Old/New Testament
புதிய கற்பலகைகள்
10 “அந்த நேரத்தில், கர்த்தர் என்னிடம், ‘நீ முதலில் வைத்திருந்ததைப்போன்று இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொண்டு, மலையின்மேல் ஏறி என்னிடம் வா. ஒரு மரப்பெட்டியையும் செய்து எடுத்துக்கொள். 2 நீ உடைத்துப்போட்ட முந்தின கற்பலகைகளில் உள்ள அதே வார்த்தைகளை நான் இந்தப் புதிய கற்பலகைகளின் மீது எழுதுவேன். பின் நீ அவ்விரு கற்பலகைகளையும் அந்த மரப் பெட்டிக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.’
3 “அதன்படி நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்தேன். முதலில் வைத்திருந்ததைப் போல் இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்தேன். பின் நான் மலையின் மீது ஏறிச் சென்றேன். இரண்டு கற்பலகைகளையும் கையில் வைத்திருந்தேன். 4 முன்னர் நீங்கள் அனைவரும் கூட்டமாக கூடிவந்த நாளில், மலையில் அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடுப் பேசிய அந்த பத்துக் கட்டளைகளையும் அவர் அப்போது எழுதித் தந்ததின்படியே இந்தப் பலகைகளிலும் எழுதினார். பின் கர்த்தர் அந்த இரண்டு கற்பலகைகளையும் என்னிடம் தந்தார். 5 மலையில் இருந்து திரும்பிக் கீழே இறங்கி வந்தேன். நான் செய்திருந்த மரப் பெட்டிக்குள் அந்தக் கற்பலகைகளை வைத்தேன். கர்த்தர் எனக்கிட்ட கட்டளையின்படியே அப்பெட்டியில் அவைகளை வைத்தேன். இன்றுவரையிலும் அந்தக் கற்பலகைகள் அந்தப் பெட்டிக்குள்ளேயே உள்ளன.”
6 (இஸ்ரவேல் ஜனங்கள் பெனெயாக்கானுக்கு அடுத்த பேரோத்திலிருந்து மோசாராவிற்குப் பயணம் செய்தார்கள். அங்கே ஆரோன் மரித்துவிட்டான். அவனை அடக்கம் செய்தார்கள். ஆரோனின் மகன் எலெயாசார் ஆரோனின் இடத்தில் ஆசாரியனாக ஊழியம் செய்தான். 7 பின் இஸ்ரவேல் ஜனங்கள் அங்கிருந்து குத்கோதாவுக்கு சென்றனர். அங்கிருந்து ஆறுகள் ஓடும் தேசமான யோத்பாத்துக்கும் சென்றனர். 8 அந்த நேரத்தில் கர்த்தர் மற்ற கோத்திரத்திலிருந்து லேவி குடும்பத்தைத் தனியாகப் பிரித்தெடுத்தார். லேவி குடும்பத்தை தமது சிறப்புப் பணிகளுக்காக பிரித்தெடுத்துக்கொண்டார். அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கும் பணியை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் கர்த்தருக்கு முன் பணியாற்றும் ஆசாரியர்களாக இருந்தனர். கர்த்தருடைய நாமத்தால் ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கியும், ஆராதனை செய்தும் வந்தனர். அவர்கள் இன்று வரையிலும் இந்தச் சிறப்புப் பணிகளைச் செய்து வருகின்றார்கள். 9 இதனாலேயே மற்ற கோத்திரத்தினர் பெற்ற நிலப்பங்கினைப் போல் லேவியின் கோத்திரம் பெறவில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு வாக்களித்தபடி கர்த்தர் தாமே லேவியருக்கு சொத்தும் சுதந்திரமுமாக இருப்பார்.)
10 “நான் முன்பு தங்கியதைப்போல மலையின் மேலே 40 நாட்கள் இரவும், பகலுமாய் தங்கியிருந்தேன். கர்த்தர் இந்த முறையும் நான் வேண்டியதை கேட்டு அருளினார். நான் வேண்டியபடியே கர்த்தர் உங்களை அழிக்காமல்விட்டார். 11 கர்த்தர் என்னிடம், ‘நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டபடி, அந்தத் தேசத்தில் அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு, அவர்களுக்கு முன் தலைமையேற்றுப் பயணப்பட்டுப் போ’ என்றார்.
கர்த்தரின் உண்மையான விருப்பம்
12 “இப்போதும், இஸ்ரவேல் ஜனங்களே கவனியுங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடமிருந்து உண்மையிலேயே விரும்புவது என்ன? கர்த்தர் உங்களிடம் விரும்புவது, நீங்கள் அவருக்கும் அவர் சொன்னவற்றுக்கும் மதிப்பளித்து அதன்படி செய்ய வேண்டும். தேவன் விரும்புவது, நீங்கள் அவர் மீது அன்பு செலுத்துவதையும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உங்கள் முழுமனதோடும், உங்களின் முழு ஆத்மதிருப்தியுடனும் சேவைச் செய்வதே. 13 ஆகையால், நான் இன்று உங்களுக்கு வழங்குகின்ற கர்த்தருடைய கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். உங்களின் நன்மைக்கென்றே இந்தக் கட்டளைகளும், சட்டங்களும் உள்ளன.
