Old/New Testament
பரிசுத்த பொருட்களுக்குரிய காணிக்கைகள்
25 கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் காணிக்கைகளைக் கொண்டு வரச் சொல். எனக்குக் கொடுக்க விரும்புவதைக் குறித்து அவனவன் தீர்மானிக்கட்டும். அவற்றை நீ எனக்காகப் பெற்றுக்கொள். 3 ஜனங்களிடமிருந்து நீ பெறக்கூடிய பொருட்களின் பட்டியல் இவை: பொன், வெள்ளி, வெண்கலம், 4 இளநீலநூல், இரத்தாம்பர நூல், சிவப்பு நூல், மெல்லிய துகில், வெள்ளாட்டு மயிர், 5 சிவப்பு சாயம் தோய்த்த ஆட்டுத் தோல், மெல்லிய தோல், சீத்திம் மரம், 6 அகல் எண்ணெய், அபிஷேக எணணெய்ப் பொருட்கள், நறுமணப்புகைப் பொருட்கள், 7 ஏபோத்திலும், நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் பிற இரத்தினக் கற்களும் ஆகும்” என்றார்.
பரிசுத்தக் கூடாரம்
8 மேலும் தேவன், “ஜனங்கள் எனக்காக பரிசுத்த பிரகாரத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது நான் அவர்கள் மத்தியில் வாழ்வேன். 9 பரிசுத்தக் கூடாரமும் அதிலுள்ள பொருட்களும் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை நான் உனக்குக் காட்டுவேன். நான் காட்டுகிற மாதிரியின்படியே எல்லாவற்றையும் தவறாமல் செய்.
உடன்படிக்கைப் பெட்டி
10 “சீத்திம் மரத்தால் விசேஷமான பெட்டி ஒன்றைச் செய். இப்பரிசுத்த பெட்டி 45 அங்குல நீளமும், 27 அங்குல அகலமும், 27 அங்குல உயரமும் இருக்க வேண்டும். 11 பெட்டியின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் மூடுவதற்காக சுத்தமான தங்கத்தை உபயோகி. பெட்டியின் விளிம்புகளையும் தங்கத் தகட்டால் மூடவேண்டும். 12 பெட்டியைத் தூக்குவதற்கு நான்கு தங்க வளையங்களைச் செய். பக்கத்திற்கு இரண்டாக நான்கு மூலைகளிலும் தங்க வளையங்களைப் போடு. பின் பெட்டியைத் தூக்கிச் செல்ல கழிகளைச் செய். இந்த கழிகள் சீத்திம் மரத்தில் செய்யப்பட்டு தங்கத்தால் மூடப்பட வேண்டும். 13 பெட்டியைச் சுமப்பதற்குத் தண்டுகளைச் செய். அவை சீத்திம் மரத்தால் செய்யப்பட்டு பொன்னால் மூடப்பட வேண்டும். 14 பெட்டியின் ஓரங்களிலுள்ள வளையங்களில் அத்தண்டுகளை நுழைக்க வேண்டும். பெட்டியைச் சுமப்பதற்கு இத்தண்டுகளைப் பயன்படுத்த வேண்டும். 15 இத்தண்டுகள் எப்போதும் பெட்டியின் வளையங்களில் இருக்க வேண்டும். தண்டுகளை அப்புறப்படுத்தக் கூடாது.
16 “நான் உனக்கு உடன்படிக்கையைக் கொடுப்பேன். அந்த உடன்படிக்கையை இப்பெட்டியில் வை. 17 பின் ஒரு கிருபாசனத்தை பசும் பொன்னால் செய். 45 அங்குல நீளமும் 27 அங்குல அகலமும் உள்ளதாக அதைச் செய். 18 பின்பு தங்கத்தினால் இரண்டு கேருபீன்களைச் செய்து அவற்றை கிருபாசனத்தின் இரு முனைகளிலும் வை. தகடாய் அடித்த பொன்னால் அவற்றைச் செய். 19 ஒரு கேருபீனை ஒரு முனையிலும் மற்ற கேருபீனை மறு முனையிலும் வை. இந்த கேருபீன்கள் ஒன்றாக இருக்கும்படி கிருபாசனத்தோடு இணை. 20 பொன் கேருபீன்களின் சிறகுகள் வானத்தை நோக்கி உயர்ந்திருக்க வேண்டும். அவை தங்கள் சிறகுகளால் பெட்டியை மூட வேண்டும். அவை ஒன்றுக்கொன்று எதிராக கிருபாசனத்தை நோக்கியபடி இருக்க வேண்டும்.
