Old/New Testament
அடைக்கலப் பட்டணங்கள்
19 “மற்ற இன ஜனங்களை அழித்துவிட்டு உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களது தேசத்தை உங்களுக்குத் தருகின்றார். அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே நீங்கள் வாழப்போகிறீர்கள். நீங்கள் அவர்களது நகரங்களையும், வீடுகளையும் எடுத்துக்கொண்டு அனுபவிக்கப் போகிறீர்கள். அப்படி நடக்கும்போது, 2-3 நீங்கள் அந்த தேசத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு பிரிவிலும் எல்லாருக்கும் மையமான ஒரு நகரத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த நகரங்களுக்குச் சாலைகளையும், வீதிகளையும் அமைத்துக்கொள்ளுங்கள். அப்போது தற்செயலாக மற்றவர்களைக் கொலை செய்திடும் நபர் பாதுகாப்பாய் அந்நகருக்குள் ஓடிப்போகலாம்.
4 “கொலை செய்தவன் எவனும் அம்மூன்று நகரங்களில் ஒன்றில் ஓடிப்போய் இருக்க வேண்டுவதற்கான நியாயம் என்னவென்றால்: அந்த நபர் மற்றவனைக் கொன்றது எதிர்ப்பாராத விதமாக நடந்திருக்க வேண்டும். தான் மனதறியாது எவ்வித முன் வெறுப்பும் இல்லாது கொன்றிருக்க வேண்டும். 5 இங்கு உதாரணமாகச் சொன்னால், ஒருவன் மற்றவனோடு விறகு வெட்ட காட்டிற்குச் சென்று மரத்தை வெட்டும்படி தன் கையிலிருக்கும் கோடரியை ஓங்கும்போது, அதிலிருந்த இரும்பானது கைப்பிடியை விட்டு கழன்று மற்றவன்மேல் விழுந்ததினால் அவன் மரித்துப்போனால், அந்தக் கோடரியை ஓங்கியவன், அம்மூன்று பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் பாதுகாப்படைந்து கொள்ளலாம். 6 ஆனால், இந்தப் பட்டணம் வெகு தூரத்தில் இருப்பதினால் போதுமான வேகத்திற்கு அவனால் ஓடமுடியாமல் போகலாம். அப்போது கொலையுண்டவனின் நெருங்கிய உறவினன் பழிவாங்கும் நோக்கத்தோடு அவனை விரட்டக்கூடும். அவன் கோபாவேசம் நிறைந்தவனாய் கொலை செய்தவனை நெருங்கியவுடன் அவனைக் கொன்று போடக்கூடும். இப்படி அவன் மரிக்க வேண்டியவனல்ல. ஏனெனில், அவன் முன் விரோதமின்றி கொலை செய்தவனாவான். 7 இந்த மூன்று நகரங்களும் அவைகளைச் சுற்றியுள்ள ஜனங்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும். அதனால்தான், நீங்கள் விசேஷமான அந்த மூன்று நகரங்களைத் தேர்ந்தெடுக்கக் கட்டளையிட்டேன்.
8 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு வாக்களித்தபடி உங்கள் தேசத்தை விரிவுபடுத்தி, உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கின்படி உங்களுக்கு இந்த தேசம் முழுவதையும் தருவார். 9 தேவன் இதை உங்களுக்குச் செய்ய வேண்டுமென்றால், நான் இன்று உங்களுக்குத் தருகின்ற கட்டளைகளுக்கெல்லாம் நீங்கள் கீழ்ப்படிந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது நீங்கள் அன்பு செலுத்தும்பொருட்டு அவர் விரும்பியபடி நீங்கள் வாழவேண்டும். பின் கர்த்தர், உங்கள் தேசத்தை விரிவாக்கித் தருவதோடு, உங்கள் அடைக்கலத்திற்காக மூன்று பட்டணங்களை நீங்கள் அமைத்துக்கொள்ளச் செய்வார். 10 பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்குகின்ற தேசத்தில் கள்ளம் கபடில்லாத அப்பாவி ஜனங்கள் கொல்லப்படமாட்டார்கள். அது மட்டுமின்றி, உங்கள் மீது எவ்வித கொலைக் குற்றமும் சுமத்தப்படாது.
