைய நண்பர்களைப் பெறுகிறான். எல்லோரும் அவனை நேசித்து நம்புகின்றனர்.
23 நீ கடினமாக உழைத்தால் உனக்குத் தேவையானதை நீ பெறுவாய். ஆனால் நீ எதையும் செய்யாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஏழையாவாய்.
24 அறிவுள்ளவர்கள் செல்வத்தால் வெகுமதிகளைப் பெறுவர். ஆனால் அறிவற்றவர்களோ முட்டாள்தனத்தையே பெறுகின்றனர்.
25 உண்மையைப் பேசுகிறவர்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். பொய் சொல்லுகிறவன் மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகிறான்.
26 கர்த்தரை மதிக்கிறவன் பாதுகாப்பாக இருப்பான். அவனது பிள்ளைகளும் பாதுகாப்பாக வாழ்வார்கள்.
27 கர்த்தரை மதிப்பது உண்மையான வாழ்வைத் தரும். அது அவன் மரண வலையில் விழாமல் அவனைக் காப்பாற்றும்.
28 ஒரு ராஜா ஏராளமான ஜனங்களை ஆட்சி செய்தால் அவன் பெரியவன் ஆகிறான். ஆனால் ஆளுவதற்கு ஜனங்கள் இல்லாதவனோ ஒன்றும் இல்லாதவன் ஆகிறான்.
29 பொறுமையுள்ளவன் மிகவும் புத்திசாலி. விரைவில் கோபப்படுபவன் முட்டாள் என்பதைக் காட்டிக்கொள்கிறான்.
30 மனதில் சமாதானம் உள்ள ஒருவன், உடலிலும் ஆரோக்கியமாக இருப்பான். ஆனால் பொறாமையோ நோய்களுக்குக் காரணமாகிறது.
31 ஏழைகளுக்குத் துன்பம் செய்கிறவன் தேவனுக்கு மரியாதை செய்யாதவன் எனக் காண்பித்துக்கொள்கிறான். ஏனென்றால் இருவரையும் தேவனே படைத்துள்ளார். ஆனால் ஒருவன் ஏழைகளிடம் தயவாக இருந்தால் அவன் தேவனையும் மகிமைப்படுத்துகிறான்.
யூத ஆலோசனைச் சங்கத்தின் முன்
4 பேதுருவும், யோவானும் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சில மனிதர்கள் அவர்களிடம் வந்தார்கள். யூத ஆசாரியர்களும், ஆலயத்தைப் பாதுகாக்கும் வீரர்களுக்குத் தலைவனும், சில சதுசேயரும் அவர்களோடு வந்திருந்தனர். 2 பேதுருவும், யோவானும் மக்களிடம் போதித்தவற்றைக் குறித்து அவர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். அப்போஸ்தலர்கள் இயேசுவைக் குறித்து மக்களுக்குக் கூறும்போது, மக்கள் மரணத்திலிருந்து இயேசுவின் வல்லமையால் உயிர்த்தெழுவார் என்பதையும் போதித்தார்கள். 3 யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்துச் சிறையில் அடைத்தனர். அது ஏற்கெனவே இரவு நேரமாயிருந்தது. எனவே அடுத்த நாள்வரைக்கும் பேதுருவையும் யோவானையும் சிறையில் வைத்திருந்தார்கள். 4 ஆனால் பேதுருவும் யோவானும் செய்த போதனைகளைக் கேட்ட மக்களில் பலரும் அவர்கள் கூறியவற்றை விசுவாசித்தனர். அவர்களின் எண்ணிக்கை சுமார் ஐயாயிரம் பேராக இருந்தது.
5 மறுநாள் யூதத் தலைவர்களும், அதிகாரிகளும், வேதபாரகரும் எருசலேமில் சந்தித்தனர். 6 அன்னா, காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோரும் அங்கிருந்தனர். தலைமை ஆசாரியனின் குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்தனர். 7 எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் பேதுருவையும் யோவானையும் அவர்கள் நிறுத்தினர். யூத அதிகாரிகள் பல முறை அவர்களிடம், “ஊனமுற்ற இந்த மனிதனை எவ்வாறு குணப்படுத்தினீர்கள்? எந்த வல்லமையைப் பயன்படுத்தினீர்கள்? யாருடைய அதிகாரத்தினால் நீங்கள் இதைச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.
8 அப்போது பேதுரு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான். அவன் அவர்களை நோக்கி, “மக்களின் அதிகாரிகளே, முதிய தலைவர்களே, 9 ஊனமுற்ற மனிதனுக்கு ஏற்பட்ட நல்ல காரியத்தைக் குறித்து எங்களை வினவுகிறீர்களா? அவனைக் குணப்படுத்தியது யார் என்று எங்களை வினவுகிறீர்களா? 10 நீங்கள் யாவரும், யூத மக்கள் அனைவரும், இம்மனிதன் நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் குணம் ஆக்கப்பட்டான் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார். இந்த மனிதன் ஊனமுற்றவனாயிருந்தான். ஆனால் இப்போது இயேசுவின் வல்லமையால் குணம் பெற்று உங்களுக்கு முன்பாக எழுந்து நிற்கிறான்.
11 “‘கட்டிடம் கட்டுபவர்களாகிய நீங்கள் இயேசுவை முக்கியமற்ற கல்லைப் போன்று கருதினீர்கள்.
ஆனால் இந்தக் கல்லோ மூலைக்கல்லாயிற்று.’(A)
12 மக்களை இரட்சிக்கக் கூடியவர் இயேசு ஒருவரே. உலகத்தில் மக்களை இரட்சிக்கும் வல்லமையுடன் தரப்பட்ட நாமம் இயேசுவினுடையது மட்டுமே. இயேசுவின் மூலமாகவே நாம் இரட்சிக்கப்படவேண்டும்!” என்றான்.
2008 by World Bible Translation Center