Old/New Testament
பெலிஸ்தர்களோடு தாவீது வாழ்கிறான்
27 தாவீது தனக்குள், “என்றாவது சவுல் என்னைப் பிடித்துக் கொல்லுவான். எனவே பெலிஸ்தரின் நாட்டிற்குத் தப்பிச் செல்வதுதான் நான் இப்போது செய்ய வேண்டியது. பிறகு சவுல் என்னை இஸ்ரவேலில் தேடுவதை விட்டுவிடுவான். இவ்வாறுதான் இவனிடமிருந்து தப்பிக்கவேண்டும்” என்று நினைத்துக்கொண்டான்.
2 எனவே தாவீதும் அவனது 600 ஆட்களும் இஸ்ரவேலை விட்டு மாயோகின் மகனான ஆகீஸிடம் சென்றனர். ஆகீஸ் காத்தின் அரசன். 3 தாவீதும் அவனது குடும்பமும், ஆட்களும் காத்தில் ஆகீஸோடு வாழ்ந்தனர். தாவீதுடன் அவனது இரு மனைவியரும் இருந்தனர். அவர்கள் யெஸ்ரேலின் அகினோவாளும், கர்மேலின் அபிகாயிலும் ஆவார்கள். அபிகாயில் நாபாலின் விதவை. 4 தாவீது காத்துக்கு ஓடிப் போனதாக ஜனங்கள் வந்து சவுலிடம் சொல்லவே, அவனும் தாவீதைத் தேடுவதை விட்டுவிட்டான்.
5 ஆகீஸிடம் தாவீது, “என்னை உங்களுக்கு பிடிக்குமானால், எனக்கு நாட்டிலுள்ள ஒரு நகரத்தில் ஓரிடத்தைக் கொடுங்கள். நான் உங்கள் வேலைக்காரன். நான் அங்கே வாழ்வேன். உங்களோடு இத்தலைநகரத்தில் வாழமாட்டேன்” என்றான். 6 அன்றைய தினம் ஆகீஸ் தாவீதிற்கு சிக்லாக் நகரத்தைக் கொடுத்தான். அன்று முதல் அந்நகரம் யூதாவின் அரசர்களுக்கு உரியதாய் இருந்தது. 7 அங்கே தாவீது பெலிஸ்தர்களோடு ஓராண்டும் நான்கு மாதமும் வாழ்ந்தான்.
அரசனான ஆகீஸை தாவீது ஏமாற்றுகிறான்
8 தாவீதும் அவனது ஆட்களும் கெசூரியர், கெர்சியர் மற்றும் அமலேக்கியர் ஆகியோர்க்கு எதிராக படையெடுத்தனர். பழங்காலம் முதல் இவர்கள் தேலீம் அருகிலுள்ள சூர் முதல் எகிப்துவரை பரந்துள்ள நாட்டில் வாழ்ந்தனர். அவர்களைத் தோற்கடித்து செல்வங்களை அபகரித்தான். 9 தாவீது அப்பகுதியில் உள்ளவர்களையெல்லாம் தோற்கடித்தான். அவர்களின் ஆடுகள், மாடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடைகள் போன்றவற்றைப் பறித்து ஆகீஸிடம் கொண்டு வந்தான். யாரையும் அவன் உயிரோடு விடவில்லை.
10 தாவீது இவ்வாறு பலமுறைச் செய்தான். ஆகீஸ் அவனிடம், “யாரோடு எங்கே போரிட்டு இவற்றை எடுத்து வருகிறாய்?” என்று கேட்டான். அதற்கு தாவீது, “நான் யூதாவின் தென்பகுதியில் சண்டையிட்டு வருகிறேன்” என்பான். அல்லது, “நான் யெராமியேலின் தென்பகுதியில் சண்டையிட்டேன்” என்பான். அல்லது “நான் கேனியருடைய தென்பகுதியில் சண்டையிட்டேன்” என்பான். 11 தாவீது காத்திலிருந்து உயிரோடு ஆண் பெண் யாரையும் ஒரு நாளும் கொண்டு வந்ததில்லை. “யாரையாவது உயிரோடு கொண்டு வந்தால் அவர்கள் உண்மையைச் சொல்லிவிடலாம்” என்று நினைத்தான்.