21 “நான் உனக்கு கொடுக்கும் உடன்படிக்கையைப் பரிசுத்த பெட்டிக்குள் வை. பெட்டியின் மீது கிருபாசனத்தை பொருத்து. 22 நான் உன்னைச் சந்திக்கும்போது, உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கேருபீன்களின் மத்தியிலிருந்து உன்னோடு பேசுவேன். அங்கிருந்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு எல்லாக் கட்டளைகளையும் கொடுப்பேன்.
பரிசுத்த மேசை
23 “சீத்திம் மரத்தால் ஒரு மேசையைச் செய். அது 36 அங்குல நீளமும், 18 அங்குல அகலமும், 27 அங்குல உயரமும் உள்ளதாக இருக்க வேண்டும். 24 மேசையைப் பசும் பொன்னால் மூடி, சுற்றிலும் தங்கத் தகட்டால் அழகுபடுத்து. 25 மூன்று அங்குல அகலமான சட்டத்தை மேசையைச் சுற்றிலும் வை. சட்டத்தைப் பொன் தகட்டால் அழகுபடுத்து. 26 நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை மேசையின் நான்கு கால்கள் இருக்கும் ஓரங்களில் வை. 27 மேசையின் மேல் சட்டத்தைச் சுற்றிலும் சுருக்கமாக வளையங்களைப் பொருத்து. இந்த வளையங்கள் மேசையைச் சுமந்து செல்லும் தண்டுகளைத் தாங்கிக்கொள்ளும். 28 தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து அவற்றைப் பொன்னால் மூடு. தண்டுகள் மேசையைச் சுமந்து செல்லப் பயன்படும். 29 தட்டுகளையும், கரண்டிகளையும், கிண்ணங்களையும், குவளைகளையும் பசும்பொன்னால் செய். பானங்களின் காணிக்கைகளைக் கொட்டுவதற்கும், ஊற்றுவதற்கும் குவளைகளும், கிண்ணங்களும் பயன்படும். 30 பரிசுத்த ரொட்டியை எனக்கு முன்பாக மேசையின் மீது வை. அது எப்போதும் தவறாமல் எனக்கு முன்பாக இருக்க வேண்டும்.
குத்து விளக்குத் தண்டு
31 “பின் நீ விளக்குத் தண்டைச் செய்ய வேண்டும். சுத்தமான பொன்னைப் பயன்படுத்தி அதன் அடிப்பகுதியைச் சுத்தியால் அடித்துச் செய்ய வேண்டும். பூக்கள், மொக்குகள், இலைகள் பூசிய பொன்னால் அமையவேண்டும். அதிலுள்ள எல்லாவற்றையும் ஒரே துண்டாக இணைத்து அமைக்க வேண்டும்.
