Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 16-18

பஸ்கா

16 “ஆபிப் மாதம் வருவதைக் கவனித்து, அந்த மாதத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பஸ்காவை நீங்கள் கொண்டாட வேண்டும். ஏனென்றால், ஆபிப் மாதத்திலேயே இரவு நேரத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார். நீங்கள் எல்லோரும் கர்த்தர் தமக்குச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்திற்கு, அந்தக் கொண்டாட்ட தினத்தில் செல்லவேண்டும். அங்கே, உங்கள் கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடு, மாடுகளைப் பலியிடுவாயாக. அந்த நாளில் புளிப்புள்ள அப்பத்தை நீங்கள் உண்ணக்கூடாது. புளிப்பில்லாத அப்பங்களையே ஏழு நாட்களுக்கு உண்ண வேண்டும், இந்த அப்பங்கள் ‘துன்பத்தின் அப்பங்கள்’ என்று அழைக்கப்படும்! இவை எகிப்தில் நீங்கள் அடைந்த துன்பங்களை நினைவூட்டுவதாக இருக்கும். எவ்வளவு விரைவாக நீங்கள் அந்த தேசத்திலிருந்து வெளியேறினீர்கள் என்பதை பஸ்காதோறும் நீங்கள் உயிரோடு இருக்கின்ற நாளெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஏழு நாட்களுக்கு உங்களுடைய தேசத்தில் யார் வீட்டிலும் பளிப்புள்ள அப்பங்கள் இருக்ககூடாது. நீங்கள் முதல்நாள் மாலையில் பலியிட்ட இறைச்சியில் எதையும் மறுநாள் காலைவரை மீதி வைக்காமல் உண்டுவிட வேண்டும்.

“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்கிய எந்த நகரத்திலும் நீங்கள் பஸ்காவைப் பலியிடக்கூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் தமக்கென்று சிறப்பாக தேர்ந்தெடுத்த இடத்திலேயே பஸ்காவைப் பலியிடவேண்டும். அங்கே நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சூரியன் மறையும் மாலைப் பொழுதில் பஸ்காவைப் பலியிடவேண்டும். அந்த நாள் உங்களுக்கு விடுமுறை நாள். உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்திலேயே பஸ்கா இறைச்சியை சமைத்து அன்று இரவே உண்ணவேண்டும். பின் மறுநாள் விடியற் காலையில் நீங்கள் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிடுங்கள். ஆறு நாட்கள் புளிப்பில்லாத அப்பத்தையே நீங்கள் உண்ண வேண்டும். ஏழாவது நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. அந்த நாளில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு நீங்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும்.

வாரங்களின் பண்டிகை (பெந்தெகோஸ்தே)

“உங்களது அறுவடைக்காலம் துவங்குவதிலிருந்து ஏழு வாரங்களை எண்ணிக்கொள்ளுங்கள். 10 பின் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கான வாரங்களின் பண்டிகையைக் கொண்டாடுங்கள். நீங்கள் தேவனுக்குக் கொடுக்க விரும்புகின்ற சிறப்பான அன்பளிப்பைக் கொண்டு வருவதின் மூலம் இதைச் செய்யுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை எந்த அளவிற்கு ஆசீர்வதித்தாரோ அதற்கேற்ப உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். 11 கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்துக்குச் செல்லுங்கள். நீஙகளும் உங்கள் பிள்ளைகளும் சேர்ந்து உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதானத்தில் மகிழ்ச்சியாய் இருங்கள். அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் மகன்கள், மகள்கள், உங்களது வேலையாட்கள், லேவியர்கள், உங்களிடத்தில் இருக்கின்ற அந்நியர்கள், அநாதைகள், உங்கள் நகரங்களில் வாழும் விதவைகள், ஆகிய எல்லோரையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். 12 எகிப்தில் நீங்கள் அடிமைகளாக இருந்ததை எண்ணிப் பாருங்கள். ஆகையால் இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்