14 “எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உரியவை! வானங்களும், வானாதிவானங்களும் கர்த்தருக்குச் சொந்தமானவை. இந்தப் பூமியும் பூமியின் மேல் உள்ள எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சொந்தமானவை. 15 கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின் மீது அன்பு வைத்திருந்தார். அவர்கள்மீது அதிகமாக அன்பு வைத்ததினாலேயே உங்களையும், உங்கள் சந்ததியினரையும் கர்த்தர் தன்னுடைய ஜனங்களாக இன்றும் கருதி அன்பு காட்டுகிறார். மற்ற எல்லா ஜனங்களும் இருந்தாலும் உங்களை தேவன் பிரித்தெடுத்தார். இன்றளவும் நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களாய் இருக்கிறீர்கள்.
16 “உங்களின் பிடிவாத குணத்தை விட்டுவிடுங்கள். உங்களின் உள்ளங்களை கர்த்தருக்குக் கொடுங்கள். 17 ஏனென்றால், உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர் கர்த்தாதி கர்த்தரும், தேவாதி தேவனும் ஆவார். நமது கர்த்தரே மகத்துவமும், வல்லமையும், பயங்கரமும் உடைய தேவனாவார். கர்த்தர் பாரபட்சம் காட்டுபவர் அல்ல. கர்த்தர் தன் மனதை மாற்றிக்கொள்ள பணத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார். 18 அநாதைக் குழந்தைகளுக்கும், விதவைகளுக்கும் ஆதரவாகவும் அன்பு செலுத்துபவராகவும் தேவன் அருள் செய்கிறார். அந்நியர்கள் மீதும் தேவன் அன்பு காட்டுகிறார். அவர்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும் அளிக்கின்றார். 19 எனவே நீங்களும் அந்நியர்களிடம் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால், நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராக இருந்துள்ளீர்கள்.
20 “உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது மரியாதை செலுத்தி அவர் ஒருவரையே நீங்கள் ஆராதிக்க வேண்டும். அவரைவிட்டு ஒரு போதும் விலகாதீர்கள். நீங்கள் எப்போது வாக்களித்தாலும் நமது தேவனுடயை நாமத்தை பயன்படுத்த வேண்டும். 21 நீங்கள் நமது தேவனையே போற்றிப் புகழவேண்டும். கர்த்தரே உங்கள் தேவன். அவரே உங்கள் தேவன் முன்பு இந்த அற்புதங்களையும் மகத்துவங்களையும் உங்களுக்காச் செய்தார். நீங்கள் அனைவரும் உங்கள் கண்களால் அவர் செய்த அனைத்தையும் பார்த்தீர்கள். 22 உங்கள் முற்பிதாக்களில் எழுபது பேரே எகிப்திற்குள் சென்றார்கள். ஆனால் இன்றோ உங்கள் தேவனாகிய கர்த்தர் வானில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களைப்போல் உங்களை மிகப்பெரிய ஜனங்கள் சமுதாயமாக உருவாக்கியுள்ளார்.
கர்த்தரை நினை
11 “உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது
நீங்கள் அன்பு கொள்ளவேண்டும். நீங்கள் பின்பற்றுவதற்காக தேவன் உங்களுக்குக் கூறியவற்றையெல்லாம் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். எப்போதும் நீங்கள் அவரது சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். 2 உங்களுக்குப் போதிக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த பெருஞ் செயல்களை நினைத்துப் பாருங்கள். அந்த மகா காரியங்களைக் கண்டு, அவற்றைக் கடந்து வந்தவர்கள் நீங்களே, உங்கள் குழந்தைகளல்ல. உங்களுக்குத்தான் தெரியும், கர்த்தருடைய மகத்துவத்தைப் பார்த்தவர்கள் நீங்கள், கர்த்தருடைய வலிமையைக் கண்ணாரப் பார்த்துள்ளீர்கள். கர்த்தருடைய ஆற்றல் நிறைந்த செயல்களைப் பார்த்தவர்கள் நீங்கள். 3 கர்த்தருடைய அற்புதங்களைப் பார்த்தவர்கள் நீங்கள் தான், உங்கள் பிள்ளைகள் அல்ல. எகிப்தின் இராஜாவாகிய பார்வோனுக்கும் அவனது நாடு முழுவதிற்கும் கர்த்தர் செய்த அடையாளங்களையும், செயல்களையும் நீங்கள் பார்த்துள்ளீர்கள். 4 எகிப்தின் படையும், அவர்களது குதிரைகளும், இரதங்களும் போரில் உங்களைத் தொடர்ந்து வரும்போது, கர்த்தர் அவர்களைச் செங்கடலின் தண்ணீரில் மூடியதை உங்கள் பிள்ளைகள் அல்ல, நீங்கள்தான் பார்த்தீர்கள். அவர்களை முழுவதுமாக அழித்ததை நீங்கள் பார்த்தீர்கள். 5 உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இன்று இவ்விடத்திற்கு வரும் வரைக்கும், அன்றும் பாலைவனத்தில் உங்களுக்காகச் செய்த எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நீங்கள்தான். உங்கள் பிள்ளைகள் அல்ல. 6 ரூபன் குடும்பத்தைச் சார்ந்த எலியாப் என்பவனின் மகன்களான தாத்தான், அபிராம் இருவருக்கும் கர்த்தர் என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும். பூமி தன் வாயைத் திறந்து அவர்களை விழுங்கியதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தார்கள், அவ்விருவரின் குடும்பங்களையும், கூடாரங்களையும் அவர்களது விலங்குகள், வேலையாட்கள் எல்லாவற்றையும் பூமி விழுங்கியது. 7 கர்த்தர் செய்த இந்தப் பெரிய செயல்களை எல்லாம் உங்களுடைய பிள்ளைகளல்ல, நீங்களே கண்டீர்கள்.
