Revised Common Lectionary (Complementary)
6 தேவனே, உமது ஆட்சி என்றென்றும் தொடரும்.
நன்மையே உமது செங்கோலாகும்.
7 நீர் நன்மையை விரும்பித் தீமையைப் பகைக்கிறீர்.
எனவே உமது தேவன் உம் நண்பர்களுக்கு மேலாக உம்மை ராஜாவாக்கினார்.
8 வெள்ளைப்போளம், இலவங்கம், சந்தனம் ஆகியவற்றின் நறுமணம் உம் ஆடைகளில் வீசும்.
தந்தத்தால் மூடப்பட்ட அரண்மனைகளிலிருந்து உம்மை மகிழ்வூட்டும் இசை பரவும்.
9 மணத்தோழியரே ராஜாவின் குமாரத்திகள் ஆவர்.
உமது வலப் பக்கத்தில் மணப்பெண் பொன்கிரீடம் சூடி நிற்கிறாள்.
10 மகளே, கேள்,
கவனமாகக் கேள், நீ புரிந்துகொள்வாய்.
உன் ஜனங்களையும், உன் தந்தையின் குடும்பத்தையும் மறந்துவிடு.
11 ராஜா உன் அழகை விரும்புகிறார்.
அவர் உன் புது மணமகன்.
நீ அவரைப் பெருமைப்படுத்துவாய்.
12 தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள்.
அவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள்.
13 அரச குமாரத்தி
பொன்னில் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த அழகிய மணியைப் போன்றவள்.
14 மணமகள் அழகிய ஆடையணிந்து ராஜாவிடம் அழைத்துவரப்பட்டாள்.
மணத் தோழியர் அவளைத் தொடர்ந்தனர்.
15 அவர்கள் மகிழ்ச்சி பொங்க வந்தனர்.
மனமகிழ்வோடு அரண்மனைக்குள் நுழைந்தனர்.
16 ராஜாவே, உம் குமாரர்கள் உமக்குப் பின் ஆட்சி செய்வார்கள்.
தேசம் முழுவதும் அவர்களை ஆளச் செய்வீர்.
17 உமது நாமத்தை என்றென்றும் புகழ் பெறச் செய்வேன்.
என்றென்றும் ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.
கர்த்தரிடம் திரும்பு
14 இஸ்ரவேலே, நீ விழுந்தாய், தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தாய். எனவே உனது தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வா. 2 நீ சொல்லப் போவதைப் பற்றி நினைத்துப் பார். கர்த்தரிடம் திரும்பி வா. அவரிடம்,
“எங்கள் பாவங்களை எடுத்துவிடும்.
நாங்கள் செய்யும் நன்மைகளை ஏற்றுக்கொள்ளும்.
நாங்கள் எங்கள் உதடுகளிலிருந்து துதிகளை செலுத்துகிறோம்.
3 அசீரியா எங்களைக் காப்பாற்றாது.
நாங்கள் போர்க் குதிரைகளில் சவாரி செய்யமாட்டோம்.
நாங்கள் மீண்டும் ஒருபோதும்
‘எங்கள் தேவன்’
என்று எங்கள் கைகளால் செய்யப்பட்டப் பொருட்களைக் கூறமாட்டோம்.
ஏனென்றால் நீர் ஒருவர் தான் அனாதைகள் மீது இரக்கங்காட்டுகிறவர்.”
கர்த்தர் இஸ்ரவேலை மன்னிப்பார்
4 கர்த்தர் கூறுகிறார்:
“என்னைவிட்டு அவர்கள் விலகியதை நான் மன்னிப்பேன்.
நான் அவர்களைத் தடையின்றி நேசிப்பேன்.
ஏனெனில் அவர்களுடன் கோபங்கொண்டதை நிறுத்திவிட்டேன்.
5 நான் இஸ்ரவேலுக்குப் பனியைப் போலிருப்பேன்.
இஸ்ரவேல் லீலிப் புஷ்பத்தைப் போன்று மலருவான்.
அவன் லீபனோனின் கேதுரு மரங்களைப்போன்று வளருவான்.
6 அவனது கிளைகள் வளரும்.
அவன் அழகான ஒலிவ மரத்தைப் போன்றிருப்பான்.
அவன் லீபனோனின் கேதுரு மரங்களிலிருந்து வரும்
இனிய மணத்தைப் போன்று இருப்பான்.
7 இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் எனது பாதுகாப்பின் கீழ் வாழ்வார்கள்.
அவர்கள் தானியத்தைப் போன்று வளருவார்கள்.
அவர்கள் திராட்சைக் கொடியைப் போன்று மலருவார்கள்.
அவர்கள் லீபனோனின் திராட்சைரசம் போல் இருப்பார்கள்.”
கர்த்தர் விக்கிரகங்களைப் பற்றி இஸ்ரவேலை எச்சரிக்கிறார்
8 “எப்பிராயீமே, நான் (கர்த்தர்) இனி விக்கிரகங்களோடு எந்தத் தொடர்பும் கொள்ளமாட்டேன்.
நான் ஒருவனே உங்களது ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறவர்.
நான் ஒருவனே உன்னைக் கவனித்து வருபவர். நான் எப்பொழுதும் பசுமையாக இருக்கும் தேவதாரு மரத்தைப் போன்றவர்.
