Revised Common Lectionary (Complementary)
மஸ்கீல், என்னும் தாவீதின் பாடல்.
32 பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
பாவங்கள் மூடப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
2 குற்றமற்றவன் என கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
3 தேவனே, நான் மீண்டும், மீண்டும் உம்மிடம் ஜெபித்தேன்.
ஆனால் என் இரகசியமான பாவங்களைக் குறித்து நான் பேசவில்லை.
நான் ஜெபித்த ஒவ்வொரு முறையும் என் வலிமை குன்றிப்போயிற்று.
4 தேவனே, இரவும் பகலும் என் வாழ்க்கையைமென்மேலும் கடினமாக்கினீர்.
கோடைக் காலத்தில் உலர்ந்து காய்ந்துபோன நிலத்தைப் போலானேன்.
5 என் பாவங்களையெல்லாம் கர்த்தரிடம் அறிக்கையிடத் தீர்மானித்தேன்.
கர்த்தாவே, உம்மிடம் என் பாவங்களைப் பற்றிக் கூறினேன்.
என் குற்றங்கள் எதையும் நான் மறைக்கவில்லை. என் பாவங்களை எல்லாம் நீர் எனக்கு மன்னித்தீர்.
6 இதற்காக, தேவனே, உம்மைப் பின்பற்றுவோர் உம்மிடம் ஜெபம் செய்யவேண்டும்.
வெள்ளப் பெருக்கைப்போல் தொல்லைகள் வந்தாலும் உம்மைப் பின்பற்றுவோர் ஜெபிக்கவேண்டும்.
7 தேவனே, நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்.
என் தொல்லைகளிலிருந்து நீர் என்னைக் காக்கிறீர்.
நீர் என்னைச் சூழ்ந்து என்னைக் காக்கிறீர்.
எனவே நீர் என்னைப் பாதுகாத்த வகையை நான் பாடுகிறேன்.
8 கர்த்தர், “நீ வாழவேண்டிய வழியை உனக்கு போதித்து வழிநடத்துவேன்.
உன்னைக் காத்து உனக்கு வழிகாட்டியாயிருப்பேன் என்று கூறுகிறார்.
9 எனவே குதிரையை அல்லது கழுதையைப் போல் மூடனாகாதே.
அம்மிருகங்களை வழி நடத்துவோர் கடிவாளங்களையும் பயன்படுத்தாமல் அவற்றை கட்டுப்படுத்த இயலாது” என்கிறார்.
10 தீயோருக்கு வேதனைகள் பெருகும்.
கர்த்தரை நம்புவோரை தேவனுடைய உண்மையான அன்பு சூழ்ந்துகொள்ளும்.
11 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்.
பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களே! களிப்படையுங்கள்.
30 “எரேமியா, நீ அவர்களுக்கு இச்செய்தியைக் கொடுப்பாய்,
“‘கர்த்தர் மேலிருந்து சத்தமிடுகிறார்.
அவர் அவரது பரிசுத்தமான ஆலயத்தில் இருந்து சத்தமிடுகிறார்!
கர்த்தர் அவரது மேய்ச்சலிடம் (ஜனங்களிடம்) சத்தமிடுகிறார்!
அவரது சத்தங்கள் திராட்சைப்பழங்களில் ரசமெடுக்க நடப்பவர்களின் பாடலைப்போன்று சத்தமாக இருக்கிறது.
31 பூமியிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் அச்சத்தம் பரவுகிறது.
அனைத்து சத்தம் எதைக் குறித்துள்ளது?
எல்லா நாடுகளில் உள்ள ஜனங்களையும் கர்த்தர் தண்டித்துக்கொண்டிருக்கிறார்.
கர்த்தர் ஜனங்களுக்கு எதிராக தம் வாதங்களைச் சொன்னார்.
அவர் ஜனங்களை நியாயந்தீர்த்தார்.
இப்பொழுது அவர் தீய ஜனங்களை பட்டயத்தால் கொன்றுக்கொண்டிருக்கிறார்’”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
32 இதைத்தான் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“நாடுவிட்டு நாடு பேரழிவு விரைவில் பரவும்.
