Old/New Testament
ஆபிரகாமின் குடும்பம்
25 ஆபிரகாம் மீண்டும் திருமணம் செய்தான். அவனது மனைவியின் பெயர் கேத்தூராள். 2 கேத்தூராள் சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவாக் போன்றவர்களைப் பெற்றாள். 3 யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான். தேதானுடைய சந்ததி அசூரீம், லெத்தூசீம், லெயூமீம், என்பவர்கள். 4 மீதியானுக்கு ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்ற மகன்கள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் கேத்தூராளின் பிள்ளைகள். 5-6 ஆபிரகாம் மரிப்பதற்குமுன், அவன் தன் வேலைக்காரப் பெண்களின் பிள்ளைகளுக்குப் பரிசுகளைக் கொடுத்து கிழக்கு நாடுகளுக்கு ஈசாக்கை விட்டு அப்பால் அவர்களை அனுப்பி வைத்தான். பின் ஆபிரகாம் தனக்குரிய எல்லாவற்றையும் ஈசாக்குக்கு உரிமையாக்கினான்.
7 ஆபிரகாமுக்கு 175 வயது ஆனது. 8 அதனால் அவன் மெலிந்து பலவீனமாகி மரணமடைந்தான். அவன் ஒரு நீண்ட திருப்தியான வாழ்க்கை வாழ்ந்தான். அவன் தனது பிதாக்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான். 9 அவனது மகன்களான ஈசாக்கும் இஸ்மவேலும் அவனை மக்பேலா குகையிலே அடக்கம் செய்தனர். அந்தக் குகை எப்பெரோனின் வயலில் இருந்தது. எப்பெரோன் சோகாரின் மகன். அந்த இடம் மம்ரேக்குக் கிழக்கே இருந்தது. 10 இந்தக் குகையைத்தான் ஆபிரகாம் ஏத்தின் ஜனங்களிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தான். சாராளோடு சேர்த்து ஆபிரகாமை அடக்கம் செய்துவிட்டனர். 11 ஆபிரகாம் மரித்துப் போனபின் தேவன் ஈசாக்கை ஆசீர்வதித்தார். ஈசாக்கு தொடர்ந்து பெயர்லகாய்ரோயியில் வாழ்ந்து வந்தான்.
12 பின்வருவது இஸ்மவேலின் குடும்பப் பட்டியல்: இஸ்மவேல் ஆபிரகாமுக்கும் ஆகாருக்கும் பிறந்தவன். (ஆகார் சாராளின் எகிப்தியப் பணிப்பெண்.) 13 இஸ்மவேலின் பிள்ளைகளது பெயராவன: மூத்தமகன் பெயர் நெபாயோத், பின் கேதார், தொடர்ந்து அத்பியேல், மிப்சாம். 14 மிஷ்மா, தூமா, மாசா, 15 ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள் பிறந்தார்கள். இவை அனைத்தும் இஸ்மவேலின் ஜனங்களின் பெயர்கள் ஆகும். 16 ஒவ்வொரு மகனும் தங்கள் குடியிருப்புகளை நகரங்களாக்கிக்கொண்டனர். பன்னிரண்டு பிள்ளைகளும் தம் ஜனங்களுடன் பன்னிரண்டு அரசகுமாரர்களைப்போல வாழ்ந்தனர். 17 இஸ்மவேல் 137 ஆண்டுகள் வாழ்ந்தான். பின் அவன் மரித்து தன் முற்பிதாக்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான். 18 இஸ்மவேலின் சந்ததிகள் பாலைவனப் பகுதி முழுவதும் பரவி குடியேறினார்கள். அப்பகுதி ஆவிலா முதல் சூர் வரை இருந்தது. சூர் எகிப்துக்கு அருகில் இருந்தது. அங்கிருந்து அசிரியா வரை பரவிற்று. இஸ்மவேலின் சந்ததிகள் அவ்வப்போது அவனுடைய சகோதரர்களின் ஜனங்களைத் தாக்கினார்கள்.
