Old/New Testament
ஆரோன்தான் தலைமை ஆசாரியன் என தேவன் உறுதிப்படுத்துதல்
17 கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசு. அவர்களிடமிருந்து 12 கைத்தடிகளை வாங்கு. 12 கோத்திரங்களின் தலைவர்களிடமிருந்தும் ஒவ்வொரு கைத்தடியாகப் பெற வேண்டும். ஒவ்வொருவரின் பெயரையும் அவரவர் கைத்தடியிலும் எழுது. 3 லேவியின் கைத்தடியில் ஆரோனின் பெயரை எழுது. ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு கைத்தடி வீதம் பன்னிரண்டு இருக்க வேண்டும். 4 அக்கைத்தடிகளை ஆசரிப்புக் கூடாரத்திற்குள் உடன்படிக்கைப் பெட்டியின் முன்னால் வை. அந்த இடத்தில்தான் நான் உன்னைச் சந்திப்பேன். அவர்களில் ஒருவனை நான் உண்மையான ஆசாரியனாக தேர்ந்தெடுப்பேன். 5 நான் யாரைத் தேர்ந்தெடுப்பேனோ அவனது கைத்தடியில் இலைகள் துளிர்த்திருக்கும். இதன் மூலம் உனக்கும் எனக்கும் எதிராக முறையிடுபவர்களை நான் தடுப்பேன்” என்று கூறினார்.
6 இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே பேசினான். ஒவ்வொரு 12 கோத்திரங்களின் தலைவரும் தங்கள் கைத்தடியை அவனிடம் கொடுத்தார்கள். மொத்தம் 12 கைத்தடிகளைப் பெற்றான். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு கைத்தடி என்பதாக இருந்தது. ஒரு கைத்தடியில் ஆரோனுடைய பெயர் இருந்தது. 7 மோசே அனைத்து கைத்தடிகளையும் கர்த்தருக்கு முன்னால் உடன்படிக்கைக் கூடாரத்திற்குள் வைத்தான்.
8 மறுநாள் மோசே கூடாரத்திற்குள் நுழைந்தபோது லேவியின் குடும்பத்திலிருந்து வந்த ஆரோனின் கைத்தடியில் புதிய இலைகள் துளிர் விட்டிருந்ததை மோசே பார்த்தான். அதில் கிளைகளும் தோன்றி வாதுமை பழங்களும் காணப்பட்டன. 9 மோசே கர்த்தரின் சமூகத்திலிருந்து கைத் தடிகளை எடுத்து வந்து, இஸ்ரவேல் ஜனங்களிடம் அவற்றைக் காட்டினான். அவரவர் தங்கள் கைத்தடிகளை பார்த்து எடுத்துக்கொண்டனர்.
10 பிறகு கர்த்தர் மோசேயிடம், “ஆரோனின் கைத்தடியை மீண்டும் கூடாரத்திற்குள் எனது உடன்படிக்கைப் பெட்டியின் முன்பாக வை. எப்போதும் எனக்கு எதிராகத் திருப்புவோருக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இது எனக்கு எதிராக அவர்கள் முறையிடுவதை தடுக்கும். எனவே அவர்களை நான் அழிக்கமாட்டேன்” என்று கூறினார். 11 எனவே மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடித்தான்.
12 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயிடம், “நாங்கள் மரித்துப்போவோம் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் தொலைந்தோம். நாங்கள் அனைவரும் அழிந்து போவோம். 13 எவராவது கர்த்தரின் பரிசுத்த இடத்தின் அருகில் வந்தாலும் மரித்துப் போவார்கள். நாங்கள் அனைவரும் மரித்துப் போவோம் என்பது உண்மையா?” என்று கேட்டனர்.
ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களின் வேலை
18 கர்த்தர் ஆரோனிடம், “நீயும், உனது மகன்களும், உன் தந்தையின் குடும்பத்தில் உள்ளவர்களுமே பரிசுத்தமான இடத்தில் ஏற்படும் தவறுகளுக்குப் பொறுப்பாவீர்கள். ஆசாரியர்களுக்கு எதிராக நடை பெறும் தவறுகளுக்கும் நீயும், உனது மகன்களும் பொறுப்பாவீர்கள். 2 உனது கோத்திரத்தில் உள்ள மற்ற வேவியர்களையும் உங்களோடுச் சேர்த்துக்கொள். ஆசரிப்புக் கூடாரத்தில் நீங்களும் உங்கள் மகன்களும் செய்யும் வேலைகளுக்கு அவர்கள் உதவுவார்கள். 3 லேவியரின் குடும்பத்தில் உள்ள அனைத்து ஜனங்களும் உங்கள் கட்டுபாட்டிற்குள் இருப்பார்கள். கூடாரத்திற்குள் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்வார்கள். ஆனால் அவர்கள் பரிசுத்தமான இடத்தின் அருகிலோ, பலிபீடத்தின் அருகிலோ போகக்கூடாது. அவ்வாறு போனால் மரித்துப்போவார்கள். நீங்களும் மரித்துப்போவீர்கள். 4 அவர்கள் உங்களோடு சேர்ந்து வேலை செய்வார்கள். அவர்களே ஆசரிப்புக் கூடாரத்தைக் காக்கும் பொறுப்புள்ளவர்கள். கூடாரத்திற்குள் நடை பெற வேண்டிய அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்வார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் உங்கள் அருகில் எவரும் வரக்கூடாது.
5 “இஸ்ரவேல் ஜனங்கள் மீது திரும்பவும் கோபாக்கினை விழாதபடி நீங்கள் பரிசுத்த இடத்தையும் பலிபீடத்தையும் காக்கிற பொறுப்புடையவர்கள். நான் மீண்டும் இஸ்ரவேல் ஜனங்கள் மீது கோபம்கொள்ள விரும்பவில்லை. 6 அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்தும் நானே லேவியர்களைத் தேர்ந்தெடுத்தேன். அவர்கள் உங்களுக்கு ஒரு பரிசைப் போன்றவர்கள். நான், அவர்களை உங்களுக்காக கர்த்தருக்குச் சேவை செய்யவும், ஆசரிப்புக் கூடாரத்திற்குள் சில வேலைகளைச் செய்யவும் தந்தேன். 7 ஆனால் ஆரோனே! நீயும் உன் மகன்களும் மட்டும் ஆசாரியர்களாகப் பணிபுரிய வேண்டும். பலிபீடத்தின் அருகில் செல்லும் தகுதியுடையவர்கள் நீங்கள் மட்டுமே. மகாபரிசுத்த இடத்திற்குள் திரைக்குப் பின்னால் செல்லும் தகுதி உடையவர்களும் நீங்கள் மட்டுமே. ஆசாரியர்களாகப் பணிபுரிவதை உங்களுக்கு ஒரு பரிசாகக் கொடுத்திருக்கிறேன். வேறு எவராவது எனது பரிசுத்த இடத்திற்கு அருகில் வந்தால் கொல்லப்படுவார்கள்” என்று கூறினார்.
8 பிறகு கர்த்தர் ஆரோனிடம், “ஜனங்கள் எனக்குத் தருகிற எல்லா அன்பளிப்புகளுக்கும் உங்களையே பொறுப்பாளர்களாக ஆக்கினேன். இஸ்ரவேல் ஜனங்கள் கொடுக்கும் அனைத்து பரிசுத்தமான அன்பளிப்புகளையும் நான் உங்களுக்குத் தருகிறேன். அவற்றை நீயும் உனது மகன்களும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். அவை எப்பொழுதும் உங்களுக்கு உரியது. 9 ஜனங்கள் பலிகளையும் தானியக் காணிக்கைகளையும், பாவப்பரிகார பலிகளையும், குற்றபரிகாரப் பலிகளையும் கொண்டு வருவார்கள். அவை மிகவும் பரிசுத்தமானவை. தகனம் செய்யப்படாத பலிகளெல்லாம் உங்கள் பங்காகக் கிடைக்கும். அவை உனக்கும் உன் மகன்களுக்கும் உரியதாகும். 10 அவற்றை மிகப் பரிசுத்தமான இடத்தில் வைத்துதான் உண்ண வேண்டும். உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு ஆணும் உண்ணலாம். ஆனால் அவை பரிசுத்தமானவை என்பதை நீங்கள் மறக்கக் கூடாது.
