Old/New Testament
தலைவர்கள் நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கவேண்டும்
32 நான் சொல்லுகிறவற்றைக் கேளுங்கள்! ஒரு அரசன் நன்மையைத்தரும் ஆட்சி செய்ய வேண்டும். தலைவர்கள் ஜனங்களை வழிநடத்திச் செல்லும்போது நீதியான முடிவுகளை எடுக்க வேண்டும். 2 இது நிகழ்ந்தால், அரசன் காற்றுக்கும் மழைக்கும் மறைந்துகொள்வதற்கு ஏற்ற இடமாக இருப்பான். வறண்ட பூமிக்கு நீரோடை வந்ததுபோல இருக்கும். இது வெப்பமான பூமியில் பெருங்கன்மலையில் குளிர்ந்த நிழல்போல் இருக்கும். 3 ஜனங்கள் உதவிக்காக அரசனிடம் திரும்புவார்கள். ஜனங்கள் உண்மையில் அவர் சொல்லுவதைக் கவனிப்பார்கள். 4 குழம்பிப்போன ஜனங்கள் இப்பொழுது புரிந்துகொள்வார்கள். தெளிவாகப் பேச முடியாத ஜனங்கள் இப்பொழுது தெளிவாகவும் பேசுவார்கள். 5 நாத்திகர்கள் உயர்ந்த மனிதர்கள் என்று அழைக்கப்படமாட்டார்கள். மோசடிக்காரர்கள் மதிப்பிற்குரியவர்கள் என்றழைக்கப்படமாட்டார்கள்.
6 ஒரு நாத்திகன் தீயவற்றைப் பேசுகிறான். அவனது மனதில் தீயவற்றைச் செய்வதற்கே திட்டங்கள் இருக்கும். ஒரு துன்மார்க்கன் தவறானவற்றைச் செய்வதற்கே விரும்புகிறான். ஒரு துன்மார்க்கன் கர்த்தரைப்பற்றி கெட்டவற்றையே பேசுகிறான். ஒரு துன்மார்க்கன் பசித்த ஜனங்களைச் சாப்பிட அனுமதிக்கமாட்டான். ஒரு துன்மார்க்கன் தாகமாயிருக்கும் ஜனங்களைத் தண்ணீர் குடிக்கவிடமாட்டான். 7 அந்த நாத்திகன் கெட்டவற்றைக் கருவியாகப் பயன்படுத்துவான். ஏழை ஜனங்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும் வழிகளை அவன் திட்டமிடுவான். அந்த துன்மார்க்கன் ஏழை ஜனங்களைப்பற்றிப் பொய் சொல்லுகிறான். அவனது பொய்கள் ஏழை ஜனங்களை நேர்மையான தீர்ப்பு பெறுவதிலிருந்து விலக்குகிறது.
8 ஆனால் நல்ல தலைவன், நல்லவற்றைச் செய்யத் திட்டமிடுகிறான். அந்த நல்லவை அவனை நல்ல தலைவனாகச் செய்கிறது.
கடினமான நேரங்கள் வந்து கொண்டிருக்கின்றன
9 உங்களில் சில பெண்கள் இப்போது மிக அமைதியாக இருக்கிறீர்கள். நீங்கள் பாதுகாப்பை உணருகிறீர்கள். ஆனால், நான் சொல்லுகிற வார்த்தைகளை நீங்கள் நின்று கவனிக்க வேண்டும். 10 பெண்களாகிய நீங்கள் இப்போது அமைதியை உணருகிறீர்கள். ஆனால், ஒரு ஆண்டுக்குப் பிறகு தொல்லைக்குள்ளாவீர்கள். ஏனென்றால், அடுத்த ஆண்டு திராட்சைகளை நீங்கள் பறிக்க மாட்டீர்கள். ஏனென்றால், பறிப்பதற்குத் திராட்சைகள் இருக்காது.
11 பெண்களே! இப்பொழுது நீங்கள் அமைதியாய் இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் அச்சுறுத்தப்பட வேண்டும். பெண்களே! இப்போது நீங்கள் அமைதியை உணருகிறீர்கள். ஆனால் நீங்கள் கவலைக்குட்பட வேண்டும். உங்களது மென்மையான ஆடைகளை எடுத்துவிடுங்கள். துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். அந்த ஆடைகளை உங்கள் இடுப்பில் கட்டிக் கொள்ளுங்கள். 12 துக்கத்துக்குரிய ஆடைகளை துன்பம் நிறைந்த உங்கள் மார்புக்கு மேல் போட்டுக்கொள்ளுங்கள்.
