Old/New Testament
பெசலெயேலும் அகோலியாபும்
31 கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “யூதாவின் கோத்திரத்திலிருந்து ஒரு மனிதனை எனது விசேஷ பணிக்காகத் தெரிந்தெடுத்துள்ளேன். அவன் ஊருடைய மகனான ஊரியின் மகன் பெசலெயேல். 3 தேவ ஆவியால் நான் பெசலெயேலை நிரப்பியுள்ளேன். எல்லாவிதமான கைவேலைகளையும் செய்யக்கூடிய திறமையையும், அறிவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறேன். 4 பெசலெயேல் கலைப் பொருட்களை வடிப்பதில் வல்லவன். பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றால் பொருட்களைச் செய்ய அவனுக்கு இயலும். 5 பெசலெயேலால் அழகான அணிகலன்களை வெட்டி உருவாக்க முடியும். மரவேலைகளிலும் அவன் கை தேர்ந்தவன். அவன் எல்லாவிதமான வேலைகளையும் செய்யும் ஆற்றல்மிக்கவன். 6 அவனுக்கு உதவி செய்வதற்கு தாண் கோத்திரத்திலிருந்து அகிசாமாக்கின் மகன் அகோலியாபை தெரிந்தெடுத்துள்ளேன். நான் உனக்குக் கூறிய எல்லாப் பொருட்களையும் செய்யும் திறமையை எல்லாப் பணியாட்களுக்கும் கொடுத்துள்ளேன். நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்.
7 ஆசாரிப்புக் கூடாரம், உடன்படிக்கைப் பெட்டி, கிருபாசனம், கூடாரத்தின் பணி முட்டுகளும்,
8 மேசையும் அதற்குத் தேவையான பொருட்களும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் கருவிகளும், நறுமணப் பொருளை எரிக்கும் பீடம்,
9 காணிக்கைகளை எரிக்கும் பலிபீடம், பலிபீடத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தொட்டியும் அதன் பீடமும்,
10 ஆசாரியனாகிய ஆரோனின் விசேஷ ஆடைகள், ஆரோனின் மகன்கள் ஆசாரியராக சேவை செய்ய அவர்களுக்கான உடைகள்,
11 நறுமணம் மிக்க அபிஷேக எண்ணெய், மகா பரிசுத்த இடத்தின் நறுமணப்பொருள் அனைத்தையும்
நான் உனக்குக் கூறிய விதத்திலேயே பணியாளர்கள் செய்ய வேண்டும்” என்றார்.
ஓய்வு நாள்
12 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, 13 “இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதைக் கூறு: ‘ஓய்வுக்குரிய விசேஷ தினங்களின் விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். எல்லாத் தலைமுறைகளிலும் அது உங்களுக்கும் எனக்கும் மத்தியிலுள்ள அடையாளமாக விளங்கும். உங்களை எனது விசேஷமான ஜனங்களாக கர்த்தராகிய நான் ஏற்றுக்கொண்டதை இது உணர்த்தும்.
14 “‘ஒய்வு நாளை ஒரு விசேஷ நாளாக எண்ணுவாயாக. பிறநாட்களுக்கு சமமாக ஓய்வு நாளையும் ஒருவன் எண்ணினால் அம்மனிதன் கொல்லப்பட வேண்டும். ஓய்வு நாளில் வேலை செய்கிறவனை அவனது ஜனங்களிடமிருந்து ஒதுக்கிவிட வேண்டும். 15 வேலை நாட்களாக வாரத்தில் ஆறு நாட்கள் உள்ளன. ஏழாவது நாள் ஓய்வுக்குரிய விசேஷ நாளாகும். கர்த்தரை மகிமைப்படுத்தும் விசேஷ நாள் அது. ஓய்வு நாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்பட வேண்டும். 16 இஸ்ரவேல் ஜனங்கள் ஓய்வு நாளை நினைவுகூர்ந்து அதை விசேஷ நாளாக்க வேண்டும். என்றென்றும் தொடர்ந்து இதைச் செய்துவர வேண்டும். என்றென்றும் எனக்கும் அவர்களுக்கும் மத்தியில் தொடர்கிற உடன்படிக்கையாக அது விளங்கும். 17 ஓய்வு நாள் எனக்கும் இஸ்ரவேலருக்கும் மத்தியில் ஒரு அடையாளமாக எப்போதும் இருக்கும். கர்த்தர் ஆறு நாட்கள் உழைத்து வானையும் பூமியையும் உண்டாக்கினார். அவர் ஏழாம் நாளில் ஓய்வாகவும் அமைதியாகவும் இருந்தார்’” என்றார்.
