Revised Common Lectionary (Complementary)
கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.
87 எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார்.
2 இஸ்ரவேலின் வேறெந்த இடத்தைக் காட்டிலும் சீயோனின் வாசற்கதவுகளை கர்த்தர் நேசிக்கிறார்.
3 தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள்.
4 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
அவர்களுள் சிலர் எகிப்திலும் பாபிலோனிலும் வசிக்கிறார்கள்.
அவர்களுள் சிலர் பெலிஸ்தியாவிலும், தீருவிலும், எத்தியோப்பியாவிலும் பிறந்தார்கள்.
5 சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார்.
மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார்.
6 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
ஒவ்வொருவனும் எங்கே பிறந்தான் என்பதையும் தேவன் அறிகிறார்.
7 விசேஷ ஓய்வு நாட்களைக் கொண்டாடுவதற்கு தேவனுடைய ஜனங்கள் எருசலேமுக்குப் போகிறார்கள்.
அவர்கள் மிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள்.
அவர்கள், “எல்லா நல்லவையும் எருசலேமிலிருந்து வருகின்றன” என்றார்கள்.
18 “அந்த ஜனங்கள் தீய நினைவுகளைக் கொண்டு தீயவற்றைச் செய்தனர். எனவே, நான் அவர்களைத் தண்டிக்க வந்துகொண்டிருக்கிறேன். நான் அனைத்து நாடுகளையும் அனைத்து ஜனங்களையும் ஒன்று சேர்ப்பேன். அனைத்து ஜனங்களும் சேர்ந்து வந்து எனது வல்லமையைப் பார்ப்பார்கள். 19 நான் ஜனங்களில் சிலர் மீது அடையாளத்தை இடுவேன். நான் அவர்களைக் காப்பாற்றுவேன். காப்பாற்றப்பட்ட ஜனங்களில் சிலரை நான் தர்ஷீசு, லிபியாலூத் (வில் வீரர்களின் நாடு), தூபால், கிரீஸ் மற்றும் தொலைதூர நாடுகளுக்கும் அனுப்புவேன். அந்த ஜனங்கள் என்றும் எனது போதனைகளைக் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். அந்த ஜனங்கள் எனது மகிமையை என்றும் பார்த்திருக்கமாட்டார்கள். எனவே, காப்பாற்றப்பட்ட ஜனங்கள் எனது மகிமையைப்பற்றி அந்நாடுகளில் கூறுவார்கள். 20 அவர்கள் அனைத்து நாடுகளிலும் உள்ள உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரையும் அவர்கள் எனது பரிசுத்தமான மலையான எருசலேமிற்கு அழைத்து வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், இரதங்கள் மற்றும் வண்டிகளில் வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் ஆகியோர் இஸ்ரவேலர்களால் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சுத்தமான தட்டில் வைத்து கொண்டுவரப்படும் காணிக்கைகளைப்போன்று இருப்பார்கள். 21 நானும் இந்த ஜனங்களில் சிலரை ஆசாரியர்களாகவும் லேவியர்களாகவும் தேர்ந்தெடுப்பேன்” கர்த்தர்தாமே இவற்றைச் சொன்னார்.
புதிய வானங்களும் புதிய பூமியும்
22 “நான் ஒரு புதிய உலகத்தைப் படைப்பேன். புதிய வானங்களும் புதிய பூமியும் என்றென்றும் நிலைத்து இருக்கும். அவ்வாறே உங்கள் பெயர்களும், உங்கள் பிள்ளைகளும் என்னோடு எப்பொழுதும் இருப்பார்கள். 23 ஒவ்வொரு ஆராதனைக்குரிய நாளிலும் அனைத்து ஜனங்களும் என்னை ஆராதிக்க வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு ஓய்வு நாளிலும் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் வருவார்கள்.
தொழுநோயாளி குணமடைதல்
(மாற்கு 1:40-45; லூக்கா 5:12-16)
8 இயேசு குன்றின்மீதிருந்து கீழிறங்கி வந்தார். ஏராளமான மக்கள் அவரைத் தொடர்ந்தார்கள். 2 அப்பொழுது தொழு நோயால் பீடிக்கப்பட்ட ஒருவன் அவரிடம் வந்தான். அவன் இயேசுவின் முன்பாகப் பணிந்து, “கர்த்தாவே, நீர் விரும்பினால், என்னைக் குணப்படுத்த முடியும். அவ்வல்லமையைப் பெற்றிருக்கிறீர்” என்று சொன்னான்.
