Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 73

புத்தகம் 3

ஆசாபின் துதிப்பாடல்.

73 தேவன் உண்மையாகவே இஸ்ரவேலுக்கு நல்லவர்.
    பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
நான் தவறி வீழ்ந்து,
    பாவம் செய்யத் தொடங்கும் நிலையில் இருந்தேன்.
கெட்ட ஜனங்கள் வெற்றியடைந்ததைக் கண்டேன்.
    பெருமைபாராட்டும் அந்த ஜனங்களைக் கண்டு பொறாமைகொள்ள ஆரம்பித்தேன்.

அந்த ஜனங்கள் ஆரோக்கியமுள்ளவர்கள்.
    வாழ்வதற்கு அவர்கள் போராட வேண்டாம்.
எங்களைப்போல அந்தப் பெருமைக்காரர்கள் தொல்லைப்படுவதில்லை.
    பிறரைப்போன்று அவர்களுக்குத் தொல்லைகள் இல்லை.
எனவே அவர்கள் பெருமைமிக்கவர்களாய், வெறுக்கத்தக்கவர்களாய் உள்ளனர்.
    அவர்கள் அணியும் அணிகலன்களையும் அழகிய ஆடைகளையும் போன்று அது விரைவில் கண்டுகொள்ளத்தக்கது.
தாங்கள் பார்க்கும் எதையும் அந்த ஜனங்கள் விருப்பினால் போய் தங்களுக்கென அதை எடுத்துக்கொள்கின்றனர்.
    தாங்கள் செய்ய நினைப்பவற்றை அவர்கள் செய்து முடிக்கிறார்கள்.
பிறரைப்பற்றிக் கொடிய, தீய காரியங்களை அவர்கள் கூறுகிறார்கள்.
    அவர்கள் பெருமையும் பிடிவாதமும் உடையவர்கள்.
    அவர்கள் எப்போதும் மற்றவர்களிடமிருந்து அனுகூலம் பெறும் வழிகளைத் திட்டமிடுகிறார்கள்.
தங்களைத் தெய்வங்களென்று அப்பெருமைக்காரர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.
    பூமியின் ராஜாக்களென்று அவர்கள் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள்.
10 எனவே தேவஜனங்கள் கூட அவர்களிடம் சென்று
    அவர்கள் கூறுபவற்றைச் செய்கிறார்கள்.
11 அத்தீயோர், “நாங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தேவன் அறியார்!
    உன்னதமான தேவன் அறியார்! என்கிறார்கள்.”

12 அப்பெருமைக்காரர்கள் துர்க்குணம் மிக்கவர்கள்.
    ஆனால் அவர்கள் செல்வந்தராகவும், நாளுக்கு நாள் செல்வத்தை பெறுவோராகவும் காணப்படுகிறார்கள்.
13 எனவே நான் ஏன் என் இருதயத்தைத் தூயதாக்க வேண்டும்?
    ஏன் நான் எனது கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்?
14 தேவனே, நான் நாள் முழுவதும் துன்புறுகிறேன்,
    ஒவ்வொரு நாள் காலையிலும் நீர் என்னைத் தண்டிக்கிறீர்.

15 தேவனே, நான் இவற்றைக் குறித்துப் பிறரிடம் பேச விரும்பினேன்.
    அப்படிச் செய்தால் உமது ஜனங்களுக்கு நான் துரோகம் செய்தவனாவேன்.
16-17 இக்காரியங்களைப் புரிந்துகொள்ள நான் மிகவும் முயன்றேன்.
    ஆனால் நான் உமது ஆலயத்திற்குச் செல்லும்வரை இவையனைத்தும் எனக்கு மிகவும்கடினமாயிருந்தன.
நான் தேவனுடைய ஆலயத்திற்குப் போனேன்,
    அப்போது அதை நான் உணர்ந்துக்கொண்டேன்.
18 தேவனே, நீர் அந்த ஜனங்களை ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறீர்.
    விழுந்து அழிவதென்பது அவர்களுக்கு மிகவும் சுலபமானது.
19 தொல்லைகள் திடீரென நேரும், அப்போது அப்பெருமைக்காரர்கள் அழிந்துவிடுவார்கள்.
    கொடியக் காரியங்கள் அவர்களுக்கு நேரிடும், அப்போது அவர்கள் அழிந்துப்போவார்கள்.
20 கர்த்தாவே, நாங்கள் விழித்தெழும்போது மறந்துவிடும் கனவைப்போல அந்த ஜனங்கள் இருப்பார்கள்.
    எங்கள் கனவில் வரும் பெரும் விலங்குகளைப்போல் அந்த ஜனங்கள் மறைந்துபோகும்படி நீர் செய்வீர்.