11 “ஒருவன் வேறொருவன் மீது வெறுப்படைந்து அவனைப் பழிவாங்கும் விரோதத்தோடு காத்திருந்து அவன் மரிக்கும்படி அடித்துவிட்டு, இந்த நகரங்களுக்குள் ஒன்றில் ஓடிப்போய், தன்னைக் காத்துக்கொள்வான் என்றால், 12 அந்த நகரத்தின் மூப்பர்கள் ஆள் அனுப்பி, அவன் தன்னைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் வீட்டிற்குச் சென்று அவனைக் கொண்டுவந்து, அவனைப் பழிவாங்கத் துடிக்கும் மரித்தவனின் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். கொலை செய்தவன் கண்டிப்பாக மரிக்க வேண்டும். 13 நீங்கள் அவர்களுக்காக வருத்தப்படாதீர்கள். அவன் ஏதுமறியாத ஒரு அப்பாவியை கொன்ற குற்றவாளி. நீங்கள் அந்தக் குற்றத்தை இஸ்ரவேலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அப்போது, எல்லாம் உங்களுக்கு நல்லதாக அமையும்.
சொத்திற்கான எல்லை
14 “உங்களது அயலாரின் சொத்திற்கான எல்லைக் கல்லை நீங்கள் நகர்த்த கூடாது. உங்களது தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தந்த நிலத்தில் உங்களது முன்னோர் இட்ட எல்லைக் கோடுகளையே நீங்களும், அவரவரது சொத்திற்கான எல்லைக் கற்களாக அடையாளமிட்டு வையுங்கள்.
சாட்சிகள்
15 “சட்டத்திற்கு எதிராக ஏதாவது குற்றத்தைச் செய்த நபரை, ஒரே ஒரு சாட்சியை வைத்து ‘அவன் குற்றவாளி’ என்று நிரூபிக்காதீர்கள். அவன் அக்குற்றத்தைச் செய்தானா இல்லையா என்பதை, இரண்டு அல்லது மூன்று சாட்சிகளை வைத்து நிரூபிக்க வேண்டும்.
16 “ஒருவன் குற்றத்தைச் செய்தான் என்று மற்றொருவன் அவன் மேல் பொய் சொல்லக்கூடும். 17 பின், அவ்விருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று நீதியைப் பெற, அங்கு பணியில் இருக்கும் ஆசாரியர் மற்றும் நீதிபதிகளிடம் நிற்கவேண்டும். 18 நீதிபதிகள், நன்றாக விசாரிப்பதன் மூலம் அந்த நபருக்கு எதிராக பொய்சாட்சி கூறியதாகக் கண்டறிந்தால், அவன் பொய்சாட்சி என்று நிரூபிக்கப்பட்டால், 19 நீங்கள் அவனைத் தண்டிக்கவேண்டும். அவன் மற்றவர்களுக்குச் செய்ய விரும்பியதையே நீங்கள் அவனுக்கு செய்யவேண்டும். இந்த வித மாக, இந்தத் தீமையை உங்கள் சமுதாயத்திலிருந்து அகற்றிவிட வேண்டும். 20 மற்ற ஜனங்கள் அனைவரும் இதைக் கேட்டும் கண்டும் பயப்படுவார்கள். அதுமட்டுமின்றி, மீண்டும் இத்தகைய தீயச் செயலைச் செய்யாதிருப்பார்கள்.
21 “குற்றங்களுக்குத் தகுந்தாற்போல் தண்டனைகளும் கடுமையாக இருக்கவேண்டும். ஒருவன் செய்த குற்றத்திற்காக அவனைத் தண்டிக்கின்றபோது, அதற்காக நீங்கள் வருத்தம் கொள்ளாதீர்கள். ஒருவன் ஒரு உயிரை எடுத்தான் என்றால் அவன் கண்டிப்பாக அவனது உயிரை இழப்பான். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், என்பதே சட்டமாகும்.
