Old/New Testament
இஸ்ரவேலரை வழிநடத்துவதற்கு கர்த்தர் யோசுவாவைத் தெரிந்தெடுத்தல்
1 மோசே கர்த்தருடைய ஊழியனாக இருந்தான். நூனின் மகனாகிய யோசுவா மோசேயின் உதவியாளனாக இருந்தான். மோசே மரித்த பிறகு, கர்த்தர் யோசுவாவிடம் பேசினார். கர்த்தர், 2 எனது ஊழியனாகிய மோசே மரித்துவிட்டான். இப்போது நீயும் இந்த ஜனங்களும் யோர்தான் நதியைத் தாண்டி, நான் இஸ்ரவேல் ஜனங்களாகிய உங்களுக்குக் கொடுக்கின்ற தேசத்திற்குள் நீங்கள் செல்லவேண்டும். 3 நான் இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுப்பதாக மோசேக்கு வாக்களித்திருந்தேன். எனவே நீங்கள் காலடி எடுத்து வைக்கும் இடத்தையெல்லாம் உங்களுக்கே கொடுப்பேன். 4 பாலைவனத்திலிருந்தும், லீபனோனிலிருந்தும் பெரிய நதியாகிய ஐபிராத்து வரைக்குமான ஏத்திய ஜனங்களுக்குரிய, தேசம் உங்களுக்குரியதாகும். மற்றும் உங்கள் எல்லைக்குள் இங்கிருந்து (சூரியன் மறைகிற இடமாகிய) மேற்கில் மத்தியதரைக் கடல் வரைக்குமுள்ள தேசம் இருக்கும். 5 நான் மோசேயோடு இருந்தது போல் உன்னோடும் இருப்பேன். உன் ஆயுள் உள்ளமட்டும் உன்னை யாரும் எதிர்க்கவோ தடுக்கவோ முடியாது. நான், உன்னைக் கைவிடமாட்டேன். ஒருபோதும் உன்னைவிட்டு விலகமாட்டேன்.
6 “யோசுவா, நீ வல்லமையும், தைரியமும் உள்ளவனாக இருக்கவேண்டும்! இந்த ஜனங்கள் தமக்குரிய தேசத்தைப் பெறும்படி நீ அவர்களை வழிநடத்த வேண்டும். இந்நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக நான் அவர்கள் முன்னோர்களுக்கு வாக்களித்தேன். 7 ஆனால் நீயும் மற்றொரு காரியத்தில் உறுதியோடும், தைரியத்தோடும் இருக்க வேண்டும். எனது ஊழியனாகிய மோசே உனக்குக் கொடுத்த கட்டளைகளுக்குக் கண்டிப்பாக நீ கீழ்ப்படியவேண்டும். நீ அவற்றைச் சரியாகப் பின்பற்றினால், நீ செய்கிற எல்லாவற்றிலும் வெற்றி அடைவாய். 8 சட்ட புத்தகத்தில் எழுதியிருப்பவற்றை எப்போதும் நினைவுகூர்ந்து, இரவும் பகலும் அதைப்படி. அப்போது அப்புத்தகத்தில் எழுதியிருப்பவைகளுக்கு நீ கீழ்ப்படிய முடியும். இதைச் செய்தால், நீ செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் ஞானமுள்ளவனாய் வெற்றி காண்பாய். 9 நீ உறுதியும், தைரியமும் உடையவனாய் இருக்க வேண்டுமெனக் கட்டளையிட்டதை நினைவில் வைத்துக்கொள். எனவே பயப்படாதே, நீ போகுமிடங்களில் எல்லாம் தேவனாகிய கர்த்தர் உன்னோடிருப்பார்” என்றார்.
