Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எசேக்கியேல் 22-23

எசேக்கியேல் எருசலேமிற்கு எதிராகப் பேசுகிறான்

22 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ நியாயம் தீர்ப்பாயா? கொலைக்காரர்களின் நகரத்தை (எருசலேம்) நியாயம்தீர்ப்பாயா? நீ அவளிடம் அவள் செய்த அருவருப்புகளை எல்லாம் சொல்வாயா? நீ கூறவேண்டும், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இந்நகரம் கொலைக்காரர்களால் நிறைந்திருக்கிறது. எனவே அவளது தண்டனைக் காலம் வந்திருக்கிறது. அவள் தனக்குள் அசுத்த விக்கிரகங்களைச் செய்தாள். அவை அவளை தீட்டுப்படுத்தின.

“‘எருசலேம் ஜனங்களே, நீங்கள் பல ஜனங்களைக் கொன்றீர்கள், நீங்கள் அசுத்த விக்கிரகங்களைச் செய்தீர்கள். நீங்கள் குற்றவாளிகள், தண்டனைக் காலம் வந்திருக்கிறது. உங்கள் முடிவு வந்திருக்கிறது. மற்ற நாடுகள் உங்களைக் கேலிசெய்கின்றன. அந்நாடுகள் உங்களைப் பார்த்துச் சிரிக்கின்றன. தொலைவிலும் அருகிலும் உள்ள ஜனங்கள் உங்களைக் கேலிசெய்கின்றனர். நீங்கள் உங்கள் பெயர்களை அழித்தீர்கள். நீங்கள் உரத்த சிரிப்பைக் கேட்க முடியும்.

“‘பாருங்கள்! எருசலேமில் எல்லா ஆள்வோர்களும் தம்மைப் பலப்படுத்தினர். எனவே, அவர்கள் மற்ற ஜனங்களைக் கொல்லமுடியும். எருசலேமில் உள்ள ஜனங்கள் தம் பெற்றோரை மதிப்பதில்லை. அந்நகரத்தில் அவர்கள் அயல் நாட்டினரைத் துன்புறுத்தினார்கள். அந்த இடத்தில் அவர்கள் அநாதைகளையும் விதவைகளையும் ஏமாற்றினார்கள். நீங்கள் என் பரிசுத்தமான பொருட்களை வெறுக்கிறீர்கள். எனது சிறப்பிற்குரிய ஓய்வு நாட்களை நீங்கள் முக்கியமற்றவையாகக் கருதினீர்கள். எருசலேமில் உள்ள ஜனங்கள் மற்ற ஜனங்களைப்பற்றிப் பொய் சொல்கிறார்கள். அவர்கள் அப்பாவி ஜனங்களைக் கொல்வதற்காக இவ்வாறு செய்கின்றனர். ஜனங்கள் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள மலைகளுக்குப் போகிறார்கள். பிறகு அவர்களின் ஐக்கிய உணவை உண்ண எருசலேமிற்கு வருகிறார்கள்.

“‘எருசலேமில், ஜனங்கள் பல பாலின உறவு பாவங்களைச் செய்கின்றனர். 10 எருசலேமில் ஜனங்கள் தம் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொள்கின்றனர். எருசலேமில் ஆண்கள் பெண்களின் மாதவிலக்கு நாட்களிலும் பலவந்தமாக பாலின உறவுகொள்கின்றனர். 11 ஒருவன் அருவருக்கத்தக்க இப்பாவத்தை தன் அயலானின் மனைவியோடேயே செய்கிறான். இன்னொருவன் தன் சொந்த மருமகளிடமே பாலின உறவுகொண்டு அவளைத் தீட்டுப்படுத்துகிறான். இன்னொருவன் தன் தந்தைக்குப் பிறந்த மகளை தன் சொந்த சகோதரியைக் கற்பழிக்கிறான். 12 எருசலேமில், நீங்கள் ஜனங்களைக் கொல்வதற்குப் பணம் பெறுகிறீர்கள். நீங்கள் கடன் கொடுத்து அவற்றுக்கு வட்டி வசூலிக்கிறீர்கள். நீங்கள் சிறிது பணம் பெறுவதற்காக உங்கள் நண்பர்களை ஏமாற்றுகிறீர்கள். நீங்கள் என்னை மறந்திருக்கிறீர்கள்.’ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

13 தேவன் சொன்னார்: “‘இப்போது பார்! நான் எனது கையை நீட்டி உன்னைத் தடுக்கிறேன். நீ ஜனங்களை ஏமாற்றியதற்கும் கொன்றதற்கும் நான் உன்னைத் தண்டிப்பேன். 14 பிறகு தைரியமாக இருப்பாயா? நான் உன்னைத் தண்டிக்க வரும் காலத்தில் நீ பலமுடையவனாக இருப்பாயா? இல்லை! நானே கர்த்தர், நான் பேசியிருக்கிறேன்! நான் சொன்னவற்றைச் செய்வேன். 15 நான் உங்களைப் பலநாடுகளில் சிதறடிப்பேன். நீங்கள் பலநாடுகளுக்குப் போகும்படி நான் உங்களைப் பலவந்தப்படுத்துவேன். இந்நகரிலுள்ள தீட்டானவைகளை நான் முழுவதுமாக அழிப்பேன். 16 ஆனால் எருசலேமே, நீ தீட்டாவாய். இவை எல்லாம் நிகழ்வதை மற்ற நாடுகள் எல்லாம் பார்க்கும். பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.’”

