Old/New Testament
வெள்ளப் பெருக்கின் தொடக்கம்
7 பிறகு கர்த்தர் நோவாவிடம், “நீ நல்லவன் என்பதை, எல்லோரும் கெட்டுப்போன இக்காலத்திலும் கண்டிருக்கிறேன். ஆகையால் உனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கப்பலுக்குள் செல். 2 பலிக்குரிய சுத்தமான விலங்குகளில் [a] ஏழு ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள். மற்ற மிருகங்களில் ஒரு ஜோடி போதும். இவற்றையெல்லாம் உனது கப்பலுக்குள் சேர்த்து வை. 3 பறவைகளில் ஒவ்வொரு வகையிலும் ஏழு ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள். இதனால் மற்ற இனங்கள் அழிந்தாலும் இவை நிலைத்திருக்கும். 4 இன்றிலிருந்து ஏழு நாட்களானதும் பூமியில் பெருமழை பொழியச் செய்வேன். 40 இரவும் 40 பகலுமாக தொடர்ந்து மழை பொழியும். உலகில் வாழும் அனைத்து உயிர்களும் அழிந்துபோகும். என்னால் படைக்கப்பட்ட அனைத்தும் அழியும்” என்றார். 5 நோவா கர்த்தர் சொன்னபடி எல்லாவற்றையும் செய்து முடித்தான்.
6 மழை பெய்தபோது நோவாவுக்கு 600 வயதாயிருந்தது. 7 நோவாவும் அவனது குடும்பத்தினரும் கப்பலுக்குள் சென்று வெள்ளத்திலிருந்து உயிர் பிழைத்தனர். நோவாவோடு அவனது மனைவியும் அவனது மகன்களும், மகன்களின் மனைவியரும் இருந்தனர். 8 பலிக்குரிய மிருகங்களும் மற்ற மிருகங்களும் பறவைகளும் ஊர்வனவும், 9 நோவாவோடு கப்பலுக்குள் கொண்டுவரப்பட்டன. அவை ஆணும் பெண்ணுமாக ஜோடி ஜோடியாக தேவனுடைய ஆணையின்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. 10 ஏழு நாட்களானதும் வெள்ளப்பெருக்கு துவங்கியது. மழை தொடர்ந்து பெய்தது.
11-13 இரண்டாவது மாதத்தின் பதினேழாவது நாள் பூமிக்கடியில் உள்ள ஊற்றுகள் எல்லாம் திறந்து பீறிட்டுக் கிளம்பின. அன்று பெருமழையும் சேர்ந்து கொட்ட ஆரம்பித்தது. அது வானத்தின் ஜன்னல்கள் திறந்துகொண்டது போன்று இருந்தது. நாற்பது நாட்கள் இரவும் பகலுமாக மழை தொடர்ந்து பெய்தது. முதல் நாளே நோவாவும் அவனது மனைவியும் அவன் மகன்களான சேம், காம், யாப்பேத் ஆகியோரும் அவர்களது மனைவிமாரும் கப்பலுக்குள் சென்றுவிட்டனர். அப்போது நோவாவுக்கு 600 வயது. 14 அவர்களும் எல்லாவகை மிருகங்களும் கப்பலுக்குள் இருந்தனர். எல்லா வகை மிருகங்களும், எல்லாவகைப் பறவைகளும், எல்லாவகை ஊர்வனவும் கப்பலுக்குள் இருந்தன. 15 இவை எல்லாம் நோவாவோடு கப்பலுக்குள் சென்றன. அவைகள் எல்லா மிருக வகைகளிலிருந்தும் ஜோடி, ஜோடியாக வந்தன. 16 இந்த மிருகங்கள் எல்லாம் இரண்டு இரண்டாக, கப்பலுக்குள் சென்றன. தேவனுடைய ஆணையின்படியே அவை கப்பலுக்குள் சென்றன. பிறகு கர்த்தர் கப்பலின் கதவை அடைத்துவிட்டார்.
17 பூமியில் 40 நாட்கள் தொடர்ந்து வெள்ளம் பெருகியது. அவ்வெள்ளம் கப்பலைத் தரையிலிருந்து மேல் நோக்கிக் கிளப்பியது. 18 வெள்ளம் தொடர்ந்து ஏறியது. அதனால் கப்பல் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்தது. 19 உயரமான மலைகளும் மூழ்கும்படி வெள்ளம் உயர்ந்தது. 20 வெள்ளம் மலைகளுக்கு மேலும் உயர்ந்தது. அதன் உயரம் மலைகளுக்கு மேல் 20 அடி இருந்தது.