உங்கள் வயல்கள் காலியானதால் அலறுங்கள். உங்கள் திராட்சைத் தோட்டங்கள் ஒரு காலத்தில் திராட்சைப் பழங்களைத் தந்தன. ஆனால் இப்போது அவை காலியாக உள்ளன. 13 எனது ஜனங்களின் பூமிக்காக அலறுங்கள். ஏனென்றால், இப்பொழுது முட்களும் நெருஞ்சியும் மட்டுமே வளரும். நகரத்திற்காக அலறுங்கள். ஒரு காலத்தில் மகிழ்ச்சியால் நிறைந்திருந்த வீடுகளுக்காக அலறுங்கள்.
14 ஜனங்கள் தலைநகரத்தைவிட்டு வெளியேறுவார்கள். அரண்மனையும் கோபுரங்களும் காலியாகும். ஜனங்கள் வீடுகளில் வாழமாட்டார்கள். அவர்கள் குகைகளில் வாழுவார்கள். காட்டுக் கழுதைகளும் ஆடுகளும் நகரத்தில் வாழும். மிருகங்கள் அங்கே புல்மேயப்போகும்.
15-16 தேவன் மேலேயிருந்து அவரது ஆவியைக் கொடுக்கும்வரை இது தொடரும். இப்பொழுது பூமியில் நன்மை இல்லை. இது இப்போது வனாந்திரம்போல் உள்ளது. ஆனால் எதிர்காலத்தில். இந்த வனாந்திரம் கர்மேல் போலாகும். அங்கே நேர்மையான தீர்ப்புகள் இருக்கும். கர்மேல் பசுமைக் காடுகளைப்போன்று ஆகும். நன்மை அங்கே வாழும். 17 என்றென்றைக்கும் இந்த நன்மை சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும். 18 எனது ஜனங்கள் சமாதானத்தின் அழகிய வயலில் வாழுவார்கள். எனது ஜனங்கள் பாதுகாப்பின் கூடாரங்களில் வாழுவார்கள். அவர்கள் அமைதியும் சமாதானமும் உள்ள இடங்களில் வாழுவார்கள்.
19 ஆனால் இவை நிகழும்முன்பு, காடுகள் விழவேண்டும். நகரம் தோற்கடிக்கப்படவேண்டும். 20 நீங்கள் தண்ணீர் நிலையுள்ள இடங்களில் விதைக்கிறீர்கள். அங்கே உங்கள் கழுதைகளையும் மாடுகளையும் சுதந்திரமாகத் திரியவும் மேயவும் விடுகிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
33 பாருங்கள், நீங்கள் போரை உருவாக்குகிறீர்கள். ஜனங்களிடமிருந்து பொருளைத் திருடிக்கொள்கிறீர்கள். அந்த ஜனங்கள் உங்களிடமிருந்து எதையும் திருடமாட்டார்கள். நீங்கள் ஜனங்களுக்கு எதிராகத் திரும்புகிறீர்கள். ஜனங்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பமாட்டார்கள். எனவே, நீங்கள் திருடுவதை நிறுத்தும்போது. மற்ற ஜனங்கள் உங்களிடமிருந்து திருடத் தொடங்குவார்கள். நீங்கள் ஜனங்களுக்கு எதிராகத் திரும்புவதை நிறுத்தும்போது, மற்ற ஜனங்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பத் தொடங்குவார்கள். பிறகு நீங்கள்
2 “கர்த்தாவே, எங்களிடம் தயவாயிரும்.
நாங்கள் உமது உதவிக்காகக் காத்திருக்கிறோம்.
கர்த்தாவே ஒவ்வொரு காலையிலும் பெலத்தைக் கொடும்.
நாங்கள் தொல்லைக்குட்படும்போது எங்களைக் காப்பாற்றும்.
3 உமது வல்லமையான குரல் ஜனங்களை அச்சுறுத்தும், அவர்கள் உம்மிடமிருந்து ஓடிப்போவார்கள்.
உமது மகத்துவம் நாடுகளை ஓடிப்போக வைக்கும்” என்பீர்கள்.