8 “ஆகவே நான் இன்று உங்களுக்குச் சொல்லும் ஒவ்வொரு கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். பின் நீங்கள் பலம் வாய்ந்தவர்களாக ஆவீர்கள். அதனால், யோர்தான் ஆற்றினைக் கடந்து, நீங்கள் நுழையத் தயாராகவுள்ள இந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்வீர்கள். 9 பின் நீங்கள் அந்தத் தேசத்தில் நீண்ட வாழ்க்கை வாழலாம். இந்த தேசத்தை உங்கள் முற்பிதாக்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்துள்ளார். இந்த தேசம் பாலும் தேனும் ஓடக் கூடிய செழிப்பும், எல்லா வளங்களும் நிறைந்த நாடாகவும் இருக்கும். 10 நீங்கள் சுதந்திரமாக வசிக்கப்போகும் இந்த தேசம் நீங்கள் விட்டு வந்த எகிப்து நாட்டைப் போல் இருக்காது. எகிப்தில் நீங்கள் விதை விதைத்தீர்கள். தண்ணீர்ப் பாய்ச்சும்படி உங்கள் கால்களால் மிதித்து, வாய்க்காலில் இருந்து உங்கள் தோட்டங்களுக்கு நீங்கள் தண்ணீர்ப் பாய்ச்சினதுபோல உங்கள் வயல்களுக்கும் தண்ணீர் இறைத்து வந்தீர்கள். 11 ஆனால், இப்போது வசிக்கப்போகின்ற இந்த நிலம் அப்படிப்பட்டது அல்ல. இஸ்ரவேலில் மலைகளும், பள்ளத்தாக்குகளும் உள்ளன. அந்த நிலம் வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம். 12 உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வசிக்கப்போகும் நிலத்தைக் காத்து வருகிறார். வருடத்தின் துவக்கம் முதல் முடிவு வரை ஆண்டு முழுவதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கவனித்து வருகிறார்.
13 “கர்த்தர், ‘நான் இன்று உங்களுக்குத் தரும் கட்டளைகளைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது அன்பு செலுத்தி, அவருக்கு அடி பணிந்து, முழு மனதோடு ஆத்ம திருப்தியுடன் சேவை செய்யவேண்டும். நீங்கள் அப்படிச் செய்தீர்களென்றால், 14 உங்கள் நிலத்திற்குத் தேவையான மழையை ஏற்ற பருவத்தில் பெய்யச் செய்வேன். நீங்கள் உங்கள் தானியங்களைச் சேர்க்கவும், எண்ணெய் வித்துக்களைப் பெருக்கவும், புதிய திராட்சைரசத்தைப் பெறவும், அதற்கான காலத்தில் உங்கள் தேசத்தில் இலையுதிர் காலத்தில் முன்மாரியையும் வசந்த காலத்தில் பின்மாரியையும் நான் அனுப்புவேன். 15 உங்கள் கால் நடைகளுக்குத் தேவையான புல்வெளிகளை செழிப்படையச் செய்வேன். உங்களுக்கு உண்ணும்படி எராளமான ஆகாரம் இருக்கும்’ என்று கூறுகிறார்.
16 “ஆனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்! உங்கள் இருதயம் சந்தேகப்பட்டு விலகாதபடி இருங்கள். உங்களின் வழியிலிருந்து விலகி அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு சேவை செய்யாதீர்கள். 17 அப்படிச் செய்தீர்களானால், பின் கர்த்தர் உங்கள் மீது கடுங்கோபம் கொள்வார். மழை பெய்யாது, உங்கள் நிலம் எவ்வித விளைச்சலையும் தராதபடி வானத்தை அடைத்துவிடுவார். அதனால் கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற இந்த நல்ல தேசத்திலேயே நீங்கள் விரைவில் மரித்து போவீர்கள்.
18 “நான் இன்று உங்களுக்குத் தருகிற இந்தக் கட்டளைகளை எப்போதும் உங்கள் உள்ளங்களில் வையுங்கள். அவற்றை எழுதுங்கள், கட்டுங்கள், அணிந்துகொண்டு, அல்லது உங்கள் கண்களில் படும்படி எப்போதும் உங்களின் ஞாபகத்தில் இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். 19 இந்தச் சட்டங்களை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். உங்கள் வீடுகளில் இருக்கும்போதும், வீதிகளில் நடக்கும்போது, தூங்குவதற்கு முன்பும், எழுந்தப் பின்பும், எப்போதும் இவற்றைப் பற்றியேப் பேச வேண்டும். 20 உங்கள் வீட்டுக் கதவுகள் மீதும், வாசல்களிலும் இந்தக் கட்டளைகளை எழுதி வையுங்கள். 21 அப்போது உங்கள் முற்பிதாக்களிடம் கர்த்தர் கொடுத்த வாக்கின்படி உங்களுக்குச் சுதந்திரமாக வாழக் கொடுத்த நிலத்தில் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நீண்ட காலம் வாழலாம். இந்த பூமியின்மேல் வானம் உள்ளளவும் நீங்கள் நீண்டகாலம் வாழலாம்.
