Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எரேமியா 34-36

யூதாவின் அரசனான சிதேக்கியாவிற்கு எச்சரிக்கை

34 எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. நேபுகாத்நேச்சார் பாபிலோனின் அரசனாக இருந்தபோது வார்த்தை வந்தது. அவன் எருசலேமிற்கும் அதைச்சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் எதிராகச் சண்டையிட்டு கொண்டிருந்தான். நேபுகாத்நேச்சார் தன்னோடு தனது படை முழுவதையும் ஜனங்களிடமும் அவனுடைய ஆளுகைக்குட்பட்ட பூமியின் சகல இராஜ்யங்களுக்கும் உரிய படைகளையும் வைத்திருந்தான்.

இதுதான் செய்தி: “இதைத்தான் கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுகிறார்: எரேமியா, யூதாவின் அரசனான சிதேக்கியாவிடம் போ, அவனிடம் இந்தச் செய்தியைக் கொடு, ‘சிதேக்கியா, இதைத்தான் கர்த்தர் கூறுகிறார். நான் விரைவில் பாபிலோனின் அரசனுக்கு எருசலேம் நகரத்தைக் கொடுப்பேன். அவன் அதனை எரிப்பான். சிதேக்கியா, பாபிலோன் அரசனிடமிருந்து நீ தப்பிக்கவே முடியாது. நீ உறுதியாகப் பிடிபடுவாய். அவனிடம் கொடுக்கப்படுவாய். பாபிலோன் அரசனை நீயே உன் சொந்தக் கண்களால் பார்ப்பாய். அவன் உன்னோடு நேருக்கு நேராகப் பேசுவான். நீ பாபிலோனிடம் போவாய். ஆனால் கர்த்தருடைய வாக்குறுதிபற்றி யூதாவின் அரசனான சிதேக்கியாவே கவனி. இதுதான் கர்த்தர் உன்னைப்பற்றி சொன்னது. நீ வாளால் கொல்லப்படமாட்டாய். நீ சமாதானமான வழியில் மரிப்பாய். ஜனங்கள் இறுதி சடங்குக்கான நெருப்பை உருவாக்கி நீ அரசனாகு முன் ஆண்ட அரசர்களான உன் முற்பிதாக்களைப் பெருமைப்படுத்தினார்கள். இதே வழியில், உன்னைப் பெருமைப்படுத்தவும் ஜனங்கள் இறுதி சடங்கு நெருப்பை மூட்டுவார்கள். அவர்கள் உனக்காக அழுவார்கள். அவர்கள் சோகத்தோடு, “ஓ எஜமானனே” என்பார்கள். நான் நானே உமக்கு இந்த வாக்குறுதியைச் செய்கிறேன்’” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.

எனவே, எரேமியா இச்செய்தியை கர்த்தரிடமிருந்து எருசலேமில் சிதேக்கியாவிற்குக் கொடுத்தான். பாபிலோனது அரசனின் படை எருசலேமிற்கு எதிராகச் சண்டையிட்டபோது இது இருந்தது. பாபிலோனின் படையும் யூதாவின் கைப்பற்றப்படாத நகரங்களுக்கு எதிராகச் சண்டையிட்டனர். லாகீசும் அசெக்காவும் அந்நகரங்களாகும். யூதா தேசத்தில் மீதியுள்ள கோட்டைகளால் அமைந்த நகரங்கள் இவை.

ஜனங்கள் தங்களது ஒப்பந்தத்தை உடைக்கின்றனர்

அனைத்து எருசலேம் ஜனங்களோடும் சிதேக்கியா அரசன் அனைத்து எபிரெய அடிமைகளுக்கும் விடுதலை தருவதாக ஒப்பந்தம் செய்திருந்தான். சிதேக்கியா அந்த ஒப்பந்தம் செய்த பிறகு கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வார்த்தை வந்தது. ஒவ்வொருவனும் எபிரெய அடிமையையும் விடுதலை செய்யவேண்டும். ஆணும் பெண்ணுமான எபிரெய அடிமைகள் விடுதலை செய்யப்படவேண்டும். எவரும் இன்னொரு யூதா கோத்திரத்தில் உள்ளவனை அடிமையாக வைத்திருக்கக்கூடாது. 10 எனவே யூதாவில் உள்ள அனைத்துத் தலைவர்களும் ஜனங்களனைவரும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொருவனும் ஆண் மற்றும் பெண் அடிமைகளை விடுதலை செய்வார்கள். அவர்களை இனிமேலும் அடிமையாக வைத்திருக்க முடியாது. ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டனர். எனவே, அனைத்து அடிமைகளும் விடுதலை செய்யப்பட்டனர். 11 ஆனால், அதற்குப் பிறகு, அடிமைகளை வைத்து இருந்த ஜனங்கள் தங்கள் மனதை மாற்றிக்கொண்டனர். எனவே, விடுவிக்கப்பட்ட ஜனங்களை எடுத்து மீண்டும் அடிமைகளாக்கிக் கொண்டனர்.

