Revised Common Lectionary (Complementary)
சாலொமோனுக்கு.
72 தேவனே, ராஜாவும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும்.
உமது நல்லியல்பை ராஜாவின் குமாரனும் அறிந்துகொள்ள உதவும்.
2 ராஜா உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும்.
உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.
3 தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
4 ஏழைகளுக்கு ராஜா நல்லவனாக இருக்கட்டும்.
திக்கற்றோருக்கு அவன் உதவட்டும்.
அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும்.
5 சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் ராஜாவுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
6 வயலில் விழும் மழையைப்போன்றிருக்க ராஜாவுக்கு உதவும்.
பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.
7 அவன் ராஜாவாக இருக்கும்போது நன்மை மலரட்டும்.
சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.
8 ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும்,
கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும்.
9 பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள்.
புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும்.
10 தர்ஷீசின் ராஜாக்களும் தூரத்துத் தேசங்களின் ராஜாக்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும்.
ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள ராஜாக்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும்.
11 எல்லா ராஜாக்களும் நமது ராஜாவை விழுந்து வணங்கட்டும்.
எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும்.
12 நமது ராஜா திக்கற்றோருக்கு உதவுகிறார்.
ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் ராஜா உதவுகிறார்.
13 ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் ராஜாவைச் சார்ந்திருப்பார்கள்.
ராஜா அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார்.
14 அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து ராஜா அவர்களைக் காப்பாற்றுகிறார்.
அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் ராஜாவுக்கு மிக முக்கியமானவை.
15 ராஜா நீடூழி வாழ்க!
அவர் சேபாவின் பொன்னைப் பெறட்டும்.
எப்போதும் ராஜாவுக்காக ஜெபம் செய்யுங்கள்.
ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதியுங்கள்.
16 வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும்.
மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும்.
நிலங்களில் புல் வளர்வது போன்று
நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும்.
17 ராஜா என்றென்றும் புகழ்பெறட்டும்.
சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும்.
ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும்.
அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும்.
18 இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.
தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.
19 அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்!
அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!
20 ஈசாயின் குமாரனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன.
தானியேல் கனவின் பொருளைக் கூறுகிறான்
24 பின்னர் தானியேல், ஆரியோகுவிடம் சென்றான். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்ல ஆரியோகுவைத் தேர்ந்தெடுத்திருந்தான். தானியேல் ஆரியோகிடம், “பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்லவேண்டாம். என்னை ராஜாவிடம் கொண்டுபோங்கள். நான் அவரிடம் அவரது கனவையும் அதன் பொருளையும் கூறுவேன்” என்றான்.
25 எனவே ஆரியோகு தானியேலை மிக விரைவாக ராஜாவிடம் அழைத்துச் சென்றான். ஆரியோகு ராஜாவிடம், “நான் யூதாவிலுள்ள கைதிகளில் ஒருவனைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவன் ராஜாவிடம் அவரது கனவைப்பற்றிச் சொல்லமுடியும்” என்றான்.
26 ராஜா தானியேலிடம் (பெல்தெஷாத்சார்), “உன்னால் எனது கனவையும் அதன் பொருளையும் பற்றி சொல்லமுடியுமா?” என்று கேட்டான்.
27 தானியேல்: “ராஜாவான நேபுகாத்நேச்சாரே, எந்த ஞானிகளாலும், எந்த ஜோசியர்களாலும், எந்த கல்தேயர்களாலும் ராஜாவின் இரகசியம் குறித்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது. 28 ஆனால் பரலோகத்தில் இரகசியங்களைப் பற்றிச் சொல்ல ஒரு தேவன் இருக்கிறார். தேவன் ராஜாவான நேபுகாத்நேச்சாருக்கு வருங்காலத்தில் என்ன நடைபெறும் என்பதைக் காட்ட கனவுகளைக் கொடுத்தார். இதுதான் உமது கனவு. உமது படுக்கையில் படுத்துக்கொண்டு நீர் பார்த்தவை இவைதான். 29 ராஜாவே, நீர் உமது படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தீர். நீர் வருங்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கத் தொடங்கினீர். எதிர்காலத்தைக் குறித்த இரகசியங்களைத் தேவன் ஜனங்களுக்குச் சொல்லமுடியும். அவர் உமக்கு வருங்காலத்தில் என்ன நிகழும் என்பதைக் காட்டினார். 30 தேவன் என்னிடம் இந்த இரகசியத்தைச் சொன்னார். ஏன்? நான் மற்றவர்களைவிட ஞானம் கொண்டவன் என்பதற்காக அல்ல. ராஜாவான நீர் அந்த கனவின் பொருளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தேவன் என்னிடம் சொன்னார். அதே வழியில், உம் மனதில் ஓடிய நினைவுகளையும் நீர் புரிந்துகொள்வீர்.