ஈசாக்கின் குடும்பம்
19 இது ஈசாக்கின் குடும்ப வரலாறு: ஈசாக்கு ஆபிரகாமின் மகன். 20 ஈசாக்கிற்கு 40 வயதானபோது அவன் ரெபெக்காளை மணந்துகொண்டான். ரெபெக்காள் பதான் அராம் என்னும் ஊரைச் சேர்ந்த பெத்துவேலின் மகள். லாபானுக்குச் சகோதரி. 21 ஈசாக்கின் மனைவிக்குப் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தது. எனவே, அவன் தன் மனைவிக்காக கர்த்தரிடம் ஜெபித்தான். ஈசாக்கின் ஜெபத்தைக் கேட்டு, கர்த்தர் ரெபெக்காள் கர்ப்பமடையச் செய்தார்.
22 அவள் கர்ப்பமாக இருந்தபோது, கருவிலுள்ள குழந்தைகள் மோதிக்கொண்டதால் மிகவும் கஷ்டப்பட்டாள். அவள் கர்த்தரிடம் ஜெபித்து, “ஏன் எனக்கு இவ்வாறு ஏற்படுகிறது?” என்று கேட்டாள். 23 அதற்கு கர்த்தர்,
“உனது கர்ப்பத்தில் இரண்டு நாடுகள் உள்ளன.
இரண்டு குடும்பங்களின் அரசர்கள் உனக்குப் பிறப்பார்கள்.
அவர்கள் பிரிக்கப்பட்டு ஒருவனைவிட இன்னொருவன் பலவானாக இருப்பான்.
மூத்தவன் இளையவனுக்குச் சேவை செய்வான்” என்றார்.
24 சரியான நேரம் வந்தபோது ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். 25 முதல் குழந்தை சிவப்பாக இருந்தது. அவனது உடல் ரோம அங்கி போர்த்தது போல இருந்தது. எனவே அவன் ஏசா என்று பெயர் பெற்றான். 26 இரண்டாவது குழந்தை பிறந்தபோது, அவன் ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டே வெளியே வந்தான். எனவே அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டனர். யாக்கோபும் ஏசாவும் பிறக்கும்போது ஈசாக்குக்கு 60 வயது.
27 பிள்ளைகள் வளர்ந்தார்கள். ஏசா திறமை மிக்க வேட்டைக்காரன் ஆனான். அவன் எப்போதும் வெளியே அலைவதிலேயே விருப்பப்பட்டான். ஆனால் யாக்கோபு அமைதியானவன், தன் கூடாரத்திலேயே தங்கியிருந்தான். 28 ஈசாக்கு ஏசாவை நேசித்தான். ஏசா வேட்டையாடிய மிருகங்களை உண்ண ஈசாக்கு விரும்பினான். ஆனால் ரெபெக்காள் யாக்கோபை நேசித்தாள்.
29 ஒருமுறை ஏசா வேட்டை முடித்து திரும்பிக்கொண்டிருந்தான். அவன் சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான். யாக்கோபு ஒரு பாத்திரத்தில் கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். 30 எனவே ஏசா யாக்கோபிடம், “நான் பலவீனமாகவும் பசியாகவும் இருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் கூழ் கொடு” என்று கேட்டான் (இதனாலே அவனுக்கு ஏதோம் என்றும் பெயராயிற்று.)
31 ஆனால் யாக்கோபோ, அதற்குப் பதிலாக: “முதல் மகன் என்ற உரிமையை இன்று எனக்கு விற்றுவிட வேண்டும்” என்று கேட்டான்.
32 ஏசாவோ, “நான் பசியால் மரித்துக்கொண்டிருக்கிறேன். நான் மரித்துப் போனால் என் தந்தையின் சொத்துக்கள் எல்லாம் எனக்கு உதவுவதில்லை. எனவே நான் எனது பங்கை உனக்குத் தருகிறேன்” என்றான்.
