Old/New Testament
யூதாவின் ராஜாவாகிய ஆகாஸ்
28 ஆகாஸ் ராஜாவாகியபோது அவனுக்கு 20 வயது. அவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். தனது முற்பிதாவான தாவீதைப் போன்று ஆகாஸ் சரியான வழியில் வாழவில்லை. கர்த்தர் விரும்பியவற்றை ஆகாஸ் செய்யவில்லை. 2 இஸ்ரவேல் ராஜாக்களின் தவறான முன்மாதிரிகளை கடைபிடித்தான். அவன் பாகால் தெய்வங்களைத் தொழுதுகொள்ள வார்ப்புச் சிலைகளைச் செய்தான். 3 ஆகாஸ் பென்இன்னோம் பள்ளத்தாக்கில் நறுமணப் பொருட்களை எரித்தான். தன் சொந்த குமாரர்களை நெருப்பில் எரித்துப் பலிக்கொடுத்தான். அந்நாடுகளில் வாழ்ந்தோர் செய்த பயங்கரமான பாவங்களையே அவனும் செய்தான். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நாட்டுக்குள் நுழைந்தபோது ஏற்கெனவே அங்கிருந்த பாவமிக்க ஜனங்களை கர்த்தர் வெளியே துரத்தியிருந்தார். 4 மலைகளில் இருந்த மேடைகளிலும் ஒவ்வொரு பசுமையான மரத்தின் அடியிலும் ஆகாஸ் பலிகளைக் கொடுத்து நறுமணப் பொருட்களை எரித்தான்.
5-6 ஆகாஸ் பாவங்களைச் செய்ததால், ஆராமின் ராஜா ஆகாஸை வெல்லும்படி தேவனாகிய கர்த்தர் செய்தார். ஆராமின் ராஜாவும் அவனது படைகளும் ஆகாஸைத் தோற்கடித்து யூத ஜனங்களில் பலரைச் சிறைபிடித்தனர். ஆராம் ராஜா, சிறைக் கைதிகளை தமஸ்கு என்ற நகரத்திற்கு அழைத்துச் சென்றான். மேலும் கர்த்தர், இஸ்ரவேல் ராஜாவாகிய பெக்கா ஆகாஸை வெல்லும்படிச் செய்தார். பெக்காவின் தந்தையின் பெயர் ரெமலியா ஆகும். ஒரே நாளில் பெக்காவும், அவனது படையும் யூதாவில் 1,20,000 வீரர்களைக் கொன்றனர். பெக்கா யூதா வீரர்களை வென்றதற்குக் காரணம் அவர்கள் தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியவில்லை என்பது ஆகும். 7 எப்பிராயீமில் சிக்ரி என்பவன் பலமிக்க வீரன். அவன் ஆகாஸ் ராஜாவின் குமாரனான மாசேயாவையும், அரண்மனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும் எல்க்கானாவையும் கொன்றான். எல்க்கானா ராஜாவுக்கு இரண்டாவது நிலையில் இருந்தார்.
8 இஸ்ரவேலிய படையானது யூதாவில் வாழ்ந்த தம் சொந்த உறவினர்களான 2,00,000 பேரைச் சிறை பிடித்தனர். அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகக் கொண்டுசென்றார்கள். அவர்கள் யூதாவிலிருந்து பல விலையுயர்ந்த பொருட்களை அபகரித்துச் சென்றார்கள். அந்த அடிமைகளையும், அப்பொருட்களையும் இஸ்ரவேலர்கள் சமாரிய நகருக்குக் கொண்டுவந்தார்கள். 9 ஆனால் அங்கே கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான். அவனது பெயர் ஒதேத். சமாரியாவிற்கு வந்த இஸ்ரவேல் படையை ஒதேத் சந்தித்தான். ஒதேத் இஸ்ரவேல் படையினரிடம், “உங்கள் முற்பிதாக்கள் பணிந்த தேவனாகிய கர்த்தர், நீங்கள் யூதாவின் ஜனங்களைத் தோற்கடிக்கவிட்டார். ஏனென்றால் அவர்கள் மீது அவர் கோபமாயிருந்தார். மிக மோசமான முறையில் நீங்கள் யூதாவின் ஜனங்களைக் கொன்று தண்டித்தீர்கள். இப்போது தேவன் உங்கள் மீது கோபமாக இருக்கிறார். 10 நீங்கள் யூதாவின் ஜனங்களையும், எருசலேமையும் அடிமையாக்கத் திட்டமிட்டுள்ளீர்கள். உங்களது தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்களும் பாவம் செய்திருக்கிறீர்கள். 11 இப்போது நான் சொல்வதைக் கவனியுங்கள். நீங்கள் கைப்பற்றிய உங்கள் சகோதர சகோதரிகளைத் திருப்பி அனுப்புங்கள். கர்த்தருடைய கடுமையான கோபம் உங்கள் மீது உள்ளது. எனவே நான் சொன்னபடி செய்யுங்கள்” என்று சொன்னான்.