31 “ராஜாவே, உமது கனவில் உமக்கு முன்னால் ஒரு பெரிய சிலையைக் கண்டீர். அச்சிலை மிகப் பெரியதும், பளபளப்பானதும், மனதைக் கிளர்ச்சியூட்டக் கூடியதாகவும் இருந்தது. அது ஒருவனின் கண்களை வியப்பால் விரியச்செய்யத்தக்கது. 32 அச்சிலையின் தலையானது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அச்சிலையின் மார்பும், கைகளும் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தன. அச்சிலையின் வயிறும், கால்களின் மேல்பகுதியும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. 33 அச்சிலையின் கால்களின் கீழ்ப்பகுதி இரும்பால் செய்யப்பட்டிருந்தது. அச்சிலையின் பாதங்கள் கொஞ்சம் இரும்பாலும், கொஞ்சம் களிமண்ணாலும் செய்யப்பட்டிருந்தது. 34 நீர் அந்தச் சிலையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீர் ஒரு பாறையைப் பார்த்தீர். கைகளால் பெயர்க்கப்படாத அக்கல் பெயர்ந்து உருண்டு வந்தது. அக்கல் காற்று வழியாக உருண்டுவந்து இரும்பாலும் களிமண்ணாலும் ஆன அச்சிலையின் பாதங்ககளில் மோதி அதின் பாதங்களை நொறுக்கியது. 35 பிறகு அந்த இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, தங்கம் எல்லாம் ஒரே நேரத்தில் துண்டுத் துண்டாக நொறுங்கியது. அவை, கோடைக் காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போன்று இருந்தன. அவற்றில், எதுவும் மிச்சமில்லாமல் அவை காற்றினால் அடித்துக்கொண்டு போகப்பட்டது. அங்கு ஒரு சிலை இருந்தது என்று எவராலும் சொல்லமுடியாதபடி இருந்தது. பிறகு சிலையைத் தாக்கிய அக்கல் பெரிய மலையாகி அந்தப் பூமி முழுவதையும் நிரப்பியது.
36 “இதுவே உமது கனவு. இப்பொழுது அரசரிடம் அதன் பொருள் என்னவென்று நான் கூறுவேன். 37 ராஜாவே, நீர் மிக முக்கியமான ராஜாவாக இருக்கிறீர். பரலோத்தின் தேவன் உமக்கு இராஜ்யம், அதிகாரம், பலம், மகிமை எல்லாம் கொடுத்திருக்கிறார். 38 தேவன் உமக்குக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார். உமக்கு மனிதர்களையும், மிருகங்களையும், பறவைகளையும், ஆளும் வல்லமையையும் கொடுத்திருக்கிறார். அவை எங்கே வாழ்ந்தாலும் அவற்றை ஆளும்படி உம்மை தேவன் செய்திருக்கிறார். ராஜாவான நேபுகாத்நேச்சாரே, நீர்தான் அந்தத் தங்கத்தாலான சிலையின் தலையைப் போன்றவர்.
39 “உமக்குப் பிறகு இன்னொரு இராஜ்யம் வரும். அது வெள்ளியைப் போன்றது. ஆனால் அந்த இராஜ்யம் உமது இராஜ்யத்தைப்போன்று அவ்வளவு உயர்வுடையதாக இராது. அதன் பின்னர் மூன்றாவது இராஜ்யமானது பூமி முழுவதையும் ஆளுகைச் செய்யும். அது வெண்கலப் பகுதி. 40 பிறகு நான்காவது இராஜ்யம் வரும். அது இரும்பைப்போன்று வலிமை உடையதாக இருக்கும். இரும்பானது எவ்வாறு உடைத்து தூள்தூளாக்குமோ அது போன்று நான்காவது இராஜ்யமும் மற்ற இராஜ்யங்களை நொறுக்கிப்போடும்.
41 “சிலையின் பாதங்கள் கொஞ்சம் இரும்பாலும், கொஞ்சம் களிமண்ணாலும் செய்யப்பட்டிருந்ததை நீர் பார்த்தீர். அதன் பொருள் அந்த நான்காவது இராஜ்யம் பிரிக்கப்பட்டதாயிருக்கும். அதில் இரும்பும், களிமண்ணும் கலந்திருப்பதால் இரும்பின் உறுதி கொஞ்சம் இருக்கும். 42 சிலையின் கால்விரல்கள் பாதி இரும்பாகவும், பாதி களிமண்ணாகவும் இருந்தது. எனவே நான்காவது இராஜ்யமும் இரும்பைப்போல கொஞ்சம் பலமுள்ளதாகவும், களிமண்ணைப்போல கொஞ்சம் பலவீனமுள்ளதாகவும் உடையதாக இருக்கும். 43 இரும்பு களிமண்ணோடு கலந்திருந்ததை நீர் பார்த்தீர். ஆனால் இரும்பும், களிமண்ணும் முழுமையாகக் கலக்காது. இதுபோல, நான்காவது இராஜ்யத்தில் ஜனங்கள் கலவையாக இருப்பார்கள். அந்த ஜனங்கள் ஒரே ஜனங்களாக இணையமாட்டார்கள்.
