Old/New Testament
அபிமெலேக்கு ராஜா ஆகுதல்
9 யெருபாகாலின் (கிதியோன்) வேலைக்காரியின் குமாரனான அபிமெலேக்கு சீகேமில் வாழ்ந்த தனது மாமன்மார்களிடம், “எனது தாயின் குடும்பத்தாரிடம் சென்று, 2 சீகோம் நகரின் தலைவர்களிடம் இக்கோள்வியைக் கேளுங்கள்: ‘யெருபாகாலின் 70 குமாரர்களாலும் நீங்கள் ஆளப்படுவது நல்லதா, அல்லது ஒரே ஒருவனால் ஆளப்படுதல் நல்லதா? நான் உங்கள் உறவினன்’ என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்” என்றான்.
3 அபிமெலேக்கின் மாமன்மார் சீகேமின் தலைவர்களைக் சந்தித்து இக்கேள்வியைக் கேட்டார்கள். சீகேமின் தலைவர்கள் அபிமெலேக்கைப் பின்பற்ற முடிவெடுத்தனர். தலைவர்கள், “எவ்வாறாயினும் அவன் நமக்குச் சகோதரன்” என்றார்கள். 4 எனவே, சீகேமின் தலைவர்கள் அபிமெலேக்கிற்கு 70 வெள்ளிக்காசுகளைக் கொடுத்தார்கள். அவ்வெள்ளி பாகால்பேரீத் கோவிலுக்குச் சொந்தமானது. அபிமெலேக்கு அவ்வெள்ளியால் சில மனிதர்களைக் கூலிக்குப் பேசி அமர்த்திக்கொண்டான். அவர்கள் பயனற்ற போக்கிரிகள் ஆவர். அபிமெலேக்கு எங்கு சென்றாலும் அவர்கள் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.
5 பிமெலேக்கு ஒப்ராவிலுள்ள தன் தந்தையின் வீட்டிற்குச் சென்று தன் சகோதரர்களைக் கொன்றான். யெருபாகாலின் (கிதியோன்) 70 குமாரர்களையும் அபிமெலேக்கு கொன்றான். ஒரே சமயத்தில் அவர்களையெல்லாம் கொன்றான். ஆனால் யெருபாகாலின் கடைசி குமாரன் அபிமெலேக்கிடமிருந்து மறைந்திருந்து தப்பிவிட்டான். அவன் பெயர் யோதாம்.
6 பின்பு சீகேமின் எல்லா தலைவர்களும் மில்லோவின் வீட்டாரும் கூடினார்கள். அவர்கள் சீகேமின் பெரிய மரத்தின் தூண் அருகில் கூடி, அபிமெலேக்கைத் தங்கள் ராஜா ஆக்கினார்கள்.
யோதாமின் கதை
7 சீகேம் நகரத்தின் தலைவர்கள் அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள் என்பதை யோதாம் கேள்விப்பட்டான். அவன் அதைக் கேள்விப்பட்டபோது அவன் கெரிசீம் மலையின் மேல் போய் நின்றான். யோதாம் பின்வரும் உவமையை ஜனங்களுக்கு உரக்கக் கூறினான்:
“சீகேம் நகரத்தின் தலைவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். பின் தேவன் உங்களுக்குச் செவிசாய்க்கட்டும். 8 ஒருநாள் மரங்கள் தம்மை ஆள்வதற்கு ஓர் ராஜாவைத் தேர்ந்தெடுக்க முடிவுசெய்தன. மரங்கள் ஒலிவமரத்திடம், ‘எங்களுக்கு நீ ராஜாவாக இருந்து ஆளுகை செய்’ என்றன.
9 “ஆனால் ஒலிவமரம், ‘மனிதர்களும் தேவனும் எனது எண்ணெய்க்காக என்னைப் போற்றுகின்றனர். நான் எண்ணெய் தருவதை நிறுத்திவிட்டு பிற மரங்களை ஆளும்படி போக முடியுமா?’ என்றது.
10 “பின் மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து, ‘நீ வந்து எங்களுக்கு ராஜாவாயிரு’ என்றன.
11 “ஆனால் அத்திமரம், ‘நான் நல்ல, இனிய பழம் தருவதை நிறுத்திவிட்டுப் பிற மரங்களை ஆட்சி செய்ய வர முடியுமா?’ என்றது.