இஸ்ரவேல் பயனற்ற பொருள் போலாகிறது

17 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 18 “மனுபுத்திரனே, பித்தளை, தகரம், இரும்பு, ஈயம் ஆகியவற்றை வெள்ளியோடு ஒப்பிடும்போது அவை பயன் குறைந்தவை. வெள்ளியைச் சுத்தப்படுத்த நெருப்பிலே போடுவார்கள். வெள்ளி உருகிய பின் அதிலுள்ள அசுத்தத்தை வேலைக்காரர்கள் நீக்குவார்கள். இஸ்ரவேல் நாடு அந்த உதவாத மீதியான அழுக்கைப் போலாயிற்று. 19 எனவே எனது ஆண்டவரும் கர்த்தருமானவர் இவற்றைக் கூறுகிறார்: ‘நீங்கள் எல்லோரும் பயனற்றவர்களாவீர்கள். நான் உங்களை எருசலேமிற்குள் கூட்டிச் சேர்ப்பேன். 20 வேலைக்காரர்கள் வெள்ளி, பித்தளை, இரும்பு, ஈயம் போன்றவற்றை நெருப்பிலே போடுவார்கள். அது வெப்பம் அடைய காற்றை ஊதுவார்கள். பிறகு அந்த உலோகங்கள் உருக ஆரம்பிக்கும். அதுபோலவே, நான் உங்களை என் நெருப்பில்போட்டு உருகவைப்பேன். அந்நெருப்புதான் என் கோபம். 21 நான் உன்னை அந்நெருப்பில் போடுவேன். என் கோபத்தீயில் காற்று ஊதுவேன். நீ உருகத் தொடங்குவாய். 22 வெள்ளி நெருப்பில் உருகும். வேலைக்காரர்கள் வெள்ளியை மட்டும் தனியே ஊற்றி அதனைக் காப்பாற்றுவார்கள். அது போலவே நகரில் நீ உருகுவாய். பிறகு நானே கர்த்தர் என்பதை அறிவாய். அதோடு என் கோபத்தை உனக்கு எதிராக ஊற்றியதையும் நீ அறிவாய்.’”

எசேக்கியேல் எருசலேமிற்கு எதிராகப் பேசியது

23 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 24 “மனுபுத்திரனே, இஸ்ரவேலிடம் பேசு. அவள் பரிசுத்தமாக இல்லை என்பதைக் கூறு. அந்நாட்டின் மீது நான் கோபமாக இருக்கிறேன். எனவே அந்நாடு அதன் மழையைப் பெறவில்லை. 25 எருசலேமில் உள்ள தீர்க்கதரிசிகள் பாவத் திட்டங்களை இடுகிறார்கள். அவர்கள் சிங்கத்தைப் போன்றவர்கள். அது தான் பிடித்த விலங்கைத் தின்னத் தொடங்கும்போது கெர்ச்சிக்கும். அத்தீர்க்கதரிசிகள் பலரது வாழ்வை அழித்திருக்கின்றனர். அவர்கள் பல விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்திருக்கின்றனர். எருசலேமில் பல பெண்கள் விதவையாவதற்குக் காரணமாக இருந்திருக்கின்றனர்.

26 “ஆசாரியர்கள் உண்மையில் எனது போதனைகளை சிதைத்துவிட்டனர். எனது பரிசுத்தமானவற்றை அவர்கள் சரியாக வைத்துக்கொள்ளவில்லை. அவற்றை அவர்கள் முக்கியமானதாகக் காண்பிப்பதில்லை. பரிசுத்தமானவற்றை பரிசுத்தமற்றவைபோன்று நடத்துகிறார்கள். அவர்கள் சுத்தமானவற்றைச் சுத்தமற்றவற்றைப்போல் நடத்துகிறார்கள். அவர்கள் ஜனங்களுக்கு இதைப்பற்றி கற்றுத் தரவில்லை. எனது சிறப்புக்குரிய ஓய்வு நாட்களுக்கு மதிப்பு மறுக்கிறார்கள். அவர்கள் என்னை முக்கியமற்றவராக நடத்தினார்கள்.

27 “எருசலேமில் தலைவர்கள் எல்லாம் தான் பிடித்த இரையைத் தின்கிற ஓநாய்களைப் போன்றவர்கள். அத்தலைவர்கள் செல்வம் பெறுவதற்காக ஜனங்களைப் பிடித்துக் கொல்கின்றனர்.

