Old/New Testament
எரேமியா விடுதலை செய்யப்படல்
40 ராமா நகரத்தில் எரேமியா விடுதலை செய்யப்பட்டப் பிறகு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. நேபுசராதான் எனும் பாபிலோனிய அரசனது சிறப்புக் காவலாளிகளின் தளபதி ராமா நகரில் எரேமியாவைக் கண்டான். எரேமியா சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான். அவன் எருசலேம் மற்றும் யூதாவின் கைதிகளுக்கு இடையில் இருந்தான். அக்கைதிகள் பாபிலோனுக்குக் கொண்டு போவதற்காக இருந்தனர். 2 தளபதியான நேபுசராதான் எரேமியாவைக் கண்டதும் அவனிடம் பேசினான். அவன், “எரேமியா, உனது தேவனாகிய கர்த்தர் இந்த இடத்துக்கு இப்பேரழிவு வரும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார். 3 கர்த்தர், தான் செய்வேன் என்று சொன்னபடியே எல்லாவற்றையும் செய்திருக்கிறார். இப்பேரழிவு நடந்தது. ஏனென்றால், யூதா ஜனங்களாகிய நீங்கள் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்து கீழ்ப்படியவில்லை. 4 ஆனால் இப்போது, எரேமியா, நான் உன்னை விடுதலை செய்கிறேன். நான் உனது மணிக்கட்டுகளிலிருந்து சங்கிலிகளை எடுத்து விடுவேன். நீ என்னோடு பாபிலோனுக்கு வர விரும்பினால் நான் உன்னை நன்றாக கவனித்துக் கொள்வேன். ஆனால், நீ என்னோடு வர விரும்பவில்லை என்றால் வரவேண்டாம். பார், நாடு முழுவதும் உனக்காகத் திறந்திருக்கிறது. நீ விரும்புகிற எங்கு வேண்டுமானாலும் போகலாம். 5 அல்லது சாப்பானின் மகனான அகிக்காமின் மகனான கெதலியாவிடம் திரும்பிப் போகலாம். பாபிலோன் அரசன் கெதலியாவை யூதாவின் நகரங்களுக்கு ஆளுநராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். போய் ஜனங்களுக்கிடையில் கெதலியாவோடு வாழு. அல்லது நீ விரும்புகிற எந்த இடத்துக்கும் போகலாம்” என்று சொன்னான்.
பிறகு நேபுசராதான் எரேமியாவிற்கு கொஞ்சம் உணவும் பரிசுப் பொருட்களும் கொடுத்து போகச்செய்தான். 6 எனவே, எரேமியா அகீக்காமின் மகனான கெதலியாவிடம் மிஸ்பாவுக்குப் போனான். எரேமியா கெதலியாவோடு, யூதா தேசத்தில் விடப்பட்டுள்ள ஜனங்களோடு தங்கினான்.
கெதலியாவின் குறுகிய ஆட்சி
7 எருசலேம் அழிக்கப்பட்டபோது, யூதாவின் படையிலுள்ள சில வீரர்களும் அதிகாரிகளும் அவர்களுடைய ஆட்களும் அத்திறந்த நாட்டிலேயே, விடுபட்டனர். அந்த வீரர்கள், அகீக்காமின் மகனான கெதலியாவைப் பாபிலோன் அரசன் தேசத்தில் விடுப்பட்டுள்ளவர்களின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்தனர். விடுப்பட்டுள்ள ஜனங்களில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏழைகளாக இருந்தனர். இவர்கள் கைதிகளாகப் பாபிலோனுக்குக் கொண்டுப்போகப்படாமல் இருந்தனர். 8 எனவே அவ்வீரர்கள் மிஸ்பாவிலுள்ள கெதலியாவிடம் வந்தனர். அவ்வீரர்கள்: நெத்தானியாவின் மகனான இஸ்மவேல், யோகனான், அவனுடைய சகோதரன் யோனத்தான், கரேயாவின் குமாரர்கள், தன் கூமேத்தின் மகனான செராயா, நெத்தோபாத் உரின் எப்பாயின் குமாரர்கள், மாகாத்தியாவை சார்ந்தவனின் மகன் யெசனியா, மற்றும் அவர்களோடு இருந்த மனிதர்கள்.