யோசுவா பதவி ஏற்குதல்
10 யோசுவா, ஜனங்களின் தலைவர்களுக்கு ஆணைகளைக் கொடுத்தான். 11 அவன், “முகாம்களுக்குச் சென்று ஜனங்களிடம் தயாராகும்படி கூறுங்கள், மேலும் ஜனங்களிடம் ‘கொஞ்சம் உணவைத் தயாரியுங்கள். இன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் நாம் யோர்தான் நதியைக் கடக்கப் போகிறோம். தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற தேசத்திற்குப் போய் அதைச் சுதந்தரிப்போம்’ எனச் சொல்லுங்கள்” என்றும் சொன்னான்.
12 பின் ரூபன், காத், ஆகிய கோத்திரத்தாரிடமும், மனாசே கோத்திரத்தின் பாதிப்பேர்களிடமும் யோசுவா பேசினான். 13 அவன், “கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கூறியதை நினைவுகூருங்கள். தேவனாகிய கர்த்தர் நீங்கள் தங்குவதற்காக ஓரிடத்தை உங்களுக்குக் கொடுப்பார் என்று அவன் கூறினான். கர்த்தர் அத்தேசத்தை உங்களுக்குத் தருவார்! 14 உண்மையில், யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள தேசத்தை கர்த்தர் ஏற்கெனவே கொடுத்துவிட்டார். உங்கள் மனைவிகளும், பிள்ளைகளும், உங்கள் மிருகங்களோடு உங்களுக்குச் சொந்தமான இத்தேசத்தில் தங்கியிருக்கலாம். ஆனால் போர் வீரர்கள் உங்கள் சகோதரரோடு யோர்தான் நதியைக் கடக்க வேண்டும். நீங்கள் போருக்குத் தயாராகி உங்கள் சகோதரர் அத்தேசத்தைக் கைப்பற்ற உதவவேண்டும். 15 கர்த்தர் நீங்கள் தங்கியிருப்பதற்கு ஓர் இடத்தைக் கொடுத்தார். அதையே உங்கள் சகோதரருக்கும் செய்வார். தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குத் தருகின்ற தேசத்தைக் கைப்பற்றுவதற்கு நீங்கள் உதவவேண்டும். பிறகு நீங்கள் யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள உங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பி வரலாம். கர்த்தருடைய ஊழியனாகிய மோசே உங்களுக்கு அத்தேசத்தைப் பிரித்துக் கொடுத்தான்” என்றான்.
16 அப்போது ஜனங்கள் யோசுவாவிடம், “நீர் எங்களுக்குக் கட்டளையிடுகின்ற எல்லாக் காரியங்களையும் செய்வோம்! நீர் சொல்கின்ற இடங்களுக்கெல்லாம் போவோம்! 17 நாங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தபடியே, நீர் கூறுகின்றவற்றிற்கும் கீழ்ப்படிவோம். நாங்கள் கர்த்தரிடம் ஒன்றை மட்டும் கேட்கிறோம். மோசேயோடு இருந்தபடியே, உங்களோடும் இருக்க வேண்டுமென தேவனாகிய கர்த்தரிடம் கேட்கிறோம். 18 மேலும், உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய யாராவது மறுத்தால், அல்லது உமக்கு எதிராக யாராவது எழும்பினால், அப்போது அவன் கொல்லப்படுவான். உறுதியோடும் தைரியத்தோடும் இரும்!” என்றனர்.
எரிகோவில் ஒற்றர்கள்
2 அகாசியாவில் நூனின் மகனாகிய யோசுவாவும், ஜனங்கள் அனைவரும் முகாமிட்டிருந்தனர். யோசுவா இரண்டு ஒற்றர்களை அனுப்பினான். அம்மனிதர்களை யோசுவா அனுப்பிய விவரம் யாருக்கும் தெரியாது. யோசுவா அவர்களிடம், “போய் தேசத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள், முக்கியமாக எரிகோ நகரத்தைப் பார்த்து வாருங்கள்” என்றான்.