28 “தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரிப்பதில்லை. அவர்கள் உண்மையை மூடினார்கள். அவர்கள் சுவர் கட்டத்தெரியாத வேலைக்காரர்களைப் போன்றவர்கள். அவர்கள் துவாரங்களில் சாந்தை மட்டும் பூசுகிறவர்கள். அவர்கள் பொய்களை மட்டும் பேசுகிறார்கள். அவர்கள் எதிர்காலத்தை அறிந்துகொள்ள மந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்’ என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பொய்களை மட்டும் சொல்கிறார்கள். கர்த்தர் அவர்களோடு பேசவில்லை!

29 “பொது ஜனங்கள் ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் ஏமாற்றுகிறார்கள்: ஒருவரை ஒருவர் திருடுகின்றனர். அவர்கள் ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் பிச்சைக்காரர்களையும் தங்கள் உபயோகத்திற்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் அந்நிய நாட்டவரை ஏமாற்றுகின்றனர், அவர்களுக்கு எதிராக எந்த நியாயமும் இல்லை என்பதுபோன்று நடந்து கொள்கின்றனர்!

30 “நான் ஜனங்களிடம் அவர்களது வாழ்க்கையை மாற்றும்படியும் நாட்டைக் காப்பாற்றும்படியும் கேட்டேன். நான் ஜனங்களிடம் சுவரை இணைக்கும்படி கேட்டேன். அவர்கள் திறப்புகளில் நின்று பகைவருடன் சண்டையிட்டு நகரைக் காப்பாற்றவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் எவரும் உதவிக்கு வரவில்லை! 31 எனவே, நான் என் கோபத்தைக் காட்டுவேன். நான் அவர்களை முழுமையாக அழிப்பேன். அவர்கள் செய்திருக்கிற தீயவைகளுக்காக நான் அவர்களைத் தண்டிப்பேன். இதெல்லாம் அவர்களுடைய தவறு!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

23 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, சமாரியா மற்றும் எருசலேம் பற்றிய இந்தக் கதையைக் கேள். இரண்டு சகோதரிகள் இருந்தனர். அவர்கள் ஒரே தாயின் மகள்கள். அவர்கள் இளமையாக இருக்கும்போதே எகிப்தில் வேசிகள் ஆனார்கள், எகிப்தில் அவர்கள் முதலில் வேசித்தனம் செய்தனர். ஆண்கள் தம் மார்புகளைத் தொடவும் வருடவும் அனுமதித்தனர். மூத்தவளின் பெயர் அகோலாள்; அவள் தங்கையின் பெயர் அகோலிபாள். அந்தச் சகோதரிகள் எனது மனைவிகள் ஆனார்கள். எங்களுக்குப் பிள்ளைகள் இருந்தனர். (அகோலாள் உண்மையில் சமாரியா. அகோலிபாள் உண்மையில் எருசலேம்).

“பிறகு அகோலாள் எனக்கு நம்பிக்கையற்றவள் ஆனாள். அவள் வேசியைப்போன்று வாழத் தொடங்கினாள். அவள் தனது நேசர்களை விரும்பத் தொடங்கினாள். அவள் அசீரிய படைவீரர்களை அவர்களது நீல வண்ணச் சீருடையில் பார்த்தாள். அவர்கள் குதிரைமேல் சவாரி செய்கிற விரும்பத்தக்க இளம் வீரர்கள். அவர்கள் தலைவர்களாகவும் அதிகாரிகளாகவும் இருந்தனர். அகோலாள் அவர்கள் அனைவருக்கும் தன்னையே கொடுத்தாள். அவர்கள் அனைவரும் அசீரியப் படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள். அவள் அவர்கள் அனைவரையும் விரும்பினாள். அவள் அவர்களது தீட்டான சிலைகளோடு சேர்ந்து தீட்டானாள். இதோடுகூட, அவள் எகிப்து மீதுகொண்ட நேசம் மோகத்தையும் நிறுத்தவில்லை. அவள் இளமையாக இருந்தபோது எகிப்து அவளோடு நேசம் செய்தது. அவளது இளம் மார்பகங்களைத் தொட்ட முதல் நேசன் எகிப்துதான். எகிப்து தனது உண்மையற்ற நேசத்தை அவள் மீது ஊற்றியது. எனவே நான் அவளை நேசர்கள் வைத்துக்கொள்ளும்படி விட்டுவிட்டேன். அவள் அசீரியாவை விரும்பினாள். எனவே, நான் அவளை அவர்களுக்குக் கொடுத்தேன். 10 அவர்கள் அவளைக் கற்பழித்தனர். அவளது குழந்தைகளை எடுத்தனர். அவர்கள் அவளைக் கடுமையாகத் தண்டித்தனர். அவளை வாளால் கொன்றனர். பெண்கள் இன்றும் அவளைப்பற்றிப் பேசுகிறார்கள்.