12 பிறகு கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வார்த்தை வந்தது. 13 “எரேமியா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொன்னது இதுதான்: ‘நான் உங்கள் முற்பிதாக்களை அடிமையாயிருந்த எகிப்துக்கு வெளியே கொண்டுவந்தேன். நான் அதைச் செய்த போது நான் அவர்களோடு உடன்படிக்கைச் செய்துக்கொண்டேன். 14 நான் உங்கள் முற்பிதாக்களுக்குச் சொன்னேன், “ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொருவனும் தனது எபிரெய அடிமையையும் விடுவிக்கவேண்டும். உங்களிடம் ஒரு எபிரெய அடிமை தன்னையே விற்றுக்கொண்டவன் இருந்தால் அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் சேவை செய்த பிறகு நீ அவனை விடுதலை செய்ய வேண்டும்.” ஆனால், உங்கள் முற்பிதாக்கள் என்னை கவனிக்கவில்லை. என் பேச்சைக் கேட்கவில்லை. 15 கொஞ்ச காலத்துக்கு முன் சரியானது எதுவோ அதனைச் செய்ய உங்கள் மனதை மாற்றினீர்கள். உங்களில் ஒவ்வொருவரும் அடிமையாயிருந்த எபிரெய நபருக்கு விடுதலை கொடுத்தீர்கள். என் நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் எனக்கு முன் ஒரு உடன்படிக்கை நீங்கள் செய்தீர்கள். 16 ஆனால் இப்போது, நீங்கள் உங்கள் மனங்களை மாற்றியுள்ளீர்கள். நீங்கள் என் நாமத்தை மகிமைப்படுத்தவில்லை என்பதைக் காட்டினீர்கள். எப்படி நீங்கள் இதனைச் செய்தீர்கள். நீங்கள் விடுவித்திருக்கிற ஒவ்வொருவரும் ஆண் மற்றும் பெண் அடிமைகளைத் திரும்ப எடுத்திருக்கிறீர்கள். அவர்களை மீண்டும் அடிமைகளாகும்படி வற்புறுத்தியிருக்கிறீர்கள்.’

17 “எனவே இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘ஜனங்களாகிய நீங்கள் எனக்கு அடிபணியவில்லை. நீங்கள் உங்கள் எபிரெய அடிமைகளுக்கு விடுதலை கொடுக்கவில்லை. ஏனென்றால் நான் விடுதலை கொடுப்பேன் என்ற உங்கள் உடன்படிக்கையைக் காக்கவில்லை, இது கர்த்தருடைய வார்த்தை. உங்களைக் கொல்வதற்காக வாள், பயங்கர நோய், பசி ஆகியவற்றுக்கு விடுதலை கொடுப்பேன். அவர்கள் உன்னைப்பற்றி கேள்விப்படும்போது, நான் உன்னைப் பூமியிலுள்ள இராஜ்யங்களிலேயே அஞ்சத்தக்க உதாரணமாகச் செய்வேன். 18 எனக்கு முன்னால் செய்த வாக்குறுதியை காப்பாற்றாத, உடன்படிக்கையை முறித்த மனிதர்களை நான் ஒப்புக்கொடுப்பேன். அந்த மனிதர்கள் ஒரு கன்றுகுட்டியை இரண்டாக எனக்கு முன் வெட்டினார்கள்: இரண்டு துண்டுகளுக்கு இடையில் நடந்தனர். 19 கன்றின் இரண்டு துண்டுகளுக்கு இடையில் நடந்தவர்கள் இவர்கள்தான். யூதா மற்றும் எருசலேமின் தலைவர்கள், சபையின் முக்கியமான அதிகாரிகள், ஆசாரியர்கள் மற்றும் தேசத்தின் ஜனங்கள். 20 எனவே, நான் அந்த ஜனங்களை அவர்களது பகைவர்களிடமும் அவர்களைக் கொல்ல விரும்புகிற ஒவ்வொருவரிடமும் கொடுப்பேன். அந்த ஜனங்களின் உடல்கள் வானத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாகும். 21 நான் யூதாவின் அரசனான சிதேக்கியாவையும் அவனது அலுவலக அதிகாரிகளையும் அவர்களது பகைவருக்கும் அவர்களைக் கொல்ல விரும்புகிற ஒவ்வொருவருக்கும் கொடுப்பேன். நான் சிதேக்கியாவையும் அவனது ஜனங்களையும் பாபிலோன் அரசனது படைக்கு, அப்படை எருசலேமை விட்டு விலகி இருந்தாலும் கொடுப்பேன். 22 ஆனால், நான் பாபிலோன் படை எருசலேமிற்குத் திரும்பி வருமாறு ஆணையிடுவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘அப்படை எருசலேமிற்கு எதிராகச் சண்டையிடும். அவர்கள் அதைப் பிடித்து நெருப்பிட்டு எரித்துப் போடுவார்கள். நான் யூதா தேசத்திலுள்ள நகரங்களை அழித்துப்போடுவேன். அந்நகரங்கள் வெறுமை வனாந்தரங்கள் ஆகும். ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்.’”