4 நீங்கள் போரில் பொருட்களைத் திருடினீர்கள். அப்பொருட்கள் உம்மிடமிருந்து எடுக்கப்படும். ஏராளமான ஜனங்கள் வந்து, உங்கள் செல்வங்களை எடுப்பார்கள். வெட்டுக்கிளிகள் வந்து உங்கள் பயிர்களை உண்ட காலத்தைப்போன்று இது இருக்கும்.
5 கர்த்தர் மிகப் பெரியவர். அவர் மிக உயரமான இடத்தில் வாழ்கிறார். கர்த்தர் சீயோனை நேர்மையாலும் நன்மையாலும் நிரப்புவார்.
6 எருசலேமே நீ செழிப்பாயிருக்கிறாய். நீ ஞானம் மற்றும் அறிவில் செழிப்புடையவள். நீ கர்த்தரை மதிக்கிறாய். அது உன்னைச் செல்வச் செழிப்புள்ளவளாகச் செய்கிறது. எனவே, நீ தொடர்ந்து இருப்பாய் என்பதை நீ அறிந்துகொள்ளலாம்.
7 ஆனால் கவனி! தேவதூதர்கள் வெளியே அழுதுகொண்டிருக்கிறார்கள்.
சமாதானத்தைக் கொண்டுவரும் தூதர்கள் வெளியே மிகக் கடினமாக அழுகிறார்கள். 8 சாலைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. எவரும் தெருக்களில் நடந்துகொண்டிருக்கவில்லை.
ஜனங்கள் தாங்கள் செய்த உடன்படிக்கையை உடைத்துள்ளனர். சாட்சிகளிலிருந்து நிரூபிக்கப்படுவதை ஜனங்கள் நம்ப மறுக்கின்றனர். எவரும் மற்ற ஜனங்களை மதிக்கிறதில்லை. 9 நிலமானது நோயுற்று செத்துக்கொண்டிருக்கிறது. லீபனோன் வெட்கி வாடுகிறது. சாரோன் பள்ளத்தாக்கு வறண்டு காலியாக உள்ளது. பாசானும் கர்மேலும் ஒரு காலத்தில் அழகான செடிகளை வளர்த்தன. ஆனால் இப்போது அந்தச் செடிகள் வளருவதை நிறுத்தியிருக்கின்றன.
10 கர்த்தர் கூறுகிறார், “இப்போது, நான் நின்று எனது சிறப்பைக் காட்டுவேன். நான் ஜனங்களுக்கு முக்கியமானவராக இருப்பேன். 11 நீங்கள் பயனற்ற செயல்களைச் செய்திருக்கிறீர்கள். அவை பதரைப்போலவும் வைக்கோலைப்போலவும் இருக்கும். அவை எதற்கும் பயனற்றவை. உங்கள் சுவாசம் நெருப்பைப்போன்றது. அது உங்களை எரிக்கும். 12 ஜனங்கள் அவர்களது எலும்புகள் சுண்ணாம்பைப்போன்று ஆகும்வரை எரிக்கப்படுவார்கள். ஜனங்கள் விரைவாக முட்கள் மற்றும் காய்ந்த புதர்களைப்போன்று எரிக்கப்படுவார்கள்.
13 “வெகு தொலைவான நாடுகளில் உள்ள ஜனங்கள், நான் செய்திருக்கிறவற்றைப் பற்றிக் கேள்விப்படுவார்கள். என் அருகிலே இருக்கிற நீங்கள் எனது வல்லமையைப்பற்றி அறிந்துகொள்வீர்கள்.”
14 சீயோனில் உள்ள பாவிகள் பயந்துகொண்டிருக்கிறார்கள். தீயச் செயல்களைச் செய்துகொண்டிருக்கிற ஜனங்கள் அச்சத்தால் நடுங்குகிறார்கள். அவர்கள், “எங்களில் எவரும் அழிக்கும் இந்த நெருப்பினூடே உயிர் வாழ முடியுமா? என்றென்றும் எரிந்துகொண்டிருக்கிற இந்நெருப்பின் அருகில் எவரால் வாழமுடியும்?”
15 நல்லதும் நேர்மையானதுமான ஜனங்கள், பணத்துக்காக மற்றவர்களைத் துன்புறுத்தாதவர்கள் அந்த நெருப்பிலிருந்து தப்பமுடியும். அந்த ஜனங்கள் லஞ்சம் பெற மறுக்கிறார்கள். மற்றவர்களைக் கொலை செய்வதற்குரிய திட்டங்களைக் கவனிக்க மறுக்கிறார்கள். தீயவற்றைச் செய்யத் திட்டம் போடுவதைப் பார்க்க அவர்கள் மறுக்கிறார்கள். 16 உயரமான இடங்களில் அந்த ஜனங்கள் பாதுகாப்பாக வாழுவார்கள். அவர்கள் உயரமான கல்கோட்டைக்குள் பாதுகாப்பாக இருப்பார்கள். அந்த ஜனங்கள் எப்பொழுதும், உணவும் தண்ணீரும் பெற்றிருப்பார்கள்.