12 பிறகு எப்பிராயீம் தலைவர்கள், இஸ்ரவேல் வீரர்கள் போர்க்களத்திலிருந்து வீட்டிற்குத் திரும்புவதைப் பார்த்தனர். அந்தத் தலைவர்கள் இஸ்ரவேல் வீரர்களைச் சந்தித்து எச்சரிக்கைச் செய்தனர். யோகனானின் குமாரன் அசரியா, மெஷிலேமோத்தின் குமாரனான பெரகியா, சல்லூமின் குமாரனான எகிஸ்கியா, அத்லாயின் குமாரனான அமாசா ஆகியோர் அந்தத் தலைவர்களாகும். 13 அவர்கள் இஸ்ரவேல் வீரர்களிடம், “யூதாவிலிருந்து கைதிகளை இங்கே கொண்டுவராதீர்கள். அவ்வாறு செய்தால் அது கர்த்தருக்கு எதிராக நாம் பாவம் செய்வது போல் ஆகும். நமது பாவங்களையும் குற்ற உணர்வையும் அது மோசமாக்கும். கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராகக் கோபம் கொள்வார்” என்றார்கள்.
14 எனவே, வீராகள் கைதிகளையும், விலையுயர்ந்த பொருட்களையும் தலைவர்களிடமும், ஜனங்களிடமும் கொடுத்தனர். 15 உடனே அசரியா, பெரக்கியா, எகிஸ்கியா, அமாசா, ஆகிய தலைவர்கள் கைதிகளுக்கு உதவினார்கள். அந்நால்வரும் இஸ்ரவேல் படை அபகரித்த ஆடைகளை எடுத்து நிர்வாணமாயிருந்த கைதிகளுக்குக் கொடுத்தனர். அவர்களுக்கு பாதரட்சைகளைக் கொடுத்தனர். உண்ணவும், குடிக்கவும் கைதிகளுக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்தனர். அவர்களுக்கு எண்ணெய் தடவினார்கள். பிறகு அந்த எப்பிராயீம் தலைவர்கள் பலவீனமான கைதிகளைக் கழுதைமேல் ஏற்றி எரிகோவில் உள்ள அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். எரிகோ பேரீச்ச மரங்கள் நிறைந்த பட்டணம். பிறகு அந்தத் தலைவர்கள் நால்வரும் தம் நகரமான சமாரியாவிற்குத் திரும்பினார்கள்.
16-17 அதே நேரத்தில் ஏதோம் நாட்டு ஜனங்கள் யூதாவைத் தோற்கடித்தனர். ஏதோமியர் ஜனங்களைச் சிறைபிடித்து கைதிகளாக கொண்டு சென்றார்கள். எனவே ஆகாஸ் ராஜா அசீரியா ராஜாவிடம் உதவுமாறு வேண்டினான். 18 பெலிஸ்தர்களும் மலைநாட்டு நகரங்களையும் யூதாவின் தென் பகுதியையும் தாக்கினார்கள். இவர்கள் பெத்ஷிமேஸ், ஆயலேன், கெதெரோத், சொக்கோ, திம்னா மற்றம் கிம்சோ ஆகிய ஊர்களைக் கைப்பற்றினார்கள். மேலும் அவர்கள் அந்த ஊர்களுக்கு அருகிலிருந்த கிராமங்களையும் கைப்பற்றினார்கள், பிறகு பெலிஸ்தியர்கள் அந்த ஊர்களில் வாழ்ந்தார்கள். 19 யூதா ஜனங்களுக்கு கர்த்தர் கடுமையான துன்பங்களைத் தந்தார். ஏனென்றால் ஆகாஸ் ராஜா யூதா ஜனங்கள் பாவம் செய்யும்படி தூண்டினான். அவன் கர்த்தருக்கு உண்மை இல்லாதவனாக நடந்துக் கொண்டான். 20 அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில் நேசர் உதவுவதற்குப் பதிலாகத் துன்பங்களைத் தந்தார். 21 ஆகாஸ் கர்த்தருடைய ஆலயம், அரண்மனை, இளவரசர்களின் அரண்மனை ஆகியவற்றில் இருந்து விலையுயர்ந்த பொருட்களை எடுத்துவந்தான். அவற்றை அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தான். எனினும் அது ஆகாசுக்கு உதவவில்லை.