33 ஆனால் யாக்கோபு, “முதலில் உன் பங்கைத் தருவதாகச் சத்தியம் செய்” என்றான். ஆகையால் ஏசாவும் சத்தியம் செய்தான். அவன் மூதாதையர் சொத்தாக தனக்குக் கிடைக்கவிருந்த பங்கை யாக்கோபுக்கு விற்றுவிட்டான். 34 பிறகு யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான். ஏசா அவற்றை உண்டு, விலகிப் போனான். இவ்வாறு ஏசா தனது பிறப்புரிமையைப்பற்றி கவலைப்படாமல் இருந்தான்.
ஈசாக்கு அபிமெலேக்கிடம் பொய் சொல்கிறான்
26 ஒருமுறை பஞ்சம் உண்டாயிற்று. இது ஆபிரகாம் காலத்தில் ஏற்பட்டது போல் இருந்தது. எனவே ஈசாக்கு கேரார் நகருக்குப் போனான். அதனை அபிமெலேக்கு ஆண்டு வந்தான். அவன் பெலிஸ்திய ஜனங்களின் அரசன். 2 கர்த்தர் ஈசாக்கின் முன்பு தோன்றி, “நீ எகிப்துக்குப் போக வேண்டாம். நான் எங்கே உன்னை வசிக்கச் சொல்கிறேனோ அங்கே இரு. 3 நான் உன்னோடு இருப்பேன். உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும் உன் வாரிசுகளுக்கும் இந்தப் பகுதியைத் தருவேன். உன் தந்தையான ஆபிரகாமுக்குச் செய்த வாக்கின்படி உனக்குத் தருவேன். 4 வானத்து நட்சத்திரங்ளைப் போன்று உன் குடும்பத்தைப் பெருகச் செய்வேன். இந்த நிலப்பகுதிகளையெல்லாம் உன் குடும்பத்தாருக்கே தருவேன். உன் சந்ததிகள் மூலம் உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் ஆசீர்வதிப்பேன். 5 நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால் உன் தந்தை எனக்குக் கீழ்ப்படிந்து நான் சொன்னபடி நடந்தான். எனது ஆணைகள், சட்டங்கள், விதிகள் அனைத்துக்கும் ஆபிரகாம் கீழ்ப்படிந்தான்” என்றார்.
6 ஆகவே, ஈசாக்கு கேராரிலியே தங்கினான். 7 ஈசாக்கின் மனைவியான ரெபெக்காள் மிகவும் அழகானவள். அங்குள்ளவர்கள் அவளைப்பற்றி ஈசாக்கிடம் கேட்டனர். அதற்கு ஈசாக்கு, அவர்களிடம் ரெபெக்காள் தன் மனைவி என்று சொல்ல அஞ்சி, “அவள் என் சகோதரி” என்று சொன்னான். தன்னைக் கொன்று அவளை அபகரித்துக்கொள்வார்கள் என எண்ணினான்.
8 ஈசாக்கு அங்கே நீண்ட காலம் வாழ்ந்தபோது, அபிமெலேக்கு ஒரு நாள் தன் ஜன்னல் வழியாக ஈசாக்கு ரெபெக்காளோடு விளையாடுவதைக் கவனித்தான். 9 அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து அவனிடம், “இவள் உன் மனைவி அல்லவா, அவள் உன் சகோதரி என்று ஏன் பொய் சொன்னாய்?” என்று கேட்டான்.
ஈசாக்கு, “என்னைக் கொன்று இவளை அபகரித்துக்கொள்வாயோ என்று பயந்தேன்” என்றான்.
10 “நீ எங்களுக்குத் தீயதைச் செய்துவிட்டாய், ஒருவேளை எங்களில் ஒருவன் உன் மனைவியோடு பாலின உறவுகொண்டிருந்தால் பெரிய குற்றம் செய்த பாவத்துக்கு அவன் ஆளாகி இருக்கக் கூடும்” என்று அபிமெலேக்கு கூறினான்.