11 “இஸ்ரவேலர்கள் தரும் அசைவாட்டும் பலிகளும், உங்களுக்கு உரியதாகும். நான் அவற்றை உனக்கும், உன் மகன்களுக்கும், உனது மகள்களுக்கும் தருவேன். இது உனது பங்காகும். உன் குடும்பத்திலுள்ள தீட்டு இல்லாத எல்லாரும் அதனை உண்ணலாம்.
12 “அதோடு நான் உனக்கு சிறந்த ஒலிவ எண்ணெயையும், புதிய திராட்சைரசத்தையும், தானியத்தையும் தருவேன். இவை இஸ்ரவேல் ஜனங்களால் கர்த்தராகிய எனக்குக் கொடுக்கப்பட்டவை. இவை அறுவடையின் போது, முதலில் கிடைக்கப் பெற்றவையாயிருக்கும். 13 ஜனங்கள் அறுவடை செய்யும்போதெல்லாம் முதலில் கிடைத்ததை கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். அவற்றையெல்லாம் உனக்குத் தருவேன். உன் குடும்பத்தில் உள்ள தீட்டு இல்லாத ஒவ்வொருவரும் அவற்றை உண்ணலாம்.
14 “இஸ்ரவேல் ஜனங்களால் கர்த்தருக்குக் கொடுக்கப்படும் அனைத்தும் உங்களுக்கு உரியதாகும்.
15 “ஒரு பெண்ணின் முதல் குழந்தையும் ஒரு மிருகத்தின் முதல் குட்டியும் கர்த்தருக்குக் கொடுக்கப்பட வேண்டும். அந்த விலங்கின் முதலீற்று தீட்டுள்ளதாக இருந்தால் கொடுப்பவரே அதைத் திரும்ப விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும். முதலில் பிறந்த குழந்தை காணிக்கையாகக் கொடுக்கப்படும்போது அதுவும் திரும்ப வாங்கப்பட வேண்டும். அப்பொழுது அக்குழந்தை மறுபடியும் அதே குடும்பத்திற்கு உரியதாகிவிடும். 16 அக்குழந்தை ஒரு மாத வயதுடையதாக இருந்தால், அதற்குரிய தொகையைக் கொடுக்கவேண்டும். அத்தொகை 2 அவுன்ஸ் வெள்ளியாகும். அது அதிகாரப் பூர்வமான அளவு முறையில் 5 சேக்கல் உடையதாக எடையிடப்பட வேண்டும். ஒரு சேக்கல் அதிகாரப் பூர்வமான அளவில் 20 கேராவாகும்.
17 “ஆனால் நீங்கள் முதலில் பிறந்த காளைக்கும், ஆட்டுக்கும், வெள்ளாட்டுக்கும் பணம் கொடுக்கக் கூடாது. அவை பரிசுத்தமானவை. அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளிக்கவேண்டும். அவற்றின் கொழுப்பை எரிக்க வேண்டும். இது நெருப்பிலிடப்படும் தகனபலியாகும். இதின் மணம் கர்த்தருக்குப் பிரியமானதாயிருக்கும். 18 அவற்றின் இறைச்சியானது உங்களுக்கு உரியதாகும். அசை வாட்டும் பலியாகச் செலுத்தப்பட்ட மார்புக்கண்டமும், உங்களுக்கு உரியது. மற்ற பலிகளின் தொடைக்கறியும் உங்களுக்கு உரியது. 19 ஜனங்களால் கொடுக்கப்படும் பரிசுத்தமான அன்பளிப்புகளையும் கர்த்தராகிய நான் உங்களுக்குத் தருவேன். இது உங்கள் பங்காகும். நான் இவற்றை உனக்கும், உன் மகன்களுக்கும், உன் மகள்களுக்கும் தருவேன். இந்த சட்டம் எல்லாக் காலத்திற்கும் உரியதாகும். இது கர்த்தரோடு செய்யப்பட்ட உடன்படிக்கையாகும். இதனை உடைக்க முடியாது. நான் இந்த வாக்குறுதியை உனக்கும், உன் சந்ததிகளுக்கும் தந்துள்ளேன், இது மாறாததாகும்” என்று கூறினார்.