21-22 உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மரித்தன. எல்லா ஆண்களும் பெண்களும், பறவைகளும், எல்லா மிருகங்களும், எல்லா ஊர்வனவும் மரித்தன. தரையில் வாழக்கூடிய அனைத்து உயிர்களும் மரித்துப்போயின. 23 இவ்வாறு தேவன் பூமியை அழித்தார். தேவன் பூமியில் உயிருள்ள அனைத்தையும் மனிதன், மிருகம், ஊர்ந்து செல்லும் பிராணிகள், பறவைகள் உட்பட எல்லாவற்றையும் பூமியிலிருந்து முற்றிலுமாய் அழித்தார். நோவாவும் அவனது குடும்பத்தினரும் அவனோடு கப்பலிலிருந்த பறவைகளும், மிருகங்களும் மட்டுமே உயிர் பிழைத்தன. 24 வெள்ளமானது தொடர்ந்து 150 நாட்கள் பூமியில் பரவியிருந்தது.
வெள்ளப் பெருக்கின் முடிவு
8 ஆனால் தேவன் நோவாவை மறக்கவில்லை. தேவன் அவனையும் அவனது குடும்பத்தினரையும் அவனோடு கப்பலிலுள்ள விலங்குகளையும் நினைவுகூர்ந்தார். பூமியின்மீது காற்று வீசுமாறு செய்தார். தண்ணீரெல்லாம் மறையத்தொடங்கியது.
2 வானிலிருந்து பெய்த மழை நின்றது. 3-4 பூமியின் மீதிருந்த தண்ணீர் கீழே செல்லத் துவங்கியது. 150 நாட்கள் ஆனதும் மீண்டும் கப்பல் பூமியைத் தொடுகிற அளவிற்குக் குறைந்து போனது. கப்பல் அரராத் என்ற மலைமீது அமர்ந்தது. அது ஏழாவது மாதத்தின் 17வது நாள். 5 வெள்ளமானது மேலும் மேலும் கீழே போயிற்று. பத்தாவது மாதத்தின் முதல் நாளில் அனைத்து மலைகளின் மேல்பாகமெல்லாம் தெரிய ஆரம்பித்தது.
6 நாற்பது நாட்களுக்குப் பிறகு நோவா கப்பலின் ஜன்னலைத் திறந்து, 7 ஒரு காகத்தை வெளியே அனுப்பினான். அது பூமியிலுள்ள தண்ணீர் வற்றிப்போகும்வரை போவதும் வருவதுமாக இருந்தது. 8 நோவா ஒரு புறாவையும் வெளியே அனுப்பினான். அது தான் தங்கிட ஒரு வறண்ட இடத்தைக் கண்டுக்கொள்ளும் என எண்ணினான். இதன் மூலம் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டதா என்பதை அறிந்துகொள்ளலாம் என நினைத்தான்.
9 ஆனால் தண்ணீர் இன்னும் பூமியில் பரவியிருந்தது. எனவே புறா மீண்டும் கப்பலுக்கே திரும்பி வந்தது. நோவா அதனைத் தன் கையை நீட்டிப் பிடித்து கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான்.
10 ஏழு நாட்களானதும் நோவா மீண்டும் புறாவை அனுப்பினான். 11 அன்று மாலையில் அப்புறா மீண்டும் திரும்பி வந்தது. அதன் வாயில் ஒலிவ மரத்தின் புதிய இலை இருந்தது. இதன் மூலம் அவன் தண்ணீர் வற்றிவிட்டது என்பதை அறிந்துக்கொண்டான். 12 மேலும் 7 நாட்கள் ஆனதும் மீண்டும் புறாவை வெளியே அனுப்பினான். ஆனால் அது திரும்பி வரவே இல்லை.
13 அதன் பிறகு நோவா கப்பலின் கதவைத் திறந்தான். தரை காய்ந்துபோனதை நோவா தெரிந்துகொண்டான். இதுதான் அந்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளாக ஆயிற்று. நோவா 601 வயதுடையவன் ஆனான். 14 இரண்டாவது மாதத்தின் 27வது நாளில் தரை முழுவதும் நன்றாகக் காய்ந்துவிட்டது.