அடைக்கலக் கூடாரப் பண்டிகை

13 “நீங்கள், உங்கள் தானியக் களத்தின் பலனையும், உங்கள் திராட்சைரச ஆலைகளின் பலனையும் சேர்த்தபின்பு, ஏழு நாட்கள் உங்கள் அடைக்கலக் கூடாரப் பண்டிகையைக் கொண்டாடவேண்டும். 14 இந்தப் பண்டிகையை உங்களுக்குள் மகிழ்வாகக் கொண்டாடுங்கள். நீங்கள், உங்கள் மகன்கள், உங்கள் மகள்கள், உங்கள் வேலையாட்கள், உங்களை சார்ந்த பகுதியில் வசிக்கும் லேவியர்கள், அந்நியர்கள், அநாதைகள், உங்கள் நகரங்களில் வாழும் விதவைகள், எல்லோருமாகச் சேர்ந்து கொண்டாடுங்கள், 15 இந்தப் பண்டிகையை உங்கள் கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் ஏழு நாட்கள் கொண்டாடி மகிழுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செலுத்தும்படி இதைச் செய்யுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களது விளைச்சல்களையும், நீங்கள் செய்யும் எல்லா வேலைகளையும் ஆசீர்வதித்துள்ளார். ஆகவே நீங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்களாக!

16 “வருடத்திற்கு மூன்றுமுறை உங்களது ஆண் ஜனங்கள் அனைவரும் தவறாது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் கூடவேண்டும். அவர்கள் அனைவரும், புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்கும், வாரங்களின் பண்டிகைக்கும், அடைக்கல கூடாரங்களின் பண்டிகைக்கும் கண்டிப்பாக வரவேண்டும். ஒவ்வொருவரும் வரும் பொழுது, கர்த்தருக்குரிய அன்பளிப்புகளை எடுத்துவர வேண்டும். 17 ஒவ்வொருவரும் தன் தகுதிக்கு ஏற்றவாறு காணிக்கையைச் செலுத்தவேண்டும். கர்த்தர் உங்களை எந்த அளவிற்கு ஆசீர்வதித்தாரோ அதற்கேற்றவாறு உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

ஜனங்களுக்கான நீதிபதிகளும், தலைவர்களும்

18 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் அனைத்துப் பட்டணங்களிலும் நீங்கள் நீதிபதிகளையும், தலைவர்களையும் தேர்ந்தெடுங்கள். ஒவ்வொரு கோத்திரமும் இவ்வாறு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயமான தீர்ப்புகளை வழங்க வேண்டும். 19 நீங்கள் அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும். நீங்கள் மற்ற ஜனங்களை மீறி சிலரை மாத்திரம் ஆதரித்துப் பேசாதீர்கள். நியாயத்தில் உங்கள் மனது புரளாதபடி நீங்கள் லஞ்சம் வாங்காமல் இருங்கள். பணமானது ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நல்லவன் சொல்லக் கூடிய சரியான தீர்ப்பை மாற்றிவிடும். 20 நல்லவற்றையும், நேர்மையானவற்றையுமே நீங்கள் செய்ய வேண்டும்! நீங்கள் எப்போதும் நல்லவராக, நேர்மையானவராக இருப்பதற்குப் பாடுபட வேண்டும்! பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தில் வாழ்வையும், சுதந்திரத்தையும் பெறுவீர்கள்.

தேவன் விக்கிரகங்களை வெறுக்கிறார்

21 “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தின் அருகில் அஷெரா தேவதைக்கென்று எந்த ஸ்தம்பத்தையும் வைக்கக் கூடாது. 22 அதுமட்டுமின்றி பொய்யான தெய்வங்களைத் தொழுதுகொள்வதற்கான சிற்ப கற்களையும் அங்கே வைக்ககூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் இவற்றையெல்லாம் வெறுக்கின்றார்.

குறையற்ற மிருகங்களையே பலிகொடுக்க பயன்படுத்துதல்

17 “குறையுள்ள அல்லது ஏதேனும் ஊனமுற்ற மாட்டையோ, ஆட்டையோ, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி கொடுக்கக் கூடாது. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் அவற்றை வெறுக்கிறார்!