12 “பின் மரங்கள் திராட்சைக் கொடியைப் பார்த்து, ‘எங்களுக்கு ராஜாவாக இரு’ என்றன.
13 “அதற்குத் திராட்சைக்கொடி, ‘எனது ரசம் மனிதர்களையும் ராஜாக்களையும் மகிழ்விக்கின்றது. நான் ரசத்தை உண்டாக்குவதை நிறுத்திவிட்டு மரங்களை ஆளமுடியுமா?’ என்று பதில் சொன்னது.
14 “இறுதியில் எல்லா மரங்களும் முட்புதரைப் பார்த்து, ‘எங்களுக்கு ராஜாவாயிரு’ என்றன.
15 “அந்த முட்புதர் மரங்களைப் பார்த்து, ‘நான் உங்களுக்கு உண்மையாகவே ராஜாவாக வேண்டுமென்றால், என் நிழலின் கீழ் வாருங்கள். உங்களுக்கு அவ்வாறு செய்ய விருப்பமில்லையென்றால், முட்புதரிலிருந்து நெருப்பு எழட்டும். நெருப்பு லீபனோனிலுள்ள கேதுரு மரங்களையும் எரிக்கட்டும்’ என்றது.
16 “இப்போதும் நீங்கள் முழுமையாக நேர்மையுடன் அபிமெலேக்கை ராஜாவாக்கியிருந்தால் அவனோடு சந்தோஷமாயிருங்கள். நீங்கள் யெருபாகாலோடும் அவனது குடும்பத்தோடும் நியாயமாக நடந்திருந்தால் நல்லது. யெருபாகாலைத் தக்கபடி சிறப்பித்திருந்தீர்களாயின் அது நல்லது. 17 ஆனால் என் தந்தை உங்களுக்குச் செய்ததை நினைவுகூருங்கள். என் தந்தை உங்களுக்காகப் போர் செய்தார். தமது உயிரைப் பணயம் வைத்து மீதியானியரிடமிருந்து உங்களைக் காப்பாற்றினார். 18 ஆனால் நீங்கள் என் தந்தையின் குடும்பத்திற்கு எதிராகத் திரும்பினீர்கள். நீங்கள் என் தந்தையின் 70 குமாரர்களையும் ஒரே நேரத்தில் கொன்றீர்கள். சீகேம் நகரத்திற்கு அபிமெலேக்கை ராஜாவாக்கினீர்கள். அவன் உங்களது உறவினன் என்பதால் அவனை ராஜாவாக்கினீர்கள். ஆனால் அவன் எங்கள் தந்தையின் அடிமைப் பெண்ணின் ஒரே குமாரன். 19 ஆனால் நீங்கள் யெருபாகாலிற்கும், அவனது குடும்பத்திற்கும் முழு நேர்மையானவர்களாக இருந்திருந்தால், நீங்கள் அபிமெலேக்கை உங்கள் ராஜாவாக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். மேலும் அவனும் தனது குடிகளோடு மகிழ்ச்சியாக இருப்பான் என நம்புகிறேன். 20 ஆனால் நீங்கள் நியாயமாக நடந்து கொள்ளாவிட்டால், சீகேமின் தலைவர்களையும், மில்லோவின் வீட்டாரையும் அபிமெலேக்கு அழிப்பதுடன், அபிமெலேக்கும் அழிந்து போவானென்று நான் நம்புகிறேன்!” என்றான்.
21 யோதாம் இவற்றையெல்லாம் கூறிமுடித்ததும் ஓடிப்போய்விட்டான். பேயேர் என்னும் நகரத்திற்கு அவன் தப்பிச் சென்றான். தனது சகோதரனாகிய அபிமெலேக்குக்கு பயந்ததால் யோதாம் அந்நகரத்தில் தங்கியிருந்தான்.
