Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
லேவியராகமம் 26-27

தேவனுக்குக் கீழ்ப்படிபவர்களுக்குரிய பலன்கள்

26 “உங்களுக்காக விக்கிரகங்களை ஏற்படுத்தாதீர்கள். உங்கள் நாடுகளில் சிலைகளையோ நினைவுச் சின்னங்களையோ வணங்குவதற்காக ஏற்படுத்தாதீர்கள். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!

“எனது சிறப்பான ஓய்வு நாட்களை நினைவில் கொள்ளுங்கள். எனது பரிசுத்தமான இடங்களைப் பெருமைப்படுத்துங்கள். நானே கர்த்தர்!

“எனது சட்டங்களையும் கட்டளைகளையும் நினைவில் கொண்டு அவற்றுக்குக் கீழ்ப்படியுங்கள்! நீங்கள் இவற்றைச் செய்தால் நான் உரிய பருவத்தில் மழையைத் தருவேன். நிலம் நன்றாக விளையும். மரங்கள் நல்ல பழங்களைத் தரும். திராட்சைப் பழம் பறிக்கும் காலம்வரை உங்கள் போரடிப்புக் காலம் இருக்கும். விதைப்புக் காலம்வரை திராட்சைப்பழம் பறிக்கும் காலம் இருக்கும். நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு உங்கள் நாட்டில் சுகமாய் குடியிருப்பீர்கள். உங்கள் நாட்டில் சமாதானத்தை உருவாக்குவேன். நீங்கள் பாதுகாப்புடன் இருப்பீர்கள். எவரும் வந்து உங்களை நெருங்கி அச்சுறுத்த முடியாது. தீமை செய்யும் மிருகங்களை நாட்டுக்கு வெளியே வைத்திருப்பேன். வேறு படைகளும் உங்கள் நாட்டின் வழியாகக் கடந்து செல்லாது.

“நீங்கள் உங்களது பகைவர்களைத் துரத்தி சென்று தோற்கடிப்பீர்கள். உங்கள் வாளால் அவர்களைக் கொல்வீர்கள். ஐந்து பேரான நீங்கள் நூறு பேரை விரட்டிச் செல்வீர்கள், நூறு பேராக இருந்தாலும் நீங்கள் பத்தாயிரம் பேரை விரட்டிச்சென்று அவர்களை வாளால் வெட்டிக் கொல்லுவீர்கள்.

“நான் உங்கள்மேல் கவனமாயிருந்து நிறைய குழந்தைகளை நீங்கள் பெறும்படி செய்வேன். நான் எனது உடன்படிக்கையை பாதுகாப்பேன். 10 நீங்கள் ஒரு ஆண்டு விளைச்சலைப் போதுமான அளவிற்கு மேல் பெற்றிருப்பீர்கள். புதிய விளைச்சலும் பெறுவீர்கள். புதியதை வைக்க இடமில்லாமல் பழையதை எறிவீர்கள். 11 உங்கள் நடுவே எனது ஆராதனைக் கூடாரத்தை அமைப்பேன். நான் உங்களிடமிருந்து விலகிச் செல்லமாட்டேன். 12 நான் உங்களோடு நடந்து உங்கள் தேவனாக இருப்பேன். நீங்களே எனது ஜனங்கள். 13 நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். நான் உங்களை அங்கிருந்து மீட்டு வந்தேன். அடிமைகளாக நீங்கள் சுமந்த பாரத்தால் முதுகு வளைந்துபோனீர்கள். நான் உங்கள் நுகத்தடிகளை உடைத்து உங்களை நிமிர்ந்து நடக்கச் செய்தேன்!

தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களுக்குரிய தண்டனை

14 “நீங்கள் எனக்கு கீழ்ப்படியாவிட்டாலோ அல்லது என் கட்டளையை பின்பற்றாவிட்டாலோ கீழ்க்கண்ட தீமைகள் உங்களுக்கு ஏற்படும். 15 நீங்கள் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய மறுத்தால் எனது உடன்படிக்கையை மீறினவர்களாக மாறுகிறீர்கள். 16 நீங்கள் அவ்வாறு செய்தால் நான் உங்களுக்கு மோசமான தீமைகளை உருவாக்குவேன். நோய்களையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரச் செய்வேன். அவை உங்கள் கண்களையும் ஜீவனையும் கெடுக்கும். நீங்கள் செய்யும் பயிர் விளைச்சலில் நீங்கள் வெற்றி பெற முடியாது. உங்கள் பகைவர்கள் உங்களது விளைச்சலை உண்பார்கள். 17 நான் உங்களுக்கு எதிராக இருப்பேன். எனவே உங்களை உங்கள் எதிரிகள் வெல்வார்கள். அவர்கள் உங்களை வெறுத்து ஆட்சி செலுத்துவார்கள். உங்களை எவரும் துரத்தாவிட்டாலும் நீங்கள் பயந்து ஓடுவீர்கள்.

18 “இவற்றுக்குப் பிறகும் நீங்கள் கீழ்ப்படியாவிட்டால் உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு தண்டிப்பேன். 19 உங்கள் பெருமைக்குரிய பெரிய நகரங்களையெல்லாம் அழிப்பேன். வானம் உங்களுக்கு மழையைத் தராது. நிலம் விளைச்சலைத் தராது. 20 நீங்கள் கடினப்பட்டு உழைப்பீர்கள், ஆனால் விளைச்சல் கிடைக்காது. உங்கள் மரங்களும் பழங்களைத் தராது.

21 “அல்லது இத்தனைக்குப் பிறகும் எனக்கு எதிராகவே நீங்கள் மாறி கீழ்ப்படிய மறுத்தால் உங்களை ஏழு மடங்கு கடுமையாக தண்டிப்பேன். உங்களது பாவங்கள் அதிகரிக்கும்போது தண்டனைகளும் அதிகமாகும். 22 நான் உங்களுக்கு எதிராகக் காட்டு மிருகங்களை அனுப்புவேன். உங்கள் பிள்ளைகளை உங்களிடமிருந்து அவை பிரித்துக் கொண்டு போகும். அவை உங்கள் மிருகங்களைக் கொல்லும். அவை உங்கள் ஜனங்களை அழிக்கும். ஜனங்கள் பயணம் செய்ய அஞ்சுவார்கள். சாலைகள் வெறுமையாகும்!

23 “இவை அனைத்தும் நடந்த பிறகும் நீங்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலோ மேலும் எனக்கு எதிராக இருந்தாலோ, 24 நானும் உங்களுக்கு எதிராக மாறுவேன். ஆம் கர்த்தராகிய நானே உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு தண்டிப்பேன். 25 நீங்கள் எனது உடன்படிக்கையை மீறியிருப்பதினால் நான் உங்களைத் தண்டிப்பேன். உங்களுக்கெதிராக நான் படைகளைக் கொண்டு வருவேன். நீங்கள் பாதுகாப்புக்காக உங்கள் நகரங்களுக்கு ஓடுவீர்கள். ஆனால், உங்களுக்கிடையில் நோய்களைப் பரவச் செய்வேன். மேலும் உங்கள் எதிரிகள் உங்களைத் தோற்கடிப்பார்கள். 26 அந்த நகரத்தில் உண்பதற்குக் குறைவான அளவிலேயே தானியங்கள் இருக்கும். ஒரே அடுப்பில் பத்துப் பெண்கள் அவர்களது எல்லா உணவையும் சமைக்க முடியும். நீங்கள் அதை உண்ட பிறகும் பசியோடிருப்பீர்கள்!

27 “நீங்கள் அதற்கு மேலும் என்னைக் கவனிக்காவிட்டாலோ, எனக்கு எதிராகத் திரும்பினாலோ, 28 நான் உண்மையாகவே எனது கோபத்தைக் காட்டுவேன். ஆம், கர்த்தராகிய நான் உங்கள் பாவங்களுக்காக உங்களை ஏழு மடங்கு தண்டிப்பேன். 29 நீங்கள் மிகவும் பசியாவதினால் உங்கள் மகன்களையும். மகள்களையும் தின்பீர்கள். 30 நான் உங்களது உயர்ந்த மேடைகளை அழிப்பேன். உங்களது நறுமணப்புகைப் [a] பலிபீடங்களை உடைப்பேன். உங்களது பிணங்களை உங்களது உயிரற்ற விக்கிரகங்களின்மேல் போடுவேன். நீங்கள் எனது வெறுப்புக்கு ஆளாவீர்கள். 31 நான் உங்கள் நகரங்களை அழிப்பேன். உங்கள் பரிசுத்தமான இடங்களை வெறுமையாக்குவேன். உங்கள் பலிகளின் மணத்தை நுகரமாட்டேன். 32 உங்கள் நிலங்களை வெறுமையாக்குவேன். அதிலே குடியிருக்கும் உங்கள் பகைவர்கள் அதிர்ச்சியடைவார்கள். 33 தேசங்களெங்கும் உங்களைச் சிதறடிப்பேன். நான் எனது வாளை உருவி உங்களை அழிப்பேன். உங்கள் வயல்கள் பாழாகும், உங்கள் நகரங்கள் அழிந்துபோகும்.

