Old/New Testament
நல்ல அத்திகளும் கெட்ட அத்திகளும்
24 கர்த்தர் என்னிடம் இவற்றைக் காட்டினார்: கர்த்தருடைய ஆலயத்திற்கு முன்பு இரண்டு கூடைகள் நிறைய அத்திப்பழங்கள் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். (பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சர் எகொனியாவைச் சிறைபிடித்துச் சென்றபின் இக்காட்சியைக் கண்டேன். எகொனியா, யோகாக்கீம் ராஜாவின் குமாரனாவான். எருசலேமிலிருந்து எகொனியாவையும் அவனது அதிகாரிகளையும் அழைத்துச் சென்றனர். அவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நேபுகாத்நேச்சார் யூதாவிலுள்ள அனைத்து தச்சர்களையும் கொல்லர்களையும் கொண்டு சென்றான்.) 2 ஒரு கூடையில் நல்ல அத்திப் பழங்கள் இருந்தன. அந்த அத்திப் பழங்கள் பருவத்தின் முதலில் பறித்த நல்லப் பழங்களாய் இருந்தன. ஆனால், அடுத்தக் கூடையில் அழுகிய பழங்கள் இருந்தன. அவை உண்ண முடியாத அளவிற்கு மிகவும் அழுகியதாக இருந்தன.
3 கர்த்தர் என்னிடம், “நீ என்ன பார்க்கிறாய், எரேமியா?” என்று கேட்டார்.
நான், “நான் அத்திப் பழங்களைப் பார்க்கிறேன். நல்லப் பழங்கள் மிகவும் நன்றாக உள்ளன. அழுகிய பழங்கள் மிகவும் அழுகியதாக உள்ளன. அவை உண்ண முடியாத அளவிற்கு அழுகியுள்ளன” என்று பதில் சொன்னேன்.
4 பிறகு, கர்த்தரிடமிருந்து எனக்கு வார்த்தை வந்தது. 5 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறினார், “யூதாவின் ஜனங்கள் அவர்களின் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் பகைவர்கள் அவர்களைப் பாபிலோனுக்குக் கொண்டு வந்தனர். அந்த ஜனங்கள் இந்த நல்ல அத்திப்பழங்களைப் போன்றவர்கள். நான் அந்த ஜனங்களிடம் இரக்கத்துடன் இருப்பேன். 6 நான் அவர்களைக் காப்பாற்றுவேன். நான் அவர்களை யூதா நாட்டிற்குக் கொண்டு வருவேன். நான் அவர்களைக் கிழித்துப் போடமாட்டேன். நான் அவர்களைக் கட்டுவேன். நான் அவர்களை பிடுங்கமாட்டேன். நான் அவர்களை நட்டுவைப்பேன். அதனால் அவர்கள் வளர முடியும். 7 நான் அவர்களை என்னை அறிந்துக்கொள்ள விரும்புமாறு செய்வேன். நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால், பாபிலோனில் உள்ள அதிகாரிகள் தம் முழு மனதோடு என்னிடம் திரும்புவார்கள்.”
8 “ஆனால் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா உண்ண முடியாத அளவிற்கு அழுகிப்போன அத்திப்பழங்களைப் போன்றவன். சிதேக்கியா, அவனது உயர் அதிகாரிகள் எருசலேமில் விடப்பட்ட ஜனங்கள் மற்றும் எகிப்தில் வாழும் யூதாவிலுள்ள ஜனங்கள் அனைவரும் அழுகிய அத்திப்பழங்களைப் போன்றவர்கள். 9 நான் அந்த ஜனங்களைத் தண்டிப்பேன். பூமியிலுள்ள அனைத்து ஜனங்களையும் அது அதிர்ச்சிப்படுத்தும். யூதாவிலிருந்து வந்த ஜனங்களை மற்ற ஜனங்கள் பரிகாசம் செய்வார்கள். நான் சிதறடித்த அவர்களை, எல்லா இடங்களிலும் ஜனங்கள் சபிப்பார்கள். 10 நான் அவர்களுக்கு எதிராக வாள், பசி, நோய் ஆகியவற்றை அனுப்புவேன். நான், அவர்கள் அனைவரும் அழிக்கப்படும்வரை தாக்குவேன். நான் அவர்களுக்கும் அவர்களது முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டில் அவர்கள் என்றும் இல்லாமல் போவார்கள்.”
