Add parallel Print Page Options

யூதரல்லாத பெண்ணுக்கு உதவி

(மத்தேயு 15:21-28)

24 இயேசு அந்த இடத்தைவிட்டு தீரு பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த ஒரு வீட்டுக்குச் சென்றார். அங்குதான் அவர் இருக்கிறார் என்பதை அங்குள்ள மக்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஆனால் அவர் மக்களின் கவனத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. 25 அவர் அங்கு இருப்பதை ஒரு பெண் கேள்வியுற்றாள். அவளது சிறு குமாரத்தி, அசுத்த ஆவியை உடையவள். எனவே, அவள் இயேசுவிடம் வந்து அவரது பாதத்தில் விழுந்து வணங்கினாள். 26 அவள் யூதர்குலத்துப் பெண் அல்ல. அவள் கிரேக்கப் பெண். சீரோபேனிக்கேயாவில் பிறந்தவள். அவள் தன் மகளைப் பிடித்த பிசாசை விரட்டுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.

27 அந்தப் பெண்ணிடம் இயேசு, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களிடம் கொடுப்பது சரியன்று. முதலில் பிள்ளைகள் தேவையான அளவு உண்ணட்டும்” என்றார்.

28 “அது உண்மை தான் ஆண்டவரே. பிள்ளைகள் உண்ணாத உணவுத் துணுக்குகளை மேசைக்கடியில் உள்ள நாய்கள் உண்ணலாமே” என்று அவள் பதில் சொன்னாள்.

29 பிறகு அந்தப் பெண்ணிடம் இயேசு, “இது நல்ல பதில். நீ போகலாம். பிசாசு உன் மகளை விட்டுப் போய்விட்டது” என்றார்.

30 அந்தப் பெண் வீட்டுக்குப் போனாள். தன் குழந்தை படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். பிசாசு அவளை விட்டு நீங்கி இருந்தது.

Read full chapter