34 “நீங்கள் உங்களது பகைவரின் நாட்டிற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். உங்கள் நாடு வெறுமையடையும். இறுதியில் உங்கள் வயல்கள் ஓய்வுபெறும். அவை ஓய்வு காலத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்கும். 35 வயல்கள் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறவேண்டும் என்று சட்டம் கூறுகின்றன. நீங்கள் அங்கு குடியிருந்தபோது ஓய்வுபெறாத அந்த நிலங்கள் பாழாய்க் கிடந்து ஓய்வுபெறும். 36 உங்களில் உயிரோடு இருப்பவர்களைப் பகைவரின் நாடுகளில் தைரியம் இழந்து தவிக்கச் செய்வேன். அசைகிற இலைகளின் சத்தமும் அவர்களை அச்சுறுத்தி விரட்டும். அவர்கள் எதற்கெடுத்தாலும் அஞ்சுவார்கள். யாரும் துரத்தாவிட்டாலும் யாரோ அவர்களை வாளெடுத்துக் கொண்டு துரத்துவது போன்று ஓடிக்கொண்டிருப்பார்கள். 37 யாரும் துரத்தாவிட்டாலும் கூட அவர்கள் ஓடி ஒருவர் மேல் ஒருவர் விழுவார்கள்.

“எதிரிகளை எதிர்த்து நிற்கிற பலம் உங்களிடம் இல்லாமல் போகும். 38 வேறு நாடுகளில் நீங்கள் காணாமல் போவீர்கள். உங்கள் பகைவரின் நாடுகளில் மறைந்து போவீர்கள். 39 உங்களில் உயிரோடு இருப்பவர்கள் தங்கள் பாவங்களால் பகைவர்கள் நாட்டில் அழிவார்கள். அவர்கள் தம் முற்பிதாக்கள் செய்ததுபோலவே தங்கள் பாவங்களால் அழிவார்கள்.

எப்பொழுதும் நம்பிக்கை இருக்கிறது

40 “ஜனங்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு, அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் பாவங்களையும் அறிக்கையிட்டு, அவர்கள் எனக்கு எதிராக நடந்துக்கொண்டு, பாவம் செய்தார்கள் என்பதை ஒப்புக்கொள்ளலாம். 41 அவர்கள் எனக்கு எதிராக நடந்துகொண்டதால் நானும் அவர்களுக்கு எதிராக நடந்துகொண்டேன். அவர்களைப் பகைவரின் நாடுகளுக்கு அனுப்பி வைத்தேன். இதனையும் அவர்கள் அறிக்கையிடலாம். அவர்கள் எனக்கு அந்நியர்களாவார்கள். அவர்கள் அடக்கமாக தங்கள் பாவங்களுக்கான தண்டனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். 42 இவ்வாறு செய்தால் நான் யாக்கோபோடு செய்த உடன்படிக்கையையும், நான் ஈசாக்கோடு செய்த உடன்படிக்கையையும் நான் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையையும் நினைவுப்படுத்திக்கொள்வேன். நான் அந்த தேசத்தை நினைவுகூருவேன்.