எனவே அவர்கள் எரிகோ நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் ஒரு வேசியின் வீட்டிற்குச் சென்று, அங்கே இரவில் தங்கினர். அப்பெண்ணின் பெயர் ராகாப்.
2 சிலர் எரிகோவின் அரசனிடம் சென்று, “நேற்றிரவு இஸ்ரவேலிலிருந்து சில மனிதர்கள் நம் நாட்டின் பெலவீனங்களைக் கண்டறிய வந்திருக்கிறார்கள்” என்றனர்.
3 எனவே எரிகோவின் அரசன் ராகாபுக்கு, “உனது வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிற மனிதர்களை ஒளித்து வைக்காதே. அவர்களை வெளியே அழைத்து வா. அவர்கள் நம் நாட்டை உளவு பார்க்க வந்துள்ளனர்” என்ற செய்தியைச் சொல்லியனுப்பினான்.
4 அப்பெண் அவ்விருவரையும் மறைத்து வைத்திருந்தாள். ஆனால் அவள், “அவ்விருவரும் இங்கு வந்திருந்தனர், அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்கிற விவரம் எனக்குத் தெரியாது. 5 மாலையில், நகர வாயிலை அடைக்கும் சமயத்தில், அவ்விருவரும் சென்றுவிட்டனர். அவர்கள் எங்கே சென்றனர் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் விரைந்து சென்றால், அவர்களைப் பிடிக்கக் கூடும்” என்றாள். 6 (ராகாப், அவள் இப்படி கூறினாலும், உண்மையில் அவ்விருவரையும், கூரையின் மேல்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கே அவள் குவித்து வைத்திருந்த சணல் தட்டைகளுக்குள் மறைத்து வைத்திருந்தாள்.)
7 எனவே அரசனால் அனுப்பப்பட்ட ஆட்கள் நகரத்திற்கு வெளியே சென்ற பின்பு, நகர வாயிலை அடைத்தனர். இஸ்ரவேலிலிருந்து வந்த இருவரையும் தேடி அரசனின் மனிதர்கள் சென்றனர். அவர்கள் யோர்தான் நதிக்குச் சென்று, ஜனங்கள் நதியைக் கடக்கும் எல்லா இடங்களிலும் அவர்களைத் தேடினார்கள்.
8 ஒற்றர்களாக வந்த இருவரும் இரவில் தூங்குவதற்கு ஆயத்தமாயினர். ஆனால் ராகாப் கூரையின் மேல்பகுதிக்கு ஏறிச் சென்று அவர்களிடம், 9 “உங்கள் ஜனங்களுக்கு கர்த்தர் இத்தேசத்தைக் கொடுத்தார் என்பதை நான் அறிவேன். நீங்கள் எங்களுக்கு அச்சமூட்டுகிறீர்கள். இத்தேசத்தில் வாழும் ஜனங்கள் உங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். 10 கர்த்தர் உங்களுக்கு உதவிய வழிகளை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறபடியால் நாங்கள் அஞ்சுகிறோம். நீங்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அவர் செங்கடலின் தண்ணீரை வற்றிப்போகச் செய்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். சீகோன், ஓகு என்னும் இரண்டு எமோரிய அரசர்களுக்கும் நீங்கள் செய்ததை நாங்கள் கேள்விப்பட்டோம். யோர்தான் நதியின் கிழக்கில் வாழ்ந்த அரசர்களை நீங்கள் அழித்ததையும் அறிந்தோம். 11 அந்தக் காரியங்களை நாங்கள் அறிந்து மிகவும் அஞ்சினோம். இப்போது, எங்களில் எந்த மனிதனுக்கும் உங்களை எதிர்க்கும் துணிவு இல்லை. ஏனெனில் உங்கள் தேவனாகிய கர்த்தர் மேலே வானத்தையும், கீழே பூமியையும் ஆளுகிறார்! 12 எனவே நீங்கள், இப்போது எனக்கு ஒரு வாக்குறுதி அளிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். நான் உங்களிடம் இரக்கம் காட்டி, உங்களுக்கு உதவினேன். எனவே என் குடும்பத்திற்கு இரக்கம் காட்டுவதாக கர்த்தருக்கு முன்னால் வாக்களியுங்கள். நீங்கள் இதைச் செய்வீர்களென்று எனக்கு உறுதி கூறுங்கள். 13 நீங்கள் எனது தந்தை, தாய், சகோதரர்கள், சகோதரிகள், அவர்கள் குடும்பத்தினர் ஆகியோர் உட்பட, எனது குடும்பத்தார் அனைவரையும் உயிரோடு வாழ அனுமதிப்பதாக எனக்குக் கூறுங்கள். எங்களை மரணத்தினின்று விடுவிப்பதாக எனக்கு வாக்குறுதி அளியுங்கள்” என்றாள்.