ரேகாபியர் வம்சத்தின் நல்ல எடுத்துக்காட்டு

35 யூதாவின் அரசனாக யோயாக்கீம் இருந்தபோது, எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் மகன். கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான். “எரேமியா ரேகாபியரது வீட்டுக்குப்போ. கர்த்தருடைய ஆலயத்தின் பக்கத்து அறைகள் ஒன்றுக்கு அவர்கள் வருமாறு வரவழை. அவர்கள் குடிக்கத் திராட்சைரசத்தைக் கொடு.”

எனவே நான் (எரேமியா) யசினியாவை அழைக்கப்போனேன். யசினியா எரேமியா என்பவனின் மகன். அந்த எரேமியா அபசினியாவின் மகன். நான் யசினியாவின் அனைத்து சகோதரர்களையும் மகன்களையும் வரவழைத்தேன். நான் ரேகாபியரது வம்சத்தார் அனைவரையும் வரவழைத்தேன். கர்த்தருடைய ஆலயத்திற்கு ரேகாபியருடைய குடும்பத்தாரை அழைத்து வந்தேன். அனானின் மகன்களது அறை என்று அழைக்கப்படும் அறைக்குள் நாங்கள் சென்றோம். அனான் இத்தலியாவின் மகன். அனான் தேவனுடைய மனிதனாக இருந்தான். அந்த அறை யூதாவின் இளவரசன் தங்கும் அறைக்கு அடுத்ததாக இருந்தது. சல்லூமின் மகனான மாசெயாவின் அறையின் மேலே உள்ளது. மாசெயா ஆலயத்தின் வாசல் காவலன். பிறகு நான் (எரேமியா) சில கோப்பைகளைத் திராட்சை ரசத்தால் ரேகாபியர் வம்சத்தாருக்கு முன்னால் நிரப்பினேன். நான் அவர்களிடம், “கொஞ்சம் திராட்சைரசம் குடியுங்கள்” என்று சொன்னேன்.

ஆனால் ரேகாபியர் ஜனங்களோ, “நாங்கள் எப்பொழுதும் திராட்சைரசம் குடிப்பதில்லை. இதனை நாங்கள் எப்பொழுதும் குடிப்பதில்லை. ஏனென்றால், எங்கள் முற்பிதாவான ரேகாபின் மகனான யோனதாப் இந்தக் கட்டளையைக் கொடுத்தார். ‘நீயும் உனது சந்ததியாரும் என்றைக்கும் திராட்சை ரசத்தைக் குடிக்க வேண்டாம். நீங்கள் எப்பொழுதும் வீடுகளைக் கட்ட வேண்டாம். விதைகளை நடவேண்டாம், அல்லது திராட்சை கொடிகளைப் பயிரிடவேண்டாம். நீங்கள் இக்காரியங்கள் எதுவும் செய்யவேண்டாம். நீங்கள் கூடாரங்களில் மட்டுமே வாழ வேண்டும். நீங்கள் இவ்வாறு செய்தால் பிறகு நீங்கள் நீண்ட காலம் இடம் விட்டு இடம் போய் வாழ்வீர்கள்.’ எனவே, ரேகாபியராகிய நாங்கள் எங்கள் முற்பிதாவான யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நாங்கள் என்றைக்கும் திராட்சை ரசம் குடிக்கமாட்டோம். எங்கள் மனைவிகளும், மகன்களும், மகள்களும் என்றென்றும் திராட்சை ரசம் குடிக்கமாட்டார்கள். நாங்கள் வாழ்வதற்காக வீடு கட்டவில்லை. நாங்கள் திராட்சைத் தோட்டங்களையோ வயல்களையோ சொந்தமாக்கியதில்லை. நாங்கள் என்றென்றும் அறுவடை செய்ததுமில்லை. 10 நாங்கள் கூடாரங்களில் வாழ்ந்திருக்கிறோம். எங்கள் முற்பிதா யோனதாப்பின் கட்டளையின்படி கீழ்ப்படிந்திருக்கிறோம். 11 ஆனால் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் யூதா நாட்டை தாக்கியபோது, நாங்கள் எருசலேமிற்குள் சென்றோம். நாங்கள் எங்களுக்குள், ‘வாருங்கள், நாம் எருசலேம் நகருக்குள் நுழைவோம். எனவே, நாம் பாபிலோனியரின் படையிடமிருந்தும் அராமியரின் படையிடமிருந்தும் தப்பிக்கலாம்’ என்று சொன்னோம். எனவே நாங்கள் எருசலேமில் தங்கியிருக்கிறோம்.”