43 “நிலம் வெறுமையாக இருக்கும். அது தனது ஓய்வு காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும். பின் உயிரோடு இருக்கிறவர்கள் தங்கள் பாவங்களுக்கான தண்டனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் எனது சட்டங்களையும், விதிகளையும் வெறுத்து கீழ்ப்படிய மறுத்ததால் இந்தத் தண்டனை பெற்றதாக உணர்ந்துகொள்வார்கள். 44 அவர்கள் உண்மையில் பாவம் செய்தவர்கள். ஆனால் அவர்கள் என்னிடம் உதவிக்கு வந்தால் நான் அவர்களை விட்டு விலகிப் போகமாட்டேன். நான் அவர்கள் சொல்வதைக் கேட்பேன். அவர்கள் தங்கள் பகைவரின் நாட்டிலே இருந்தாலும் முழுவதுமாக அழித்துவிடமாட்டேன். நான் அவர்களோடு செய்த உடன்படிக்கையை உடைக்கமாட்டேன். ஏனென்றால் நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர். 45 அவர்களுக்காக, நான் அவர்களின் முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுபடுத்திக்கொள்வேன். நான் அவர்களின் முற்பிதாக்களை எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்து, அவர்களின் தேவன் ஆனேன். மற்ற நாடுகளும் இதனைக் கவனித்தன. நான் கர்த்தர்!” என்று கூறினார்.

46 இவையே இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் கொடுத்த சட்டங்களும், விதிகளும், போதனைகளுமாகும். கர்த்தருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின் சட்டங்களும் இவை தான். இச்சட்டங்களை கர்த்தர் சீனாய் மலையில் மோசேயிடம் கொடுத்தார். மோசே இவற்றை ஜனங்களிடம் கொடுத்தான்.

வாக்குத்தத்தங்கள் முக்கியமானவை

27 கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கர்த்தரிடம் ஒருவன் சிறப்பான பொருத்தனை ஒன்றைச் செய்திருக்கலாம். அவன் கர்த்தருக்கு ஒரு நபரைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கலாம். அந்த நபர் கர்த்தருக்குச் சிறப்பான ஊழியம் செய்வான். ஆசாரியன் அவனுக்கென்று ஒரு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த நபரைத் திரும்பப் பெற வேண்டுமானால் அவனுக்குரிய மீட்பின் தொகையைக் கொடுக்க வேண்டும். இருபது வயது முதல் அறுபது வயது வரையுள்ள ஒரு ஆணின் விலை ஐம்பது வெள்ளிச் சேக்கலாகும். (நீங்கள் இதற்கு அதிகாரப்பூர்வமான பரிசுத்த இடத்தின் சேக்கலின் அளவையே எடுத்துக்கொள்ள வேண்டும்.) இருபது வயது முதல் அறுபது வயது வரையுள்ள ஒரு பெண்ணின் விலை முப்பது வெள்ளிச்சேக்கலாகும். ஐந்து வயது முதல் இருபது வயதுவரை உடைய ஒரு ஆண்மகனின் விலை இருபது வெள்ளிச் சேக்கலாகும். ஐந்து முதல் வயது இருபது வயதுவரை உடைய ஒரு பெண்ணின் விலை பத்து வெள்ளிச் சேக்கலாகும். ஒரு மாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள ஆண் குழந்தையின் விலை ஐந்து சேக்கலாகும். ஒரு பெண் குழந்தையின் விலை மூன்று சேக்கலாகும். அறுபதும் அதற்கும் மேலும் ஆன ஒரு முதியவனின் விலை பதினைந்து சேக்கலாகும். இது போன்ற முதிய பெண்ணின் விலை பத்து சேக்கலாகும்.

“ஒருவேளை அவன் அப்பணத்தைச் செலுத்த முடியாத அளவிற்கு ஏழையாக இருந்தால் அவனை ஆசாரியனிடம் அழைத்துவர வேண்டும். அவன் செலுத்த வேண்டிய தொகையைப்பற்றி ஆசாரியனே முடிவு செய்வான்.

கர்த்தருக்கான காணிக்கைகள்

“கர்த்தருக்கான பலிகளாக சில மிருகங்களைப் பயன்படுத்தலாம். ஒருவன் இத்தகைய மிருகங்களைக் கொண்டுவந்தால் அவை பரிசுத்தமடைந்துவிடும். 10 அவன் அந்த மிருகத்தை கர்த்தருக்கு தருவதாக வாக்களித்திருக்கலாம். எனவே அவன் அதற்குப் பதிலாக வேறு மிருகத்தைக் கொண்டுவர முயலக்கூடாது. மோசமான மிருகத்துக்குப் பதிலாக நல்ல மிருகத்தையோ, நல்ல மிருகத்துக்குப் பதில் மோசமான மிருகத்தையோ, கொண்டுவர முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு ஒருவன் செய்தால் அந்த இரண்டு மிருகங்களுமே பரிசுத்தமாகி விடுவதால், இரண்டுமே கர்த்தருக்குரியதாகிவிடும்.