18 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயிடம் பேசி முடித்தார். உடன்படிக்கை பதித்த இரண்டு கற்பலகைகளை கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார். தேவன் தமது விரல்களால் அக்கற்பலகைகளில் எழுதினார்.
பொன் கன்றுக்குட்டி
32 மோசே மலையிலிருந்து இறங்கிவர மிகுந்த தாமதமானதை ஜனங்கள் உணர்ந்தனர். அவர்கள் ஆரோனைச் சூழ்ந்து, அவனை நோக்கி, “பாரும், மோசே எங்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே வழி நடத்தி வந்தான். இப்போது அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. ஆகவே எங்களுக்கு முன்பாகச் சென்று வழி நடத்துவதற்குச் சில தேவர்களை உருவாக்கும்” என்றனர்.
2 ஆரோன் ஜனங்களிடம், “உங்கள் மனைவி, பிள்ளைகளுக்குச் சொந்தமான பொன் காதணிகளை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றான்.
3 எல்லா ஜனங்களும் தங்கள் பொன் காதணிகளைச் சேர்த்து ஆரோனிடம் கொடுத்தனர். 4 ஆரோன் ஜனங்களிடமிருந்து அவற்றை வாங்கி, அதைப் பயன்படுத்தி ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தை வார்த்தான். பின்பு ஒரு உளியைப் பயன்படுத்தி, அந்த சிலையைச் செதுக்கினான். பின் அதை பொன் தகட்டால் மூடினான்.
அப்போது ஜனங்கள், “இஸ்ரவேலரே, இந்த தெய்வங்களே உங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தன!” என்றனர்.
5 ஆரோன் இவற்றையெல்லாம் பார்த்தான். கன்றுக்குட்டியின் எதிரில் ஒரு பலிபீடம் அமைத்தான். பின்பு ஜனங்களை நோக்கி, “கர்த்தரைக் கனப்படுத்துவதற்கு நாளை ஒரு பண்டிகை நடத்துவோம்” என்றான்.
6 மறுநாள் காலையில் ஜனங்கள் வெகு சீக்கிரமாக எழுந்தனர். அவர்கள் மிருகங்களைக் கொன்று தகன பலிகளையும், சமாதானபலிகளையும் படைத்தனர். ஜனங்கள் தின்று, குடித்துக் களிக்க உட்கார்ந்தனர். பின்பு எழுந்து மிகுதியான அநாகரீகத்தில் ஈடுபட்டனர்.
7 அப்போது கர்த்தர் மோசேயிடம், “இந்த மலையைவிட்டு சீக்கிரமாய் கீழே இறங்கிப் போ. எகிப்திலிருந்து நீ வெளியே அழைத்து வந்த, உனது ஜனங்கள் மிகவும் சீர்கேடான பாவத்தைச் செய்திருக்கிறார்கள். 8 செய்யும்படி நான் அவர்களுக்கு கட்டளையிட்டவைகளினின்று மிக வேகமாய் சோரம் போனார்கள். பொன்னை உருக்கி கன்றுக்குட்டியை வார்த்தார்கள். அவர்கள் அதைத் தொழுது அதற்குப் பலி செலுத்துகிறார்கள். அதனிடம், ‘எங்களை எகிப்திலிருந்து வழிநடத்தின தெய்வங்கள் இவையே’ என்றனர்” என்றார்.
9 மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் இந்த ஜனங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் பிடிவாத குணமுடையோர் என்பதையும் அறிவேன். அவர்கள் எப்போதும் எனக்கெதிராகத் திரும்புவார்கள். 10 எனவே என் கோபத்தால் அவர்களை அழிப்பேன். பின் உன் மூலமாக ஒரு பெரிய ஜனத்தை உருவாக்குவேன்” என்றார்.