22 “நான் உங்களிடம் கூறியவற்றைப் பின்பற்றுவதிலும், ஒவ்வொரு கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதிலும் எச்சரிக்கையுடன் இருங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது அன்பு செலுத்துங்கள். அவரது எல்லா வழிகளையும் பின்பற்றுங்கள். அவருக்கு உண்மையானவர்களாய் இருங்கள். 23 பின் உங்கள் தேசத்திற்குள் செல்லும்போது கர்த்தர் உங்களுக்கு எதிரான மற்ற இனத்தவர்களை வெளியே துரத்திவிடுவார். உங்களைவிடப் பெரிய பலம் வாய்ந்தவர்களிடமிருந்து அந்த நிலத்தை நீங்கள் கைப்பற்றிவிடலாம். 24 உங்கள் பாதங்கள் படும் இடமெல்லாம் உங்களுடையதாகும். உங்களின் நிலமானது தெற்கே பாலைவனம் முதல் வடக்கே லீபனோன் வரை விரிந்து செல்லும். கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி மத்தியதரைக் கடல் வரையிலும் உங்கள் தேசத்தின் எல்லையாக இருக்கும். 25 உங்களை எதிர்த்து நிற்பவர் எவருமில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்த நிலத்தில் நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்களோ அங்கெல்லாம் அந்த ஜனங்களைப் பயமடையச் செய்வார். அதைத்தான் கர்த்தர் உங்களுக்கு ஏற்கெனவே வாக்களித்திருக்கிறார்.
இஸ்ரவேலர் தெரிந்துகொள்ள வேண்டிய ஆசீர்வாதங்கள் அல்லது சாபங்கள்
26 “நீங்கள் தெரிந்துகொள்ள நான் இன்று உங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறேன். இதோ! ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். இவற்றில் நீங்கள் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 27 நான் இன்று உங்களுக்குக் கூறியிருக்கிறபடி உங்கள் தேவனாகிய கர்த்தர் தந்த கட்டளைகளுக்கு செவிகொடுத்து கீழ்ப்படிந்து, அவற்றைக் கடைப்பிடித்தால் நீங்கள் ஆசீர்வாதம் பெறுவீர்கள். 28 ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதையும், பின்பற்றுவதையும் மறுத்தால் சாபத்தைப் பெறுவீர்கள். ஆகவே, நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்டபடி வாழ்வதை நிறுத்திவிடாதீர்கள். அதுமட்டுமின்றி அந்நிய பொய்த் தெய்வங்ளைப் பின்பற்றாதிருங்கள். கர்த்தரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆனால் அந்தப் பொய்த் தெய்வங்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாது.
29 “உங்களின் சுதந்திர தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். நீங்கள் விரைவில் அந்த தேசத்தில் வாழ்ப்போகிறீர்கள். அந்த நேரத்தில் கெரிசீம் மலையின் உச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களைக் கூறுங்கள். பின்பு ஏபால் மலையின் உச்சிக்குச் செல்லவேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு சாபங்களைக் கூற வேண்டும். 30 இந்த மலைகள் யோர்தான் நதியின் மறுபக்கத்தில் கானானியர் குடியிருக்கின்ற நாட்டில் உள்ளன. இந்த மலைகள் மேற்கு நோக்கி ஓக் மரங்களுக்கு அதிக தொலைவில் இல்லாமல் கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமவெளிக்கு அருகே இருக்கின்றன. 31 நீங்கள் யோர்தான் நதியைக் கடந்து செல்ல வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற நிலத்தைச் சென்றடைவீர்கள். அங்கு சுதந்திரமாகக் குடியிருப்பீர்கள். இந்த நிலத்தில் நீங்கள் வாழும்போது, 32 நான் இன்று உங்களுக்குத் தருகின்ற சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும் கீழ்ப்படிந்து எச்சரிக்கையுடன் அவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
தேவனை ஆராதிப்பதற்கான இடம்
12 “இவைகளே தேவனுடைய கட்டளைகளும், நியாயங்களும் ஆகும். அவற்றை நீங்கள் சுதந்திரமாக வாழப் போகின்ற தேசத்தில் கடைப்பிடிக்க வேண்டும். இந்த பூமியில் நீங்கள் வாழ்கின்ற நாள்வரைக்கும் இந்த கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் கீழ்ப்படிந்து கவனமாக அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். கர்த்தரே! உங்கள் முற்பிதாக்களுடைய தேவன் ஆவார்! அதனாலேயே அவர்களுக்கு அளித்த வாக்கின்படி இந்த சுதந்திர தேசத்தை உங்களுக்குத் தருகிறார். 2 இப்போது வசிக்கின்ற உங்கள் எதிர் இன ஜனங்களிடமிருந்து அந்த தேசத்தை நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள். அந்த ஜனங்கள் எங்கெல்லாம் அவர்களது தெய்வங்களை தொழுது கொண்டார்களோ, அந்த இடங்களையெல்லாம், முழுவதுமாக நீங்கள் அழித்துவிட வேண்டும். அந்த இடங்களெல்லாம் மலைகள் மீதும், மேடுகள் மீதும், பசுமையான மரங்களுக்குக் கீழும் உள்ளன. 3 நீங்கள் அவர்களது பலிபீடங்களை இடித்து, அவர்கள் ஞாபகார்த்த கற்களையும் தூள் தூளாக தகர்த்திட வேண்டும். அவர்களது அஷேரா என்ற ஸ்தம்பத்தையும், பொய்த் தெய்வங்களின் சிலைகளையும் வெட்டி. இவ்வாறு அந்த இடத்திலிருந்து அவைகளின் பெயரை நிர்மூலமாக்க வேண்டும்.
