Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எசேக்கியேல் 18:1-4

18 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “ஜனங்களாகிய நீங்கள் இப்பழமொழியை மீண்டும், மீண்டும் சொல்கிறீர்கள்:

“‘ஏன்? நீங்கள் பெற்றோர்கள் புளித்த திராட்சை தின்றார்கள்.
    ஆனால் குழந்தைகள் புளிப்புச் சுவையைப் பெறுகிறார்கள்’” என்று சொல்லுகிறீர்கள்.

ஆனால் எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “எனது உயிரைக்கொண்டு நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களிக்கிறேன். இப்பழமொழி இனிமேல் உண்மையாக இருக்காது. நான் ஒவ்வொரு மனிதனையும் அவ்வாறே நடத்துகிறேன். அவன் பெற்றவனா, பிள்ளையா என்பதைப்பற்றி கவலையில்லை. பாவம் செய்கிற ஒருவன் அதற்கேற்றபடி மரிப்பான்!

எசேக்கியேல் 18:25-32

25 தேவன் சொன்னார்: “நீங்கள், ‘எனது தேவனாகிய ஆண்டவர் நியாயமானவராக இல்லை!’ என்று சொல்லலாம். ஆனால், கவனியுங்கள், இஸ்ரவேல் குடும்பத்தாரே, நியாயமற்றவர்கள் நீங்கள்தான்! 26 ஒரு நல்ல மனிதன் மாறிப் பாவம் செய்யத் தொடங்கினால் அவன் தனது பாவங்களுக்காக மரிப்பான். 27 ஒரு தீயமனிதன் மாறி நன்மை செய்யத் தொடங்கினால், பிறகு அவன் தனது வாழ்வைக் காப்பாற்றுவான். அவன் வாழ்வான்! 28 அந்த மனிதன், எவ்வளவு தீயவனாக இருந்தான், அவன், தான் எவ்வளவு மோசமானவன் என்று உணர்ந்து என்னிடம் திரும்பிவரத் தீர்மானித்தான். அவன் கடந்த காலத்தில் செய்த பாவத்தை நிறுத்தினான். எனவே அவன் வாழ்வான், மரிக்கமாட்டான்!”

29 இஸ்ரவேல் ஜனங்கள் சொன்னார்கள்: “அது செம்மையில்லை! எனது கர்த்தராகிய ஆண்டவர் அவ்வாறு இருக்கக்கூடாது!”

தேவன் சொன்னார்: “நான் நியாயமாகவே இருக்கிறேன். நீங்களே நியாயமற்றவர்கள்! 30 ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் ஒவ்வொரு மனிதரையும் அவர்கள் செய்தவற்றுக்காகவே நியாயம் தீர்க்கிறேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். “எனவே என்னிடம் திரும்பி வாருங்கள்! அந்த அருவருப்பான பொருட்கள் (விக்கிரகங்கள்) உங்களைப் பாவம் செய்யத் தூண்ட அனுமதிக்காதீர்கள்! 31 எல்லா அருவருப்பான பொருட்களையும் தூர எறியுங்கள். அவை நீங்கள் செய்தவை. அவையே உங்களது பாவங்களுக்கெல்லாம் காரணம்! உங்களது இருதயங்களையும் ஆவிகளையும் புதுப்பித்துக்கொள்ளுங்கள்! இஸ்ரவேல் ஜனங்களே, உங்களது மரணத்தை ஏன் நீங்களே வரவழைத்துக்கொள்கிறீர்கள்? 32 நான் உங்களைக் கொல்ல விரும்பவில்லை. தயவுசெய்து திரும்பிவந்து வாழ்ந்திருங்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைக் கூறினார்.

சங்கீதம் 25:1-9

தாவீதின் பாடல்.

25 கர்த்தாவே, நான் என்னை உமக்கு அளிக்கிறேன்.
என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன். நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
    என் பகைவர்கள் என்னைக் கண்டு நகைப்பதில்லை.
ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான்.
    ஆனால் வஞ்சகர் ஏமாந்து போவார்கள்.
    அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

கர்த்தாவே, உமது வழிகளைக் கற்றுக் கொள்ள உதவும்.
    உமது வழிகளை எனக்குப் போதியும்.
எனக்கு வழிகாட்டி உமது உண்மைகளைப் போதியும்.
    நீரே என் தேவன், என் மீட்பர்.
    அனுதினமும் நான் உம்மை நம்புகிறேன்.
கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும்.
    எப்போதுமுள்ள உமது மென்மையான அன்பை எனக்குக் காட்டும்.
எனது பாவங்களையும் என் சிறுவயதின் தீய செயல்களையும் நினைவில் கொள்ளாதேயும்.
    கர்த்தாவே, உமது நல்ல நாமத்திற்கேற்ப, என்னை அன்பிலே நினைத்தருளும்.