14 அவ்விருவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அவர்கள், “உங்கள் உயிருக்கு எங்கள் உயிரைப் பணயம் வைக்கிறோம். நாங்கள் செய்வதை யாருக்கும் சொல்லாதே. கர்த்தர், எங்களுக்குரிய நாட்டை எங்களுக்குக் கொடுக்கும்போது, உனக்கு இரக்கம் காட்டுவோம். நீ எங்களை நம்பலாம்” என்றனர்.
15 நகரத்தின் மதிலில் அப்பெண்ணின் வீடுகட்டப்பட்டிருந்தது. அது சுவரின் ஒரு பாகமாக அமைந்திருந்தது. எனவே அப்பெண் ஜன்னல் வழியே ஒரு கயிற்றின் மூலமாக அவ்விருவரையும் கீழே இறக்கினாள். 16 அப்போது அப்பெண் அம்மனிதரை நோக்கி: “அரசனின் ஆட்கள் உங்களைக் காணாதபடிக்கு மேற்குத் திசையில் மலைகளின் உள்ளே சென்றுவிடுங்கள். அங்கு மூன்று நாட்கள் ஒளிந்திருங்கள். அரசனின் ஆட்கள் திரும்பி வந்தபின் நீங்கள் திரும்பிப் போகலாம்” என்றாள்.
17 அம்மனிதர்கள் அவளைப் பார்த்து, “நாங்கள் உனக்கு ஒரு வாக்குறுதி அளித்தோம். ஆனால் நீ ஒரு காரியம் செய்யவேண்டும். இல்லையென்றால் அந்த வாக்குறுதிக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம். 18 நாங்கள் தப்பிச்செல்ல உதவுவதற்கு நீ இந்தச் சிவப்புக் கயிற்றைப் பயன்படுத்துகிறாய். நாங்கள் இத்தேசத்திற்குத் திரும்பவும் வருவோம். அப்போது உன் வீட்டு ஜன்னலில் இந்தக் கயிற்றை நீ கட்ட வேண்டும். உன் தந்தை, தாய், குடும்பத்தினர் எல்லோரையும் உன்னோடு வீட்டிற்குள் அழைத்துக் கொள்ளவேண்டும். 19 இவ்வீட்டில் இருக்கிற எல்லோரையும் நாங்கள் காப்போம். உன் வீட்லுள்ள யாரேனும் காயமுற்றால், நாங்கள் அதற்குப் பொறுப்பாளிகளாவோம். ஆனால் உன் வீட்டிலிருந்து ஒருவன் வெளியே போனால் அவன் கொல்லப்படக்கூடும். அவனுக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம். அது அவனுடைய குற்றமாகும். 20 நாங்கள் இந்த ஒப்பந்தத்தை உன்னோடு செய்கிறோம். ஆனால் நாங்கள் செய்கிறதை நீ யாருக்காவது கூறினால், இந்த ஒப்பந்தத்திலிருந்து நாங்கள் நீங்கலாயிருப்போம்” என்றனர்.