9 சாப்பானின் மகனான அகிக்காமின் மகனான கெதலியா, வந்த வீரர்களும் அவர்களோடு வந்தவர்களும் பாதுகாப்பை உணருமாறு பிரமாணம் செய்தான். கெதலியா சொன்னது இதுதான்: “வீரர்களாகிய நீங்கள், பாபிலோனிய ஜனங்களுக்கு சேவை செய்ய பயப்படவேண்டாம். இந்நாட்டில் குடியிருந்து, பாபிலோனிய அரசனுக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்தால் எல்லாம் நல்லபடியாக இருக்கும். 10 நானும் மிஸ்பாவில் வாழ்வேன். நான் உங்களுக்காக இங்கே வந்த கல்தேயரிடம் பேசுவேன். நீங்கள் அந்த வேலையை எனக்கு விட்டுவிடுங்கள். நீங்கள் திராட்சைகளை அறுவடை செய்ய வேண்டும். கோடைப் பழங்களையும், எண்ணெயையும் எடுக்க வேண்டும். நீங்கள் எதை அறுவடை செய்கிறீர்களோ அவற்றை உங்கள் சேமிப்பு ஜாடிகளில் போட்டு வையுங்கள். உங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நகரங்களில் வாழுங்கள்.” 11 மோவாப், அம்மோன், ஏதோம் மற்றும் மற்ற நாடுகளில் உள்ள அனைத்து யூதா ஜனங்களும் பாபிலோன் அரசன் யூதா தேசத்தில் யூதா ஜனங்கள் சிலரை விட்டுவிட்டுப் போயிருக்கிறான் என்று கேள்விப்பட்டனர். பாபிலோன் அரசன் சாப்பானின் மகனான அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்களின் ஆளுநாரகத் தேர்ந்தெடுத்திருப்பதைப்பற்றியும் கேள்விப்பட்டனர். 12 அந்த ஜனங்கள் இச்செய்திகளைக் கேள்விப்பட்டதும் அவர்கள் யூதா தேசத்திற்கு வந்தனர். அவர்கள் சிதறிக்கிடந்த நாடுகளில் இருந்து மிஸ்பாவிலுள்ள கெதலியாவிடம் திரும்பி வந்தனர். எனவே அவர்கள் திரும்பி வந்து திராட்சை அறுவடையையும் கோடைப் பழங்களையும் சேகரித்தனர்.
13 கரேயாவின் மகனான யோகனானும் மற்ற எல்லா யூதா படையின் அதிகாரிகளும் திறந்த நாட்டிலுள்ள அனைவரும் கெதலியாவிடம் வந்தனர். கெதலியா மிஸ்பா பட்டணத்தில் இருந்தான். 14 யோகனானும் அவனோடிருந்த அதிகாரிகளும் கெதலியாவிடம் சொன்னார்கள். “அம்மோனிய ஜனங்களின் அரசனான பாலிஸ் உன்னைக் கொல்ல விரும்புகிறான் என்பது உனக்குத் தெரியுமா? அவன் நெத்தானியாவின் மகனான இஸ்மவேலை அனுப்பியிருக்கிறான்.” ஆனால் அகிக்காமின் மகனான கெதலியா அவர்களை நம்பவில்லை.
15 பிறகு கரேயாவின் மகனான யோகனான் மிஸ்பாவில் கெதலியாவிடம் தனியாகப் பேசினான். யோகனான் கெதலியாவிடம், “நான் போய் நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலைக் கொல்லட்டுமா? இதைப்பற்றி எவரும் அறிந்துக் கொள்ளமாட்டார்கள். இஸ்மவேல் உன்னைக் கொல்லும்படி விடக்கூடாது. அது மீண்டும் உன்னைச் சுற்றியுள்ள அனைத்து யூதா ஜனங்களையும் பல்வேறு நாடுகளுக்குச் சிதறும்படிச் செய்யும். அதாவது யூதாவின் சில மீந்தவர்களும் அழியும்படி நேரும்” என்றான்.
16 ஆனால், அகிக்காமின் மகனான கெதலியா கரேயாவின் மகனான யோகனானிடம், “இஸ்மவேலைக் கொல்லாதே. நீ இஸ்மவேலைப்பற்றிச் சொல்வது எல்லாம் உண்மை அல்ல” என்றான்.
