Revised Common Lectionary (Complementary)
கோராகின் புத்திரரின், இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்.
49 எல்லா தேசங்களே, இதைக் கேளுங்கள்.
பூமியில் வாழும் ஜனங்களே, எல்லோரும் இதைக் கேளுங்கள்.
2 ஏழையும் பணக்காரருமான ஒவ்வொரு வரும் கேட்கவேண்டும்.
3 ஞானமும் புத்திசாலித்தனமுமான சில செய்திகளை நான் உங்களுக்குக் கூறுவேன்.
4 நான் உவமையான கதைகளைக் கேட்டேன்.
இப்போது என் சுரமண்டலத்தை இசைத்து அக்கதைகளின் பாடல்களை உங்களுக்குப் பாடுவேன்.
5 தொல்லைகள் வரும்போது நான் ஏன் அஞ்ச வேண்டும்?
தீயோர் என்னைச் சூழ்ந்து அகப்படுத்த முயலும்போது நான் ஏன் அஞ்சவேண்டும்?
6 பலமும் செல்வமும் தங்களைப் பாதுகாக்கு மென்று சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் மூடர்களே.
7 மனிதனான எந்த நண்பனும் உன்னை மீட்க இயலாது.
நீ தேவனுக்கு லஞ்சம் தர முடியாது.
8 ஒருவன் தனது ஜீவனை மீட்டுக்கொள்வதற்குரிய பணத்தை
ஒருபோதும் சம்பாதித்து விட முடியாது.
9 என்றென்றும் வாழும் உரிமையைப் பெறவும்,
கல்லறையில் தன் உடல் அழியாமல் காக்கவும், தேவையான பணத்தை ஒருவன் ஒருபோதும் அடைய முடியாது.
10 பாருங்கள், மூடரும் அறிவீனரும் மடிவதைப் போலவே, ஞானிகளும் இறக்கிறார்கள்.
பிறர் அவர்களின் செல்வத்தைப் பெறுகிறார்கள்.
11 கல்லறையே என்றென்றும் ஒருவனது புது வீடாகும்.
அவர்களுக்குச் சொந்தமான பல நிலங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.
12 சிலர் செல்வந்தராயிருந்தாலும் இங்கே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாது.
எல்லோரும் மிருகங்களைப்போலவே மடிவார்கள்.
1 இவை பிரசங்கியின் வார்த்தைகள். பிரசங்கி தாவீதின் குமாரனும் எருசலேமின் அரசனுமானவன். 2 எல்லாமே பொருளற்றவை. எல்லாமே வீணானவை என்று பிரசங்கி கூறுகிறான். 3 தங்கள் வாழ்க்கையில் ஜனங்கள் செய்யும் கடினமான வேலைகளுக்கு உண்மையில் ஏதாவது பயன் உண்டா?
காரியங்கள் என்றும் மாறுவதில்லை
4 ஜனங்கள் வாழ்கிறார்கள், ஜனங்கள் மரிக்கிறார்கள்; ஆனால், பூமியோ எப்பொழுதும் நிலைத்திருக்கின்றது. 5 சூரியன் உதயமாகிறது. சூரியன் அஸ்தமிக்கிறது. பின் சூரியன் மீண்டும் அதே இடத்தில் உதயமாகவே விரைந்து செல்கிறது.
6 காற்று தெற்கு நோக்கி அடிக்கிறது. வடக்கு நோக்கியும் அடிக்கிறது. காற்று சுழன்று, சுழன்று அடிக்கிறது. பின்னர் அது திரும்பிப் புறப்பட்ட இடத்திற்கே திரும்பவும் வீசுகின்றது.
7 அனைத்து ஆறுகளும் மீண்டும், மீண்டும் ஒரே இடத்திற்கே பாய்கின்றன. எல்லாம் கடலிலேயே பாய்கின்றன. ஆனாலும் கடல் நிரம்புவதில்லை.
8 வார்த்தைகள் ஒன்றைக் குறித்து முழுமையாக விளக்குவதில்லை. ஆனாலும் ஜனங்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். நம் காதுகளுக்கு வார்த்தைகள் மீண்டும், மீண்டும் வருகின்றன. எனினும் காதுகள் நிறைவதில்லை. நம் பார்வைகள் மூலம் கண்களும் நிரம்புவதில்லை.
எதுவும் புதியதல்ல
9 துவக்கத்தில் இருந்ததுபோலவே அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன. எல்லாம் ஏற்கெனவே செய்யப்பட்டதுபோலவே செய்யப்படுகின்றன. வாழ்க்கையில்[a] எதுவும் புதியதில்லை.
10 ஒருவன், “பாருங்கள் இது புதிது” என்று கூறலாம். ஆனால் அந்தப் பொருள் ஏற்கெனவே இங்கே இருக்கிறது. நாம் இருப்பதற்கு முன்னரே அவை இருக்கின்றன.
11 நீண்டகாலத்திற்கு முன்பு நடந்ததை ஜனங்கள் நினைவில் வைத்திருப்பதில்லை. எதிர்காலத்தில், இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் நினைவில் வைத்திருக்கப்போவதில்லை. பின்னர் மற்றவர்களுக்கும் தங்களுக்கு முன்னிருந்தவர்கள் என்ன செய்தார்களென்பது நினைவில் இருக்காது.
பணக்காரனும் இயேசுவும்
(மத்தேயு 19:16-30; லூக்கா 18:18-30)
17 இயேசு அவ்விடத்திலிருந்து புறப்பட ஆரம்பித்தார். அப்போது ஒரு மனிதன் ஓடி வந்து அவருக்கு முன்னால் முழங்காலிட்டு வணங்கினான். அவன், “நல்ல போதகரே! நான் நித்திய வாழ்வைப் பெற என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
18 அதற்கு இயேசு, “என்னை நீ நல்லவர் என்று ஏன் அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். 19 ஆனால் உனது வினாவுக்கு விடையளிக்கிறேன். நீ எவரையும் கொலை செய்யாமல் இருப்பாயாக; விபச்சாரம் செய்யாமல் இருப்பாயாக, களவு செய்யாமல் இருப்பாயாக; பொய்சாட்சி சொல்லாமல் இருப்பாயாக; நீ உன் தந்தையையும் தாயையும் மரியாதை செய்வாயாக(A) என்று கட்டளைகள் சொல்வது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
20 அதற்கு அந்த மனிதன், “போதகரே! நான் குழந்தைப் பருவத்தில் இருந்தே இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வருகிறேன்” என்றான்.
21 இயேசு அவனைக் கவனித்தார். இயேசுவுக்கு அவன் மீது அன்பு பிறந்தது. இயேசு அவனிடம், “நீ செய்வதற்கு உரிய காரியம் இன்னும் ஒன்று உள்ளது. நீ போய் உனக்கு உரியவற்றையெல்லாம் விற்றுவிடு. அப்பணத்தை ஏழை மக்களுக்குக் கொடு. உனக்குப் பரலோகத்தில் நிச்சயம் பொக்கிஷமிருக்கும். பிறகு என்னைப் பின்பற்றி வா” என்றார்.
22 இயேசு இவற்றைச் சொன்னதும் அந்த மனிதன் மிகவும் வருத்தப்பட்டு அப்புறம் போனான். அவனது வருத்தத்துக்குக் காரணம் அவன் பெருஞ் செல்வந்தனாய் இருந்ததுதான்; அதோடு அச்செல்வத்தைப் பாதுகாக்கவும் நினைத்ததுதான்.
2008 by World Bible Translation Center