Old/New Testament
காசா என்னும் நகருக்கு சிம்சோன் செல்லுதல்
16 ஒரு நாள் சிம்சோன் காசா நகரத்திற்குச் சென்றான். அவன் அங்கு ஒரு வேசியைச் சந்தித்து, அன்றிரவு அவளோடு தங்கச் சென்றான். 2 காசா நகர ஜனங்களிடம், “சிம்சோன் இங்கு வந்திருக்கிறான்” என்று யாரோ தெரிவித்தனர். அவர்கள் அவனைக் கொல்ல எண்ணினார்கள். எனவே, அவன் இருந்த இடத்தை சூழ்ந்தனர். அவர்கள் மறைந்திருந்து சிம்சோனின் வரவுக்காக காத்திருந்தனர். அவர்கள் நகர வாயிலருகே இரவு முழுவதும் அமைதியாகத் தங்கியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர், “காலையில் சிம்சோனைக் கொல்வோம்” என்று பேசிக்கொண்டனர்.
3 ஆனால் சிம்சோன் அவ்விலைமகளோடு நள்ளிரவுவரை மட்டுமே தங்கியிருந்தான். சிம்சோன் நள்ளிரவில் விழித்தெழுந்தான். சிம்சோன் நகரவாயில் கதவுகளை பிடித்து, மதிலிலிருந்து தளர்த்திப் பெயர்த்தெடுத்தான். சிம்சோன் கதவுகளையும், அவற்றின் இரண்டு தூண்களையும், கதவுகளை மூடும் இரும்புத் துண்டுகளையும் சேர்த்துத் தூக்கிக்கொண்டான். சிம்சோன் அதை தோளில் சுமந்துக்கொண்டு, எபிரோன் நகருக்கு அருகிலுள்ள மலையின்மீது ஏறினான்.
சிம்சோனும் தெலீலாளும்
4 பின்னர் சிம்சோன் தெலீலாள் என்னும் ஒரு பெண்ணை நேசித்தான். அவள் சோரேக் என்னும் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவள்.
5 பெலிஸ்திய ஜனங்களின் தலைவர்கள் தெலீலாளிடம் சென்றனர். அவர்கள், “சிம்சோனைப் பெலசாலியாக வைத்திருப்பது எதுவென்று நாங்கள் அறிய விரும்புகிறோம். அவனது இரகசியத்தை உனக்குத் தெரிவிக்குமாறு நீ ஏதேனும் தந்திரம் செய். அப்போது அவனைப் பிடித்துக் கட்டுவது எப்படியென்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். பிறகு அவனைக் கட்டுப்படுத்துவதும் எளிதாயிருக்கும். நீ இதைச் செய்தால் நாங்கள் ஒவ்வொரு வரும் உனக்கு 28 பவுண்டு எடையுள்ள வெள்ளியைக் கொடுப்போம்” என்றார்கள்.
6 எனவே தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் எதனால் பெலசாலியாக இருக்கிறீர்கள் என்பதைக் கூறுங்கள். எவ்வாறு உங்களைக் கட்டி பெலவீனப்படுத்த முடியும்?” என்று கேட்டாள்.
7 சிம்சோன் பதிலாக, “ஏழு பச்சையான உலராத வில் நாண்களால் என்னைக் கட்டவேண்டும். அவ்வாறு செய்தால் நான் பிறரைப் போன்று பெலனற்றவனாவேன்” என்றான்.
8 அப்போது பெலிஸ்தியரின் அதிகாரிகள் தெலீலாளிடம் ஏழு பச்சையான வில் நாண்களைக் கொண்டு வந்தனர். அவை இன்னும் உலர்ந்திருக்கவில்லை. அவற்றால் தெலீலாள் சிம்சோனைக் கட்டினாள். 9 சிலர் அடுத்த அறையில் ஒளித்திருந்தனர். தெலீலாள் சிம்சோனிடம், “சிம்சோன், உங்களைப் பெலிஸ்தியர்கள் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். ஆனால் சிம்சோன் எளிதாக அந்த வில் நாண்களை அறுத்துப்போட்டான். விளக்கில் எரியும் திரியிலுள்ள சாம்பலைப் போன்று அவைத் தெறித்து விழுந்தன. எனவே பெலிஸ்தியர்கள் சிம்சோனின் பெலத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ளவில்லை.
10 அப்போது தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் என்னிடம் பொய் சொன்னீர்கள்! என்னை முட்டாளாக்கினீர்கள். உண்மையைத் தயவுசெய்து எனக்குக் கூறுங்கள். எப்படி, யாரால் உங்களைக் கட்டிப்போட முடியும்?” என்று கேட்டாள்.
11 சிம்சோன், “யாராவது என்னை முன்னால் பயன்படுத்தப்படாத புதுக் கயிறுகளால் கட்டவேண்டும். அவ்வாறு யாரேனும் எனக்குச் செய்தால் நானும் பிற மனிதர்களைப் போன்று பெலமிழந்தவனாகிவிடுவேன்” என்றான்.