11 ஆகையால் அபிமெலேக்கு அனைவருக்கும் எச்சரிக்கை விடுவித்தான், “இவனையோ இவன் மனைவியையோ யாரும் துன்புறுத்தக்கூடாது. அப்படிச் செய்ய முயல்வோர் கொல்லப்படுவர்” என்றான்.
ஈசாக்கு செல்வந்தன் ஆகுதல்
12 ஈசாக்கு அங்கேயே நிலங்களில் விதை விதைத்தான். அவ்வாண்டு அவனுக்கு பெரும் அறுவடை கிடைத்தது. கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். 13 ஈசாக்கு செல்வந்தன் ஆனான். தொடர்ந்து அவன் பெரிய செல்வந்தனாக வளர்ந்துகொண்டிருந்தான். 14 அவனுக்கு நிறைய மந்தைகளும், அடிமைகளும் இருந்தனர். பெலிஸ்திய ஜனங்கள் அவன்மீது பொறாமை கொண்டனர். 15 ஆகவே அவர்கள் முற் காலத்தில் ஆபிரகாமும் அவனது வேலைக்காரர்களும் தோண்டிய கிணறுகள் அனைத்தையும் மண்ணால் நிரப்பி அழித்தனர். 16 அபிமெலேக்கு ஈசாக்கிடம், “எங்கள் நாட்டைவிட்டுப் போ. நீ எங்களைவிட பெரும் அதிகாரம் பெற்றிருக்கிறாய்” என்றான்.
17 எனவே ஈசாக்கு அந்த இடத்தை விட்டுப் போய், கேராரில் உள்ள சிறு நதியின் கரையில் குடியேறினான். 18 இதற்கு ரொம்ப காலத்திற்கு முன்பே ஆபிரகாம் நிறைய கிணறுகள் தோண்டியிருந்தான். ஆபிரகாம் மரித்தபின்பு, பெலிஸ்திய ஜனங்கள் அவற்றை மண்ணால் தூர்த்துவிட்டனர். அதன் பின்பு ஈசாக்கு மீண்டும் அக்கிணறுகளைத் தோண்டினான். அவற்றிற்கு தன் தந்தை இட்ட பெயர்களையே இட்டான். 19 ஈசாக்கின் வேலைக்காரர்களும் நதிக்கரையில் ஒரு கிணறு தோண்டினார்கள். அதிலிருந்து ஒரு பெரும் ஊற்று வந்தது. 20 ஆனால் அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் வேலைக்காரர்களோடு வாக்குவாதம் செய்து தண்ணீர் தங்களுடையது என உரிமை கொண்டாடினர். அதனால் ஈசாக்கு அதற்கு ஏசேக்கு என்று பெயர் வைத்தான்.
21 பிறகு ஈசாக்கின் வேலைக்காரர்கள் இன்னொரு கிணற்றைத் தோண்டினர். அங்குள்ள ஜனங்கள் அது தொடர்பாகவும் வாக்குவாதம் செய்தனர். எனவே ஈசாக்கு அதற்கு சித்னா என்று பெயரிட்டான்.
22 ஈசாக்கு அங்கிருந்து நகர்ந்து போய் வேறொரு கிணறு தோண்டினான். எவரும் அதுபற்றி வாதிட வரவில்லை. அதனால் அதற்கு ரெகொபோத் என்று பெயரிட்டான். “இப்போது கர்த்தர் நமக்கென்று ஒரு இடத்தைக் கொடுத்துவிட்டார். எனவே நாம் இங்கே செழித்து நாட்டில் பெருகுவோம்” என்றான்.
23 அங்கிருந்து ஈசாக்கு பெயர்செபாவுக்குப் போனான். 24 அன்று இரவு கர்த்தர் அவனோடு பேசி, “நானே உனது தந்தை ஆபிரகாமின் தேவன், அஞ்சவேண்டாம். நான் உன்னோடு இருக்கிறேன். நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உன் குடும்பத்தை பெரிதாக்குவேன். எனது ஊழியனான ஆபிரகாமுக்காக இதனைச் செய்வேன்” என்று சொன்னார். 25 எனவே, ஈசாக்கு அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி கர்த்தரை தொழுதுக்கொண்டு அங்கேயே குடியேறினான். அவனது வேலைக்காரர்கள் அங்கே ஒரு கிணறு தோண்டினர்.