22 இவ்வளவு இடையூறுகளுக்கு நடுவிலும் ஆகாஸ் மேலும் மோசமான பாவங்களையே தொடர்ந்து செய்தான். இதனால் கர்த்தருக்கு மிகவும் உண்மையற்றவனாக இருந்தான். 23 தமஸ்கு ஜனங்கள் தொழுதுகொண்ட தெய்வங்களுக்கே இவன் பலிகளைக் கொடுத்து வந்தான் தமஸ்கு ஜனங்கள் ஆகாஸைத் தோற்கடித்தனர். அதனால் ஆகாஸ், “ஆராம் ஜனங்களுக்கு அவர்கள் தொழுதுகொண்ட தெய்வங்கள் உதவுகின்றன. எனவே நானும் அத்தெய்வங்களுக்குப் பலியிட்டால் அத்தெய்வங்கள் எனக்கும் உதவும்” என்று எண்ணினான். ஆகாஸ் அத்தெய்வங்களைத் தொழுதுகொண்டான். இவ்வாறு இவன் தானும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்களையும் பாவம் செய்யவைத்தான்.
24 ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தில் இருந்து பொருட்களை எடுத்து உடைத்துப் போட்டான் பிறகு அவன் கர்த்தருடைய ஆலய கதவுகளை மூடினான். அவன் பலிபீடங்களைச் செய்து எருசலேமின் ஒவ்வொரு தெரு முனையிலும் வைத்தான். 25 ஆகாஸ் யூதாவின் ஒவ்வொரு நகரங்களிலும் மேடைகள் அமைத்து நறுமணப் பொருட்களை எரித்து அந்நிய தெய்வங்களை தொழுதுகொண்டான். ஆகாஸ் தன் முற்பிதாக்களால் தொழுதுகொள்ளப்பட்ட தேவனாகிய கர்த்தரை மேலும் கோபமூட்டினான்.
26 ஆகாஸ் தொடக்ககாலம் முதல் இறுதிவரை செய்த மற்ற செயல் எல்லாமும் யூதா மற்றம் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 27 ஆகாஸ் மரித்ததும் அவனை அவனது முற்பிதாக்களுக்கு அருகில் அடக்கம் செய்தனர். ஜனங்கள் அவனை எருசலேம் நகரிலேயே அடக்கம் செய்தனர். ஆனால் அவனை இஸ்ரவேல் ராஜாக்களை அடக்கம் செய்யும் இடத்துக்கருகில் அடக்கம் செய்யவில்லை. ஆகாசின் இடத்தில் புதிய ராஜாவாக எசேக்கியா வந்தான். எசேக்கியா ஆகாசின் குமாரன்.
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா
29 எசேக்கியா அவனது 25 வது வயதில் ராஜா ஆனான். அவன் எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் அபியாள். இவள் சகரியாவின் குமாரத்தி. 2 அவன் செய்யவேண்டு மென கர்த்தர் விரும்பியபடியே எசேக்கியா செயல்களைச் செய்து வந்தான். இவனது முற்பிதாவான தாவீது சரியானவை என்று எவற்றைச் செய்தானோ அவற்றையே இவனும் செய்துவந்தான்.