4 “அந்த ஜனங்கள் அவர்களது பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்கிற அதே முறையை நீங்களும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் செய்யக் கூடாது. 5 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகல கோத்திரங்களின் நடுவில் ஒரு சிறந்த இடத்தை தேர்ந்தெடுத்துத் தருவார். கர்த்தர் அவரது நாமத்தை அவ்விடத்திற்கு வைப்பார். அந்த விசேஷ இருப்பிடம் தேவனுடையதாகும். நீங்கள் எல்லோரும் அந்த இடத்திற்குச் சென்றே கர்த்தரை ஆராதிக்க வேண்டும். 6 அங்கே நீங்கள் வரும்போது நெருப்பினால் வேகவைத்த தகனபலியையும், உங்கள் காணிக்கைகளையும். உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும், ஆடு, மாடுளையும், உங்களின் காணிக்கைகளையும், கர்த்தருக்குக் காணிக்கைகளாக வாக்கு கொடுத்த பொருட்களையும், கர்த்தருக்குக் கொடுக்க விரும்பும் பொருட்களையும் உங்கள் மந்தைகளில் உள்ள ஆடு, மாடுகளில் தலைஈற்றுகளையும் கொண்டு வரவேண்டும். 7 நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், அந்த இடத்திற்கு வந்து உண்டு மகிழவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருந்து மகிழ்ச்சியைத் தருவார். அந்த இடத்தில் நீங்கள் எல்லோரும் உங்களது மகிழ்ச்சியையும், உங்கள் கைகளால் செய்த பொருட்களையும், ஒருவருக்கொருவர் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆசீர்வாதங்களையும், நீங்கள் பெற்றுள்ள எல்லாப் பொருட்களையும், அவர் உங்களுக்குத் தந்ததையும் நினைத்துப் பார்பீர்களாக.
8 “ஆனால் நாம் அனைவரும் தொழுது வந்தது போல் நீங்கள் தொழுதுகொள்வதைத் தொடரக் கூடாது. இதுவரையிலும் ஒவ்வொருவரும் தேவனை தாங்கள் விரும்பின வழியில் தொழுது கொண்டு வந்தீர்கள். 9 ஏனென்றால் நாம் உங்கள் தேவனாகிய கர்த்தர் தருகின்ற, அமைதியான, அந்த தேசத்திற்குள் இன்னும் அடி எடுத்து வைக்கவில்லை. 10 ஆனால் நீங்கள் யோர்தான் நதியைக் கடந்துசென்று அந்த தேசத்தில் வாழலாம். அந்த சுதந்திர தேசத்தை கர்த்தர் உங்களுக்குத் தருவார். அங்கே உங்கள் எதிரிகள் அனைவரையும் விலக்கி கர்த்தர் உங்களை இளைப்பாறச் செய்வார். அங்கே நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம். 11 பின் கர்த்தர் அவருக்கான சிறந்த வீட்டினை அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பார். அவ்விடத்திற்கு கர்த்தர் அவரது பெயரை வைப்பார். அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துப் பொருட்களையும், கொண்டுவர வேண்டும். நெருப்பினால் வேகவைத்த தகனபலிகளையும், உங்கள் காணிக்கைகளையும், உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும், ஆடு, மாடுகளையும், உங்கள் காணிக்கைகளையும், கர்த்தருக்கு வாக்குப் பண்ணின பொருட்களையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளின் தலைஈற்றுகளையும், கொண்டுவர வேண்டும். 12 கர்த்தருடைய ஆலயத்திற்கு நீங்களும், உங்கள் பிள்ளைகளும், வேலைக்காரர் அனைவரும் வந்து, உங்கள் நகரங்களில் வசிக்கும் எந்தவொரு சொத்தும் சுதந்திரமும் இல்லாத லேவியருடன்கூடி, வந்திருந்து ஒருவொருக்கொருவர் உங்கள் தேவனாகிய கர்த்தரோடு மகிழ்ச்சியாக இருங்கள். 13 நீங்கள் கண்ட இடங்களில் எல்லாம் உங்கள் விருப்பப்படி தகனபலிகளை செலுத்தாமல் இருக்க கவனமாக இருங்கள். 14 உங்கள் கோத்திரங்கள் நடுவில் அவரது விசேஷ இடத்தினை கர்த்தர் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார். அந்த இடத்தில் மட்டுமே நீங்கள் உங்கள் பலிகளைச் செலுத்தி, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் நீங்கள் அங்கேயே செய்யவேண்டும்.
15 “நீங்கள் எங்கெல்லாம் வசிக்கின்றீர்களோ, அங்கெல்லாம் நீங்கள் விரும்பிய வெளிமான், கலைமான் போன்ற விலங்குகளை அடித்து சாப்பிடலாம். நீங்கள் உங்கள் விருப்பப்படி எவ்வளவு இறைச்சி வேண்டுமானாலும் உண்ணலாம். அந்த அளவிற்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார். யார் வேண்டுமானாலும் அவர்கள் சுத்தமானவர்களாக தேவனை தொழுதுகொள்ள தகுதி உடையவர்களானாலும் சரி, சுத்தமின்றி தேவனை தொழுதுகொள்ள தகுதி இல்லாதவராயினும் சரி, இறைச்சி உணவை சாப்பிடலாம். 16 ஆனால் நீங்கள் இரத்தத்தை மாத்திரம் உண்ணவே கூடாது. அதைத் தண்ணீரைப் போல் தரையிலேயே ஊற்றிவிடவேண்டும்.