11 ஆனால் மோசே தேவனாகிய கர்த்தரை மிகவும் கெஞ்சி, “கர்த்தாவே, உமது கோபத்தால் உமது ஜனங்களை அழித்துவிடாதேயும். உமது மிகுந்த ஆற்றலினாலும் வல்லமையாலும் நீர் இந்த ஜனங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தீர். 12 ஆனால் நீர் உமது ஜனங்களை அழித்துவிட்டால் எகிப்தியர்கள், ‘கர்த்தர் அந்த ஜனங்களுக்குத் தீமை செய்யத் திட்டமிட்டார். எனவே அவர்களை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார். அவர்களை மலைகளில் கொல்ல விரும்பினார். அவர்களைப் பூமியிலிருந்து நிர்மூலமாக்க எண்ணினார், என்று சொல்வார்கள்.’ எனவே, உமது ஜனங்களிடம் கோபம் கொள்ளாதிரும். உமது எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்! உமது ஜனங்களை அழித்துவிடாதிரும். 13 ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் (யாக்கோபு) ஆகியோரை நினைவுகூரும். அவர்கள் உமக்குப் பணிவிடை செய்தனர். உமது பெயரால் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தீர். ‘நான் உன் ஜனங்களை வானத்தின் நட்சத்திரங்களைப் போல பெருகச் செய்வேன். நான் உன் ஜனங்களுக்கு வாக்குறுதி அளித்த தேசத்தைக் கொடுப்பேன். அத்தேசம் என்றும் அவர்களுக்குரியதாகும்’ என்று நீர் வாக்குறுதி தந்தீர்” என்றான்.
14 எனவே, கர்த்தர் ஜனங்களுக்காக மனஸ்தாபப்பட்டார். தான் செய்வதாகக் கூறிய செயலை கர்த்தர் செய்யவில்லை, அவர் ஜனங்களை அழிக்கவில்லை.
15 பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான். உடன்படிக்கை எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை அவன் கையில் ஏந்திவந்தான். கற்பலகைகளின் முன்புறமும், பின்புறமும் அந்தக் கட்டளைகள் எழுதப்பட்டிருந்தன. 16 தேவனே அக்கற்களை உண்டாக்கி, அக்கற்களின் மீது கட்டளைகளை எழுதியிருந்தார்.
17 மலையிலிருந்து இறங்கியபோது பாளையத்திலிருந்து பெரும் சத்தத்தை யோசுவா கேட்டான். யோசுவா மோசேயை நோக்கி: “நம் பாளையத்தில் யுத்த சத்தம் எழும்புகிறது” என்றான்.
18 மோசே பதிலாக, “இது வெற்றியால் ஒரு படை எழுப்பும் சத்தமல்ல. தோல்வியால் ஒரு படை எழுப்பும் கூக்குரலும் அல்ல. நான் கேட்டது இசையின் சத்தமே” என்றான்.
19 மோசே பாளையத்திற்கு அருகே வந்தான். அவன் பொன் கன்றுக்குட்டியையும் ஜனங்கள் நடனமாடுவதையும் கண்டு, மிகுந்த கோபங்கொண்டான். அவன் கற்பல கைகளை தரையில் வீசி எறிந்தான். மலை அடிவாரத்தில் அவை சுக்கு நூறாக உடைந்து சிதறின. 20 பின்பு மோசே ஜனங்கள் செய்த கன்றுக்குட்டியை உடைத்து, அதை நெருப்பில் போட்டு உருக்கினான். பொன்னைத் தூளாகுமட்டும் அரைத்து அதைத் தண்ணீரில் கரைத்தான். அந்த தண்ணீரை பருகும்படி இஸ்ரவேல் ஜனங்களை வற்புறுத்தினான்.
21 மோசே ஆரோனை நோக்கி, “இந்த ஜனங்கள் உனக்குச் செய்ததென்ன? ஏன் இந்த மாபெரும் கேடான பாவத்தைச் செய்யும்படியாக அவர்களை வழி நடத்தினாய்?” என்று கேட்டான்.
22 ஆரோன், “கோபம் கொள்ளாதிரும், இந்த ஜனங்கள் எப்போதுமே பாவம் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பது உமக்குத் தெரியும் அல்லவா. 23 ஜனங்கள் என்னிடம், ‘மோசே எங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினான். ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, எங்களை வழிநடத்துவதற்கு தெய்வங்களைச் செய்’ என்றார்கள். 24 நான் அவர்களிடம், ‘உங்களிடம் பொன் காதணிகள் இருந்தால், அவற்றை என்னிடம் கொடுங்கள்’ என்றேன். ஜனங்கள் பொன்னை என்னிடம் கொடுத்தார்கள். நான் பொன்னை நெருப்பில் போட்டேன். நெருப்பிலிருந்து கன்றுகுட்டி வந்தது!” என்று பதிலுரைத்தான்.