15 பிறகு தேவன் நோவாவிடம், 16 “நீயும் உன் மனைவியும் உன் மகன்களும் அவர்களின் மனைவியரும் இப்போது கப்பலை விட்டு வெளியே வாருங்கள். 17 உங்களோடுள்ள அனைத்தையும் வெளியே கொண்டு வாருங்கள். பறவைகள், விலங்குகள், ஊர்வன அனைத்தும் மீண்டும் குட்டிகளும் குஞ்சுகளும் இட்டு பூமியை நிரப்பட்டும்” என்றார்.
18 எனவே நோவா தன் மனைவி, மகன்கள், மருமகள்கள் ஆகியோரோடு வெளியே வந்தான். 19 கப்பலிலுள்ள அனைத்து மிருகங்களும் பறவைகளும் ஊர்வனவும் எல்லா விலங்கினங்களும் கப்பலை விட்டு ஜோடிகளாக வெளியே வந்தன.
20 பிறகு நோவா கர்த்தருக்கு ஓர் பலிபீடத்தைக் கட்டினான். அவன் பலிக்குரிய சுத்தமான மிருகங்களையும், பறவைகளையும் தேர்ந்தெடுத்து தேவனுக்குப் பலியிட்டான்.
21 கர்த்தர் அதன் வாசனையை முகர்ந்தார். அது அவருக்கு விருப்பமாக இருந்தது. கர்த்தர் தமக்குள், “மனிதர்களைத் தண்டிக்க நான் மீண்டும் இது போன்று பூமியைச் சபிக்கமாட்டேன். ஜனங்கள் இளமை முதலாகவே பாவத்தில் இருக்கிறார்கள். நான் செய்ததுபோல, மீண்டும் ஒருமுறை உயிர்களை அழிக்கமாட்டேன். 22 பூமி தொடர்ந்து இருக்கும் காலம்வரை நடுவதற்கென்று ஒரு காலமும், அறுவடைக்கென்று ஒரு காலமும் இருக்கும். பூமியில் குளிரும் வெப்பமும், கோடையும் வசந்தமும், இரவும் பகலும் இருக்கும்” என்றார்.
புதிய துவக்கம்
9 தேவன் நோவாவையும் அவனது பிள்ளைகளையும் ஆசீர்வதித்தார். தேவன் அவர்களிடம், “குழந்தைகளைப் பெற்று, ஜனங்களால் இப்பூமியை நிரப்புங்கள். 2 பூமியிலுள்ள அனைத்து மிருகங்களும், வானத்திலுள்ள அனைத்து பறவைகளும், தண்ணீரிலுள்ள அனைத்து மீன்களும், பிற அனைத்து ஊர்வனவும் உங்களைக் கண்டு அஞ்சும், அவை உங்கள் அதிகாரத்திற்குள் இருக்கும். 3 கடந்த காலத்தில் பச்சையான தாவரங்களை உங்களுக்கு உணவாகக் கொடுத்தேன். இப்போது அனைத்து மிருகங்களும் உங்களுக்கு உணவாகட்டும். உலகிலுள்ள அனைத்தும் உங்களுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4 ஆனால் உங்களுக்கு ஒரு ஆணை இடுகிறேன். இறைச்சியை அதின் உயிராகிய இரத்தத்துடன் உண்ணாதீர்கள். 5 நான் உங்களது உயிருக்காக உங்களது இரத்தத்தைக் கேட்பேன். அதாவது ஒரு மனிதனைக் கொல்லுகிற விலங்கின் இரத்தத்தைக் கேட்பேன். மேலும் மற்றொரு மனிதனைக் கொல்லுகிற மனிதனின் இரத்தத்தைக் கேட்பேன்.
6 “தேவன் மனிதனைத் தமது சாயலாகவேப் படைத்தார்.
எனவே மற்றவனைக் கொல்லுகிற எவனும் இன்னொருவரால் கொல்லப்பட வேண்டும்.
7 “நோவா, நீயும் உன் மகன்களும் குழந்தைகளைப் பெற்று, உங்கள் ஜனங்களால் பூமியை நிரப்புங்கள்” என்றார்.
8 பிறகு தேவன் நோவாவிடமும் அவனது பிள்ளைகளிடமும், 9 “நான் உங்களோடும் உங்களுக்குப் பின்னுள்ள வாரிசுகளோடும், 10 உங்களோடு கப்பலிலே இருந்த பறவைகளோடும் மிருகங்களோடும் ஊர்வனவற்றோடும் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் எனது உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்கிறேன். 11 வெள்ளப்பெருக்கால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்பட்டன. ஆனால் மீண்டும் இது போல் நடைபெறாது. இன்னொரு வெள்ளப் பெருக்கு பூமியில் உள்ள உயிர்களை அழிக்காது” என்றார்.