எரேமியாவின் பிரசங்கத்தின் சுருக்கம்
25 யூதாவின் ஜனங்களைக் குறித்து எரேமியாவிற்கு வந்த வார்த்தை இதுதான். யூதாவின் ராஜாவாக யோயாக்கீம் ஆண்ட நான்காவது ஆண்டில் இந்த வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் குமாரன். அவன் ராஜாவாகிய நான்காவது ஆண்டு, பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு முதல் ஆண்டாக இருந்தது. 2 எருசலேமிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் எரேமியா தீர்க்கதரிசி பேசிய செய்தி இதுதான். 3 கடந்த 23 ஆண்டுகளாக நான் மீண்டும், மீண்டும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்திருக்கிறேன். ஆமோனின் குமாரனான யோசியா யூதாவில் ராஜாவாக 13 ஆண்டுகளானதை தொடர்ந்து நானும் தீர்க்கதரிசியாக இருக்கிறேன். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை உங்களுக்கு கர்த்தரிடமிருந்து செய்தியை நான் சொல்லி வருகிறேன். ஆனால் நீங்கள் கவனிக்கவில்லை. 4 கர்த்தர் அவரது வேலைக்காரராகிய தீர்க்கதரிசிகளை உங்களிடம் மீண்டும், மீண்டும் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். ஆனால் நீங்கள் அவர்களை கவனிக்கவில்லை. நீங்கள் அவர்களிடம் எவ்வித கவனமும் செலுத்தவில்லை.
5 அத்தீர்க்கதரிசிகள், “உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள். அத்தீயச் செயல்களைச் செய்வதை நிறுத்துங்கள்! நீங்கள் மாறினால், பிறகு, கர்த்தர் உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் நீண்ட காலத்திற்கு முன்பே கொடுத்த நாட்டிற்குத் திரும்பி வருவீர்கள். அவர் அந்த நாட்டை நீங்கள் என்றென்றும் வாழும்படி தந்தார். 6 அந்நிய தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். அவர்களைத் தொழுதுகொள்ளவோ அவர்களுக்கு சேவைசெய்யவோ வேண்டாம். யாரோ ஒருவர் செய்த விக்கிரகங்களைத் தொழுதுகொள்ள வேண்டாம். அது உங்கள் மீது எனக்குக் கோபத்தை மட்டும் ஊட்டும். இவ்வாறு செய்வது உங்களை மட்டுமே பாதிக்கும்.”
7 “ஆனால் நீங்கள் என்னை கவனிக்கவில்லை” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “யாரோ ஒருவரால் செய்யப்பட்ட விக்கிரகங்களை நீங்கள் தொழுதுகொண்டீர்கள். அது என்னைக் கோபங்கொள்ளச் செய்தது. அது உங்களையே பாதித்தது.”
8 எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது இதுதான்: “நீங்கள் எனது வார்த்தைகளை கவனித்துக்கொள்ளவில்லை. 9 எனவே நான் வடக்கில் உள்ள அனைத்து கோத்திரங்களையும் அனுப்புவேன்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் விரைவில் பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை அனுப்புவேன். அவன் எனது தாசன். நான் அவர்களை யூதா நாட்டிற்கும் யூதாவின் ஜனங்களுக்கும் எதிராக அனுப்புவேன். உங்களைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும் எதிராக அவர்களைக் கொண்டு வருவேன். அந்நாடுகளை எல்லாம் நான் அழிப்பேன். அந்நாடுகளை நான் என்றென்றும் வனாந்தரமாகும்படிச் செய்வேன். அந்நாடுகளை எல்லாம் ஜனங்களை பார்த்து அவை எவ்வாறு அழிக்கப்பட்டன என்று இகழ்ச்சியாக பிரமித்துப் பேசிக்கொள்வார்கள். 10 அவ்விடங்களில் உள்ள மகிழ்ச்சியான மற்றும் சந்தோஷமான ஓசைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவேன். அங்கு இனிமேல் மணமகள் மற்றும் மணமகன்களின் மகிழ்ச்சி ஆராவாரம் இருக்காது. ஜனங்கள் உணவுப் பொருளை அரைக்கும் ஒலியை எடுத்துவிடுவேன். விளக்கு ஒளியையும் நான் எடுத்துவிடுவேன். 11 அந்த இடம் முழுவதும் காலியான வனாந்தரம்போன்று ஆகும். அந்த ஜனங்கள் அனைவரும் பாபிலோன் ராஜாவுக்கு 70 ஆண்டுகளுக்கு அடிமைகளாக இருப்பார்கள்.