17 “நீங்கள் வசித்து வரும் வீடுகளில் இவற்றை நீங்கள் உண்ணவேண்டாம். அந்தப் பொருட்கள் பின்வருமாறு: தேவனுக்காக கொடுக்க இருக்கும் உங்களது தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடு மாடுகளின் தலைஈற்றுகளையும், தேவனுக்குத் தருவதாக வேண்டிக் கொண்டவற்றையும், தேவனுக்காக நீங்கள் கொடுக்க விரும்பும் வேறு எந்தப் பொருட்களையும், அல்லது உங்களின் அன்பளிப்புகளையும், உங்கள் வீடுகளில் உண்ணக்கூடாது. 18 நீங்கள் இவற்றையெல்லாம் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு சேர்ந்து இருக்கக்கூடிய இடத்திலேயே உண்ண வேண்டும். நீங்கள் உங்கள் மகன்கள், மகள்கள், உங்களது எல்லா வேலைக்காரர்கள், மற்றும் உங்கள் நகரங்களில் வசிக்கும் லேவியர்களையும் அழைத்துக்கொண்டு சென்று அந்த இடத்தில் உண்டு மகிழவேண்டும். அந்த இடத்தில் உங்களுக்குள் எல்லோருடனும் ஒன்றுபட்ட மகிழ்ச்சியாலும் அங்கு உங்கள் கைகளால் செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் சந்தோஷப்படுவீர்களாக. 19 எப்போதும் உங்களது இந்த உணவுகளில் லேவியர்களுக்கு பங்கு அளிப்பதில் தவறாதீர்கள். உங்கள் தேசத்தில் நீங்கள் வாழும்வரை இதை நீங்கள் செய்யவேண்டும்.
20-21 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்ததுபோல் உங்கள் நாட்டின் எல்லைகளை விரிவாக்குவார். அவர் அவ்வாறு செய்யும்போது கர்த்தர் அவருக்காகத் தேர்ந்தெடுத்த ஆலயங்கள் நீங்கள் வசிக்கும் இடத்திலிருந்து தொலைவில் இருக்கலாம். அவ்வாறு தொலை தூரம் இருந்தால் நீங்கள் வரும் வழியில் பசி ஏற்பட்டு இறைச்சி உண்ண ஆசைப்பட்டால் அங்கு உங்களுக்கு கிடைக்கும் எந்த இறைச்சியையும் நீங்கள் உண்ணலாம். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளில் எதை வேண்டுமானாலும் நான் உங்களுக்கு இட்ட கட்டளையின்படி அதனை அடித்து உண்ணலாம். இவ்வாறு நீங்கள் விரும்பிய இடங்களில் உண்ணலாம். 22 வெளிமானையும், கலைமானையும், உண்பது போன்றே நீங்கள் அதையும் உண்ணலாம். யாவரும் அதாவது தேவனை தொழுதுகொள்ள தகுதியான சுத்தமானவர்களும், தொழுதுகொள்ளத்தகாத அசுத்தமானவர்களும் அதை உண்ணலாம். 23 ஆனால் அவற்றின் இரத்தத்தை உண்ணக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள், ஏனென்றால் உயிரானது இரத்தத்தில்தான் இருக்கிறது. நீங்கள் அந்த உயிர் இருக்கும்வரை இறைச்சியை உண்ணக்கூடாது. 24 எனவே நீங்கள் இரத்தத்தை உண்ணாமல், தண்ணீரை போல் தரையிலே ஊற்றிவிட வேண்டும். 25 ஆகவே இரத்தத்தை உண்ணக் கூடாது. கர்த்தர் உங்களுக்குச் சொன்ன சரியானவற்றையே நீங்கள் செய்யவேண்டும். பின் உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் நல்லவைகளே நடக்கும்.
26 “தேவனுக்காக ஏதேனும் சிறப்பான வாக்குறுதிகளைக் கொடுக்க நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுக்கும் அந்த ஆலயத்திற்கே செல்லவேண்டும். அதுமட்டுமின்றி, தேவனுக்காக நீங்கள் செய்த சிறப்பு வாக்குறுதியை தேவனுடைய ஆலயத்திற்கே சென்று செலுத்த வேண்டும். 27 அங்கேயே நீங்கள் உங்களின் தகன பலிகளையும் செலுத்த வேண்டும். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்திலேயே இறைச்சியோடும், இரத்தத்தோடும் பலியிட வேண்டும். நீங்கள் செய்ய விரும்புகின்ற மற்ற பலிகளின் இரத்தமும், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின் மேலே ஊற்றப்பட வேண்டும். பின், நீங்கள் அந்த மாமிசத்தை உண்ணலாம். 28 நான் கூறும் எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து பின்பற்றுவதில் நீங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பாக நல்லவற்றையும், நேர்மையானவற்றையும் நீங்கள் செய்வதனால் நீங்களும், உங்களுக்குப் பின்வரும் சந்ததியினரும் என்றென்றைக்கும் எல்லாவற்றிலும் நல்லதையே பெறுவீர்கள்.
