Old/New Testament
யூதாவின் ராஜாவாகிய அமத்சியா
25 ராஜாவாகியபோது அமத்சியாவுக்கு 25 வயது. அவன் எருசலேமிலிருந்து 29 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் யோவதானாள். இவள் எருசலேமியப் பெண். 2 கர்த்தர் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினாரோ அதையே அமத்சியா செய்தான். ஆனால் அவன் அவற்றை முழு மனதோடு செய்யவில்லை. 3 அமத்சியா பலமுள்ள ராஜா ஆனான். தன் தந்தையைக் கொன்ற அதிகாரிகளைக் கொன்றான். 4 ஆனால் அவன் அந்த அதிகாரிகளின் பிள்ளைகளைக் கொல்லவில்லை. ஏனென்றால் மோசேயின் புத்தகத்தில் எழுதப்பட்ட சட்டங்களுக்கு அவன் அடிபணிந்தான். கர்த்தர், “பிள்ளைகளின் செயல்களுக்காகப் பெற்றோர்கள் கொல்லப்படக்கூடாது. பெற்றோர்கள் செய்த செயல்களுக்காகப் பிள்ளைகளும் கொல்லப்படக்கூடாது. ஒருவன் தான் செய்த பாவத்துக்காகமட்டுமே தண்டிக்கப்படவேண்டும்” என்று கட்டளையிட்டிருக்கிறார்.
5 அமத்சியா யூதாவின் ஜனங்களை அனைவரையும் ஒன்றாகத் திரட்டினான். சில குழுக்களாக அவர்களை அவன் பிரித்தான். பிறகு அக்குழுக்களுக்கு தளபதிகளையும், தலைவர்களையும் நியமித்தான். அவர்கள் யூதா மற்றும் பென்யமீன் கோத்திரத்தின் வீரர்களுக்குத் தலைவர்களாக இருந்தனர். இருபதும் அதற்கு மேலும் வயதுடைய வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். இவர்கள் ஈட்டியும் கேடயமும் கொண்டு போரிடும் வீரர்கள் 3,00,000 பேர் இருந்தனர். 6 அமத்சியா இஸ்ரவேலில் இருந்து 1,00,000 வீரர்களை அழைத்தான். அவர்களுக்கு 100 தாலந்து வெள்ளியைக் கூலியாகக் கொடுத்தான். 7 ஆனால் ஒரு தேவமனிதன் (தீர்க்கதரிசி) ஒருவன் அமத்சியாவிடம் வந்தான். அவன், “ராஜாவே இஸ்ரவேல் வீரர்களை உன்னோடு அழைத்துக் கொண்டு போகாதே. கர்த்தர் இஸ்ரவேலர்களோடு இல்லை. எப்பிராயீம் ஜனங்களோடும் கர்த்தர் இல்லை. 8 உன்னை நீயே பலப்படுத்திக்கொண்டு போருக்கு தயாராகலாம். ஆனால் நீ வெற்றிபெறவோ அல்லது தோல்வியடையவோ தேவன் உதவுவார்” என்றான். 9 அமத்சியா தேவமனிதனிடம், “இஸ்ரவேல் படைக்கு நான் ஏற்கெனவே கொடுத்தப் பணத்துக்கு என்ன செய்ய?” என்று கேட்டான். அதற்கு தேவ மனிதன், “கர்த்தரிடம் ஏராளமாக உள்ளது. அவர் உனக்கு அவற்றைவிட மிகுதியாகக் கொடுப்பார்” என்றான்.
10 எனவே, அமத்சியா இஸ்ரவேல் படையை எப்பிராயீமுக்குத் திருப்பி அனுப்பிவிட்டான். அவர்களுக்கு ராஜா மீதும், யூதா ஜனங்கள் மீதும் கோபம் மிகுந்தது. அவர்கள் கோபத்தோடு வீட்டிற்குத் திரும்பினார்கள்.
