); Isaiah 49:13-23 (God comforts the suffering); Matthew 18:1-14 (Become like a child) (Tamil Bible: Easy-to-Read Version)
Revised Common Lectionary (Complementary)
148 கர்த்தரைத் துதியுங்கள்!
மேலேயுள்ள தேவ தூதர்களே,
பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்!
2 தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது சேனைகள்[a] எல்லோரும் அவரைத் துதியுங்கள்!
3 சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்!
நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்!
4 மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்!
வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்!
5 கர்த்தருடைய நாமத்தைத் துதி.
ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்!
6 இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார்.
என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார்.
7 பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதியுங்கள்!
சமுத்திரத்தின் பெரிய விலங்குகளே, கர்த்தரைத் துதியுங்கள்!
8 தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும்
புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார்.
9 மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும்
கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார்.
10 எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும்
ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார்.
11 பூமியின் தேசங்களையும் ராஜாக்களையும் தேவன் உண்டாக்கினார்.
தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார்.
12 இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார்.
முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார்.
13 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!
அவர் நாமத்தை என்றென்றும்
மகிமைப்படுத்துங்கள்!
பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்!
14 தேவன் அவரது ஜனங்களைப் பலப்படுத்துகிறார்.
தேவனைப் பின்பற்றுவோரை ஜனங்கள் வாழ்த்துவார்கள்.
ஜனங்கள் இஸ்ரவேலை வாழ்த்துவார்கள்.
தேவன் அவர்களுக்காகப் போராடுகிறார்.
கர்த்தரைத் துதியுங்கள்.
13 வானங்களும் பூமியும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்.
மலைகள் மகிழ்ச்சியோடு சத்தமிடட்டும்.
ஏனென்றால், கர்த்தர் தமது ஜனங்களை ஆறுதல் படுத்துகிறார்.
கர்த்தர் தமது ஏழை ஜனங்களிடம் நல்லவராக இருக்கிறார்.
14 ஆனால், இப்பொழுது சீயோன் கூறுகிறாள், “கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார்.
எனது ஆண்டவர் என்னை மறந்துவிட்டார்.”
15 ஆனால் நான் சொல்கிறேன், “ஒரு பெண்ணால் தன் குழந்தையை மறக்கமுடியுமா? முடியாது!
ஒரு பெண்ணால் தன் கர்ப்பத்திலிருந்து வந்த குழந்தையை மறக்கமுடியுமா? இல்லை! ஒரு பெண்ணால் தன் பிள்ளையை மறக்கமுடியாது!
ஆனால் அவள் மறந்தாலும்
நான் (கர்த்தர்) உன்னை மறக்கமுடியாது.
16 பார், நான் உனது பெயரை என் உள்ளங்கையில் செதுக்கி இருக்கிறேன்.
நான் எப்பொழுதும் உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்!
17 உனது பிள்ளைகள் உன்னிடம் திரும்பி வருவார்கள்.
ஜனங்கள் உன்னைத் தோற்கடித்தார்கள். ஆனால் அந்த ஜனங்கள் உன்னைத் தனியாகவிடுவார்கள்!
18 மேலே பார்! உன்னைச் சுற்றிலும் பார்!
உனது பிள்ளைகள் அனைவரும் ஒன்றாகக் கூடி உன்னிடம் வருகிறார்கள்.”
“என் உயிர்மேல் வாக்குறுதியாக இதனைச் சொல்கிறேன்” என்கிறார் கர்த்தர்.
உங்கள் பிள்ளைகள் நகைகளைப்போன்றவர்கள். அவர்களைக் கழுத்தைச் சுற்றி அணிந்துகொள்.
உங்கள் பிள்ளைகளை மணமகள் அணியத்தக்க கழுத்துப் பதக்கம் போன்று அணிந்துகொள்.
19 “இப்பொழுது நீங்கள் தோற்கடிக்கப்படுகிறீர்கள்; அழிக்கப்படுகிறீர்கள்,
உங்கள் தேசம் பயனற்றது.
ஆனால் கொஞ்சக் காலத்திற்குப் பிறகு, உன் நாட்டில் ஏராளமான ஜனங்கள் இருப்பார்கள்.
உங்களை அழித்த ஜனங்கள் வெகுதொலைவில் இருப்பார்கள்.
20 நீங்கள் இழந்துப்போன பிள்ளைகளுக்காக வருத்தப்பட்டீர்கள்.
ஆனால் அந்தப் பிள்ளைகள் உங்களிடம், ‘இந்த இடம் மிகவும் சிறிதாய் உள்ளது.
நாங்கள் வாழ்வதற்கு ஒரு பெரிய இடத்தைக் கொடு’ என்று சொல்வார்கள்.
21 பிறகு நீ உனக்குள்ளேயே,
‘இந்தப் பிள்ளைகளையெல்லாம் எனக்கு யார் கொடுத்தது. இது மிகவும் நல்லது.
நான் தனியாகவும் சோகமாகவும் இருக்கிறேன்.
நான் தோற்கடிக்கப்பட்டு என் ஜனங்களிடமிருந்து தொலைவில் உள்ளேன்.
எனவே, இந்த பிள்ளைகளை எனக்கு யார் கொடுத்தது?