12 எனவே தெலீளாள் சில புதுக்கயிறுகளை எடுத்து சிம்சோனைக் கட்டினாள். சில ஆட்கள் அடுத்த அறையில் ஒளித்துக்கொண்டிருந்தனர். தெலீலாள் அவனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கபோகிறார்கள்!” என்றாள். ஆனால் அவன் கயிறுகளை எளிதாக அறுத்துவிட்டான். நூலை அறுத்தாற்போன்று அவன் கயிறுகளை அறுத்தெறிந்தான்.
13 பின்பு தெலீலாள் சிம்சோனை நோக்கி, “நீங்கள் என்னிடம் மீண்டும் பொய் சொல்லிவிட்டீர்கள்! என்னை முட்டாள் ஆக்கிவிட்டீர்கள். இப்போது உங்களை ஒருவன் எவ்வாறு கட்டக்கூடும் என்பதைக் கூறுங்கள்” என்றாள்.
சிம்சோன், “நீ என் தலைமயிரின் 7 ஜடைகளையும் நெசவு தறியால் நெய்து அதனைப் பின்னலிட்டு இறுகக் கட்டினால் நானும் பிற மனிதரைப்போல் பெலமற்றவனாவேன்” என்றான்.
14 பின் சிம்சோன் உறங்கப்போனான். தெலீலாள் நெசவுத் துணியின் நூலைப் பயன்படுத்தி அவனது தலைமயிரின் 7 ஜடைகளையும் நெய்தாள். பின் தறியை நிலத்தில் ஒரு கூடார ஆணியால் அடித்தாள். அவள் மீண்டும் சிம்சோனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். சிம்சோன் கூடார ஆணியையும், தறியையும், பாவையும் பிடுங்கி எடுத்துக் கொண்டு எழுந்தான்!
15 பின் தெலீலாள் சிம்சோனைப் பார்த்து, “முற்றிலும் என்மேல் நம்பிக்கையற்றவராக இருக்கும்போது ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? உங்கள் இரகசியத்தை சொல்ல மறுக்கிறீர்கள்? மூன்றாவதுமுறை நீங்கள் என்னை முட்டாளாக்கிவிட்டீர்கள். உங்களது பேராற்றலின் இரகசியத்தை நீங்கள் இன்னும் எனக்குக் கூறவில்லை” என்றாள். 16 தினந்தோறும் அவள் சிம்சோனைத் தொந்தரவுச் செய்துக்கொண்டேயிருந்தாள். அவனது இரகசியத்தைப்பற்றி அவள் கேட்டதினால் அவன் ஆத்துமா மிகவும் சோர்ந்து, வாழ்க்கையை வெறுத்தான். 17 இறுதியில் சிம்சோன் தெலீலாளுக்கு எல்லாவற்றையும் கூறினான். அவன், “நான் எனது தலைமயிரைச் சிரைத்ததில்லை. நான் பிறக்கும் முன்னரே தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவன். யாராவது எனது தலை மயிரை நீக்கினால் எனது பலத்தை இழந்துவிடுவேன். நான் வேறெந்த மனிதனைப் போன்றும் பலவீனனாய் காணப்படுவேன்” என்றான்.
18 சிம்சோன் அவளிடம் இரகசியத்தைக் கூறிவிட்டான் என்பதைத் தெலீலாள் கண்டு கொண்டாள். பெலிஸ்தியரின் தலைவர்களுக்கு அவள் செய்தியைச் சொல்லியனுப்பினாள். அவள், “மீண்டும் இங்கே வாருங்கள். சிம்சோன் என்னிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டான்” என்றாள். எனவே பெலிஸ்தியரின் தலைவர்கள் தெலீலாளிடம் வந்தார்கள். அவளுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த பணத்தை அவர்கள் கொண்டு வந்திருந்தார்கள்.
19 சிம்சோன் அவள் மடியில் படுத்திருந்தபோதே அவனைத் தெலீலாள் உறங்க வைத்தாள். பின்பு அவள் சவரம் செய்யும் ஒருவனை அழைத்து அவனது தலைமயிரின் 7 ஜடைகளையும் சிரைத்துவிடச் செய்தாள். அப்போது சிம்சோன் தனது பெலத்தை இழந்தான். சிம்சோனின் பலம் அவனை விட்டு நீங்கியது. 20 அப்போது தெலீலாள் அவனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்தியர் உன்னைப் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். அவன் எழுந்து, “நான் எப்போதும் போல் என்னை விடுவித்து தப்பிவிடுவேன்” என்று நினைத்தான். கர்த்தர் அவனை விட்டு நீங்கிச்சென்றதை அவன் அறியவில்லை.
21 பெலிஸ்திய ஆட்கள் சிம்சோனைச் சிறைபிடித்தனர். அவர்கள் அவனது கண்களைப் பிடுங்கி, அவனைக் காசா நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். அவன் ஓடிவிடாதபடிக்கு அவனுக்கு விலங்கிட்டுக் கட்டினார்கள். அவர்கள் சிம்சோனைச் சிறையில் அடைத்து, அவனைத் தானியம் அரைக்குமாறு செய்தனர். 22 ஆனால் சிம்சோனின் தலைமயிர் மீண்டும் வளர ஆரம்பித்தது.