12 மேலும் தேவன், “உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு அடையாளமாக ஒன்றை உங்களுக்குத் தருகிறேன். உன்னோடும் பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரோடும் நான் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அது அத்தாட்சியாக இருக்கும். இந்த உடன்படிக்கை இனிவரும் எல்லாக் காலத்துக்கும் உரியதாக இருக்கும். இதுவே அந்த அத்தாட்சி. 13 மேகங்களுக்கு இடையே ஒரு வானவில்லை உருவாக்கி உள்ளேன். எனக்கும் பூமிக்குமான உடன்படிக்கைக்கு இதுவே அத்தாட்சி. 14 பூமிக்கு மேலாய் மேகங்களைக் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் அதில் வானவில்லைப் பார்க்கலாம். 15 வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் நான் எனக்கும் உங்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை நினைத்துக்கொள்வேன். அந்த உடன்படிக்கை இனி ஒரு வெள்ளப் பெருக்கு உலகில் தோன்றி இங்குள்ள உயிர்களை அழிக்காது என்று கூறுகிறது. 16 மேகங்களுக்கிடையில் நான் வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் பூமியின் மீதுள்ள அனைத்து உயிர்களுக்குமிடையிலான நிரந்தரமான உடன்படிக்கையை நினைத்துக்கொள்வேன்.”
17 “நான் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அத்தாட்சியாக வானவில் விளங்குகிறது” என்றார்.
பிரச்சனைகள் மீண்டும் தோன்றுதல்
18 நோவாவின் மகன்கள் கப்பலைவிட்டு வெளியே வந்தனர். அவர்களின் பெயர் சேம், காம், யாப்பேத் ஆகும். காம், கானானின் தந்தை. 19 இந்த மூன்று பேரும் நோவாவின் மகன்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களும் அவர்களது வம்சமேயாகும்.
20 நோவா ஒரு விவசாயி ஆனான். அவன் ஒரு திராட்சைத் தோட்டத்தைப் பயிர் செய்தான். 21 நோவா அதில் திராட்சை ரசத்தைச் செய்து குடித்தான். அவன் போதையில் தன் கூடாரத்தில் ஆடையில்லாமல் விழுந்து கிடந்தான். 22 கானானின் தந்தையான காம் ஆடையற்ற தனது தந்தையைப் பார்த்து அதைக் கூடாரத்திற்கு வெளியே இருந்த தன் சகோதரர்களிடம் சொன்னான். 23 சேமும் யாப்பேத்தும் ஒரு ஆடையை எடுத்து தங்கள் முதுகின் மேல் போட்டுக்கொண்டு பின்னால் நடந்து கூடாரத்திற்குள் நுழைந்து அதைத் தங்கள் தகப்பன் மேல் போட்டார்கள். இவ்வாறு தந்தையின் நிர்வாணத்தைப் பார்க்காமல் தவிர்த்தார்கள்.
24 திராட்சை ரசத்தைக் குடித்ததினால் தூங்கிய நோவா எழுந்ததும் தனது இளைய மகனான காம் செய்தது அவனுக்குத் தெரியவந்தது. 25 எனவே அவன்,
“கானான் சபிக்கப்பட்டவன்.
அவன் தன் சகோதரர்களுக்கு அடிமையிலும் அடிமையாக இருப்பான்” என்றான்.
26 மேலும்,
“சேமுடைய தேவனாகிய கர்த்தர் துதிக்கப்படுவாராக.
கானான் சேமுடைய அடிமையாய் இருப்பான்.
27 தேவன் யாப்பேத்துக்கு மேலும் நிலங்களைக் கொடுப்பார்.
தேவன் சேமுடைய கூடாரத்தில் இருப்பார்.
இவர்களின் அடிமையாகக் கானான் இருப்பான்” என்றான்.
28 வெள்ளப் பெருக்குக்குப் பிறகு நோவா 350 ஆண்டுகள் வாழ்ந்தான். 29 அவன் மொத்தம் 950 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.
ஸ்நானகன் யோவானின் திருப்பணி(A)
3 அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் யூதேயாவின் வனாந்தரத்தில் வருகை புரிந்து, 2 ,“உங்கள் மனதையும் வாழ்வையும் சீர்ப்படுத்துங்கள். ஏனென்றால் பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று போதனை செய்தான்.