41 ஏழாவது மாதத்தில், நெத்தானியாவின் மகனான இஸ்மவேல் அகிக்காமின் மகனான கெதலியாவிடம் வந்தான். (நெத்தானியா எலிசாமாவின் மகன்.) இஸ்மவேல் அவனது பத்து ஆட்களோடு வந்தான். அந்த ஆட்கள் மிஸ்பா பட்டணத்துக்கு வந்தனர். இஸ்மவேல் அரச குடும்பத்தில் ஒரு உறுப்பினன். அவன் யூதா அரசனிடம் ஒரு அதிகாரியாக இருந்தவன். இஸ்மவேலும் அவனது ஆட்களும் கெதலியாவோடு உணவு உண்டனர். 2 அவர்கள் சேர்ந்து உண்ணும்பொழுது, இஸ்மவேலும் அவனோடு வந்த பத்துபேரும் தீடீரென்று எழுந்து அகிக்காமின் மகனான கெதலியாவை வாளால் கொன்றனர். கெதலியா பாபிலோன் அரசனால் யூதாவின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன். 3 இஸ்மவேல், கெதலியாவோடு மிஸ்பாவில் இருந்த மற்ற ஜனங்களையும் கொன்றுவிட்டான். இஸ்மவேல் கெதலியாவோடு இருந்த பாபிலோனிய வீரர்களையும் கொன்றான்.
4-5 கெதலியா கொலை செய்யப்பட்ட அந்நாளுக்குப் பிறகு, 80 பேர் மிஸ்பாவுக்கு வந்தனர். அவர்கள் தானியக் காணிக்கைகளையும் நறுமணப் பொருட்களையும் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டு வந்தனர். அந்த 80 பேரும் தங்கள் தாடிகளை சிரைத்திருந்தனர், தம் ஆடைகளைக் கிழித்திருந்தனர், தம்மைத்தாமே காயப்படுத்தியிருந்தனர். அவர்கள் சீகேம், சீலோ, சமாரியா ஆகிய இடங்களிலிருந்து வந்தனர். அவர்களில் எவருக்கும் கெதலியா கொலை செய்யப்பட்டது தெரியாது. 6 இஸ்மவேல் மிஸ்பாவை விட்டு அந்த 80 பேரையும் சந்திக்கப் போனான். அவர்களைச் சந்திக்க நடந்துப் போகும்போது அவன் அழுதான். இஸ்மவேல் அந்த 80 பேரையும் சந்தித்து அவர்களிடம், “என்னோடு வந்து அகிக்காமின் மகனான கெதலியாவைச் சந்தியுங்கள்” என்றான். 7 அந்த 80 பேரும் அவனோடு மிஸ்பாவுக்குச் சென்றனர். பிறகு இஸ்மவேலும் அவனது ஆட்களும் அந்த 80 பேரைக் கொன்று அந்த 80 பேரின் உடல்களையும் ஆழமான ஒரு குழிக்குள் போடத் துவங்கினார்கள். 8 ஆனால் அவர்களுள் 10 பேர் இஸ்மவேலிடம், “எங்களைக் கொல்லாதே. எங்களிடம் கோதுமையும் பார்லியும் உள்ளன. எங்களிடம் எண்ணெயும் தேனும் உள்ளன. நாங்கள் அவற்றை வயல்களில் மறைத்து வைத்துள்ளோம். அவற்றை உனக்குக் கொடுக்க விரும்புகிறோம்” என்றனர். எனவே இஸ்மவேல் அந்தப் பத்துப் பேரையும் தனியாக விட்டுவிட்டான். அவன் அவர்களை மற்றவர்களோடு கொல்லவில்லை. 9 (அந்த அகழி மிகப் பெரியது. இது ஆசா என்னும் யூதா அரசனால் கட்டப்பட்டது. ஆசா அரசன் இந்த அகழியைக் கட்டினான். எனவே போர்க் காலங்களில் அதில் தண்ணீர் இருக்கும். இஸ்ரவேல் அரசனான பாஷாவிடமிருந்து நகரத்தைக் காப்பாற்ற இதனைச் செய்தான். இது நிரம்பும்வரை இஸ்மவேல் மரித்த உடல்களைப் போட்டான்.)
10 இஸ்மவேல், மிஸ்பா நகரத்தில் இருந்த அனைத்து ஜனங்களையும் கைப்பற்றினான். பின்னர் அம்மோனியர் வாழ்ந்த நகரத்தை கடக்கப் புறப்பட்டான். அவர்களில் அரசனது மகள்களும் மற்ற விடுபட்ட மனிதர்களும் இருந்தனர். இவர்களை கெதலியா கவனித்துக்கொள்ளும்படி நேபுசாராதானால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். நேபுசராதான், பாபிலோன் அரசனின் சிறப்புக் காவல் படையின் தளபதி.