20 கர்த்தர் மேலும் ஆரோனிடம், “நீ எவ்வித நிலத்தையும் பெறமாட்டாய். மற்றவர்களுக்குச் சொந்தமான எதுவும் உனக்குச் செந்தமாவதில்லை. கர்த்தராகிய நானே உனக்கு உரியவர். இஸ்ரவேல் ஜனங்கள் நான் வாக்களித்தபடி நிலத்தைப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் என்னை நானே உனக்கு சுதந்திரமாகத் தந்துள்ளேன்.
21 “இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை உங்களுக்குத் தருவார்கள். எனவே நான் அந்தப் பத்தில் ஒன்றை லேவியின் சந்ததியினருக்குக் கொடுக்கிறேன். ஆசாரிப்புக் கூடாரத்தில் பணிபுரியும் அவர்களுக்கு இதுவே சம்பளமாகும். 22 ஆனால் இஸ்ரவேலரின் ஜனங்களில் மற்றவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் அருகில் சென்றால் அவர்கள் சாகடிக்கப்படுவர்! 23 ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பணியாற்றும் லேவியர்கள் இதற்கு எதிரான பாவங்களுக்குப் பொறுப்பாவார்கள். இந்த சட்டம் எல்லாக் காலத்திற்குரியதாகும். நான் மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களித்த நிலமானது லேவியர்களுக்கும் கிடைக்காது. 24 ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை எனக்கு தருவார்கள். நான் அதனை லேவியர்களுக்குத் தருவேன். எனவே லேவியர்கள் மற்ற இஸ்ரவேலரைப் போல நிலம் எதையும் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்று கூறினார்.
25 கர்த்தர் மோசேயிடம், 26 “லேவியர்களிடம் இவற்றை கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை கர்த்தருக்குத் தருவார்கள். அவை லேவியர்களுக்கு உரியதாகும். ஆனால், நீங்கள் அதில் பத்தில் ஒரு பங்கை கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். 27 அறுவடையானதும் தானியத்தையும், திராட்சை ரசத்தையும் நீங்கள் பெறுவீர்கள். அவற்றையும் கர்த்தருக்குக் காணிக்கையாக செலுத்த வேண்டும். 28 இவ்வாறு மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் செய்வது போலவே, நீங்களும் கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தவேண்டும். ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் பத்தில் ஒரு பங்கு உங்களுக்குரியது. உங்களுக்குக் கொடுக்கப்படும் பத்தில் ஒரு பங்கில், கர்த்தருக்கு ஒரு பங்கைத் தரவேண்டும். பிறகு ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அதில் பத்தில் ஒரு பங்கைக் கொடுக்கவேண்டும். 29 இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கைத் தரும்போது நீங்கள் அவற்றில் சிறந்த பரிசுத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அவற்றையே நீங்கள் உங்கள் பாகத்தில் பத்தில் ஒரு பங்காக கர்த்தருக்குத் தரவேண்டும்.
30 “மோசே, லேவியர்களிடம் கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் அறுவடையின் போது தானியத்திலும் திராட்சைரசத்திலும் பத்தில் ஒரு பங்கைத் தருவார்கள். நீங்கள் அவற்றில் சிறந்த பங்கை கர்த்தருக்குத் தரவேண்டும். 31 மீதமுள்ளவற்றை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உண்ணலாம். நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் செய்யும் வேலைகளுக்கு இதுவே கூலியாகும். 32 நீங்கள் எப்போதும் உங்கள் பங்கிலுள்ள சிறந்த பகுதியை மட்டும் கர்த்தருக்குக் கொடுத்து வந்தால் பிறகு எப்போதும் நீங்கள் குற்றவாளியாகமாட்டீர்கள். அந்த அன்பளிப்புகளை எல்லாம் இஸ்ரவேல் ஜனங்களால் தரப்பட்டப் பரிசுத்த காணிக்கைகள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும், அப்போது நீங்கள் அழியமாட்டீர்கள்” என்று கூறினார்.