போருக்கான விதிகள்
20 “நீங்கள் உங்கள் எதிரிகளை எதிர்த்து, போருக்காகக் செல்லும்போது குதிரைகளையும், இரதங்ளையும், உங்களிடமிருப்பவர்களைவிட மிகுதியான ஜனங்களையும் அவர்களிடம் கண்டால், அவற்றைக் கண்டு பயப்படாதிருங்கள். ஏனென்றால் எகிப்து தேசத்திலிருந்து வெளியே அழைத்து வந்த உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு கூடவே இருக்கின்றார்.
2 “நீங்கள் போருக்குச் செல்கின்றபோது, ஆசாரியன் போர் வீரர்களுடன் சேர்ந்து வந்து அவர்களுடன் பேசவேண்டும். 3 ஆசாரியன் உங்களிடம், ‘இஸ்ரவேல் ஜனங்களே நான் கூறுவதை கேளுங்கள், நீங்கள் இன்று போரில் உங்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடப் போகின்றீர்கள். நீங்கள் மனந்தளர்ந்துவிடாதீர்கள்! நீங்கள் அவர்களைக் கண்டு கலக்கமோ, விரக்தியோ அடைந்து விடாதீர்கள்! உங்கள் எதிரிகளைக் கண்டு பயந்துவிடாதீர்கள்! 4 ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு வருகின்றார். அவர் உங்கள் எதிரிகளை எதிர்த்து நீங்கள் போரிட துணைசெய்வார். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வெற்றிப் பெற துணைபுரிவார்!’ என்று கூறவேண்டும்.
5 “அந்த லேவிய அதிகாரிகள் வீரர்களிடம்: ‘இங்கே யாராவது புது வீட்டைக்கட்டி இன்னும் அவ்வீட்டைப் பிரதிஷ்டை செய்யாமல் இங்கு போருக்காக வந்திருப்பீர்கள் என்றால், அவன் அவ்வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். ஏனென்றால் போரில் அவன் கொல்லப்பட்டால் அவனது வீட்டினை மற்றொருவன் பிரதிஷ்டை பண்ண நேரிடும். 6 தன் தோட்டத்தில் திராட்சையைப் பயிரிட்டு, அதன் பலனை அனுபவிக்காதவர் யாரும் இங்கே இருந்தால், அவர்கள் தம் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம். ஏனெனில் யுத்தத்தில் அவன் மரித்துவிட்டால், பின் வேறொருவன் அவன் தோட்டத்துத் திராட்சையை அனுபவிக்க நேரிடும். 7 திருமணம் நிச்சயிக்கப்பட்டவன் யாரேனும் இங்கு இருந்தால் அவன் தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம். போரில் அவன் மரித்துவிட்டால், பின் வேறொருவன் இவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்துகொள்ள நேரிடும்’ என்று சொல்வார்கள்.