21 அதற்கு அப்பெண், “நீங்கள் கூறியபடியே எல்லாவற்றையும் செய்வேன்” என்று கூறி அவர்களை வழியனுப்பினாள். அம்மனிதர்கள் அவள் வீட்டைவிட்டுச் சென்றனர். அப்பெண் ஜன்னலில் அச்சிவப்பு கயிற்றைக் கட்டினாள்.
22 அவ்விருவரும் அவள் வீட்டிலிருந்து மலைகளுக்குச் சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கினார்கள். அரசனின் ஆட்கள் பாதைகளில் எல்லாம் தேடினார்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர், அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் நகருக்குத் திரும்பினார்கள். 23 ஒற்றர்கள் இருவரும் மலைகளைவிட்டு நீங்கி, நதியைக் கடந்து நூனின் மகனாகிய யோசுவாவிடம் சென்றார்கள். தாங்கள் அறிந்து வந்த எல்லாவற்றையும் அவர்கள் யோசுவாவுக்குக் கூறினார்கள். 24 அவர்கள் யோசுவாவை நோக்கி, “கர்த்தர் நமக்கு உண்மையாகவே அத்தேசம் முழுவதையும் கொடுத்திருக்கிறார். அந்நாட்டின் ஜனங்கள் எல்லோரும் நமக்கு அஞ்சுகிறார்கள்” என்றார்கள்.
யோர்தான் நதியில் நடந்த அற்புதம்
3 மறுநாள் காலையில் யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்களும் எழுந்து, அகாசியாவை (சித்தீமை) விட்டு புறப்பட்டு யோர்தான் நதிக்கரைக்கு வந்தார்கள். அவர்கள் நதியைக் கடக்கும் முன்னர், அங்கே நதிக்கரையில் முகாமிட்டார்கள். 2 மூன்று நாட்களுக்குப் பிறகு, தலைவர்கள் முகாமிற்குள் சுற்றிப் பார்த்தார்கள். 3 அவர்கள் ஜனங்களிடம், “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆசாரியரும், லேவியரும் சுமந்து செல்வதைக் காண்பீர்கள். அப்போது, நீங்கள் அவர்களைப் பின்தொடர வேண்டும். 4 ஆனால் மிகவும் நெருங்கிச் செல்லாதீர்கள். 2,000 முழ தூரத்தில் அவர்களைப் பின்தொடர்ந்து செல்லுங்கள். நீங்கள் இதற்கு முன் ஒருபோதும் இவ்வழியாக வந்ததில்லை. ஆனால் அவர்களைப் பின்தொடர்ந்தால், எங்கு செல்வதென்பதை அறிவீர்கள்” என்று ஆணைகள் கொடுத்தார்கள்.
5 அப்போது யோசுவா ஜனங்களிடம், “நீங்கள் உங்களைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள். நாளை கர்த்தர் அதிசயமான காரியங்களைச் செய்வார்” என்றான்.
6 பின் யோசுவா ஆசாரியர்களை நோக்கி, “உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஜனங்களுக்கு முன்பாக நதியைக் கடந்து செல்லுங்கள்” என்றான். அவ்வாறே ஆசாரியர்களும் பெட்டியைச் சுமந்தவாறு ஜனங்களுக்கு முன்பாகச் சென்றார்கள்.
7 அப்போது கர்த்தர் யோசுவாவிடம், “இன்று இஸ்ரவேலின் எல்லா ஜனங்களும் பார்க்கும்படியாக உன்னை உயர்ந்த மனிதனாக்கினேன். அப்போது, நான் மோசேயோடு இருந்ததுபோலவே உன்னோடும் இருக்கிறேன் என்பதை ஜனங்கள் அறிவார்கள். 8 உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து செல்கிற ஆசாரியர்களிடம், ‘யோர்தான் நதியின் கரைவரைக்கும் நடந்து தண்ணீரினுள் இறங்கும் முன்பாக அங்கு சற்று நில்லுங்கள் என்று சொல்’” என்றார்.