21-22 நான் மூடனாக இருந்தேன்.
    நான் செல்வத்தைக் குறித்தும் கெட்ட ஜனங்களைக் குறித்தும் எண்ணிக் கலங்கினேன்.
தேவனே, நான் மனங்கலங்கி, உம்மிடம் கோபங்கொண்டேன்.
    மூடத்தனமும் அறியாமையுமுள்ள மிருகத்தைப் போல் நடந்து கொண்டேன்.
23 எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் உள்ளன.
    நான் எப்போதும் உம்மோடிருக்கிறேன்.
    தேவனே, நீர் என் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்.
24 தேவனே, நீர் என்னை வழிநடத்தி, எனக்கு நல்ல போதனையைத் தருவீர்.
    பின்பு என்னை மகிமைக்கு நேராக வழி நடத்துவீர்.
25 தேவனே, பரலோகத்தில் நீர் எனக்காக இருக்கிறீர்.
    நான் உம்மோடிருக்கையில் இப்பூமியில் எனக்கு என்ன வேண்டும்?
26 என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம்,
    ஆனால் நான் நேசிக்கும் கன்மலையாகிய தேவன் எனக்காக இருக்கிறீர்.
    என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர்.

27 தேவனே, உம்மை விட்டு விலகும் ஜனங்கள் அழிந்துபோவார்கள்.
    உமக்கு உண்மையாயில்லாத ஜனங்களை நீர் அழித்துவிடுவீர்.
28 என்னைப் பொருத்தமட்டும், நான் தேவனிடம் வந்திருக்கிறேன், அதுவே எனக்கு நலமானது.
    என் ஆண்டவராகிய கர்த்தரை என் பாதுகாப்பிடமாக வைத்திருக்கிறேன்.
    தேவனே, நீர் செய்துள்ள எல்லாவற்றையும் குறித்துக் கூற நான் வந்துள்ளேன்.

யோபு 40:6-14

அப்போது புயலிலிருந்து கர்த்தர் மீண்டும் யோபுவிடம் பேசினார். கர்த்தர்,

“யோபுவே, உன் இடையைக் கட்டிக்கொண்டு
    நான் உன்னிடம் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில் கூறு,

“யோபுவே, நான் நியாயமற்றவனென்று நீ நினைக்கிறாயா?
    என்னை தவறிழைக்கும் குற்றவாளியாகக் கூறுவதால், நீ களங்கமற்றவனெனக் காட்ட நினைக்கிறாய்!
யோபுவே, உன் கரங்கள் தேவனுடைய கரங்களைப்போன்று வலிமையுடையனவா?
    இடிபோல முழங்க வல்ல தேவனுடைய குரலைப்போன்ற குரல் உனக்கு உள்ளதா?
10 நீ தேவனைப் போலிருந்தால், பெருமையடைந்து உன்னை நீயே மகிமைப்படுத்திக் கொள்ள முடியும்.
    நீ தேவனைப் போலிருந்தால், ஆடையைப்போன்று மகிமையையும், மேன்மையையும் நீ உடுத்திக்கொள்ள முடியும்.
11 நீ தேவனைப் போலிருந்தால், உன் கோபத்தை வெளிப்படுத்தி அகங்காரமுள்ள ஜனங்களைத் தண்டிக்க முடியும்.
    அந்த அகங்காரமுள்ள ஜனங்களைத் தாழ்மையுள்ளோராக்க முடியும்.
12 ஆம், யோபுவே, அந்த அகங்காரம் நிரம்பிய ஜனங்களைப் பார், அவர்களைத் தாழ்மையுள்ளோராக்கு.
    தீயோர் நிற்குமிடத்திலேயே அவர்களை நசுக்கிவிடு.
13 அகங்காரமுள்ள ஜனங்கள் எல்லோரையும் மண்ணுக்குள் புதைத்துவிடு.
    அவர்கள் உடலை துணியால் சுற்றி அவர்களின் கல்லறைக்குள் வைத்துவிடு.
14 யோபுவே, உன்னால் இக்காரியங்களையெல்லாம் செய்ய முடிந்தால், அப்போது நான்கூட உன்னை வாழ்த்துவேன்.
    உன் சொந்த ஆற்றலால் உன்னை நீ காப்பாற்றிக்கொள்ளக்கூடும் என்பதை நான் ஒப்புக்கொள்வேன்.

யோபு 42:1-6

யோபு கர்த்தருக்குப் பதில் கூறுகிறான்

42 அப்போது யோபு கர்த்தருக்குப் பதிலளித்தான். யோபு,

“கர்த்தாவே! நீர் எல்லாவற்றையும் செய்ய வல்லவர் என்பதை நான் அறிவேன்.
    நீர் திட்டமிடுகிறீர், எதனாலும் உமது திட்டங்களை மாற்றவோ, தடுக்கவோ முடிவதில்லை.
கர்த்தாவே, நீர் இக்கேள்வியைக் கேட்டீர்: ‘இம்மூடத்தனமான காரியங்களை சொல்லிகொண்டிருக்கும் இந்த அஞ்ஞானி யார்?’
    கர்த்தாவே, நான் புரிந்துகொள்ளாதவற்றைக் குறித்துப் பேசினேன்.
    என்னால் புரிந்துகொள்ள முடியாத மிகுந்த வியக்கத்தக்க காரியங்களைப் பற்றிப் பேசினேன்.