8 “மேலும் அவ்வதிகாரிகள் ஜனங்களிடம் கண்டிப்பாகக் கூறவேண்டியது, ‘இங்கே தன்னம்பிக்கை இழந்து, பயந்துகொண்டு இருக்கின்ற தைரியமற்றவர்கள் யாராவது இருந்தால் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட வேண்டும். அப்போதுதான் மற்ற வீரர்கள் மனந்தளர்ந்திட இவன் காரணமாக இருக்கமாட்டான்.’ 9 பின்பு, அந்த அதிகாரிகள் படை வீரர்களுடன் பேசி முடித்த பின்பு, வீரர்களைத் தலைமை ஏற்றுச்செல்ல தளபதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
10 “நீங்கள் ஒரு நகரத்தைத் தாக்கச் செல்லும்போது, முதலில் அந்த நகர ஜனங்களுக்கு சமாதானம் கூறவேண்டும். 11 அவர்கள் உங்களது சமாதானத்தை ஏற்றுக்கொண்டால், அவர்களது வாசல்களைத் திறந்திடுவார்கள். பின், அந்நகரத்தின் எல்லா ஜனங்களும் உங்களது அடிமைகளாகிவிடுவதுடன், உங்களுக்காக ஊழியம் செய்ய முன் வருவார்கள். 12 ஆனால், அந்த நகர ஜனங்கள் உங்களோடு சமாதானம் செய்ய மறுத்து உங்களை எதிர்த்து சண்டையிட்டால், நீங்கள் அந்த நகரத்தை முற்றுகையிடுங்கள். 13 உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்நகரைக் கைப்பற்ற உங்களை அனுமதிக்கும்போது, நீங்கள் அங்குள்ள ஆண்கள் அனைவரையும் கொல்லவேண்டும். 14 ஆனால் நீங்கள் அங்குள்ள பெண்கள், குழந்தைகள், மாடுகள் ஆகியவற்றைக் கொல்லாமல் உங்களுக்காக அந்நகரிலுள்ள எல்லாப் பொருட்களையும் எடுத்து அனுபவிப்பீர்களாக. இந்த எல்லாப் பொருட்களையும், நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகவே இவற்றையெல்லாம் கொடுத்துள்ளார். 15 நீங்கள் வசிக்கின்ற நகரங்களையுடைய இந்த தேசத்தை விட்டு வெகுதூரத்திலுள்ள எல்லா நகரங்களிலும் இவ்வாறே செய்வீர்களாக.
16 “உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிற நகரங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கொன்றுவிட வேண்டும். 17 அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இதைச் செய்யக் கட்டளையிட்டுள்ளார். 18 ஏனென்றால் அவர்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக உங்களை எந்தவொரு பாவத்தையும் செய்யக் கற்றுக்கொடுக்க முடியாது. அவர்கள் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொண்ட அந்த அருவருப்பான செயல்களில் எந்த ஒன்றையும் உங்களை செய்யுமாறு கற்றுக்கொடுக்க இயலாத வண்ணம் அவர்களை அழிக்கவேண்டும்.
19 “நீங்கள் ஒரு நகரத்தை எதிர்த்துப் போர் செய்யும்போது, அந்நகரத்தை நீண்ட காலம் முற்றுகையிடுகின்ற நிலையில் அந்நகரைச் சுற்றிலும் உள்ள எந்தவொரு பழங்கள் தரக்கூடிய மரத்தையும் நீங்கள் வெட்டக் கூடாது, நீங்கள் அவற்றை வெட்டாமல் இருந்தால்தான், அந்த மரங்களிலிருந்து நீங்கள் உண்ணுவதற்காகப் பழங்களைப் பெறலாம். அந்த மரங்கள் எல்லாம் உங்களுக்கு எதிரி அல்ல. ஆகையால், அவைகளுக்கு எதிராக நீங்கள் போரிட வேண்டாம். 20 ஆனால் உண்ணுவதற்கேற்ற பழங்களைத் தராத மரங்கள் என்று நீங்கள் அறிந்தபின் மரங்களை வெட்டிக்கொள்ளலாம். நீங்கள், அந்த மரங்களை எடுத்து அந்த நகரத்தை முற்றுகையிடவும், அந்நகருக்கு எதிராக நடத்தும் போரில் தேவையான படைக்கருவிகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு அந்நகரம் வீழ்ச்சி அடையும்வரை, நீங்கள் அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கொலை செய்யப்பட்டவனைக் குறித்த காரியம்
