Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 39-40

ஆசாரியர்களுக்கான விசேஷ ஆடைகள்

39 கர்த்தரின் பரிசுத்தக் கூடாரத்திற்கு வரும்போது ஆசாரியர் அணிய வேண்டிய விசேஷ ஆடைகளை நெய்வதற்கு இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலை சித்திர வேலையாட்கள் பயன்படுத்தினார்கள். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் ஆரோனுக்கு விசேஷ ஆடைகளைத் தயாரித்தனர்.

ஏபோத்

பொன் ஜரிகை, மெல்லிய துகில், இள நீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூல் ஆகியவற்றால் ஏபோத்தைச் செய்தார்கள். (அவர்கள் பொன்னை மெல்லிய நாடாவாக அடித்து பொன் ஜரிகைகளை வெட்டினார்கள். இந்தப் பொன் ஜரிகையை இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலிலும், மெல்லிய துகிலுடனும் சேர்த்து நெய்தார்கள். இது சிறந்த சித்திரக்காரனின் கைவேலையாக இருந்தது). அவர்கள் ஏபோத்தின் தோள் பட்டைகளைச் செய்தார்கள். ஏபோத்தின் இரண்டு மூலைகளிலும் அந்தத் தோள் பட்டைகளை இணைத்தார்கள். அவர்கள் கச்சையை ஏபோத்தோடு இணைத்தார்கள். ஏபோத்தைப் போலவே இதுவும் செய்யப்பட்டது. அவர்கள் பொன் ஜரிகை, மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

கைவேலைக்காரர் ஏபோத்துக்கு இரண்டு கோமேதகக் கற்களை தங்கச்சட்டத்தில் பதித்தனர். அக்கற்களின்மீது இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களைப் பதித்தனர். பின் அவர்கள் அதனை ஏபோத்தின் தோள்பட்டைகளோடு இணைத்தனர். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் நினைவு கூருவதற்காக இந்தக் கற்கள் பயன்பட்டன. மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே இதைச் செய்தனர்.

நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம்

பின் அவர்கள் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை செய்தனர். ஏபோத்தைச் செய்தது போலவே, இதுவும் கைத்தேர்ந்த சித்திர வேலையாக இருந்தது. அது பொன் ஜரிகை, மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலால் நெய்யப்பட்டன. நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை இரண்டாக மடித்து சதுரவடிவில் அமைத்தனர். இது 9 அங்குல நீளமும் 9 அங்குல அகலமும் உடையதாக இருந்தது. 10 சித்திரவேலையாட்கள் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் 4 வரிசை விலையுயர்ந்த கற்களைப் பதித்தனர். முதல் வரிசையில் பத்மராகமும், புஷ்பராகமும், மாணிக்கமும் இருந்தன. 11 இரண்டாம் வரிசையில் மரகதமும், இந்திர நீலக் கல்லும், வச்சிரமும் காணப்பட்டன. 12 மூன்றாம் வரிசையில் கெம்பும், வைடூரியமும், சுகந்தியும் இருந்தன. 13 நாலாம் வரிசையில் படிகப் பச்சையும், கோமேதகமும், யஸ்பியும் காணப்பட்டன. இந்தக் கற்கள் அனைத்தும் பொன்னில் பூட்டப்பட்டிருந்தது. 14 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் இஸ்ரவேலின் (யாக்கோபின்) ஒவ்வொரு மகனுக்கும் ஒவ்வொரு கல் வீதம் பன்னிரண்டு கற்கள் இருந்தன. ஒவ்வொரு கல்லிலும் முத்திரையைப் போன்று இஸ்ரவேலின் மகன்கள் ஒவ்வொருவரின் பெயரும் பொறிக்கபட்டிருந்தது.