விக்கிரகங்களை தொழுதுகொள்வதினால் அடையும் தண்டனைகள்

“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற நகரங்கள் ஏதேனும் ஒன்றில் அக்கிரமமான செயல் கர்த்தருக்கு எதிராக நடந்ததைக்குறித்து நீங்கள் கேள்விப்படலாம். கர்த்தருக்கு எதிராக அந்த அக்கிரமச் செயலை உங்களைச் சார்ந்த ஆணோ, அல்லது பெண்ணோ செய்திருக்கலாம். கர்த்தருடைய உடன்படிக்கையை மீறி அவர்கள் நடந்திருப்பார்கள். அதாவது, அவர்கள் அந்நிய தெய்வங்களையோ அல்லது சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்ற வான சேனைகளையோ தொழுதுகொள்வதை நீங்கள் கேள்விப்பட்டால், அவைகளெல்லாம் நான் உங்களுக்கு வழங்கிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான செயல்களாகும். இது போன்ற தீயசெய்திகளை நீங்கள் கேள்விப்பட்டால், நீங்கள் அதைக் குறித்து விசாரிக்க வேண்டும். நீங்கள் அதை நன்றாகத் தீர ஆராய்ந்து அது உண்மையென்று கண்டறிந்தால், இஸ்ரவேலில் இப்படிப்பட்ட ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி நடந்தது உண்மையாகும்போது, நீங்கள் அந்தத் தீயசெயலைச் செய்தவனைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் அத்தகைய தீயச் செயலைச் செய்த அந்த ஆணையோ, அல்லது பெண்ணையோ, வெளியே இழுத்துவந்து நகர எல்லையின் பொது இடத்தில் கற்களால் அடித்து அவர்களைக் கொன்றுவிடுங்கள். ஆனால் ஒரே ஒரு சாட்சியின் கூற்றைக் கேட்டு நீங்கள் அவனுக்குக் கொலைத் தண்டனையை கொடுத்து விடாதீர்கள். இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் அவன் இந்த தீயச் செயல்களை செய்தது உண்மைதான் என்று கூறினால், பின் நீங்கள் அந்தத் துரோகியை கொன்றுவிடலாம். தீமை செய்தவன் கொல்லப்படும்படி சாட்சிகளே முதலில் அவன்மீது கற்களை எறியவேண்டும். பின்னரே மற்ற ஜனங்கள் அனைவரும் அவன் மரிக்கும்வரை கற்களால் அடிக்க வேண்டும். இதன் மூலமே நீங்கள் உங்களிடமிருந்து அந்தத் தீமையை விலக்கிட முடியும்.

சிக்கலான நீதிமன்ற முடிவுகள்

“உங்கள் நீதிமன்றங்களால் தீர்ப்புக்கூற முடியாமல் போகும் அளவிற்கு சில பிரச்சினைகள் உங்களிடம் இருக்கலாம், அவை கொலைக் குற்றமாகவோ, அல்லது இரண்டு நபர்களின் வாக்கு வாதங்களோ, அல்லது சண்டையில் ஒருவருக்கு ஏற்பட்ட காயம் குறித்த சேதங்களையோ குறித்த வழக்குகளாக இருக்கலாம். உங்கள் ஊர்களிலுள்ள உங்களது நீதிபதிகளால் இத்தகைய வழக்குகளுக்குச் சரியான தீர்ப்பைக் கூற இயலாமல் இருந்தால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் சிறப்பாக தேர்ந்தெடுத்த இடத்திற்குச் செல்ல வேண்டும். லேவிக் கோத்திரத்திலிருந்து வந்த ஆசாரியர்கள் அங்கே இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் சென்று அன்றைய பொறுப்பில் இருக்கின்ற நியாயாதிபதியினிடத்தில் அந்தப் பிரச்சினைக்கான முடிவுகளைப் பெறலாம். 10 கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்தில் இருக்கின்ற அவர்கள், உங்களுக்கு அளிக்கின்ற தீப்புகளுக்கு இணங்கி, அவர்கள் உங்களுக்கு விதிக்கின்றபடி செய்யக் கவனமாய் இருப்பீர்களாக. 11 நீங்கள் அவர்கள் கூறும் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, அவர்கள் விதிக்கின்றபடியே அவர்களது நியாயத்தீர்ப்புகளைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் சொன்ன எதையும் மாற்றாமல் அப்படியே செய்யவேண்டும்!

12 “அச்சமயத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்யும் ஆசாரியனின் வார்த்தைகளையோ, அல்லது நீதிபதியின் தீர்ப்பையோ ஏற்காமலும், கீழ்ப்படியாமலும் இருக்கிறவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டும். அவன் கண்டிப்பாக மரிக்க வேண்டும். இஸ்ரவேலில் இருந்து அந்தத் தீயவனை நீங்கள் அகற்றிவிடவேண்டும். 13 இந்தத் தண்டனையைக் கேட்கும் அனைத்து ஜனங்களும் அதைத் கண்டு பயந்து இதுபோன்ற தவறினைச் செய்யாதிருப்பார்கள்.

இராஜாவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது

14 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதைச் சுதந்திரமாக்கிக் கொண்டு அதில் குடியேறியபின், ‘எங்களைச் சுற்றிலும் இருக்கின்ற மற்ற இனத்தவர்களைப்போல நாங்களும் எங்களுக்கு ஒரு இராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ என்று கூறுவீர்கள் என்றால், 15 அவ்வாறு நடக்க வேண்டுமென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுக்கும் அரசனையே நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுள் ஒருவரான உங்கள் சகோதரனையே உங்களை ஆளும் அரசனாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஜனங்கள் அல்லாத அந்நியனை நீங்கள் அரசனாக்கக் கூடாது. 16 அந்த அரசன் தனக்காக அதிகமான குதிரைகளை வைத்துக்கொள்ளக் கூடாது. அதுமட்டுமின்றி அதிகமான குதிரைகளுக்காக ஜனங்களை எகிப்திற்கு அனுப்பக் கூடாது. ஏனென்றால், ‘நீங்கள் திரும்பவும் அந்த வழியாக போகவே வேண்டாம்’ என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லி உள்ளார். 17 மேலும், அரசன் அதிகமான மனைவிகளை வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், அது அவனை கர்த்தரிடமிருந்து வேறு திசைக்கு அழைத்துச் சென்றுவிடும். மேலும். அந்த அரசன் அவனுக்காகப் பொன்னையும், வெள்ளியையும், மிகுதியாக சேர்த்துக்கொள்ளக் கூடாது.

18 “அரசன் தன் அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும்முன் தனக்கான சட்டங்களைப் புத்தகமாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். அவன் அந்த நீதி புத்தகத்தை, லேவியரும் ஆசாரியர்களும் வைத்துள்ள புத்தகத்திலிருந்து உருவாக்கி தன்னிடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 19 அரசன் அந்த புத்தகத்தை தன்னிடம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அந்தப் புத்தகத்தைப் படித்தறிய வேண்டும். ஏனென்றால், அவனது தேவனாகிய கர்த்தருக்கு மதிப்பளிக்க வேண்டும். அதிலுள்ள எல்லா சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் அரசன் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். 20 அரசன் தன் சகோதரர்களாகிய ஜனங்களைவிட தான் மேன்மையானவன் என்று எண்ணிவிடக் கூடாது. மேலும் அவன் ஒரு போதும் இந்த சட்டங்களிலிருந்து விலகிவிடக்கூடாது. ஆனால் அவன் இவற்றைச் சரியானபடி முழுமையாகப் பின்பற்றினால், பின் அந்த அரசனும் அவன் சந்ததியினரும் நீண்ட காலம் இஸ்ரவேல் நாட்டை ஆளலாம்.

ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் ஆதரவு அளித்தல்

18 “லேவியின் கோத்திரம் இஸ்ரவேலில் எவ்வித சொத்தும், நிலமும் பெறுவதில்லை. அவர்கள் ஆசாரியர்களாக சேவை செய்வார்கள். தகன பலியாக கர்த்தருக்குச் செலுத்தும் உணவுப் பொருட்களே இவர்களுக்கு பிழைப்பூட்டும் சுதந்திர வீதமாக இருக்கிறது. அதுவே லேவியர்களின் பங்கு ஆகும். இந்த லேவியர்கள், மற்ற கோத்திரங்கள் வைத்திருப்பதைப்போன்று எவ்வித பங்கும், சுதந்திரமும் பெற்றிருப்பவர்கள் அல்ல. கர்த்தர் அவர்களுக்குக் கூறியதுபோல் கர்த்தரே அவர்களது சொத்து.

“நீங்கள் மாட்டையோ, ஆட்டையோ, பலியிட்டால் அவற்றின் சில பகுதியினை ஆசாரியர்களுக்குக் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுக்கும் பகுதிகள் எதுவென்றால் அந்த ஆடு மாடுகளின் முன் தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியர்களுக்குக் கொடுக்க வேண்டும். நீங்கள் அறுவடை செய்த முதல் பலன்களின் ஒரு பகுதியையும் ஆசாரியர்களுக்குக் கொடுக்க வேண்டும். உங்கள் தானியங்கள், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதல் பலன்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். உங்கள் ஆடுகளில் கத்தரிக்கும் முதல் பங்கான ஆட்டு ரோமங்களை லேவியருக்குக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் எல்லாக் கோத்திரங்களையும் பார்த்து அவர்களிலிருந்து, லேவியரையும் அவர்களது சந்ததியினரையும் என்றென்றும் ஆசாரிய சேவை செய்ய தேர்ந்தெடுத்துள்ளார்.