11 “அவளது இளைய சகோதரி அகோலிபாள் இவை எல்லாம் நடப்பதைப் பார்த்தாள். ஆனாலும் அவள் தன் அக்காவைவிட மிகுதியாகப் பாவங்களைச் செய்தாள்! அவள் அகோலாளைவிட மிகவும் நம்பிக்கையற்றவள் ஆனாள், 12 அவள் அசீரியத் தலைவர்களையும், அதிகாரிகளையும் விரும்பினாள். அவள் நீலவண்ணச் சீருடையில் குதிரையில் சவாரி செய்துவரும் இளம் வீரர்களை விரும்பினாள். அவர்கள் அனைவரும் விரும்பத்தக்க இளம் ஆண்கள். 13 அவர்கள் இருவரும் அதே தவறால் தம் வாழ்வை தீட்டுப்படுத்திக்கொண்டதை நான் பார்த்தேன்.

14 “அகோலிபாள் தன் சோரத்தைத் தொடர்ந்தாள். பாபிலோனில், சுவரில் ஆண்கள் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தாள். அவை சிவப்புச் சீருடை அணிந்த கல்தேயரின் உருவங்கள். 15 அவர்கள் தம் இடுப்பைச்சுற்றி கச்சை அணிந்திருந்தனர். தலையில் நீண்ட தலைப் பாகை அணிந்தனர். அவர்கள் அனைவரும் தேரோட்டிகளைப்போன்று காட்சி தந்தனர். அவர்கள் அனைவரும் பாபிலோனில் பிறந்தவர்களின் சாயலில் இருந்தனர். 16 அகோலிபாள் அவர்களை விரும்பினாள். அதனால் அவள் தூதர்களை கல்தேயாவுக்கு அவர்களிடம் அனுப்பினாள். 17 எனவே பாபிலோனியர்கள் அவளது நேசம் படுக்கைக்கு வந்து அவளோடு பாலின உறவுகொண்டனர். அவர்கள் அவளைப் பயன்படுத்தி மிகவும் தீட்டுப்படுத்தியதினால் அவள் அவர்கள் மேல் வெறுப்படைந்தாள்!

18 “அகோலிபாள் இவ்வாறு என்னிடம் விசுவாசமற்றவளாக இருந்ததை யாவரும் காணும்படிச் செய்தாள். பலர் அவளது நிர்வாணத்தை அனுபவிக்கும்படி அனுமதித்தாள். நான் அவளது அக்காளோடு வெறுப்படைந்ததுபோல அவளோடும் வெறுப்படைந்தேன். 19 மீண்டும் மீண்டும் அகோலிபாள் எனக்குத் துரோகம் செய்தாள். பிறகு அவள் தான் இளம்பெண்ணாக எகிப்தில் இருந்தபொழுது நடந்த வேசித்தனத்தை நினைவுபடுத்திக்கொண்டாள். 20 கழுதைக் குறிகள்போன்ற தன் நேசர்களின் ஆண் குறிகள் மீதும், குதிரைகளினுடையதைப்போன்ற தன் நேசர்களின் விந்துப் பெருக்கின் மீதும் தனக்கிருந்த ஆசையை அவள் நினைத்துக்கொண்டாள்.

21 “அகோலிபாளே, நீ உன் இளமையைப்பற்றி கனவு கண்டுகொண்டிருக்கிறாய். அக்காலத்தில் உன் நேசர்கள் உன் மார்பகங்களைத் தொட்டு வருடினார்கள். 22 எனவே, அகோலிபாளே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘நீ உன் நேசர்கள்மேல் வெறுப்படைந்தாய், ஆனால் நான் இங்கு உன் நேசர்களைக் கொண்டுவருவேன். அவர்கள் உன்னை முற்றுகையிடுவார்கள். 23 நான் பாபிலோனில் உள்ள அனைத்து ஆண்களையும் குறிப்பாகக் கல்தேயர்களையும் அழைப்பேன். நான் பேகோடு, சோவா, கோவா ஆகிய தேசங்களில் உள்ளவர்களையும் அழைப்பேன். நான் அசீரியாவில் உள்ள ஆண்களையும் அழைப்பேன். நான் அனைத்துத் தலைவர்களையும் அதிகாரிகளையும் அழைப்பேன். அவர்கள் எல்லோரும் குதிரை மீது சவாரிசெய்யும் விரும்பத்தக்க இளம் ஆண்கள், அதிகாரிகள், சேனாதிபதிகள், மேலும் முக்கிய நபர்களாகவும் இருந்தனர். 24 அந்த ஆண்களின் கூட்டம் உன்னிடம் வரும். அவர்கள் தமது இரதங்களிலும் குதிரைகளிலும் ஏறி வருவார்கள். அவர்கள் எண்ணிக்கையில் மிகுதியாக இருப்பார்கள். அவர்கள் தமது ஈட்டிகள், கேடயங்கள், தலைக்கவசங்கள் ஆகியவற்றை அணிந்திருப்பார்கள். அவர்கள் உன்னைச் சுற்றி நிற்பார்கள். நான் அவர்களிடம் நீ எனக்குச் செய்திருந்ததைச் சொல்வேன். அவர்கள் தம் சொந்த முறையிலேயே உன்னைத் தண்டிப்பார்கள். 25 நான் எவ்வளவு பொறாமையுள்ளவன் என்பதை உனக்குக் காட்டுவேன். அவர்கள் மிகவும் கோபம்கொண்டு உன்னைத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உனது மூக்கையும் காதுகளையும் வெட்டுவார்கள். அவர்கள் வாளைப் பயன்படுத்தி உன்னைக் கொல்லுவார்கள். பிறகு உனது பிள்ளைகளை எடுத்துக்கொள்வார்கள். பிறகு விடுபட்டுள்ள உனக்குரியவற்றை எரிப்பார்கள். 26 அவர்கள் உனக்குரிய மெல்லிய ஆடைகளையும் நகைகளையும் எடுத்துக்கொள்வார்கள். 27 நான் உனது எகிப்தோடுள்ள வேசித்தனம் பற்றிய கனவை நிறுத்துவேன். அவற்றை நீ மீண்டும் தேடமாட்டாய். அவர்களை மீண்டும் நீ நினைக்கமாட்டாய்!’”