11 பிறகு அமத்சியா மிகுந்த தைரியத்தோடு தனது படையை ஏதோம் நாட்டிலுள்ள உப்புப் பள்ளத்தாக்குக்கு நடத்திச் சென்றான். அங்கே அமத்சியாவின் படையானது 10,000 சேயீர் ஆண்களைக் கொன்றது. 12 யூதாவின் படை சேயீரிலிருந்து 10,000 ஆண்களையும் பிடித்தது. அவர்களை ஒரு மலை உச்சிக்குக் கொண்டுபோனார்கள். அந்த ஆட்கள் இன்னமும் உயிருடன் இருந்தார்கள். பின்னர் யூதாவின் படை அவர்களை மலையுச்சியில் இருந்து கீழே வீசி எறிந்தது. அவர்களது உடல்கள் கீழேயிருந்த பாறைகளின் மேல் உடைந்தன.
13 அதே நேரத்தில், இஸ்ரவேல் படையானது யூதா நகரங்களைத் தாக்கியது. அவர்கள் பெத்தொரோன் முதல் சமாரியாவரையுள்ள நகரங்களை எல்லாம் தாக்கினார்கள். அவர்கள் 3,000 பேரை கொன்று விலைமதிப்புள்ள பொருட்களைக் கைப்பற்றிக் கொண்டனர். அவர்களை அமத்சியா தன்னோடு போருக்கு அழைத்து போகாததால் அவர்கள் கோபமாக இருந்தனர்.
14 ஏதோமிய ஜனங்களை வென்ற பிறகு அமத்சியா வீட்டிற்குத் திரும்பினான். சேயீர் ஜனங்கள் தொழுது கொண்ட தெய்வ விக்கிரகங்களை அவன் கொண்டு வந்தான். அமத்சியா அவற்றைத் தொழுதுகொள்ள ஆரம்பித்துவிட்டான். அவற்றின் முன்னால் அவன் தரையில் விழுந்து வணங்கி அவற்றுக்கு நறுமணப் பொருட்களை எரித்தான். 15 அதனால் அமத்சியாவின் மேல் கர்த்தருக்குக் கோபம் உண்டானது. அவர் அவனிடம் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அத்தீர்க்கதரிசி, “அமத்சியா, அந்த ஜனங்கள் தொழுது கொண்ட தெய்வங்களை நீ ஏன் தொழுதுகொள்கிறாய்? அத்தெய்வங்களால் அவர்களை உன்னிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லையே!” என்றான்.
16 அவ்வாறு அந்த தீர்க்கதரிசி பேசி முடித்ததும், ராஜா அவனிடம், “ராஜாவுக்கு ஆலோசனை சொல்லும்படி உன்னை நியமிக்கவில்லை! ஆகவே சும்மாயிரு. இல்லாவிட்டால் நீ கொல்லப்படுவாய்” என்றான். தீர்க்கதரிசி அமைதியானான். ஆனால் பிறகு, “தேவன் உண்மையில் உன்னை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். ஏனென்றால் நீ தீயவற்றைச் செய்ததோடு எனது ஆலோசனைகளையும் கேட்கவில்லை” என்றான்.
17 யூதாவின் ராஜாவாகிய அமத்சியா, தனது ஆலோசகர்களோடு ஆலோசனை செய்தான். பிறகு அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுக்குத் தூது அனுப்பினான். அமத்சியா யோவாசிடம், “நாம் இருவரும் நேருக்குநேர் சந்திப்போம்” என்று அழைத்தான். யோவாஸ் யோவாகாசின் குமாரன் ஆவான். யோவாகாஸ் யெகூவின் குமாரன் ஆவான்.