17 உங்கள் கண்கள் அரசரின் (தேவன்) அழகைப் பார்க்கும். நீங்கள் பெரிய தேசத்தைப் பார்ப்பீர்கள். 18-19 கடந்த காலத்தில் நீங்கள் பெற்றிருந்த தொல்லைகளை நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள். “வேறு நாடுகளிலிருந்து வந்த அந்த ஜனங்கள் எங்கே? நாம் புரிந்துகொள்ள முடியாத ஒரு மொழியுடைய அந்த அதிகாரிகளும் வரி வசூலிப்பவர்களும் எங்கே? நமது பாதுகாப்புக் கோபுரங்களை எண்ணிய ஒற்றர்கள் எங்கே? அவர்கள் அனைவரும் போய்விட்டார்கள்”.
எருசலேமை தேவன் காப்பாற்றுவார்
20 நமது மதப்பண்டிகையின் விடுமுறைகளைக் கொண்டாடும் நகரமாகிய. சீயோனைப் பாருங்கள். ஓய்வெடுப்பதற்குரிய அழகான இடமான எருசலேமைப் பாருங்கள். எருசலேம் என்றும் நகர்த்தப்படாத கூடாரம்போல் உள்ளது. இனி அதன் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதில்லை. அதன் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதில்லை. 21-23 ஏனென்றால் அங்கே வல்லமையுள்ள கர்த்தர் இருக்கிறார். அந்த நாடானது ஓடைகளும் அகன்ற ஆறுகளும் உள்ள இடமாக இருக்கிறது. ஆனால் அந்த ஆறுகளில் பகைவர்களின் படகுகளோ அல்லது சக்தி வாய்ந்த கப்பல்களோ இருப்பதில்லை. அந்தப் படகுளில் வேலைசெய்கிற நீங்கள் கயிறுகளோடு வேலையை உதற முடியும். பாய்மரத்தைப் பலமுள்ளதாக்க உங்களால் முடியாது.உங்களால் பாயை விரிக்கவும் முடியாமல் போகும். ஏனென்றால், கர்த்தர் நமது நீதிபதியாக இருக்கிறார். நமது சட்டங்களை கர்த்தர் உருவாக்குகிறார். கர்த்தர் நமது அரசர், அவர் நம்மைக் காப்பாற்றுகிறார். எனவே, கர்த்தர் நமக்கு மிகுந்த செல்வத்தைத் தருவார். முடவர்களும்கூட போரில் கொள்ளையிடுவதின் மூலம் பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள். 24 அங்கே வாழ்கிற எவரும், “நான் நோயுற்றுள்ளேன்” என்று சொல்லமாட்டார்கள். அங்கே வாழ்கிற ஜனங்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும்.
1 தேவனுடைய விருப்பப்படியே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கும் பவுலும், கிறிஸ்துவுக்குள் நமது சகோதரரான தீமோத்தேயுவும் எழுதுவதாவது,
2 கொலோசெ நகரில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமும், விசுவாசமும் கொண்ட சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் நமது பிதாவாகிய தேவனிடமிருந்து கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.