12 பிறகு எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. 13 “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறது: எரேமியா, யூதாவின் ஆண்களிடமும் எருசலேம் ஜனங்களிடமும் போய் இந்த வார்த்தையைச் சொல். ‘ஜனங்களாகிய நீங்கள் ஒரு பாடம் கற்றுக்கொண்டு எனது செய்திக்குக் கீழ்ப்படிய வேண்டும்’ இந்த வார்த்தை கர்த்தரிடம் இருந்து வருகிறது. 14 ‘ரேகாப்பின் மகனான யோனதாப் அவரது மகன்களிடம் திராட்சைரசத்தைக் குடிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார். அக்கட்டளை கீழ்ப்படியப்பட்டிருக்கிறது. இன்றுவரை, யோனாதாபின் சந்ததியார் முற்பிதாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருக்கின்றனர். அவர்கள் திராட்சைரசம் குடிப்பதில்லை. ஆனால் நானே கர்த்தர். நான் யூதாவின் ஜனங்களாகிய உங்களுக்குச் செய்தியை மீண்டும் மீண்டும் கொடுத்திருக்கிறேன். ஆனால் நீ எனக்குக் கீழ்ப்படியவில்லை. 15 இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்களாகிய உங்களிடம் எனது வேலைக்காரர்களான தீர்க்கதரிசிகளை அனுப்பினேன். நான் அவர்களை மீண்டும் மீண்டும் அனுப்பினேன். அத்தீர்க்கதரிசிகள் உங்களிடம், “இஸ்ரவேல் மற்றும் யூதாவிலுள்ள ஒவ்வொருவரும் தீயவை செய்வதை நிறுத்தவேண்டும். நீங்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும். அந்நிய தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். அவர்களைத் தொழுதுகொள்ளவோ சேவை செய்யவோ வேண்டாம். நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்தால் பிறகு நீங்கள், நான் உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டில் வாழ்வீர்கள்” ஆனால் ஜனங்களாகிய நீங்கள் எனது வார்த்தையை கவனிக்கவில்லை. 16 யோனதாப்பின் சந்ததியார் தங்கள் முற்பிதா கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். ஆனால் யூதாவின் ஜனங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை’” என்றார்.

17 எனவே, “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். ‘யூதா மற்றும் எருசலேமிற்குப் பல தீமைகள் ஏற்படும் என்று சொன்னேன். நான் விரைவில் அத்தீமைகள் ஏற்படும்படிச் செய்வேன். நான் அந்த ஜனங்களிடம் பேசினேன். ஆனால், அவர்கள் கவனிக்க மறுத்தனர். நான் அவர்களை அழைத்தேன். ஆனால் அவர்கள் எனக்குப் பதில் சொல்லவில்லை.’”

18 பிறகு எரேமியா ரேகாபியருடைய வம்சத்து ஜனங்களிடம் கூறினான். “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், ‘நீங்கள் உங்களது முற்பிதா யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தீர்கள். யோனாதாபின் அனைத்து போதனைகளையும் பின்பற்றினீர்கள். அவன் கட்டளையிட்ட அனைத்தையும் செய்தீர்கள்.’ 19 எனவே, இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: ‘ரேகாபின் மகனான யோனதாபின் சந்ததி எனக்கு சேவைசெய்ய எப்பொழுதும் இருக்கும்.’”

எரேமியாவின் புத்தகச்சுருளை யோயாக்கீம் எரிக்கிறான்

36 கர்த்தரிடமிருந்து வார்த்தை எரேமியாவிற்கு வந்தது. யூதாவின் அரசனாக யோசியாவின் மகன் யோயாக்கீம் ஆண்ட நான்காம் ஆட்சி ஆண்டில் இது நடந்தது. கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான்: “எரேமியா, ஒரு புத்தச்சுருளை எடு. நான் உன்னிடம் சொன்ன அனைத்து செய்திகளையும் அதில் எழுது. நான் உன்னிடம் இஸ்ரவேல் மற்றும் யூதா மற்றும் அனைத்து தேசங்களைப்பற்றிக் கூறியிருக்கிறேன். யோசியா அரசனாக இருந்த காலம் முதல் இன்றுவரை நான் உனக்குச் சொன்ன அனைத்தையும் எழுது. நான் அவர்களுக்காக செய்ய திட்டமிட்டுக்கொண்டிருப்பதை ஒரு வேளை யூதா ஜனங்கள் கேட்கலாம். அப்போது ஒவ்வொருவனும் தன்னுடைய தீயச் செயல்களை நிறுத்திவிடலாம். அவர்கள் அவ்வாறு செய்தால், நான் அவர்கள் ஏற்கனவே செய்த பாவங்களை மன்னிப்பேன்.”

