Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உன்னதப்பாட்டு 6-8

எருசலேம் பெண்கள் அவளிடம் பேசுகிறார்கள்

அழகான பெண்ணே
    உன் நேசர் எங்கே போனார்?
உன் நேசர் எந்த வழியாகப் போனார்?
    எங்களிடம் சொல். அவரைத் தேட உனக்கு உதவி செய்வோம்.

அவள் எருசலேம் பெண்களுக்கு பதிலளிக்கிறாள்

என் நேசர் கந்தவர்க்கப் பூக்களுக்காக தோட்டத்தில் மேய
    லீலி மலர்களைக் கொய்ய தன் தோட்டத்திற்குப் போனார்.
நான் அவருக்குரியவள். அவர் எனக்குரியவர்.
    அவர் லீலிகளை மேய்பவர்.

அவன் அவளிடம் பேசுகிறான்

என் அன்பே நீ திர்சாவைப்போன்று அழகானவள்.
    எருசலேமைப்போன்று இனிமையானவள்.
    நீ கம்பீரமான நகரங்களைப் போன்றவள்.
என்னைப் பாராதே உன் கண்கள் என்னை வென்றுவிட்டன.
    உன் கூந்தல் கீலேயாத் மலைச் சரிவில் நடனமாடும்
    வெள்ளாட்டு மந்தையைப் போல் அசைந்துகொண்டிருக்கிறது.
உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போலுள்ளன.
    அவை இரட்டைக் குட்டிகள் போட்டு,
    எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப் போலுள்ளது.
உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே வெட்டிவைக்கப்பட்ட
    மாதளம் பழங்களைப் போன்றுள்ளன.

அறுபது ராணிகள் இருக்கலாம்
    எண்பது மறுமனையாட்டிகள் இருக்கலாம்.
    எண்ண முடியாத அளவிற்கு இளம் பெண்கள் இருக்கலாம்.
ஆனால் எனக்காக ஒரே ஒரு பெண்ணே இருக்கிறாள்.
    எனது புறாவே நீயே எனது பரிபூரணமானவள்.
அவளே தன் தாய்க்கு மிகவும் பிரியமான மகள்.
    அவளே தன்னைப் பெற்றவளால் மிகவும் நேசிக்கப்படுபவள்.
இளம் பெண்கள் அவளைப் பார்த்து பாராட்டுகிறார்கள்.
    ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் பாராட்டுகிறார்கள்.

பெண்கள் அவளைப் பாராட்டுகிறார்கள்

10 யார் இந்த இளம் பெண்?
    விடியலின் வானம்போல் பிரகாசிக்கிறாள்.
நிலவைப்போல் அழகாக இருக்கிறாள்.
    சூரியனைப்போல் ஒளி வீசுகிறாள்.
வானத்தில் உள்ள படைகளைப்போல்
    கம்பீரமாக விளங்குகிறாள்.

அவள் பேசுகிறாள்

11 பள்ளத்தாக்குகளில் பழுத்த கனிகளையும்,
    திராட்சைத் தோட்டத்தில் தோன்றிய துளிர்களையும்
    மதளஞ்செடிகளால் மலர்ந்த பூக்களையும் காண,
    நான் வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.
12 நான் உணர்ந்துகொள்வதற்கு முன்பே,
    என் ஆத்துமா என்னை அரசர்களின் இரதங்களுக்குள் அமரச்செய்கிறது.

எருசலேம் பெண்கள் அவளை அழைக்கிறார்கள்

13 திரும்பிவா சூலமித்தியே திரும்பிவா,
    திரும்பி வா, திரும்பிவா அப்பொழுதுதான் உன்னைப் பார்க்கமுடியும்
சூலமித்தியை நீங்கள் ஏன் பார்க்கிறீர்கள்?
    அவள் மகானனம் நடனம் ஆடுகிறாள்.