15 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திற்காக சித்திர வேலைக்காரர் பசும்பொன்னால் இரண்டு சங்கிலிகளைச் செய்தார்கள். அச்சங்கிலிகள் கயிறுகளைப் போல் பின்னப்பட்டிருந்தன. 16 சித்திர வேலைக்காரர் இரண்டு பொன் வளையங்களைச் செய்து, அவற்றை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் இரண்டு மூலைகளிலும் இணைத்தனர். தோள்பட்டைகளுக்கு பூட்டும்படி இரண்டு பொன் வளையங்களைச் செய்தனர். 17 அவர்கள் பொன் சங்கிலிகளை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் மூலைகளிலிருந்த வளையங்களில் இணைத்தனர். 18 தோள்பட்டைகளின் பொன்வளையங்களில் பொன் சங்கிலிகளின் மறுமுனைகளை இணைத்தனர். இவற்றை அவர்கள் ஏபோத்தின் முன்புறத்தில் சேர்த்தனர். 19 பின்பு அவர்கள் மேலும் இரண்டு பொன் வளையங்களைச் செய்து அவற்றை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் மற்ற இரண்டு மூலைகளிலும் தைத்தனர். ஏபோத்தை அடுத்து நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் உட்புறத்தில் இது இருந்தது. 20 ஏபோத்தின் முன்புறத்தில் தோள்பட்டைகளின் கீழே இரண்டு பொன் வளையங்களை தைத்தனர். கச்சைக்கு மேலே ஏபோத்தின் இணைப்புக்கருகே இவ்வளையங்கள் இருந்தன. 21 பின் அவர்கள் நீல நிற நாடாவையும், நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் வளையங்களையும் ஏபோத்தின் வளையங்களோடு கட்டினார்கள். இவ்விதமாக நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம் கச்சைக்கு அருகில் ஏபோத்துக்கு இணையாக இருக்கும்படி இழுத்துக் கட்டப்பட்டது. கர்த்தர் கட்டளையிட்டபடி அவர்கள் எல்லாவற்றையும் செய்தனர்.

ஆசாரியர்களுக்கான பிற ஆடைகள்

22 பின் அவர்கள் ஏபோத்திற்காக ஒரு அங்கியை நெய்தனர். இளநீல துணியால் அதைச் செய்தார்கள். அது சிறந்த சித்திரத் தையல்காரனால் நெய்யப்பட்டது. 23 அங்கியின் மத்தியில் ஒரு துளையை அவர்கள் உண்டுபண்ணி, அந்தத் துவாரத்தின் விளிம்பைச் சுற்றிலும் ஒரு துண்டுத் துணியைத் தைத்தனர். துவாரம் கிழிந்து போகாதபடி அது பாதுகாத்தது.

24 பின் அவர்கள் மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நிற நூலைக் கொண்டு துணியாலான மாதுளம் பழங்களை உண்டாக்கினார்கள். அங்கியின் கீழ்த்தொங்கலில் இந்த மாதுளம் பழங்களைத் தைத்தனர். 25 பின்பு பசும் பொன்னால் மணிகளை உண்டாக்கினார்கள். அவற்றை அங்கியின் கீழ்த்தொங்கலில் மாதுளம் பழங்களுக்கு இடையே தொங்கவிட்டனர். 26 அங்கியின் கீழ்த் தொங்கலைச் சுற்றிலும் மாதுளம் பழங்களும், பொன்மணிகளும் இருந்தன. மாதுளம் பழங்களுக்கு இடையில் ஒரு பொன்மணி இருந்தது. மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே, கர்த்தருக்கு பணிவிடை செய்யும்போது ஆசாரியன் அணியும் அங்கியாக இது இருந்தது.

27 ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் சட்டைகளை கைவேலைக்காரர் நெய்தனர். இவை மெல்லிய துகிலால் நெய்யப்பட்டன. 28 மெல்லிய துகிலிலிருந்து கை வேலையாட்கள் ஒவ்வொரு தலைப்பாகையையும் நெய்தனர். உள் ஆடைகளையும் நெற்றிப்பட்டைகளையும் மெல்லிய துகிலிலிருந்து செய்தார்கள்.

29 மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலிலிருந்து கச்சையைச் செய்தனர். ஆடையில் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே இவை அனைத்தும் தைக்கப்பட்டன.