“உங்களில் வசிக்கின்ற ஒவ்வாரு லேவியனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் பணி செய்வான். ஆனால், அவன் மேலும் அதிக நேரம் அங்குப் பணியாற்ற விரும்பினால் அவன் எப்பொழுது வேண்டுமானாலும் பணி செய்யலாம். இஸ்ரவேலில் எந்த ஊர்களிலும், எந்தப் பகுதிகளிலும் வசித்து வருகின்ற யாதொரு லேவியனும் அவன் வசிக்கிக்கின்ற வீட்டிலிருந்து தேவாலயத்திற்கு வரலாம். எந்த நேரத்திலும் அங்கு வந்து சேவை செய்யலாம். அங்கே தேவாலயத்தில் பணியாற்றுகின்ற மற்ற லேவியரான சகோதரனைப்போல் இந்த லேவியனும், அவனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் அங்கே சேவை செய்யலாம். இந்த லேவியன் தனது குடும்பம் வழக்கமாகப் பெறுகின்ற பங்குடன் மற்ற லேவியரின் சமபங்கையும் பெற்றுக்கொள்வான்.

இஸ்ரவேல் ஜனங்கள் மற்ற இனத்தவர்கள் போன்று வாழக்கூடாது

“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்திற்குள் நீங்கள் போய்ச் சேரும்போது, மற்ற இனத்தவர்கள் செய்கின்ற அருவருக்கத்தக்கச் செயல்களை நீங்களும் செய்யக் கற்றுக்கொள்ளாதீர்கள். 10 உங்கள் மகன்களையோ, மகள்களையோ பலிபீடங்களின் தீயிலிட்டு பலியிடக்கூடாது. குறி சொல்கிறவன், நாள் பார்ப்பவன், மை போட்டு பார்ப்பவன், மந்திரவாதி, அல்லது சூன்யக்காரன் ஆகியவர்களுடன் சென்று அவர்களது வித்தைகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்காதீர்கள். 11 மற்றவர்கள் மீது மாயவித்தை வித்தைகளைச் செய்ய யாரையும் அனுமதிக்காதீர்கள். உங்களில் யாரையும் மரித்தவர்களுடன் அல்லது தீய ஆவிகளுடன் குறி கேட்க அனுமதிக்காதீர்கள். அதுமட்டுமின்றி உங்களில் யாரும் மரித்த எவரிடமும் பேச முயற்சிக்கக் கூடாது. 12 உங்கள் தேவனாகிய கர்த்தர் இப்படிப்பட்ட செயல்களைச் செய்கின்ற ஜனங்களை வெறுக்கின்றார். அதனால்தான் உங்களுக்காக அந்த இன ஜனங்களை இந்த தேசத்தை விட்டே துரத்துகின்றார். 13 நீங்கள் அனைவரும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.

கர்த்தருடைய விசேஷ தீர்க்கதரிசி

14 “நீங்கள் அந்த மற்ற இன ஜனங்களை உங்கள் தேசத்தை விட்டுத் துரத்திவிட வேண்டும். அந்த இன ஜனங்கள் மாயவித்தை செய்கிறவர்களையும் குறி சொல்லுபவர்களையும் நம்புகிறார்கள். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் அவற்றைச் செய்வதை அனுமதிக்கமாட்டார். 15 உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவார். அந்தத் தீர்க்கதரிசியை உங்கள் சொந்த ஜனங்களிடமிருந்தே வரச் செய்வார். அவர் என்னைப்போன்ற ஒருவராய் இருப்பார். நீங்கள் அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். 16 தேவன் இந்தத் தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவது எதற்கென்றால், நீங்கள் இதைத்தான் தேவனிடம் கேட்டுக்கொண்டீர்கள். ஒரேப் மலையிலே நீங்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிய நாளில் நீங்கள் தேவனுடைய சத்தத்தைக்கேட்டும், மலையின்மீது நீங்கள் பார்த்த நெருப்பினைக் கண்டும், பயந்தீர்கள். ஆதலால் நீங்கள்: ‘நமது தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை நாங்கள் கேட்க அனுமதிக்க வேண்டாம்! நாங்கள் மரிக்கின்ற அளவிற்கு ஏற்படக் கூடிய மிகப்பெரிய அந்த அக்கினியை நாங்கள் பார்த்திட அனுமதிக்க வேண்டாம்!’ என்றீர்கள். அதற்காகவே, இந்தத் தீர்க்கதரிசியை அனுப்புகிறார்.

