Add parallel Print Page Options

11 ஆனால் மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள். அவ்வாறு அழும்போதே, அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தாள். 12 வெள்ளை உடைகள் அணிந்த இரு தேவ தூதர்களைப் பார்த்தாள். இயேசுவின் சரீரம் இருந்த இடத்தில் அவர்கள் இருந்தனர். இயேசுவின் தலை இருந்த இடத்தில் ஒரு தேவதூதனும் அவரது பாதங்கள் இருந்த இடத்தில் இன்னொரு தேவதூதனும் இருப்பதைக் கண்டாள்.

13 அந்த தேவதூதர்கள் மரியாளிடம், “பெண்ணே! ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டனர்.

“சிலர் என் ஆண்டவரின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்றாள் மரியாள். 14 அவள் இவ்வாறு சொல்லிவிட்டு திரும்பியபோது இயேசு நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். ஆனால் அவர்தான் இயேசு என்பதை அவள் அறிந்துகொள்ளவில்லை.

15 இயேசு அவளிடம், “பெண்ணே! ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார்.

மரியாள் அவரை, அந்தத் தோட்டத்தின் காவல்காரனாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். எனவே அவள் அவரிடம், “ஐயா, நீங்களா இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனீர்கள்? அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் போய் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றாள்.

16 இயேசு “மரியாளே” என்று அழைத்தார்.

மரியாள் திரும்பி இயேசுவைப் பார்த்து, “ரபூனீ” என்று யூத மொழியில் கூப்பிட்டாள். (இதற்கு போதகரே என்று பொருள்)

17 இயேசு அவளிடம், “என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவிடம் திரும்பிச் செல்லவில்லை. ஆனால் போய் என் சகோதரர்களிடம், ‘நான் என் பிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் செல்கிறேன். நான் என் தேவனிடமும் உங்களின் தேவனிடமும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார்.

18 மகதலேனா மரியாள் சீஷர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைப் பார்த்தேன்” என்று சொன்னாள். அதோடு அவர் சொன்னவற்றையும் சொன்னாள்.

Read full chapter