18 பிறகு யோவாஸ் தனது பதிலை அமத்சியாவிற்கு அனுப்பினான். யோவாஸ் இஸ்ரவேலின் ராஜா. அமத்சியா யூதாவின் ராஜா. யோவாஸ், “லீபனோனில் உள்ள முட்செடியானது லீபனோனில் உள்ள கேதுரு மரத்திற்குத் தூது அனுப்பி, ‘நீ உன் குமாரத்தியை என் குமாரனுக்கு மணமுடித்து தருவாயா’ என்று கேட்டது. ஆனாலும் ஒரு காட்டு மிருகம் அந்த வழியாகப் போகும்போது அந்த முட்செடியை மிதித்துப் போட்டது. 19 நீ உனக்குள்ளே, ‘நான் ஏதோமியரை வென்றிருக்கிறேன்’ என்று கூறுகிறாய். அதற்காக நீ பெருமைப்படுகிறாய். ஆனால் நீ உன் வீட்டிலேயே இரு. நீ துன்பத்தில் சிக்கிக்கொள்ள வேண்டிய தேவையில்லை. என்னிடம் போரிட வந்தால் நீயும், யூதாவும் அழிந்துப்போவீர்கள்” என்று சொல்லி அனுப்பினான்.
20 ஆனால் அமத்சியா அதனைக் கேட்கவில்லை. இது தேவனால் உண்டானது. தேவன் இஸ்ரவேல் மூலம் யூதாவைத் தோற்கடிக்க எண்ணினார். அதற்கு காரணம், யூதா நகர ஜனங்கள் ஏதோமியரின் தெய்வங்களைப் பின்பற்றி தொழுதுகொண்டு வந்தனர் என்பதாகும். 21 ஆகையால் இஸ்ரவேல் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவை நேருக்கு நேராக பெத்ஷிமேசிலே சந்தித்தான். பெத்ஷிமேசு யூதாவிலே உள்ளது. 22 இஸ்ரவேல் யூதாவைத் தோற்கடித்தது. யூதாவைச் சேர்ந்த ஒவ்வொருவனும் தன் வீட்டிற்கு ஓடிப்போனான். 23 யோவாஸ் அமத்சியாவைப் பிடித்து எருசலேமிற்குக் கொண்டு போனான். அமத்சியாவின் தந்தையின் பெயர் எகோவஸ். இஸ்ரவேல் ராஜா எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல் முதல் மூலை வாசல்வரை 400 முழ நீளம் இடித்துப்போட்டான். 24 பிறகு யோவாஸ் தேவனுடைய ஆலயத்தில் இருந்த பொன்னையும், வெள்ளியையும், இன்னும் பல பொருட்களையும் கொண்டுப் போனான். ஓபேத்ஏதோம் ஆலயத்திலுள்ள பொருட்களுக்குப் பொறுப்பாளியாக இருந்தான். யோவாஸ் அரண்மனையிலுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டான். சிலரைச் சிறைப்பிடித்தான். பின் சமாரியாவிற்குத் திரும்பிப்போனான்.
25 யோவாஸ் மரித்தபிறகு அமத்சியா 15 ஆண்டுகள் வாழ்ந்தான். அமத்சியாவின் தந்தை யூதாவின் ராஜாவாகிய யோவாஸ் ஆவான். 26 அமத்சியா தொடக்கத்திலிருந்தது முதல் இறுதிவரை செய்த மற்ற செயல்கள் எல்லாவற்றைப் பற்றியும் யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 27 அமத்சியா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை நிறுத்தியதும் எருசலேமிலுள்ள ஜனங்கள் ராஜாவுக்கு எதிராகத் திட்டமிட்டனர். அமத்சியா லாகீசுக்கு ஓடிப்போனான். ஜனங்கள் அங்கும் ஆட்களை அனுப்பி அமத்சியாவைக் கொன்றனர். 28 பிறகு அமத்சியா உடலை அங்கிருந்து குதிரையில் வைத்துக் கொண்டு வந்தனர். அவனை யூதாவின் நகரத்தில் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.