26 அபிமெலேக்கு கேராரிலிருந்து ஈசாக்கைப் பார்க்க வந்தான். அவன் தன்னோடு தன் அமைச்சரான அகுசாத்தையும் அழைத்துவந்தான். மீகோல் எனும் படைத் தளபதியும் கூட வந்தான்.
27 “என்னை ஏன் பார்க்க வந்தீர்கள்? இதற்கு முன் என்னை நீங்கள் வெறுத்தீர்கள். உங்கள் நாட்டை விட்டு துரத்தினீர்களே” என்று ஈசாக்கு கேட்டான்.
28 “கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்பதை இப்போது தெரிந்துகொண்டோம். நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். 29 நாங்கள் உன்னைத் துன்புறுத்தவில்லை. நீயும் எங்களைத் துன்புறுத்தமாட்டாய் என்று வாக்குறுதி செய். நாங்கள் உன்னைச் சமாதானத்தோடுதான் வெளியே அனுப்பினோம். கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கிறார் என்பது இப்போது தெளிவாகிவிட்டது” என்றனர்.
30 அதனால் ஈசாக்கு அவர்களுக்கு விருந்து கொடுத்தான். அவர்கள் நன்றாக உண்டு, குடித்தனர். 31 மறுநாள் அதிகாலையில் ஒருவரோடொருவர் வாக்குறுதி செய்துகொண்டபின், அவர்கள் சமாதானத்தோடு பிரிந்து போனார்கள்.
32 அன்று, ஈசாக்கின் வேலைக்காரர்கள் வந்து தாங்கள் தோண்டிய கிணற்றைப்பற்றிக் கூறினர். “அதில் தண்ணீரைக் கண்டோம்” என்றனர். 33 அதனால் ஈசாக்கு அதற்கு சேபா என்று பெயரிட்டான். அந்த நகரமே பெயெர்செபா என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
ஏசாவின் மனைவியர்
34 ஏசாவுக்கு 40 வயது ஆனபோது, அவன் ஏத்தியரான இரு பெண்களை மணந்துகொண்டான். ஒருத்தி பெயேரியின் மகளான யூதித், இன்னொருத்தி ஏலோனுடைய மகளான பஸ்மாத். 35 இவர்களால் ஈசாக்கும் ரெபெக்காளும் பாதிக்கப்பட்டனர்.
தொழுநோயாளி குணமடைதல்(A)
8 இயேசு குன்றின்மீதிருந்து கீழிறங்கி வந்தார். ஏராளமான மக்கள் அவரைத் தொடர்ந்தார்கள். 2 அப்பொழுது தொழு நோயால் பீடிக்கப்பட்ட ஒருவன் அவரிடம் வந்தான். அவன் இயேசுவின் முன்பாகப் பணிந்து,, “கர்த்தாவே, நீர் விரும்பினால், என்னைக் குணப்படுத்த முடியும். அவ்வல்லமையைப் பெற்றிருக்கிறீர்” என்று சொன்னான்.
3 இயேசு அவனைத் தொட்டு,, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணம் அடைவாயாக!” என்று சொன்னார். உடனே அந்த மனிதன் தொழுநோயிலிருந்து குணமாக்கப்பட்டான். 4 பின் இயேசு அவனிடம்,, “என்ன நடந்தது என்பதை எவரிடமும் கூறாதே. ஆனால் ஆசாரியரிடம் சென்று உன்னைக் காட்டு. [a] நோயிலிருந்து குணம் அடைந்தவர்கள் செலுத்தவேண்டிய காணிக்கையை மோசே கட்டளையிட்டபடி செலுத்து. அதுவே நீ குணமடைந்ததை மக்களுக்குக் காட்டும்” என்று கூறி அனுப்பினார்.