11 “சில மிருகங்களை கர்த்தருக்கு பலியாகத் தர இயலாது. இத்தகைய தீட்டுள்ள மிருகத்தை ஒருவன் கர்த்தருக்குக் கொண்டு வந்தால், அதனை ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 12 ஆசாரியன் அதற்குரிய விலையை முடிவு செய்வான். அம்மிருகம் நல்லதா, கெட்டதா என்பதைப்பற்றி வேறுபாடு எதுவும் இல்லை. எனவே ஆசாரியன் முடிவு செய்வதே அம்மிருகத்தின் விலையாகும். 13 ஒருவேளை அவன் அந்த மிருகத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று விரும்பினால் அதற்குரிய விலையோடு ஐந்தில் ஒரு பங்கு சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

வீட்டின் மதிப்புத் தொகை

14 “ஒருவன் தனது வீட்டை கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அர்ப்பணித்தால், அதன் விலையை ஆசாரியன் முடிவு செய்ய வேண்டும். அவ்வீடு நல்லது, கெட்டது என்பது பற்றி வேறுபாடு இல்லை. ஆசாரியன் தீர்மானிப்பதே அவ்வீட்டின் விலையாகும். 15 ஆனால் வீட்டுக்காரன் அவ்வீட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் வீட்டின் விலையோடு ஐந்தில் ஒரு பாகம் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பின்பு வீடு அவனுக்குரியதாகும்.

சொத்தின் மதிப்பு

16 “ஒருவன் தனது வயல்களின் ஒரு பாகத்தை கர்த்தருக்கு அர்ப்பணித்தால் அதன் விலையானது அதில் எவ்வளவு விதை விதைக்கலாம் என்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். ஒருகலம் [b] வாற் கோதுமை, விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்பட வேண்டும். 17 ஒருவேளை வயலை யூபிலி ஆண்டில் தேவனுக்குக் கொடுத்தால், அதன் விலையை ஆசாரியன் தீர்மானிப்பான். 18 அவன் தனது வயலை யூபிலி ஆண்டுக்குப் பிறகு கொடுத்தால் ஆசாரியன் அதன் விலையைச் சரியாகக் கணக்கிடவேண்டும். அவன் அடுத்த யூபிலிக்கான ஆண்டு எண்ணிக்கையைக் கணக்கிட்டு விலையைச் சொல்லுவான். 19 வயலைக் கொடுத்தவன் திரும்பப்பெற வேண்டும் என்று விரும்பினால் வயலின் விலையோடு ஐந்தில் ஒரு பங்கு மிகுதியாகக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். பிறகு அது அவனுக்கு உரிமை உடையதாகும். 20 ஒருவேளை அவன் திரும்ப விலை கொடுத்து வாங்கிக்கொள்ளாவிட்டால், அவ்வயல் தொடர்ந்து ஆசாரியர்களுக்கு உரியதாகும். ஒருவேளை அந்த வயல் வேறு யாருக்கேனும் விற்கப்பட்டால், அவன் அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது. 21 எனவே வயலுக்குச் சொந்தக்காரன் திரும்பப் பெற்றுக்கொள்ளாவிட்டால், யூபிலி ஆண்டு வந்தாலும் அது கர்த்தருக்கு பரிசுத்தமானதாக விளங்கும், என்றென்றும் ஆசாரியர்களுக்கு உரிமை உடையதாக இருக்கும். அது கர்த்தருக்கே முழுமையாகக் கொடுக்கப்பட்ட நிலம்போல் இருக்கும்.

22 “ஒருவன் கர்த்தருக்கு அர்ப்பணித்த நிலம் அவன் விலைக்கு வாங்கியதாக இருக்கலாம். அது அவனது குடும்பச் சொத்தாக இல்லாமல் இருக்கலாம். 23 அப்போது ஆசாரியன் யூபிலி ஆண்டுகுரிய ஆண்டுகளைக் கணக்கிட்டு அதன் விலையை முடிவு செய்வான். அது கர்த்தருக்கு உரியதாக இருக்கும். 24 பிறகு யூபிலி ஆண்டில் அந்நிலம் மீண்டும் அந்நிலத்திற்கு சொந்தமான குடும்பத்திற்கே போய்ச் சேரும்.