30 பின் பரிசுத்தக் கிரீடத்திற்குரிய நெற்றிப்பட்டையைத் தயாரித்தனர். சுத்தப் பொன்னால் அதைச் செய்தனர். அந்தப் பொன் தகட்டில் “கர்த்தருக்குப் பரிசுத்தம்” என்ற வார்த்தைகளைப் பதித்தனர். 31 பொன் பட்டையை நீல நாடாவில் இணைத்தனர். மோசேக்கு கர்த்தர் இட்ட கட்டளைப்படியே இந்த நீல நாடாவை தலைப்பாகையோடு இணைத்தனர்.

மோசே பரிசுத்தக் கூடாரத்தைப் பார்வையிடுதல்

32 இவ்வாறு பரிசுத்தக் கூடாரத்தின் (அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின்) எல்லா வேலைகளும் செய்து முடிக்கப்பட்டன. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் ஜனங்கள் ஒவ்வொன்றையும் செய்தனர். 33 பின் அவர்கள் மோசேக்குப் பரிசுத்தக் கூடாரத்தையும், அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் காட்டினார்கள். வளையங்கள், சட்டங்கள், தாழ்ப்பாள்கள், தூண்கள், பீடங்கள் ஆகியவற்றை அவனுக்குக் காட்டினார்கள். 34 சிவப்புச் சாயம் தோய்த்த ஆட்டுக்கடாவின் தோலால் கூடாரம் மூடப்பட்டிருந்ததைக் காட்டினார்கள். அதன் கீழ் பதனிடப்பட்ட மெல்லிய தோலாலாகிய மூடியையும் காட்டினார்கள். மகா பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலை மூடிய திரைச் சீலையயும் அவர்கள் அவனுக்குக் காட்டினார்கள்.

35 அவர்கள் மோசேக்கு உடன்படிக்கைப் பெட்டியைக் காட்டினார்கள். பெட்டியைச் சுமக்கும் தண்டுகளையும், பெட்டியின் மூடியையும் காண்பித்தனர். 36 மேசையை அதனுடன் சேர்ந்த பொருட்களோடும், விசேஷ ரொட்டியோடும் காட்டினார்கள். 37 அவர்கள் அவனுக்குப் பசும் பொன்னால் செய்யப்பட்ட குத்துவிளக்குத் தண்டையும் அதன் அகல்களையும் காட்டினார்கள். அகலுக்குப் பயன்படுத்தவேண்டிய எண்ணெயையும் பிற பொருட்களையும் காண்பித்தனர். 38 பொன் நறுமணப்பீடம், அபிஷேக எண்ணெய், நறுமணப்பொருள், கூடாரத்தை மூடிய தொங்குதிரை ஆகியவற்றையும் அவர்கள் மோசேக்குக் காட்டினார்கள். 39 வெண்கல பலிபீடத்தையும், வெண்கல சல்லடையையும் அவனுக்குக் காட்டினார்கள். பலிபீடத்தைச் சுமக்கும் தண்டுகளையும் காட்டினார்கள். பலிபீடத்தின் பொருட்களையும் காண்பித்தனர். வெண்கலத் தொட்டியையும் அதன் பீடத்தையும் அவனுக்குக் காட்டினார்கள்.

40 பின்பு தூண்களோடும் அவற்றின் பீடங்களோடும் கூடிய வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலும் காணப்பட்ட தொங்கு திரைகளை அவர்கள் மோசேக்குக் காட்டினார்கள். பிரகாரத்தின் நுழை வாயிலில் இருந்த திரையைக் காண்பித்தனர். கயிறுகளையும், கூடார ஆணிகளையும் காட்டினார்கள். பரிசுத்த கூடாரத்தின் அதாவது ஆசரிப்புக் கூடாரத்தின் எல்லாப் பொருட்களையும் அவர்கள் அவனுக்குக் காட்டினார்கள்.