யூதாவின் ராஜாவாகிய உசியா
26 யூதா ஜனங்கள் அமத்சியாவின் இடத்தில் உசியா என்பவனைப் புதிய ராஜாவாகத் தேர்ந்தெடுத்தனர். அமத்சியா, உசியாவின் தந்தை ஆவான். இது இவ்வாறு நிகழும்போது உசியாவின் வயது 16. 2 உசியா மீண்டும் ஏலோத் நகரத்தை கட்டி யூதாவிற்குத் திருப்பிக் கொடுத்தான். அமத்சியா மரித்த பிறகு உசியா இதனைச் செய்தான். அம்த்சியாவை அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.
3 உசியா ராஜாவாகும்போது அவனுக்கு 16 வயது. அவன் எருசலேமில் 52 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் எக்கோலியாள். இவள் எருசலேம் நகரத்தவள். 4 கர்த்ததருடைய விருப்பம் போலவே உசியா காரியங்களைச் செய்தான். அவனது தந்தை அமத்சியாவைப் போலவே தேவனுக்கு அடிபணிந்து வாழ்ந்து வந்தான். 5 சகரியாவின் வாழ்நாளிலே உசியா தேவனைப் பின்பற்றினான். சகரியா அவனுக்கு எவ்வாறு தேவனுக்கு மரியாதை செலுத்துவது என்பதைப்பற்றியும் தேவனுக்கு கீழ்ப்படிவது பற்றியும் சொல்லித்தந்தான். உசியா கர்த்தரிடம் கீழ்ப்படிந்து இருந்தவரை தேவனும் அவனுக்கு வெற்றியைத் தந்தார்.
6 உசியா பெலிஸ்தர்களுக்கு எதிராகப் போரிட்டான். காத், யப்னே, அஸ்தோத் ஆகிய நகர சுவர்களை இடித்து வீழ்த்தினான். அஸ்தோத் நகரத்தின் அருகிலே இவன் புதிய நகரங்களைக் கட்டினான். பெலிஸ்திய ஜனங்களுக்கிடையில் வேறு இடங்களிலும் ஊர்களை கட்டினான். 7 பெலிஸ்தர்களுடனான போரிலும், கூர்பாகாலில் இருந்த அரபியரோடான போரிலும், மெகுனியரோடான போரிலும் வெற்றிபெற உசியாவுக்கப் பெருமளவில் தேவன் உதவினார். 8 அம்மோனியர்கள் உசியாவிற்கு காணிக்கைகளைக் கொடுத்தனர். எகிப்தின் எல்லைவரை உசியாவின் புகழ் பரவி இருந்தது. இவன் பலமிக்கவன் ஆதலால் பெரும் புகழையும் பெற்றான்.
9 உசியா எருசலேமில் மூலைவாசலிலும் பள்ளத்தாக்கு வாசலிலும் சுவர்களின் முடிவிலும் கோபுரங்களைக் கட்டினான். அவற்றைப் பலப்படுத்தினான். 10 உசியா வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டினான். பல கிணறுகளைத் தோண்டினான். இவனுக்கு மலைநாடுகளிலும் சமவெளிகளிலும் ஏராளமான ஆடுகள் இருந்தன. உசியா மலை நாடுகளில் விவசாயிகளைப் பெற்றிருந்தான். பயிர்கள் நன்றாக விளைந்தன. திராட்சைத் தோட்டத்தைக் கவனிப்பவர்களும் இருந்தனர். உசியா விவசாயத்தைப் பெரிதும் விரும்பினான்.