எனவே எரேமியா, பாருக் என்ற பெயருள்ளவனை அழைத்தான். பாருக் நேரியாவின் மகன். எரேமியா கர்த்தர் கூறிய வார்த்தையைச் சொன்னான். எரேமியா பேசிக்கொண்டிருக்கும் போது, பாருக் புத்தகச்சுருளில் அச்செய்திகளை எழுதினான். பிறகு எரேமியா பாருக்கிடம், “என்னால் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகமுடியாது. அங்கே நான் போவதற்கு அனுமதியில்லை. எனவே, நீ கர்த்தருடைய ஆலயத்திற்குள் போக வேண்டுமென்று விரும்புகிறேன். உபவாச நாளில் நீ அங்கே போ. புத்தகச்சுருளில் உள்ளவற்றை ஜனங்களுக்கு வாசி. கர்த்தரிடமிருந்து கேட்ட செய்தியை நான் சொல்ல நீ புத்தகச்சுருளில் எழுதியவற்றை வாசி. தாங்கள் வாழும் பட்டணங்களிலிருந்து எருசலேமிற்கு வந்த யூதாவின் அனைத்து ஜனங்களுக்கும் அச்செய்தியை வாசி. ஒரு வேளை அந்த ஜனங்கள் கர்த்தர் தங்களுக்கு உதவ வேண்டுமென கேட்பார்கள். ஒரு வேளை ஒவ்வொருவனும் தன்னுடைய தீய செயல் செய்வதை நிறுத்திவிடலாம். கர்த்தர் அந்த ஜனங்களுடன் கோபமுள்ளவராக இருக்கிறார்” என்பதை அறிவித்திருக்கிறார். எனவே, நேரியாவின் மகனான பாருக் தீர்க்கதரிசியான எரேமியா சொன்னபடி எல்லாவற்றையும் செய்தான். பாருக், கர்த்தருடைய செய்தி எழுதப்பட்டிருந்த புத்தகச்சுருளை உரக்க வாசித்தான். அவன் அதனை கர்த்தருடைய ஆலயத்தில் வாசித்தான்.

யோயாக்கீம் அரசனான ஐந்தாம் ஆண்டின் ஒன்பதாவது மாதத்தில் ஒரு உபவாசம் அறிவிக்கப்பட்டது. எருசலேம் நகரத்தில் வாழ்கின்ற அனைத்து ஜனங்களும் யூதாவின் பட்டணங்களிலிருந்து எருசலேமிற்கு வந்த ஒவ்வொருவரும் கர்த்தருக்கு முன்னால் உபவாசம் இருக்கவேண்டும். 10 அப்போது, எரேமியாவின் வார்த்தைகள் உள்ள புத்தகச்சுருளைப் பாருக் வாசித்தான். அவன் புத்தகச்சுருளை கர்த்தருடைய ஆலயத்தில் வாசித்தான். கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த எல்லா ஜனங்களின் முன்பும் பாருக் புத்தகச்சுருளை வாசித்தான். பாருக், புத்தகச்சுருளில் உள்ளவற்றை வாசிக்கும்போது மேற்பிரகாரத்திலுள்ள கெமரியாவின் அறையில் இருந்தான். அந்த அறை ஆலயத்தின் புதிய வாசல் நுழைவில் இருந்தது. கெமரியா சாப்பானின் மகன். கெமரியா ஆலயத்தில் எழுத்தாளனாக இருந்தான்.

11 மிகாயா என்ற பெயருடைய ஒருவன் கர்த்தரிடமுள்ள எல்லாச் செய்திகளையும் புத்தகச்சுருளில் பாருக் வாசிப்பதிலிருந்து கேட்டான். மிகாயா, கெமரியாவின் மகன். கெமரியா, சாப்பானின் மகன். 12 மிகாயா புத்தகச்சுருளிலுள்ள செய்திகளை கேட்டதும் அரசனின் அரண்மனையில் உள்ள செயலாளனின் அறைக்குச் சென்றான். அரசனின் அரண்மனையில் எல்லா அரச அதிகாரிகளும் உட்கார்ந்திருந்தனர். அந்த அதிகாரிகளின் பெயர்களாவன: செயலாளனாகிய எலிசாமா, செமாயாவின் மகனாகிய தெலாயா, அக்போரின் மகனான எல்நாத்தான், சாப்பானின் மகனான கெமரியா, அனனியாவின் மகனான சிதேக்கியா, மற்றும் பல பிரபுக்களும் அங்கே இருந்தனர். 13 மிகாயா, பாருக் புத்தகச்சுருளில் வாசித்து கேட்ட அனைத்தையும் அதிகாரிகளிடம் சொன்னான்.

14 பிறகு அனைத்து அதிகாரிகளும் யெகுதி என்னும் பெயருள்ள ஒருவனை பாருக்கிடம் அனுப்பினர். யெகுதி நெத்தானியாவின் மகன். நெத்தானியா செலேமியாவின் மகன். செலேமியா கூஷியின் மகன். யெகுதி பாருக்கிடம், “நீ வாசித்த புத்தகச்சுருளை எடுத்துக்கொண்டு என்னுடன் வா” என்றான்.

நேரியாவின் மகனான பாருக் புத்தகச்சுருளை எடுத்துக்கொண்டு யெகுதியோடு அதிகாரிகளிடம் சென்றான்.