41 பரிசுத்த பிரகாரங்களில் பணிவிடை செய்யும் ஆசாரியர்களுக்கான ஆடைகளை அவர்கள் மோசேக்குக் காட்டினார்கள். ஆசாரியனான ஆரோனுக்கும், அவனது மகன்களுக்கும் தைக்கப்பட்ட விசேஷ ஆடைகளைக் காட்டினார்கள். அவர்கள் ஆசாரியர்களாகப் பணிவிடை செய்யும்போது அணிய வேண்டிய ஆடைகள் இவையாகும்.

42 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் ஜனங்கள் இந்த வேலைகளை எல்லாம் செய்திருந்தனர். 43 மோசே எல்லா வேலைகளையும் கூர்ந்து கவனித்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே எல்லா வேலைகளும் நிறைவேற்றப்பட்டதைக் கண்டான். எனவே மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.

மோசே பரிசுத்த கூடாரத்தை நிறுவுதல்

40 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “முதல் மாதத்தின் முதல் நாளில் பரிசுத்தக் கூடாரத்தை, அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தை எழுப்பு. பரிசுத்தக் கூடாரத்தில் உடன்படிக்கைப் பெட்டியை வைத்துப் பெட்டியைத் திரையால் மூடு. பிறகு மேசையை உள்ளே கொண்டு வா. மேசையின் மேல் வைக்க வேண்டிய பொருட்களை வை. பின்பு கூடாரத்தில் குத்து விளக்குத் தண்டை வை. சரியான இடங்களில் குத்து விளக்கின் அகல்களை வை. கூடாரத்தில் நறுமணப் பொருட்களின் காணிக்கையைப் படைக்க பொன்னாலான நறுமணப் பீடத்தை வை. உடன்படிக்கைப் பெட்டியின் முன்புறத்தில் நறுமணப்பீடத்தை வை. அதன்பின் பரிசுத்தக் கூடாரத்தின் நுழை வாயிலில் திரைகளை இடு.

“பரிசுத்தக் கூடாரத்தின், அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின் முன்பு தகனபலிக்கான பலிபீடத்தை வை. ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் இடையே தொட்டியை வை. தொட்டியில் தண்ணீர் ஊற்றி வை. வெளிப் பிரகாரத்தைச் சுற்றிலும் திரைச் சீலைகளைத் தொங்கவிடு. பிரகாரத்தின் நுழைவாயில் திரையை அதன் ஸ்தானத்தில் தொங்கவிடு.

“பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து பரிசுத்தக் கூடாரத்தையும் அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் அபிஷேகம் செய். எண்ணெயை இப்பொருட்களின் மேல் ஊற்றும்போது அவை பரிசுத்தமாகும். 10 தகனபலிக்கான பலிபீடத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அபிஷேகம் செய்து, பலிபீடத்தை பரிசுத்தமாக்கு. அது மிகவும் பரிசுத்தமானதாகும். 11 பின் தொட்டியையும், அதன் அடித்தளத்தையும் அபிஷேகம் செய். அப்பொருட்கள் பரிசுத்தமாவதற்கு இவ்வாறு செய்.

12 “ஆரோனையும், அவனது மகன்களையும் ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்கு அழைத்து வா. அவர்களைத் தண்ணீரால் கழுவு. 13 பிறகு ஆரோனுக்கு விசேஷ ஆடைகளை உடுத்தி எண்ணெயால் அபிஷேகம் செய்து அவனைப் பரிசுத்தப்படுத்து. அப்போது அவன் ஆசாரியனாகப் பணியாற்ற முடியும். 14 பின் அவனது மகன்களுக்கும் ஆடைகளை அணிவித்துவிடு. 15 அவர்களது தந்தைக்கு செய்தபடியே அவர்கள் மேலும் எண்ணெயை ஊற்றி அவர்களையும் பரிசுத்தப்படுத்து. அப்போது அவர்களும் ஆசாரியப் பணிவிடை செய்யமுடியும். அவர்கள்மேல் அபிஷேக எண்ணெயை ஊற்றும்போது, அவர்கள் ஆசாரியர் ஆவார்கள். வரும் காலங்களில் எல்லாம் அவர்கள் குடும்பத்தினர் ஆசாரியர்களாகவே இருப்பார்கள்” என்றார். 16 மோசே கர்த்தர் கூறியபடியெல்லாம் செய்தான்.