11 பயிற்சி பெற்ற வீரர்கள் நிறைந்த படை உசியாவிடம் இருந்தது. அவ்வீரர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். செயலாளனான ஏயெலியும் அதிகாரியான மாசேயாவும் இப்பிரிவுகளைச் செய்தனர். அனனியாவும் ராஜாவின் அதிகாரிகளுள் ஒருவன். இவன் மற்ற அதிகாரிகளுக்குத் தலைவன். 12 இந்த வீரர்களுக்கு 2,600 தலைவர்கள் இருந்தனர். 13 இக்குடும்பத் தலைவர்களே மிகுந்த ஆற்றலுடன் போரிடவல்ல 3,07,500 வீரர்களுக்கும் பொறுப்பாளர்களாக இருந்தனர். வில்வீரர்கள் அனைவரும் பகைவர்களுக்கு எதிராக வெல்ல ராஜாவுக்கு உதவினார்கள். 14 உசியா படைக்குக் கேடயங்கள், ஈட்டிகள், தலைகவசங்கள், மார்க்கவசங்கள், வில்கள், கவண்களுக்குக் கற்கள் ஆகியவற்றைக் கொடுத்தான். 15 எருசலேமில் உசியா, புத்திசாலிகளால் அமைக்கப்பட்ட எந்திரங்களை கோபுரங்களின் மேலும், சுவர்களின் மேலும் வைத்தான். இந்த எந்திரங்கள் அம்புகளையும், கற்களையும் எறிந்தன. இதனால் உசியா பெரும் புகழ்பெற்றான். வெகு தொலை நாடுகளிலுள்ள ஜனங்களும் இவனைப்பற்றி அறிந்துகொண்டனர். அதிகமான உதவியைப் பெற்று அவன் வலிமைமிக்க ஒரு ராஜாவானான்.
16 ஆனால் உசியா பலமுள்ளவனாக ஆனதும் அவனது தற்பெருமை அவனுக்கு அழிவை விளைவித்தது. அவன் தனது தேவனாகிய கர்த்தருக்கு உண்மையுள்ளவனாக இல்லை. அவன் நறுமணப் பொருட்களை எரிக்கும் பலிபீடத்தின் மீது நறுமணப் பொருட்களை எரிப்பதற்காக கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். 17 அசரியா என்ற ஆசாரியனும் கர்த்தருடைய ஆசாரியர்களுள் தைரியமிக்க 80 ஆசாரியர்களும் உசியாவைப் பின்தொடர்ந்து ஆலயத்திற்குள் சென்றனர். 18 அவர்கள் உசியாவின் தவறுகளை எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் அவனிடம், “உசியாவே, கர்த்தருக்குத் தூபம் காட்டுவது உனது வேலையல்ல. இவ்வாறு செய்வது உனக்கு நல்லதன்று. இந்த ஆசாரியர்கள் பரிசுத்தமான நறுமணப்பொருட்களை எரிப்பதற்குப் பயிற்சிப் பெற்றவர்கள். ஆசாரியர்களும் ஆரோனின் சந்ததியார் மட்டுமே இதனைச் செய்யவேண்டும். மகா பரிசுத்தமான இடத்தை விட்டு வெளியே போ, நீ உண்மையுள்ளவனாக இல்லை. இதற்காக தேவனாகிய கர்த்தர் உம்மை கனம் பண்ணமாட்டார்” என்றனர். 19 இதனால் உசியா கோபம் கொண்டான். அவன் தன் கையில் நறுமணப் பொருட்களை எரிப்பதற்காக ஒரு கலசத்தை வைத்திருந்தான். அத்தோடு அவன் ஆசாரியர்களோடு கோபமாகப் பேசியபோது அவன் நெற்றியில் தொழுநோய் தோன்றியது. இது ஆசாரியர்களுக்கு முன்பாக கர்த்தருடைய ஆலயத்தின் பலிபீடத்தின் அருகில் நறுமணப் பொருட்களை எரிக்கும்போது நடந்தது. 20 தலைமை ஆசாரியனாகிய அசரியாவும் மற்ற ஆசாரியர்களும் இதனைக் கண்டனர். அவர்கள் அவனது நெற்றியில் ஏற்பட்ட தொழுநோயையும் கண்டனர். உடனே உசியாவை ஆலயத்தைவிட்டு வெளியேறும்படி அவர்கள் கூறினார்கள். கர்த்தர் அவனைத் தண்டித்து விட்டதால் அவனும் வேகமாக ஆலயத்தைவிட்டு வெளியேறினான். 21 உசியா எனும் ராஜா தொழுநோயாளியானான். அவனால் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை. ஒரு தனி வீட்டில் அவன் வசிக்க வேண்டியதாயிற்று. அவனது குமாரனான யோதாம் அரண்மனையைக் கட்டுப்படுத்தினான். அவனே ஜனங்களின் ஆளுநர் ஆனான்.