28 எனது கார்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நீ வெறுக்கிற ஆண்களிடம் நான் உன்னைக் கொடுக்கிறேன். நீ அருவருப்படைந்த ஆண்களிடம் நான் உன்னைக் கொடுக்கிறேன். 29 அவர்கள் உன்னை எவ்வளவு தூரம் வெறுக்கிறார்கள் என்பதைக் காட்டுவார்கள். அவர்கள் உன் உழைப்பின் பலனை எல்லாம் எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் உன்னை வெறுமையாகவும் நிர்வாணமாகவும் விட்டுவிடுவார்கள். ஜனங்கள் உன் பாவங்களைத் தெளிவாகக் காண்பார்கள். அவர்கள், நீ வேசியைப்போன்று நடந்துகொண்டதையும் கெட்ட கனவுகள் கண்டதையும் காண்பார்கள். 30 நீ என்னை விட்டுவிட்டு மற்ற நாடுகளைத் துரத்திக்கொண்டு போனபோது அப்பாவங்களைச் செய்தாய். அவர்களது அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொள்ளத் தொடங்கும்போது அப்பாவங்களைச் செய்தாய். அவற்றினால் நீ உன்னையே தீட்டுப்படுத்திக்கொண்டாய். 31 நீ உன் அக்காவைப் பின்பற்றி அவளைப்போன்று வாழ்ந்தாய். நீயே அவளுடைய விஷக் கோப்பையை எடுத்து உனது கைகளில் பிடித்துக்கொண்டாய். உனது தண்டனைக்கு நீயே காரணம் ஆனாய்.” 32 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“நீ உன் சகோதரியின் விஷக் கோப்பையை குடிப்பாய்.
    இது உயரமும் அகலமும்கொண்ட விஷக் கோப்பை.
அக்கோப்பையில் மிகுதியான விஷம் (தண்டனை) உள்ளது.
    ஜனங்கள் உன்னைப் பார்த்துச் சிரித்துக் கேலிசெய்வார்கள்.
33 நீ ஒரு குடிகாரனைப்போன்று தடுமாறுவாய்.
    நீ மிகவும் சஞ்சலம் அடைவாய்.
அது அழிவும் பாழ்க்கடிப்பும் உள்ள கோப்பை.
    இது உன் சகோதரி குடித்த கோப்பையைப் (தண்டனை) போன்றது.
34 அக்கோப்பையிலுள்ள விஷத்தை நீ குடிப்பாய்.
    அதிலுள்ள கடைசி சொட்டையும் நீ குடிப்பாய்.
நீ அந்தக் கோப்பையை எறிந்து துண்டு துண்டாக்குவாய்.
    நீ வேதனையினால் உன் மார்பகங்களைக் கிழிப்பாய்.
இவை நிகழும், ஏனென்றால், நானே ஆண்டவரும் கர்த்தருமாய் இருக்கிறேன்.
    நான் இவற்றைக் கூறினேன்.

35 “எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: ‘எருசலேமே, என்னை மறந்து விட்டாய். நீ என்னை தூர எறிந்துவிட்டு என்னை விட்டுப் போய்விட்டாய். எனவே இப்போது என்னை விட்டு விலகியதற்காக நீ துன்பப்படவேண்டும். வேசியைப்போன்று வாழ்கிறாய். உனது கெட்ட கனவுகளுக்காகவும் உன் வேசித்தனங்களுக்காகவும் நீ துன்பப்பட வேண்டும்.’”