17 எனவே, ஏற்ற காலத்தில் பரிசுத்தக் கூடாரம் எழுப்பப்பட்டது. எகிப்தைவிட்டுப் புறப்பட்ட இரண்டாம் வருடத்தின் முதல் மாதம் முதல் தேதியன்று 18 கர்த்தர் கூறியபடியே மோசே பரிசுத்த கூடாரத்தை நிறுவினான். முதலில் பீடங்களை வைத்தான். பிறகு பீடங்களின்மீது சட்டங்களை பொருத்தினான். பின்பு தாழ்ப்பாள்களை வைத்து, தூண்களை நிறுவினான். 19 அதன் பிறகு மோசே பரிசுத்தக் கூடாரத்திற்கு மேல் வெளிக் கூடாரத்தை அமைத்தான். பிறகு பரிசுத்தக் கூடாரத்தின் மேல் மூடியை அமைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இவற்றையெல்லாம் செய்தான்.

20 மோசே உடன்படிக்கையை எடுத்து அதை பரிசுத்தப் பெட்டியில் வைத்தான். மோசே பெட்டியின்மீது தண்டுகளை வைத்து பெட்டியின் மூடியை பொருத்தினான். 21 பின்பு மோசே பரிசுத்தப் பெட்டியை பரிசுத்தக் கூடாரத்தில் வைத்தான். அதைப் பாதுகாப்பதற்காக தொங்கு திரையை அதற்குரிய இடத்தில் தொங்கவிட்டான். இவ்வாறு அவன் கர்த்தர் கட்டளையிட்டபடியே தொங்கு திரைகளுக்குப் பின்னே உடன்படிக்கைப் பெட்டியை வைத்து பாதுகாத்தான். 22 பிறகு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் மேசையை வைத்தான். அதைக் கூடாரத்தின் வடக்குத் திசையில் இருந்த பரிசுத்தக் கூடாரத்தில் திரைகளுக்கு முன்னே வைத்தான். 23 பிறகு கர்த்தருக்கு முன்னே மேசையின்மீது பரிசுத்த அப்பத்தை வைத்தான். கர்த்தர் சொன்னபடியே அவன் இதைச் செய்தான். 24 பிறகு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் குத்துவிளக்குத் தண்டை வைத்தான். கூடாரத்தின் தெற்குப் பகுதியில் மேசைக்கு எதிராக அதனை வைத்தான். 25 அதன் பின் மோசே கர்த்தருக்கு முன் இருந்த விளக்குத் தண்டில் அகல்களை வைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இதைச் செய்தான்.

26 பின்பு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் பொன் நறுமணப்பீடத்தை திரைக்கு முன்னால் நிறுவினான். 27 பின் நறுமணப் பீடத்தில் சுகந்தவாசனையுள்ள நறுமணப் பொருள்களை எரித்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவன் இதனையும் செய்தான். 28 பிறகு மோசே பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலில் தொங்குதிரையை தொங்கவிட்டான்.

29 பரிசுத்தக் கூடாரம், அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழை வாயிலில் தகன பலிக்கான பலிபீடத்தை மோசே வைத்தான். பின் மோசே அந்தப் பலிபீடத்தின் மேல் ஒரு தகன பலியைச் செலுத்தினான். தானிய காணிக்கைகளையும் கர்த்தருக்குச் செலுத்தினான். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவன் இக்காரியங்களைச் செய்தான்.

30 பின்பு ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் மத்தியில் மோசே தொட்டியை வைத்தான். கழுவுவதற்கான தண்ணீரை மோசே, தொட்டியில் நிரப்பினான். 31 மோசே, ஆரோன், ஆரோனின் மகன்கள் ஆகியோர் தங்கள் கைகளையும், கால்களையும் கழுவுவதற்கு இந்தத் தொட்டியைப் பயன்படுத்தினார்கள். 32 அவர்கள் ஆசாரிப்புக் கூடாரத்தில் நுழையும்போதெல்லாம் தங்களைக் கழுவிக்கொண்டனர். பலிபீடத்தின் அருகே செல்லும்போதெல்லாம் அவர்கள் தங்கள் கை, கால்களைக் கழுவிக்கொண்டனர். மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் இக்காரியங்களைச் செய்தார்கள்.