25 “இதன் விலையை முடிவு செய்யும்போது அதிகாரப்பூர்வமான அளவை பயன்படுத்த வேண்டும். ஒரு சேக்கல் என்பது இருபது கேராவாகும்.

மிருகங்களின் மதிப்புத் தொகை

26 “ஜனங்கள் கர்த்தருக்கு மாடுகளையோ, ஆடுகளையோ சிறப்புக் காணிக்கைளாகக் கொடுக்கலாம். அவை முதலில் பிறந்தவையாக இருப்பின் அது ஏற்கெனவே கர்த்தருக்கு உரியது. எனவே அவற்றை ஜனங்கள் சிறப்புக் காணிக்கையாகக் கொடுக்க முடியாது. 27 ஜனங்கள் முதலில் பிறந்த மிருகங்களை கர்த்தருக்கே கொடுக்க வேண்டும். ஆனால் அது தீட்டுள்ளதாக இருந்தால் அவன் அதனைத் திருப்பி வாங்கிக்கொள்ளவேண்டும். ஆசாரியன் அதற்குரிய விலையை முடிவு செய்வான். விலையோடு ஐந்தில் ஒரு பாகம் மிகுதியாகக் கொடுத்து அதனை வாங்கிக்கொள்ள வேண்டும். அவன் அதனைத் திருப்ப வாங்கிக்கொள்ளாவிட்டால் ஆசாரியன்தான் விரும்புகிற விலையில் மற்றவர்களுக்கு விற்றுவிட வேண்டும்.

சிறப்புக் காணிக்கைகள்

28 “ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அன்பளிப்புகளில் சில சிறப்பான அன்பளிப்புகள் [c] உள்ளன. இவை கர்த்தருக்கே உரியவை. அவற்றைக் கொடுத்தவன் திருப்பி வாங்கிக்கொள்ளவும், விற்கவும் முடியாது. இவை கர்த்தருக்கே சொந்தமானவை. காணிக்கைகளில் மனிதர்கள், மிருகங்கள், குடும்பச் சொத்திலுள்ள வயல்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். 29 சிறப்புக் காணிக்கையாக மனிதனைக் கொடுத்தால், அவனைத் திரும்ப விலைக்கு வாங்க முடியாது. அவன் கொல்லப்பட வேண்டும்.

30 “விளைச்சலில் பத்தில் ஒருபாகம் கர்த்தருக்கு உரியது. வயல்களில் விளைப வைகளிலும், மரங்களின் பழங்களிலும் பத்தில் ஒரு பாகம் கர்த்தருக்கே உரியது. 31 எனவே எவனாவது இதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள விரும்பினால் அதன் விலையோடு ஐந்தில் ஒரு பாகம் மிகுதியாகக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.

32 “ஒருவனது மாடு அல்லது ஆட்டு மந்தையில் பத்தில் ஒரு பங்கான மிருகங்கள் கர்த்தருக்கு உரியவை. 33 கர்த்தருக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மிருகங்கள் நல்லவையா, கெட்டவையா என்பதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அதற்காக அவன் வேறு மிருகங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம். அவன் அவ்வாறு மாற்றிக்கொள்ள விரும்பினால் இரண்டு மிருகங்களுமே கர்த்தருக்கு உரியதாகும். இவற்றைத் திரும்ப வாங்கிக்கொள்ள முடியாது” என்று கூறினார்.

34 இவை அனைத்தும் கர்த்தர் மோசேக்குக் கொடுத்த கட்டளைகளாகும். இதனை இஸ்ரவேல் ஜனங்களுக்காக சீனாய் மலையில் அவர் கொடுத்தார்.