32 “அந்தக் குத்துவிளக்குத் தண்டுக்கு ஆறு கிளைகள் இருக்கவேண்டும். மூன்று கிளைகள் ஒரு புறமாகவும், மூன்று கிளைகள் மறு புறமாகவும் அமைய வேண்டும். 33 ஒவ்வொரு கிளையிலும் மூன்று பூக்கள் இருக்கவேண்டும். வாதுமைப் பூக்களைப் போல் மொக்குகளோடும், இதழ்களோடும் இப்பூக்களைச் செய்ய வேண்டும். 34 மேலும் நான்கு பூக்களை விளக்குத் தண்டுக்காகச் செய். இவை மொக்குகளும் இதழ்களும் கொண்ட வாதுமைப் பூக்களைப் போலிருக்கவேண்டும். 35 குத்துவிளக்கில் ஆறு கிளைகள் இருக்க வேண்டும். அடிப் பகுதியிலிருந்து மும் மூன்று கிளைகளை ஒவ்வொரு புறத்திலும் இணைக்கவேண்டும். கிளைகள் தண்டில் சேரும் மூன்று இடங்களின் அடிப்பகுதியிலும் மொக்குகளும் இதழ்களும் கொண்ட ஒவ்வொரு பூவை இணைக்கவேண்டும். 36 பூக்களும் இலைகளும் பொருத்திய குத்துவிளக்குத் தண்டானது முழுவதும் சுத்தமான பொன்னால் செய்யப்பட வேண்டும். வெவ்வேறு பாகங்களைச் சுத்தியால் அடித்து ஒன்றாக இணைக்கவேண்டும். 37 பின் குத்து விளக்குத் தண்டில் ஏழு அகல்களைப் பொருத்த வேண்டும். குத்து விளக்கின் முன்னே இந்த அகல்கள் ஒளி தரும். 38 திரிகளைக் கத்தரிக்கும் கத்தரிகளும், சாம்பல் கிண்ணங்களும் பொன்னால் செய்யப்பட வேண்டும். 39 குத்துவிளக்கையும் அதற்குத் தேவையான பொருட்களையும் செய்வதற்கு 75 பவுண்டு எடையுள்ள பசும் பொன்னைப் பயன்படுத்து. 40 மலையின் மீது உனக்கு காட்டியபடியே ஒவ்வொரு பொருளையும் செய்வதில் கவனமாயிரு” என்றார்.
பரிசுத்தக் கூடாரம்
26 கர்த்தர் மோசேயை நோக்கி, “பரிசுத்தக் கூடாரம் பத்து திரைச் சீலைகளால் தைக்கப்பட வேண்டும். இந்த திரைச்சீலைகள் மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம் சிவப்பு ஆகிய நூல்களால் நெய்யப்படவேண்டும். ஒரு திறமை வாய்ந்த ஓவியன் இத்திரைச் சீலையில் சிறகுகளுள்ள கேரூபீன்களின் ஓவியங்களை நெய்ய வேண்டும். 2 எல்லாத் திரைகளும் ஒரே அளவுடையதாய் இருக்க வேண்டும். ஒவ்வொன்றும் 28 முழ நீளமும் 4 முழ அகலமுமாக இருக்கவேண்டும். 3 இரண்டு பிரிவாகத் திரைகளை இணை. ஐந்து திரைகளை ஒன்றாகவும், மற்ற ஐந்து திரைகளை வேறாகவும் இணை. 4 ஒரு பிரிவின் விளிம்பில் இளநீலத் துணியால் கண்ணிகளை உருவாக்கு. இவ்வாறே மற்ற பிரிவின் விளிம்பு திரையிலும் செய். 5 முதலிணைப்பில் 50 கண்ணிகளும் இரண்டாம் இணைப்பில் 50 கண்ணிகளும் தைக்கவேண்டும். 6 பின்பு திரைகளை இணைப்பதற்கு 50 பொன்வளையங்களைச் செய். அது பரிசுத்தக் கூடாரத்தை ஒன்றாக இணைத்துவிடும்.
