Revised Common Lectionary (Complementary)
அனைத்து தேசங்களும் கர்த்தரைப் பின்பற்றும்
56 கர்த்தர் இவற்றைச் சொன்னார், “அனைத்து ஜனங்களிடமும் நியாயமாக இருங்கள், நீதியானவற்றைச் செய்யுங்கள். ஏனென்றால், எனது இரட்சிப்பு விரைவில் உனக்கு வரும். உலகம் முழுவதற்கும் எனது இரட்சிப்பு விரைவில் காட்டப்படும்.”
6 கர்த்தரோடு யூதரால்லாத சில ஜனங்களும் சேருவார்கள். அவர்கள் இதைச் செய்வார்கள். எனவே, அவருக்குத் தொண்டு செய்யமுடியும். கர்த்தருடைய நாமத்தை நேசிக்கின்றனர். அவர்கள் தாங்களாகவே கர்த்தரோடு அவரது ஊழியக்காரர்களாகச் சேருவார்கள். அவர்கள் ஓய்வுநாளை வழிபாட்டுக்குரிய சிறந்த நாளாக எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் தொடர்ந்து எனது உடன்படிக்கையை (சட்டம்) நெருக்கமாகப் பின்பற்றுவார்கள். 7 கர்த்தர் கூறுகிறார், “எனது பரிசுத்தமான மலைக்கு நான் அந்த ஜனங்களை அழைத்து வருவேன். ஜெபக்கூடத்தில் அவர்களை மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வேன். அவர்கள் தரும் காணிக்கைகளும் பலிகளும் என்னைத் திருப்திப்படுத்தும் எனென்றால், எனது ஆலயம் எல்லா நாடுகளுக்குமான ஜெபவீடாக அழைக்கப்படும்.” 8 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
இஸ்ரவேல் ஜனங்கள் தம் நாட்டை விட்டுப்போக வற்புறுத்தப்பட்டனர். ஆனால் மீண்டும் கர்த்தர் அவர்களை ஒன்று சேர்த்துவிடுவார். கர்த்தர், “நான் மீண்டும் இந்த ஜனங்களை ஒன்று சேர்ப்பேன்” என்று கூறுகிறார்.
இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல்.
67 தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும்.
தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்!
2 தேவனே, பூமியிலுள்ள ஒவ்வொருவனும் உம்மைக் குறித்துத் தெரிந்துக்கொள்கிறான் என நம்புகிறேன்.
நீர் எவ்வாறு ஜனங்களை மீட்கிறீரென்று ஒவ்வொரு தேசமும் பார்க்கட்டும்.
3 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்!
எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
4 எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்!
ஏனெனில் நீர் ஜனங்களைத் தகுதியாக நியாயந்தீர்க்கிறீர்.
நீர் ஒவ்வொரு தேசத்தையும் அரசாளுகிறீர்.
5 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்.
எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
6 தேவனே, எங்கள் தேவனே, எங்களை ஆசீர்வதியும்.
எங்கள் தேசம் நல்ல அறுவடையை எங்களுக்குக் கொடுக்கட்டும்.
7 தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும்.
பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும்.
தன் மக்களை மறவாத தேவன்
11 “தேவன் தன் மக்களைத் தூரமாகத் தள்ளி விட்டாரா?” என்று நான் கேட்கிறேன். இல்லை. நானும் ஒரு யூதன் தான். நான் ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து வந்துள்ளேன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். 2 இஸ்ரவேல் மக்கள் பிறப்பதற்கு முன்னரே அவர்களைத் தம் மக்களாக தேவன் தேர்ந்தெடுத்து விட்டார். தேவன் அவர்களைத் தூரத் தள்ளிவிடவில்லை. எலியாவைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் உறுதியாக அறிவீர்கள். இஸ்ரவேல் மக்களுக்கு எதிராக எலியா தேவனிடம் வேண்டினார்.
29 தேவன் தனது கிருபையையும் அழைப்பையும் எப்பொழுதும் மாற்றிக்கொள்ளமாட்டார். 30 ஒருமுறை நீங்கள் தேவனுக்குப் பணிய மறுத்தீர்கள். ஆனால் இப்பொழுது இரக்கத்தைப் பெற்றீர்கள். யூதர்கள் பணிய மறுத்ததே இதற்குக் காரணம். 31 தேவன் உங்களிடம் இரக்கம் காட்டுவதால் யூதர்கள் இப்பொழுது தேவனுக்குப் பணிய மறுக்கிறார்கள். எனினும் எதிர்காலத்தில் உங்களைப் போல் அவர்களும் இரக்கத்தைப் பெறுவார்கள். 32 அனைத்து மக்களும் தேவனுக்குப் பணிய மறுத்திருக்கின்றனர். தேவன் பணியாதவர்களை ஓரிடத்தில் சேர்த்தார். எனவே, அவர் அனைவர் மீதும் இரக்கம் கொள்ள முடியும்.