சிவப்பு பசுவின் சாம்பல்
19 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும் பேசினார். அவர், 2 “இந்த சட்டங்களெல்லாம் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தந்த போதனைகளாகும். பழுதற்ற ஒரு சிவப்புப் பசுவைக் கொண்டு வாருங்கள். அப்பசு நுகத்தடியில் பூட்டப்படாததாகவும் ஊனமில்லாததாகவும் இருக்க வேண்டும். 3 கன்று போடாத இளம் பசுவை ஆசாரியனாகிய எலெயாசாரிடம் கொடுங்கள். அவன் அதை வெளியே கொண்டுப்போய் கொல்லவேண்டும். 4 பிறகு எலெயாசார் அதன் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரல்களால் தொட்டு பரிசுத்த கூடாரத்திற்குள் தெளிக்கவேண்டும். இவ்வாறு அவன் ஏழு முறை செய்யவேண்டும். 5 பின்பு அவன் கண்களுக்கு முன்னால் அந்தப் பசுவின் தோல், சதை, இரத்தம், குடல் அனைத்தும் எரிக்கப்பட வேண்டும். 6 பிறகு, ஆசாரியர் கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும் எடுத்து காளை எரிக்கப்படும் இடத்தில் போடவேண்டும். 7 பின்னர் ஆசாரியன் தன்னையும், தனது உடைகளையும் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். அதற்குப்பின் அவன் கூடாரத்திற்குள் வரவேண்டும். அவன் மாலைவரை தீட்டாக இருப்பான். 8 காளையை எரித்தவனும் தன்னைக் கழுவி உடலைச் சுத்தமாக்க வேண்டும். மேலும் தனது ஆடையையும் தண்ணீரால் கழுவ வேண்டும். அவனும் அன்று மாலைவரை தீட்டாக இருப்பான்.
9 “பிறகு தீட்டு இல்லாத ஒருவன் எரிந்துபோன காளையின் சாம்பலைச் சேகரித்து அவற்றைக் கூடாரத்திற்கு வெளியே சுத்தமான இடத்தில் கொட்ட வேண்டும். ஜனங்கள் இதனை தம்மை சுத்தப்படுத்திக்கொள்ளும் சடங்குகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். இச்சாம்பல் ஒருவனின் பாவத்தைப் போக்கவும் பயன்படும்.
10 “காளையின் சாம்பலைச் சேகரித்தவன் தனது ஆடைகளைத் துவைக்கவேண்டும். அவன் அன்று மாலைவரை தீட்டாக இருப்பான்.
“இந்த விதிகள் எல்லாக் காலத்துக்கும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் உரியதாகும். இந்த விதி உங்களோடு வாழ்கிற அயல் நாட்டவருக்கும் உரியதாகும். 11 எவனாவது, மரித்துப்போனவனின் சரீரத்தை தொட்டால், அவன் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான். 12 அவன் தன்னைத் தீட்டுக்கழிக்கும் தண்ணீரால் மூன்றாவது நாளும், ஏழாவது நாளும் கழுவவேண்டும். அவ்வாறு அவன் செய்யாவிட்டால் தொடர்ந்து அவன் தீட்டுள்ளவனாக இருப்பான். 13 ஒருவன் ஒரு மரித்த சரீரத்தைத் தொட்டால், அவன் தீட்டுள்ளவன் ஆகிறான். அவன் தீட்டுள்ளவனாக பரிசுத்த கூடாரத்திற்குள் சென்றால், அதுவும் தீட்டாகிவிடும். எனவே அவன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து தனியே பிரித்து வைக்கப்படுவான். தீட்டுள்ளவன் மேல் தீட்டுக்கழிக்கும் தண்ணீர் தெளிக்கப்படாவிட்டால், அவன் தொடர்ந்து தீட்டுள்ளவனாக இருப்பான்.