23 பெலிஸ்தியரின் தலைவர்கள் கொண்டாட்டத்திற்கென ஓரிடத்தில் கூடினார்கள். தங்கள் பொய்த் தெய்வமாகிய தாகோனிற்குப் பெரும்பலிகொடுக்க அங்கு வந்தனர். அவர்கள், “நமது தேவன் நமது பகைவனாகிய சிம்சோனை வெல்வதற்கு நமக்கு உதவினார்” என்று சொன்னார்கள். 24 பெலிஸ்தியர் சிம்சோனைக் காணும்பொழுது, அவர்கள் தம் பொய்த் தெய்வத்தை வாழ்த்தினார்கள். அவர்கள்,
“இம்மனிதன் நம் ஜனங்களை அழித்தான்!
இம்மனிதன் நம் ஜனங்களில் பலரைக் கொன்றான்!
ஆனால் நமது தெய்வம்
நம் பகைவனை வெல்ல உதவினார்!” என்றார்கள்.
25 அவர்கள் கொண்டாட்டத்தில் களிகூர்ந்து நன்றாகப் பொழுதைப் போக்கினார்கள். எனவே அவர்கள், “சிம்சோனை வெளியே அழைத்து வாருங்கள். அவனை ஆட்டம் காண்பித்து கிண்டல் செய்ய நாங்கள் விரும்புகிறோம்” என்றார்கள். எனவே அவர்கள் சிம்சோனைச் சிறையிலிருந்து அழைத்து வந்து அவனைக் கேலிச் செய்தனர். பொய்த் தெய்வம் தாகோன் கோவிலின் தூண்களுக்கு நடுவே அவனை நிறுத்தினார்கள். 26 ஒரு பணியாள் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தான். சிம்சோன் அவனிடம், “இக்கோவிலைத் தாங்கி நிற்கும் தூண்களை நான் தொடுமாறு என்னை நிறுத்து. நான் அவற்றில் சாய்ந்துகொள்ள விரும்புகிறேன்” என்றான்.
27 அக்கோவில் ஆண்களாலும் பெண்களாலும் நிரம்பிவழிந்தது. பெலிஸ்தியரின் எல்லா தலைவர்களும் அங்கிருந்தனர். கோவிலின் மாடி அடுக்கில் சுமார் 3,000 ஆண்களும் பெண்களும் இருந்தனர். அவர்கள் நகைத்துக் கொண்டு, சிம்சோனைக் கேலிச் செய்தபடி இருந்தனர்.
28 அப்போது சிம்சோன் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்தான். அவன், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, என்னை நினைவுகூரும். தேவனே, எனக்கு இன்னொருமுறை பெலன் தாரும். எனது இரு கண்களையும் பிடுங்கியதற்காய் இப்பெலிஸ்தியரை ஒருமுறை நான் தண்டிக்க அனுமதியும்!” என்றான். 29 பின்பு கோவிலின் நடுவே கோவிலைத் தாங்கிக் கொண்டிருந்த இரண்டு தூண்களையும் சிம்சோன் பற்றிக்கொண்டான். ஒரு தூண் அவனது வலதுபுறமும், இன்னொரு தூண் அவனது இடதுபுறமும் இருக்கும்படி நின்று கொண்டான். 30 சிம்சோன், “என்னையும் இந்த பெலிஸ்தியர்களுடன் மரிக்கவிடும்” என்றான். பின்பு அத்தூண்களைப் பலங்கொண்டமட்டும் தள்ளினான். தலைவர்கள் மீதும், அதிலிருந்த ஜனங்கள்மீதும் கோவில் இடிந்து விழுந்தது. இவ்வாறு உயிரோடிருந்தபோது கொன்றதைக் காட்டிலும் அதிகமான பெலிஸ்தியரைச் சிம்சோன் மரித்தபோது கொன்றான்.
31 சிம்சோனின் சகோதரர்களும் அவனது தந்தையின் குடும்பத்தினரும் அவனது உடலை எடுத்துக் கொண்டு வந்து, அவனது தந்தையின் கல்லறையிலேயே புதைத்தனர். அக்கல்லறை சோரா நகரத்திற்கும் எஸ்தாவோல் நகரத்திற்கும் நடுவே இருந்தது. இஸ்ரவேலருக்கு 20 ஆண்டுகள் சிம்சோன் நியாயாதிபதியாக இருந்தான்.
மீகாவின் விக்கிரகங்கள்
17 எப்பீராயீம் என்னும் மலைநாட்டில் மீகா என்னும் மனிதன் வசித்து வந்தான். 2 மீகா தன் தாயை நோக்கி, “உன்னிடமிருந்து 28 பவுண்டு வெள்ளியை யாரோ திருடிச் சென்றது உனக்கு நினைவிருக்கிறதா? நீ அதைக் குறித்து சாபமிட்டதை நான் கேட்டேன். என்னிடம் அந்த வெள்ளி உள்ளது, நான்தான் அதை எடுத்தேன்” என்றான்.
அவன் தாய், “எனது மகனே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்றாள்.
3 மீகா 28 பவுண்டு வெள்ளியையும் தன் தாயிடம் திருப்பிக் கொடுத்தான். அப்போது அவள், “நான் இந்த வெள்ளியை கர்த்தருக்கு விசேஷ அன்பளிப்பாகச் செலுத்துவேன். என் மகன் ஒரு விக்கிரகத்தைச் செய்து அதை வெள்ளியால் பூசும்படியாக இதைக் கொடுப்பேன். மகனே, எனவே இப்போதே அந்த வெள்ளியை உனக்கு நான் கொடுக்கிறேன்” என்றாள்.