3 எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குக் கதவுகளைப் பொருத்தினான். அதனைப் பலமுள்ளதாக ஆக்கினான். எசேக்கியா மீண்டும் ஆலயத்தைத் திறந்தான். அவன் ராஜாவாகிய முதல் ஆண்டின் முதல் மாதத்திலேயே இதனைச் செய்தான். 4-5 எசேக்கியா ஆசாரியர்களையும் லேவியர்களையும் ஒரே மன்றத்தில் கூட்டினான். ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள திறந்தவெளி பிரகாரத்தில் அவர்களோடு கூட்டம் போட்டான். எசேக்கியா அவர்களிடம்,
“லேவியர்களே! நான் சொல்வதைக் கவனியுங்கள். பரிசுத்தமான சேவைக்கு உங்களைத் தயார் செய்துக்கொள்ளுங்கள். தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தையும் பரிசுத்த சேவைக்குரிய இடமாக ஆக்குங்கள். உங்கள் முற்பிதாக்களால் தொழுதுகொள்ளப்பட்ட தேவன் அவர். ஆலயத்திற்குச் சொந்தமில்லாத பொருட்களை அங்கிருந்து வெளியே எடுத்து விடுங்கள். அப்பொருட்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தமாட்டாது. 6 நமது முற்பிதாக்கள் கர்த்தரை விட்டு விலகினார்கள். தங்கள் முகங்களை கர்த்தருடைய ஆலயத்திலிருந்து திருப்பிக் கொண்டனர். 7 அவர்கள் ஆலயக் கதவுகளை மூடிவிட்டனர். விளக்குகளை அணைத்தனர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அவரது பரிசுத்தமான இடத்தில் நறுமணப் பொருட்கள் எரிப்பதையும் தகனபலியிடுவதையும் விட்டனர். 8 எனவே, யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீது கர்த்தர் பெரும் கோபங்கொண்டார். கர்த்தர் அவர்களைத் தண்டித்தார். மற்றவர்கள் இதனைப் பார்த்து பயந்தனர். யூதா மற்றும் எருசலேம் ஜனங்களுக்குக் கர்த்தர் செய்தவற்றைப் பார்த்து திகைத்துவிட்டனர். அவர்கள் எருசலேம் ஜனங்களுக்காக வெறுப்புடனும் வெட்கத்துடனும் தலையை அசைத்தார்கள். இவையனைத்தும் உண்மை என்பது உங்களுக்குத் தெரியும். இவற்றை உங்களது கண்களாலேயே நீங்கள் பார்க்கலாம். 9 அதனால்தான் நமது முற்பிதாக்கள் போரில் கொல்லப்பட்டனர். நமது குமாரர்களும், குமாரத்திகளும், மனைவியரும் சிறைபிடிக்கப்பட்டனர். 10 எனவே, இப்பொழுது நான், எசேக்கியா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள முடிவு செய்துவிட்டேன். பிறகு அவர் நம்மோடு மேற்கொண்டு கோபங்கொள்ளமாட்டார். 11 எனவே என் குமாரர்களே, சோம்பேறிகளாக இராதீர்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். கர்த்தர் தனக்கு சேவைசெய்ய உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர், ஆலயத்தில் சேவைசெய்யவும் நறுமணப் பொருட்களை எரிக்கவும் உங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்” என்று சொன்னான்.
12-14 வேலைசெய்ய ஆரம்பித்த லேவியர்களின் பட்டியல் இது:
கோரா குடும்பத்திலிருந்து அமாசாயின் குமாரனான மாகாத்து என்பவனும், அசரியாவின் குமாரன் யோவேல் என்பவனும்,
மெராரி குடும்பத்திலிருந்து அப்தியின் குமாரன் கீசும் என்பவனும் எகலேலின் குமாரன் அசரியா என்பவனும்,
கெர்சோனிய குடும்பத்திலிருந்து சிம்மாவின் குமாரன் யோவாகு என்பவனும் யோவாகின் குமாரன் ஏதேன் என்பவனும்,
எளச்சாப்பான் சந்ததியிலிருந்து சிம்ரி, ஏயெல் என்பவர்களும்,
ஆசாப்பின் சந்ததியிலிருந்து சகரியா, மத்தனியா என்பவர்களும்,
ஏமானின் சந்ததியிலிருந்து எகியேல், சிமியி என்பவர்களும்,
எதுத்தானின் சந்ததியிலிருந்து செமாயா, ஊசியேல் என்பவர்களும்,
அந்த பட்டியலில் அடங்கும்.