25 ஜனங்கள் கட்டுப்பாட்டை மீறி அநாகரீகமாக நடக்கும்படியாக ஆரோன் அவர்களை அனுமதித்ததை மோசே கண்டான். ஜனங்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதை அவர்களின் பகைவர்கள் கண்டனர். 26 எனவே, பாளையத்தின் நுழைவாயிலில் மோசே நின்றான். மோசே, “கர்த்தரைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்” என்று சொன்னான். லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மோசேயிடம் ஓடினார்கள்.
27 பின்பு மோசே அவர்களை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வதை நான் உங்களுக்குக் கூறுவேன்: ‘ஒவ்வொருவனும் வாளை எடுத்துக்கொண்டு பாளையத்தின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரைக்கும் போய் வாருங்கள். ஒவ்வொருவனும் தனது சகோதரனையும் நண்பனையும், அயலானையும் கொல்ல வேண்டி வந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்’” என்றான்.
28 லேவி குடும்பத்தின் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தனர். அன்றையதினம் சுமார் 3,000 இஸ்ரவேல் ஜனங்கள் செத்தனர். 29 மோசே, “தமக்குப் பணிவிடை செய்ய கர்த்தர் இன்று உங்களைத் தெரிந்தெடுத்தார். ஏனென்றால், இன்றைக்கு உங்களில் ஒவ்வொருவரும் அவனது மகனுக்கு எதிராகவும், சகோதரனுக்கு எதிராகவும் இருந்தீர்கள். எனவே இன்று அவர் உங்கள் மேல் ஆசீர்வாதம் பொழிவார்” என்றான்.
30 மறுநாள் காலையில் மோசே ஜனங்களை நோக்கி, “நீங்கள் கொடிய பாவம் செய்துள்ளீர்கள்! நான் கர்த்தரிடம் மேலே போவேன். உங்கள் பாவத்தை அவர் மன்னிப்பதற்காக நான் ஏதாவது செய்யக்கூடுமா எனப் பார்ப்பேன்” என்றான். 31 எனவே மோசே கர்த்தரிடம் மீண்டும் சென்று, “தயவு செய்து நான் கூறுவதைக் கேளும்! இந்த ஜனங்கள் பெரும்பாவம் செய்தனர். அவர்கள் பொன்னால் ஒரு தேவனைச் செய்தனர். 32 இப்போது அவர்களின் இப்பாவத்தை மன்னித்துவிடும்! நீர் அவர்களை மன்னிக்காவிட்டால், உமது புத்தகத்திலிருந்து எனது பெயரை கிறுக்கி விடும்” என்றான்.
33 ஆனால் கர்த்தர் மோசேயை நோக்கி, “எனக்கெதிராக பாவம் செய்தோரின் பெயர்களை மட்டுமே நான் அழிப்பேன். 34 எனவே நீ கீழே போய் நான் சொல்கிற இடத்திற்கு ஜனங்களை வழிநடத்து. எனது தூதன் உங்களுக்கு முன்பாகச் சென்று வழிநடத்துவார். பாவம் செய்கிற மனிதர்கள் தண்டிக்கப்படும் காலம் வரும்போது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றார். 35 எனவே கர்த்தர் ஒரு கொடிய நோய் ஜனங்களை வாதிக்கும்படியாகச் செய்தார். ஆரோனிடம் பொன் கன்றுக்குட்டியைச் செய்யுமாறு கேட்டதால் அவர் இவ்வாறு செய்தார்.
நான் உங்களோடு வரமாட்டேன்
33 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “நீயும், நீ எகிப்திலிருந்து வழிநடத்திய ஜனங்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட வேண்டும். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக நான் வாக்குறுதி அளித்த தேசத்திற்குச் செல்லுங்கள். அவர்களின் சந்ததிக்கு அத்தேசத்தைக் கொடுப்பதாகச் சொன்னேன். 2 எனவே உங்களுக்கு முன்பாகச் செல்வதற்கு ஒரு தூதனை அனுப்புவேன். கானானியரையும், எமோரியரையும், ஏத்தியரையும், பெரிசியரையும், ஏவியரையும், எபூசியரையும், நான் தோற்கடிப்பேன். உங்கள் தேசத்தைவிட்டு அவர்கள் போகும்படியாகச் செய்வேன். 3 எனவே உச்சிதமான பொருட்களால் நிரம்பியுள்ள அத்தேசத்திற்குச் செல்லுங்கள். ஆனால் நான் உங்களோடு வரமாட்டேன். நீங்கள் பிடிவாதமான ஜனங்கள். என்னை மிகவும் கோபப்படுத்துகிறீர்கள். நான் உங்களோடு வந்தால் ஒருவேளை வழியிலேயே உங்களை அழித்து விடுவேன்” என்றார்.