வேலைக்காரன் குணமாகுதல்(B)
5 இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். இயேசு அந்நகரத்திற்குள் நுழைந்த பொழுது, படை அதிகாரி ஒருவன் வந்து அவரிடம் உதவி கேட்டுக் கெஞ்சினான். 6 அந்த அதிகாரி,, “கர்த்தாவே, என் வேலைக்காரன் மிக நோய் வாய்ப்பட்டு வீட்டில் படுத்திருக்கிறான். அவனால் சரீரத்தை அசைக்கக்கூட முடியவில்லை. மிகுந்த வலியினால் அவதிப்படுகிறான்” என்று சொன்னான்.
7 இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணப்படுத்துகிறேன்” என்று கூறினார்.
8 அதற்கு அந்த அதிகாரி,, “கர்த்தாவே, நீர் என் வீட்டிற்குள் வருமளவிற்கு நான் மேலானவனல்ல. நீர் செய்யவேண்டுவதெல்லாம், என் வேலைக்காரன் குணமடையட்டும் என்று கட்டளையிடுவது மட்டுமே. அப்போது அவன் குணம் அடைவான். 9 நான் என்னிலும் அதிகாரம் மிக்கவர் கீழ்ப் பணிபுரிகிறேன். என் அதிகாரத்திற்குக் கீழும் படைவீரர்கள் உள்ளனர். நான் ஒரு வீரனிடம் ‘போ’ என்றால், அவன் போகிறான். மற்றொரு வீரனிடம் ‘வா’ என்றால், அவன் வருகிறான். நான் என் வேலைக்காரனிடம் ‘இதைச் செய்’ என்றால், அவன் அதைச் செய்கிறான். (அதைப் போலவே நீரும் வல்லமை பெற்றவர் என்பதை நான் அறிவேன்)” என்றான்.
10 இதைக் கேட்ட இயேசு வியப்படைந்தார். தன்னுடன் இருந்த மக்களிடம் இயேசு,, “உண்மையைச் சொல்லுகிறேன், நான் பார்த்த மனிதர் அனைவரிலும், இஸ்ரவேலிலும் கூட, இவனே அதிக விசுவாசம் உடையவன். 11 பலர் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருவார்கள். அவர்கள் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருடன் அமர்ந்து பரலோக இராஜ்யத்தில் உணவு உண்பார்கள். 12 ஆனால் பரலோக இராஜ்யத்தை அடைய வேண்டியவர்களான யூதர்களோ வெளியே இருட்டில் எறியப்படுவார்கள். அங்கு அவர்கள் பற்களைக் கடித்துக் கூக்குரலிடுவார்கள்” என்று கூறினார்.
13 பிறகு இயேசு அதிகாரியிடம்,, “வீட்டிற்குச் செல். நீ எவ்வாறு விசுவாசித்தாயோ அவ்வாறே உன் வேலைக்காரன் குணமாவான்” என்று சொன்னார். அந்த நேரத்திலேயே அந்த அதிகாரியின் வேலைக்காரன் குணமாக்கப்பட்டான்.
இயேசு அநேகரைக் குணமாக்குதல்(C)
14 இயேசு பேதுருவின் வீட்டிற்குச் சென்றார். அங்குப் பேதுருவின் மாமியார் அதிகக் காய்ச்சலுடன் படுத்திருந்ததைக் கண்டார். 15 இயேசு அவளது கையைத் தொட்டார். உடனே அவளது காய்ச்சல் நீங்கியது. பின்னர் அவள் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தாள்.
16 அன்று மாலை, பிசாசு பிடித்த பல மக்களை அவரிடம் அழைத்து வந்தனர். இயேசு தமது வார்த்தையினால் அப்பிசாசுகளைத் துரத்தி, வியாதியாய் இருந்த அனைவரையும் குணமாக்கினார்.
17 ,“அவர் எங்களது நோய்களைத் தீர்த்தார்;
பிணிகளை நீக்கினார்” (D)
என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது நடந்தேறும்படியாக இயேசு இவற்றைச் செய்தார்.
2008 by World Bible Translation Center