33 பின்பு மோசே பரிசுத்தக் கூடாரத்தின் வெளிப் பிரகாரத்தைச் சுற்றிலும் திரைகளைத் தொங்கவிட்டான். மோசே பலி பீடத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்தான். வெளிப்பிரகாரத்தின் நுழைவாயிலில் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டான். கர்த்தர் செய்யுமாறு கூறிய எல்லா வேலைகளையும் மோசே செய்து முடித்தான்.

கர்த்தரின் மகிமை

34 அப்போது ஆசாரிப்புக் கூடாரத்தை மேகம் வந்து மறைத்துக்கொண்டது. கர்த்தரின் மகிமை பரிசுத்தக் கூடாரத்தை நிரப்பியது. 35 ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் மோசே செல்ல முடியவில்லை. ஏனெனில், மேகம் அதன் மீது மூடியிருந்தது. மேலும் கர்த்தரின் மகிமை பரிசுத்தக் கூடாரத்தை நிரப்பியிருந்தது.

36 இந்த மேகமே ஜனங்கள் புறப்பட வேண்டிய நேரத்தை உணர்த்தி வந்தது. பரிசுத்தக் கூடாரத்திலிருந்து மேகம் எழும்பியபோது, இஸ்ரவேல் ஜனங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.

37 ஆனால் பரிசுத்தக் கூடாரத்தில் மேகம் மூடியிருந்தபோது ஜனங்கள் பயணத்தைத் தொடர முயலவில்லை. மேகம் கிளம்பும் வரையிலும் அவர்கள் அவ்விடத்திலேயே தங்கினார்கள். 38 எனவே பகலில் கர்த்தரின் மேகம் பரிசுத்தக் கூடாரத்தின் மீது இருந்தது. இரவில் மேகத்தில் நெருப்பு காணப்பட்டது. எனவே இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணத்தின் போதெல்லாம் மேகத்தைப் பார்க்க முடிந்தது.

மத்தேயு 23:23-39

23 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். உங்கள் உடமைகள் அனைத்திலும் பத்தில் ஒரு பாகம் கர்த்தருக்குக் காணிக்கையாக்குகிறீர்கள். புதினா, வெந்தயம் மற்றும் சீரகத்திலும் கூட. ஆனால் கட்டளைகளில் மிக முக்கியமானவற்றை நீங்கள் பின்பற்றுவதில்லை. அதாவது, நியாயமாகவும் கருணையுடனும் நேர்மையாகவும் விளங்கவேண்டும் என்பதை விட்டுவிடுகிறீர்கள். இவைகளே நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல்கள். மேலும் மற்ற நற்செயல்களையும் தொடர்ந்து செய்து வர வேண்டும். 24 நீங்கள் மற்றவர்களை வழிநடத்துகிறீர்கள். ஆனால், நீங்களோ குருடர்கள். பானத்திலிருந்து ஒரு சிறு ஈயை எடுத்து எறிந்துவிட்டு, ஒட்டகத்தை விழுங்குகிறவனைப் போன்றவர்கள் நீங்கள்.

25 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! நீங்கள் மாயமானவர்கள். உங்கள் கோப்பைகளையும் பாத்திரங்களையும் வெளிப்புறம் நன்கு கழுவுகிறீர்கள். (சுத்தம் செய்கிறீர்கள்) ஆனால் அவற்றின் உள்ளே நீங்கள் மற்றவர்களை ஏமாற்றி உங்கள் விருப்பத்தின்படி சேர்த்த பொருட்களால் நிரம்பியுள்ளது. 26 பரிசேயர்களே, நீங்கள் குருடர்கள். முதலில் கோப்பையின் உள்ளே சுத்தம் செய்யுங்கள், பின், கோப்பையின் வெளிப்புறம் உண்மையிலேயே சுத்தமாகும்.