அவை ஒரு வல்லமை வாய்ந்த
புயலைப் போன்று பூமியிலுள்ள
எல்லா தொலைதூர இடங்களுக்கும் பரவும்!”
33 நாட்டின் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு ஜனங்களின் மரித்த உடல்கள் போய்ச் சேரும். மரித்த ஜனங்களுக்காக எவரும் அழமாட்டார்கள். எவரும் அந்த உடல்களை சேகரித்து அடக்கம் செய்யமாட்டார்கள். அவை தரையில் எருவைப்போன்று கிடக்குமாறு விடப்படும்.
34 மேய்ப்பர்களே (தலைவர்களே) நீங்கள் ஆடுகளை (ஜனங்களை) வழிநடத்தவேண்டும்.
பெருந்தலைவர்களே, நீங்கள் கதறத் தொடங்குங்கள்.
வலியில் தரை மீது உருளுங்கள்,
ஆடுகளின் (ஜனங்களின்) தலைவர்களே.
ஏனென்றால், இது உங்களை வெட்டுவதற்கான காலம்.
எங்கும் சிதறிப்போகும், உடைந்த ஜாடியின் துண்டுகளைப்போன்று, கர்த்தர் உங்களை முறித்து சிதறடிப்பார்.
35 மேய்ப்பர்கள் ஒளிந்துக்கொள்ள எங்கும் இடமில்லை.
அத்தலைவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.
36 நான் மேய்ப்பர்கள் (தலைவர்கள்) சத்தமிடுவதைக் கேட்கிறேன்.
ஆடுகளின் (ஜனங்கள்) தலைவர்களின் புலம்பலை நான் கேட்கிறேன்.
கர்த்தர் மேய்ச்சலிடங்களை (நாட்டை) அழித்துக்கொண்டிருக்கிறார்.
37 அந்த சமாதானமான மேய்ச்சல் நிலங்கள் (அரண்மனைகள்) அழிக்கப்பட்டு காலியான வனாந்தரங்ளைப்போன்று ஆனது.
இது நிகழ்ந்தது.
ஏனென்றால், கர்த்தர் கோபமாக இருக்கிறார்.
38 கர்த்தர், தன் குகையை விட்டு வெளியே வரும் ஆபத்தான சிங்கத்தைப்போன்று இருக்கிறார்.
கர்த்தர் கோபமாக இருக்கிறார்!
அந்த கோபம் அந்த ஜனங்களைப் பாதிக்கும்.
அவர்களின் நாடு காலியான வனாந்தரம்போன்று ஆகும்.
தேவாலயத்திற்குச் செல்லுதல்
(மத்தேயு 21:12-17; மாற்கு 11:15-19; யோவான் 2:13-22)
45 இயேசு தேவாலயத்திற்குள் சென்றார். பல பொருட்களை விற்றுக்கொண்டிருந்த மக்களை தேவாலயத்திற்குள் இருந்து துரத்த ஆரம்பித்தார். 46 அவர்களிடம் இயேசு, “‘என் வீடு பிரார்த்தனைக் குரிய வீடாக இருக்கும்’(A) என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அதைத் திருடர்கள் ஒளிந்திருக்கிற இடமாக(B) நீங்கள் மாற்றி இருக்கிறீர்கள்” என்றார்.
47 ஒவ்வொரு நாளும் இயேசு தேவாலயத்தில் மக்களுக்குப் போதித்தார். ஆசாரியரும், வேதபாரகரும் மக்களின் அதிகாரிகளும் இயேசுவைக் கொல்ல விரும்பினார்கள். 48 ஆனால் எல்லா மக்களும் இயேசுவைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இயேசு கூறிய விஷயங்களை மிகவும் உற்சாகமாகக் கவனித்தார்கள். எனவே தலைமை ஆசாரியருக்கும், வேதபாரகருக்கும், அதிகாரிகளுக்கும் இயேசுவை எவ்வாறு கொல்ல முடியும் என்பது தெரியவில்லை.
2008 by World Bible Translation Center