12 “ஆனால் 70 ஆண்டுகள் ஆனதும் நான் பாபிலோன் ராஜாவைத் தண்டிப்பேன். நான் பாபிலோன் நாட்டையும் தண்டிப்பேன்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் பாபிலோனியர் நாட்டை அவர்களது பாவங்களுக்காகத் தண்டிப்பேன். நான் அந்த நாட்டினை என்றென்றும் வனாந்தரமாக்குவேன். 13 நான் பாபிலோனுக்குப் பல தீமைகள் வரும் என்று சொல்லி இருந்தேன். அவை அனைத்தும் ஏற்படும். எரேமியா அந்த அயல் நாடுகளைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்னான். அந்த எச்சரிக்கைகள் எல்லாம் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. 14 ஆம். பாபிலோனில் உள்ள ஜனங்கள் பல நாடுகளுக்கும் பல பெரிய ராஜாக்களுக்கும் சேவை செய்வார்கள். அவர்கள் செய்யப் போகும் அனைத்துச் செயல்களுக்கும் உரிய தண்டனையை நான் கொடுப்பேன்.”
உலகிலுள்ள நாடுகளுக்கான தீர்ப்புகள்
15 கர்த்தரும் இஸ்ரவேலின் தேவனுமாகிய கர்த்தர் என்னிடம் சொன்னது: “எரேமியா, எனது கையிலுள்ள ஒரு கோப்பைத் திராட்சைரசத்தை எடுத்துக்கொள். இது எனது கோபமாகிய திராட்சைரசம். நான் உன்னை வேறுபட்ட நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன். இந்தக் கோப்பையிலிருந்து குடிக்குமாறு அந்நாடுகளைச் செய். 16 அவர்கள் இந்தத் திராட்சைரசத்தைக் குடிக்கட்டும். பிறகு அவர்கள் வாந்தி எடுத்து புத்திகெட்டவர்களைப் போல் நடப்பார்கள். அவர்கள் இதனைச் செய்வார்கள். ஏனென்றால், அவர்களுக்கு எதிராக நான் பட்டயத்தை விரைவில் அனுப்புவேன்.”
17 எனவே, கர்த்தருடைய கையிலிருந்த திராட்சைரசக் கோப்பையை நான் எடுத்துக்கொண்டு, கர்த்தர் என்னை அனுப்பிய எல்லா நாடுகளுக்கும் நான் சென்றேன். ஜனங்களை அக்கோப்பையிலிருந்து குடிக்கும்படிச் செய்தேன். 18 நான் இந்தத் திராட்சை ரசத்தை எருசலேம் மற்றும் யூதா ஜனங்களுக்கு ஊற்றினேன். யூதா ராஜாக்களையும் தலைவர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். நான் இதனைச் செய்தேன். எனவே அவர்கள் காலியான வனாந்தரமாவார்கள். நான் இதனைச் செய்தேன். எனவே, அந்த இடம் மிக மோசமாக அழிக்கப்படும். ஜனங்கள் அதைப்பற்றி இகழ்ச்சியாகப் பேசி பிரமிப்பார்கள். அந்த இடத்தை சபிப்பார்கள். இது நிகழ்ந்தது. யூதா இப்பொழுது அப்படித்தான் இருக்கிறது.
19 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனையும் அக்கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். கர்த்தருடைய கோபமாகிய கோப்பையை அவனது அதிகாரிகள், அவனது முக்கியமான தலைவர்கள் மற்றும் அவனது அனைத்து ஜனங்கள் ஆகியோரைக் குடிக்கச் செய்தேன்.
20 அரேபியர்கள் அனைவரையும் ஊத்ஸ் நாட்டிலுள்ள எல்லா ராஜாக்களையும் அக்கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். பெலிஸ்தியர்களின் நாட்டிலுள்ள அனைத்து ராஜாக்களையும் கோப்பையிலிருந்து குடிக்க வைத்தேன். அஸ்கலோன், காசா, எக்ரோன், அஸ்தோத் ஆகிய நகரங்களில் உள்ள ராஜாக்கள் அவர்கள்.
21 பிறகு, நான் ஏதோம், மோவாப், அம்மோன் ஆகிய ஜனங்களை கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன்.
22 தீரு மற்றும் சீதோனிலுள்ள அனைத்து ராஜாக்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன்.