அபிமெலேக்கு சீகேமை எதிர்த்துப் போரிடுதல்
22 அபிமெலேக்கு இஸ்ரவேலரை மூன்று ஆண்டுகள் ஆண்டு வந்தான். 23-24 யெருபாகாலின் 70 குமாரர்களையும் அபிமெலேக்கு கொன்றிருந்தான். அவர்கள் அபிமெலேக்கின் சொந்த சகோதரர்கள்! இத்தவறான காரியத்தைச் செய்வதற்கு சீகேமின் தலைவர்கள் அவனுக்கு உதவினர். எனவே தேவன் அபிமெலேக்கிற்கும் சீகேம் மனிதர்களுக்குமிடையே ஒரு தீய ஆவியை அனுப்பினார். அபிமெலேக்கை தாக்குவதற்கு சீகேமின் தலைவர்கள் திட்டமிட்டனர். 25 சீகேம் நகரின் தலைவர்களுக்கு அபிமெலேக்கின் மேல் இருந்த விருப்பம் குறைந்தது. மலையில் கடந்து சென்றவர்களையெல்லாம் தாக்கி அவர்களது பெருட்களைப் பறிக்கும்பொருட்டு அவர்கள் மலையின்மேல் ஆட்களை அமர்த்தினார்கள். இந்தத் தாக்குதலைக் குறித்து அபிமெலேக்கு அறிந்தான்.
26 ஏபேதின் குமாரனாகிய காகால் என்னும் பெயருடையவனும் அவனது சகோதரர்களும் சீகேம் நகருக்கு வந்தனர். சீகேமின் தலைவர்கள் காகாலை நம்பி, அவனைப் பின்பற்றுவதற்கு முடிவு செய்தனர்.
27 ஒரு நாள் சீகேம் ஜனங்கள் திராட்சைகளைச் சேகரிப்பதற்குத் தோட்டங்களுக்குச் சென்று திராட்சைகளைப் பிழிந்து ரசம் தயாரித்தனர். பின் அவர்கள் தெய்வங்களின் கோவிலில் ஒரு விருந்து நடத்தினார்கள். ஜனங்கள் உண்டு குடித்து, அபிமெலேக்கைத் தூஷித்தனர்.
28 ஏபேதின் குமாரனாகிய காகால், “நாம் சீகேமின் மனிதர்கள். நாம் ஏன் அபிமெலேக்கிற்குக் கீழ்ப்படிய வேண்டும்? அவன் தன்னை யாரென்று நினைத்திருக்கிறான்? அபிமெலேக்கு, யெருபாகாலின் குமாரர்களில் ஒருவன் மாத்திரமே. மேலும் அவன் சேபூலைத் தனது அதிகாரியாக நியமித்தானே நாம் அபிமெலேக்கிற்குக் கீழ்ப்படியக்கூடாது. ஏமோரின் ஜனங்களே, நாம் நமது ஜனங்களையே பின்பற்ற வேண்டும். (ஏமோர் சீகேமின் தந்தை.) 29 நீங்கள் என்னை இந்த ஜனங்களுக்கு சேனைத் தலைவனாக ஆக்கினால் நான் அபிமெலேக்கை அழிப்பேன். நான் அவனிடம் ‘உன் சேனையைத் தயார் செய்து போருக்கு வா’ என்று கூறுவேன்” என்றான்.
30 சீகேம் நகரத்தின் ஆளுநராக சேபூல் இருந்தான். ஏபேதின் குமாரனாகிய காகால் சொன்னதைக் கேட்டுச் சேபூல் கோபமடைந்தான். 31 அருமா நகரில் உள்ள அபிமெலேக்கிடம் சேபூல் தூதுவர்களை அனுப்பி:
“ஏபேதின் குமாரனாகிய காகாலும், காகலின் சகோதரர்களும் சீகேம் நகரத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் உமக்குத் தொல்லை தருகின்றனர். நகரம் முழுவதையும் உமக்கு எதிராக காகால் திருப்புகின்றான். 32 எனவே நீரும், உமது ஆட்களும் இன்றிரவு வந்து நகரத்திற்கு வெளியேயுள்ள வயல்களில் மறைந்திருக்க வேண்டும். 33 காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் நகரத்தைத் தாக்குங்கள். காகாலும் அவனது ஆட்களும் உங்களோடு போரிடுவதற்கு நகரத்திலிருந்து வெளியே வருவார்கள். அவர்கள் போரிடுவதற்கு வெளியே வரும்போது, உம்மால் முடிந்ததை அவர்களுக்குச் செய்யும்” என்று சொல்லச் சொன்னான்.
34 எனவே அபிமெலேக்கும் அவனுடைய எல்லா வீரர்களும் இரவில் எழுந்து நான்கு குழுக்களாகப் பிரிந்து நகரத்திற்குச் சென்றார்கள். அவர்கள் சீகேம் நகரத்திற்கு அருகே ஒளிந்திருந்தார்கள். 35 ஏபேதின் குமாரனாகிய காகால் வெளியே சென்று சீகேம் நகரத்திற்கு நுழையும் வாயிலின் அருகே நின்றுகொண்டிருந்தான். காகால் அங்கு நின்றுகொண்டிருந்தபோது அபிமெலேக்கும் அவனது வீரர்களும் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்தனர்.