21 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற தேசத்தில் உள்ள வயலில் ஒரு மனிதன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டறிந்தால், அவனைக் கொன்றது யார் என்று யாருக்கும் தெரிய வில்லை என்றால், 2 உங்களது தலைவர்களும், நீதிபதிகளும் அந்த இடத்திற்கு வந்து கொல்லப்பட்ட நபரைச் சுற்றிலும் உள்ள ஊர்களின் தொலைவை அளந்து பார்க்க வேண்டும். 3 மரித்துக்கிடப்பவனுக்கு அருகிலுள்ள ஊர் எது என்பதை நீங்கள் அறிந்தவுடன், அந்த ஊரின் தலைவர்கள், அவர்களது மந்தையிலிருந்து ஒரு மாட்டினைக் கொண்டுவரச் செய்ய வேண்டும். அந்த மாடானது கன்று இல்லாத கிடாரியாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, எவ்விதப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படாத மாடாக அது இருக்க வேண்டும். 4 அந்த ஊரின் தலைவர்கள் அந்த மாட்டை அந்த ஊரின் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுவர வேண்டும். அந்தப் பள்ளத்தாக்கானது உழுதிட முடியாமலும், எவ்விதப் பயிரையும் பயிர் செய்ய முடியாத நிலமாகவும் இருக்க வேண்டும். பின் அந்த தலைவர்கள் அந்த மாட்டின் தலையைப் பள்ளத்தாக்கில் விழுமாறு வெட்டிப் போடவேண்டும். 5 லேவியின் சந்ததியினரான ஆசாரியர்கள் அத்தருணத்தில் அங்குச் செல்லவேண்டும். (உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு சேவைச் செய்வதற்கும், அவருடைய நாமத்தால் ஜனங்களை ஆசீர்வதிக்கவும் இந்த ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர்களும் அத்தருணத்தில் வந்திருக்க வேண்டும். ஏனெனில், அவர்களே யாருடைய மனதும் புண்படாதவாறு சரியாக விசாரித்து அதற்கேற்ற முடிவை சகல வழக்கிற்கும் ஏற்ற தீர்ப்பாக அளிப்பார்கள்.) 6 கொலை செய்யப்பட்ட மனிதனுக்கு அருகிலுள்ள ஊரின் தலைவர்கள் எல்லோரும், பள்ளத்தாக்கில் கழுத்து வெட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டக் கிடாரின்மேல் தங்கள் கைகளை கழுவிட வேண்டும். 7 பின்பு, அந்தத் தலைவர்கள் சொல்ல வேண்டியது: ‘நாங்கள் இந்த மனிதனைக் கொல்லவில்லை. இது நடந்ததையும் நாங்கள் பார்க்கவில்லை. 8 கர்த்தாவே, இஸ்ரவேலரை காப்பாற்றும், நாங்கள் உமது ஜனங்கள். இப்போதும் எங்கள்மேல் குற்றம் இல்லாத இரத்தப் பழியைச் சுமத்தாமல் காப்பீராக. ஏதுமறியாத மனிதனைக் கொல்லுகின்ற குற்றத்தை சுமத்தாது காப்பீராக,’ இவ்வாறு அவர்கள் குற்றமற்ற ஒருவனைக் கொல்லும் குற்றத்தைச் செய்தவர்களாகமாட்டார்கள். 9 இவ்வாறாக, நீங்கள் சரியானவற்றை செய்வதன் மூலம் உங்களுக்குள்ளிருந்து அந்த குற்றத்தை விலக்குவீர்கள்.
போரில் கைதான பெண்கள்
10 “நீங்கள் உங்கள் எதிரிகளுக்கு எதிராகச் சண்டையிடும்போது, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடம் அவர்களைத் தோல்வியடையச் செய்யும்போது, நீங்கள் அந்தப் பகைவர்களைச் சிறைப்பிடித்து வந்திருக்கலாம். 11 அந்த கைதிகளில் உள்ள ஒரு அழகியப் பெண்ணைக் கண்டு, அவளை உங்களில் ஒருவன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால், 12 அவளை அவன் வீட்டிற்கு அழைத்து வரவேண்டும். அவள் தன் தலையை மொட்டையடித்து தன் நகங்களை வெட்டிக்கொள்ள வேண்டும். 13 அவள் அணிந்திருந்த போர்க் கைதிக்குரிய ஆடைகளை நீக்கிவிடவேண்டும். அவள் தான் இழந்த தந்தை, தாயை எண்ணி உங்கள் வீட்டில் ஒரு மாதம் முழுவதும் துக்கம் கொண்டாட வேண்டும். அதற்குப் பின்பு அவன் அவளிடம் சென்று அவளுக்குக் கணவனாக வாழலாம். அவள் அவனுக்கு மனைவியாக இருப்பாள். 14 அவளோடு வாழ்வது அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றால், அவன் அவளை விவாகரத்து செய்து, அவள் இஷ்டம்போல் அவளை வாழ அனுமதித்து விடவேண்டும். நீங்கள் அவளை விற்க முடியாது. நீங்கள் அவளை அடிமையாக நடத்தவும் கூடாது. ஏனென்றால் உங்களில் ஒருவன் அவளோடு ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டாயிற்று.