பெலிஸ்தர்களின் நாட்டில் இருக்கும்வரை தாவீது இப்படி செய்து வந்தான். 12 ஆகீஸும் தாவீதை நம்பினான். அவன் தனக்குள்ளே, “இப்போது தாவீதின் சொந்த ஜனங்கள் அவனை வெறுப்பார்கள். இஸ்ரவேலரும் தாவீதை மிகவும் வெறுப்பார்கள். எனவே தாவீது என்றும் எனக்கே சேவைச் செய்வான்” என்று நினைத்துக்கொண்டான்.
பெலிஸ்தர் போருக்குத் தயாராகுதல்
28 பிறகு பெலிஸ்தர்கள் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட கூடினார்கள். ஆகீஸ் தாவீதிடம், “இப்போது நீயும் உனது ஆட்களும் என்னோடு இஸ்ரவேலுக்கு எதிராகச் சண்டையிட வரவேண்டும் என்று அறிவாயா?” என்று கேட்டான்.
2 தாவீது, “உறுதியாக! என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்!” என்றான்.
ஆகீஸும், “நல்லது நான் உன்னை எனது மெய்க்காப்பாளனாக நியமிக்கிறேன். என்றென்றும் என்னை நீ காப்பாற்றுவாய்” என்றான்.
சவுலும் எந்தோரின் பெண்ணும்
3 சாமுவேல் மரித்ததும், அனைத்து இஸ்ரவேலரும் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினார்கள். சாமுவேலை அவனது தாய் மண்ணான ராமாவில் அடக்கம் செய்திருந்தனர்.
சவுல் மரித்தவர்களின் ஆவிகளோடு பேசுகிறவர்களையும் ஆரூடம், குறி சொல்கிறவர்களையும் நகரத்தில் இராதபடித் துரத்தியிருந்தான்.
4 பெலிஸ்தர் போருக்குத் தயாரானார்கள். அவர்கள் சூநேமிலே கூடி முகாமிட்டு தங்கினார்கள். சவுல் இஸ்ரவேலரையெல்லாம் கூட்டி கில்போவாவில் முகாமிட்டான். 5 சவுல் பெலிஸ்தியரின் படையைப் பார்த்து பயந்தான். அவன் மனதில் பயம் நிறைந்தது. 6 சவுல் கர்த்தரிடம் ஜெபம் செய்தான். ஆனால் கர்த்தர் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. சவுலின் கனவிலும் தேவன் பேசவில்லை. ஊரிம் மூலமாகவோ, தீர்க்கதரிசிகள் மூலமாகவோ தேவன் பதில் சொல்லவில்லை. 7 கடைசியாக சவுல் தனது அதிகாரிகளிடம், “குறி பார்க்கிற ஒரு பெண்ணை அழைத்து வாருங்கள், போரின் முடிவை அவள் மூலம் அறிந்துகொள்வேன்” என்றான்.
அவனது அதிகாரிகளோ, “எந்தோரிலே குறிபார்பவள் ஒருவள் இருக்கிறாள்” என்றனர்.
8 சவுல் தன்னை மறைத்து மாறுவேடத்தில் போனான். அன்று இரவு சவுல் இரண்டு ஆட்களோடு அந்தப் பெண்ணை சந்தித்தான். அவன் அவளிடம், “நீ ஒரு ஆவியைக் கூப்பிடு. நான் விரும்பி பேர் சொல்லுகிறவனின் ஆவியை நீ அழைக்க வேண்டும்” என்றான்.
9 ஆனால் அந்தப் பெண்ணோ சவுலிடம், “சவுல் என்ன செய்தான் என்று உனக்குத் தெரியும்! அவன் குறி பார்ப்பவர்கள் எல்லாரையும் இஸ்ரவேல் நாட்டை விட்டுத் துரத்திவிட்டான். நீயும் என்னை சூழ்ச்சியின் மூலம் குற்றத்தில் அகப்படுத்தி என்னைக் கொல்லப் பார்க்கிறாய்” என்றாள்.
10 சவுல் கர்த்தருடைய நாமத்தில் ஆணையிட்டான். “இதற்காக நீ தண்டிக்கப்படமாட்டாய். இது கர்த்தருடைய ஜீவன் மீது ஆணை” என்றான்.
11 அப்பெண்ணோ சவுலிடம், “உனக்காக யாரை வரவழைக்க நீ விரும்புகிறாய்?” என்று கேட்டாள்.