15 பிறகு இந்த லேவியர்கள் தம் சகோதரர்களையும் சேர்த்துக் கொண்டு தங்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் பரிசுத்த சேவைசெய்யத் தயார் செய்துக்கொண்டார்கள். கர்த்தரிடமிருந்து வந்த ராஜாவின் கட்டளைக்கு அவர்கள் பணிந்தனர். சுத்தம் செய்து பரிசுத்தப்படுத்துவதற்காக அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றார்கள். 16 ஆசாரியர்கள் சுத்தம் செய்யும் பொருட்டு ஆலயத்தின் உட்பகுதிக்குள் சென்றனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் கண்ட, சுத்தமில்லாத பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்துப்போட்டனர். அவற்றை அவர்கள் கர்த்தருடைய ஆலயப் பிரகாரத்தில் கொண்டுவந்து போட்டனர். பிறகு அவை அனைத்தையும் லேவியர்கள் கீதரோன் பள்ளத்தாக்குக்குக் கொண்டுச்சென்றனர். 17 முதல் மாதத்தின் முதல் நாளில், லேவியர்கள் பரிசுத்தச் சேவைசெய்ய தம்மை தயார் செய்துக்கொண்டனர். அந்த மாதத்தின் எட்டாவது நாள் லேவியர்கள் கர்த்தருடைய ஆலய முற்றத்திற்கு வந்தார்கள். பரிசுத்தக் காரியங்களுக்குப் பயன்படுத்தத் தயார் செய்வதற்காக அவர்கள் மேலும் 8 நாட்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்தம் செய்தார்கள். முதல் மாதத்தில் 16வது நாள் அதைச் செய்து முடித்தார்கள்.
18 பிறகு அவர்கள் எசேக்கியா ராஜாவிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், “எசேக்கியா ராஜாவே! கர்த்தருடைய ஆலயம் முழுவதையும் சுத்தம் செய்துவிட்டோம். தகனபலி கொடுக்க பலிபீடத்தையும் மற்ற பொருட்களையும் தயார் செய்துவிட்டோம். சமூகத்தப்பங்களின் மேஜையையும் அதன் சகல பணிமூட்டுகளையும் சுத்தம் செய்துவிட்டோம். 19 ஆகாஸ் அரசாளும்போது அவன் தேவனுக்கு உண்மையுள்ளவனாக இல்லாமல் ஆலயத்தில் உள்ள பல பொருட்களை வெளியில் எறிந்தான். இப்போது நாங்கள் சுத்தப்படுத்தி பரிசுத்தமாகப் பயன்படுகிற அளவிற்கு ஆலயத்தின் உள்ளே வைத்துவிட்டோம். இப்போது அவை கர்த்தருடைய பலி பீடத்தின் எதிரில் உள்ளது” என்றனர்.
20 எசேக்கியா ராஜா நகர அதிகாரிகளைக் கூட்டினான். மறுநாள் காலையில் அவர்களுடன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைந்தான். 21 அவர்கள் 7 காளைகளையும், 7 ஆண் ஆட்டுக்கடாக்களையும், 7 ஆட்டுக்குட்டிகளையும், 7 வெள்ளாட்டுக் கடாக்களையும், பாவப்பரிகாரப் பலிக்காகக் கொண்டுவந்தனர். இதன் மூலம் அவர்கள் யூதா அரசாங்கம், பரிசுத்த இடம், யூதா ஜனங்கள் ஆகியோரைப் பரிசுத்தப்படுத்தினார்கள். கர்த்தருடைய பலிபீடத்தில் இவற்றைப் பலியிடுமாறு ஆசாரியர்களுக்கு எசேக்கியா ராஜா கட்டளையிட்டான். இவ்வாசாரியர்கள் ஆரோனின் சந்ததியினர் ஆவார்கள். 22 எனவே, ஆசாரியர்கள் காளைகளைக் கொன்று இரத்தத்தைச் சேகரித்தனர். பிறகு அதனைப் பலிபீடத்தின்மேல் தெளித்தனர். பின்னர் செம்மறி ஆட்டுக்கடாக்களைக் கொன்று அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் தெளித்தனர். 23-24 பின்னர் ஆசாரியர்கள் ஆண் ஆட்டுக் கடாக்களை ராஜாவுக்கு முன்பு கொண்டு வந்தனர். ஜனங்களும் கூடினார்கள். இவை பாவப்பரிகாரப் பலிக்குரியவை. எனவே ஆசாரியர்கள் தம் கைகளை அவற்றின் தலையில் வைத்துவிட்டு கொன்றனர். ஆசாரியர்கள் அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் தெளித்து பாவப்பரிகாரம் செய்தனர். அவர்கள் இவ்வாறு செய்ததால் தேவன் இஸ்ரவேலர்களது பாவங்களை மன்னித்துவிட்டார். ராஜா அந்த தகன பலிகளும் பாவப்பரிகாரப் பலிகளும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் செய்யப்பட வேண்டும் என்றான்.