அகோலாள், அகோலிபாள் ஆகியோருக்கு எதிரான நியாயத்தீர்ப்பு

36 எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, அகோலாவையும் அகோலிபாளையும் நியாயம்தீர்க்கப்போகிறாயா? அவர்கள் செய்திருக்கிற அருவருப்பான செயல்களைப்பற்றி அவர்களிடம் கூறு, 37 அவர்கள் விபச்சாரமாகிய பாவத்தைச் செய்தனர். அவர்கள் கொலைக் குற்றவாளிகள். அவர்கள் வேசிகளைப்போன்று நடந்துகொண்டனர். அவர்கள் அசுத்த விக்கிரகங்களுக்காக என்னை விட்டுவிட்டனர். அவர்கள் என் மூலம் குழந்தைகளைப் பெற்றனர். ஆனால் அவர்களைக் கட்டாயப்படுத்தி தீக்குள்ளாக்கி அந்த அசுத்த விக்கிரகங்களுக்கு போஜனப்பலியாகக் கொடுத்தனர். 38 மேலும் அவர்கள் என்னுடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி என் சிறப்பான ஓய்வு நாட்களை முக்கியமற்றதாக நடத்தினார்கள். 39 அவர்கள் தம் விக்கிரகங்களுக்காகக் குழந்தைகளைக் கொன்றார்கள். அவர்கள் எனது பரிசுத்தமான இடத்திற்குச் சென்று அவற்றையும் அருவருப்பானதாக ஆக்கினார்கள்! அவர்கள் இதனை என் ஆலயத்திற்குள் செய்தார்கள்!

40 “அவர்கள் தொலைதூர நாடுகளிலிருந்து ஆண்களை அழைக்க அனுப்பியிருந்தனர். நீ இம்மனிதர்களிடம் தூதுவனை அனுப்பினாய். அம்மனிதர்கள் உன்னைப் பார்க்க வந்தனர். அவர்களுக்காக நீ குளித்தாய். கண்ணுக்கு மை தீட்டினாய். நகைகளை அணிந்துகொண்டாய். 41 நீ அழகான படுக்கையில் அமர்ந்து அதனருகில் மேசையைப்போட்டாய். எனது வாசனைப்பொருட்களையும் எனது எண்ணெயையும் மேசைமேல் வைத்தாய்.

42 “எருசலேமில் உள்ள சத்தம் விருந்துண்ணும் ஒரு கும்பலின் இரைச்சலைப்போன்று கேட்டது. பல மனிதர்கள் விருந்துக்கு வந்தனர். அவர்கள் வனாந்தரத்திலிருந்து வந்ததுபோன்று ஏற்கெனவே குடித்திருந்தனர். அவர்கள் அப்பெண்களுக்கு கைவளைகளையும் கிரீடங்களையும் கொடுத்தனர். 43 பிறகு நான் விபச்சாரத்தால் களைத்துப் பழுதான ஒரு பெண்ணிடம் பேசினேன். நான் அவளிடம், ‘அவர்கள் உன்னோடும் நீ அவர்களோடும் தொடர்ந்து பாலின உறவு வைத்துக்கொள்வீர்களா?’ என்று கேட்டேன். 44 ஆனால் அவர்கள் வேசிகளிடம் போவதுபோன்று அவளோடு போய்க்கொண்டிருந்தார்கள். ஆம், அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த முறைகேடான பெண்களான அகோலாளிடமும் அகோலிபாளிடமும் போனார்கள்.

45 “ஆனால் நல்லவர்கள் அவர்களைக் குற்றவாளியாக நியாயந்தீர்ப்பார்கள். அவர்கள் அப்பெண்களை அவர்களது விபச்சாரம் மற்றும் கொலை பாவங்களுக்காக நியாயந்தீர்ப்பார்கள். ஏனென்றால், அவர்கள் அகோலாளிடமும் அகோலிபாளிடமும் விபச்சாரப் பாவம் செய்தனர். அவர்களால் கொல்லப்பட்டவர்களின் இரத்தம் அவர்களது கையில் இன்னும் இருக்கிறது.”

46 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்: “ஜனங்களை ஒன்று சேருங்கள். அந்த ஜனங்கள் அகோலாவையும் அகோலிபாளையும் தண்டிக்க அனுமதியுங்கள். அந்த ஜனங்கள் குழு இரண்டு பெண்களையும் தண்டித்துக் கேலி பேசும். 47 பிறகு அந்த ஜனங்கள் குழு அவர்கள் மீது கல்லை வீசிக் கொல்லும், பிறகு அவர்கள் தம் வாள்களால் அப்பெண்களைத் துண்டுகளாக்குவார்கள். அவர்கள் அப்பெண்களின் பிள்ளைகளையும் கொல்வார்கள். அவர்களின் வீடுகளையும் எரிப்பார்கள். 48 இப்படியாக, நான் இந்நாட்டில் உள்ள அவமானத்தைப் போக்குவேன். நீங்கள் செய்தது போன்ற அவமானகரமான செய்கைகளைச் செய்யவேண்டாம் என்று எல்லாப் பெண்களும் எச்சரிக்கப்படுவார்கள். 49 நீங்கள் செய்த முறைகேடான செயல்களுக்காக அவர்கள் உன்னைத் தண்டிப்பார்கள். நீங்கள் உங்கள் அசுத்த விக்கிரகங்களைத் தொழுதுகொண்டதற்காக தண்டிக்கப்படுவீர்கள். பிறகு நானே கர்த்தரும் ஆண்டவருமாயிருக்கிறேன் என்றும் நீங்கள் அறிவீர்கள்.”