15 பிறகு அந்த அதிகாரிகள் பாருக்கிடம், “உட்கார், எங்களிடம் புத்தகச்சுருளை வாசி” என்றனர். எனவே, பாருக் அவர்களுக்குப் புத்தகச்சுருளை வாசித்தான்.

16 அந்த அரச அதிகாரிகள் புத்தகச்சுருளில் உள்ள அனைத்து செய்திகளையும் கேட்டனர். பிறகு அவர்கள் பயந்தனர். ஒருவரையொருவர் பார்த்தனர். அவர்கள் பாருக்கிடம், “நாங்கள் புத்தகச்சுருளில் உள்ள செய்திகளை அரசன் யோயாக்கீமிடம் கூறவேண்டும்” என்றனர். 17 பிறகு அந்த அதிகாரிகள் பாருக்கிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். அவர்கள், “பாருக், எங்களிடம் சொல். புத்தகச்சுருளில் எழுதப்பட்டுள்ள செய்திகளை நீ எங்கிருந்து பெற்றாய்? எரேமியா சொன்னவற்றை நீ எழுதினாயா?” என்று கேட்டனர்.

18 பாருக், “ஆம், எரேமியா சொன்னான். நான் மையால் இப்புத்தகச்சுருளில் எழுதினேன்” என்று பதில் சொன்னான்.

19 பிறகு அரச அதிகாரிகள் பாருக்கிடம், “நீயும் எரேமியாவும் போய் ஒளிந்துக்கொள்ளுங்கள். எங்கே ஒளிந்திருக்கிறீர்கள் என்று யாரிடமும் சொல்லாதீர்கள்” என்றனர்.

20 பிறகு அரச அதிகாரிகள் அப்புத்தகச்சுருளை எழுத்தாளனான எலிசாமாவின் அறையிலே வைத்தனர். அவர்கள் அரசனான யோயாக்கீமிடம் சென்றனர். அவர்கள் அவனிடம் புத்தகச்சுருளைப் பற்றிச் சொன்னார்கள்.

21 எனவே, அரசன் யோயாக்கீம் யெகுதியை அனுப்பி புத்தகச்சுருளை வரவழைத்தான். யெகுதி எழுத்தாளனான எலிசாமாவின் அறையிலிருந்து புத்தகச்சுருளைக் கொண்டுவந்தான். பிறகு யெகுதி அரசனிடம் புத்தகச்சுருளை வாசித்தான். அரசனைச்சுற்றி அனைத்து அதிகாரிகளும் நின்றனர். 22 இது நடந்த காலம் ஒன்பதாவது மாதம். எனவே, அரசன் யோயாக்கீம் குளிர்காலத்துக்கான அறையில் உட்கார்ந்திருந்தான். அரசனுக்கு முன்னால் நெருப்புக் குண்டத்தில் நெருப்பு எரிந்துக்கொண்டிருந்தது. 23 யெகுதி புத்தகச்சுருளை வாசிக்கத் தொடங்கினான். அவன் இரண்டு மூன்று பத்திகள் வாசித்ததும் அரசனான யோயாக்கீம் புத்தகச்சுருளைப் பிடுங்கினான். பிறகு அவன் அந்தப் பத்திகள் எழுதப்பட்டிருந்த புத்தகச்சுருளைச் சிறிய கத்தியால் வெட்டி நெருப்பிற்குள் போட்டான். இறுதியாக புத்தகச்சுருள் முழுவதும் நெருப்பில் எரிந்துப்போயிற்று. 24 அரசன் யோயாக்கீமும் அவனது வேலைக்காரர்களும் புத்தகச்சுருளில் உள்ளவற்றை வாசிக்கக் கேட்டபோது அவர்கள் பயப்படவில்லை. அவர்கள் தாங்கள் செய்த தப்புக்காக வருத்தத்தைக் காட்ட தங்கள் ஆடைகளைக் கிழிக்கவில்லை.

25 எல்நாத்தன், தெலாயா மற்றும் கெமரியா அரசன் யோயாக்கீமிடம் புத்தகச்சுருளை எரிக்க வேண்டாம் என்று சொல்ல முயன்றனர். ஆனால் அரசன் அவர்கள் சொன்னதைக் கேட்கவில்லை. 26 யோயாக்கீம் அரசன் சிலரிடம் எழுத்தாளனான பாருக்கையும் தீர்க்கதரிசி எரேமியாவையும் கைது செய்யும்படிக் கட்டளையிட்டான். அவர்கள், அரசனின் மகன் யெரமெயேல், அஸ்ரியேலின் மகன் செராயா, அப்தெயேலின் மகனான செலேமியாவும் ஆவார்கள். ஆனால் அவர்களால் பாருக்கையும் எரேமியாவையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஏனென்றால், கர்த்தர் அவர்களை மறைத்துவிட்டார்.