3 ,“‘கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள்;
அவரது பாதையை சீர்ப்படுத்துங்கள்’
என்று வனாந்தரத்தில் ஒருவன் சத்தமிடுகிறான்” (B)
என தீர்க்கதரிசியாகிய ஏசாயா குறிப்பிட்டது இந்த யோவான் ஸ்நானகனைப் பற்றிதான்.
4 ஒட்டக உரோமத்தால் ஆன ஆடையை அணிந்து தோல் கச்சையொன்றைத் தன் இடுப்பில் இவன் கட்டியிருந்தான். வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவன் உணவாயிருந்தன. 5 யோவானின் போதனையைக் கேட்க எருசலேமிலிருந்தும் யூதேயா முழுவதிலிருந்தும் யோர்தான் நதிக்கரை முழுவதிலிருந்தும் மக்கள் வந்தனர். 6 அம்மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கைச் செய்தனர். யோவான் அவர்களுக்கு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் கொடுத்தான்.
7 ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்கு பரிசேயர் மற்றும் சதுசேயரில் பலரும் வந்தனர். அவர்களைக் கண்டதும் யோவான்,, “நீங்களெல்லோரும் பாம்பின் குட்டிகள். வரப்போகும் தேவனின் கோபத்திலிருந்து தப்பிச்செல்ல உங்களை எச்சரித்தது யார்? 8 உங்கள் மனமும் வாழ்வும் திருந்திவிட்டன என்பதை நிரூபிக்கக் கூடிய செயலை நீங்கள் செய்யவேண்டும். 9 நாம் ஆபிரகாமின் பிள்ளைகள் எனப் பெருமை பேசித் திரியலாம் என எண்ணாதீர்கள். நான் சொல்கிறேன், ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை இங்குள்ள கற்களிலிருந்தும் உண்டாக்க தேவன் வல்லவர். 10 மரங்களை வெட்டக் கோடரி தயாராக இருக்கிறது. நற்கனிகளைத் தராத எல்லா மரங்களும் வெட்டப்பட்டுத் தீயிலிடப்படும்.
11 ,“உங்கள் மனமும் வாழ்வும் திருந்திவிட்டன என்பதைக் காட்ட நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் தருகிறேன். ஆனால், என்னிலும் பெரியவர் ஒருவர் வரப்போகிறார். அவர் காலணிகளை அவிழ்க்கவும் நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 12 அவர் தானியங்களைச் சுத்தம் செய்யத் தயாராக வருவார். அவர் பதரிலிருந்து நல்ல தானிய மணிகளைப் பிரித்தெடுத்துத் தன் களஞ்சியத்தில் சேர்ப்பார். பதரையோ அணைந்து போகாத தீயிலிட்டு எரிப்பார்” என்றான்.
இயேசுவின் ஞானஸ்நானம்(C)
13 அப்பொழுது இயேசு கலிலேயாவிலிருந்து யோர்தான் நதிக்கரைக்கு வந்தார். இயேசு யோவானிடம் சென்று தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கேட்டார். 14 ஆனால் யோவானோ இயேசுவுக்குத் தான் ஞானஸ்நானம் கொடுக்குமளவுக்கு மேன்மையானவன் அல்ல என்று அவரைத் தடுக்க முயன்றான். எனவே யோவான் இயேசுவிடம்,, “நீர் என்னிடம் ஞானஸ்நானம் பெறலாகுமோ? நான்தான் உம்மிடம் ஞானஸ்நானம் பெறவேண்டும்” என்றான்.
15 அதற்கு இயேசு,, “தற்பொழுது நான் சொல்லுகிறபடியே செய். தேவன் எதிர்பார்க்கும் நீதியான செயல்கள் அனைத்தையும் நான் செய்ய வேண்டும்” என்று பதில் சொன்னார். ஆகவே, யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கச் சம்மதித்தான்.
16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, நீரிலிருந்து மேலெழுந்து வந்தபோது, வானம் திறந்து, தேவ ஆவியானவர் ஒரு புறாவைப் போலக் கீழிறங்கி அவரிடம் வருவதைக் கண்டார். 17 வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அக்குரல்,, “இவர் (இயேசு) என் குமாரன். நான் இவரை நேசிக்கிறேன். நான் இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன்” எனக் கூறியது.
2008 by World Bible Translation Center