29 “உங்கள் எதிர் இன ஜனங்களிடமிருந்து, நீங்கள் சுதந்திரமாக வசிக்கப் போகிற தேசத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக அந்த எதிரின ஜனங்களை அழித்துவிடுவார். நீங்கள் அவர்களை வெளியே துரத்திவிட்டு அங்கே வாழப் போகிறீர்கள். 30 அவ்வாறு நடந்ததற்கு பின்பு நீங்களும் எச்சரிக்கையாய் இருங்கள். அந்த ஜனங்களை அழித்துவிடுவீர்கள். அவர்களது பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்ளும் வலையில் சிக்கி விடாதீர்கள்! அந்த பொய்த்தெய்வங்களிடம் உதவிக்காக செல்லாமல் எச்சரிக்கையாய் இருங்கள். ‘அவர்கள் அந்த பொய்த் தெய்வங்களை தொழுதுகொண்டார்கள். ஆகவே நானும், அதைப் பின்பற்றி தொழுதுகொள்ளுவேன்!’ என்று சொல்லிவிடாதீர்கள். 31 உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அதைப்போன்று செய்துவிடாதீர்கள். அந்த விதத்தில் நமது தேவனை தொழுதுகொள்ள வேண்டாம். ஏனென்றால் கர்த்தர் அருவருக்கின்ற எல்லா தீய செயல்களையும், அவர்கள் செய்துள்ளார்கள். அவர்களது பிள்ளைகளைக்கூட அந்த பொய்த் தெய்வங்களுக்காக தீயிலிட்டு பலியிட்டனர்!
32 “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட ஒவ்வொன்றையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இருங்கள். அவற்றில் எதையும் கூட்டவோ, அல்லது குறைக்கவோ கூடாது.
திராட்சைத் தோட்ட உவமை(A)
12 மக்களுக்குப் போதிக்க இயேசு உவமைகளைப் பயன்படுத்தினார். “ஒருவன் தன் தோட்டத்தில் திராட்சை பயிரிட்டான். அவன் வயலைச் சுற்றி மதில்சுவர் எழுப்பினான். திராட்சை இரசம் உருவாக்க ஒரு குழியைத் தோண்டினான். பிறகு அவன் ஒரு கோபுரத்தையும் கட்டினான். அவன் அத்தோட்டத்தைச் சில விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டான். பிறகு அவன் வேறு தேசத்திற்குப் போய்விட்டான்.
2 “பின்னர், திராட்சைப் பழம் பறிப்பதற்கான காலம் வந்தது. திராட்சைத் தோட்டத்திலுள்ள பழத்தின் குத்தகைப் பங்கை வாங்கி வருமாறு தோட்டக்காரன் ஒரு வேலையாளை அனுப்பி வைத்தான். 3 ஆனால் விவசாயிகள் அவனைப் பிடித்துக் கட்டிவைத்து அடித்து வெறுங்கையோடு அனுப்பினர். 4 பின்பு வேறொரு வேலையாளைத் தோட்டக்காரன் அனுப்பினான். அந்த விவசாயிகள் அவனைத் தலையில் அடித்தனர். அவர்கள் அவனுக்கு அவமரியாதை செய்தனர். 5 அதனால் தோட்டக்காரன் மேலும் ஒரு வேலைக்காரனை அனுப்பிவைத்தான். அந்த விவசாயிகள் அவனைக் கொன்று போட்டார்கள். அந்தத் தோட்டக்காரன் மேலும் பல வேலைக்காரர்களை விவசாயிகளிடம் அனுப்பி வைத்தான். விவசாயிகளோ அவர்களில் சிலரை அடித்தும் சிலரைக் கொன்றும் போட்டார்கள்.
6 “அந்தத் தோட்டக்காரனிடம் மேலும் ஒரே ஒரு ஆளே இருந்தான். அவன்தான் அவனது மகன். அவன் தன் மகனைப் பெரிதும் நேசித்தான். எனினும் அவன் மகனை விவசாயிகளிடம் அனுப்ப முடிவு செய்தான். கடைசி ஆளாகத் தன் மகனை மட்டுமே அனுப்ப முடியும் என்று எண்ணினான். ‘என் மகனையாவது விவாசாயிகள் மதிப்பார்கள்’ என்று நம்பினான்.
7 “ஆனால் விவசாயிகள் தங்களுக்குள், ‘இவன்தான் தோட்டத்துச் சொந்தக்காரனின் மகன். இந்தத் தோட்டம் இவனுக்கு உரியதாகும். இவனை நாம் கொன்றுவிட்டால் இத்தோட்டம் நம்முடையதாகிவிடும்’ என்று பேசிக்கொண்டனர். 8 ஆகையால் அந்த விவசாயிகள் அவனது மகனைப் பிடித்து, கொன்று, தோட்டத்துக்கு வெளியே தூக்கி எறிந்துவிட்டனர்.
9 “ஆகையால் தோட்டத்துச் சொந்தக்காரன் வேறு என்ன செய்வான்? அவன் தோட்டத்துக்குப் போய் அந்த விவசாயிகளை எல்லாம் கொல்வான். பிறகு அத்தோட்டத்தை வேறு விவசாயிகளுக்குக் கொடுப்பான். 10 உறுதியாகவே நீங்கள் இந்த வாக்கியத்தை வாசித்துள்ளீர்கள்.
“‘வீடு கட்டுகிறவர்கள் வேண்டாமென ஒதுக்கிய கல்லே வீட்டின் மூலைக்கல்லாயிற்று.
11 கர்த்தர் ஒருவரே இதனைச் செய்தவர். இது நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது’” (B)
12 இயேசு சொன்ன இந்த உவமையை யூதத் தலைவர்களும் கேட்டனர். இந்த உவமை தங்களைப் பற்றியது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். எனவே, அவர்கள் இயேசுவைக் கைது செய்ய ஒரு காரணத்தைத் தேடினர். எனினும் அவர்களுக்கு மக்களைப்பற்றிய பயம் இருந்தது. எனவே, அவர்கள் இயேசுவை விட்டுப் போய்விட்டார்கள்.