27 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போன்றவர்கள். அக்கல்லறைகளின் வெளிப்புறம் நன்றாக இருக்கிறது. ஆனால், உள்ளே முழுவதும், இறந்தவர்களின் எலும்புகளும், அசுத்தங்கள் பலவும் இருக்கின்றன. 28 அதே போலத்தான் நீங்களும், உங்களைக் காண்கிறவர்கள் உங்களை நல்லவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உள்ளுக்குள் நீங்கள் (முழுக்கவும்) மாயமும் தீமையும் நிறைந்தவர்கள்.

29 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மிகவும் மாயமானவர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள். நல்லவர்களின் கல்லறைகளுக்கு பெருமை சேர்க்கிறீர்கள். 30 மேலும் நீங்கள், ‘நாங்கள் எங்கள் முன்னோர்களின் காலத்தில் வாழ்ந்திருந்தால், இத்தீர்க்கதரிசிகளைக் கொல்ல அவர்களுக்குத் துணை போயிருக்க மாட்டோம்’ என்று கூறுகிறீர்கள். 31 அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்களின் வழிவந்தவர்கள் நீங்கள் என்பதை நிரூபணம் செய்கிறீர்கள். 32 உங்கள் முன்னோர்கள் தொடங்கி வைத்த பாவத்தை நீங்கள் முடித்து வைப்பீர்கள்.

33 ,“நீங்கள் பாம்புகள். கொடிய விஷம் கொண்ட பாம்புக் கூட்டத்தில் தோன்றியவர்கள் நீங்கள்! தேவனிடமிருந்து நீங்கள் தப்ப முடியாது. நீங்கள் அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு நரகத்திற்குச் செல்வீர்கள். 34 ஆகவே, நான் உங்களுக்கு இதைச் சொல்லிக் கொள்கிறேன். தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் போதகர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். நீங்கள் அவர்களில் சிலரைச் சாகடிப்பீர்கள். சிலரைச் சிலுவையில் அறைவீர்கள். சிலரை ஜெப ஆலயங்களில் கட்டிவைத்து அடிப்பீர்கள். அவர்களை நகருக்கு நகர் துரத்திச் செல்வீர்கள்.

35 ,“ஆகவே, நேர்மையான வாழ்வை நடத்திய சிலரைக் கொன்ற குற்றத்திற்கு நீங்கள் ஆளாவீர்கள். நல்லவனான ஆபேல் முதல் சகரியா ஆகியோரைக் கொன்ற பழிக்கும் உட்படுவீர்கள். ஆபேல் முதல் பரகியாவின் மகனும் ஆலயத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் கொல்லப்பட்டவனான சகரியா வரையில் வாழ்ந்த நல்லவர்களைக் கொன்ற பழிக்கும் ஆளாவீர்கள். 36 நான் உண்மையைச் சொல்கிறேன், இவை அனைத்தும் தற்பொழுது வாழும் உங்களுக்கு உண்டாகும்.

எருசலேம் மக்களுக்கு எச்சரிப்பு(A)

37 ,“எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொல்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பியவர்களைக் கற்களால் அடித்துக் கொல்கிறாய். பற்பலமுறை உன் மக்களுக்கு உதவ நான் விரும்பினேன். ஒரு (தாய்க்) கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைகளுக்குக் கீழே சேர்த்துக் கொள்வதைப்போல நானும் உன் மக்களை ஒன்று சேர்க்க நினைத்தேன். ஆனால், நீயோ அதைச் செய்ய என்னை விடவில்லை. 38 இப்பொழுதோ, உன் வீடு முற்றிலும் வெறுமையடையும். 39 நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், ‘கர்த்தரின் பெயராலே வருகிறவருக்கு தேவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்! அவர் வரவு நல்வரவு!’ [a] என்று நீ கூறுகிறவரைக்கும் நீ என்னைக் காணமாட்டாய்” என்று இயேசு கூறினார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center