Revised Common Lectionary (Complementary)
தாவீது பாடிய பாடல்களுள் ஒன்று. ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காகப் பாடிய பாடல்.
30 கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர்.
எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர்.
எனவே நான் உம்மை கனப்படுத்துவேன்.
2 என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
நீர் என்னைக் குணமாக்கினீர்.
3 கல்லறையினின்று என்னை விடுவித்தீர்.
என்னை வாழவிட்டீர்.
குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.
4 தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்!
அவரது பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள்!
5 தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே.”
ஆனால் அவர் அன்பை வெளிப்படுத்தினார், எனக்கு “உயிரைக்” கொடுத்தார்.
இரவில் அழுதபடி படுத்திருந்தேன்.
மறுநாள் காலையில் மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தேன்!
6 இப்போது இவ்வாறு நான் கூறமுடியும்.
அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன்.
“நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!”
7 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர்.
எதுவும் என்னை வெல்ல முடியாது என உணர்ந்தேன்.
சிலகாலம், நீர் என்னை விட்டு விலகினீர்,
நான் மிகவும் பயந்தேன்.
8 தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன்.
எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன்.
9 நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்?
மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள்.
அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை!
என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன்.
10 கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும்.
என்னிடம் தயவாயிரும்!
கர்த்தாவே, எனக்கு உதவும்.
11 நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்!
என் அழுகையை நடனக்களிப்பாய் மாற்றினீர்.
அழுகையின் ஆடைகளை நீர் அகற்றிப்போட்டீர்.
மகிழ்ச்சியால் என்னைப் பொதிந்து வைத்தீர்.
12 எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன்.
ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன்.
எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.
யோவாப் புத்திசாலியான ஒரு பெண்ணை தாவீதிடம் அனுப்புகிறான்
14 தாவீது ராஜா அப்சலோமின் பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்துவதை செருயாவின் குமாரனாகிய யோவாப் அறிந்தான். 2 எனவே, யோவாப் சிலரைத் தெக்கோவாவிற்கு அனுப்பி, அங்கிருந்து புத்திசாலியான ஒரு பெண்ணை அழைத்து வருமாறு கூறினான். யோவாப் அந்தப் பெண்ணிடம், “மிகவும் துக்கமாயிருக்கிறவளைப்போல் காண்பித்துக்கொள். துக்கத்திற்கு அறிகுறியான ஆடைகளை அணிந்துக்கொள். நல்ல ஆடைகளை அணியாதே. மரித்த ஒருவருக்காக பல நாட்கள் வருந்துகிற ஒருவளைப் போல் நடி. 3 ராஜாவிடம் போய் நான் உனக்குச் சொல்லித்தரும் சொற்களைப் பயன்படுத்திப் பேசு” என்றான். பின்பு யோவாப் அப்பெண்ணுக்கு அவள் கூற வேண்டியவற்றைச் சொல்லிக்கொடுத்தான்.
4 பின்பு தெக்கோவாவைச் சேர்ந்த அப்பெண் ராஜாவிடம் பேசினாள். அவள் தரையில் விழுந்து முகம் நிலத்தைத் தொடும்படி வணங்கினாள். அவள் குனிந்து, “ராஜாவே, எனக்கு உதவுங்கள்!” என்றாள்.
5 தாவீது ராஜா அவளிடம், “உனக்கு நேர்ந்த பிரச்சனை என்ன?” என்று கேட்டான்.
அப்பெண், “நான் ஒரு விதவை எனது கணவன் மரித்துப்போனான். 6 எனக்கு இரண்டு குமாரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் களத்தில் போரிட்டனர். ஒருவரும் அவர்கள் சண்டையைச் சென்று நிறுத்தவில்லை. ஒருவன் மற்றவனைக் கொன்றுவிட்டான். 7 இப்போது எனது குடும்பத்தார் எனக்கு விரோதிகளாயிருக்கிறார்கள். அவர்கள் என்னை நோக்கி, ‘சகோதரனைக் கொன்ற உனது குமாரனை அழைத்து வா, நாங்கள் அவனைக் கொல்லவேண்டும். ஏனெனில் அவன் தனது சகோதரனைக் கொன்றிருக்கிறான்’ என்றனர். எனது குமாரன் நெருப்பில் மீந்திருக்கும் கடைசி கரிநெருப்பைப் போன்றவன். அவன் மரித்தால் எங்கள் குடும்ப விளக்கு அணைந்துவிடும். தந்தையின் சொத்தை சுதந்தரிக்கும்படி பிழைத்திருக்கும் ஒரே குமாரன் அவனே. அவன் மரித்தால் மரித்துப்போன எனது கணவனின் சொத்துக்கள் வேறொருவருக்குச் சொந்தமாகும். அவனது பெயரும் தேசத்தில் இல்லாதபடி அழிந்துப்போகும்” என்றாள்.
8 அப்போது ராஜா அப்பெண்ணை நோக்கி, “வீட்டிற்குப் போ. நான் உன் காரியங்களைக் கவனிப்பேன்” என்றான்.
9 தெக்கோவாவின் பெண் ராஜாவை நோக்கி, “பழி என் மீது இருக்கட்டும். எனது ஆண்டவனாகிய ராஜாவே! நீர் குற்றமற்றவர் உமது சிங்காசனமும் குற்றமற்றது” என்றாள்.
10 தாவீது ராஜா, “யாரேனும் உன் மீது தீயவற்றைக் கூறினால் அவனை என்னிடம் அழைத்து வா. அவன் உன்னை மீண்டும் தொல்லைப்படுத்தமாட்டான்” என்றான்.