கர்த்தர் உண்மையாகவே நல்லவர்.
    பாவிகளுக்கு வாழ்வதற்குரிய வழியை அவர் போதிக்கிறார்.
தாழ்மைப்பட்டவர்களுக்கு அவர் தம் வழியைப் போதிக்கிறார்.
    அவர் அந்த ஜனங்களை நியாயமாக நடத்துகிறார்.

பிலிப்பியர் 2:1-13

ஒற்றுமையுடனும் கரிசனையுடனும் இருங்கள்

நான் உங்களைச் செய்யச் சொல்ல கிறிஸ்துவுக்குள் வேறு செயல்கள், உள்ளனவா? அன்பினாலே யாதொரு தேறுதலும் உண்டாகுமா? ஆவியினாலே யாதொரு ஐக்கியமும் உண்டாகுமா? உங்களுக்கு இரக்கமும் கருணையும் உள்ளனவா? உங்களிடம் இவை இருந்தால் எனக்காகச் செய்ய வேண்டும் என்று சில காரியத்தைக் கேட்டுக்கொள்வேன். இது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும். ஒரே காரியத்தைப் பற்றிய நம்பிக்கையில் உங்கள் அனைவரது மனமும் ஒன்று சேரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒருவருடன் ஒருவர் அன்புடன் இணைந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு, ஒரே நோக்கம் உடையவர்களாக இருங்கள். நீங்கள் இச்செயல்களைச் செய்யும்போது தன்னலமும், வீண் பெருமையும் கொள்ள வேண்டாம். பணிவுடன் இருங்கள். நீங்கள் உங்களுக்குத் தரும் மரியாதையைவிட மற்றவர்களுக்கு அதிக மரியாதையைத் தாருங்கள். நீங்கள் உங்கள் வாழ்வில் மட்டும் அல்லாமல் மற்றவர் வாழ்விலும் ஆர்வம் கொள்ளுங்கள்.

தன்னலமற்ற குணம்

உங்கள் வாழ்வில் நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் போன்று சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும்.

கிறிஸ்து அவரளவில் எல்லாவற்றிலும் தேவனைப் போன்றிருந்தார்.
    அவர் தேவனுக்கு நிகரானவராயிருந்தார். ஆனால் தேவனுக்குச் சமமாக இருப்பதை கொள்ளையில் கிடைத்த அரிய பொருளாக அவர் நினைத்ததில்லை.
தேவனோடு இருந்த தனது இடத்தை அவர் விட்டுக்கொடுத்து, தேவனது ஊழியர் வடிவை எடுத்தார்.
    மனிதராகப் பிறந்து அடிமையைப் போல அவர் வாழ்ந்தார்.
மனிதனாக அவர் வாழும்போது தேவனுக்கு முன்பு கீழ்ப்படிந்தவராக இருந்தார்.
    மரணம் வரைக்கும் அவர் பணிவுள்ளவராக இருந்தார்.
    முடிவில் சிலுவையிலே இறந்தார்.
தேவனுக்குக் கிறிஸ்து பணிந்தார்.
    ஆகையால் தேவன் அவரை மிக முக்கியமான இடத்துக்கு உயர்த்திவிட்டார்.
    தேவன் அவரது பெயரை மற்ற எல்லா பெயர்களையும் விட உயர்வாக்கினார்.
10 அனைவரும் இயேசுவின் பெயருக்கு முன்பு தலைகுனிந்தே இருக்க வேண்டும் என்பதற்காகவே தேவன் இதனைச் செய்தார்.
    பரலோகத்திலும், பூலோகத்திலும், பூமிக்குக் கீழுள்ள உலகத்திலும் உள்ளவர்கள் அவரைப் பணிவார்கள்.
11 “இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர்” என்று அனைவரும் அறிக்கை செய்வர்.
    அவர்கள் இதனைச் சொல்லும்போது பிதாவாகிய தேவனுக்கு மகிமை சேரும்.