10 இயேசு மக்களைத் தன்னருகில் அழைத்து, “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். 11 ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” என்று சொன்னார்.
12 பின்னர். அவரது சீஷர்கள் இயேசுவிடம் வந்து, “நீங்கள் சொல்லியவற்றால் பரிசேயர்கள் கோபமாயுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.
13 அதற்கு இயேசு, “பரலோகத்தில் இருக்கும் என் பிதாவால் நடப்படாத செடிகள் ஒவ்வொன்றும் வேருடன் பிடுங்கப்படும். 14 பரிசேயர்களிடமிருந்து விலகியிருங்கள். குருடர்கள் குருடர்களை வழிநடத்துவதுபோல் அவர்கள் மக்களை வழிநடத்துகிறார்கள். ஒரு குருடன் மற்றொரு குருடனை வழிநடத்தினால், இருவருமே பள்ளத்தில் வீழ்வார்கள்” என்றார்.
15 அப்பொழுது பேதுரு, “நீர் மக்களுக்கு முதலில் சொல்லியதன் பொருளை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டான்.
16 அதற்கு இயேசு, “புரிந்து கொள்வதில் இன்னமுமா சிரமம்? 17 ஒரு மனிதனின் வாய்க்குள் செல்லும் உணவு அனைத்தும் அவனது வயிற்றை அடைவது உனக்குத் தெரியும். பின் அந்த உணவு அவன் உடலை விட்டு வெளியேறுகிறது. 18 ஆனால், ஒருவன் பேசும் தீய சொற்கள் அவன் மனதிலிருந்து தோன்றுகின்றன. இவையே ஒருவனை அசுத்தமாக்குகின்றன. 19 தீய எண்ணங்கள், கொலை, விபச்சாரம், பாலியல் பாவங்கள், திருட்டு, பொய், மற்றவர்களைத் தூற்றுதல் ஆகிய எல்லாத் தீமைகளும் ஒருவனது உள்ளத்திலேயே தோன்றுகின்றன. 20 இவை ஒருவனை அசுத்தமாக்குகின்றன. ஆனால் உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவாதிருப்பது ஒருவனை அசுத்தமாக்குவது இல்லை” என்றார்.
யூதரல்லாத பெண்மணிக்கு உதவுதல்
(மாற்கு 7:24-30)
21 இயேசு அவ்விடத்தை விட்டு தீரு மற்றும் சீதோன் பிரதேசங்களுக்குச் சென்றார். 22 அப்பிரதேசத்தைச் சேர்ந்த கானான் ஊர் பெண் ஒருத்தி இயேசுவிடம் வந்தாள். அவள் இயேசுவிடம் கதறியழுது, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு உதவும்! என் மகளைப் பிசாசு பிடித்திருக்கிறது. அவள் மிகவும் துன்பப்படுகிறாள்” என்றாள்.
23 ஆனால் இயேசு அவளுக்கு மறுமொழி கூறவில்லை. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “அந்தப் பெண்ணைப் போகச் சொல்லும். நம்மைத் தொடந்து வந்து கதறுகிறாள்” என்று கெஞ்சினார்கள்.
24 இயேசு, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்று கூறினார்.
25 அப்போது அப்பெண் இயேசுவின் முன்னர் வந்து மண்டியிட்டு, “ஆண்டவரே, எனக்கு உதவும்” எனக் கூறினாள்.
26 இயேசு, “குழந்தைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குக் கொடுப்பது சரியல்ல” என்று பதில் சொன்னார்.
27 அதற்கு அப்பெண், “ஆம் ஆண்டவரே! ஆனால் எஜமானனின் மேஜையிலிருந்து சிதறும் அப்பத்துண்டுகளை நாய்கள் உண்ணுகின்றனவே” என்றாள்.
28 பின்னர் இயேசு அவளை நோக்கி, “பெண்ணே, உனக்கு மிகுந்த விசுவாசம் இருக்கின்றது! நான் செய்ய வேண்டுமென்று நீ விரும்பியதை நான் செய்கின்றேன்” என்று கூறினார். அதே நேரத்தில் அப்பெண்ணின் குமாரத்தி குணப்படுத்தப்பட்டாள்.
2008 by World Bible Translation Center