25 எசேக்கியா ராஜா லேவியர்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் கைத்தாளங்கள், தம்புருக்கள், சுரமண்டலங்கள் ஆகியவற்றோடு தொண்டுசெய்ய நியமித்தான். இது தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் காட்டிய வழியாகும். இந்த ஆணைகள் கர்த்தரிடமிருந்து தீர்க்கதரிசிகள் மூலம் வந்தன. 26 எனவே லேவியர்கள் தாவீதின் இசைக்கருவிகளோடு தயாராக நின்றனர். ஆசாரியர்கள் தம் பேரிகைகளோடு தயாராக நின்றார்கள். 27 பிறகு எசேக்கியா, பலிபீடத்தின் மேல் தகனபலிகளும், காணிக்கைகளும் கொடுக்குமாறு கட்டளையிட்டான். தகனபலி தொடங்கியதும் கர்த்தருக்காகப் பாடுவதும் தொடங்கியது. எக்காளங்கள் ஊதப்பட்டன. தாவீதின் இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டன. 28 அங்கே கூடியிருந்தவர்கள் பணிந்து நின்றனர். இசைக் கலைஞர்கள் பாடினார்கள். எக்காளங்களை இசைப்பவர்கள் அவற்றை ஊதினார்கள். இது தகனபலி முடியும்வரை நிகழ்ந்தது.
29 பலிகள் முடிவுற்றதும் எசேக்கியா ராஜாவும், ஜனங்களும் குனிந்து தொழுதுகொண்டார்கள். 30 எசேக்கியா ராஜாவும், அவனது அதிகாரிகளும் லேவியர்களை கர்த்தரைத் துதிக்கும்படி கட்டளையிட்டனர். அவர்கள், தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் எழுதிய பாடல்களைப் பாடினார்கள். அவர்கள் தேவனைத் துதித்துப் பாடி மகிழ்ந்தனர். அவர்கள் பணிந்து தேவனைத் தொழுதுகொண்டனர். 31 எசேக்கியா, “இப்போது யூதா ஜனங்களாகிய நீங்கள் உங்களையே கர்த்தருக்காகக் கொடுத்துவிட்டீர்கள். அவரண்டைக்கு வாருங்கள். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தகனபலிகளையும், ஸ்தோத்திரப் பலிகளையும், கொண்டுவாருங்கள்” என்று சொன்னான். பிறகு ஜனங்களும் அவ்வாறே தகனபலிகளையும் ஸ்தோத்திரப் பலிகளையும் கொண்டுவந்தனர். விடுப்பட்டவர்கள் எல்லாம் கொண்டுவந்தனர். 32 கூடியிருந்தவர்கள் கொண்டுவந்த தகனபலிகளின் விபரம்: 70 காளைகள், 100 ஆட்டுக்கடாக்கள், 200 ஆட்டுக்குட்டிகள், இவை அனைத்தும் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளாகக் கொடுக்கப்பட்டன. 33 600 காளைகளும் 3,000 செம்மறி ஆடுகளும் ஆட்டுக் கடாக்களும் பரிசுத்த பலிகளாகக் கொடுக்கப்பட்டன. 34 எனினும் ஆசாரியர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்ததால் அவர்களால் தகன பலிகளின் மிருகங்களை வெட்டி தோல் உரிக்க முடியாமல் போனது. எனவே, அவர்களின் உறவினர்களான லேவியர்கள் அவர்களுக்கு உதவினார்கள். அவர்கள் வேலையை முடிக்கும்வரையிலும் மற்ற ஆசாரியர்கள் தம்மைப் பரிசுத்தம் செய்யும்வரையிலும் உதவினார்கள். ஆசாரியர்களைவிட லேவியர்கள் கர்த்தருக்கு சேவை செய்தவற்குத் தங்களைத் தயார் செய்துக் கொள்வதில் தீவிரமாக இருந்தார்கள். 35 தகனபலிகளும், சமாதானப் பலிகளின் கொழுப்பும், பானங்களின் காணிக்கைகளும் மிகுதியாயிற்று. இவ்வாறு மீண்டும் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை ஆரம்பமாயிற்று. 36 எசேக்கியாவும் ஜனங்களும் தேவன்தம் ஜனங்களுக்காக ஆலயத்தைத் தயார் செய்ததைப்பற்றி மகிழ்ந்தனர். இவ்வளவு விரைவாக கர்த்தர் செய்துமுடித்ததால் அவர்கள் மேலும் மகிழ்ந்தனர்.