தொலைதூர நாடுகளிலுள்ள ராஜாக்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். 23 தேதான், தேமா, பூசு ஆகிய ஜனங்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். தங்கள் நெற்றிப்பக்கங்களில் தலைமுடியை வெட்டிக்கொண்ட அனைவரையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். 24 அரபியாவிலுள்ள அனைத்து ராஜாக்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். இந்த ராஜாக்கள் வனாந்தரங்களில் வாழ்கிறார்கள். 25 சிம்ரி, ஏலாம், மேதியா ஆகிய நாடுகளிலுள்ள அனைத்து ராஜாக்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். 26 வடநாட்டிலுள்ள அருகிலும் தொலைவிலுமுள்ள அனைத்து ராஜாக்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். அவர்களை ஒருவருக்குப் பின் ஒருவராகக் குடிக்கச் செய்தேன். பூமியிலுள்ள அனைத்து ராஜ்யங்களையும் கர்த்தருடைய கோபமாகிய கோப்பையைக் குடிக்கும்படிச் செய்தேன். ஆனால், “சேசாக்கு” (பாபிலோன்) ராஜா அனைத்து நாடுகளுக்கும் பிறகு, இக்கோப்பையிலிருந்து குடிப்பான்.
27 “எரேமியா, அந்நாடுகளிடம் சொல். இதுதான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் சொல்கிறது, ‘எனது கோபமாகிய இக்கோப்பையைக் குடி. இதிலிருந்து குடி. வாந்தி எடு! கீழே விழு. எழவேண்டாம். ஏனென்றால் உன்னைக் கொல்ல ஒரு பட்டயத்தை அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.’
28 “அந்த ஜனங்கள் உமது கையிலிருந்து கோப்பையை எடுத்துக்கொள்ள மறுப்பார்கள். அவர்கள் அதைக் குடிக்க மறுப்பார்கள். ஆனால் நீ அவர்களிடம், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: நீங்கள் இக்கோப்பையிலிருந்து குடித்துத்தீர வேண்டும்! 29 எனது நாமத்தால் அழைக்கப்படுகிற எருசலேம் நகரத்திற்கு நான் ஏற்கனவே இத்தீமைகளை ஏற்படுத்திவிட்டேன். நீங்கள் தண்டிக்கப்படாமல் இருக்கலாம் என்று ஒரு வேளை நினைக்கலாம். ஆனால் நீங்கள் நினைப்பது தவறு. நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களையும் தாக்க நான் ஒரு வாளை அழைத்துக்கொண்டிருக்கிறேன்’ என்கிறார்” என்பாய். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
30 “எரேமியா, நீ அவர்களுக்கு இச்செய்தியைக் கொடுப்பாய்,
“‘கர்த்தர் மேலிருந்து சத்தமிடுகிறார்.
அவர் அவரது பரிசுத்தமான ஆலயத்தில் இருந்து சத்தமிடுகிறார்!
கர்த்தர் அவரது மேய்ச்சலிடம் (ஜனங்களிடம்) சத்தமிடுகிறார்!
அவரது சத்தங்கள் திராட்சைப்பழங்களில் ரசமெடுக்க நடப்பவர்களின் பாடலைப்போன்று சத்தமாக இருக்கிறது.
31 பூமியிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் அச்சத்தம் பரவுகிறது.
அனைத்து சத்தம் எதைக் குறித்துள்ளது?
எல்லா நாடுகளில் உள்ள ஜனங்களையும் கர்த்தர் தண்டித்துக்கொண்டிருக்கிறார்.
கர்த்தர் ஜனங்களுக்கு எதிராக தம் வாதங்களைச் சொன்னார்.
அவர் ஜனங்களை நியாயந்தீர்த்தார்.
இப்பொழுது அவர் தீய ஜனங்களை பட்டயத்தால் கொன்றுக்கொண்டிருக்கிறார்’”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
32 இதைத்தான் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“நாடுவிட்டு நாடு பேரழிவு விரைவில் பரவும்.
அவை ஒரு வல்லமை வாய்ந்த
புயலைப் போன்று பூமியிலுள்ள
எல்லா தொலைதூர இடங்களுக்கும் பரவும்!”