4 ஆனால் மீகா வெள்ளியைத் தாயிடமே கொடுத்துவிட்டான். அவள் அதில் 5 பவுண்டு வெள்ளியை எடுத்து அதைப் பொற்கொல்லனிடம் கொடுத்தாள். வெள்ளி முலாம் பூசிய விக்கிரகத்தைப் பொற்கொல்லன் அந்த வெள்ளியால் உருக்கினான். அந்த விக்கிரகம் மீகாவின் வீட்டில் இருந்தது. 5 விக்கிரகங்களைத் தொழுதுகொள்ளும் கோயில் ஒன்று மீகாவுக்கு இருந்தது. அவன் ஒரு ஏபோத்தையும் சில வீட்டு விக்கிரகங்களையும் செய்தான். மீகா தன் மகன்களில் ஒருவனைப் பூஜை செய்வதற்கு நியமித்தான். 6 (அப்போது இஸ்ரவேலருக்கு அரசனாக யாருமில்லை. எனவே, ஒவ்வொருவனும் தான் சரியென நினைத்ததையே செய்தான்.)
7 அங்கு இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் நகரிலிருந்து வந்தவன். அவன் யூதா கோத்திரத்தினரோடு வாழ்ந்து வந்தான். 8 அந்த இளைஞன் யூதாவிலுள்ள பெத்லகேமிலிருந்து சென்றபின் வாழ்வதற்கு மற்றோர் இடம் தேடிக்கொண்டிருந்தான். அவன் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது, மீகாவின் வீட்டிற்கு வந்தான். எப்பிராயீமின் மலை நாட்டில் மீகாவின் வீடு இருந்தது. 9 மீகா அவனிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டான்.
இளைஞன் அதற்கு, “நான் யூதாவிலுள்ள பெத்லேகேமைச் சேர்ந்த ஒரு லேவியன். நான் வசிப்பதற்கு ஒரு இடம் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று பதில் கூறினான்.
10 அப்போது மீகா அவனிடம், “என்னோடு தங்கியிருந்து, எனது தந்தையாகவும், போதகனாகவும் இரு. ஒவ்வொரு ஆண்டும் உனக்கு 4 ஆழாக்கு வெள்ளியைத் தருவேன். மேலும் உனக்கு உடையும் உணவும் தருவேன்” என்றான்.
மீகா சொன்னபடியே லேவியன் செய்தான். 11 இளைஞனான லேவியன் மீகாவோடு வசிப்பதற்குச் சம்மதித்தான். மீகாவின் மகன்களைப்போல் அந்த இளைஞன் அவ்வீட்டில் ஒருவனாக வாழ்ந்து வந்தான். 12 மீகா அவனைப் பூஜை செய்பவனாகத் தேர்ந்தெடுத்தான். எனவே அவன் பூஜை செய்பவனாக மீகாவின் வீட்டில் வாழ்ந்து வந்தான். 13 மீகா, “கர்த்தர் எனக்கு நன்மை செய்வார் என்பதை இப்போது அறிகிறேன். நான் இதை அறிவேன். ஏனென்றால், ஒரு லேவியன் ஆசாரியனாக இருக்கிறான்” என்றான்.
லாயீசு நகரத்தை தாண் கைப்பற்றுதல்
18 அக்காலத்தில் இஸ்ரவேலருக்கு அரசனாக யாரும் இல்லை. அப்போது தாண் கோத்திரத்தினர் வசிப்பதற்கு இன்னும் இடம் தேடிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குரிய தேசப்பகுதியை அவர்கள் சுதந்தரிக்கவில்லை. பிற இஸ்ரவேலின் கோத்திரத்தினர் அனைவரும் தமக்குரிய நிலத்தைப் பெற்றிருந்தனர். ஆனால் தாண் கோத்திரத்தினர் தமக்கான நிலத்தை இதுவரை சுதந்தரிக்கவில்லை.
2 எனவே தாண் கோத்திரத்தினர் ஏதேனும் நிலத்தைப் பார்த்து வருவதற்காக 5 வீரர்களை அனுப்பினார்கள். அவர்கள் குடியேற ஏற்ற இடத்தைக் கண்டு பிடிப்பதற்காகச் சென்றனர். அந்த 5 மனிதர்களும் சோரா, எஸ்தாவோல் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தாணின் கோத்திரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களிடம், “போய் நமக்காக நிலத்தைப் பார்த்து வாருங்கள்” என்று சொல்லப்பட்டது.
அந்த 5 மனிதர்களும் எப்பிராயீமின் மலை நாட்டிற்கு வந்தனர். அவர்கள் மீகாவின் வீட்டிற்கு வந்து, இரவை அங்குக் கழித்தனர். 3 அவர்கள் மீகாவின் வீட்டிற்கருகே வந்து கொண்டிருந்தபோது, லேவியனாகிய இளைஞனின் சத்தத்தைக் கேட்டனர். அவர்கள் மீகாவின் வீட்டில் தங்கியிருந்தபோது, அவன் குரலை அடையாளம் கண்டு கொண்டனர். அவர்கள் அந்த இளைஞனிடம், “உன்னை இங்கு அழைத்து வந்தது யார்? நீ இங்கு என்ன செய்கிறாய்? இங்கு உன் வேலை என்ன?” என்று கேட்டனர்.