36 காகால் அந்த வீரர்களைக் கண்டான். காகால் சேபூலிடம், “பார், மலைகளிலிருந்து ஜனங்கள் இறங்கி வருகிறார்கள்” என்றான்.
ஆனால் சேபூல், “நீ மலைகளிலுள்ள நிழலையே காண்கிறாய். நிழல்கள் ஜனங்களைப் போலத் தோற்றமளிக்கின்றன” என்றான்.
37 காகால் மீண்டும், “பார், சில ஜனங்கள் தேசத்தின் மேட்டுப் பகுதியிலிருந்து இறங்கி வருகின்றனர். அங்கே பார், மந்திரவாதியின் மரமருகே யாரோ ஒருவனின் தலையை நான் காணமுடிந்தது” என்றான். 38 சேபூல் காகாலை நோக்கி, “நீ ஏன் வாய் மூடி இருக்கிறாய்? ‘அபிமெலேக்கு யார்? ஏன் அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?’ என்றாய். நீ அவர்களைக் கிண்டல் செய்தாய். இப்போது அவர்களை எதிர்த்துப் போரிடு” என்றான்.
39 எனவே சீகேமின் தலைவர்களை அபிமெலேக்கோடு போரிடுவதற்கு வழி நடத்தி காகால் அழைத்து வந்தான். 40 அபிமெலேக்கும் அவனது ஆட்களும் காகாலையும் அவனது ஆட்களையும் துரத்தினர். காகாலின் ஆட்கள் சீகேம் நகரத்தில் வாயிலை நோக்கி ஓடினார்கள். காகாலின் வீரர்களில் பலர் அவர்கள் வாசலுக்குள் நுழைவதற்கு முன்னரே கொல்லப்பட்டனர்.
41 பின் அபிமெலேக்கு அருமா நகரத்திற்குத் திரும்பினான். சேபூல் காகாலையும் அவன் சகோதரரையும் சீகேம் நகரைவிட்டுக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினான்.
42 மறுநாள் சீகேமின் ஜனங்கள் வயல்களுக்கு வேலை செய்யப்போனார்கள். அபிமெலேக்கிற்கு அவ்விஷயம் தெரிந்துவிட்டது. 43 எனவே அபிமெலேக்கு அவனது ஆட்களை மூன்று குழுக்களாகப் பிரித்தான். அவன் சீகேமின் ஜனங்களைத் திடீரென தாக்குவதற்கு விரும்பினான். எனவே தன்னுடைய ஆட்களை வயலில் மறைந்திருக்கும்படி செய்தான். நகரத்திலிருந்து ஜனங்கள் வெளியே வந்ததும் அவர்கள்மேல் பாய்ந்து அவர்களைத் தாக்கினார்கள். 44 அபிமெலேக்கும் அவனது குழுவினரும் சீகேமின் வாசலுக்கு அருகில் இருந்த ஓர் இடத்திற்கு ஓடினார்கள். மற்ற இரண்டு குழுவினரும் வயல்களிலிருந்த ஜனங்களிடம் ஓடி அவர்களைக் கொன்றார்கள். 45 அபிமெலேக்கும் அவனது ஆட்களும் அந்த நாள் முழுவதும் சீகேம் நகரத்தை எதிர்த்துப் போரிட்டனர். அபிமெலேக்கும் அவனது ஆட்களும் சீகேம் நகரைக் கைப்பற்றி, அந்த நகரத்தின் ஜனங்களைக் கொன்றனர். பின் அபிமெலேக்கு நகரத்தை இடித்துப் பாழாக்கி, அதன் மீது உப்பைத் தூவினான்.
46 சீகேம் நகரத்துக் கோபுரத்தில் சில மக்கள் வாழ்ந்தனர். அந்த இடத்திலுள்ள ஜனங்கள் சீகேம் நகரத்திற்கு நடந்ததைக் கேள்விப்பட்டபோது அவர்கள் ஏல்பேரீத் என்னும் தெய்வத்தின் கோவிலிலுள்ள பாதுகாப்பான அறையில் வந்து பதுங்கினார்கள்.