3 இயேசு அவனைத் தொட்டு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணம் அடைவாயாக!” என்று சொன்னார். உடனே அந்த மனிதன் தொழுநோயிலிருந்து குணமாக்கப்பட்டான். 4 பின் இயேசு அவனிடம், “என்ன நடந்தது என்பதை எவரிடமும் கூறாதே. ஆனால் ஆசாரியரிடம் சென்று உன்னைக் காட்டு.[a] நோயிலிருந்து குணம் அடைந்தவர்கள் செலுத்தவேண்டிய காணிக்கையை மோசே கட்டளையிட்டபடி செலுத்து. அதுவே நீ குணமடைந்ததை மக்களுக்குக் காட்டும்” என்று கூறி அனுப்பினார்.
வேலைக்காரன் குணமாகுதல்
(லூக்கா 7:1-10; யோவான் 4:43-54)
5 இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். இயேசு அந்நகரத்திற்குள் நுழைந்த பொழுது, படை அதிகாரி ஒருவன் வந்து அவரிடம் உதவி கேட்டுக் கெஞ்சினான். 6 அந்த அதிகாரி, “கர்த்தாவே, என் வேலைக்காரன் மிக நோய் வாய்ப்பட்டு வீட்டில் படுத்திருக்கிறான். அவனால் சரீரத்தை அசைக்கக்கூட முடியவில்லை. மிகுந்த வலியினால் அவதிப்படுகிறான்” என்று சொன்னான்.
7 இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணப்படுத்துகிறேன்” என்று கூறினார்.
8 அதற்கு அந்த அதிகாரி, “கர்த்தாவே, நீர் என் வீட்டிற்குள் வருமளவிற்கு நான் மேலானவனல்ல. நீர் செய்யவேண்டுவதெல்லாம், என் வேலைக்காரன் குணமடையட்டும் என்று கட்டளையிடுவது மட்டுமே. அப்போது அவன் குணம் அடைவான். 9 நான் என்னிலும் அதிகாரம் மிக்கவர் கீழ்ப் பணிபுரிகிறேன். என் அதிகாரத்திற்குக் கீழும் படைவீரர்கள் உள்ளனர். நான் ஒரு வீரனிடம் ‘போ’ என்றால், அவன் போகிறான். மற்றொரு வீரனிடம் ‘வா’ என்றால், அவன் வருகிறான். நான் என் வேலைக்காரனிடம் ‘இதைச் செய்’ என்றால், அவன் அதைச் செய்கிறான். (அதைப் போலவே நீரும் வல்லமை பெற்றவர் என்பதை நான் அறிவேன்)” என்றான்.
10 இதைக் கேட்ட இயேசு வியப்படைந்தார். தன்னுடன் இருந்த மக்களிடம் இயேசு, “உண்மையைச் சொல்லுகிறேன், நான் பார்த்த மனிதர் அனைவரிலும், இஸ்ரவேலிலும் கூட, இவனே அதிக விசுவாசம் உடையவன். 11 பலர் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருவார்கள். அவர்கள் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருடன் அமர்ந்து பரலோக இராஜ்யத்தில் உணவு உண்பார்கள். 12 ஆனால் பரலோக இராஜ்யத்தை அடைய வேண்டியவர்களான யூதர்களோ வெளியே இருட்டில் எறியப்படுவார்கள். அங்கு அவர்கள் பற்களைக் கடித்துக் கூக்குரலிடுவார்கள்” என்று கூறினார்.
13 பிறகு இயேசு அதிகாரியிடம், “வீட்டிற்குச் செல். நீ எவ்வாறு விசுவாசித்தாயோ அவ்வாறே உன் வேலைக்காரன் குணமாவான்” என்று சொன்னார். அந்த நேரத்திலேயே அந்த அதிகாரியின் வேலைக்காரன் குணமாக்கப்பட்டான்.
2008 by World Bible Translation Center