4 மீகா அவனுக்குச் செய்தவற்றை எல்லாம் அந்த இளைஞன் அவர்களுக்குக் கூறினான். அந்த இளைஞன், “மீகா என்னைச் சம்பளத்திற்கு அமர்த்தினான். நான் பூஜை செய்கிறவனாக உள்ளேன்” என்று கூறினான்.
5 எனவே அவர்கள் அவனிடம், “தயவு செய்து தேவனிடம் எங்களுக்காக ஏதாவது விசாரித்துச் சொல். நாங்கள் சிலவற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். நாங்கள் வாழ்வதற்காக இடம் தேடுவது வெற்றி பெறுமா?” என்று கேட்டனர்.
6 பூஜை செய்யும் இளைஞன் அந்த 5 மனிதரிடமும், “ஆம், சமாதானத்தோடு செல்லுங்கள். உங்கள் பாதையில் கர்த்தர் உங்களை வழிநடத்துவார்” என்றான்.
7 எனவே அந்த 5 மனிதர்களும் அங்கிருந்து சென்றனர். அவர்கள் லாயீஸ் நகரத்திற்குச் சென்றனர். அந்நகர ஜனங்கள் பாதுகாப்பாக வாழ்வதைக் கண்டனர். அவர்களைச் சீதோனியர் ஆண்டு வந்தனர். எல்லாம் சமாதானத்தேடு, அமைதியாக நடைபெற்றன. அவர்கள் எல்லாவற்றையும் நிறைவாய் பெற்றிருந்தனர். எந்தப் பகைவரும் அவர்களைத் துன்புறுத்துவதற்கு அருகே இருக்கவில்லை. மேலும் அவர்கள் சீதோனிலிருந்து வெகுதூரத்தில் வாழ்ந்து வந்தார்கள். ஆராமின் ஜனங்களோடும் எத்தகைய ஒப்பந்தமும் அவர்கள் செய்திருக்கவில்லை.
8 அந்த 5 பேரும் சோரா, எஸ்தாவோல், ஆகிய நகரங்களுக்குத் திரும்பினார்கள். அவர்களின் உறவினர், “நீங்கள் அறிந்து வந்ததென்ன?” என்று கேட்டார்கள்.
9 அவர்கள், “நாங்கள் ஒரு இடத்தைப் பார்த்து வந்திருக்கிறோம். அது மிகவும் நன்றாக இருக்கிறது. நாம் அதைத் தாக்கவேண்டும். காத்திருக்கக் கூடாது, நாம் போய், அத்தேசத்தை கைப்பற்றுவோம்! 10 அந்த இடத்திற்கு நீங்கள் வரும்போது அத்தேசம் மிகப் பெரிய நிலப்பரப்பு கொண்டது என்பதை அறிவீர்கள். எல்லாம் மிகுதியாக அங்குக் கிடைக்கின்றன. ஜனங்கள் தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதையும் நீங்கள் காண்பீர்கள். அத்தேசத்தைக் தேவன் நமக்கு நிச்சயமாக அளித்திருக்கிறார்” என்றார்கள்.
11 எனவே தாண் கோத்திரத்தைச் சேர்ந்த 600 ஆட்கள் சோரா, எஸ்தாவோல் ஆகிய நகரங்களிலிருந்து சென்றனர். அவர்கள் போருக்குத் தயாராக இருந்தனர். 12 லாயீஸ் நகரத்திற்குச் செல்லும் வழியில் அவர்கள் யூதா தேசத்திலுள்ள கீரியாத்யாரீம் என்னும் நகரத்திற்குச் சென்று, அங்கு முகாமிட்டுத் தங்கினார்கள். ஆகையால் கீரியாத்யாரீமிற்கு மேற்கேயுள்ள இடம் இன்று வரைக்கும் மக்னிதான் எனப்படுகிறது. 13 அந்த இடத்திலிருந்து 600 பேரும் எப்பிராயீமின் மலை நாட்டிற்குப் பயணம் செய்தனர். பிறகு அவர்கள் மீகாவின் வீட்டிற்கு வந்தனர்.
14 லாயீசைச் சுற்றிப் பார்த்துவந்த 5 பேரும்தம் உறவினர்களிடம், “இந்த வீடுகளுள் ஒன்றில் ஒரு ஏபோத் உள்ளது. மேலும் வீட்டிற்குரிய தெய்வங்களும், ஒரு செதுக்கப்பட்ட சிலையும், ஒரு வெள்ளி விக்கிரகமும் இங்கு உள்ளன. உங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியும். சென்று அவற்றை எடுத்து வாருங்கள்” என்றனர். 15 எனவே அவர்கள் மீகாவின் வீட்டருகே, இளைஞனாகிய லேவியன் வசித்துவந்த இடத்தில் நின்று, அந்த இளைஞனின் நலத்தை விசாரித்தனர். 16 தாண் கோத்திரத்தைச் சேர்ந்த 600 பேரும் நுழை வாயிலில் நின்று கொண்டனர். அவர்கள் கையில் ஆயுதங்களை ஏந்தியவர்களாய் போருக்குத் தயாராக இருந்தனர். 17-18 அந்த 5 ஒற்றர்களும் வீட்டினுள் நுழைந்தனர். போருக்குத் தயாராக நின்ற 600 பேரோடும் பூஜை செய்பவன் கதவிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்தான். அந்த ஆட்கள் செதுக்கப்பட்ட சிலை, ஏபோத், வீட்டு விக்கிரகங்கள், வெள்ளி விக்கிரகம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். லேவியனாகிய பூஜை செய்யும் இளைஞன், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.