47 அபிமெலேக்கு சீகேமின் ஜனங்கள் ஒருமித்து பதுங்கியிருப்பதைக் கேள்விப்பட்டான். 48 எனவே அபிமெலேக்கும் அவனது ஆட்களும் சல்மோன் மலை உச்சிக்குச் சென்றனர். அபிமெலேக்கு ஒரு கோடாரியை எடுத்து மரக்கிளைகள் சிலவற்றை வெட்டி, அவற்றைத் தோளில் சுமந்து வந்தான். அபிமெலேக்கு தன்னோடிருந்தவர்களிடம், “விரைந்து நான் செய்வதைப் போலவே செய்யுங்கள்” என்றான். 49 எனவே அவர்களும் அபிமெலேக்கைப் போலவே கிளைகளை வெட்டினார்கள். அவர்கள் மரக்கிளைளைப் ஏல்பேரீத் கோவிலின் பாதுகாப்பான அறைக்கு வெளியே குவித்து அதற்கு நெருப்பூட்டி, உள்ளே பதுங்கியிருந்த ஆட்களை எரித்துப்போட்டனர். சுமார் 1,000 ஆண்களும், பெண்களும் சீகேம் கோபுரத்திற்கருகில் மரித்தனர்.
அபிமெலேக்கின் மரணம்
50 பின் அபிமெலேக்கும் அவனது ஆட்களும் தேபேசு நகரத்திற்குச் சென்று, அதைக் கைப்பற்றினர். 51 நகரத்தின் உள்ளே பலமான ஒரு கோபுரம் இருந்தது. அந்நகரத்தின் தலைவர்களும் ஆண்களும் பெண்களும் அக்கோபுரத்திற்கு ஓடினார்கள். எல்லோரும் உள்ளே நுழைந்து உட்புறமாகக் கதவைத் தாழிட்டு கோபுரத்தின் உச்சியின்மீது ஏறினார்கள். 52 அபிமெலேக்கும் அவனது ஆட்களும் கோபுரத்தைத் தாக்குவதற்காக அங்கு வந்தனர். அபிமெலேக்கு கோபுர வாசலினருகே வந்தான். அவன் கோபுரத்திற்கு நெருப்பூட்ட எண்ணினான். 53 ஆனால் கோபுர வாசலின் முன் அபிமெலேக்கு நின்றுகொண்டிருந்தபோது கோபுர உச்சியில் இருந்த ஒரு பெண் ஏந்திர கல்லை அவன் தலைமீது போட்டாள். அக்கல் அபிமெலேக்கின் மண்டையைப் பிளந்தது. 54 உடனே அபிமெலேக்கு ஆயுதங்களைத் தாங்கி நின்ற தன் பணியாளை நோக்கி, “உன் வாளை எடுத்து என்னைக் கொன்றுவிடு. ‘ஒரு பெண் அபிமெலேக்கை கொன்றாள்’ என்று ஜனங்கள் கூறாதபடிக்கு நீ என்னைக் கொல்ல வேண்டுமென விரும்புகிறேன்” என்றான். எனவே பணியாள் அவனது வாளால் அபிமெலேக்கை வெட்ட, அவன் மரித்தான். 55 அபிமெலேக்கு மரித்ததைக் கண்டு இஸ்ரவேலர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பினார்கள்.
56 இவ்வாறு, அவன் செய்த எல்லா தீமைகளுக்காக தேவன் அபிமெலேக்கைத் தண்டித்தார். அபிமெலேக்கு தன் 70 சகோதரர்களையும் கொன்று தன் தந்தைக்கெதிராய் தீமைசெய்தான். 57 சீகேமின் ஜனங்களை அவர்களின் தீய செயல்களுக்காக தேவன் தண்டித்தார். எனவே யோதாம் கூறியவை அனைத்தும் நிகழ்ந்தன. (யெருபாகாலின் கடைசி குமாரன் யோதாம், யெருபாகாலின் மறுபெயர் கிதியோன்.)