அதற்கு அவன், “சாமுவேலின் ஆவியை” என்றான்.
12 அப்படியே ஆயிற்று! அப்பெண் சாமுவேலின் ஆவியைப் பார்த்து மகா சத்தமாய் கூப்பிட்டு, “நீ சூழ்ச்சி செய்துவிட்டாய்! நீ தானே சவுல்” என்று கேட்டாள்.
13 அரசன் அவளிடம், “பயப்படாதே! நீ என்ன பார்க்கிறாய்?” எனக் கேட்டான்.
“நான் ஆவியொன்று பூமிக்குள்ளிருந்து [a] வெளியே வருவதைப் பார்க்கிறேன்” என்றாள்.
14 சவுல் அவளிடம், “அந்த ஆவி யாரைப் போல் இருக்கிறது?” என்று கேட்டான்.
அதற்கு அப்பெண், “அது சிறப்பான சால்வையைப் போர்த்திக் கொண்டு மிக வயதான தோற்றத்தில் தெரிகிறது” என்றாள்.
அப்போது சவுலுக்கு அது சாமுவேலின் ஆவி என்று புரிந்தது. சவுல் குனிந்து வணங்கினான். அவன் முகம் தரையைத் தொட்டது. 15 சாமுவேலின் ஆவி சவுலிடம், “என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்? எதற்காக எழுப்பினாய்!” என்று கேட்டது.
அதற்கு சவுல், “நான் ஆபத்தில் சிக்கி இருக்கிறேன். பெலிஸ்தியர் எனக்கு எதிராகச் சண்டையிட வந்திருக்கிறார்கள். தேவன் என்னை கைவிட்டு விலகிவிட்டார். தேவன் இனி எனக்கு பதில் சொல்வதில்லை. அவர் தீர்க்கதரிசியையோ, கனவையோ பயன்படுத்தி பதில் சொல்லுவதில்லை. அதனால் உங்களை அழைத்தேன், நான் செய்யவேண்டியது இன்னது என்று நீங்கள் சொல்ல விரும்புகிறேன்” என்றான்.
16 சாமுவேலின் ஆவி, “கர்த்தர் உன்னைவிட்டு விலகிவிட்டார். அவர் இப்போது உனக்கு அருகிலுள்ள தாவீதோடு இருக்கிறார். அதற்கு என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்? 17 கர்த்தர் என்ன செய்ய இருக்கிறாரோ அதையே என் மூலம் எற்கனவே கூறிவிட்டார்! கர்த்தர் சொன்னதை இப்போது நிறைவேற்றுகிறார். உனது கைகளிலிருந்து கர்த்தர் அரசைக் கிழித்தெடுத்து, உனக்கு அருகிலுள்ள தாவீதுக்குக் கொடுத்திருக்கிறார். 18 நீ கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. அமலேக்கியரை நீ முழுமையாக அழிக்கவில்லை. கர்த்தர் அவர்கள் மீது கோபமுடையவராக இருக்கிறார் என்பதைக் காட்டவில்லை. அதனால் இன்று கர்த்தர் உனக்கு இவ்வாறு செய்கிறார். 19 கர்த்தர் உன்னையும் இஸ்ரவேல் படையையும் பெலிஸ்தர்கள் மூலமாகத் தோற்கடிப்பார். நாளை நீயும், உனது மகன்களும் இங்கே என்னோடு இருப்பீர்கள்!” என்றது.
20 சவுல் உடனே தரையில் விழுந்து கிடந்தான். சாமுவேல் சொன்னதைக் கேட்டு மிகவும் பயந்தான். அன்று சவுல் இரவும் பகலும் உண்ணாமல் இருந்ததால் மிகவும் பலவீனமாக இருந்தான்.
21 அந்தப் பெண் சவுலிடம் வந்து, உண்மையில் அவன் பயப்படுவதைக் கவனித்தாள். அவள் “நான் உங்கள் வேலைக்காரி, நான் உங்களுக்கு கீழ்ப்படிந்து இருக்கிறேன். என் உயிரைப் பணயம் வைத்து நீங்கள் சொன்னப்படி செய்தேன். 22 இப்போது தயவு செய்து எனக்குச் செவிகொடுங்கள், உங்களுக்குச் சிறிது உணவு கொடுக்க அனுமதியுங்கள், நீங்கள் அதனை உண்ணவேண்டும். பின் உங்கள் வழியில் செல்லப் போதுமான பலம் கிடைக்கும்” என்றாள்.