19 ஐந்து பேரும், “அமைதியாக இரு! ஒரு வார்த்தையும் பேசாதே. எங்களோடு வா. எங்கள் தந்தையாகவும், பூஜை செய்பவனாகவும் இரு. நீ இப்போது ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவனுக்காக பூஜை செய்யும் பணியைச் செய்வது நல்லதா? அல்லது இஸ்ரவேலின் மொத்த கோத்திரங்களுக்கு பூஜை செய்வது நல்லதா?” என்று கேட்டனர். 20 இது லேவியனாகிய அம்மனிதனுக்குச் சந்தோஷம் அளித்தது. எனவே அவன் ஏபோத், வீட்டு விக்கிரகங்கள், விக்கிரகம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அம்மனிதரோடு சென்றான்.
21 பின்பு தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அந்த 600 பேரும் லேவியனாகிய அந்தப் பூஜை செய்பவனோடு மீகாவின் வீட்டிலிருந்து திரும்பி நடந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைகள், மிருகங்கள், பொருட்கள் அனைத்தையும் தங்களுக்கு முன்பாகப் போகவிட்டனர்.
22 அங்கிருந்து தாண் கோத்திரத்து ஆட்கள் மிகுந்த தூரம் சென்றார்கள். ஆனால் மீகாவிற்கு அருகே வாழ்ந்தவர்கள் ஒன்று கூடி தாண் மனிதர்களைத் துரத்திப் பிடித்தனர். 23 மீகாவின் ஆட்கள் தாணின் மனிதர்களைப் பார்த்து சத்தமிட்டனர். தாணின் ஆட்கள் திரும்பிப் பார்த்து மீகாவிடம், “சிக்கல் என்ன? ஏன் சத்தமிடுகிறீர்கள்?” என்றனர்.
24 மீகா, “தாணின் மனிதர்களாகிய நீங்கள் எனது விக்கிரகங்களை எடுத்து வந்தீர்கள். அவற்றை எனக்காகச் செய்தேன். எனக்காக பூஜை செய்பவனையும் அழைத்துப் போகிறீர்கள். இப்போது என்னிடம் என்ன இருக்கிறது? ‘உன் பிரச்சனை என்ன?’ என்று எப்படி என்னைக் கேட்கிறீர்கள்?” என்றான்.
25 தாண் கோத்திரத்தைச் சேர்ந்த மனிதர்கள், “நீங்கள் எங்களோடு விவாதிக்காதிருப்பது நல்லது. எங்கள் மனதரில் சிலர் கோபக்காரர்கள். எங்களைப் பார்த்து நீங்கள் சத்தமிட்டுப் பேசினால் அவர்கள் உங்களைத் தாக்கக்கூடும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் கொல்லப்படுவீர்கள்” என்றார்கள்.
26 பின்பு தாணின் ஆட்கள் திரும்பி, தங்கள் வழியேச் சென்றார்கள். அவர்கள் வலிமை மிக்கவர்கள் என்பதை மீகா அறிந்ததினால் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான்.
27 மீகா செய்த விக்கிரகங்களைத் தாணின் ஆட்கள் எடுத்து சென்றனர். மீகாவுடனிருந்த ஆசாரியனையும் அவர்கள் தங்களுடன் அழைத்து லாயீஸிக்கு வந்தனர். அங்குள்ள ஜனங்கள் அமைதியாக வாழ்ந்தனர். அவர்கள் எந்தத் தாக்குதலையும் எதிர்பார்க்கவில்லை. தாணின் ஆட்கள் தங்கள் வாளால் அவர்களை கொன்றுப் போட்டு, அவர்கள் நகரத்தை எரித்தனர். 28 லாயீஸில் வாழ்ந்த ஜனங்களைக் காப்பாற்றுவதற்கு யாரும் இருக்கவில்லை. சீதோன் நகரில் அவர்களுக்கு உதவும் ஜனங்கள் இருந்தனர். ஆனால் அந்நகரத்திலிருந்து வெகு தொலைவில் அவர்கள் வசித்தார்கள். லாயீசின் ஜனங்கள் ஆராமியரோடு எந்த ஒப்பந்தமும் செய்திருக்கவில்லை. எனவே அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. பேத்ரே கோபிற்குச் சொந்தமான ஒரு பள்ளத்தாக்கில் லாயீஸ் நகரம் இருந்தது. அந்த இடத்தில் தாணின் ஜனங்கள் ஒரு புதிய நகரத்தைக் கட்டினார்கள். அந்நகரம் அவர்கள் இருப்பிடமாயிற்று. 29 தாண் ஜனங்கள் அந்நகரத்திற்கு ஒரு புதிய பெயரிட்டனர். அந்நகரம் லாயீஸ் என்னும் பெயர் கொண்டது. அவர்கள் அதைத் தாண் என்று மாற்றினார்கள். இஸ்ரவேலின் மகன்களில் ஒருவனும், தங்கள் முற்பிதாவுமாகிய தாணின் பெயரால் அந்நகரை அழைத்தனர். 30 தாண் நகரில் தாண் கோத்திரத்தினர் அந்த விக்கிரங்களை வைத்தனர். கெர்சோனின் மகனாகிய யோனத்தானை அவர்கள் பூஜை செய்பவனாக நியமித்தனர். கெர்சோம் மோசேயின் மகன். இஸ்ரவேலர் பாபிலோனுக்குக் கைதிகளாக அழைத்துச் செல்லப்படும் வரையிலும் யோனத்தானும், அவனது மகன்களும் தாண் கோத்திரத்தினருக்கு பூஜை செய்பவர்களாக விளங்கினர். 31 தாண் ஜனங்கள் மீகா செய்த விக்கிரகங்களை தொழுதுகொண்டனர். தேவனின் கூடாரம் சீலோவில் இருந்த காலத்தில் அவர்கள் அந்த விக்கிரகங்களை வணங்கி வந்தனர்.