அவன் அவளது அழகைப் புகழ்கிறான்

இளவரசியே! மிதியடியணிந்த உன் பாதங்கள் மிக அழகாயுள்ளன.
    உன் இடுப்பின் வளைவுகள் ஒரு தொழில் கலைஞனால்
    செய்யப்பட்ட நகை போன்றுள்ளது.
உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டமான கிண்ணம்போல உள்ளது.
    உன் வயிறானது லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக்குவியல் போன்றுள்ளது.
உன் இரு மார்பகங்களும்
    வெளிமானின் இரு குட்டிகள் போன்றுள்ளன.
உன் கழுத்து தந்தக் கோபுரம் போலுள்ளது.
உன் கண்கள்
    பத்ரபீம் வாயிலருகே உள்ள எஸ்போன் குளங்கள்போல உள்ளன.
உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கியுள்ள
    லீபனோனின் கோபுரம் போன்றுள்ளது.
உன் தலையானது கர்மேல் மலையைப் போன்றுள்ளது.
    உன் தலைமுடி பட்டு போன்றுள்ளது.
    உன் நீண்ட அசையும் கூந்தலானது அரசனையும் சிறைபிடிக்கவல்லது.
நீ மிகவும் அழகானவள்.
    நீ மனதிற்கு மகிழ்ச்சியைத் தருபவள்.
    நீ அன்பான, மகிழ்வளிக்கிற இளம் கன்னி.
நீ பனை மரத்தைப்போன்று உயரமானவள்.
    உன் மார்பகங்கள் அம்மரத்தில் உள்ள கனிகளைப் போன்றுள்ளன.
நான் இம்மரத்தில் ஏற விரும்புகிறேன்.
    இதன் கிளைகளைப் பற்றிக்கொள்வேன்.

இப்போது உன் மார்பகங்கள் திராட்சைக் குலைகளைப் போலவும்,
    உன் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப் பழங்கள் போலவும் இருப்பதாக.
உன் வாய்
    என் அன்பிற்குள் நேராக இறங்கும் தூங்குகிறவர்களின் உதடுகளிலும் இறங்கும் சிறந்த திராட்சைரசத்தைப் போன்றிருப்பதாக.

அவள் அவனோடு பேசுகிறாள்

10 நான் என் நேசருக்கு உரியவள்.
    அவருக்கு நான் தேவை.
11 என் நேசரே வாரும்
    வயல்வெளிகளுக்குப் போவோம்
    இரவில் கிராமங்களில் தங்குவோம்.
12 அதிகாலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம்.
    திராட்சைக் கொடிகள் பூப்பதைப் பார்ப்போம்.
மாதளஞ் செடிகள் பூத்ததையும் பார்ப்போம்.
    அங்கே என் நேசத்தை உமக்குத் தருவேன்.

13 தூதாயீம் பழத்தின் மணம் வீசும் எல்லா வகைப் பூக்களும்
    நம் வாசலருகில் உள்ளன.
ஆம் என் அன்பரே உமக்காக நான் பல மகிழ்ச்சியான பொருட்களை சேர்த்து வைத்திருக்கிறேன்.
    அவை பழையதும் புதியதுமாக அருமையாக உள்ளன.

நீர் என் தாயிடம் பால் குடித்த என் இளைய சகோதரனைப்போன்று
இருந்தால்
    நான் உம்மை வெளியில் சந்திக்கும்போது உம்மை முத்தமிட முடியும்.
    இதனைத் தவறு என்று எவரும் சொல்லமாட்டார்கள்.
நான் உம்மை என் தாயின் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்.
    என் தாய் எனக்குக் கற்பித்த அறைக்கும் அழைத்துச் செல்வேன்.
நான் உமக்கு மாதளம் பழரசத்தைக் குடிக்கக் கொடுப்பேன்.
    கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும் கொடுப்பேன்.

அவள் பெண்களிடம் பேசுகிறாள்

அவரது இடதுகை என் தலைக்குக்கீழ் இருக்கும்.
    அவரது வலதுகை என்னை அணைத்துக்கொள்ளும்.

எருசலேம் பெண்களே! வாக்குறுதி கொடுங்கள்.
    நான் தயாராகும்வரை என் அன்பை விழிக்கச் செய்து எழுப்பவேண்டாம்.

எருசலேம் பெண்கள் பேசுகிறார்கள்

இந்த பெண் யார்?
    தன் நேசரின்மேல் சார்ந்து கொண்டு வனாந்திரத்திலிருந்து வருகிறாள்.