1 பேதுரு 1

இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுருவிடமிருந்து, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய இடங்களெங்கும் அந்நியர்களாகச் சிதறி வாழ்ந்துகொண்டிருக்கிற தேவனுடைய மக்களுக்கு: பிதாவாகிய தேவன் நெடுங்காலத்துக்கு முன்பே செய்த திட்டப்படி தேவனுடைய மக்களாக இருக்க நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். ஆவியானவரின் சேவை வழியாக அவருக்கு நீங்கள் அர்ப்பணிக்கப்பட்டீர்கள். தேவனுக்குக் கீழ்ப்படியவும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்பட்டு பரிசுத்தமடையவும் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.

கிருபையையும், சமாதானத்தையும் தேவன் உங்களுக்கு மென்மேலும் வழங்குவாராக.

வாழும் நம்பிக்கை

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு மகிமை உண்டாவதாக. தேவன் தம் இரக்கத்தால் அழிவில்லாத ஒரு நம்பிக்கையை நாம் அடையும்பொருட்டு இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலம் நமக்குப் புது வாழ்வையளித்தார். இப்பொழுது தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு பரலோகத்தில் வைத்திருக்கின்ற ஆசீர்வாதங்களை நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கின்றோம். அந்த ஆசீர்வாதங்கள் அழிவற்றது; அழிக்கப்பட முடியாதது; அதன் அழகு மாறாதது.

இந்த ஆசீர்வாதங்கள் உங்களுக்கு உரியவை. இறுதி நேரத்தில் தம் வல்லமையை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிற இரட்சிப்புக்காக விசுவாசத்தின் மூலம் தேவனுடைய வல்லமையால் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள். இது உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தரும். சில சமயங்களில் பல்வேறு வகைப்பட்ட தொந்தரவுகள் உங்களுக்கு துயரத்தைத் தரலாம். ஏன் இந்தத் துன்பங்கள் நிகழ்கின்றன? உங்கள் விசுவாசம் பரிசுத்தமானது என்று நிரூபிப்பதற்கேயாகும். இந்த விசுவாசத்தின் பரிசுத்தம் பொன்னைக் காட்டிலும் சிறந்தது. பொன்னின் சுத்தத் தன்மை நெருப்பால் சோதித்தறியப்படுகிறது. ஆனால் பொன் அழிவுறும். இயேசு கிறிஸ்து வரும்போது, உங்கள் விசுவாசத்தின் பரிசுத்தமானது உங்களுக்கு கனத்தையும், மகிமையையும், புகழ்ச்சியையும் கொடுக்கும்.

நீங்கள் கிறிஸ்துவைப் பார்த்ததில்லை. அப்படியிருந்தும் அவரை நேசிக்கிறீர்கள். நீங்கள் இப்போது அவரைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் அவரை விசுவாசிக்கிறீர்கள். சொல்லமுடியாத சந்தோஷத்தால் உங்கள் மனம் நிரம்பும். அச்சந்தோஷம் மகிமை மிகுந்தது. உங்கள் விசுவாசம் ஒரு குறிக்கோளை உடையது. இறுதியில் உங்கள் ஆத்தும இரட்சிப்பாகிய நற்பலனைப் பெறுவீர்கள்.

10 உங்களுக்குக் காட்டப்பட வேண்டிய கிருபையைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் கவனமாக ஆராய்ந்து இந்த இரட்சிப்பைப் பற்றி அறிய முயன்றிருக்கிறார்கள். 11 இயேசு கிறிஸ்துவின் ஆவியானவர் அத்தீர்க்கதரிசிகளிடம் இருந்தார். கிறிஸ்துவுக்கு நேர இருக்கிற துன்பங்களைப் பற்றியும் அதைத் தொடர்ந்து வரப்போகும் மகிமையைப் பற்றியும் அந்த ஆவியானவர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். அந்த ஆவியானவர் எதைக் குறித்து பேசுகிறார் என்று அறிய தீர்க்கதரிசிகள் முயன்றார்கள். அச்சம்பவங்கள் நடக்கும் நேரம் மற்றும் சூழ்நிலை பற்றி அறிய தீர்க்கதரிசிகள் முயன்றார்கள்.