23 ஆனால் சவுல், “நான் உண்ணமாட்டேன்” என மறுத்துவிட்டான்.
சவுலின் அதிகாரிகளும் அந்தப் பெண்ணோடு சேர்ந்து கெஞ்சினார்கள். இறுதியில் அவள் சொன்னதைக் கேட்டான், தரையிலிருந்து எழுந்து படுக்கையில் உட்கார்ந்தான். 24 அப்பெண்ணின் வீட்டில் கொழுத்த கன்றுகுட்டி இருந்தது. அவள் அதை வேகமாகக் கொன்று சமைத்தாள். மாவை பிசைந்து புளிப்பு இல்லாத அப்பம் சுட்டாள். 25 சவுல் மற்றும் அவனது அதிகாரிகளின் முன்னர் அவள் அந்த உணவை வைத்தாள். அவர்கள் அதை புசித்தப்பின், அன்று இரவே புறப்பட்டுச் சென்றார்கள்.
தாவீது எங்களோடு வரக்கூடாது!
29 ஆப்பெக்கில் பெலிஸ்திய வீரர்கள் கூடினார்கள். இஸ்ரவேலர் யெஸ்ரயேலிலிருக்கிற நீரூற்றுக்கருகில் முகாமிட்டனர். 2 பெலிஸ்திய அரசர்கள் தங்கள் 100 பேர் குழுவோடும், 1,000 பேர் குழுவோடும் அணிவகுத்து வந்தனர். தாவீதும் அவனது ஆட்களும் ஆகீஸோடு கடைசியில் சேர்ந்து வந்தனர்.
3 பெலிஸ்திய தலைவர்கள், “இந்த எபிரெயர் இங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்?” என்று கேட்டனர்.
அதற்கு ஆகீஸ் பெலிஸ்திய தலைவரிடம், “இவன் தாவீது, இவன் முன்பு சவுலின் அதிகாரிகளுள் ஒருவனாக இருந்தான். என்னிடம் இப்போது நீண்ட காலம் இருக்கிறான். அவன் சவுலை விட்டு என்னிடம் வந்து சேர்ந்த நாள் முதல் இன்றுவரை அவனிடம் எந்தக் குறையும் காணவில்லை” என்றான்.
4 ஆனால் பெலிஸ்திய தலைவர்கள் ஆகீஸின் மீது கோபங்கொண்டு, “தாவீதைத் திரும்ப அனுப்பிவிடு. நீ கொடுத்த நகரத்திற்கே அவன் திரும்பிப் போகட்டும். அவன் நம்மோடு யுத்தத்துக்கு வரக் கூடாது. அவன் இங்கே இருப்பதும் எதிரி நமது முகாமிற்குள் இருப்பதும் ஒன்றே. அவன் நமது வீரர்களைக் கொல்வதன் மூலம் அவனது அரசனாகிய சவுலுக்கு ஆதரவாகிவிடுவான். 5 தாவீதைப்பற்றி ஏற்கெனவே இஸ்ரவேல் ஜனங்கள் ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
“‘சவுல் ஆயிரக்கணக்கான பகைவர்ளைக் கொன்றான்.
ஆனால் தாவீதோ பத்தாயிரக்கணக்கான பகைவர்களைக் கொன்றிருக்கிறான்!’” என்றனர்.
6 எனவே ஆகீஸ் தாவீதை அழைத்து, “கர்த்தருடைய ஜீவன் மேல் ஆணையாக, நீ எனக்கு உண்மையாக இருக்கிறாய், நீ எனது படையில் இருப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. என்னிடம் நீ சேர்ந்த நாள் முதலாக உன்னிடம் எந்தக் குற்றமும் காணவில்லை. ஆனால் பெலிஸ்திய படைத்தலைவர்கள் உன்னை அங்கீகரிக்கவில்லை. 7 என்றாலும் சமாதானமாகத் திரும்பிப் போ. பெலிஸ்திய அரசர்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் இரு” என்றான்.