“கர்த்தாவே, நீர் என்னிடம், ‘யோபுவே கவனி,
    நான் உன்னோடு பேசுவேன், நான் உன்னிடம் கேள்விகளைக் கேட்பேன், நீ எனக்குப் பதில் கூறுவாய்’ என்றீர்.
கர்த்தாவே, முன்பு, நான் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
    இப்போது என் சொந்தக் கண்களாலேயே உம்மைப் பார்க்கிறேன்!
கர்த்தாவே, நான் என்னைக் குறித்து வெட்கமுறுகிறேன்.
    கர்த்தாவே, நான் மன்னிப்புக் கேட்கிறேன்.
நான் தூசியிலும் சாம்பலிலும் உட்கார்ந்து கொண்டே,
    என் இருதயத்தையும் என் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ள உறுதியளிக்கிறேன்” என்றான்.

லூக்கா 22:31-33

நம்பிக்கையை இழக்காதீர்கள்

(மத்தேயு 26:31-35; மாற்கு 14:27-31; யோவான் 13:36-38)

31 “ஓர் உழவன் கோதுமையைப் புடைப்பது போல சாத்தான் உங்களைச் சோதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளான். சீமோனே, சீமோனே (பேதுரு), 32 நீ உன் நம்பிக்கையை இழக்காதிருக்கும்படியாக நான் பிரார்த்தனை செய்திருக்கிறேன். நீ என்னிடம் திரும்பி வரும்போது உன் சகோதரர்கள் வலிமையுறும்பொருட்டு உதவி செய்” என்றார்.

33 ஆனால் பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நான் உங்களுடன் சிறைக்கு வரத் தயாராக இருக்கிறேன். நான் உங்களோடு இறக்கவும் செய்வேன்” என்றான்.

லூக்கா 22:54-62

பேதுருவின் மறுதலிப்பு

(மத்தேயு 26:57-58,69-75; மாற்கு 14:53-54,66-72; யோவான் 18:12-18,25-27)

54 அவர்கள் இயேசுவைச் சிறைபிடித்துக் கொண்டுபோனார்கள். தலைமை ஆசாரியனின் வீட்டுக்கு இயேசுவை அவர்கள் கொண்டுவந்தார்கள். பேதுரு அவர்களைத் தொடர்ந்து வந்தான். ஆனால் அவன் இயேசுவின் அருகே வரவில்லை. 55 வீரர்கள் வீட்டுக்கு வெளிப்புறத்தில் நடுவில் நெருப்பை வளர்த்து அதைச் சுற்றி உட்கார்ந்தார்கள். பேதுருவும் அவர்களோடு அமர்ந்தான். 56 ஒரு வேலைக்காரச் சிறுமி பேதுரு உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். நெருப்பின் ஒளியில் அவனை அவள் பார்க்க முடிந்தது. அவனுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். பின்பு அவள், “இந்த மனிதனும் அவரோடு (இயேசு) கூட இருந்தான்” என்றாள்.

57 ஆனால் பேதுரு, அது உண்மையில்லை என்றான். அவன், “பெண்ணே, எனக்கு அவரைத் தெரியாது” என்றான். 58 சற்று நேரத்துக்குப் பின் இன்னொருவன் பேதுருவைப் பார்த்து, “இயேசுவைப் பின்பற்றும் சீஷர்களில் நீயும் ஒருவன்” என்றான்.

ஆனால் பேதுரு “மனிதனே, நான் அவரது சீஷர்களில் ஒருவன் அல்ல” என்றான்.

59 ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், இன்னொரு மனிதன், “இது உண்மை, இந்த மனிதன் அவரோடு இருந்தான். இவன் கலிலேயாவைச் சேர்ந்தவன்” என்றான். “எனக்கு நிச்சமாகத் தெரியும்” என்று அம்மனிதன் மீண்டும் வலியுறுத்தினான்.

60 ஆனால் பேதுரு, “மனிதனே. நீ கூறுகிற விஷயத்தைக்குறித்து எனக்குத் தெரியாது” என்றான்.

பேதுரு இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே சேவல் கூவியது. 61 அப்போது கர்த்தர் (இயேசு) திரும்பி பேதுருவின் கண்களைக் கூர்ந்து நோக்கினார். “சேவல் காலையில் கூவும் முன்னரே நீ மூன்று முறை என்னை உனக்குத் தெரியாது என்று கூறுவாய்” என்று கர்த்தர் ஏற்கெனவே தன்னிடம் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்தான். 62 பின்னர் பேதுரு வெளியே சென்று மனமுருகி அழுதான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center