27 கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்குச் செய்தி வந்தது. இது, கர்த்தரிடமிருந்து வந்தச் செய்தி முழுவதும் எழுதப்பட்ட புத்தகச்சுருள் அரசன் யோயாக்கீமால் எரிக்கப்பட்டப்பிறகு வந்தது. எரேமியா பாருக்கிடம் பேசியிருந்தான். பாருக் அவற்றைப் புத்தகச்சுருளில் எழுதியிருந்தான். கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்தச் செய்தி இதுதான்:

28 “எரேமியா, இன்னொரு புத்தகச்சுருளை எடு. முதல் புத்தகச்சுருளில் இருந்த அனைத்து செய்திகளையும் இதில் எழுது. அந்தச் சுருள் அரசன் யோயாக்கீமால் எரிக்கப்பட்டது. 29 எரேமியா, யூதா அரசன் யோயாக்கீமிடம் இவற்றையும் சொல், கர்த்தர் சொல்கிறது இதுதான்: ‘யோயாக்கீம், அப்புத்தகச்சுருளை எரித்தாய். நீ, “பாபிலோன் அரசன் உறுதியாக வந்து இந்நாட்டை அழிப்பான் என்று எரேமியா ஏன் எழுதினான்? பாபிலோன் அரசன் இத்தேசத்திலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் அழிப்பான் என்று ஏன் அவன் சொல்கிறான்?” என்று சொன்னாய். 30 எனவே, யூதாவின் அரசனான யோயாக்கீம் பற்றி கர்த்தர் சொன்னது இதுதான். யோயாக்கீமின் சந்ததியார் தாவீதின் சிங்காசனத்தில் உட்காரமாட்டார்கள். யோயாக்கீம் மரிக்கும்போது, அவன் அரசனுக்குரிய அடக்க ஆராதனையைப் பெறமாட்டான். ஆனால் அவனது உடல் தரையில் வீசி எறியப்படும். அவனது உடல் பகலின் வெப்பத்திலும் இரவில் குளிரிலும் கிடக்கும்படி விடப்படும். 31 கர்த்தராகிய நான், யோயாக்கீமையும் அவனது பிள்ளைகளையும் தண்டிப்பேன். அவனது அதிகாரிகளையும் நான் தண்டிப்பேன். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால் அவர்கள் துன்மார்க்கர்கள். பயங்கரமான பேரழிவு அவர்களுக்குக் கொண்டுவருவதாக நான் வாக்குறுதி செய்திருக்கிறேன். எருசலேமில் வாழ்கிற ஜனங்களுக்கும் யூதாவில் வாழ்கிற ஜனங்களுக்கும் வரும். நான் வாக்குறுதி அளித்தபடி அவர்களுக்கு அனைத்து தீயவற்றையும் கொண்டு வருவேன். ஏனென்றால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்கவில்லை.’”

32 பிறகு எரேமியா இன்னொரு புத்தகச்சுருளை எடுத்தான். அவன் அதனை எழுத்தாளன் நேரியாவின் மகனான பாருக்கிடம் கொடுத்தான். எரேமியா சொன்னபடி, பாருக் புத்தகச்சுருளில் எழுதினான். அதில் அரசன் யோயாக்கீமால் நெருப்பில் எரிக்கப்பட்ட அதே செய்திகளை எழுதினான். அச்செய்திகளைப் போன்ற பல்வேறு வார்த்தைகளும் இரண்டாவது புத்தகச்சுருளில் சேர்க்கப்பட்டன.

எபிரேயர் 2

நமது இரட்சிப்பானது சட்டங்களைவிடப் பெரியது

ஆகையால், நமக்குச் சொல்லித்தரப்பட்ட விஷயங்களைப் பின்பற்றுவதில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் உண்மை வழியில் இருந்து விலகாமல் இருப்போம். தேவ தூதர்கள் மூலமாக தேவனால் சொல்லப்பட்ட அப்போதனைக்கு எதிராக யூதர்கள் செயல்பட்டபோதும், அதற்கு கீழ்ப்படியாமல் போனபோதும், ஒவ்வொரு முறையும் அதற்காக தண்டிக்கப்பட்டனர். நமக்கு அளிக்கப்பட்ட இரட்சிப்பு மிக உயர்ந்தது. எனவே நாம் இந்த இரட்சிப்பை முக்கியமானதாகக் கருதாமல் வாழும் பட்சத்தில் நாமும் தண்டிக்கப்படுவோம். இந்த இரட்சிப்பு கர்த்தராலேயே முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. இந்த இரட்சிப்பு உண்மையானது என்பதை அவரிடத்தில் கேட்டவர்கள் நிரூபித்துள்ளனர். அதிசயங்கள், பெரிய அடையாளங்கள், பலவகையான அற்புதங்கள் மூலம் தேவனும் கூட அதை நிரூபித்துள்ளார். பரிசுத்த ஆவியானவரிடமிருந்து மக்களுக்கு வரங்களைக் கொடுப்பதன் மூலமும் நிரூபித்துள்ளார். அவர் விரும்பிய விதத்திலேயே அந்த வரங்களை அவர் கொடுத்தார்.