மாற்கு 2

பக்கவாத வியாதிக்காரன் குணமாகுதல்(A)

சில நாட்களுக்குப் பின்னர், இயேசு கப்பர்நகூமுக்கு வந்தார். அவர் வீட்டுக்குத் திரும்பியுள்ளார் என்ற செய்தி பரவியது. ஏராளமான ஜனங்கள் இயேசுவின் போதனையைக் கேட்கக் கூடினார்கள். அந்த வீடு நிறைந்துவிட்டது. அங்கு நிற்பதற்கும் இடமில்லை. வாசலுக்கு வெளியேயும் இடமில்லை. இயேசு அவர்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். ஒரு பக்கவாதக்காரனைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். நான்கு பேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்தனர். ஆனால் அவர்களால் அவனை இயேசுவின் அருகில் கொண்டுவர முடியவில்லை. ஏனென்றால் மக்கள் கூட்டம் அவ்வீட்டைச் சூழ்ந்திருந்தது. எனவே அவர்கள் கூரைமீது ஏறி இயேசு இருந்த இடத்துக்கு மேல் கூரையில் ஒரு திறப்பை உண்டாக்கினார்கள். பிறகு பக்கவாதக்காரனின் படுக்கையை வீட்டுக்குள் இறக்கினார்கள். அவர்களது அளவுக்கடந்த விசுவாசத்தை இயேசு பார்த்தார். எனவே பக்கவாதக்காரனைப் பார்த்து இயேசு, “இளைஞனே! உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

சில வேதபாரகர்கள் அங்கே உட்கார்ந்திருந்தனர். அவர்கள் இயேசு செய்வனவற்றைப் பார்த்து விட்டு தங்களுக்குள், “ஏன் இந்த மனிதர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்? இவர் சொல்வதெல்லாம் தேவனுக்கு எதிரானதாகவே உள்ளதே. தேவன் மட்டுமே பாவங்களை மன்னிக்கத்தக்கவர்” என்று சொல்லிக் கொண்டனர்.

வேதபாரகர்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உடனே இயேசு அறிந்துகொண்டார். எனவே, இயேசு அவர்களிடம், “ஏன் இப்படி யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்? பக்கவாதக்காரனைப் பார்த்து, ‘உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வது எளிதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட’ என்று சொல்வது எளிதா? இரண்டில் எது எளிதாகும்? 10 ஆனால் மனித குமாரனுக்குப் பூமியிலே பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் உண்டு என்பதை உங்களுக்கு நிரூபிக்கிறேன்” என்று கூறி பிறகு பக்கவாதக்காரனைப் பார்த்து, 11 “நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்திரு, உனது படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டுக்குப் போ” என்றார்.

12 பக்கவாதக்காரன் எழுந்து, அவனது படுக்கையை எடுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். அனைத்து மக்களும் அவனைப் பார்த்தார்கள். அவர்கள் சந்தோஷப்பட்டு தேவனைப் புகழ்ந்தார்கள். அவர்கள், “இதுபோல ஆச்சரியம் மிக்க ஒன்றை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை!” என்றனர்.

லேவி இயேசுவைத் தொடருதல்(B)

13 இயேசு மறுபடியும் கடலருகே சென்றார். ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். இயேசு அவர்களுக்கு உபதேசித்தார். 14 கடற்கரையையொட்டி நடந்து செல்லும்போது அல்பேயுவின் மகனான லேவி என்னும் வரி வசூலிப்பவனைக் கண்டார். லேவி வரி வசூலிப்பு அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தான். அவனிடம் இயேசு “என்னைப் பின் தொடர்ந்து வா” என்றார். உடனே லேவி எழுந்து அவரைப் பின் தொடர்ந்தான்.

15 அன்று, அதற்குப் பின் இயேசு லேவியினுடைய வீட்டில் உணவு உண்டார். அங்கே வரி வசூல் செய்பவர்களும், பாவிகளும் இயேசுவோடும் அவரது சீஷர்களோடும் உணவு உண்டனர். இவர்களோடு பலர் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்திருந்தனர். 16 அவர்களோடு வேதபாரகரும் பரிசேயரும் இருந்தனர். அவர்கள் பாவிகளோடும், வரி வசூல் செய்பவர்களோடும் சேர்ந்து இயேசு உணவு உட்கொள்வதைக் கண்டனர். அவர்கள் இயேசுவின் சீஷரை நோக்கி, “ஏன் இவர் வரிவசூல் செய்பவர்களோடும், பாவிகளுடனும் சேர்ந்து உணவு உண்கின்றார்?” என்று கேட்டனர்.