சீஷர்களுக்காகப் பிரார்த்தனை
17 இவற்றையெல்லாம் இயேசு சொன்ன பிறகு, அவர் தனது கண்களால் வானத்தை (பரலோகத்தை) அண்ணாந்து பார்த்தார். “பிதாவே, நேரம் வந்துவிட்டது. உமது குமாரனுக்கு மகிமையைத் தாரும். அதனால் உமது குமாரனும் உமக்கு மகிமையைத் தருவார். 2 உமது குமாரன் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிரந்தர வாழ்வைக் கொடுக்கும்படியாக அனைத்து மக்கள் மீதும் அவருக்கு அதிகாரம் கொடுத்தீர். 3 அந்த மனிதர்கள், நீர்தான் உண்மையான தேவன் என்பதையும் உம்மால் அனுப்பப்பட்டவர் இயேசு கிறிஸ்து என்பதையும் தெரிந்துகொள்வார்கள். இவ்வாறு தெரிந்துகொள்வதுதான் நிரந்தரமான வாழ்க்கை. 4 நான் செய்யுமாறு நீர் கொடுத்த வேலைகளை நான் முடித்துவிட்டேன். நான் பூமியில் உம்மை மகிமைப்படுத்தினேன். 5 இப்பொழுது, உம்மோடு இருக்கும் மகிமையைத் தாரும். உலகம் உண்டாவதற்கு முன்பிருந்தே உம்மோடு நான் கொண்டிருந்த மகிமையைத் தாரும்.
6 “உலகத்திலிருந்து சில ஆட்களை நீர் எனக்குக் கொடுத்தீர். நான் அவர்களுக்கு உம்மை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள். அவர்களை எனக்குத் தந்தீர். அவர்கள் உமது போதனைக்குக் கீழ்ப்படிந்தார்கள். 7 நீர் எனக்குத் தந்தவையெல்லாம் உம்மிடமிருந்து வந்தவை என்று அவர்கள் இப்போது தெரிந்துகொண்டனர். 8 நீர் எனக்குக் கொடுத்த போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். அவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். உண்மையாகவே நான் உம்மிடமிருந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். நீர் என்னை அனுப்பிவைத்ததையும் அவர்கள் நம்புகிறார்கள். 9 நான் அவர்களுக்காக இப்பொழுது வேண்டுகிறேன். நான் உலகில் உள்ள மக்களுக்காக வேண்டிக்கொள்ளவில்லை. ஆனால் நீர் எனக்குக் கொடுத்த மக்களுக்காக வேண்டுதல் செய்கிறேன். ஏனென்றால் அவர்கள் உம்முடையவர்கள். 10 என்னுடையவை எல்லாம் உம்முடையவை. உம்முடையவை எல்லாம் என்னுடையவை. அவர்களில் நான் மகிமை அடைந்திருக்கிறேன்.
11 “இப்பொழுது நான் உம்மிடத்தில் வந்துகொண்டிருக்கிறேன். நான் இனிமேல் உலகத்தில் இருக்கமாட்டேன். ஆனால் இவர்கள் இப்பொழுதும் உலகத்தில் தான் இருக்கிறார்கள். பரிசுத்த பிதாவே, உமது பெயரின் வல்லமையினால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கச் செய்யும். இதன் மூலம் நீரும் நானும் ஒன்றாக இருப்பதுபோலவே அவர்களும் ஒன்றாயிருப்பார்கள். 12 நான் அவர்களோடு இருந்தபோது அவர்களைப் பாதுகாத்து வந்தேன். நீர் எனக்குத் தந்த உமது பெயரின் வல்லமையினால் அவர்களைப் பாதுகாத்தேன். அவர்களில் ஒருவன் மட்டும் இழக்கப்பட்டான். (யூதாஸ்) அவன் இழக்கப்படுவதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டவன். ஏற்கெனவே வேதவாக்கியங்களில் எழுதப்பட்டவை நிறைவேறும்படியே அவன் இழக்கப்பட்டான்.