4 ஜனங்கள் இந்தச் செய்தியைக் கேட்டுக் கவலையடைந்தனர். அவர்கள் ஆபரணங்கள் அணிவதை விட்டுவிட்டனர். 5 ஏனெனில் கர்த்தர் மோசேயை நோக்கி, “இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கூறு, ‘நீங்கள் பிடிவாதமான ஜனங்கள். சிறிது காலம் உங்களோடு வந்தாலும் நான் உங்களை அழித்து விடக்கூடும். நான் உங்களுக்கு என்ன செய்வதென முடிவெடுக்கும்வரை உங்கள் அணிகலன்களைக் கழற்றிவிடுங்கள்’ என்று கூறு” என்றார். 6 (சீனாய்) ஓரேப் மலையருகே இஸ்ரவேல் ஜனங்கள் ஆபரணங்களை அணிவதை விட்டுவிட்டனர்.
தற்காலிக ஆசரிப்புக் கூடாரம்
7 பாளையத்துக்கு வெளியே சற்று தூரத்தில் மோசே ஒரு கூடாரத்தை எடுத்துச் செல்வது வழக்கம். மோசே அதை “ஆசரிப்புக் கூடாரம்” என்று அழைத்தான். கர்த்தரிடமிருந்து எதையாவது கேட்டறிய விரும்புகிறவன் பாளையத்துக்கு வெளியே ஆசாரிப்புக் கூடாரத்திற்குச் செல்வான். 8 மோசே அக்கூடாரத்திற்குப் போகும் போதெல்லாம் ஜனங்கள் அவனைக் கவனித்து நோக்கினார்கள். ஜனங்கள் அவரவர் கூடாரத்தின் வாயிலில் வந்து நின்று, மோசே ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவதைப் பார்த்தனர். 9 மோசே கூடாரத்திற்கு போகும்போதெல்லாம் நீண்ட மேகம் இறங்கி வந்து கூடாரத்தின் வாசலில் தங்கும். கர்த்தர் மோசேயோடு பேசுவார். 10 ஜனங்கள் கூடார வாசலில் மேகத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவரவர் கூடார வாசல்களுக்குச் சென்று கீழே குனிந்து கர்த்தரை வணங்கினார்கள்.
11 இவ்வாறு கர்த்தர் மோசேயுடன் நேருக்கு நேராக நின்று பேசினார். ஒரு மனிதன் தன் நண்பனிடம் பேசுவதுபோல கர்த்தர் மோசேயுடன் பேசினார். கர்த்தரிடம் பேசியபிறகு, மோசே தங்குமிடத்துக்குத் திரும்பினான். ஆனால் அவனது உதவியாளன் எப்போதும் கூடரத்திலேயே இருந்தான். அந்த உதவியாளன் நூனின் மகனாகிய யோசுவா என்பவனாவான்.
கர்த்தருடைய மகிமையை மோசே காண்கிறான்
12 மோசே கர்த்தரை நோக்கி, “இந்த ஜனங்களை வழிநடத்துமாறு நீர் சொன்னீர். ஆனால் என்னோடு வருபவர் யார் என்பதை நீர் கூறவில்லை. நீர் என்னிடம், ‘உன்னை நன்கு அறிவேன். உன்னைக் குறித்து பிரியமாயிருக்கிறேன்.’ என்றீர். 13 நான் உண்மையாகவே உம்மை திருப்திப்படுத்தியிருந்தால் உமது வழிகளை எனக்குப் போதியும். நான் உம்மை அறிந்துகொள்ள விரும்புகிறேன். நான் தொடர்ந்து உம்மைப் பிரியப்படுத்துவேன். இவர்கள் உமது ஜனங்கள் என்பதை நினைவுகூரும்” என்றான்.
14 கர்த்தர், “நான் உன்னோடுகூட வருவேன். உன்னை வழிநடத்துவேன்” என்றார்.