7 “பரிசுத்தக் கூடாரத்திற்கு மேல் மற்றொரு கூடாரத்தை உருவாக்கு. இக்கூடாரம் செய்வதற்குப் பதினொரு திரைகளைப் பயன்படுத்து. வெள்ளாட்டு மயிரால் இத்திரைகளை நெசவு செய். 8 எல்லாத் திரைகளும் ஒரே அளவுடையதாய் இருக்க வேண்டும். 30 முழ நீளமும் 4 முழ அகலமும் உடையதாய் அது இருக்கவேண்டும். 9 ஐந்து திரைகளை ஒன்றாகவும், வேறு 6 திரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும். ஆறாம் திரையின் பாதிப் பகுதியை கூடாரத்தின் முன் பகுதியில் மடித்துவிட வேண்டும். 10 ஒரு திரையிணைப்பின் கடைசித் திரையில் 50 கண்ணிகளையும் இன்னொரு திரையிணைப்பின் கடைசித் திரையில் 50 கண்ணிகளையும் தைக்கவேண்டும். 11 பின்னர் திரைகளை இணைப்பதற்கு 50 வெண்கல வளையங்களைச் செய். அவை கூடாரத்தின் இருபகுதிகளையும் ஒன்றாக இணைக்கும். 12 இக்கூடாரத்தின் இறுதித் திரையின் பாதிப்பகுதி பரிசுத்தக் கூடாரத்தின் பின் பகுதியில் தொங்கிக்கொண்டிருக்கும். 13 அதன் பக்க வாட்டில் பரிசுத்தக் கூடாரத்தின் திரைகள் பரிசுத்தக் கூடாரத்தின் கீழ்ப்புற ஓரங்களைக் காட்டிலும் ஒரு முழம் தாழ்வாகத் தொங்கும். இவ்வாறு பரிசுத்தக் கூடாரம் மகா பரிசுத்தக் கூடாரத்தை முற்றிலும் மறைக்கும். 14 மகா பரிசுத்தக் கூடாரத்தை மறைப்பதற்கு இரண்டு உறைகளைச் செய். சிவப்புச் சாயம் தீர்த்த ஆட்டுக்கடா தோலினால் ஒரு உறையும் மெல்லிய தோலினால் மற்றொரு உறையும் செய்யப்பட வேண்டும்.
15 “பரிசுத்தக் கூடாரத்தைத் தாங்குவதற்காகச் சட்டங்களை சீத்திம் மரத்தால் செய்ய வேண்டும். 16 அச்சட்டங்கள் 10 முழ உயரமும் 1 1/2 முழ அகலமும் உள்ளதாக இருக்கவேண்டும். 17 ஒவ்வொரு புறமுள்ள தூண்கள் குறுக்குத் துண்டுகளால் ஒவ்வொரு சட்டமாகச் சேர்க்கப்படவேண்டும். பரிசுத்த கூடாரத்தின் எல்லாச் சட்டங்களும் ஒரே அளவுடையதாக இருக்க வேண்டும். 18 பரிசுத்த கூடாரத்தின் தென் புறத்திற்கென்று 20 சட்டங்களை உருவாக்கு. 19 சட்டங்களுக்கு 40 வெள்ளிப் பீடங்களை உண்டாக்கு. ஒவ்வொரு சட்டத்தின் கீழும் இரண்டு பீடங்கள் வீதம் அமைய வேண்டும். ஒவ்வொரு பக்கத் தூணுக்கும் ஒருபீடம் வீதம் இருக்கவேண்டும். 20 பரிசுத்தக் கூடாரத்தின் மறுபக்கத்திற்கென்று (வடக்குப் புறம்) மேலும் இருபது சட்டங்கள் செய். 21 நாற்பது வெள்ளி பீடங்கள் ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு வீதம் செய். 22 ஆறு சட்டங்கள் பரிசுத்தக் கூடாரத்தின் பின்புறத்திற்கு (மேற்குப்பக்கம்) அமைத்துவிடு. 23 பரிசுத்தக் கூடாரத்தின் பின்புறத்து மூலைகளுக்கென்று இரண்டு சட்டங்கள் செய். 24 மூலைகளிலுள்ள சட்டங்கள் அடியில் சேர்க்கப்படவேண்டும். மேற்புறத்தில் சட்டங்களை ஒரு வளையத்தால் இணைக்கவேண்டும். இரண்டு மூலைகளுக்கும் அவ்வாறே செய். 25 கூடாரத்தின் மேற்குப்புறத்திற்கு எட்டுச் சட்டங்கள் இருக்கும். 16 வெள்ளிப் பீடங்கள் ஒவ்வொரு சட்டத்திற்கு இரண்டு வீதம் அமையும்.
26 “பரிசுத்த கூடாரத்தின் சட்டங்களுக்குச் சீத்திம் மரத்தாலான தாழ்ப்பாள்களைச் செய். பரிசுத்த கூடாரத்தின் முன்புறத்திற்கு ஐந்து தாழ்ப்பாள்கள் இருக்கவேண்டும். 27 பரிசுத்த கூடாரத்தின் பின்னாலுள்ள (மேற்குப் புறத்தின்) சட்டங்களுக்கு ஐந்து தாழ்ப்பாள்கள் இருக்க வேண்டும். 28 நடுவிலுள்ள தாழ்ப்பாள் ஒரு மூலையிலிருந்து மறுமூலைவரைக்கும் சட்டங்கள் வழியாகச் செல்லவேண்டும்.