மூத்த மகன்
15 “ஒருவன் இரண்டு மனைவிகளைப் பெற்றிருந்து, அவன் ஒருத்தி மேல் மட்டும் மற்றவளைவிட அன்பு செலுத்திட, இரண்டு மனைவிகளும் அவனது குழந்தைகளைப் பெற்றிருக்க, அதில் முதல் குழந்தை, இவன் அதிகம் நேசிக்காத மனைவியின் குழந்தையாக இருக்கலாம். 16 தந்தையானவன் தனது சொத்தினை தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில் தான் நேசிக்காமல் வெறுக்கிற மனைவியிடத்தில் பிறந்த முதல் பிள்ளைக்கு சேஷ்ட புத்திர சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டுமே தவிர தான் விரும்பும் மனைவியிடத்தில் பிறந்த குழந்தைக்குக் கொடுக்ககூடாது. 17 அவன் தான் நேசிக்காத மனைவியிடம் பிறந்த முதல் மகனை தனது குடும்பத்தின் மூத்த பிள்ளையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அவன் தனது மூத்த மகனுக்கு தன்னுடைய எல்லாவற்றிலும் இரண்டு பங்கினைக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், அந்த குழந்தையே மூத்த பிள்ளைக்கான உரிமையைப் பெறுகிறது.
கீழ்ப்படிய மறுக்கும் பிள்ளைகள்
18 “தன் தந்தையின் சொல்லையும், தாயின் சொல்லையும் கேட்காமலும், அவர்களுக்கு அடங்காமலும் கீழ்ப்படிய மறுக்கின்ற தண்டனைக்குரிய மகன் ஒருவனுக்கு இருந்தால் அவனை தண்டித்தும் இன்னும் அவர்கள் சொன்னபடிக் கேட்க மறுப்பவனாய் இருந்தால், 19 அவனது தந்தையும், தாயும் அவனை அழைத்துக்கொண்டு, அந்த ஊர் தலைவர்களிடம் வந்து, ஊர் கூடுமிடத்தில் வந்து நிற்கவேண்டும். 20 அவர்கள் நகரத் தலைவர்களிடம்: ‘எங்களது மகன் எங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்து, எங்களுக்கு அடங்காதவனாக இருக்கிறான். நாங்கள் அவனிடம் செய்யச் சொல்வது எதையும் அவன் செய்வதில்லை. அவன் அளவுக்கு அதிகமாகக் குடிக்கவும், சாப்பிடவும் செய்கிறான்’ என்று சொல்ல வேண்டும். 21 பின் ஊரிலுள்ளவர்கள் அந்த மகனை மரிக்கும்வரை கற்களால் அடிப்பார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மத்தியில் உள்ள இந்த தீமையை விலக்கிவிடுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அதைக் கேட்டுப் பயப்படுவார்கள்.
கொலைக் குற்றவாளிகள் கொல்லப்படுவதும், தூக்கில் இடப்படுவதும்
22 “ஒருவன் மரணதண்டனை பெறத்தக்க பாவம் செய்த குற்றவாளியாக இருக்கலாம், ஜனங்கள் அவனைக் கொன்ற பிறகு அவனது உடலை மரத்திலே தொங்கவிட வேண்டும். 23 இரவு முழுவதும் அவனது உடலை மரத்திலேயே தொங்கவிடக் கூடாது. அந்த நாளிலேயே அவனை நீங்கள் அடக்கம் செய்திட வேண்டும். ஏனென்றால், மரத்தின்மேல் தூக்கிலிடப்பட்ட அவன் தேவனால் சபிக்கப்பட்டவன். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தை நாசபடுத்தக் கூடாது.