மனிதர்களை இரட்சிக்க மனிதர்களைப் போலானார் கிறிஸ்து

வரப்போகிற புதிய உலகத்தை ஆள்பவர்களாக தேவன் தேவதூதர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாம் பேசிக்கொண்டிருக்கிற உலகம் அதுதான். சில இடத்தில்

“தேவனே! நீர் ஏன் மனிதரைப் பற்றி அக்கறை கொள்கிறீர்?
    மனிதகுமாரனைப் பற்றியும்
ஏன் அக்கறை கொள்கிறீர்?
    அவர் அவ்வளவு முக்கியமானவரா?
கொஞ்ச நேரத்திற்கு தேவ தூதர்களைவிடஅவரைச் சிறியவர் ஆக்கிவிட்டீர்.
    அவரை மகிமையாலும் கனத்தாலும் முடிசூட்டினீர்.
நீர் எல்லாவற்றையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தீர்” (A)

என்று எழுதப்பட்டுள்ளது.

இவ்வாறு அனைத்தையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் தேவன் கொண்டு வந்துவிட்டதால் அவருக்குக் கட்டுப்படாதது எதுவுமில்லை எனலாம். ஆனால் அவர் அனைத்தையும் ஆள்வதை நாம் இன்னும் பார்க்கவில்லை. சிறிது காலத்திற்கு இயேசு தேவதூதர்களுக்கும் தாழ்ந்தவராக்கப்பட்டிருந்தார். ஆனால் இப்போது துன்பப்பட்டு மரித்ததால் மகிமையாலும், கனத்தாலும் முடிசூடிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். தேவனுடைய கிருபையினால் ஒவ்வொரு மனிதனுக்காகவும் இயேசு மரித்தார்.

10 தேவனே அனைத்தையும் படைத்தவர். அனைத்தும் அவரது மகிமைக்காகவே உள்ளன. தன் மகிமையைப் பகிர்ந்துகொள்ள ஏராளமான மக்களை அவர் விரும்பினார். எனவே, தமக்குத் தேவையானவற்றை அவர் செய்தார். மக்களை இரட்சிப்புக்கு வழி நடத்திச் செல்ல பூரணமானவராக தேவன் இயேசுவை ஏற்படுத்தினார். இயேசு தன் துன்பத்தால் ஒரு பூரண இரட்சகரானார்.

11 மக்களைப் பரிசுத்தமாக்குகிறவரும் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். எனவே அவர்களைத் தம் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் அழைக்க இயேசு வெட்கம் கொள்ளவில்லை.

12 “தேவனே உம்மைப்பற்றி நான் என் சகோதர சகோதரிகளிடம் கூறுவேன்.
    உம்முடைய மக்கள் கூட்டத்தின் நடுவில் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்” (B)

என்று அவர் கூறுகிறார்.

13 “தேவன் மீது என் நம்பிக்கையை வைப்பேன்” [a] (C)

என்றும் அவர் சொல்கிறார்.

“தேவன் எனக்களித்த பிள்ளைகளோடு நான் இங்கே இருக்கிறேன்” என்று அவர் சொல்கிறார். (D)

14 மாம்சீகமான உடலைக்கொண்ட மக்களே அந்தப் பிள்ளைகள். ஆகவே இயேசுவும், அவர்களைப் போன்றே மாறி அவர்களைப் போன்றே அனுபவத்தையும் பெற்றார். மரண அதிகாரத்தைத் தன்னோடு வைத்திருக்கிற பிசாசை தனது மரணத்தின் மூலம் அழிக்கும்பொருட்டு இயேசு இப்படிச் செய்தார். 15 அவர்களை விடுதலை செய்யும் பொருட்டே இயேசு தம் பிள்ளைகளைப் போலாகி மரித்தார். மரண பயத்தின் காரணமாக தம் வாழ்க்கை முழுக்க அவர்கள் அடிமையாக இருந்தார்கள். 16 இயேசு தேவதூதர்களுக்கு உதவி செய்ய வரவில்லை என்பது வெளிப்படை. அவர் ஆபிரகாமின் வழிவந்த மக்களுக்கே உதவ வந்தார். 17 இதனால் இயேசு, எல்லா வகையிலும் அவர்களுக்கு சகோதரரைப் போல் இருப்பது அவருக்கு முக்கியமாக இருந்தது. இவ்வழியில் தேவனுக்கான சேவையில் அவர்களுடைய இரக்கமும் நம்பிக்கையும் உள்ள பெரிய போதகராக இருக்கவும், மக்களின் பாவங்களுக்கு மன்னிப்பை வழங்கவும் அவரால் முடிந்தது. 18 இப்போது சோதனைகளை எதிர்கொள்கிற மக்களுக்கு இயேசுவால் உதவி செய்ய முடியும். இயேசுவும் துன்பங்களுக்கு உள்ளாகி சோதனைகளுக்கு ஆட்பட்டவர் என்பதால், அவரால் உதவி செய்ய முடியும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center