உன் கனி என்னிடமிருந்து வருகிறது.”
இறுதி அறிவுரை
9 அறிவுள்ள ஒருவன் இவற்றைப் புரிந்துக்கொள்கிறான்.
விழிப்புள்ள ஒருவன் இவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
கர்த்தருடைய வழிகள் சரியாக இருக்கின்றன.
அவற்றில் நல்லவர்கள் நடப்பார்கள். பாவிகளோ அவற்றில் இடறிவிழுந்து மரிப்பார்கள்.
பவுலும்-போலி அப்போஸ்தலர்களும்
11 நான் கொஞ்சம் முட்டாளாக இருந்தாலும் என்னை நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். ஏற்கெனவே என்னை நீங்கள் பொறுத்துக்கொண்டிருக்கிறீர்கள். 2 நான் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இது தேவனிடமிருந்து வந்த பெருமை ஆகும். நான் உங்களைக் கிறிஸ்துவுக்குத் தருவதாய் வாக்குறுதி கொடுத்தேன். கிறிஸ்துவே உங்களது ஒரே மணவாளன். அவரது தூய மணப் பெண்ணாக உங்களை அவருக்குக் கொடுக்க விரும்புகிறேன். 3 எனினும் கிறிஸ்துவிடமுள்ள உங்கள் முழு அர்ப்பணிப்பில் இருந்து விலகும்படி உங்கள் மனம் கெடுக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன். பாம்பின் (சாத்தான்) தந்திர வழிகளின் மூலம் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதைப்போல உங்களுக்கும் நேரும். 4 நாங்கள் சொன்னதற்கு மாறாக இயேசுவைப் பற்றி போதிக்க வரும் எவரையும் நம்பி சகித்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்களிடமிருந்து பெற்ற ஆவிக்கும் நற்செய்திக்கும் மாறுபட்ட ஆவியையும் நற்செய்தியையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆகவே என்னையும் சகித்துக்கொள்ளுங்கள்.
5 மகாபிரதான அப்போஸ்தலரைவிட நான் ஒன்றிலும் குறைவு உள்ளவன் அல்லன் என எண்ணுகிறேன். 6 நான் பயிற்சி பெற்ற பேச்சாளன் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எனக்குப் போதிய ஞானம் உண்டு. நாங்கள் அவற்றை உங்களுக்கு எல்லா வழிகளிலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.
7 நான் உங்களுக்கு இலவசமாக தேவனுடைய நற்செய்தியைப் போதித்திருக்கிறேன். உங்களை உயர்த்துவதற்காக நான் பணிந்துபோயிருக்கிறேன். அதனைத் தவறு என்று எண்ணுகிறீர்களா? 8 உங்களைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு மற்ற சபைகளிடம் இருந்து பணத்தைப் பெற்றேன். 9 நான் உங்களோடு இருக்கும்போது, எனது தேவைகளுக்காக உங்களைத் துன்புறுத்தியதில்லை. எனக்கு தேவையானவற்றையெல்லாம் மக்கதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் கொடுத்தனர். எந்த வகையிலும் நான் உங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை. இனிமேலும் பாரமாக இருக்கமாட்டேன். 10 இதைப் பற்றி நான் பெருமைபட்டுக்கொள்வதை அகாயாவிலுள்ள[a] எவரும் என்னைத் தடுத்து நிறுத்த முடியாது. இதனை நான் என்னோடு இருக்கிற கிறிஸ்துவின் சத்தியத்தைக்கொண்டு கூறுகிறேன். 11 உங்களுக்குப் பாரமாயிருக்க விரும்பவில்லை என்று ஏன் கூறுகிறேன். உங்கள் மீது எனக்கு அன்பில்லையா? உண்டு. அதைப்பற்றி தேவன் நன்கு அறிவார்.
12 நான் இப்பொழுது செய்வதைத் தொடர்ந்து செய்வேன். ஏனென்றால் எங்கள் மீது குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் தேடுகிறவர்களுக்குக் காரணம் கிடைக்கக் கூடாது. தம் வேலையைப் பற்றிப் பெருமை பேசுகிறவர்கள் தம் வேலையை நம் வேலையைப் போன்ற ஒன்றாகச் சொல்லிக்கொள்ள விரும்புவார்கள். 13 அப்படிப்பட்டவர்கள் உண்மையான அப்போஸ்தலர்கள் அல்லர்; பொய் நிறைந்த பணியாளர்கள். அவர்கள் கிறிஸ்துவினுடைய அப்போஸ்தர்களின் வேடத்தைத் தரித்துக்கொள்ளுகிறார்கள். 14 இது எங்களை வியப்படையச் செய்யவில்லை. ஏனென்றால், சாத்தானே ஒளியின் தூதனாக[b] மாறுவேடம் அணிந்திருக்கிறான். 15 எனவே சாத்தானின் வேலைக்காரர்கள் நீதியின் வேலைக்காரர்களைப் போன்று வேடமிடுவது வியப்புக்குரியதல்ல. ஆனால் இவர்கள் இறுதியில் தங்கள் செயலுக்காகத் தண்டிக்கப்படுவர்.
2008 by World Bible Translation Center