11 அந்தப் பெண், “தயவு செய்து, உமது தேவனாகிய கர்த்தருடைய பெயரால் ஆணையிட்டு நீங்கள் அந்த ஜனங்களைத் தடுப்பதாக எனக்கு வாக்களியுங்கள். தனது சகோதரனைக் கொலைச் செய்ததற்காக அவர்கள் எனது குமாரனைத் தண்டிக்க விரும்புகிறார்கள். அவர்கள் என் குமாரனை அழிக்காதபடி நீர் பாதுகாப்பீராக எனக்கு வாக்கு கொடும்” என்றாள்.
தாவீது, “கர்த்தர் உயிரோடிருப்பது போலவே, யாரும் உன் குமாரனைத் தாக்கமாட்டார்கள். உன் குமாரனின் தலையிலிருந்து ஒரு முடிகூட நிலத்தில் விழாது” என்றான்.
பவுலின் சாட்சி
6 “ஆனால் தமஸ்குவிற்கு நான் செல்லும் வழியில் ஏதோ ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் தமஸ்குவை நெருங்கிக்கொண்டிருந்தபோது அது நண் பகல் நேரம். தீடீரென்று என்னைச் சுற்றிலும் வானிலிருந்து மிகுந்த ஒளி பிரகாசித்தது. 7 நான் தரையில் வீழ்ந்தேன். ஒரு குரல் என்னிடம், ‘சவுலே, சவுலே, நீ ஏன் எனக்கு இத்தீய காரியங்களைச் செய்கின்றாய்?’ என்றது.
8 “நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்டேன், அக்குரல், ‘நான் நாசரேத்தின் இயேசு. நீ கொடுமைப்படுத்துகிறவன் நானே’ என்றது. 9 என்னோடிருந்த மனிதர்கள் அக்குரலைக் கேட்கவில்லை. ஆனால் அம்மனிதர்கள் ஒளியைக் கண்டார்கள்.
10 “நான், ‘ஆண்டவரே, நான் என்ன செய்யட்டும்?’ என்றேன். கர்த்தராகிய இயேசு பதிலாக, ‘எழுந்து தமஸ்குவுக்குள் போ, நீ செய்ய வேண்டுமென நான் திட்டமிட்டுள்ள அனைத்தையும் குறித்து அங்கே உனக்கு அறிவிக்கப்படும்’ என்றார். 11 என்னால் பார்க்கமுடியாதபடிக்கு, அப்பிரகாசமான ஒளி என்னைக் குருடாக்கிற்று. எனவே என் மனிதர்கள் என்னைத் தமஸ்குவுக்கு வழி நடத்தினார்கள்.
12 “தமஸ்குவில் அனனியா[a] என்னும் பெயருள்ள மனிதன் என்னிடம் வந்தான். அனனியா பக்திமான். அவன் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தவன். அங்கு வாழ்ந்த யூதர்கள் அனைவரும் அவனை மதித்தனர். 13 அனனியா என் அருகில் வந்து, ‘சகோதரனாகிய சவுலே, மீண்டும் பார்ப்பாயாக’ என்றான். உடனே என்னால் பார்க்க முடிந்தது.
14 “அனனியா என்னிடம், ‘நமது முன்னோர்களின் தேவன் அவரது திட்டத்தைத் தெரிந்துகொள்வதற்கு உன்னைத் தேர்ந்தெடுத்தார். நேர்மையானவரைக் கண்டு அவரது வார்த்தைகளை அவரிடமிருந்து கேட்பதற்காக அவர் உன்னைத் தெரிந்துகொண்டார். 15 எல்லா மக்களுக்கும் நீ அவரது சாட்சியாக இருப்பாய். நீ பார்த்ததையும் கேட்டதையும் மனிதருக்குக் கூறுவாய். 16 இப்போது இன்னும் காத்திராமல் எழுந்திரு. ஞானஸ்நானம் பெற்றுக்கொள். உன் பாவங்கள் நீங்கக் கழுவப்படு. உன்னை இரட்சிப்பதற்காக இயேசுவின் மீது விசுவாசம் கொண்டு இதனைச் செய்’ என்றான்.
17 “பிற்பாடு நான் எருசலேமுக்குத் திரும்பி வந்தேன். நான் தேவாலய முற்றத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது ஒரு காட்சியைக் கண்டேன். 18 நான் இயேசுவைக் கண்டேன். இயேசு என்னிடம், ‘விரைவாகச் செயல்படு. இப்போதே எருசலேமை விட்டுச் செல். இங்குள்ள மக்கள் என்னைப்பற்றிய உனது சாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார்.
19 “நான், ‘ஆனால் கர்த்தாவே, நான் விசுவாசிகளைச் சிறையில் அடைத்தும் அவர்களை அடித்துத் துன்புறுத்தியவனுமாயிருந்தேன் என்பதை மக்கள் அறிவர். உங்களிடம் நம்பிக்கை வைத்த மக்களைத் தேடி யூத ஜெப ஆலயங்களுக்கெல்லாம் சென்றேன். 20 உங்கள் சாட்சியாக ஸ்தேவான் கொல்லப்பட்டபோது நான் அங்கிருந்ததையும் மக்கள் அறிவர். நான் அங்கு நின்று ஸ்தேவான் கொல்லப்பட வேண்டுமென ஆமோதித்தேன். அவனைக் கொன்று கொண்டிருந்த மனிதர்களின் அங்கிகளையும் வைத்திருந்தேன்!’ என்றேன்.
21 “ஆனால் பின்னர் இயேசு என்னை நோக்கி, ‘இப்போது புறப்பட்டுச் செல். நான் உன்னைத் தூர இடங்களுக்கு யூதரல்லாத மக்களிடம் அனுப்புவேன்’ என்றார்” என்றான்.
2008 by World Bible Translation Center