9 அப்போது யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளை வந்து கேளுங்கள். 10 உயிருள்ள தேவன் உங்களோடிருக்கிறார் என்பதற்கும், அவர் பகைவரைத் தோற்கடிப்பார் என்பதற்கும் சான்றாக கானானியரையும், ஏத்தியரையும், ஏவியரையும், பெரிசியரையும், கிர்காசியரையும், எமோரியரையும், எபூசியரையும் அவர் தோற்கடித்து இத்தேசத்தை விட்டுப் போகுமாறு செய்வார். 11 இதுவே அதற்கு சான்று. முழு உலகத்துக்கும் ஆண்டவராயிருப்பவரின் உடன்படிக்கைப் பெட்டி, நீங்கள் யோர்தான் நதியைத் தாண்டும்போது, உங்களுக்கு முன்னே செல்லும். 12 இப்போது, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் இருந்தும், குழுவுக்கு ஒருவர் வீதம் பன்னிரண்டு மனிதரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். 13 கர்த்தருடைய பெட்டியை ஆசாரியர் சுமந்து செல்வார்கள். உலகத்தின் ஆண்டவர் கர்த்தரே. அவர்கள் அப்பெட்டியை உங்களுக்கு முன்பாக யோர்தான் நதியில் சுமந்து செல்வார்கள். அவர்கள் தண்ணீருக்குள் கால் வைத்ததும், யோர்தான் நதியில் தண்ணீர் ஓடாமல் நின்று, அணைபோல் தேங்கியிருக்கும்” என்றான்.
14 உடன்படிக்கைப் பெட்டியை ஆசாரியர் சுமந்து சென்றனர். முகாமிட்டிருந்த இடத்திலிருந்து ஜனங்கள் புறப்பட்டு, யோர்தான் நதியைக் கடக்க ஆரம்பித்தனர். 15 (அறுவடைக் காலத்தில் யோர்தான் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். எனவே நதியில் தண்ணீர் பெருகியிருந்தது.) பெட்டியைச் சுமந்து வந்த ஆசாரியர்கள் நதிக்கரையை அடைந்தனர். அவர்கள் கரையோரத்தில் தண்ணீரில் கால் வைத்தனர். 16 உடனே, தண்ணீர் ஓடாமல் நின்று ஒரு அணைப்போல் தேங்கிக்கொண்டது. (யோர்தான் அருகிலுள்ள ஊராகிய) ஆதாம் வரைக்கும் நதியின் தண்ணீர் குவிந்து நின்றது. எரிகோ அருகே ஜனங்கள் நதியைக் கடந்தனர். 17 அவ்விடத்தில் நிலம் வறண்டது, ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்தவாறே நதியின் நடுப்பகுதிவரைக்கும் சென்று அங்கே நின்றனர். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் யோர்தான் நதியை உலர்ந்த நிலத்தின் வழியாக கடக்கும் மட்டும் ஆசாரியர்கள் அங்கேயே நின்றனர்.
இயேசுவின் உயிர்த்தெழுதல்(A)
16 ஓய்வு நாள் முடிந்த பிறகு மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபின் தாயான மரியாள் ஆகியோர் சில வாசனைப் பொருள்களை வாங்கினர். அவற்றை இயேசுவின் சரீரத்தின் மீது பூச விரும்பினர். 2 வாரத்தின் முதல்நாளில் அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றனர். சூரியன் தோன்றிய காலை நேரம் அது. 3 அப்பெண்கள் ஒருவருக்கொருவர், “கல்லறையை மூடுவதற்கு பெரிய கல்லை வைத்திருந்தார்களே. நமக்காக அக்கல்லை யார் அகற்றுவார்?” என்று பேசிக்கொண்டனர்.