இயேசு ஒரு வேலைக்காரனைக் குணமாக்குதல்(A)
7 இயேசு இந்த எல்லாக் காரியங்களையும் மக்களுக்குச் சொல்லி முடித்தார். பின்பு இயேசு கப்பர்நகூமுக்குச் சென்றார். 2 கப்பர்நகூமில் இராணுவ அதிகாரி ஒருவன் இருந்தான். அவனுடைய வேலைக்காரன் ஒருவன் நோயுற்றிருந்தான். அவன் இறக்கும் தருவாயில் இருந்தான். அந்த அதிகாரி அவ்வேலைக்காரனை மிகவும் நேசித்தான். 3 அந்த அதிகாரி இயேசுவைப் பற்றிக்கேள்விப்பட்டபோது, சில வயதான யூதத்தலைவர்களை இயேசுவிடம் அனுப்பினான். இயேசு வந்து வேலைக்காரனைக் குணப்படுத்தக் கேட்டுக்கொள்ளும்பொருட்டு அவர்களை அதிகாரி அனுப்பினான். 4 அவர்கள் இயேசுவிடம் சென்றனர். அதிகாரிக்கு உதவுமாறு இயேசுவை அவசரமாக வேண்டினர். அவர்கள், “உம்முடைய உதவியைப் பெறும் அளவுக்கு இந்த அதிகாரி உண்மையிலேயே தகுதி வாய்ந்தவன்தான். 5 அவன் நம் மக்களை நேசிக்கிறான். நமக்காக ஜெப ஆலயத்தைக் கட்டியிருக்கிறான்” என்றனர்.
6 எனவே இயேசு அந்த மனிதர்களோடு புறப்பட்டார். இயேசு அந்த அதிகாரியின் வீட்டை நெருங்குகையில் அதிகாரி தனது நண்பர்களை அனுப்பினான். அவர்களை இயேசுவிடம் “கர்த்தாவே, நீர் என் வீட்டுக்கு வர வேண்டியதில்லை. எங்கள் வீட்டிற்கு உம்மை அழைத்துச் செல்லும் அளவுக்கு நான் தகுதி உடையவன் அல்லன். 7 அதனால்தான் நான் நேரிடையாக உம்மிடம் வரவில்லை. நீர் கட்டளையிடும். என் வேலைக்காரன் குணம் பெறுவான். 8 உம்முடைய அதிகாரத்தை நான் அறிவேன். பிற மனிதர்களின் அதிகாரத்துக்குட்பட்ட மனிதன் நான். எனக்குக் கீழ் பல வீரர்கள் உண்டு. அவர்களில் ஒருவனை நான் ‘போ’ என்றால் போகிறான். மற்றொருவனை ‘வா’ என்றால் வருகிறான். என் வேலையாளிடம் ‘இதைச் செய்’ என்றால் உடனே அவன் கீழ்ப்படிகிறான்” என்று கூறுமாறு அனுப்பினான்.
9 இதைக் கேட்டபோது இயேசு மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். தன்னைத் தொடர்ந்து வருகிற மக்களை நோக்கித் திரும்பினார். “இஸ்ரவேல் மக்களிடம் கூட இல்லாத வேறெங்கும் காணப்படாத, உயர்ந்த விசுவாசத்தை இவனிடம் கண்டேன்” என்றார்.
10 இயேசுவைக் காண அனுப்பப்பட்ட மனிதர்கள் அதிகாரியின் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர். அங்கு அந்த வேலைக்காரன் குணமடைந்திருப்பதைக் கண்டனர்.