8 அதற்கு தாவீது, “நான் என்ன குற்றம் செய்தேன்? நான் உங்களிடம் சேர்ந்த நாள் முதல் இன்றுவரை என்னிடம் என்ன தவறு கண்டீர்கள்? என் அரசனுக்கு எதிரான பகைவர்களோடு சண்டையிட ஏன் என்னை அனுமதிக்கவில்லை?” என்று கேட்டான்.
9 ஆகீஸோ, “நான் உன்னை விரும்புகிறேன். அது உனக்குத் தெரியும். நீ தேவனிடமிருந்து வந்த தூதுவனைப் போன்றவன், ஆனால் பெலிஸ்திய அரசர்களோ, ‘நம்மோடு தாவீது போருக்கு வரக்கூடாது’ என்கின்றனர். 10 அதிகாலையில், நீயும் உனது ஆட்களும் திரும்பி, நான் கொடுத்த நகரத்திற்கே போங்கள். தலைவர்கள் சொன்னதுபோல் கெட்டக் காரியங்களில் கவனம் செலுத்தாதீர்கள். நீ நல்லவன், எனவே, சூரியன் உதிக்கும் முன் புறப்பட்டு போ” என்றான்.
11 ஆகவே, தாவீதும் அவனது ஆட்களும் அதிகாலையில் எழுந்து, பெலிஸ்திய நகரத்திற்குத் திரும்பினார்கள். பெலிஸ்தர்களோ யெஸ்ரயேலுக்குச் சென்றனர்.
மனம் மாறுங்கள்
13 அப்போது இயேசுவோடு கூட மக்கள் சிலர் இருந்தனர். கலிலேயாவிலுள்ள மக்கள் சிலருக்கு நடந்ததை அவர்கள் இயேசுவுக்குக் கூறினர். அம்மக்கள் தேவனை வழிபட்டுக்கொண்டிருக்கையில் அவர்களைப் பிலாத்து கொன்றான். அவர்கள் தேவனுக்குப் பலியிட்டுக்கொண்டிருந்த மிருகங்களின் இரத்தத்தோடு அவர்களின் இரத்தத்தையும் கலந்தான். 2 இயேசு, “அந்த மக்களுக்கு இவ்வாறு நேரிட்டதால் கலிலேயாவில் உள்ள மற்ற அனைவரைக் காட்டிலும் அவர்கள் பாவம் செய்தவர்கள் என நினைக்கிறீர்களா? 3 இல்லை, அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. ஆனால் நீங்கள் அனைவரும் உங்கள் இதயங்களையும் வாழ்வையும் மாற்றிக்கொள்ளாவிட்டால் அந்த மக்களைப்போல நீங்களும் அழிக்கப்படுவீர்கள். 4 சீலோவாமிலே கோபுரம் விழுந்தபோது கொல்லப்பட்ட பதினெட்டுப் பேரின் நிலை என்ன? எருசலேமில் வசிக்கின்ற எல்லாரைக் காட்டிலும் அவர்கள் மிகுந்த பாவம் செய்தவர்கள் என நினைக்கிறீர்களா? 5 அவர்கள் அப்படியல்ல. ஆனால் நீங்கள் உங்கள் இதயங்களையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளவில்லையெனில், நீங்களும் கூட அழிக்கப்படுவீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று பதில் கூறினார்.
பயனற்ற மரம்
6 இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு மனிதனுக்கு ஓர் அத்தி மரம் இருந்தது. தனது தோட்டத்தில் அம்மரத்தை நட்டுவைத்திருந்தான். மரத்தில் சில பழங்கள் இருக்கிறதா என அம்மனிதன் பார்த்து வந்தான். அவன் கண்ணில் பழம் எதுவும் படவில்லை. 7 தோட்டத்தைக் கண்காணித்து வந்த வேலைக்காரன் ஒருவன் அம்மனிதனுக்கு இருந்தான். அம்மனிதன் வேலைக்காரனை நோக்கி, ‘மூன்று ஆண்டுகளாக இந்த மரத்தில் பழங்களுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒன்றும் என் கண்ணில் படவில்லை. அதை வெட்டி வீழ்த்திவிடு. எதற்கு அது நிலத்தைப் பாழ்படுத்த வேண்டும்?’ என்றான். 8 அதற்கு வேலைக்காரன், ‘எஜமானரே, இன்னும் ஓராண்டுக்குள் அந்த மரம் கனி கொடுக்கிறதா என்று பார்ப்போம். அதைச் சுற்றிலும் மண்ணைத் தோண்டி கொஞ்சம் உரத்தைப் போடுவேன். 9 அடுத்த ஆண்டு அந்த மரம் கனி கொடுக்கக் கூடும். அம்மரம் அப்படியும் கனிதராவிட்டால் நீங்கள் அதை வெட்டிப் போடலாம்’ என்று பதில் கூறினான்.”