11 கரேயாவின் மகனான யோகனானும் அவனோடு இருந்த படை அதிகாரிகளும் இஸ்மவேல் செய்த அனைத்து கெட்டச் செயல்களைப்பற்றியும் கேள்விப்பட்டனர். 12 எனவே யோகனானும் படை அதிகாரிகளும் பல ஆட்களும் நெத்தானியாவின் மகனான இஸ்மவேலோடு சண்டையிடப் போனார்கள். அவர்கள் கிபியோன் நகரத்திலுள்ள பெருங்குளத்து தண்ணீர் அருகில் அவனைப்பிடித்தனர். 13 இஸ்மவேலால் கைது செய்யப்பட்டவர்கள் யோகனானையும் அவனோடு இருந்த படை அதிகாரிகளையும் பார்த்தனர். அந்த ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். 14 பிறகு இஸ்மவேலால் சிறை பிடிக்கப்பட்ட அந்த ஜனங்கள் அனைவரும் கரேயாவின் மகனான யோகனானிடம் ஓடிச் சென்றனர். 15 ஆனால் இஸ்மவேலும் அவனது எட்டு ஆட்களும் யோகனானிடமிருந்து தப்பித்துக்கொண்டனர். அவர்கள் அம்மோனிய ஜனங்களிடம் ஓடிப்போனார்கள்.
16 எனவே, கரேயாவின் மகனான யோகனானும் அவனது படையதிகாரிகளும் கைதிகளை விடுவித்தனர். இஸ்மவேல் கெதலியாவைக் கொலை செய்திருந்தான். மிஸ்பாவிலுள்ள ஜனங்களைக் கைப்பற்றியிருந்தான். மீதியிருந்தவர்களில் வீரர்கள், பெண்கள், குழந்தைகள், சபை அதிகாரிகள் என இருந்தனர். யோகனான் அவர்களை கிபியோன் நகரிலிருந்து திரும்பக் கொண்டு வந்தான்.
எகிப்திற்குத் தப்பித்தல்
17-18 யோகனானும் மற்றப் படை அதிகாரிகளும் கல்தேயர்களுக்கு பயந்தனர். பாபிலோனின் அரசன் கெதலியாவை யூதாவின் ஆளுநராகத் தேர்ந்தெடுத்திருந்தான். ஆனால் இஸ்மவேல் கெதலியாவைக் கொலை செய்துவிட்டான். யோகனான், கல்தேயர்கள் கோபமாக இருப்பார்கள் என்று அஞ்சினான். எனவே அவர்கள் எகிப்துக்கு ஓடிப்போக முடிவு செய்தனர். எகிப்துக்குப் போகும் வழியில் அவர்கள் கெருத்கிம்காமினில் தங்கினார்கள். கெருத்கிம்காமின் பெத்லேகம் நகருக்கு அருகில் இருக்கிறது.
42 அவர்கள் கெருத் கிம்காமினில் இருக்கும் போது, யோகனானும் ஓசாயாவின் மகனான யெசனியாவும் தீர்க்கதரிசி எரேமியாவிடம் சென்றனர். எல்லாப் படை அதிகாரிகளும் யோகனான் மற்றும் யெசனியாவுடன் சென்றனர். முக்கியத்துவம் குறைந்த ஜனங்களில் இருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை அனைத்து ஜனங்களும் எரேமியாவிடம் சென்றனர். 2 அந்த ஜனங்களனை வரும் எரேமியாவிடம், “எரேமியா, நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை தயவுசெய்துக் கேளும். யூதாவின் வம்சத்திலிருந்து தப்பிப் பிழைத்த இந்த ஜனங்களுக்காக உமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்யும். எரேமியா, எங்களில் நிறைய பேர் மீதியாக இருக்கவில்லை என்பதை நீர் பார்க்கமுடியும். ஒரு காலத்தில் நாங்கள் ஏராளமாக இருந்தோம். 3 எரேமியா, நாங்கள் எங்கே போக வேண்டும், நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று உமது தேவனாகிய கர்த்தர் என்ன கூறுகிறார் என்று கர்த்தரிடம் ஜெபம்செய்துக்கேளும்” என்றனர்.