33 நாட்டின் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு ஜனங்களின் மரித்த உடல்கள் போய்ச் சேரும். மரித்த ஜனங்களுக்காக எவரும் அழமாட்டார்கள். எவரும் அந்த உடல்களை சேகரித்து அடக்கம் செய்யமாட்டார்கள். அவை தரையில் எருவைப்போன்று கிடக்குமாறு விடப்படும்.
34 மேய்ப்பர்களே (தலைவர்களே) நீங்கள் ஆடுகளை (ஜனங்களை) வழிநடத்தவேண்டும்.
பெருந்தலைவர்களே, நீங்கள் கதறத் தொடங்குங்கள்.
வலியில் தரை மீது உருளுங்கள்,
ஆடுகளின் (ஜனங்களின்) தலைவர்களே.
ஏனென்றால், இது உங்களை வெட்டுவதற்கான காலம்.
எங்கும் சிதறிப்போகும், உடைந்த ஜாடியின் துண்டுகளைப்போன்று, கர்த்தர் உங்களை முறித்து சிதறடிப்பார்.
35 மேய்ப்பர்கள் ஒளிந்துக்கொள்ள எங்கும் இடமில்லை.
அத்தலைவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.
36 நான் மேய்ப்பர்கள் (தலைவர்கள்) சத்தமிடுவதைக் கேட்கிறேன்.
ஆடுகளின் (ஜனங்கள்) தலைவர்களின் புலம்பலை நான் கேட்கிறேன்.
கர்த்தர் மேய்ச்சலிடங்களை (நாட்டை) அழித்துக்கொண்டிருக்கிறார்.
37 அந்த சமாதானமான மேய்ச்சல் நிலங்கள் (அரண்மனைகள்) அழிக்கப்பட்டு காலியான வனாந்தரங்ளைப்போன்று ஆனது.
இது நிகழ்ந்தது.
ஏனென்றால், கர்த்தர் கோபமாக இருக்கிறார்.
38 கர்த்தர், தன் குகையை விட்டு வெளியே வரும் ஆபத்தான சிங்கத்தைப்போன்று இருக்கிறார்.
கர்த்தர் கோபமாக இருக்கிறார்!
அந்த கோபம் அந்த ஜனங்களைப் பாதிக்கும்.
அவர்களின் நாடு காலியான வனாந்தரம்போன்று ஆகும்.
ஆலயத்தில் எரேமியாவின் பாடம்
26 யூதாவின் ராஜாவாக யோயாக்கீம் வந்த முதலாம் ஆட்சி ஆண்டில் கர்த்தரிடமிருந்து இந்த வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் குமாரனாக இருந்தான். 2 கர்த்தர், “எரேமியா, கர்த்தருடைய ஆலயப் பிரகாரத்தில் எழுந்து நில். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தொழுதுகொள்ள வரும் யூதாவின் ஜனங்கள் அனைவரிடமும் இந்த வார்த்தையைக் கூறு. நான் சொல்லச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல். எனது வார்த்தையில் எந்தப் பகுதியையும் விட்டுவிடாதே. 3 ஒருவேளை எனது வார்த்தையை அவர்கள் கேட்டு அதற்கு அடிபணியலாம். ஒருவேளை அவர்கள் தமது தீயவாழ்வை நிறுத்தலாம். அவர்கள் மாறினால், பிறகு நான் அவர்களைத் தண்டிப்பதற்காக வைத்திருக்கும் திட்டங்களையும் மாற்றுவேன். அந்த ஜனங்கள் ஏற்கனவே செய்த தீயச்செயல்களுக்காகத்தான் நான் அவர்களைத் தண்டிக்க வேண்டும் எனத் திட்டமிட்டேன். 4 நீ அவர்களிடம் சொல்லுவாய், ‘இதுதான் கர்த்தர் சொன்னது: நான் உங்களிடம் எனது போதனைகளைக் கொடுத்தேன். நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து, என் போதனைகளைப் பின்பற்றவேண்டும். 5 எனது ஊழியக்காரர்கள் சொல்லுகிறவற்றை நீங்கள் கேட்க வேண்டும் (தீர்க்கதரிசிகள் எனது ஊழியக்காரர்கள்). நான் தீர்க்கதரிசிகளை மீண்டும், மீண்டும் உங்களிடம் அனுப்பியிருக்கிறேன். ஆனால் நீங்கள் அவர்களை கவனிக்கவில்லை. 6 நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாவிட்டால், பிறகு நான் எருசலேமிலுள்ள என் ஆலயத்தை, சீலோவிலுள்ள எனது பரிசுத்தக் கூடாரத்தைப் போன்றுச் செய்வேன். உலகம் முழுவதிலும் உள்ள ஜனங்கள், மற்ற நகரங்களுக்குக் கேடுகள் ஏற்படும்படி வேண்டும்போது எருசலேமை நினைத்துக்கொள்வார்கள்’” என்றார்.