29 “இந்த சட்டங்களைப் பொன் தகட்டால் மூடு. தாழ்ப்பாள்களை இணைப்பதற்குப் பொன் வளையங்களை உண்டுபண்ணு. தாழ்ப்பாள்களுக்கும் பொன் முலாம் பூசு. 30 மலையில் நான் உனக்குக் காட்டிய மாதிரியின்படியே பரிசுத்தக் கூடாரத்தை உண்டாக்கு.
பரிசுத்த கூடாரத்தின் உட்புறம்
31 “பரிசுத்தக் கூடாரத்தின் உட்புறத்தில் விரிப்பதற்கு மெல்லிய துகிலினால் ஒரு விசேஷ திரைச்சீலையை உண்டாக்கு. நீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலால் அந்தத் திரைச்சீலையை உண்டாக்கி, அதிலே கேரூபின்களின் சித்திரங்களைப் பின்னு. 32 சீத்திம் மரத்தால் நான்கு தூண்களை உண்டாக்கி அவற்றைப் பொன்னால் மூடு. நான்கு தூண்கள் மேலும் பொன்னால் ஆன கொக்கிகளை இணை. தூண்களுக்கு அடியில் நான்கு வெள்ளி பீடங்களை வை. பிறகு திரைச் சீலையைத் தங்கக் கொக்கிகளில் தொங்கவிடு. 33 பொன் வளையங்களுக்குக் கீழே திரைகளைத் தொங்கவிடு. நீ செய்த உடன்படிக்கைப் பெட்டியைத் திரைக்குப் பின்னே வை. இந்தத் திரையானது பரிசுத்த இடத்தையும், மகா பரிசுத்த இடத்தையும் பிரிக்கும். 34 உடன்படிக்கைப் பெட்டியை அதன் கிருபாசனத்தால் மூடிவை.
35 “பின்பு பரிசுத்த இடத்தின் திரையின் முன்புறத்தில் நீ செய்த விசேஷ மேசையை வை. பரிசுத்த கூடாரத்தின் வடக்குப்புறத்தில் மேசை இருக்க வேண்டும். குத்துவிளக்குத் தண்டை தெற்குப்புறத்தில் வை. அது மேசையின் குறுக்காக இருக்கும்.
பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயில்
36 “பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலை மூடுவதற்கு ஒரு திரையை உருவாக்குங்கள். நீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலாலும், மெல்லிய துகிலாலும், இத்திரையை உண்டாக்கு. அதில் சித்திரங்களைப் பின்னி வை. 37 திரைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கு. பொன் முலாம் பூசப்பட்ட சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய். ஐந்து தூண்களுக்கும் வெண்கலத்தால் ஐந்து பீடங்களைச் செய்” என்றார்.
தமது மரணத்தைப் பற்றி பேசுதல்(A)
17 இயேசு எருசலேமுக்குத் தம் சீஷர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, இயேசு தம் சீஷர்களை அழைத்துத் தனியாகப் பேசினார். இயேசு அவர்களிடம், 18 ,“நாம் எருசலேமுக்குப் போய்கொண்டிருக்கிறோம். தலைமை ஆசாரியர்களிடமும் வேதபாரகர்களிடமும் மனித குமாரன் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் மனித குமாரன் இறக்க வேண்டும் என்பார்கள். 19 யூதர்கள் அல்லாத வேற்று மனிதர்களிடம் மனித குமாரனை ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைக் கேலி செய்து சவுக்கால் அடித்து சிலுவையில் அறைந்து கொல்வார்கள். ஆனால், மூன்றாவது நாள் மரணத்திலிருந்து மனித குமாரன் உயிர்த்தெழுவார்” என்று கூறினார்.