பார், நான் தனியாக விடப்பட்டுள்ளேன்.
இந்தப் பிள்ளைகள் எல்லோரும் எங்கிருந்து வந்தார்கள்?’”
என்று சொல்லிக்கொள்வாய்.
22 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்.
“பார், நான் நாடுகளுக்கு என் கையை ஆட்டுகிறேன்.
எல்லா ஜனங்களும் பார்க்கும்படி நான் எனது கொடியை ஏற்றுவேன்.
பிறகு உனது பிள்ளைகளை உன்னிடம் அழைத்து வருவார்கள்.
அந்த ஜனங்கள் உங்கள் பிள்ளைகளைத் தம் தோள்களில் தூக்கிச் செல்வார்கள். அவர்கள் தம் கைகளில் பிடித்துக்கொள்வார்கள்.
23 ராஜா உன் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாக இருப்பார்கள்.
அரசகுமாரிகள் அவர்களைக் கவனித்துகொள்வார்கள்.
அந்த ராஜாக்களும் இளவரசிகளும் உங்களுக்குப் பணிவார்கள்.
அவர்கள் புழுதி படிந்த உங்கள் கால்களை முத்தமிடுவார்கள்.
பிறகு நான்தான் கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள்.
என்னை நம்புகிற எவனும் ஏமாற்றப்படமாட்டான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.”
இயேசு யார் பெரியவர் என்பது பற்றிச் சொல்லுதல்
(மாற்கு 9:33-37; லூக்கா 9:46-48)
18 அச்சமயத்தில் இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, “பரலோக இராஜ்யத்தில் யார் மிகப் பெரியவர்?” என்று கேட்டனர்.
2 இயேசு ஒரு சிறு பிள்ளையைத் தம்மருகில் அழைத்து, தம் சீஷர்கள் முன் நிறுத்தினார். 3 பின் அவர்களிடம் கூறினார், “நான் உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். நீங்கள் மனந்திரும்பி உள்ளத்தில் சிறு பிள்ளைகளைப் போல ஆக வேண்டும். அவ்வாறு மாறாவிட்டால், நீங்கள் ஒருபொழுதும் பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியாது. 4 இந்த சிறு பிள்ளையைப்போல பணிவுள்ளவனாகிறவனே பரலோக இராஜ்யத்தில் பெரியவன்.
5 “இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்கிறவன், என்னையும் ஏற்றுக்கொள்கிறான்.
பாவத்திற்குக் காரணமானவர்களை இயேசு எச்சரித்தல்
(மாற்கு 9:42-48; லூக்கா 17:1-2)
6 “என்னிடம், நம்பிக்கை வைத்துள்ள ஒரு சிறு பிள்ளையைப் பாவம் செய்ய ஒருவன் தூண்டினால், அவனுக்கு மிகத் தீமை விளையும். அவ்வாறு செய்கிறவன், ஒரு ஆட்டுக்கல்லைத் தன் கழுத்தில் கட்டிக் கொண்டு கடலில் மூழ்குவதே நல்லது. 7 பாவம் செய்ய மக்கள் சோதிக்கப்படுவதால், அவர்களுக்காக வருந்துகிறேன். அவ்வாறான செயல்கள் நடக்கவேண்டும்தான். ஆனால், அவற்றுக்குக் காரணமானவர்களுக்கு மிகுந்த தீங்கு வரும்.
8 “உங்களது கையோ அல்லது காலோ உங்களைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறியுங்கள். சரீரத்தின் ஒரு பகுதியை இழந்து நித்திய ஜீவனை அடைவது உங்களுக்கு நல்லது. இரு கை கால்களுடன் எரிகின்ற நரகத்தின் தீயில் என்றென்றைக்குமாக எறியப்படுவதைக் காட்டிலும் அது நல்லது. 9 உங்களது கண் உங்களைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைப் பிடுங்கி எறியுங்கள். ஒரு கண்ணை இழந்து நித்திய ஜீவனை அடைவது உங்களுக்கு நல்லது. இரண்டு கண்களுடன் நரகத்தின் தீயில் எறியப்படுவதைக் காட்டிலும் அது நல்லது.
காணாமல் போன ஆட்டைப்பற்றிய உவமை
(லூக்கா 15:3-7)
10 “எச்சரிக்கையாயிருங்கள். இச்சிறு பிள்ளைகள் மதிப்பற்றவர்கள் என்று எண்ணாதீர்கள். இவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப் பெற்றுள்ளார்கள் என்று நான் சொல்லுகிறேன். மேலும் அத்தூதர்கள் எப்பொழுதும் பரலோகத்தில் என் பிதாவானவருடன் இருக்கிறார்கள். 11 [a]
12 “நூறு ஆடுகளை வைத்திருப்பவன் ஒரு ஆட்டை இழந்தால் மீதி தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் குன்றில் விட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிப்போவான் அல்லவா? 13 காணாமல் போன ஆட்டை அவன் கண்டுபிடித்தால், காணமல் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் காட்டிலும் அதனால் மிக மகிழ்ச்சியடைவான். 14 அதைப்போலவே, பரலோகத்தில் இருக்கும் என் பிதா இப்பிள்ளைகள் யாரையும் இழக்க விரும்பவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன்.
2008 by World Bible Translation Center