4 பிறகு, எரேமியா தீர்க்கதரிசி, “நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைப் புரிந்துக்கொள்கிறேன். நீங்கள் கேட்டுக்கொண்டபடி நான் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்கிறேன். கர்த்தர் சொல்கிற எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் சொல்வேன். நான் உங்களிடமிருந்து எதையும் மறைக்கமாட்டேன்” என்றான்.
5 பிறகு, அந்த ஜனங்கள் எரேமியாவிடம், “நாங்கள், உமது தேவனாகிய கர்த்தர் சொன்னபடி செய்யாவிட்டால், பிறகு கர்த்தரே எங்களுக்கு எதிரான உண்மையான நம்பிக்கையுள்ள சாட்சியாக இருப்பார் என்று நம்புவோம். உமது தேவனாகிய கர்த்தர் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்லவே உம்மை அனுப்பியுள்ளார் என அறிகிறோம். 6 நாங்கள் அச்செய்தியை விரும்புகிறோமா அல்லது அச்செய்தியை விரும்பவில்லையா என்பது ஒரு பொருட்டன்று. நமது தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் அடிபணிவோம். நாங்கள் உம்மை எங்களுக்கான செய்தியை அறியவே அனுப்புகிறோம். அவர் என்ன சொல்கிறாரோ அதற்கு நாங்கள் அடிபணிவோம். பிறகு எங்களுக்கு நல்லவை நடக்கும். ஆம் நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணிவோம்” என்றனர்.
7 பத்து நாட்கள் முடிந்ததும், கர்த்தரிடமிருந்து செய்தி எரேமியாவிற்கு வந்தது. 8 பிறகு எரேமியா, கரேயாவின் மகனான யோகனானையும் அவனுடனிருந்த படை அதிகாரிகளையும் சேர்ந்து அழைத்தான். எரேமியா, முக்கியத்துவம் குறைந்த ஆட்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஆட்கள்வரை அனைத்து ஜனங்களையும் அழைத்தான். 9 பிறகு அவர்களிடம் எரேமியா, “இஸ்ரவேலர்களின் தேவனாகிய ஆண்டவர் கூறுவது இதுதான், நீங்கள் என்னை அவரிடம் அனுப்பினீர்கள். நான் தேவனோடு வழக்காடி நான் அவரிடத்தில் நீங்கள் கேட்க விரும்பியதை கேட்டேன். கர்த்தர் சொல்கிறது இதுதான். 10 ‘ஜனங்களாகிய நீங்கள் யூதாவில் தங்கினால் நான் உங்களைப் பலமுள்ளவர்களாகச் செய்வேன். நான் உங்களை அழிக்கமாட்டேன். நான் உங்களை நடுவேன். நான் உங்களைத் தள்ளமாட்டேன். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால், நான் உங்களுக்கு ஏற்படுத்திய பயங்கரமான செயல்களுக்காக வருத்தப்படுகிறேன். 11 இப்போது நீங்கள் பாபிலோன் அரசனுக்குப் பயப்படுகிறீர்கள். ஆனால் பாபிலோன் அரசனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்’ இதுதான் கர்த்தருடைய வார்த்தை, ‘ஏனென்றால் நான் உங்களுடன் இருக்கிறேன். நான் உங்களைக் காப்பாற்றுவேன். நான் உங்களை விடுவிப்பேன். நான் உங்களை அவனுடைய கைகளிலிருந்து தப்புவிப்பேன். 12 நான் உங்களிடம் தயவாய் இருப்பேன். பாபிலோனின் அரசனும் உங்களை இரக்கத்தோடு நடத்துவான். அவன் உங்களை திரும்பவும் உங்கள் நாட்டுக்குக் கொண்டு வருவான்.’ 13 ஆனால் நீங்கள், ‘நாங்கள் யூதாவில் தங்கமாட்டோம்’ என்று சொல்லலாம். அவ்வாறு நீங்கள் சொன்னால் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணிய மறுக்கிறீர்கள். 14 நீங்கள், ‘இல்லை. நாங்கள் போய் எகிப்தில் வாழ்வோம். எகிப்திலே நாங்கள் போரினிமித்தமாக கவலைப்படமாட்டோம். நாங்கள் எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கமாட்டோம். எகிப்தில் நாங்கள் பசியோடு இருக்கமாட்டோம்’ என்று சொல்லலாம். 15 நீங்கள் அவ்வாறு சொன்னால், பிறகு கர்த்தர் சொல்லும் வார்த்தையைக் கேளுங்கள். யூதாவில் உயிர் பிழைத்தவர்களே கேளுங்கள். இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது: ‘நீங்கள் எகிப்துக்குப் போய் வாழ வேண்டும் என்று முடிவு செய்தால் பிறகு இவை எல்லாம் நிகழும். 16 நீங்கள் போரின் வாளுக்கு அஞ்சுகிறீர்கள். ஆனால் இது அங்கே உங்களைத் தோற்கடிக்கும். நீங்கள் பசியைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். ஆனால் எகிப்தில் நீங்கள் பசியோடு இருப்பீர்கள். நீங்கள் அங்கே மரிப்பீர்கள். 17 எகிப்துக்குச் செல்லவேண்டும் என்று முடிவு செய்த ஒவ்வொருவரும் வாள் அல்லது பசி அல்லது பயங்கர நோயால் மரிப்பார்கள். எகிப்துக்குப் போகிற ஒருவனும் உயிர் பிழைக்கமாட்டான். நான் அவர்களுக்குக் கொண்டு வருகிற பயங்கரமானவற்றிலிருந்து ஒருவன் கூட தப்பிக்கமாட்டான்.’