13 “நான் இப்பொழுது உம்மிடம் வருகிறேன். ஆனால் இவற்றையெல்லாம் நான் உலகில் இருக்கும்போதே வேண்டிக்கொள்கிறேன். நான் இவற்றையெல்லாம் கூறுகிறேன். ஆதலால் அவர்கள் எனது மகிழ்ச்சியைப் பெறமுடியும். அவர்கள் எனது முழுமையான மகிழ்ச்சியையும் பெறவேண்டும் என நான் விரும்புகிறேன். 14 உமது போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். உலகம் அவர்களை வெறுக்கிறது. ஏனென்றால் அவர்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். நானும் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன்.
15 “அவர்களை உலகத்திலிருந்து வெளியே எடுக்கும்படி நான் உம்மை வேண்டிக்கொள்ளவில்லை. அவர்களை நீர் தீமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன். 16 நான் இந்த உலகத்தை சாராதது போலவே அவர்களும் இந்த உலகத்தைச் சாராதவர்களாக இருக்கிறார்கள். 17 உம்முடைய உண்மையின் மூலம் உமது சேவைக்கு அவர்களைத் தயார்படுத்தும். உமது போதனையே உண்மை. 18 நீர் என்னை உலகத்துக்கு அனுப்பிவைத்தீர். அது போலவே நானும் அவர்களை உலகத்துக்குள் அனுப்புகிறேன். 19 நான் சேவைக்காக என்னைத் தயார் செய்து கொண்டேன். நான் இதனை அவர்களுக்காகவே செய்கிறேன். எனவே, அவர்களும் உமது சேவைக்காக உண்மையில் தம்மைத் தயார் செய்துகொள்வார்கள்.
20 “நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். இவர்களுக்காக மட்டுமல்ல இவர்களுடைய உபதேசங்களால் என்மீது நம்பிக்கை வைக்கிறவர்களுக்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். 21 பிதாவே, என்னில் நம்பிக்கை வைக்கிற அனைவரும் ஒன்றாயிருப்பதற்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். நீர் என்னில் இருக்கிறீர். நான் உம்மில் இருக்கிறேன். அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கும்படிக்கும் நான் உம்மை வேண்டிக்கொள்கிறேன். ஆகையால் இவ்வுலகம் நீர் என்னை அனுப்பினதில் நம்பிக்கைகொள்ளும். 22 நீர் எனக்குத் தந்த மகிமையை நான் தருவதால் அவர்கள் ஒன்றாக இருப்பார்கள். நானும் நீரும் ஒன்றாக இருப்பது போல, 23 நான் அவர்களில் இருப்பேன்; நீர் என்னில் இருப்பீர். ஆக அனைவரும் ஒன்றாக இருப்பார்கள். பிறகு இந்த உலகம் நீர் என்னை அனுப்பினதைத் தெரிந்துகொள்ளும். நீர் என்னிடம் அன்பாக இருப்பதுபோலவே நீர் அவர்களிடமும் அன்பாக இருக்கிறீர் என்பதையும் உலகம் தெரிந்து கொள்ளும்.
24 “பிதாவே! நீர் எனக்குத் தந்த இவர்கள், நான் எங்கே இருந்தாலும் என்னுடனே இருக்குமாறு விரும்புகிறேன். அவர்கள் என் மகிமையைக் காண வேண்டும் எனவும் விரும்புகிறேன். உலகம் உண்டாவதற்கு முன்னரே நீர் என்னுடன் அன்பாக இருந்தீர். இதனால் எனக்கு நீர் மகிமை தந்தீர். 25 பிதாவே! நீர் நல்லவராக இருக்கிறீர். இந்த உலகம் உம்மை அறிந்துகொள்ளவில்லை. ஆனால் உம்மை நான் அறிந்துகொண்டுள்ளேன். இந்த மக்கள் நீர் என்னை அனுப்பினதைத் தெரிந்துகொண்டுள்ளனர். 26 உம்மை நான் அவர்களுக்கு வெளிப்படுத்தினேன். இன்னும் வெளிப்படுத்துவேன். பிறகு நீர் என்னிடம் அன்பாக இருப்பதுபோன்று அவர்களும் அன்பாக இருப்பார்கள். நானும் அவர்களுக்குள் வாழ்வேன்” என்றார்.
2008 by World Bible Translation Center