21 “அக்காலத்தில் சிலர் ‘அதோ பாருங்கள் கிறிஸ்து, இதோ இவர்தான் கிறிஸ்து’ என்று கூறுவார்கள். அவர்களை நம்பாதீர்கள். 22 கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் வந்து அநேக அற்புதங்களையும், அரிய செயல்களையும் செய்வார்கள். அவர்கள் இவற்றை தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களிடமே செய்வார்கள். அப்படிச் செய்து அவர்களை ஏமாற்ற முயற்சிப்பார்கள். 23 எனவே கவனமாய் இருங்கள். இவை நடைபெறும் முன்னரே நான் உங்களை எச்சரிக்கை செய்துவிட்டேன்.
24 “அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு,
“‘சூரியன் இருளாகும்.
சந்திரன் ஒளி தராது.
25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்.
வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்’ (A)
26 “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள். 27 பூமி முழுவதும் தேவதூதர்களை மனிதகுமாரன் அனுப்பிவைப்பார். அத்தேவ தூதர்கள் உலகம் முழுவதிலும் உள்ள கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைக் கூட்டுவார்கள்.
28 “அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கின்றது. அத்திமரக் கிளைகள் பசுமையாகவும், மென்மையாகவும் மாறி புதிய இலைகள் தளிர்க்க ஆரம்பிக்கும்போது கோடைக் காலம் நெருங்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். 29 இது போலத்தான் நான் சொன்னவை நிகழ்வதற்கான அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகள் தோன்றியதும் காலம் நெருங்கிவிட்டதை அறிந்துகொள்ளுங்கள். 30 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும். 31 இந்த முழு உலகமும் பூமியும் வானமும் அழிந்துவிடும். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் அழியாது.
32 “எப்பொழுது, எந்த நேரத்தில் அவை நடைபெறும் என்று எவராலும் அறிந்துகொள்ள முடியாது. இதைப்பற்றி தேவ குமாரனுக்கும், பரலோகத்தில் உள்ள தேவதூதர்களுக்கும் கூடத் தெரியாது. பிதா மட்டுமே இதனை அறிவார். 33 கவனமாய் இருங்கள். எப்பொழுதும் தயாராக இருங்கள். அக்காலம் எப்போது வரும் என உங்களுக்கும் தெரியாது.
34 “இது, பயணம் செய்பவன் தன் வீட்டைவிட்டுப் போவதைப் போன்றது. அவன் தன் வேலைக்காரர்களிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டுப்போகிறான். அவன் ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் குறிப்பிட்ட ஒவ்வொரு வேலையைக் கொடுத்துவிட்டுப் போகிறான். ஒரு வேலைக்காரன் வாசலைக் காவல் காப்பான். எப்பொழுதும் வேலைக்காரர்கள் தயாராய் இருக்கவேண்டும் என்று சொல்வான். அதைப் போலவே நானும் உங்களுக்குக் கூறுகிறேன். 35 எனவே, நீங்கள் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். வீட்டுச் சொந்தக்காரன் எப்பொழுது திரும்பி வருவான் என்று எவருக்கும் தெரியாது. ஒரு வேளை அவன் பிற்பகலில் வரலாம், அல்லது நடு இரவில் வரலாம் அல்லது அதிகாலையில் வரலாம், அல்லது சூரியன் உதயமாகும்போது வரலாம். 36 வீட்டின் சொந்தக்காரன் எதிர்பாராமல் வருவான். நீங்கள் எப்போதும் தயாராக இருந்தால் உங்களைத் தூங்குகிறவர்களாக அவன் கண்டுபிடிக்க மாட்டான். 37 நான் இதனை சொல்கிறேன். நான் எல்லாருக்கும் சொல்கிறேன், தயாராக இருங்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center