நியாயாதிபதியாகிய தோலா
10 அபிமெலேக்கு மரித்தபின், தேவன் மற்றொரு நியாயாதிபதியை இஸ்ரவேலரை காப்பாற்றும்படி எழுப்பினார். அந்த மனிதனின் பெயர் தோலா. தோலா, பூவா என்பவனின் குமாரன். பூவா தோதோவின் குமாரன். தோலா இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்தவன். தோலா சாமீர் நகரத்தில் வசித்து வந்தான். சாமீர் நகரம் எப்பிராயீம் மலைநாட்டில் இருந்தது. 2 தோலா இஸ்ரவேலருக்கு 23 ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்தான். பின்பு அவன் மரித்தபோது சாமீர் நகரத்தில் புதைக்கப்பட்டான்.
நியாயாதிபதியாகிய யாவீர்
3 தோலா மரித்தபின், தேவனால் மற்றொரு நீதிபதி நியமிக்கப்பட்டான். அவன் பெயர் யாவீர். யாவீர் கீலேயாத் தேசத்தில் வாழ்ந்து வந்தான். யாவீர் இஸ்ரவேலருக்கு 22 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தான். 4 யாவீருக்கு 30 குமாரர்கள் இருந்தனர். அந்த 30 குமாரர்களும் 30 கழுதைகளின் மீது சவாரி செய்தனர். அவர்கள் கீலேயாத் தேசத்தில் உள்ள 30 நகரங்களைத் தம் அதிகாரத்துக்குட்படுத்திக் கொண்டனர். அவை இன்றும் யாவீரின் நகரங்கள் எனப்படுகின்றன. 5 யாவீர் மரித்தபோது காமோன் நகரில் அடக்கம் பண்ணப்பட்டான்.
அம்மோனியர் இஸ்ரவேலரைஎதிர்த்துப் போரிடுதல்
6 தீமையானவைகள் என கர்த்தரால் குறிக்கப்பட்ட அனைத்தையும் இஸ்ரவேலர் மீண்டும் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் பொய்த் தெய்வங்களாகிய பாகாலையும், அஸ்தரோத்தையும் தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் ஆராமின் தெய்வங்களையும், சீரியாவின் தெய்வங்களையும் சீதோனின் தெய்வங்களையும் மோவாபின் தெய்வங்களையும் அம்மோனியரின் தெய்வங்களையும், பெலிஸ்தரின் தெய்வங்களையும் தொழுதுகொண்டனர். இஸ்ரவேலர் கர்த்தரை மறந்து அவரை ஆராதிப்பதை நிறுத்தினர்.
7 எனவே கர்த்தர் இஸ்ரவேலர் மீது கோபமடைந்தார். பெலிஸ்தரையும் அம்மோனியரையும் இஸ்ரவேலரைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார். 8 அதே ஆண்டில் யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள பகுதியில் கீலேயாத் தேசத்தில் வாழ்ந்த இஸ்ரவேலரையும் அழித்தனர். எமோரியர் வாழ்ந்த தேசம் அதுவே. இஸ்ரவேலர் அங்கு 18 ஆண்டுகள் தொல்லையடைந்தனர். 9 அம்மோனியர் யோர்தான் நதியைக் கடந்தனர். அவர்கள் யூதா, பென்யமீன், எப்பிராயீம் ஜனங்களோடு போரிடச் சென்றனர். அம்மோனியர் இஸ்ரவேலருக்கு மிகுந்த தொல்லைகள் அளித்தனர்.
10 இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிவேண்டி அழுதார்கள். அவர்கள், “தேவனே, உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தேவனை விட்டுப் பொய்த் தெய்வமாகிய பாகாலை நாங்கள் தொழுதுகொண்டோம்” என்றனர்.
11 கர்த்தர் இஸ்ரவேலரை நோக்கி, “எகிப்தியரும், எமோரியரும், அம்மோனியரும், பெலிஸ்தியரும் உங்களைத் துன்புறுத்தும்போது என்னிடம் முறையிட்டீர்கள். நான் அவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றினேன். 12 சீதோனியரும், அமலேக்கியரும், மீதியானியரும் உங்களைத் துன்புறுத்திய போது என்னிடம் முறையிட்டீர்கள். நான் உங்களை அவர்களிடமிருந்தும் காத்தேன். 13 ஆனால் நீங்கள் என்னை விட்டு, விட்டு பிற தெய்வங்களை தொழுதுகொள்ளத் தொடங்கினீர்கள். எனவே உங்களைக் காப்பாற்ற மறுக்கிறேன். 14 நீங்கள் அந்த தெய்வங்களைத் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள். எனவே அவர்களிடம் போய் உதவி வேண்டுங்கள். அந்தத் தெய்வங்கள் உங்கள் தொல்லைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றட்டும்” என்று பதில் கூறினார்.
