Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 72

சாலொமோனுக்கு.

72 தேவனே, ராஜாவும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும்.
    உமது நல்லியல்பை ராஜாவின் குமாரனும் அறிந்துகொள்ள உதவும்.
ராஜா உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும்.
    உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.
தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
ஏழைகளுக்கு ராஜா நல்லவனாக இருக்கட்டும்.
    திக்கற்றோருக்கு அவன் உதவட்டும்.
    அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும்.

சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் ராஜாவுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
    என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
வயலில் விழும் மழையைப்போன்றிருக்க ராஜாவுக்கு உதவும்.
    பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.
அவன் ராஜாவாக இருக்கும்போது நன்மை மலரட்டும்.
    சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.

ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும்,
    கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும்.
பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள்.
    புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும்.
10 தர்ஷீசின் ராஜாக்களும் தூரத்துத் தேசங்களின் ராஜாக்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும்.
    ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள ராஜாக்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும்.
11 எல்லா ராஜாக்களும் நமது ராஜாவை விழுந்து வணங்கட்டும்.
    எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும்.

12 நமது ராஜா திக்கற்றோருக்கு உதவுகிறார்.
    ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் ராஜா உதவுகிறார்.
13 ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் ராஜாவைச் சார்ந்திருப்பார்கள்.
    ராஜா அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார்.
14 அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து ராஜா அவர்களைக் காப்பாற்றுகிறார்.
    அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் ராஜாவுக்கு மிக முக்கியமானவை.

15 ராஜா நீடூழி வாழ்க!
    அவர் சேபாவின் பொன்னைப் பெறட்டும்.
எப்போதும் ராஜாவுக்காக ஜெபம் செய்யுங்கள்.
    ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதியுங்கள்.
16 வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும்.
    மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும்.
நிலங்களில் புல் வளர்வது போன்று
    நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும்.
17 ராஜா என்றென்றும் புகழ்பெறட்டும்.
    சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும்.
ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும்.
    அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும்.

18 இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.
    தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.
19 அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்!
    அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!

20 ஈசாயின் குமாரனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன.

ஏசாயா 6:1-5

தேவன் ஏசாயாவைத் தீர்க்கதரிசியின் ஊழியத்திற்கு அழைக்கிறார்

உசியா ராஜா மரித்த ஆண்டிலே, நான் எனது ஆண்டவரைப் பார்த்தேன். அவர் மிகவும் உயரமான ஆச்சரியகரமான சிங்காசனத்தின் மேல் அமர்ந்திருந்தார். அவரது நீண்ட அங்கியானது ஆலயத்தை நிறைத்தது.

சேராபீன்கள்[a] கர்த்தரைச் சுற்றி நின்றார்கள். ஒவ்வொரு சேராபீனுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. அவர்கள் இரு சிறகுகளால் தங்கள் முகத்தை மூடிக்கொண்டனர். இன்னும் இரு சிறகுகளால் தம் பாதங்களை மூடிக்கொண்டனர். அவர்கள் இரண்டு சிறகுகளைப் பறப்பதற்குப் பயன்படுத்தினார்கள். ஒருவரை ஒருவர் அழைத்து, அவர்கள்: “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மகா பரிசுத்தமானவர். அவரது மகிமை பூமியை நிரப்பியது” என்றனர். அவர்களின் சத்தம் மிகவும் பலமாக இருந்தது. அவர்களின் சத்தம் கதவின் நிலைகளை அசையப்பண்ணிற்று. பிறகு ஆலயமானது புகையால் நிரம்பியது.

நான் மிகவும் பயந்துவிட்டேன், நான்: “ஓ! நான் அழிக்கப்படுவேன். நான் தேவனோடு பேசுகிற அளவிற்கு பரிசுத்தமானவன் இல்லை. என்னைச் சுற்றி இருப்பவர்களும் தேவனோடு பேசுகிற அளவிற்கு பரிசுத்தமானவர்கள் இல்லை. எனினும், நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய நமது அரசரைப் பார்த்தேன்” என்றேன்.

அப்போஸ்தலர் 7:44-53

44 “வனாந்தரத்தில் பரிசுத்தக் கூடாரம்[a] நமது முன்னோரிடம் இருந்தது. இந்தக் கூடாரத்தை எப்படி உண்டாக்குவது என்று தேவன் மோசேயிடம் கூறினார். தேவன் காட்டிய திட்டத்தின்படியே மோசே அதை உண்டாக்கினார். 45 பின்னால் பிற தேசங்களின் நிலங்களைக் கைப்பற்றும்படியாக யோசுவா நமது தந்தையரை வழி நடத்தினார். நமது மக்கள் அங்குச் சென்றபோது அங்கிருந்த மக்களை தேவன் வெளியேறும்படிச் செய்தார். நமது மக்கள் இப்புதிய நிலத்திற்குச் சென்றபொழுது, இதே கூடாரத்தைத் தம்முடன் எடுத்துச் சென்றனர். தாவீதின் காலம்வரைக்கும் நம் மக்கள் அதை வைத்திருந்தனர். 46 தேவன் தாவீதைக் குறித்து மகிழ்ந்தார். தாவீது தேவனிடம் யாக்கோபின் தேவனாகிய அவருக்கு ஒரு வீட்டைக் கட்ட அனுமதி வேண்டினான். 47 ஆனால் சாலமோன் தான் அந்த ஆலயத்தைக் கட்டினான்.

48 “ஆனால் உன்னதமானவர் மனிதர் தங்கள் கைகளால் கட்டும் வீடுகளில் வசிப்பதில்லை. தீர்க்கதரிசி இதனையே எழுதினார்.

49 “கர்த்தர் கூறுகிறார்,
‘வானம் எனது சிம்மாசனம்.
    பூமி எனது பாதங்கள் வைக்கும் இடம்.
எனக்காக எவ்விதமான வீட்டைக் கட்டப்போகிறீர்கள்?
    ஓய்வெடுக்க எனக்கு ஓர் இடம் தேவையில்லை.
50 நான் இவை எல்லாவற்றையும் உண்டாக்கினேன் என்பதை நினைவுகூருங்கள்!’”(A)

என்றான்.

51 பின் ஸ்தேவான், “பிடிவாதமான யூதத் தலைவர்களே! நீங்கள் உங்கள் இருதயங்களை தேவனுக்குக் கொடுக்கவில்லை! நீங்கள் அவர் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கமாட்டீர்கள்! பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் கூற முயல்வதை எப்போதும் எதிர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தந்தையர் இதைச் செய்தார்கள். நீங்களும் அவர்களைப் போலவே இருக்கிறீர்கள்! 52 உங்கள் தந்தையர் தங்கள் காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தீர்க்கதரிசியையும் புண்படுத்தினார்கள். அந்தத் தீர்க்கதரிசிகள் வெகு காலத்திற்கு முன்பே நீதியுள்ள ஒருவர் வருவார் எனக் கூறினார்கள். ஆனால் உங்கள் தந்தையர் அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள். இப்பொழுது நீங்கள் நீதியுள்ள அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளீர்கள். 53 மோசேயின் சட்டத்தைப் பெற்றவர்கள் நீங்கள். தமது தேவதூதர்களின் மூலமாகக் தேவன் இந்தச் சட்டத்தை உங்களுக்குக் கொடுத்தார். ஆனால் நீங்களோ இந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதில்லை” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center