ஓய்வு நாளில் குணமாக்குதல்
10 ஓய்வு நாளில் ஓர் ஆலயத்தில் இயேசு போதித்துக் கொண்டிருந்தார். 11 பிசாசினாலாகிய அசுத்த ஆவியைத் தன்னுள்ளே கொண்டிருந்த ஒரு பெண் அந்த ஜெப ஆலயத்தில் இருந்தாள். பதினெட்டு ஆண்டுகளாக அப்பெண்ணைப் பிசாசு ஊனப்படுத்திற்று. அவள் முதுகு கூனலாக இருந்தது. அவள் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. 12 இயேசு அவளைப் பார்த்து அழைத்தார். மேலும் அவளை நோக்கி, “பெண்ணே, உன் நோய் உன்னை விட்டு நீங்கிற்று” என்றார். 13 இயேசு தன் கைகளை அவள் மேல் வைத்தார். அதே தருணத்தில் அவளால் நிமிர்ந்து நிற்க முடிந்தது. அவள் தேவனை வாழ்த்தினாள்.
14 ஓய்வு நாளில் இயேசு அவளைக் குணமாக்கியதைக் குறித்து ஜெப ஆலயத்தின் தலைவர் கோபம் அடைந்தார். அத்தலைவர் மக்களை நோக்கி, “வேலை செய்வதற்கு ஆறு நாட்கள் உள்ளன. அந்த நாட்களில் குணம்பெற வாருங்கள். ஓய்வு நாளில் குணமடைய வராதீர்கள்” என்றார்.
15 இயேசு பதிலாக, “நீங்கள் வேஷதாரிகளான மனிதர். ஓய்வு நாளில் கூட நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டில் கொட்டிலில் இருக்கும் எருதுவையோ அல்லது கழுதையையோ அவிழ்த்து நீர் பருகுவதற்கு அழைத்துச் செல்கிறீர்கள். 16 நான் குணமாக்கிய இப்பெண் நமது யூத சகோதரி. [a] ஆனால் சாத்தான் அவளைப் பதினெட்டு ஆண்டுகளாகப் பீடித்திருந்தான். ஓய்வு நாளில் அவளது நோயினின்று அவளை விடுவிப்பது நிச்சயமாகத் தவறல்ல” என்றார். 17 இயேசு இதைக் கூறியபோது அவரை விமர்சித்துக்கொண்டிருந்த அனைவரும் தங்களைக் குறித்து வெட்கமடைந்தார்கள். இயேசு செய்த அற்புதமான காரியங்களைக் குறித்து எல்லா மக்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
கடுகு விதையின் உவமை(A)
18 பின்பு இயேசு, “தேவனுடைய இராஜ்யம் எதைப் போன்றது? அதை எதனோடு ஒப்பிடுவேன்? 19 தேவனுடைய இராஜ்யம் கடுகுச் செடியின் விதையைப் போன்றது. ஒருவன் இந்த விதையை அவனது தோட்டத்தில் ஊன்றுகிறான். விதை முளைத்து மரமாகிறது. பறவைகள் அதன் கிளைகளில் கூடுகளைக் கட்டுகின்றன” என்றார்.
20 மீண்டும் இயேசு, “தேவனின் இராஜ்யத்தை எதனோடு ஒப்பிடுவேன்? 21 ஒரு பெரிய பாத்திரத்தில் அப்பத்திற்காக வைக்கப்படிருக்கும் மூன்று மடங்கு அளவுள்ள மாவோடு ஒரு பெண் கலக்கும் புளிப்பான பொருளுக்கு ஒப்பானதாக இருக்கிறது. அது மாவு முழுவதையும் புளிக்கச் செய்யும்” என்றார்.
குறுகிய வாசல்(B)
22 ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் இயேசு போதித்துக்கொண்டிருந்தார். அவர் எருசலேம் வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார்.
2008 by World Bible Translation Center