7 ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் மற்றும் அனைத்து ஜனங்களும் எரேமியா கர்த்தருடைய ஆலயத்தில் இவ்வார்த்தைகளைச் சொல்வதைக் கேட்டனர். 8 கர்த்தர் கட்டளை இட்டிருந்தபடி ஜனங்களிடம் சொல்ல வேண்டியவற்றையெல்லாம் எரேமியா சொல்லிமுடித்தான். பிறகு ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் அனைத்து ஜனங்களும் எரேமியாவைப் பிடித்தனர். அவர்கள் “இத்தகைய பயங்கரமானவற்றை நீ சொன்னதற்காக மரிக்க வேண்டும்” என்றனர். 9 “கர்த்தருடைய நாமத்தால் இத்தகைய பயங்கரமானவற்றைச் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும். இவ்வாலயம் சீலோவிலுள்ளதைப்போன்று அழிக்கப்படும் என்று சொல்ல எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும். இந்த ஜனங்களும் வாழாதபடி எருசலேம் வனாந்தரமாகிவிடும் என்று எப்படி தைரியமாக சொல்வாய்?” என்றனர். ஜனங்கள் எல்லோரும் கர்த்தருடைய ஆலயத்தில் எரேமியாவைச் சுற்றிக்கூடினார்கள்.
10 இங்கு நடந்த அனைத்தையும் யூதாவை ஆள்பவர்கள் கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் ராஜாவின் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் புதிய வாயிலின் முகப்பில் தங்கள் இடத்தில் அமர்ந்தனர். புதிய வாசல் கர்த்தருடைய ஆலயத்திற்குள் வழிநடத்தும் வாசல். 11 பிறகு ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் ஆள்வோர்களிடமும் ஜனங்களிடமும் பேசினார்கள். அவர்கள், “எரேமியா கொல்லப்படவேண்டும். அவன் எருசலேமைப்பற்றி கெட்டவற்றைக் கூறினான். அவன் சொன்னவற்றையெல்லாம் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்” என்றனர்.
12 பிறகு எரேமியா, யூதாவின் ஆள்வோர்களிடமும் மற்ற ஜனங்களிடமும் பேசினான். அவன், சொன்னான், “இவ்வாலயம் மற்றும் நகரைப்பற்றி இவற்றைச் சொல்ல என்னை கர்த்தர் அனுப்பினார். நீங்கள் கேட்ட அனைத்தும் கர்த்தரிடமிருந்து வந்தது. 13 ஜனங்களே, உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்! நல்லவற்றைச் செய்யத் தொடங்குங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்தால், கர்த்தர் தமது மனதை மாற்றுவார். உங்களுக்குச் சொன்ன தீயச் செயல்களை கர்த்தர் செய்யமாட்டார். 14 என்னைப் பொறுத்தவரை, நான் உங்கள் அதிகாரத்தில் இருக்கிறேன். நீங்கள் உங்களுக்குத் தோன்றினபடி நல்லது என்று எதை எண்ணுகிறீர்களோ அதை எனக்குச் செய்யுங்கள். 15 ஆனால் நீங்கள் என்னைக் கொன்றால், ஒன்றை உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள். ஒரு அப்பாவி மனிதனைக் கொன்ற குற்றம் உங்களைச் சேரும். நீங்கள் இந்த நகரத்தையும் இதில் வாழும் ஜனங்களையும் குற்றமுடையவர்களாக ஆக்குகிறீர்கள். உண்மையாகவே கர்த்தர் என்னை உங்களிடம் அனுப்பினார். உண்மையாகவே நீங்கள் கேட்ட செய்திகள் எல்லாம் கர்த்தருடையவை.”
16 பிறகு, ஆள்வோர்களும் அனைத்து ஜனங்களும் பேசினார்கள். அந்த ஜனங்கள் ஆசாரியர்களிடமும் தீர்க்கதரிசிகளிடமும் பேசினார்கள். “எரேமியா கொல்லப்படக் கூடாது. எரேமியா சொன்னவை எல்லாம் நமது தேவனாகிய கர்த்தரிடமிருந்து வந்தது.”