14 “இவை அனைத்தும் தங்கள் கூடாரத்திற்குள் மரித்துப் போகிறவர்களைப் பற்றிய விதிகளாகும். ஒருவன் தனது கூடாரத்தில் மரித்தால், அக்கூடாரத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் தீட்டாகும். அவை ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவையாக இருக்கும். 15 ஒவ்வொரு ஜாடியும், பாத்திரமும் மூடப்படாமல் இருந்தால் தீட்டாகும். 16 வெளியிலே எவனாவது பிணத்தைத் தொட்டால், ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான். போரில் கொல்லப்பட்டவனையோ, மரித்தவனின் எலும்பையோ தொட்டாலும் அவன் தீட்டுள்ளவன் ஆவான்.
17 “எனவே அவனை மீண்டும் சுத்தப்படுத்த எரித்த காளையின் சம்பலை நீங்கள் பயன்படுத்தவேண்டும். ஒரு ஜாடிக்குள் சாம்பலைப்போட்டு தண்ணீரை அதில் விடவேண்டும். 18 தீட்டில்லாத ஒருவன் ஈசோப்புக் கிளையை எடுத்து அதை தண்ணீரில் நனைக்கவேண்டும். பிறகு அதனைக் கூடாரம், சகல பொருட்கள், ஜனங்கள் ஆகியவற்றின் மீது தெளிக்கவேண்டும். மரித்த மனிதனின் சரீரத்தைத் தொட்டவன் மீதும் இவ்வாறு தெளிக்க வேண்டும். போரில் கொல்லப்பட்ட ஒருவனைத் தொட்டவன் மீதும், மரித்துப் போனவனின் எலும்புகளைத் தொட்டவன் மீதும் இவ்வாறு தெளிக்கவேண்டும்.
19 “தீட்டு இல்லாத ஒருவன், இத்தண்ணீரை தீட்டுள்ளவன் மீது மூன்றாவது நாளும், ஏழாவது நாளும் தெளிக்கவேண்டும். ஏழாவது நாள் தீட்டுள்ளவன் சுத்தமாவான். அவன் தனது ஆடையை தண்ணீரில் துவைக்கவேண்டும். மாலையில அவன் சுத்தமாகிவிடுவான்.
20 “ஒருவன் தீட்டுள்ளவனாகி அதிலிருந்து சுத்தமாகாமல் இருந்தால் அவனை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து ஒதுக்கி வைக்கவேண்டும். அவன் மீது தீட்டுக்கழிக்கும் தண்ணீர் தெளிக்கப்படாததால் அவன் சுத்தமாகவில்லை: ஆகையால், அவன் பரிசுத்தக் கூடாரத்தையும் தீட்டாக்கிவிடுவான். 21 இந்த விதி எல்லாக் காலத்திற்கும் உரியது, ஒருவன் தீட்டுக்கழிக்கும் தண்ணீரால் தெளிக்கப்பட்டாலும் அவன் தன் ஆடைகளை தண்ணீரில் துவைக்க வேண்டும். தீட்டுக்கழிக்கும் தண்ணீரைத் தொடுகிற எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 22 தீட்டுள்ள ஒருவன் யாரையாவது தொட்டால் அவனும் தீட்டுள்ளவனாவான். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்” என்று கூறினார்.
5,000 த்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு(A)
30 இயேசுவால் உபதேசம் செய்ய அனுப்பப்பட்ட அவரது சீஷர்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் இயேசுவைச் சுற்றிக் கூடித் தாம் அனைவரும் செய்தவற்றையும் கற்பித்தவற்றையும் அவரிடம் சொன்னார்கள். 31 இயேசுவும், அவரது சீஷர்களும் மக்கள் நெருக்கடி மிக்க இடத்தில் இருந்தனர். அம்மக்கள் அளவில் மிக அதிகமாக இருந்தனர். இயேசுவுக்கும், அவரது சீஷர்களுக்கும் உணவு உட்கொள்ளக்கூட நேரம் இல்லாமல் இருந்தது. இயேசு தன் சீஷர்களிடம் “என்னோடு வாருங்கள். நாம் அமைதியான தனி இடத்துக்குப் போவோம். அங்கு நாம் ஓய்வு எடுக்கலாம்” என்றார்.