அவள் அவனிடம் பேசுகிறாள்

கிச்சிலி மரத்தடியில் உம்மை எழுப்பினேன்.
    அங்கே உம்மை உமது தாய் பெற்றாள்.
    அங்கே உம் தாய் உம்மை துன்பப்பட்டுப் பெற்றாள்.
என்னை உமதருகில் வைத்துக்கொள்ளும்.
    உம் இதயத்தின்மேல் ஒரு முத்திரையைப்போல் கையில் அணிந்துகொள்ளும்.
நேசமானது மரணத்தைப்போன்று வலிமையானது.
    நேச ஆசையானது கல்லறையைப்போன்று வலிமையானது.
அதன் பொறிகள் சுவாலை ஆகின்றன.
    பின் அது பெரிய நெருப்பாக வளர்கின்றது.
ஒரு வெள்ளம் அன்பை அழிக்க முடியாது.
    ஒரு ஆறு அன்பை இழுத்துச் செல்லமுடியாது.
ஒருவன் தன்னுடைய எல்லா சொத்துக்களையும் அன்பிற்காகக் கொடுத்துவிட்டால்
    ஜனங்கள் அவனை இழிவாகவோ அல்லது மட்டமாகவோ கருதுவார்களா?

அவளது சகோதரர்கள் பேசுகிறார்கள்

எங்களுக்கு ஒரு சிறிய சகோதரி இருக்கிறாள்
    அவளது மார்பகங்கள் இன்னும் வளரவில்லை.
ஒருவன் அவளை மணக்க வரும்போது
    எங்கள் சகோதரிக்காக நாங்கள் என்ன செய்வோம்?

அவள் ஒரு மதில் சுவராக இருந்தால்
    நாங்கள் அதைச்சுற்றி வெள்ளிக் கோட்டையைக் கட்டுவோம்.
அவள் ஒரு கதவாக இருந்தால்
    அவளைச் சுற்றி கேதுருமரப் பலகைகளை இணைப்போம்.

அவள் சகோதரர்களுக்குப் பதில் கூறுகிறாள்

10 நான் ஒரு சுவர்.
    எனது மார்பகங்களே என்னுடைய கோபுரங்கள்.
    அவர் என்னில் திருப்தி அடைகிறார்.

அவன் பேசுகிறான்

11 சாலொமோனுக்குப் பாகால் ஆமோனில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.
    அத்தோட்டத்தின் காவலுக்காக அவன் சிலரை நியமித்தான்.
ஒவ்வொருவரும்
    1,000 வெள்ளிகாசு பெறுமான திராட்சைப் பழங்களைக் கொண்டுவந்தான்.
12 சாலொமோனே, நீர் உமது 1,000 வெள்ளி காசுகளையும் வைத்துக்கொள்ளலாம்.
    ஒவ்வொருவனுக்கும் அவன் கொண்டுவந்த திராட்சைகளுக்காக 200 வெள்ளிகள் கொடும்.
    ஆனால் எனது சொந்தத் திராட்சைத் தோட்டத்தை நானே கவனித்துக்கொள்வேன்.

அவன் அவளிடம் பேசுகிறான்

13 தோட்டத்தில் அமர்ந்திருக்கிறவளே,
    உன் குரலை நண்பர்கள் கேட்கின்றார்கள்
    நானும் அதைக் கேட்கவிடு.

அவள் அவனிடம் பேசுகிறாள்

14 என் நேசரே வேகமாக வாரும்.
    மணப் பொருட்கள் நிறைந்த மலைகளின்மேல் திரியும் வெளிமானைப்போலவும்,
    மரைகளின் குட்டிகளைப்போலவும் இரும்.

கலாத்தியர் 4

இதை உங்களுக்குச் சொல்ல நான் விரும்புகிறேன். ஒருவன் தன் சொத்துக்களுக்கெல்லாம் உரிமையுடையவனாய் இருந்தும் அவன் சிறுபிள்ளையாய் இருந்தால் அவனுக்கும் அடிமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஏனென்றால் அவன் குழந்தை. அவன் தன் பாதுகாப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். ஆனால் தன் தந்தையின்படி குறித்த வயதை அடையும்போது அவன் சுதந்தரம் உள்ளவனாக விளங்குகிறான். நாமும் இதைப் போலத்தான். நாம் எல்லாரும் குழந்தைகளைப் போன்றவர்கள். நாம் பயனற்ற சட்டங்களுக்கு அடிமையாய் இருந்தோம். ஆனால் சரியான நேரம் வந்தபோது, தேவன் தன் மகனை அனுப்பினார். தேவனுடைய குமாரன் ஒரு பெண்ணினிடத்தில் பிறந்தார். அவரும் விதிமுறைகளின்படியே வாழ்ந்தார். இதனைச் செய்ததன் மூலம், சட்டங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு தேவன் விடுதலையை வழங்கினார். நம்மை அவரது பிள்ளைகளாக ஆக்கவேண்டும் என்பது தான் இவரது நோக்கம்.

நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அதனால் தான் தேவன் தம் மகனின் ஆவியை நமது இதயங்களுக்குள் அனுப்பினார். ஆவியானவரும் “பிதாவே, அன்பான பிதாவே” என்று கதறுகிறார். ஆகையால் இப்பொழுது நீங்கள் முன்பு போல அடிமைகள் அல்ல. நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர் வாக்குறுதிப்படி உங்களுக்குத் தருவார். ஏனென்றால் நீங்கள் அவரது பிள்ளைகளாயிருக்கிறீர்கள்.

கலாத்திய கிறிஸ்தவர்கள் மீது பவுலின் அன்பு

முன்பு நீங்கள் தேவனை அறிந்திருக்கவில்லை. மெய்யாகவே தேவன் அல்லாத கடவுள்களுக்கு நீங்கள் அடிமைகளாகி இருந்தீர்கள். ஆனால் இப்போது நீங்கள் உண்மையான தேவனை அறிந்துகொண்டீர்கள். உண்மையில் அவர் உங்களை அறிந்துகொண்ட தேவன். எனவே எதற்காக நீங்கள் மறுபடியும் அந்தப் பலவீனமான, மோசமான ஆவிகளுக்கு அடிமைகளாக விரும்புகிறீர்கள். 10 நீங்கள் இப்போதும் சிறப்பான நாட்கள், மாதங்கள், பருவங்கள், ஆண்டுகள் பற்றிச் சட்டங்கள் கூறுவதைப் பின்பற்ற விரும்புகிறீர்கள். 11 நான் உங்களை எண்ணி அஞ்சுகிறேன். நான் உங்களுக்காக உழைத்ததெல்லாம் வீணாய்ப் போயிற்றோ என்று அஞ்சுகிறேன்.

12 சகோதர சகோதரிகளே நானும் உங்களைப் போன்றவன். எனவே, நீங்கள் என்னைப்போல மாறுங்கள். நீங்கள் என் முன்பு நல்லவர்களாகவே இருக்கிறீர்கள். 13 உங்களிடம் நான் முதன்முதல் எதற்காக வந்தேன் என்பதை நினைத்துப் பாருங்கள். ஏனென்றால் அப்போது நான் நோயாளியாய் இருந்தேன். அப்போதுதான் நான் நற்செய்தியை உங்களுக்குப் போதித்தேன். 14 எனது நோய் உங்களுக்குப் பாரமாயிற்று. எனினும் நீங்கள் என்னை வெறுக்கவில்லை. என்னை விலக்கவில்லை. என்னை தேவதூதனைப் போல வரவேற்றீர்கள். என்னை இயேசு கிறிஸ்துவைப் போன்று ஏற்றுக்கொண்டீர்கள். 15 அப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இப்போது அந்த மகிழ்ச்சி எங்கே போயிற்று? எனக்கு உதவுவதற்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். உங்களால் முடியுமானால் உங்கள் கண்களையும் பிடுங்கி எடுத்து எனக்குத் தரத் தயாராக இருந்தீர்கள். 16 இப்பொழுது நான் உண்மையைச் சொல்வதால் உங்களுக்கு எதிரியாகிவிட்டேனா?

17 அவர்கள் உங்களைத் தேடி கடுமையாய் உழைக்கிறார்கள். ஆனால், இது உங்கள் நன்மைக்காக அல்ல. அது எங்களுக்கு எதிராயிற்று. என்னைப் பிரிந்து நீங்கள் அவர்களைப் பின்பற்றவேண்டும் என்றே விரும்புகிறார்கள். 18 நோக்கம் நல்லதாக இருக்கும் பட்சத்தில் மக்கள் உங்களிடம் ஆர்வம் காட்டுவது நல்லது. இது எப்பொழுதும் உண்மை. உங்களோடு நான் இருக்கும்போது மட்டுமல்ல, உங்களை விட்டுவிலகிய பிறகும் அவர்கள் உங்கள் மீது ஆர்வம் காட்ட வேண்டும். 19 என் சிறு பிள்ளைகளே| மீண்டும் நான் உங்களுக்காக வேதனைப்படுகிறேன். இது ஒரு பெண்ணின் பிரசவ வேதனையைப் போன்றது. இயேசுவைப் போன்று நீங்கள் ஆகும்வரை நான் இவ்வேதனையை அடைவேன். 20 நான் இப்போது உங்களுடன் இருப்பதை விரும்புகிறேன். பின்னர் வேண்டுமானால் உங்களோடு பேசின விதத்தை மாற்றிக்கொள்ள முடியும். உங்களைக் குறித்து என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.