44 “நான்காவது இராஜ்யத்தில் ராஜாக்கள் இருக்கும்போது, பரலோகத்தின் தேவன் வேறொரு இராஜ்யத்தை உருவாக்குவார். இந்த இராஜ்யம் என்றென்றும் இருக்கும். இது அழிக்கப்படாது. இந்த இராஜ்யம் இன்னொரு ஜனங்கள் கூட்டத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை. இந்த இராஜ்யம் மற்ற இராஜ்யங்களை நொறுக்கும். இது அந்த இராஜ்யங்களை ஒரு முடிவிற்குக் கொண்டுவரும். ஆனால் இந்த இராஜ்யம் என்றென்றும் தொடர்ந்திருக்கும்.
45 “ராஜாவான நேபுகாத்நேச்சாரே, ஒரு மலையிலிருந்து ஒரு கல் எவராலும் பெயர்க்கப்படாமல் பெயர்ந்து வந்ததை நீர் பார்த்தீர். அக்கல் இரும்பு, வெண்கலம், களிமண், வெள்ளி, தங்கம் ஆகியவற்றைத் தூள்தூளாக்கியது. இதேபோல் தேவன் வருங்காலத்தில் என்ன நிகழும் என்று உமக்குக் காட்டினார். அந்தக் கனவு உண்மையானது. நீர் இந்த விளக்கத்தை நம்பலாம்” என்றான்.
46 அப்போது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தானியேலின் முன் தரையில் விழுந்து வணங்கினான். ராஜா தானியேலைப் போற்றினான். ராஜா தானியேலைப் பெருமைப்படுத்துவதற்குக் காணிக்கை கொடுக்கவும், தூபம் காட்டவும் கட்டளையிட்டான். 47 பிறகு ராஜா தானியேலிடம், “உனது தேவன் உண்மையிலேயே அதிமுக்கியமானவரும், வல்லமை உடையவருமானவர் என்பதை அறிவேன். அவர் அனைத்து ராஜாக்களுக்கும் கர்த்தராக இருக்கிறார். ஜனங்கள் அறியாதவற்றை அவர்களுக்கு அவர் கூறுகிறார். இது உண்மை என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் நீ இந்த இரகசியத்தை என்னிடம் சொல்லும் தகுதி பெற்றிருக்கிறாய்” என்றான்.
48 பிறகு ராஜா தானியேலுக்கு தனது இராஜ்யத்தில் மிக முக்கியமான ஒரு பதவியைக் கொடுத்தான். அதோடு ராஜா தானியேலுக்கு விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்தான். நேபுகாத்நேச்சார் தானியேலைப் பாபிலோன் மாகாணத்தின் ஆளுநராகவும் உயர்த்தினான். அதோடு ராஜா தானியேலைப் பாபிலோன் தேசத்தின் ஞானிகளுக்கெல்லாம் அதிகாரியாகவும் ஆக்கினான். 49 தானியேல் ராஜாவிடம் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும் அதிகாரிகளாக்கும்படி வேண்டினான். தானியேல் வேண்டியபடியே ராஜா செய்தான். தானியேலும் ராஜா அருகிலே இருக்கும் முக்கியமானவர்களில் ஒருவனானான்.
15 எனவே எப்படி வாழ்வது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். ஞானம் இல்லாதவர்கள் வாழ்வது போன்று வாழாதீர்கள். ஞானத்தோடு வாழுங்கள். 16 நீங்கள் உங்களுக்குக் கிடைத்துள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி நற்செயல்களைச் செய்யுங்கள். ஏனென்றால் நாம் கெட்ட காலங்களில் வாழ்கிறோம். 17 ஆகையால் முட்டாள்தனமாக உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். பிதா உங்களிடம் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். 18 மதுபான வெறிகொள்ளாதீர்கள். உங்கள் ஆன்மீக வாழ்வை அது அழித்துவிடும். ஆவியால் நிரப்பப்பட்டவர்களாக இருங்கள். 19 சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், பக்திப் பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் கர்த்தருக்காக இசையுடன் பாடுங்கள். 20 பிதாவாகிய தேவனுக்கு எப்போதும் எல்லாவற்றிற்காகவும் நன்றி செலுத்துங்கள். அதனைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் செலுத்துங்கள்.
2008 by World Bible Translation Center