தேவன் விரும்புகிற மக்களாய் இருங்கள்

12 என்னுடைய அன்பு நண்பர்களே! எப்பொழுதும் நீங்கள் கீழ்ப்படிந்து இருங்கள். உங்களோடு நான் இருந்தபோது நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிருந்தீர்கள். உங்களோடு நான் இல்லாதபோது நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நான் தூரமாயிருக்கிறபோது நீங்கள் தேவனிடம் மரியாதையும் அச்சமும் கொண்டு உங்கள் இரட்சிப்பு நிறைவேற முயற்சி செய்யுங்கள். 13 ஆமாம், தேவன் உங்களில் பணியாற்றுகிறார். அவர் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும், செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறார். அவற்றைச் செய்ய உங்களுக்கு தேவனே பலத்தைக் கொடுக்கிறார்.

மத்தேயு 21:23-32

இயேசுவின் அதிகாரத்தை யூதத்தலைவர்கள் சந்தேகித்தல்

(மாற்கு 11:27-33; லூக்கா 20:1-8)

23 இயேசு தேவாலயத்திற்குச் சென்றார். அவர் அங்கே போதனை செய்துகொண்டிருந்தபொழுது, தலைமை ஆசாரியர்களும், மூத்த தலைவர்களும் அவரிடம் வந்தனர். அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குச் சொல், இவைகளைச் செய்ய உனக்கு என்ன அதிகாரம் உள்ளது? உனக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?” என்று வினவினார்கள்.

24 இயேசு அவர்களுக்கு, “நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் எனக்குப் பதில் சொன்னால், நானும் இவைகளைச் செய்ய என்ன அதிகாரம் பெற்றிருக்கிறேன் என்பதைக் கூறுகிறேன். 25 யோவான் மக்களுக்கு கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் வந்ததா, அல்லது மனிதரால் வந்ததா? சொல்லுங்கள்” என்று மறு மொழி உரைத்தார்.

தலைமை ஆசாரியர்களும் தலைவர்களும் இயேசுவின் கேள்வியைக் குறித்து விவாதித்தனர். அவர்கள் தங்களுக்குள், “‘யோவானின் ஞானஸ்நானம் தேவனால் ஆனது’ என்று நாம் கூறுவோமானால், இயேசு நம்மைப் பார்த்து, ‘பின் ஏன் நீங்கள் யோவானை நம்பவில்லை?’ என்று கேட்பார். 26 மாறாக ‘அது மனிதனால் ஆனது’ என்றால் மக்கள் நம்மீது கோபம் கொள்வார்கள். ஏனென்றால் மக்கள் அனைவரும் யோவானை ஒரு தீர்க்கதரிசி என்று நம்புகிறார்கள்” என்று கூறிக் கொண்டார்கள்.

27 எனவே அவர்கள் இயேசுவிடம், “யோவானின் அதிகாரம் எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

பின்பு இயேசு, “அப்படியெனில் இவைகளைச் செய்வதற்கு எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதையும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்று கூறினார்.

இரண்டு குமாரர்கள் பற்றிய உவமை

28 “ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவன் தனது முதல் மகனிடம் சென்று, ‘மகனே இன்று என் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றான்.

29 “அதற்கு அவன், ‘போக முடியாது’ என்று பதிலளித்தான். ஆனால் பின்னர், அவனே தான் போய் வேலை செய்ய வேண்டும் என நினைத்தான். அவ்வாறே செய்தான்.

30 “பின்னர், அத்தந்தை தனது மற்றொரு மகனிடம் சென்றான். அவனிடம், ‘மகனே, இன்றைக்கு எனது திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றான். அதற்கு அவனது குமாரன், ‘சரி தந்தையே, நான் போய் வேலை செய்கிறேன்’ என்றான். ஆனால், அவன் வேலைக்குச் செல்லவில்லை.

31 “இரண்டு குமாரர்களில் யார் தனது தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தான்?” என்று இயேசு கேட்டார். யூதத் தலைவர்கள், “மூத்த குமாரன்” என்று பதில் சொன்னார்கள்.

அப்போது இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், வரி வசூலிப்பவர்களும், வேசிகளும், தீயவர்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால் அவர்கள் உங்களுக்கு முன்னரே பரலோக இராஜ்யத்திற்குள் நுழைவார்கள். 32 வாழ்க்கையின் சரியான பாதையை உங்களுக்குக் காட்டுவதற்காக யோவான் வந்தான். ஆனால், நீங்கள் யோவானை நம்பவில்லை. வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் யோவானை நம்பினார்கள். அவர்கள் யோவான் மீது நம்பிக்கை வைத்ததை நீங்கள் கண்டீர்கள். ஆனாலும் நீங்கள் மனந்திருந்தி யோவானை நம்பவில்லை” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center