17 “கர்த்தர் என்னிடம், ‘அவர்கள் கேட்டுக்கொண்டது சரியே. 18 நான் உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்புவேன். அந்தத் தீர்க்கதரிசி அவர்களின் சொந்த ஜனங்களில் ஒருவனாக இருப்பான். நான் அவன் பேசவேண்டியதை எல்லாம் அவனுக்குச் சொல்லுவேன். அதை அவன் அந்த ஜனங்களிடம் சொல்லுவான். நான் அவனுக்கு கட்டளையிட்டதையெல்லாம் அவன் அந்த ஜனங்களுக்குக் கூறுவான். 19 அந்தத் தீர்க்கதரிசி எனக்காகப் பேசுவான். அவன் அப்படி எனக்காகப் பேசும்போதும், என்னுடையக் கட்டளைகளைக் கூறும்போதும், யாராவது அதைக் கேட்க மறுத்தால், நான் அந்த நபரைத் தண்டிப்பேன்’ என்று கூறினார்.

பொய்த் தீர்க்கதரிசிகளை அறிவது எப்படி

20 “ஆனால் நான் உங்களிடம் சொல்லும்படி சொல்லாத சிலவற்றை ஒரு தீர்க்கதரிசி கூறலாம். அதுமட்டுமின்றி, அந்தத் தீர்க்கதரிசி நான் தேவனுக்காகப் பேசுகிறேன் என்று சொல்லலாம். அப்படி ஏதும் நடந்தால் பின் அந்தத் தீர்க்கதரிசி கொல்லப்பட வேண்டும். ஒரு தீர்க்கதரிசி பொய்த் தெய்வங்களுக்காகப் பேச வந்திருக்கலாம். அப்படிப்பட்ட தீர்க்கதரிசி கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். 21 ‘கர்த்தர் சொல்லாத சிலவற்றை இந்தத் தீர்க்கதரிசிக் கூறுகிறான் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது?’ என்று நீங்கள் சிந்திப்பீர்களானால், 22 கர்த்தருக்காக நான் பேசுகிறேன், என்று கூறும் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நடக்காமல் போனால், பின் நீங்கள் கர்த்தர் இவற்றை கூறவில்லையென்று அறிந்துகொள்ளலாம். அந்தத் தீர்க்கதரிசி பேசியது, அவனது சொந்தக் கருத்துக்களே என்று நீங்கள் அறிந்து கொண்டால், நீங்கள் அவனைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை.

மாற்கு 13:1-20

ஆலயத்தின் எதிர்கால அழிவு(A)

13 இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படும்போது அவரது சீஷர்களில் ஒருவன். “பாருங்கள் போதகரே! பெரிய பெரிய கற்களோடு இந்த ஆலயம் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று சொன்னான்.

இயேசுவோ, “நீ இந்தப் பெரிய கட்டிடத்தைப் பார்க்கிறாய். இவையெல்லாம் ஒரு காலத்தில் அழிந்துபோகும். ஒவ்வொரு கல்லும் தரையில் சிதறிப்போகும். ஒரு கல்லோடு இன்னொன்று சேராது போகும்,” என்றார்.

பிறகு ஒலிவ மலையின் மேலே ஓரிடத்தில் உட்கார்ந்தார். அவரோடு பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் இருந்தனர். அனைவரும் ஆலயத்தைப் பார்த்தனர். சீஷர்கள் இயேசுவிடம், “இவை எப்போது நடைபெறும் என்று எங்களுக்குச் சொல்லுங்கள். இவை நிகழும் காலத்தை நாம் எந்த அடையாளங்களால் அறிந்து கொள்ளமுடியும்?” என்று கேட்டனர்.