ஆகார், சாராளின் சான்று

21 உங்களில் சிலர் இப்பொழுதும் மோசேயின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருக்க விரும்புகிறீர்கள். எனக்குச் சொல்லுங்கள்.சட்டம் என்னச் சொல்லுகின்றது என கவனிக்கவில்லையா? 22 ஆபிரகாமுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. ஒருவனின் தாய் ஒரு அடிமைப் பெண். இன்னொருவனின் தாய் சுதந்தரமானவள். 23 அடிமைப் பெண்ணின் மகன் சாதாரண முறையில் பிறந்தான். அடுத்த பெண்ணின் மகனோ தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி பிறந்தவன்.

24 இந்த உண்மையான சம்பவம் நமக்கு ஒரு சித்திரத்தை உருவாக்கி காட்டுகிறது. இந்த இரண்டு பெண்களும் தேவன் மனிதனோடு செய்துகொண்ட இரண்டு உடன்படிக்கைகளைப் போன்றவர்கள். ஒன்று சீனாய் மலையில் தேவன் மனிதனோடு செய்த உடன்படிக்கை. இந்த உடன்படிக்கைக்குக் கீழ்ப்பட்ட மக்கள் எல்லோரும் அடிமைகளைப் போன்றவர்கள். ஆகார் இந்த உடன்படிக்கைக்கு உரியவள். 25 ஆகையால் ஆகார் என்பவள் அரேபியாவின் சீனாய் மலையைப் போன்று விளங்கினாள். இவள் தற்போதுள்ள எருசலேம் நகரத்தின் படமாயிருக்கிறாள். இந்த நகரமும் அடிமைப்பட்டிருக்கிறது. அதிலுள்ள யூத மக்களும் அடிமைப்பட்டு இருக்கின்றனர். 26 ஆனால் மேலிருக்கிற பரலோக எருசலேம் சுதந்தரமான பெண்ணைப் போன்றது. இதுவே நமது தாய். 27 கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது.

“பிள்ளை பெறாத மலடியே! மகிழ்ச்சியாய் இரு.
    எப்போதும் நீ குழந்தை பெறாதவள்.
உனக்குப் பிரசவ வேதனை என்னவெனத் தெரியாது.
    அதனால் நீ மகிழ்ச்சியுடன் சத்தமிடு.
கணவனுள்ள பெண்ணைவிட தனியாக இருக்கிற
    பெண்ணுக்கே அதிகப் பிள்ளைகள் உண்டு.” (A)

வெளிப்படுத்துதல்

28-29 ஆபிரகாமின் ஒரு பிள்ளை சாதாரண முறையில் பிறந்தவன். அவரது இன்னொரு பிள்ளை தேவனுடைய வாக்குறுதிப்படி ஆவியானவரின் வல்லமையால் பிறந்தான். சகோதர சகோதரிகளே, ஈசாக்கைப் போல நீங்களும் வாக்குறுதியால் வந்த பிள்ளைகளே! சாதாரண முறையில் பிறந்தவன், ஈசாக்கை மிக மோசமாக நடத்தினான். அது போலவே இன்றும் நடைபெறுகிறது. 30 ஆனால் வேதவாக்கியங்கள் என்ன கூறுகிறது? “அடிமைப் பெண்ணையும் அவளது மகனையும் தூக்கி எறியுங்கள். அடிமையாய் இல்லாதவளின் மகன் அவனது தந்தைக்குரியவற்றை எல்லாம் பெற்றுக்கொள்வான். ஆனால் அடிமைப் பெண்ணின் மகனோ எதையும் பெற்றுக்கெள்ளமாட்டான்.” [a] 31 ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் அடிமைப் பெண்ணின் பிள்ளைகள் அல்ல. நாம் சுதந்தரமான பெண்ணின் பிள்ளைகள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center