18 “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: ‘எருசலேமிற்கு எதிராக கோபத்தை நான் காண்பித்தேன். எருசலேமில் வாழ்ந்த ஜனங்களை நான் தண்டித்தேன். அதே வழியில் எகிப்திற்குச் செல்கிற ஒவ்வொருவரிடமும் எனது கோபத்தைக் காட்டுவேன். மற்றவர்களுக்குத் தீமை ஏற்படுவதைப்பற்றி ஜனங்கள் பேசும்போது உங்களை சான்றாகக் காட்டுவார்கள். நீங்கள் ஒரு சாப வார்த்தைப்போன்று ஆவீர்கள். ஜனங்கள் உங்களை எண்ணி அவமானம் அடைவார்கள். ஜனங்கள் உங்களை நிந்திப்பார்கள். நீங்கள் யூதாவை மீண்டும் பார்க்கமாட்டீர்கள்.’
19 “யூதாவில் உயிர் பிழைத்தவர்களே, கர்த்தர் உங்களுக்கு, ‘எகிப்திற்குப் போக வேண்டாம்’ என்று நான் இப்பொழுது எச்சரிக்கிறேன். 20 நீங்கள் தவறு செய்துக்கொண்டிருக்கிறீர்கள். இது உங்கள் மரணத்துக்குக் காரணம் ஆகும். நீங்கள் என்னிடம், ‘எங்களுக்காக எங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய். கர்த்தர் என்ன செய்யவேண்டுமென்று சொல்கிறாரோ அனைத்தையும் சொல். நாங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறோம்’ என்றீர்கள். 21 எனவே இன்று, நான் உங்களிடம் கர்த்தருடைய செய்தியைச் சொல்லியிருக்கிறேன். ஆனால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. அவர் என்னை உங்களிடம் அனுப்பி வைத்து நீங்கள் செய்யவேண்டியவற்றை உங்களுக்கு சொல்ல சொன்னதை எல்லாம் நீங்கள் செய்யாமலிருக்கிறீர்கள். 22 எனவே, இப்போது நீங்கள் உறுதியாக புரிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் எகிப்திற்குச் சென்று வாழ விரும்புகிறீர்கள். ஆனால் எகிப்தில் இவை எல்லாம் உங்களுக்கு ஏற்படும். நீங்கள் வாள் அல்லது பசி அல்லது பயங்கரமான நோயால் மரிப்பீர்கள்” என்றான்.
4 தேவன் அந்த மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி இன்றும் நம்மிடம் உள்ளது. தேவனுடைய இளைப்பாறுதலில் நாம் பிரவேசிக்க முடியும் என்பதே அந்த வாக்குறுதி. ஆகையால் உங்களில் யாரும் இவ்வாக்குறுதியைப் பெறுவதில் தவறக் கூடாது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். 2 இரட்சிக்கப்படும் வழி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே நமக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கேட்ட செய்தி அவர்களுக்குப் பயன்படாமல் போயிற்று. ஏன்? ஏனென்றால் அவர்கள் அதனை விசுவாசமில்லாமல் கேட்டனர். 3 விசுவாசித்த நம்மால் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழைய முடியும். தேவன் சொன்னதுபோல,
“எனவே நான் கோபத்தோடு,
‘அவர்கள் ஒருபோதும் எனது இளைப்பாறுதலுக்குள் நுழைய முடியாது’ என்று ஆணையிட்டேன்” (A)
தேவன் இதைச் சொன்னார். ஆனால் இவ்வுலகத்தை உருவாக்கின நேரமுதல் தம் வேலையை தேவன் முடித்தார். 4 வாரத்தின் ஏழாவது நாளைப் பற்றி தேவன் பேசினார் என்று எழுதப்பட்டிருக்கிறது, “ஏழாவது நாளில் தேவன் அனைத்து வேலைகளில் இருந்தும் ஓய்வு எடுத்தார்.” 5 மேலும் அதே பகுதியில், மீண்டும், “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழைய முடியாது” என்றும் தேவன் கூறியிருக்கிறார்.