15 ஆனால் இஸ்ரவேலர் கர்த்தரிடம், “நாங்கள் பாவம் செய்தோம். உமது விருப்பம்போல எங்களுக்குச் செய்யும். ஆனால் இன்று எங்களைக் காப்பாற்றும்” என்றார்கள். 16 பின்பு இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களை வீசியெறிந்து விட்டு, கர்த்தரை மீண்டும் ஆராதிக்க ஆரம்பித்தனர். எனவே கர்த்தர் அவர்கள் துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார்.
யெப்தா தலைவனாக தேர்ந்தெடுக்கப்படுதல்
17 அம்மோன் மக்கள் போருக்காக ஒன்றாகக் கூடினார்கள். அவர்களின் முகாம் கீலேயாத் தேசத்தில் இருந்தது. இஸ்ரவேலர் ஒன்றாகக் கூடினார்கள். மிஸ்பாவில் அவர்களின் முகாம் இருந்தது. 18 கீலேயாத் தேசத்தில் வாழ்ந்த ஜனங்களின் தலைவர்கள், “அம்மோன் ஜனங்களை எதிர்த்துப் போரிடுவதற்குத் தலைமை தாங்கும் மனிதன் கீலேயாத்தில் வாழும் ஜனங்களுக்குத் தலைவன் ஆவான்” என்றனர்.
பக்கவாதக்காரன் குணமடைதல்
(மத்தேயு 9:1-8; மாற்கு 2:1-12)
17 ஒருநாள் இயேசு மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். பரிசேயர்களும் வேதபாரகரும் கூட அங்கே உட்கார்ந்துகொண்டிருந்தனர். கலிலேயா, யூதேயா, எருசலேம் ஆகிய நகரங்களில் இருந்து அவர்கள் வந்திருந்தனர். தேவன் குணமாக்கும் வல்லமையை இயேசுவுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். 18 பக்கவாதக்காரன் ஒருவன் அங்கிருந்தான். சில மனிதர்கள் அவனை ஒரு சிறுபடுக்கையில் சுமந்து வந்தனர். அவர்கள் அவனைக் கொண்டுவந்து இயேசுவின் முன் வைக்க முயன்றனர். 19 ஆனால் மக்கள் திராளாகக் கூடியிருந்ததால் அவர்களால் இயேசுவினருகே வர வழி கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே அந்த மனிதர்கள் கூரையின் மேலேறி, கூரையில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாகப் படுக்கையோடு பக்கவாதக்காரனைக் கீழே இறக்கினர். அவர்கள் இயேசுவின் முன்னே பக்கவாதக்காரன் படுத்திருக்கும்படியாக அந்த அறைக்குள்ளேயே அவனை இறக்கினர். 20 அவர்கள் விசுவாசமுள்ளவர்கள் என்பதை இயேசு கண்டார். நோயாளியிடம் இயேசு, “நண்பனே, உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
21 வேதபாரகரும், பரிசேயரும் தமக்குள்ளேயே, “இந்த மனிதன் யார்? தேவனுக்கு எதிரான காரியங்களை இவன் பேசுகிறான். தேவன் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும்” என்று எண்ணிக் கொண்டனர்.
22 அவர்களின் எண்ணத்தை இயேசு அறிந்திருந்தார். அவர், “நீங்கள் மனதில் இவ்வாறு எண்ணுவது ஏன்? 23 பக்கவாதக்காரனிடம், ‘உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதோ, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வதோ, எது எளிது? 24 ஆனால் பூமியில் பாவங்களை மன்னிக்க தேவனுடைய குமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நான் நிரூபிப்பேன்” என்றார். ஆகவே இயேசு பக்கவாதக்காரனை நோக்கி, “எழுந்து நில், உனது படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ” என்றார்.
25 அப்போது அம்மனிதன் அங்கு கூடியிருந்த மக்களுக்கு முன்பாக எழுந்திருந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு தேவனை வாழ்த்திக்கொண்டே வீட்டிற்கு நடந்து போனான். 26 எல்லா மக்களும் மிகுந்த ஆச்சரியமுற்றனர். அவர்கள் தேவனை வாழ்த்த ஆரம்பித்தனர். தேவனுடைய வல்லமையைக் குறித்து மிகுந்த பயபக்தியுள்ளவர்களாகி, “இன்று ஆச்சரியமான காரியங்களைக் கண்டோம்” என்றார்கள்.