3 எங்களது பிரார்த்தனைகளில் உங்களுக்காக நாங்கள் தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துகிறோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவே தேவன். 4 இயேசு கிறிஸ்துவுக்குள் நீங்கள் கொண்டுள்ள விசுவாசத்தையும் தேவனுடைய மக்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை பற்றியும் கேள்விப்பட்டோம். அதற்காக தேவனுக்கு நன்றி சொல்கிறோம். 5 இயேசு கிறிஸ்துவின் மீதும், தேவனுடைய மக்கள் மீதும் நீங்கள் அன்பு கொண்டுள்ளீர்கள். ஏனெனில் நீங்கள் விசுவாசத்தை உடையவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் விசுவாசிக்கும் காரியங்கள் உங்களுக்காகப் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குச் சொல்லப்பட்ட நற்செய்தியைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்ட உண்மையான போதனைகளால் இந்த விசுவாசத்தைக் கற்றுக்கொண்டீர்கள். 6 இந்த உலகத்தில் எல்லா இடங்களிலும் நற்செய்தியானது ஆசீர்வாதத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கிறது. நீங்கள் அவற்றைக் கேட்ட நாள் முதலாகவும், தேவனுடைய கிருபை பற்றிய உண்மையை அறிந்துகொண்ட நாள் முதலாகவும் உங்களுக்கும் ஆசீர்வாதமும், வளர்ச்சியும் ஏற்படுகிறது. 7 எப்பாப்பிராவிடமிருந்து நீங்கள் தேவனுடைய கிருபையைப் பற்றி உணர்ந்திருக்கிறீர்கள். அவன் எங்களோடு சேர்ந்து சேவை செய்கிறான். நாங்கள் அவனை நேசிக்கிறோம். அவன் கிறிஸ்துவில் விசுவாசமுள்ள ஒரு ஊழியன். 8 எப்பாப்பிராவும் நீங்கள் பரிசுத்த ஆவிக்குள் கொண்டிருக்கும் அன்பைக் குறித்துக் கூறினான்.
9 உங்களைப் பற்றிய இந்தச் செய்திகளைக் கேட்ட நாள் முதலாக உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம். உங்களுக்காக நாங்கள் செய்யும் பிரார்த்தனையாவது:
தேவன் விரும்பும் அனைத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளவும், நீங்கள் பெரும் ஞானத்தையும், ஆவிக்குரியவற்றைப் பற்றிய தெளிவையும் பெறவும், 10 இத்தகைய உங்களது வாழ்க்கை முறையானது கர்த்தருக்கு மகிமையைத் தரவும், எல்லாவகையிலும் அவரைத் திருப்திப்படுத்தவும் நீங்கள் எல்லா வகையான நற்செயல்களையும் செய்யவும், தேவனைப் பற்றிய அறிவில் வளரவும், 11 தேவன் தனது சொந்த வல்லமையால் உங்களைப் பலப்படுத்தவும், அதனால் துன்பங்கள் வரும்போது அவரை விட்டு நீங்கள் விலகாமல் இருக்கவும் அதற்கான பொறுமையோடும்,
மகிழ்ச்சியோடும் இருக்கவும் வேண்டுமென்பதே. 12 பிறகு நீங்கள் நம் பிதாவுக்கு நன்றி சொல்லலாம். அவர் தான் ஏற்பாடு செய்த காரியங்களில் பங்குகொள்ளும் பொருட்டு உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கினார். அவர் வெளிச்சத்தில் வாழ்கிற அவரது மக்கள் அனைவருக்காகவும் இதை ஆயத்தம் செய்கிறார். 13 இருளின் அதிகாரங்களிலிருந்து நம்மை அவர் விடுதலை செய்திருக்கிறார். நம்மை அவரது அன்பு மகனான இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்துக்குள் கொண்டு வந்தார். 14 நமது பாவங்களுக்குரிய விலையை அவர் கொடுத்தார். அவருக்குள் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன.
கிறிஸ்துவைப் பார்க்கும்போது நாம் தேவனைக் காண்கிறோம்
15 ஒருவராலும் தேவனைக் காண இயலாது.
ஆனால் இயேசு தேவனைப் போன்றவர்.
படைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் மேலும் இயேசுவே ஆட்சியாளர்.
16 பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருட்களும் இயேசுவின் வல்லமையால் படைக்கப்பட்டவை.
அவை கண்ணால் காணப்படுகிறவை, காணப்படாதவை, ஆன்மீக சக்திகள்,
அதிகாரங்கள், பிரபுக்கள், ஆள்வோர்கள் என அனைத்துமே
அவருக்காகவும், அவர் மூலமாகவும் படைக்கப்பட்டவை.
17 எதுவும் படைக்கப்படுவதற்கு முன்னரே கிறிஸ்து இருந்தார்.
அவராலேயே அனைத்துப் பொருட்களும் தொடர்ந்து இருக்கின்றன.
18 கிறிஸ்துதான் சரீரத்தின் தலையாக இருக்கிறார் (சரீரம் என்பது சபையாகும்).
எல்லாப் பொருட்களுமே அவராலேயே வருகின்றன.
அவரே கர்த்தர். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.
எல்லாவற்றையும் விட இயேசுவே அதிமுக்கியமானவர்.