22 தொடக்ககாலம் முதல் இறுதிவரை உசியா செய்த வேறு செயல்கள், ஆமோத்சின் குமாரனான ஏசாயா எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டுள்ளன. 23 உசியா மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அவனும் அடக்கம் செய்யப்பட்டான். ராஜாக்களின் கல்லறைகளுக்கு அருகில் உள்ள வயல் வெளிகளில் உசியாவை அடக்கம் செய்தனர். ஜனங்கள், “உசியாவிற்குத் தொழு நோய் இருந்தது” என்றனர் என்பதே இதன் காரணம் யோதாம் புதிய ராஜாவாக உசியாவின் இடத்தில் அரசேற்றான். யோதாம் உசியாவின் குமாரன் ஆவான்.
யூதாவின் ராஜாவாகிய யோதாம்
27 யோதாம் ராஜாவாகியபோது அவனுக்கு 25 வயது ஆகும். இவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எருசாள் ஆகும். இவள் சாதோக்கின் குமாரத்தி ஆவாள். 2 கர்த்தர் செய்ய விரும்பியதையே, யோதாம் செய்து வந்தான். அவன் தன் தந்தை உசியாவைப் போலவே தேவனுக்குக் கீழ்ப்படிந்து வந்தான். ஆனால் தன் தந்தையைப் போல யோதாம் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைந்து நறுமணப் பொருட்களை எரிக்க முயலவில்லை. எனினும் ஜனங்கள் தொடர்ந்து தவறு செய்தனர். 3 யோதாம் மீண்டும் கர்த்தருடைய ஆலயத்தின் மேல் வாசலைக் கட்டினான். ஓபேலின் மதில்சுவர் மீது அனேக கட்டிடங்களைக் கட்டினான். 4 யூதாவின் மலைநாட்டில் புதிய நகரங்களையும் கட்டினான். யோதாம் காடுகளில் கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான். 5 யோதாம் அம்மோனிய ராஜாக்களுக்கு எதிராகப் போரிட்டான். அவர்களது படைகளை அவன் தோற்கடித்தான். எனவே ஆண்டுதோறும் அம்மோனியர்கள் அவனுக்கு 100 தாலந்து வெள்ளியையும் பதினாயிரங்கலங் கோதுமையையும் பதினாயிரங்கல வாற் கோதுமையையும் கொடுத்தார்கள். இவ்வாறு மூன்று ஆண்டுகள் கொடுத்தனர்.
6 யோதாம் உண்மையாகவே தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்ததால், பலமுள்ளவன் ஆனான். 7 யோதாம் செய்த மற்ற செயல்களும் போர்களும் யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 8 யோதாம் 25 வயதில் ராஜாவானான். அவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். 9 பிறகு யோதாம் மரிக்க அவனை அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். அவன் தாவீது நகரத்திலே அடக்கம் செய்யப்பட்டான். யோதாமின் இடத்திலே புதிய ராஜாவாக ஆகாஸ் வந்தான். ஆகாஸ் யோதாமின் குமாரன்.