லேவி இயேசுவைத் தொடருதல்
(மத்தேயு 9:9-13; மாற்கு 2:13-17)
27 இது நடந்த பின்னர், இயேசு வெளியே சென்றுகொண்டிருக்கையில் வரி அலுவலகத்தின் முன்பாக வரி வசூலிப்பவன் ஒருவன் உட்கார்ந்திருக்கக் கண்டார். அவன் பெயர் லேவி. இயேசு அவனை நோக்கி, “என்னைத் தொடர்ந்து வா” என்றார். 28 லேவி எழுந்து எல்லாவற்றையும் விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தான்.
29 பின்பு, லேவி, இயேசுவுக்குப் பெரிய விருந்தளித்தான். லேவியின் வீட்டில் அந்த விருந்து நடந்தது. வரி வசூலிப்பவர்கள் பலரும் வேறு சில மக்களும் அவர்களோடு மேசையின் முன் அமர்ந்திருந்தனர். 30 பரிசேயர்களும், வேதபாரகரும் இயேசுவின் சீஷர்களிடம் புகார் கூறத்தொடங்கி, “நீங்கள் வரி வசூலிப்பவர்களோடும் மற்ற தீய மக்களோடும் அமர்ந்து அவர்களோடு உண்பதும் குடிப்பதும் ஏன்?” என்று வினவினர்.
31 அவர்களுக்கு இயேசு, “ஆரோக்கியமான மக்களுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயுற்றோருக்குத்தான் மருத்துவர் தேவை. 32 நல்ல மனிதர்களிடம் மனம் மாறும்படியாகக் கேட்பதற்கு நான் வரவில்லை. தீயவர்கள் மனதையும் வாழ்க்கையையும் மாற்றிக் கொள்ளும்படியாகக் கேட்பதற்கே நான் வந்திருக்கிறேன்” என்று பதிலுரைத்தார்.
உபவாசம் பற்றிய கேள்வி
(மத்தேயு 9:14-17; மாற்கு 2:18-22)
33 அவர்கள் இயேசுவிடம், “யோவானின் சீஷர்கள் அடிக்கடி உபவாசிக்கவும், பிரார்த்திக்கவும் செய்கிறார்கள். பரிசேயர்களின் சீஷர்களும் அதே மாதிரி செய்கிறார்கள். ஆனால் உங்கள் சீஷர்கள் எப்போதும் உண்பதும், குடிப்பதுமாக இருக்கிறார்களே” என்றார்கள்.
34 இயேசு அவர்களிடம், “திருமணத்தின்போது மணமகன் உடனிருக்கையில் மணமகனின் நண்பர்களை உண்ணாதிருக்கும்படியாகக் கூற முடியாது. 35 ஆனால் அவர்களை விட்டு மணமகன் பிரிந்து செல்லும் காலம் வரும். அப்போது அவனது நண்பர்கள் உபவாசம் இருப்பர்” என்றார்.
36 அவர்களுக்கு இயேசு கீழ்வரும் உவமையைக் கூறினார். “ஒரு பழைய அங்கியின் கிழிசலைத் தைக்க ஒருவரும் புதிய அங்கியின் ஒரு பகுதியைக் கிழிப்பதில்லை. ஏன்? அது புதிய அங்கியைப் பாழாக்குவது மட்டுமன்றி, புதிய அங்கியின் துணி பழைய துணியைப்போல் இருப்பதுமில்லை. 37 மக்கள் புதிய திராட்சை இரசத்தைப் பழைய திராட்சை இரசப் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. ஏன்? புதிய திராட்சை இரசம் பைகளைப் பொத்தலாக்கிவிடும். திராட்சை இரசம் சிந்திப்போகும். திராட்சை இரசப் பைகளும் வீணாகிப்போகும். 38 மக்கள் புதிய இரசத்தைப் புதிய பைகளில் வைப்பார்கள். 39 பழைய ரசத்தைப் பருகுகிற மனிதன் புதிய திராட்சை இரசத்தை விரும்புவதில்லை. ஏன்? ‘பழைய திராட்சை ரசமே நல்லது’ என்று அவன் கூறுகின்றான்” என்றார்.
2008 by World Bible Translation Center