யூதத் தலைவர்களின் தந்திரம்(C)
13 பிறகு யூதத்தலைவர்கள், சில பரிசேயர்களையும், ஏரோதியர்கள் என்னும் குழுவில் இருந்து சிலரையும் இயேசுவிடம் அனுப்பி வைத்தார்கள். ஏதாவது இயேசு தவறாகப் பேசினால் அவரைப் பிடிக்க வேண்டும் என்று விரும்பினர். 14 பரிசேயர்களும், ஏரோதியர்களும் இயேசுவிடம் சென்றனர். “போதகரே! நீங்கள் ஒரு நேர்மையான மனிதர் என்று எங்களுக்குத் தெரியும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு எவ்வித அச்சமும் கிடையாது. அவர்கள் அனைவரும் உங்களுக்கு ஒரே மாதிரிதான். தேவனின் வழியைப் பற்றிய உண்மையையே நீங்கள் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். இராயனுக்கு வரி கொடுப்பது சரியா இல்லையா என்பது பற்றிக் கூறுங்கள். நாங்கள் வரி கொடுக்கலாமா, வேண்டாமா?” என்று கேட்டனர்.
15 அவர்களின் தந்திரத்தை இயேசு அறிந்துகொண்டார். அவர், “எதை எதையோ சொல்லி என்னை ஏன் பிடிக்க முயற்சி செய்கிறீர்கள்? ஒரு வெள்ளிக்காசைக் கொண்டு வாருங்கள். நான் பார்க்கவேண்டும்” என்றார். அவர்கள் ஒரு காசைக் கொடுத்தார்கள். அவர்களிடம் இயேசு, 16 “யாருடைய உருவப்படம் இந்தக் காசில் உள்ளது? யாருடைய பெயர் இதில் எழுதப்பட்டுள்ளது?” என்று கேட்டார். அவர்களோ அதற்கு, “இது இராயனுடைய படம், இதில் இராயனின் பெயருள்ளது” என்றனர்.
17 இயேசு அவர்களைப் பார்த்து, “இராயனுக்குரியதை இராயனுக்குக் கொடுங்கள், தேவனுக்குரியதை தேவனிடம் கொடுங்கள்” என்றார். அந்த மக்கள் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள்.
சதுசேயர்களின் தந்திரம்(D)
18 பிறகு சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தனர். (சதுசேயர்கள் என்பவர்கள் எவரும் இறப்பில் இருந்து உயிர்த்தெழ இயலாது என்று நம்புகிறார்கள்.) அவர்கள் இயேசுவிடம் ஒரு வினாவைக் கேட்டார்கள். 19 “போதகரே! ஒருவன் திருமணம் ஆகிக் குழந்தை இல்லாமல் இறந்துபோனால் அவனது சகோதரன் அவனது மனைவியை மணந்துகொள்ளலாம் என்று மோசே எழுதி இருக்கிறார். அவர்களுக்குக் குழந்தை பிறந்தால் அது இறந்த சகோதரனுக்கு உரியதாகும் என்கிறார். 20 ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். முதல் சகோதரன் மணந்துகொண்டபின் இறந்து போனான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லை. 21 ஆகவே, இரண்டாவது சகோதரன் அவளை மணந்துகொண்டான். அவனுக்கும் குழந்தைகள் இல்லை. அவனும் இறந்துவிட்டான். இது போலவே மூன்றாவது சகோதரனுக்கும் ஏற்பட்டது. 22 இவ்வாறே ஏழு சகோதரர்களும் அப்பெண்ணை மணந்து இறந்து விட்டனர். யாருக்குமே அந்தப் பெண்ணோடு குழந்தை பிறக்கவில்லை. இறுதியில் அந்தப் பெண்ணும் இறந்து விட்டாள். 23 ஆனால் ஏழு சகோதரர்களும் அவளை மணந்திருக்கின்றனர். ஆகவே, மரணத்திலிருந்து மக்கள் எழும் காலத்திலே அந்தப் பெண் யாருடைய மனைவியாகக் கருதப்படுவாள்?” என்று கேட்டனர்.
24 இதற்கு இயேசு, “ஏன் இந்தத் தவறைச் செய்கிறீர்கள்? இதற்குக் காரணம் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதை நீங்கள் அறிகிறதில்லை. அல்லது நீங்கள் தேவனின் வல்லமையைத் தெரிந்து கொள்ளவில்லை. 25 மரணத்தில் இருந்து எழும் மக்கள் மத்தியில் திருமண உறவுகள் ஏதும் இராது. மக்கள் ஒருவரையொருவர் மணந்துகொள்ளமாட்டார்கள். அனைத்து மக்களும் பரலோகத்தில் உள்ள தேவதூதர்களைப்போல இருப்பார்கள். 26 மக்கள் மரணத்தில் இருந்து எழுவது பற்றி தேவன் சொன்னதை நீங்கள் நிச்சயம் வாசித்திருக்கிறீர்கள். மோசே தனது நூலில் முட்செடி எரிந்ததைப்பற்றிச் சொல்லும்போது தேவன் மோசேயிடம் இவ்வாறு சொல்கிறார். ‘நான் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவனுமாகிய உங்கள் தேவனுமாயிருக்கிறேன்’ [a] இவர்கள் உண்மையிலேயே மரித்தவர்கள் அல்லர். 27 அவர் உயிரோடு இருப்பவர்களுக்கே தேவனாய் இருக்கிறார். சதுசேயர்களாகிய நீங்கள் தவறானவர்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center