12 அவர்கள் செய்த பணி அவர்களுக்குரியதல்லவென்று அந்தத் தீர்க்கதரிசிகளுக்கு உணர்த்தப்பட்டது. தீர்க்கதரிசிகள் உங்களுக்காகப் பணியாற்றினார்கள். இவ்விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசியபொழுது அவர்கள் உங்களுக்கு சேவை செய்துகொண்டிருந்தனர். நற்செய்தியை உங்களுக்குப் போதித்த மனிதர்களே அச்செய்திகளையும் உங்களுக்குக் கூறியிருக்கிறார்கள். பரலோகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் உதவியால் அவர்கள் அதை உங்களுக்குக் கூறினார்கள். தேவ தூதர்களும் அறிந்துகொள்ள விரும்புகின்ற காரியங்கள் உங்களுக்கு அறிவிக்கப்பட்டன.

பரிசுத்த வாழ்க்கைக்கான அழைப்பு

13 எனவே உங்கள் மனங்களை சேவைக்கு ஆயத்தப்படுத்தி, தன்னடக்கத்தோடிருங்கள். இயேசு கிறிஸ்து தோன்றும்போது உங்களுக்கு வாய்க்கப் போகிற கிருபையின் பரிசின் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். 14 கடந்த காலத்தில் இந்தக் காரியங்களை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. எனவே நீங்கள் விரும்பிய தீயசெயல்களைச் செய்து வந்தீர்கள். ஆனால் இப்போது கீழ்ப்படிகிற தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்கள். எனவே ஏற்கெனவே நீங்கள் கொண்டிருந்த தீய ஆசைகளுக்கு ஏற்ப வாழ்வதை நிறுத்துங்கள். 15 உங்களை அழைத்த தேவன் பரிசுத்தமானவர். ஆதலால் நீங்களும் நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் பரிசுத்தமானவர்களாக இருங்கள். 16 வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “நான் பரிசுத்தராக இருப்பதால், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.”

17 தேவனிடம் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவரை பிதா என்று அழையுங்கள். ஒவ்வொரு மனிதனின் வேலையையும் சமமாக நோக்கி தேவன் பாரபட்சம் இன்றி நியாயம் வழங்குகிறார். எனவே நீங்கள் இவ்வுலகில் வாழும்போது தேவனிடம் பயத்தோடும், மரியாதையோடும் வாழ வேண்டும். 18 நீங்கள் கடந்த காலத்தில் தகுதியற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தீர்கள். உங்கள் முன்னோர்கள் மூலமாக அவ்வாழ்க்கை முறையை நீங்கள் அறிந்துகொண்டீர்கள். அப்படிப்பட்ட வாழ்விலிருந்து நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என அறிவீர்கள். இந்த இரட்சிப்பு அழியும் பொருட்களாகிய பொன், வெள்ளி போன்றவற்றால் அல்ல, 19 குற்றம் குறையில்லாத ஆட்டுக் குட்டியான இயேசு கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தினால் நிகழ்ந்ததாகும். 20 உலகம் உருவாக்கப்படும் முன்னே கிறிஸ்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் உங்கள் பயனுக்காக இந்தக் கடைசி நாட்களில் வெளிப்படுத்தப்பட்டார். 21 நீங்கள் கிறிஸ்துவின் மூலமாக தேவனை விசுவாசிக்கிறீர்கள். தேவன் கிறிஸ்துவை மரணத்தினின்று எழும்பி அவருக்கு மகிமையை அளித்தார். எனவே உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவனில் உள்ளன.

22 உண்மைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் உங்களை நீங்களே பரிசுத்தமுடையோராக ஆக்கிக்கொண்டீர்கள். இதன் மூலம் உங்கள் உண்மையான சகோதர அன்பைக் காட்டமுடியும். எனவே இப்பொழுது பரிசுத்தமான இதயத்தோடு ஒருவரையொருவர் ஆழமாக நேசியுங்கள். 23 நீங்கள் மறுபடியும் பிறந்திருப்பது அழியத்தக்க விதையில் இருந்து அல்ல, அழிவேயற்ற விதையின் மூலம் ஆகும். எப்போதும் தொடரும் தேவனுடைய அழிவில்லாத விதையாகிய வசனங்களினால் மீண்டும் பிறந்துள்ளீர்கள். 24 வேதவாக்கியங்கள்,

“எல்லா மனிதர்களும் புல்லைப் போன்றவர்கள்.
    புல்லின் மலரைப் போன்றே அவர்களின் மகிமையும் காணப்படும்.
புல் உலர்ந்து போகிறது.
    பூக்கள் உதிர்கின்றன.
25 ஆனால் கர்த்தரின் வார்த்தையோ என்றும் நிலைத்திருக்கிறது” (A)

என்று சொல்கிறது. இந்த வார்த்தையே உங்களுக்குச் சொல்லப்பட்டது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center