32 எனவே, இயேசுவும் அவரது சீஷர்களும் தனியாகச் சென்றனர். மக்களே இல்லாத இடத்துக்கு அவர்கள் படகில் சென்றனர். 33 ஆனால் அவர்கள் செல்வதை நிறைய மக்கள் கண்டனர். அந்த மக்களுக்கு அவர் இயேசு என்று தெரிந்தது. எனவே இயேசு செல்லுகிற இடத்துக்கு எல்லா நகர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் அங்கே ஓடினர். இயேசு போய்ச் சேர்வதற்கு முன்னரே அவர்கள் போய்ச் சேர்ந்துவிட்டனர். 34 இயேசு அங்கே போய்ச் சேர்ந்ததும் தனக்காக ஏராளமான மக்கள் காத்திருப்பதை அறிந்தார். அவர் அவர்களுக்காக மனம் உருகினார். ஏனென்றால், அவர்கள் மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போன்று கவனிக்க ஆளில்லாமல் இருந்தனர். எனவே அவர்களுக்கு இயேசு நிறைய உபதேசம் செய்தார்.
35 அன்று அதிக நேரமாயிற்று. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். அவர்கள், “இங்கு எந்த மக்களும் வாழவில்லை, மற்றும் வெகு நேரமாகிவிட்டது. 36 எனவே மக்களை அனுப்பிவிடும். அவர்களும் சுற்றி இருக்கிற பண்ணைகளுக்கும், நகர்களுக்கும் சென்று தேவையான உணவுப் பொருள்களை அவர்களாகவே வாங்கிக் கொள்வார்கள்” என்றனர்.
37 ஆனால் இயேசுவோ, “அவர்களுக்கு உண்ண நீங்கள் ஏதாவது கொடுங்கள்” என்றார்.
சீஷர்களோ இயேசுவிடம், “இவர்கள் அனைவரும் உண்ணுகிற அளவுக்கு நம்மால் அப்பத்தை வாங்கத் தேவையான பணத்துக்கு நாம் அனைவரும் ஒரு மாதக் காலத்துக்கு உழைத்துப் பணம் சம்பாதிக்க வேண்டும்” என்றனர்.
38 இயேசு, தன் சீஷர்களிடம், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன. போய்ப் பாருங்கள்” என்றார்.
சீஷர்கள் தங்களிடம் உள்ள அப்பங்களை எண்ணிப் பார்த்துவிட்டு இயேசுவிடம் வந்து, “நம்மிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன”, என்றார்கள்.
39 பிறகு இயேசு சீஷர்களிடம், “புல்லின் மேல் மக்கள் சிறு சிறு குழுக்களாக உட்காரும்படி சொல்லுங்கள்” என்றார். 40 ஆகவே எல்லா மக்களும் குழுக்களாக அமர்ந்தனர். ஒவ்வொரு குழுவிலும் 50 அல்லது 100 பேர் இருந்தனர்.
41 இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக் கொண்டார். அவர் வானத்தை ஏறிட்டுப் பார்த்தார். அந்த அப்பங்களுக்காக தேவனுக்கு நன்றி சொன்னார். பின்னர் இயேசு அப்பங்களை பங்கு வைத்துத் தன் சீஷர்களிடம் கொடுத்தார். அவற்றை மக்களுக்குக் கொடுக்குமாறு சொன்னார். மீனையும் அவ்வாறே பங்கிட்டு எடுத்துக் கொடுத்தார்.
42 எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். 43 மக்கள் உண்டு முடித்ததும் எஞ்சியுள்ளவற்றைச் சீஷர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேகரித்தனர். 44 ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அன்று உணவு உண்டனர்.