மரித்தவன் எழுப்பப்படுதல்
11 மறுநாள் இயேசு நாயீன் என்னும் நகரத்திற்குச் சென்றார். இயேசுவின் சீஷர்களும், மிகப் பெரிய கூட்டமான மக்கள் பலரும் அவரோடு பிராயாணம் செய்தனர். 12 நகர வாசலை இயேசு நெருங்கியபோது ஒரு மரண ஊர்வலத்தைக் கண்டார். விதவையான ஒரு தாய் தனது ஒரே மகனை இழந்திருந்தாள். அவனது உடலைச் சுமந்து சென்றபோது தாயுடன் அந்நகர மக்கள் பலரும் கூட இருந்தனர். 13 கர்த்தர் (இயேசு) அவளைப் பார்த்தபோது, அவளுக்காக மனதுருகினார். இயேசு அவளிடம் சென்று, “அழாதே” என்றார். 14 பாடையின் அருகே வந்து இயேசு அதைத் தொட்டார். அந்தப் பாடையைச் சுமந்து வந்த மனிதர்கள் நின்றனர். இயேசு இறந்த மனிதனை நோக்கி, “இளைஞனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்கிறேன்” என்றார். 15 இறந்துபோன மகன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். அவனை அவன் தாயிடம், இயேசு ஒப்படைத்தார்.
16 எல்லா மக்களும் ஆச்சரியமுற்றனர். அவர்கள், “ஒரு மகா தீர்க்கதரிசி நம்மிடையே வந்துள்ளார்” என்றனர். மேலும் அவர்கள், “தேவன் தம் மக்களைக் கவனித்துக்கொள்கிறார்” என்றார்கள்.
17 இயேசுவைப் பற்றிய இச்செய்தி யூதேயா முழுவதும் அதைச் சூழ்ந்த எல்லா இடங்களிலும் பரவிற்று.
யோவானின் கேள்வி(B)
18 இவை அனைத்தையும் குறித்து யோவானின் சீஷர்கள் யோவானுக்குக் கூறினர். தன் சீஷர்களில் இருவரை யோவான் அழைத்தான். 19 “நீர்தானா வருகிறவர், அல்லது இன்னொருவர் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா” என்று கேட்டுத் தெரிந்து கொள்ள கர்த்தரிடம் அவர்களை யோவான் அனுப்பினார்.
20 அவ்விதமாகவே அந்த மனிதர் இயேசுவிடம் வந்தனர். அவர்கள், “யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம், ‘நீர்தானா வருகிறவர், அல்லது இன்னொருவரின் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா?’ என்று கேட்டுவர அனுப்பினார்” என்றார்கள்.
21 அப்போது இயேசு பலரையும் காய்ச்சலில் இருந்தும் நோய்களில் இருந்தும் குணமாக்கவும், பிசாசினால் வரும் அசுத்த ஆவிகளினின்று விடுதலை பெறவும் செய்தார். குருடர்கள் பலர் மீண்டும் பார்வை பெறுமாறு அவர்களைக் குணப்படுத்தினார். 22 யோவானின் சீஷர்களை நோக்கி இயேசு, “இங்கு நீங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் கூறுங்கள். குருடர்கள் குணமடைந்து பார்க்கிறார்கள். முடவர்கள் குணமடைந்து நடக்கிறார்கள். தொழுநோயாளிகள் நலம் பெறுகின்றனர். செவிடர்கள் நலம் பெற்றுக் கேட்கிறார்கள். மரித்தோர் உயிர்ப்பிக்கப்படுகிறார்கள். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தி ஏழைகளுக்குச் சொல்லப்படுகிறது. 23 என்னை ஏற்றுக்கொள்ளுகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்!” என்றார்.
24 யோவானின் தொண்டர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் இயேசு யோவானைக் குறித்து அவர்களிடம் பேச ஆரம்பித்தார்: “நீங்கள் வனாந்தரத்துக்கு எதைப் பார்க்கச் சென்றீர்கள்? காற்றில் அசையும் நாணலையா? 25 நீங்கள் எதைப் பார்க்கும்படியாக வெளியே சென்றீர்கள்? நல்ல ஆடைகள் அணிந்த மனிதனையா? அழகிய மெல்லிய ஆடைகள் அணிந்த மக்கள் அரசர்களின் உயர்ந்த அரண்மனைகளில் வாழ்வார்கள். 26 உண்மையாகவே யாரைப் பார்க்கச் சென்றீர்கள்? ஒரு தீர்க்கதரிசியையா? ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், யோவான் ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மிகவும் சிறந்தவன். 27 இவ்வாறு யோவானைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது:
“‘கேளுங்கள்! உங்களுக்கு முன்பாக என் செய்தியாளனை நான் அனுப்புவேன்.
அவன் உங்களுக்கு வழியை ஆயத்தம் செய்வான்.’ (C)
28 நான் உங்களுக்குச் சொல்கிறேன். உலகில் பிறந்த எந்த மனிதனைக் காட்டிலும் யோவான் பெரியவன். ஆனால் தேவனுடைய இராஜ்யத்தில் முக்கியத்துவம் குறைந்தவன் கூட யோவானைக் காட்டிலும் பெரியவன்”.
29 (யோவானின் போதனைகளை மக்கள் கேட்டபோது தேவனின் போதனைகள் நல்லவை என்று ஒத்துக்கொண்டனர். வரி வசூலிப்பவர்களும் அதனை ஆமோதித்தனர். இம்மக்கள் யோவானால் ஞானஸ்நானம் பெற்றனர். 30 ஆனால் பரிசேயர்களும், வேதபாரகரும் தேவனுடையத் திட்டத்தைத் தங்களுக்கென்று ஏற்றுக்கொள்ள மறுத்தனர். யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதை அவர்கள் அனுமதிக்கவில்லை.)
2008 by World Bible Translation Center