17 பிறகு, சில மூப்பர்கள் (தலைவர்கள்) எழுந்து, அனைத்து ஜனங்களிடமும் பேசினார்கள். 18 அவர்கள், “மொரேசா நகரிலிருந்து மீகா என்னும் தீர்க்கதரிசி வந்தான். யூதாவின் ராஜாவாக எசேக்கியா இருந்த காலத்தில், மீகா தீர்க்கதரிசியாக இருந்தான். யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் மீகா இச்செய்திகளைக் கூறினான். ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“‘சீயோன் அழிக்கப்படும்.
அது உழப்பட்ட வயல்போன்று ஆகும்.
எருசலேம் பாறைகளின் குவியலாகும்.
ஆலயம் இருக்கிற குன்றானது புதர்கள் மூடின ஒரு காலி குன்றாகும்.’ (A)
19 “எசேக்கியா யூதாவின் ராஜாவாக இருந்தான். எசேக்கியா மீகாவைக் கொல்லவில்லை. யூதாவிலுள்ள எந்த ஜனங்களும் மீகாவைக் கொல்லவில்லை. எசேக்கியா கர்த்தரை மதித்தான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பினான். யூதாவிற்குத் தீமை செய்வேன் என்று கர்த்தர் கூறியிருந்தார். ஆனால் எசேக்கியா கர்த்தரிடம் ஜெபித்தான். கர்த்தர் அவரது மனதை மாற்றிக்கொண்டார். கர்த்தர் அந்தத் தீமைகளைச் செய்யவில்லை. நாம் எரேமியாவைத் தாக்கினால் நமக்கு நாமே பல தொல்லைகளை வரவழைத்துக்கொண்டவர்களாவோம். அத்தொல்லைகளுக்கு நாமே காரணம் ஆவோம்.”
20 கடந்த காலத்தில், கர்த்தருடைய வார்த்தையைப் பிரச்சாரம் செய்ய இன்னொரு மனிதன் இருந்தான். அவனது பெயர் உரியா. அவன் செமாயாவின் குமாரன். உரியா கீரியாத்யாரீம் என்ற ஊரைச் சேர்ந்தவன். எரேமியா செய்ததுபோன்றே அவனும் இந்நகரத்திற்கும் தேசத்திற்கும் எதிராக தீர்க்கதரிசனம் கூறினான். 21 உரியா பிரச்சாரம் செய்வதை யோயாக்கீம் ராஜாவும் அவனது படை அதிகாரிகளும் யூதாவின் தலைவர்களும் கேட்டனர். அவர்கள் கோபம் கொண்டனர். யோயாக்கீம் ராஜா உரியாவைக் கொல்ல விரும்பினான். ஆனால் உரியா யோயாக்கீம் தன்னைக் கொல்ல விரும்புவதைப்பற்றி அறிந்தான். உரியா பயந்தான். எனவே எகிப்து நாட்டிற்குத் தப்பித்து ஓடினான். 22 ஆனால், யோயாக்கீம் ராஜா எகிப்துக்கு எல்நாத்தானையும் இன்னும் சிலரையும் அனுப்பினான். எல்நாத்தான் அக்போர் என்ற பெயர் உள்ளவனின் குமாரன். 23 அவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்தனர். பிறகு, அவர்கள் உரியாவை ராஜா யோயாக்கீமிடம் கொண்டுபோனார்கள். உரியா பட்டயத்தால் கொல்லப்படவேண்டும் என்று யோயாக்கீம் ராஜா கட்டளையிட்டான். உரியாவின் உடல் ஏழை ஜனங்கள் புதைக்கப்படுகிற சுடுகாட்டில் வீசப்பட்டது.
24 ஒரு முக்கியமான மனிதன் அகீக்காம் என்ற பெயருடன் இருந்தான். அவன் சாப்பானுடைய குமாரன். அகீக்காம் எரேமியாவிற்கு உதவியாக இருந்தான். ஆசாரியர்களாலும் தீர்க்கதரிசிகளாலும் எரேமியா கொல்லப்படாமல், அகீக்காம் அவனைக் காப்பாற்றினான்.
உண்மையான போதனையைப் பின்பற்றுதல்
2 பின்பற்ற வேண்டிய உண்மையான போதனையை நீ மக்களுக்குக் கூற வேண்டும். 2 முதியவர்கள் சுயக் கட்டுப்பாடும், கௌரவமும் ஞானமும் உடையவர்களாக இருக்கப் போதனை செய். அவர்கள் விசுவாசத்திலும் அன்பிலும், பொறுமையிலும் உறுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.