இயேசு கடலின் மேல் நடத்தல்(B)
45 பிறகு இயேசு சீஷர்களிடம் படகில் ஏறுமாறு சொன்னார். கடலின் அக்கரையில் உள்ள பெத்சாயிதாவுக்குப் போகும்படிக் கூறினார். தான் பிறகு வருவதாக இயேசு கூறியனுப்பினார். இயேசு அங்கே இருந்து அந்த மக்களைத் தம் வீடுகளுக்குச் செல்லுமாறு சொன்னார். 46 அந்த மக்களை இயேசு வழியனுப்பிய பின்பு பிரார்த்தனை செய்வதற்காக மலைக்குச் சென்றார்.
47 அன்று இரவு, அந்தப் படகு கடலின் நடுவிலேயே இருந்தது. இயேசுவோ தனியே கரையிலேயே இருந்தார். 48 கடலில் வெகு தூ ரம் படகு போய்விட்டதைக் கவனித்தார். அவரது சீஷர்கள் மிகவும் கஷ்டப்பட்டு துடுப்பு போடுவதையும் அறிந்தார். காற்றானது அவர்களுக்கு எதிராக அடித்துக் கொண்டிருந்தது. அதிகாலையில், மூன்று மணிக்கும் ஆறு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர் தண்ணீரின் மேல் நடந்து நெருங்கினார். அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார். 49 இயேசுவின் சீஷர்கள் அவர் தண்ணீரின் மேல் நடந்து போய்க்கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள் அவரை ஒரு ஆவி என்று நினைத்தனர். அவர்கள் அச்சத்தோடு கூச்சலிட்டனர். 50 எல்லாரும் இயேசுவைப் பார்த்து பயந்தனர். ஆனால் இயேசுவோ அவர்களிடம், “கவலைப்படாதீர்கள், நான் தான் பயப்படாதிருங்கள்” என்று தேற்றினார். 51 பிறகு அவர் சீஷர்கள் இருந்த படகினுள் ஏறிக்கொண்டார். காற்று அமைதியாயிற்று சீஷர்கள் பெரிதும் பிரமித்தார்கள். 52 அவர்கள் இயேசு ஐந்து அப்பங்களில் இருந்து மிகுதியான அப்பங்களை உருவாக்கியதைப் பார்த்தார்கள். ஆனால் அதனுடைய பொருளை அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. அதை அறிந்துகொள்ளும் சக்தியும் அவர்களுக்கு இல்லை.
அநேக நோயாளிகளை இயேசு குணமாக்குதல்(C)
53 இயேசுவின் சீஷர்கள் அக்கடலைக் கடந்தனர். அவர்கள் கெனெசரேத்தின் கரைக்கு வந்தனர். அங்கே படகைக் கட்டி வைத்தனர். 54 அவர்கள் படகை விட்டு இறங்கியபோது மக்கள் இயேசுவைப் பார்த்தனர். அவர் யாரென்று அவர்கள் அறிந்துகொண்டனர். 55 அம்மக்கள் ஓடிப்போய் அப்பகுதிகளில் உள்ள மக்களிடம் இயேசு இங்கே இருக்கிறார் என்பதை அறிவித்தார்கள். இயேசு போகிற எல்லா இடங்களிலும் மக்கள் நோயாளிகளைப் படுக்கையோடு எடுத்து வந்தனர். 56 அந்தப் பகுதிகளில் உள்ள ஊர்களுக்கும் நகரங்களுக்கும் பண்ணைகளுக்கும் இயேசு சென்றார். இயேசு எங்கே சென்றாலும் அங்குள்ள மக்கள் நோயாளிகளை அவரிடம் எடுத்து வந்தனர். அவர்கள் இயேசுவிடம் அவரது ஆடை நுனியையாவது தொடுவதற்கு அனுமதி கேட்டனர். அவரைத் தொட்டவர்கள் எல்லோரும் குணமடைந்தனர்.
2008 by World Bible Translation Center