15 அப்போது மோசே கர்த்தரை நோக்கி, “நீர் வழி நடத்தவில்லையெனில், என்னை இவ்விடத்திலிருந்து அனுப்பாதிரும். 16 மேலும், என்னிடமும் இந்த ஜனங்களிடமும் திருப்தியடைந்துள்ளீர் என்பதை நான் எவ்வாறு அறிவேன்? நீர் எங்களோடு வந்தால், அதை நிச்சயமாக அறிவோம். இல்லையென்றால், பூமியிலுள்ள மற்ற மனிதருக்கும் எங்களுக்கும் வித்தியாசமேயில்லை” என்றான்.
17 அப்போது கர்த்தர் மோசேயிடம், “நீ கேட்டபடியே நான் செய்வேன். உன்னில் சந்தோஷம் அடைந்திருக்கிறேன், உன்னை நான் நன்கு அறிவேன்.” என்றார்.
18 அப்போது மோசே, “இப்போது உமது மகிமையை எனக்குக் காட்டும்” என்றான்.
19 கர்த்தர், “என் பரிபூரண நன்மை உனக்கு முன் செல்லும்படி செய்வேன். நானே கர்த்தர், நீ கேட்கும்படி என் பெயரை அறிவிப்பேன். நான் விரும்பும் யாருக்கும் எனது இரக்கத்தையும், அன்பையும் காட்டுவேன். 20 ஆனால் நீ என் முகத்தைப் பார்க்க முடியாது. எந்த மனிதனும் என்னைப் பார்த்து பின்பு உயிரோடு இருக்க முடியாது.
21 “எனக்கருகிலுள்ள ஒரு இடத்தில் ஒரு பாறை உள்ளது. நீ அப்பாறையின் மேல் ஏறி நில். 22 எனது மகிமை அவ்விடத்தைக் கடந்து செல்லும். நான் உன்னைத் தாண்டும்போது உன்னை அந்தப் பாறையின் வெடிப்பில் வைத்து என் கரங்களால் உன்னை மூடுவேன். 23 பின் எனது கைகளை விலக்குவேன். நீ என் முதுகைக் காண்பாய், ஆனால் நீ என் முகத்தைக் காணமாட்டாய்” என்றார்.
விருந்துக்கு அழைக்கப்பட்டோர்(A)
22 இயேசு மேலும் சிலவற்றை உவமைகளின் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூறினார். 2 ,“பரலோக இராஜ்யமானது தன் மகனது திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்த மன்னன் ஒருவனுக்கு ஒப்பாகும். 3 அம்மன்னன் விருந்துண்ண சிலரை அழைத்தான். விருந்து தயாரானபொழுது தன் வேலைக்காரர்களை அனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னான். ஆனால் அவர்களோ மன்னனது விருந்துக்கு வர மறுத்து விட்டார்கள்.
4 ,“பின் மன்னன் மேலும் சில வேலைக்காரர்களை அனுப்பினான். தன் வேலைக்காரர்களிடம் மன்னன் இவ்வாறு சொல்லியனுப்பினான். ‘நான் ஏற்கெனவே அவர்களை விருந்துண்ண அழைத்துவிட்டேன். எனவே, அவர்களிடம், என்னிடமிருந்த சிறந்த காளைகளையும் கன்றுகளையும் உண்பதற்காக அடித்துள்ளேன். எல்லாம் தயாராக உள்ளன. திருமண விருந்துண்ண வாருங்கள்! என்று கூறுங்கள்’ என்றான்.
5 ,“வேலைக்காரர்கள் சென்று அவர்களை அழைத்தார்கள். ஆனால் அவர்களோ வேலைக்காரர்களின் அழைப்பைப் பொருட்படுத்தவில்லை. வேறு வேலைகளைக் கவனிக்க அவர்கள் சென்று விட்டார்கள். ஒருவன் தன் வயலில் வேலை செய்யவும் மற்றொருவன் தன் வியாபாரத்தைக் கவனிக்கவும், சென்றனர். 6 வேறு சிலரோ வேலைக்காரர்களைப் பிடித்து அடித்துக் கொன்றுவிட்டனர். 7 கோபமடைந்த மன்னன் தன் வேலைக்காரர்களைக் கொன்றவர்களைக் கொல்வதற்காகத் தனது படையை அனுப்பினான். மன்னனது படை அவர்களது நகரத்தையே எரித்தது.