3 மற்றும் வாழும் முறையில் பரிசுத்தமாய் இருக்கும் பொருட்டு முதிய பெண்களிடம் போதனை செய். மற்றவர்களை எதிர்த்து எதையும் பேசவேண்டாம் என்றும், குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆகவேண்டாம் என்றும் சொல். அப்பெண்கள் நல்லதைப் போதிக்கவேண்டும். 4 அவ்வழியில், அவர்கள் இளம் பெண்களுக்குக் கணவன்மீதும் பிள்ளைகள் மீதும் அன்புகொள்ளுமாறு அறிவுறுத்த முடியும். 5 அவர்களுக்கு ஞானத்தோடும், பரிசுத்தத்தோடும் இருக்கும்படியும், வீட்டைப் பராமரித்தல், கருணை, கணவனுக்குக் கீழ்ப்படிதல் போன்றவற்றையும் அவர்கள் கற்பிக்க முடியும். பிறகு தேவன் நமக்குத் தந்த போதனைகளைப் பற்றி எவரும் விமர்சிக்க முடியாது.
6 அந்தப்படியே இளைஞர்களையும் ஞானமாயிருக்கும்படிக் கூறு. 7 இளைஞர்களுக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு விதத்திலும் நல்ல செயல்களைச் செய்யவேண்டும். நேர்மையோடும் அக்கறையோடும் உன் போதனைகள் இருக்க வேண்டும். 8 பேசும்போது உண்மையையே பேசு. அதனால் எவரும் உன்னை விமர்சிக்க முடியாது. நமக்கு எதிராக எதையும் தவறாகச் சொல்ல முடியாத நிலையில் நம்மை எதிர்த்துப் பேச வரும் ஒவ்வொருவரும் வெட்கப்படுவர்.
9 அடிமைகளுக்கும் அறிவுரை கூறு. அவர்கள் எப்பொழுதும் தங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு விருப்பமானதையே செய்ய வேண்டும். அவர்கள் எதிர்வாதம் செய்யக்கூடாது. 10 அவர்கள் எஜமானர்களுக்கு உரியதைத் திருடக்கூடாது. அவர்கள் தம் நடத்தையின் மூலம் முழுக்க, முழுக்க தாங்கள் நம்பிக்கைக்குத் தகுதியானவர்கள் என்பதைக் காட்டவேண்டும். நமது இரட்சகராகிய தேவனுடைய போதனைகள் நல்லவை எனப் புலப்படும்படி அவர்கள் இப்படி நடந்துகொள்ள வேண்டும்.
11 நாம் வாழவேண்டிய வழி இது தான். ஏனென்றால் தேவனுடைய கிருபை வந்திருக்கிறது. அது அனைவரையும் இரட்சிக்கும். நமக்கும் அது தரப்பட்டிருக்கிறது. 12 தேவனுக்கு எதிராக வாழாமல் இருக்கவும், உலகம் விரும்புகிற தீய காரியங்களைச் செய்யாமல் இருக்கவும் அக்கருணை ஞானத்தையும், நீதியையும் போதிக்கிறது. தேவ பக்தியும் உடையவர்களாக இவ்வுலகில் வாழ அது கற்றுத்தருகிறது. 13 நமது மகா தேவனும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்குக் காத்திருக்கும்போது அவ்விதமாய் நாம் வாழவேண்டும். அவரே நமது பெரும் நம்பிக்கை. அவர் மகிமையுடன் வருவார். 14 நமக்காக அவர் தன்னையே தந்தார். அக்கிரமங்களிலிருந்தும் நம்மை விடுவிக்க அவர் இறந்தார். நற்செயல்களை எப்பொழுதும் செய்ய ஆர்வமாக இருக்கும் அவருக்குச் சொந்தமான மக்களாகிய நம்மைப் பரிசுத்த மனிதர்களாக்க அவர் இறந்தார்.
15 மக்களிடம் இவற்றைக் கூறு. உனக்கு முழு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தால் மக்களைப் பலப்படுத்து. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறு. நீ முக்கியமற்றவன் என மற்றவர்கள் உன்னை நடத்தும் அளவுக்கு எவரையும் அனுமதிக்காதே.
2008 by World Bible Translation Center