16 “நீங்கள் உங்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதற்காக இவைகளை நான் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். 2 மக்கள் தங்கள் ஆலயங்களில் இருந்து உங்களை வெளியேற்றுவர். மேலும் உங்களைக் கொல்பவன் தேவனுக்கு சேவை செய்கிறவன் என்று மக்கள் எண்ணும்படியான காலம் வரும். 3 அவர்கள் பிதாவைப்பற்றியும் என்னைப்பற்றியும் அறிந்துகொள்ளாததால் இப்படிச் செய்வார்கள். 4 நான் இப்பொழுது இவற்றைப்பற்றியெல்லாம் சொல்லிவிட்டேன். எனவே இவை நிகழும் காலம் வரும்போது, நான் ஏற்கெனவே உங்களுக்கு எச்சரித்திருக்கிறேன் என்பதை நினைவுபடுத்திக்கொள்வீர்கள்.
பரிசுத்த ஆவியானவரின் பணிகள்
“நான் உங்களோடு இருந்தேன். எனவே தொடக்கத்தில் இவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லவில்லை. 5 இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடம் செல்லப் போகிறேன். ‘நீங்கள் எங்கே போகிறீர்கள்’ என்று யாரும் என்னை இதுவரை கேட்கவில்லை. 6 எனினும் நான் இவற்றைச் சொன்னதால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிரம்பிவிட்டது. 7 ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நான் போவது உங்களுக்கு நன்மையைத் தரும். ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன். நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார்.
8 “அவர் வரும்போது இவற்றைப்பற்றிய உண்மைகளையெல்லாம் உலகிலுள்ள மக்களுக்கு நிரூபிப்பார். அதோடு பாவத்தின் குற்றம்பற்றியும், தேவனோடு உள்ள சரியான உறவுபற்றியும், நியாயத்தீர்ப்புபற்றியும் விளக்குவார். 9 அந்த உதவியாளர், மக்கள் என்னை நம்பாததால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதை நிரூபிப்பார். 10 அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவுபற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன். அப்பொழுது நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். 11 நியாயத்தீர்ப்புபற்றிய உண்மையை அவர் உலகத்துக்கு நிரூபிப்பார். ஏனென்றால் இந்த உலகை ஆளுகிற சாத்தான் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான்.
12 “உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை. 13 ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார். 14 நடக்கப்போகிறவற்றைப்பற்றி மட்டுமே அவர் பேசுவார். உண்மையின் ஆவியானவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். எப்படி என்றால் அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார். 15 பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்.”
துயரம் மகிழ்ச்சியாக மாறும்
16 பின்னும் இயேசு “இன்னும் கொஞ்ச காலத்திற்குப்பின் என்னை நீங்கள் பார்க்க முடியாது. அதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பின் நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்” என்றார்.
17 இயேசுவின் சீஷர்களில் சிலர் ஒருவருக்கொருவர், “‘கொஞ்ச காலத்திற்குப்பின் பார்க்கமுடியாது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்’ என்றாரே, இயேசு எதைக் கருதி இவ்வாறு கூறுகிறார். ‘நான் பிதாவிடம் போகிறேன்’ என்று ஏன் கூறுகிறார். 18 ‘கொஞ்ச காலம்’ என்று கூறினாரே அதன் பொருள் என்ன? அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே” என்று பேசிக்கொண்டனர்.