4 அவர்கள் கல்லறையின் அருகில் வந்தபோது வாசலில் வைத்திருந்த கல் விலக்கப்பட்டிருந்தது. அது மிகப் பெரிய கல். 5 அப்பெண்கள் கல்லறைக்குள் நுழைந்தனர். அங்கே வெள்ளை ஆடை அணிந்த ஒருவனைப் பார்த்தனர். அவன் கல்லறையின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருந்தான். அப்பெண்கள் அஞ்சினர்.
6 ஆனால் அந்த மனிதன், “அஞ்ச வேண்டாம். நீங்கள் நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார். சிலுவையில் அறையப்பட்ட அவர் இங்கில்லை. அதுதான் அவரைக் கிடத்திய இடம். 7 இப்போது சென்று அவரது சீஷர்களிடம் கூறுங்கள். பேதுருவிடம் கட்டாயம் கூறுங்கள். இயேசு கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன்னால் அவர் அங்கிருப்பார். உங்களுக்கு ஏற்கெனவே சொன்னபடி நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள்” என்றான்.
8 அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. [a]
சீஷர்கள் இயேசுவைப் பார்த்தல்(B)
9 இயேசு மரணத்தில் இருந்து வாரத்தின் முதல் நாளே உயிர்த்தெழுந்து விட்டார். முதன் முதலாக இயேசு மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார். ஒரு முறை, ஏழு பேய்களை மரியாளைவிட்டு இயேசு விரட்டினார். 10 இயேசுவைப் பார்த்தபின் மரியாள் சீஷர்களிடம் போய்ச் சொன்னாள். அச்சீஷர்கள் வெகு துக்கப்பட்டு அழுதுகொண்டிருந்தனர். 11 ஆனால் மரியாளோ, “இயேசு உயிரோடு இருக்கிறார். நான் அவரைப் பார்த்தேன்” என்றாள். அவர்களோ அவள் சொன்னதை நம்பவில்லை.
12 பின்னர் இயேசு, சீஷர்களில் இரண்டுபேர் நகரத்திற்கு நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது காட்சி தந்தார். இயேசு இறப்பதற்கு முன்னர் இருந்த விதமாக அவர் பார்ப்பதற்கு இல்லை. 13 அந்த இருவரும் போய் ஏனைய சீஷர்களிடம் கூறினர். எனினும் அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.
இயேசு சீஷர்களிடம் பேசுதல்(C)
14 பின்னர் இயேசு பதினொரு சீஷர்களுக்கும், அவர்கள் உணவு உண்ணும் தருணத்தில் காட்சியளித்தார். உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்களுடைய அவநம்பிக்கையைக் குறித்தும் இதயக் கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார்.
15 பின்பு அவர்களிடம், “உலகின் எல்லா பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லாரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள். 16 எவனொருவன் இதனை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான். எவனோருவன் விசுவாசிக்கவில்லையோ அவன் கண்டிக்கப்படுவான். 17 விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்ய முடியும். அவர்கள் என் பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர், 18 அவர்கள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் பாம்புகளைப் பிடிப்பர், சாவுக்குரிய நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்கு ஆபத்து இல்லை, அவர்கள் தொட்டால் நோயாளிகள் குணம் பெறுவர்” என்று தம்மைப் பின்பற்றினோருக்குக் கூறினார்.
இயேசு பரலோகத்திற்குத் திரும்புதல்(D)
19 சீஷர்களிடம் இவற்றைச் சொன்ன பிறகு, இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அங்கு அவர் தேவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்தார். 20 அவரது சீஷர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று நற்செய்தியைச் சொன்னார்கள். தேவன் அவர்களுக்கு உதவினார். அவர்கள் சொல்வது உண்மை என தேவன் நிரூபித்தார். சீஷர்களுக்கு அற்புதங்கள் செய்ய அதிகாரம் கொடுத்து இதை தேவன் நிரூபித்தார்.
2008 by World Bible Translation Center