ஒரு தாய் விசேஷ உதவி கேட்டல்(B)
20 பின்னர், செபதேயுவின் மகன்களுடன் அவர்களின் தாய் இயேசுவைத் தேடி வந்தாள். அவள் இயேசுவின் முன் மண்டியிட்டு தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டினாள்.
21 இயேசு அவளிடம்,, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டார்.
அவள்,, “எனது ஒரு மகன் உங்கள் இராஜ்யத்தில் உங்களது வலது பக்கம் இருக்கவும், மற்றொரு மகன் உங்கள் இராஜ்யத்தில் உங்களது இடது பக்கம் இருக்கவும் வாக்களியுங்கள்” என்று கேட்டாள்.
22 அதைக் கேட்ட இயேசு அவளது மகன்களிடம்,, “நீங்கள் என்ன வேண்டுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. நான் அனுபவிக்கப்போகும் துன்பத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார்.
, “ஆம், எங்களால் முடியும்” என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.
23 இயேசு அவர்களிடம்,, “மெய்யாகவே எனக்கு ஏற்படும் துன்பம் உங்களுக்கும் ஏற்படும். ஆனால் என் வலது இடது பக்கங்களில் உட்காரப்போகிறவர்களை என்னால் முடிவு செய்ய இயலாது. அந்த இடம் யாருக்கு என்பதை என் பிதா முடிவு செய்துவிட்டார். அவர்களுக்காகவே அந்த இடங்களை அவர் தயார் செய்துள்ளார். அந்த இடங்கள் அவர்களுக்கே உரியவை” என்றார்.
24 இந்த உரையாடலைக் கேட்ட மற்ற பத்து சீஷர்களும் அவ்விரு சகோதரர்களின் மீதும் கோபம் கொண்டார்கள். 25 இயேசு எல்லா சீஷர்களையும் ஒன்றாக அழைத்து, அவர்களிடம், “யூதரல்லாத மக்களின் ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவர்களின் முக்கியமான தலைவர்கள் மக்களின் மீது முழு அதிகாரத்தை செலுத்த விரும்புகிறார்கள். 26 ஆனால், நீங்கள் அப்படி இருக்கக் கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக ஆக விரும்பினால், அவன் உங்களுக்கு ஒரு வேலைக்காரனைப் போல ஊழியம் செய்ய வேண்டும். 27 உங்களில் ஒருவன் முதலாவதாக வர விரும்பினால், அவன் உங்களுக்கு ஓர் அடிமையைப் போல் ஊழியம் செய்ய வேண்டும். 28 மனித குமாரனும் அப்படியே. தனக்கு மற்றவர்கள் ஊழியம் செய்வதற்காக அவர் வரவில்லை. மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவே மனித குமாரன் வந்தார். பலரது வாழ்வை இரட்சிப்பதற்கு தன் உயிரைக் கொடுக்கவே மனித குமாரன் வந்தார்” என்று கூறினார்.
இரண்டு குருடர்களை இயேசு குணமாகுதல்(C)
29 இயேசுவும் அவரது சீஷர்களும் எரிகோவைவிட்டுச் சென்றபொழுது, ஏராளமான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். 30 சாலையோரம் அமர்ந்திருந்த இரு குருடர்கள், இயேசு வந்து கொண்டிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு,, “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு உதவுங்கள்” என்று உரக்கக் கூவினார்கள்.
31 அனைவரும் அக்குருடர்களைக் கடிந்து கொண்டார்கள், அவர்களை அமைதியாயிருக்கக் கூறினார்கள். ஆனால், அக்குருடர்களோ மேலும் மேலும் சத்தமாக,, “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு உதவுங்கள்” என்று கூவினார்கள்.
32 இயேசு நின்று, அக்குருடர்களைப் பார்த்து,, “உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
33 அதற்குக் குருடர்கள்,, “ஆண்டவரே, நாங்கள் பார்வை பெற வேண்டும்” என்றார்கள்.
34 அவர்கள் மேல் இயேசு மிகவும் இரக்கம் கொண்டார். இயேசு அவர்களது கண்களைத் தொட்டார். அவர்கள் இருவரும் பார்வை பெற்றார்கள். பின்னர் அவர்கள் இருவரும் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.
2008 by World Bible Translation Center