8 ,“அதன் பிறகு, மன்னன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து, ‘திருமண விருந்து தயாராக உள்ளது. நான் அவர்களை விருந்துக்கு அழைத்தேன். ஆனால் அவர்களோ எனது விருந்துக்கு வருமளவிற்கு நல்லவரல்லர். 9 ஆகவே, தெரு முனைகளுக்குச் செல்லுங்கள். உங்கள் கண்ணில் படுகிறவர்கள் அனைவரையும் விருந்துக்கு அழையுங்கள். எனது விருந்துக்கு வரச் சொல்லுங்கள்’ என்று சொன்னான். 10 எனவே, மன்னனது வேலைக்காரர்கள் தெருக்களுக்குச் சென்று கண்ணில் பட்டவர்களை அழைத்து வந்தனர். வேலைக்காரர்கள் நல்லவர்களையும் தீயவர்களையும் திருமணவிருந்து தயாராகவிருந்த இடத்துக்கு அழைத்து வந்தார்கள். அந்த இடம் விருந்தினர்களால் நிரம்பியது.
11 ,“மன்னன் விருந்தினர் அனைவரையும் காண்பதற்காக வந்தான். திருமணத்திற்கு வர ஏற்றதாக உடையணிந்திராத ஒருவனை மன்னன் கண்டான். 12 மன்னன் அவனிடம், ‘நண்பனே, நீ எப்படி உள்ளே வந்தாய்? திருமணத்திற்கு வர ஏற்றதாக நீ உடை அணிந்திருக்கவில்லையே?’ என்று கேட்டான். ஆனால் அம்மனிதனோ எதுவும் பேசவில்லை. 13 எனவே, மன்னன் தன் வேலைக்காரர்களிடம், ‘இவனது கையையும் காலையும் கட்டுங்கள். இவனை இருளில் எறியுங்கள். அங்கு, மக்கள் வேதனையால் பற்களைக் கடித்துக் கொள்வார்கள்’ என்று சொன்னான்.
14 ,“ஆம், பலர் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்” என்று இயேசு சொன்னார்.
பரிசேயரின் தந்திரம்(B)
15 பின்னர் பரிசேயர்கள், இயேசு போதனை செய்து கொண்டிருந்த இடத்தை விட்டு விலகிச் சென்றார்கள். இயேசு ஏதேனும் தவறாகப் பேசினால் அவரைப் பிடித்துவிட வேண்டும் என அவர்கள் திட்டமிட்டார்கள். 16 பரிசேயர்கள் இயேசுவை ஏமாற்ற சிலரை அவரிடம் அனுப்பினார்கள். தங்களுள் சிலரையும் ஏரோதியர்களில் சிலரையும் அவர்கள் இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்கள் இயேசுவிடம்,, “போதகரே, நீர் நேர்மையானவர் என்பதை நாங்கள் அறிவோம். தேவனுடைய வழிகளைக்குறித்த உண்மைகளை நீர் போதிப்பதையும் அறிவோம். உம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்து நீர் கவலைப்படுவதில்லை. உமக்கு எல்லோரும் சமம். 17 ரோமானியப் பேரரசர் சீசருக்கு வரி செலுத்துவது சரியா தவறா? உமது கருத்தைச் சொல்லும்” என்றார்கள்.
18 ஆனால் அவர்கள் தன்னை ஏமாற்ற முயற்சிப்பதை இயேசு அறிந்தார். ஆகவே இயேசு,, “மாயமானவர்களே! எதற்காக என்னை ஏதும் தவறாகச் சொல்லவைக்க முயற்சிக்கிறீர்கள்? 19 வரி செலுத்துவதற்கான நாணயம் ஒன்றைக் காட்டுங்கள்” என்று கூறினார். அவர்கள் ஒரு வெள்ளி நாணயத்தை இயேசுவிடம் காட்டினார்கள். 20 பின் இயேசு,, “நாணயத்தில் யாருடைய உருவம் உள்ளது? யாருடைய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது?” என்று கேட்டார்.
21 அதற்கு அவர்கள், “சீசரின் உருவமும் சீசரின் பெயரும்.” என்று பதிலளித்தனர்.
எனவே இயேசு அவர்களுக்குச் சொன்னார்,, “சீசருடையதை சீசருக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் கொடுங்கள்.”
22 இயேசு கூறியதைக் கேட்ட அவர்கள் வியப்படைந்தார்கள். இயேசுவை விட்டு விலகிச் சென்றார்கள்.
2008 by World Bible Translation Center