இயேசு சீஷர்களிடம், “எச்சரிக்கையாய் இருங்கள். யாரும் உங்களை ஏமாற்றாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். பலர் வந்து என் பெயரைப் பயன்படுத்துவார்கள். அவர்கள், ‘நானே அவர்’ என்பார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுவார்கள். போரைப் பற்றியும், போர்களைப் பற்றிய செய்திகளையும் நீங்கள் கேள்விப்படுவீர்கள். பயப்படாதீர்கள். உலக முடிவு ஏற்படும்முன் இவை நிகழ வேண்டும். நாடுகள் ஒன்றோடு ஒன்று போரிட்டுக்கொள்ளும். இராஜ்யங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும். மக்களுக்கு உண்ண உணவில்லை என்று சொல்லும் காலம் வரும். பல்வேறு இடங்களில் பூமி அதிர்ச்சிகள் ஏற்படும். இவை ஒரு குழந்தை பிறப்பதற்கு முன் ஏற்படும் வேதனைபோல உருவாகும்.

“நீங்கள் கவனமாயிருங்கள். மக்கள் உங்களைக் கைது செய்து நியாயம் வழங்குவார்கள். தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை அடிப்பார்கள். நீங்கள் ஆளுநர்கள் முன்பும், மன்னர்களின் முன்பும், கட்டாயமாக நிறுத்தப்படுவீர்கள். என்னைப் பற்றி அவர்களிடம் நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் இவை உங்களுக்கு ஏற்படும். 10 இவை நடைபெறுவதற்கு முன்னால் நற்செய்தியானது எல்லா மக்களுக்கும் பரப்பப்படும். 11 நீங்கள் சொல்லப்போவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்த நேரத்தில் தேவன் பேசக் கொடுத்தவற்றை நீங்கள் பேசுங்கள். உண்மையில் அவற்றை நீங்கள் பேசுவதில்லை. உங்கள் மூலம் பரிசுத்த ஆவியானவரே பேசுவார்.

12 “சகோதரர்கள் ஒருவருக்கொருவர் எதிராகிச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு எதிராகி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். பிள்ளைகள் தம் பெற்றோருக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களைக் கொலை செய்ய வழி தேடுவார்கள். 13 நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் மக்கள் அனைவரும் உங்களை வெறுப்பார்கள். இறுதிவரை உறுதியாக யார் இருக்கிறார்களோ அவர்களே இரட்சிக்கப்படுவார்கள்.

14 “பேரழிவிற்கு காரணமான மோசமான காரியத்தை நிற்கத்தகாத இடத்தில் நிற்க நீங்கள் காண்பீர்கள். [a] (இதை வாசிக்கிறவன் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.) அப்போது யூதேயாவில் உள்ள மக்கள் அதை விட்டு மலைகளுக்கு ஓடிப் போவார்கள். 15 மக்கள் தம் நேரத்தை வீணாக்காமல் எதற்காகவும் நிற்காமல் ஓடிப்போக வேண்டும். எவனாவது வீட்டின் கூரைமேல் இருந்தால் அவன் பொருள்களை எடுக்கக் கீழே இறங்காமலும் வீட்டிற்குள் நுழையாமலும் இருப்பானாக. 16 எவனாவது வயலில் இருந்தால் அவன் தன் மேல் சட்டையை எடுக்கத் திரும்பிப் போகாமல் இருப்பானாக.

17 “அந்தக் காலம் கருவுற்ற பெண்களுக்கும், கைக் குழந்தையுள்ள பெண்களுக்கும் மிகக் கொடுமையானதாக இருக்கும். 18 மழைக் காலத்தில் இவை நிகழாதிருக்கும்படி பிரார்த்தனை செய்யுங்கள். 19 ஏன்?அந்த நாட்களில் அதிக அளவு வேதனை இருக்கும். தொடக்கக் காலம் முதல் இன்று வரை இது போன்ற வேதனைகள் ஏற்பட்டிருக்காது. இது போன்ற கேடுகள் இனிமேல் நடக்காது. 20 அக்கேடு காலம் குறுகியதாக இருக்கட்டும் என்று தேவன் தீர்மானித்திருக்கிறார். அக்கேடு காலம் குறுகியதாக இல்லாமல் இருந்தால் பின்னர் உலகில் ஒருவரும் உயிரோடு இருக்க முடியாது. அவர் தேர்ந்தெடுத்த சிறப்புக்குரிய மக்களுக்கு உதவும்பொருட்டு தேவன் அக்கேடு காலத்தினைக் குறுகியதாக ஆக்குவார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center