6 சிலர் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழையப் போகிறார்கள் என்பது உண்மை. ஆனால் முதலில் நற்செய்தியைக் கேட்டவர்கள் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழையவில்லை. அவர்கள் கீழ்ப்படியவில்லை என்பது தான் காரணம். 7 எனவே தேவன் இன்னொரு நாளைத் திட்டமிட்டார். அது “இன்று” என அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாளைக் குறித்து தாவீதின் மூலமாக ஏற்கெனவே மேற்கோள் காட்டிய பகுதியில் தேவன் பேசுகிறார்,
“இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டால்,
தேவனுக்கு எதிராக நீங்கள் கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்.” (B)
8 தேவனுடைய வாக்குறுதிப்படி அவரது இளைப்பாறுதலுக்குள் யோசுவா மக்களை வழி நடத்தவில்லை என்பது தெரியும். ஏனென்றால் பின்னர் இளைப்பாறுதலுக்கு தேவன் “இன்று” என இன்னொரு நாளைப் பற்றிக் கூறியிருக்கிறாரே. 9 தேவனுடைய பிள்ளைகளுக்கு இளைப்பாறுதலுக்குரிய நாள் வர இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. 10 தேவன் தனது வேலைகளை முடித்த பிறகு ஓய்வெடுத்தார். தேவனைப் போன்று தம் பணிகளை முடித்தவர்களே தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழைந்து ஓய்வெடுக்க முடியும். 11 எனவே தேவனுக்குக் கீழ்ப்படியாததற்காகப் பாலைவனத்தில் விழுந்து இறந்த உதாரணங்களைப் பின்பற்றி நம்மில் யாரும் விழுந்து விடாதபடி நாம் தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழையக் கடினமாக முயற்சிப்போம்.
12 தேவனுடைய வார்த்தையானது எப்பொழுதும் உயிரோடு இருப்பதும், செயல்படுவதுமாகும். அது இரு புறமும் கூரான வாளைவிட மிகவும் கூர்மையானது. அது ஆன்மாவையும், ஆவியையும், எலும்புகளையும், கணுக்களையும் வெட்டிப் பிரிக்கிறது. அது நம் உள்ளான மனதின் எண்ணங்களையும், நம் இதயம் கொண்டுள்ள கருத்துக்களையும் நியாயம் தீர்க்கிறது. 13 தேவனிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை. அனைத்தையும் அவரால் தெளிவாகக் காணமுடியும். அவருக்கு முன் எல்லாமே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. நாம் வாழ்ந்த முறையை அவரிடம் விவரிக்க வேண்டும்.
தேவனுக்கு முன் வர நமக்கு இயேசு உதவுகிறார்
14 நமக்கென்று ஒரு பெரிய பிரதான ஆசாரியர் உண்டு. அவர் பரலோகத்தில் தேவனோடு இருக்கப் போயிருக்கிறார். அவரே தேவனுடைய குமாரனாகிய இயேசு. எனவே நாம் நமது விசுவாசத்தில் உறுதியுடையவர்களாய் இருப்போமாக. 15 பிரதான ஆசாரியராகிய இயேசுவால் நமது பலவீனங்களைப் புரிந்துகொள்ள முடியும். பூமியில் வாழ்ந்தபோது அனைத்து வகைகளிலும், நம்மைப் போலவே அவரும் சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் பாவமே செய்யவில்லை. 16 எனவே, நமக்குத் தேவைப்படும் சமயத்தில் தேவனுடைய கிருபையும் இரக்கமும் நமக்குக் கிடைக்கும் வகையில் கிருபை உள்ள சிம்மாசனத்தை நாம் அணுகலாம்.
2008 by World Bible Translation Center