19 சீஷர்கள் தன்னிடம் அதைப்பற்றிக் கேட்க விரும்புவதை இயேசு கவனித்தார். ஆகையால் இயேசு அவர்களிடம், “நீங்கள் உங்களுக்குள் என்ன பேசிக்கொள்கிறீர்கள்? நான், ‘இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு என்னைப் பார்க்க முடியாது. அப்புறம் கொஞ்ச காலத்திற்குப் பின்பு மீண்டும் என்னைப் பார்ப்பீர்கள்’ என்று சொன்னேனே, அதைப் பற்றியா? 20 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அழுது துக்கப்படுவீர்கள். ஆனால் உலகம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் துக்கப்படுவீர்கள். ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
21 “ஒரு பெண், குழந்தையைப் பெற்றெடுக்கும்போது அவளுக்கு வலி ஏற்படும். ஏனென்றால் அவளுக்குக் குறிப்பிட்டவேளை நெருங்கி இருக்கும். ஆனால் குழந்தை பிறந்ததும் அவள் தன் வலியை மறந்துவிடுவாள். குழந்தை இந்த உலகுக்கு வந்துவிட்டது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவாள். 22 உங்களுக்கும் இதைப்போலத்தான். இப்பொழுது நீங்கள் துயரமாக இருக்கிறீர்கள். ஆனால் நான் மீண்டும் உங்களைப் பார்ப்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எவராலும் உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்க முடியாது. 23 அந்த நாளில் நீங்கள் என்னிடம் எதைப்பற்றியும் கேட்கமாட்டீர்கள். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். என் பேரில் நீங்கள் எதைக் கேட்டாலும் என் பிதா உங்களுக்குத் தருவார். 24 இதுவரை நீங்கள் என்பேரால் எதையும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் மகிழ்ச்சி முழுமையான மகிழ்ச்சியாக இருக்கும்.
உலகத்தின் மீது வெற்றி
25 “நான் இவற்றையெல்லாம் உங்களுக்கு மறை பொருளில் கூறியிருக்கிறேன். ஆனால் காலம் வரும். அப்போது நான் இவ்வாறு மறைபொருளில் பேசாமல் வெளிப்படையாகச் செய்திகளை அந்தப் பிதாவைப்பற்றிக் கூறுவேன். 26 அந்த நாளில் நீங்கள் பிதாவிடம் என்பேரில் உங்களுக்கானதைக் கேட்பீர்கள். நான் உங்களுக்காக என் பிதாவிடம் கேட்டுக்கொள்ளும் தேவை இருக்காது என்று சொல்கிறேன். 27 என் பிதா அவராகவே உங்களை நேசிக்கிறார். ஏனென்றால் நீங்கள் என்னிடம் அன்பாக இருந்தீர்கள். நான் தேவனிடம் இருந்து வந்ததாக நீங்கள் நம்பியிருந்தீர்கள். 28 நான் இந்த உலகத்துக்கு என் பிதாவிடம் இருந்து வந்தேன். இப்பொழுது நான் இந்த உலகத்தைவிட்டுப் போகிறேன். என் பிதாவிடம் திரும்பிப் போகிறேன்” என்றார்.
29 பிறகு இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “நீர் இப்பொழுது எங்களிடம் தெளிவாகப் பேசிக்கொண்டிருக்கிறீர். புரிந்து கொள்வதற்குக் கடினமான வார்த்தைகளை நீர் பயன்படுத்தவில்லை. 30 உமக்கு எல்லாம் தெரியும் என்பதை நாங்கள் இப்போது தெரிந்துகொண்டோம். உம்மிடம் ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன்னரே அக்கேள்விக்கு உம்மால் பதில்கூற முடியும். இவை நீர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை எங்களை நம்ப வைக்கிறது” என்றனர்.
31 இயேசு அவர்களிடம், “எனவே நீங்கள் இப்போது நம்புகிறீர்கள். 32 என்னைக் கவனியுங்கள். நீங்கள் சிதறிப்போகிற வேளை இதோ நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வீட்டிற்குப் போய் என்னை விட்டு விலகிப் போவீர்கள். அந்த நேரம் இதோ வந்துவிட்டது. நீங்கள் என்னை விட்டுப் போவீர்கள். நான் தனியே இருப்பேன். எனினும் நான் உண்மையில் தனித்திருக்கமாட்டேன். ஏனென்றால் என்னோடு என் பிதா இருக்கிறார்.
33 “என்னில் உங்களுக்கு சமாதானம் இருக்கும்பொருட்டு இவற்றை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் ஏற்படும். ஆனால் தைரியமாக இருங்கள். நான் உலகத்தை வென்றுவிட்டேன்” என்றார்.
2008 by World Bible Translation Center