17 இயேசு இதனைக் கேட்டார். அவர் அவர்களை நோக்கி, “சுகமுள்ளவனுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிக்கே மருத்துவர் தேவை. நான் நல்லவர்களை அழைக்க வரவில்லை, பாவிகளை அழைக்கவே வந்தேன்” என்றார்.

பிற தலைவர்களைவிட வித்தியாசமானவர்(C)

18 யோவானின் சீஷர்களும், பரிசேயரின் சீஷர்களும் உபவாசம் இருந்தனர். சிலர் இயேசுவிடம் வந்து “யோவானுடைய சீஷர்களும் உபவாசம் இருக்கின்றனர். பரிசேயருடைய சீஷர்களும் உபவாசம் இருக்கின்றனர். உங்களுடைய சீஷர்கள் ஏன் உபவாசம் இருப்பதில்லை?” என்று கேட்டனர்.

19 அதற்கு இயேசு, “ஒரு திருமணத்தில் மணமகன் தம்முடன் இருக்கும்போது மணமகனின் நண்பர்கள் துயரப்படமாட்டார்கள். மணமகன் இன்னும் கூடவே இருக்கிற சந்தர்ப்பத்தில், அவர்களால் உபவாசம் இருக்க முடியாது. 20 ஆனால் மணமகன் பிரிந்து செல்லக்கூடிய ஒரு தருணம் வரும். அப்போது மணமகனைப் பிரிந்த வருத்தத்தில், அவன் நண்பர்கள் துயரமுடன் இருப்பார்கள். அதற்குப் பிறகு அவர்கள் உபவாசம் இருப்பார்கள்.

21 “எவனொருவனும் புதிய துணியோடு பழைய துணியைச் சேர்த்து ஒட்டுப்போட்டு தைக்கமாட்டான். அவன் அவ்வாறு செய்தால் ஒட்டுப்போட்டவை சுருங்கிவிடும். புதியது பழையதை அதிகமாய்க் கிழிக்கும். முன்னதைவிட மோசமாகும். 22 எவனொருவனும் புதிய திராட்சை இரசத்தை பழைய தோல் பையில் ஊற்றி வைக்கமாட்டான். ஊற்றி வைத்தால் புதிய இரசம் பழைய பையைக் கெடுத்துவிடும். அதோடு இரசமும் சிந்திவிடும். புதிய இரசத்தைப் புதிய பைகளிலேதான் மக்கள் ஊற்றி வைப்பார்கள்” என்று சொன்னார்.

யூதர்களின் விமர்சனம்(D)

23 ஒரு ஓய்வுநாளில் இயேசு தானிய வயல்கள் வழியே நடந்துகொண்டிருந்தார். அவரது சீஷர்களும் அவரோடு சென்றார்கள். சீஷர்கள் தானியக்கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். 24 பரிசேயர்கள் இதனைப் பார்த்து இயேசுவிடம், “உங்கள் சீஷர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? ஓய்வு நாளில் இவ்வாறு செய்யக்கூடாது என்பது யூதர்களின் சட்டமல்லவா?” என்றனர்.

25 அதற்கு இயேசு, “தனக்கும் தன் சீஷர்களுக்கும் உணவு வேண்டிப் பசித்திருந்த நேரத்தில் 26 தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் படித்திருக்கிறீர்கள். அபியத்தார் என்னும் தலைமை ஆசாரியன் காலத்தில் நடந்த விஷயம் அது. தாவீது தேவனுடைய வீட்டில் நுழைந்து தேவனுக்குப் படைக்கப்பட்ட அப்பத்தை உண்டான். மோசேயின் விதிகளோ ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைப் புசிக்கலாம் என்று கூறுகின்றன. தாவீது தன்னுடன் இருந்த மற்றவர்களுக்கும் அப்பத்தைக் கொடுத்தான்” என்றார்.

27 மேலும் பரிசேயர்களைப் பார்த்து இயேசு “ஓய்வு நாள் என்பது மக்களுக்கு உதவவே உண்டாக்கப்பட்டது. ஓய்வுநாளுக்காக மக்கள் உண்டாக்கப்படவில்லை. 28 எனவே மனித குமாரன்தான் மற்ற நாட்களுக்கும் மட்டுமல்ல, ஓய்வு நாளுக்கும் எஜமானராக இருக்கிறார்” என்று சொன்னார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center