19 கிறிஸ்துவில் சகலமும் வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருந்தது.
20 பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருள்களையும்
கிறிஸ்துவின் மூலமாகத் தனக்குள்ளேயே திரும்பவும் கொண்டு வருவதில் தேவன் மகிழ்ச்சியடைந்தார்.
சிலுவையில் கிறிஸ்து இரத்தம் சிந்தியதன் மூலம் உலகில் தேவன் சமாதானத்தை உருவாக்கினார்.
21 ஒரு காலத்தில் நீங்கள் தேவனை விட்டுப் பிரிந்தீர்கள். உங்கள் மனதில் தேவனுக்குப் பகைவராக இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் செய்த எல்லா செயல்களும் தேவனுக்கு எதிரானவை. 22 ஆனால் இப்போது கிறிஸ்து மீண்டும் உங்களை தேவனுக்கு நண்பர்களாக்கிவிட்டார். கிறிஸ்து இதனைத் தனது மரணத்தின் மூலம் தான் சரீரத்தில் இருக்கும்போது செய்தார். இதன் மூலம் அவர் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும், உங்களில் குற்றம் இல்லாதவர்களாகவும், தேவனால் நீங்கள் பாவிகள் என்று தீர்ப்பளிக்க முடியாத வகையில் தேவன் முன் நிறுத்துகிறார். 23 நீங்கள் கேட்டறிந்த நற்செய்தியில் தொடர்ந்து விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால், உங்களுக்காகக் கிறிஸ்து இதைச் செய்வார். உங்கள் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாகவும், ஸ்திரமாகவும் இருக்கவேண்டும். நற் செய்தியின் மூலம் பெற்ற விசுவாசத்தில் இருந்து கொஞ்சம் கூட விலகக் கூடாது. இந்த நற்செய்தியே உலகம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கிறது. பவுலாகிய நான் அந்த நற்செய்தியைப் பரவலாக ஆக்கும் பொருட்டு உதவி செய்கிறேன்.
சபைகளுக்காக பவுலின் பணி
24 உங்களுக்காகப் பாடுபடுவதைக் குறித்து நான் மகிழ்கிறேன். சரீரமாகிய சபைக்காக கிறிஸ்து இன்னும் துன்புற்றுக்கொண்டிருக்கிறார். அத்துன்பத்தில் ஒரு பங்கை நானும் பெற்றுக்கொள்கிறேன். அவரது சரீரமாகிய சபைக்காக நான் துன்புறுகிறேன். 25 ஏனென்றால் தேவன் எனக்கு இந்தச் சிறப்புக்குரிய வேலையைக் கொடுத்திருக்கிறார். இந்தப் பணி உங்களுக்கு உதவுகிறது. தேவனுடைய போதனையை முழுமையாய் கூறுவதுதான் என் பணி. 26 இந்தப் போதனைதான் இரகசிய உண்மை. இது உலகம் படைக்கப்பட்ட காலம் முதல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இது எல்லா மக்களிடமிருந்தும் மறைக்கப்பட்டிருந்தது. இப்போது தேவனுடைய பரிசுத்தமான மக்களுக்கு மட்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 27 தேவன், தனது மக்கள், இந்தச் செல்வமும், உன்னதமுமிக்க இரகசிய உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அந்த உயர்ந்த உண்மை உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும்Ԕ உரியது. கிறிஸ்துதான் அந்த உண்மை. அவர் உங்களில் இருக்கிறார். அவரே நம் மகிமைக்கான ஒரே நம்பிக்கையாக இருக்கிறார். 28 எனவே நாம் மக்களிடம் தொடர்ந்து கிறிஸ்துவைப் பற்றிப் போதனை செய்கிறோம். நம் முழு அறிவையும் ஒவ்வொருவரையும் பலப்படுத்தவும், ஒவ்வொருவருக்கும் போதிக்கவும் பயன்படுத்துகிறோம். கிறிஸ்துவுக்குள் ஆன்மீக முழுமைபெற்ற மக்களைப் போன்று ஏனைய மக்களையும் நாம் தேவனுக்கு முன்பாகக் கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். 29 கிறிஸ்து எனக்குக் கொடுத்திருக்கிற முழு சக்தியையும் பயன்படுத்தி, இதைச் செய்வதற்காகத்தான் நான் உழைத்து வருகிறேன். அச்சக்தி எனக்குள் வேலை செய்கிறது.
2008 by World Bible Translation Center