Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எண்ணாகமம் 5-6

சுத்தப்படுத்துவதைப் பற்றிய விதிமுறைகள்

கர்த்தர் மோசேயிடம், “நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையிடுவதாவது: அவர்கள் தங்கள் முகாம்களை நோய்கள் பரவாதபடி வைத்துக்கொள்ளவேண்டும். அவர்களில் யாராவது ஒருவனுக்குத் தொழுநோய் இருந்தால், அவனை முகாமை விட்டு அனுப்பிவிட வேண்டும் என்று சொல். முகாமில் யாருக்காவது (இரத்தப் போக்கான) விலக்கு தீட்டு இருந்தால் அவர்களையும் அனுப்பிவிட வேண்டும் என்று சொல். முகாமில் யாராவது பிணத்தைத் தொட்டு அதனால் தீட்டாகியிருந்தால் அவனையும் வெளியே அனுப்பி விடவேண்டும். ஆணா, பெண்ணா என்பது பற்றிக் கவலைப்படாமல் அந்த நபரை வெளியேற்ற வேண்டும். அதனால் மற்றவர்களுக்கு அந்த நோயும், தீட்டும் ஏற்படாமல் இருக்கும். நானும் உங்கள் முகாமில் உங்களோடு வாழ்வேன்” என்றார்.

எனவே இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் இத்தகையவர்களை முகாமைவிட்டு வெளியேற்றினர். கர்த்தர் மோசேயிடம் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தனர்.

தவறுக்குச் செலுத்தும் அபராதம்

கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவன் இன்னொருவனுக்குத் தீமை செய்திருந்தால் (ஒருவன் இன்னொருவனுக்குத் தீமை செய்வது என்பது உண்மையில் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்வதாகும்) அவன் தண்டனைக்கு உரியவன். எனவே அவன் தான் செய்த பாவத்தைப் பற்றி ஜனங்களிடம் சொல்ல வேண்டும். பின் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்த வேண்டும். அதில் ஐந்தில் ஒரு பாகத்தையும் சேர்த்து பாதிக்கப்பட்டவனுக்குக் கொடுக்கவேண்டும். பாதிக்கப்பட்டவன் ஒருவேளை மரித்து போயிருந்தாலோ, அத்தொகையை ஏற்றுக்கொள்ள அவனுக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாமலிருந்தாலோ, அவன் அத்தொகையை கர்த்தருக்குச் செலுத்த வேண்டும். அவன் அம்முழுத்தொகையையும் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். அந்த ஆசாரியன் அவனது பாவநிவிர்த்திக்காக ஆட்டுக் காடாவை பலியாகச் செலுத்த வேண்டும். அதனைப் பலியிடுவதன் மூலம் ஜனங்கள் செய்த பாவமானது நிவிர்த்தி செய்யப்படுகிறது. மீதி பணத்தை, ஆசாரியன் வைத்துக்கொள்ள வேண்டும்.

“இஸ்ரவேலனாக இருக்கும் ஒருவன் தேவனுக்கு இதுபோல் சிறப்பான அன்பளிப்புகளைச் செலுத்தினால் ஆசாரியன் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அது அவனுக்கு உரியது. 10 ஒருவன் இது போன்ற சிறப்பு காணிக்கைகளை கொடுக்காமலும் இருக்கலாம். ஆனால் ஆசாரியனுக்குக் கொடுக்கப்பட்ட எதுவும் அவனுக்கு உரியதாகிவிடும்” என்று கூறினார்.

சந்தேகம்கொள்ளும் கணவர்கள்

11 கர்த்தர் மோசேயிடம், 12 “ஒருவனின் மனைவி அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கலாம். 13 அவள் இன்னொருவனோடு பாலின உறவு வைத்துக்கொண்டு அதனைக் கணவனுக்குத் தெரியாமல் மறைத்துவிடலாம். அவள் தனது செயலில் பிடிபடாமல் அவளுக்கு எதிராக எந்த சாட்சியும் இல்லாமல் இருக்கலாம். எனவே, அவள் செய்த பாவம் அவளது கணவனுக்குத் தெரியாமல் போய்விடலாம். அவளும் தன் கணவனுக்குத் தன் பாவம் பற்றி சொல்லாமல் இருக்கலாம். 14 ஆனால், அவளது கணவன் தனது மனைவி தனக்குத் துரோகம் செய்கிறாளோ என்று சந்தேகப்படலாம். அவள் தனக்கு உண்மையானவளாகவும், சுத்தமானவளாகவும் இல்லை என்று அவன் நினைக்கலாம். 15 இவ்வாறு நிகழ்ந்தால், அவன் தன் மனைவியை ஆசாரியனிடம் அழைத்துச் செல்லவேண்டும். அப்போது, அவன் காணிக்கையாக ஒரு எப்பா அளவான வாற் கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைக் கொடுக்க வேண்டும். அவன் அந்த வாற்கோதுமை மாவிலே எண்ணெயோ, நறுமணப் பொருளோ போடக்கூடாது. இது கர்த்தருக்குத் தானிய காணிக்கையாக இருக்கும். கணவன் சந்தேகம் அடைந்ததால் அதற்குப் பரிகாரமாக இப்பலி அமைகின்றது. தனது மனைவி தனக்கு உண்மையில்லாதவளாக இருந்தாள் என்று அவன் எண்ணியதை இப்பலி காட்டும்.

16 “ஆசாரியன் அந்தப் பெண்ணை கர்த்தரின் முன்பு அழைத்துக்கொண்டு போய் அங்கே அவளை நிறுத்தி, 17 பிறகு ஆசாரியன் பரிசுத்த தண்ணீரை எடுத்து மண்ஜாடியில் ஊற்ற வேண்டும். பின் பரிசுத்தக் கூடாரத்தின் தரையிலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து, அப்பாத்திரத்தில் போட வேண்டும். 18 ஆசாரியன் அவளை கர்த்தர் முன் நிற்குமாறு செய்து பிறகு அவளது கூந்தலை அவிழ்க்கச் சொல்லி, அவள் கையில் தானியக் காணிக்கையை வைக்க வேண்டும். இப்பலி, அவளது கணவனால் அவனது சந்தேகத்திற்காக கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கையாகும். அதே நேரத்தில் ஆசாரியன் தன் கையில் பரிசுத்த தண்ணீர் இருக்கும் மண் ஜாடியை வைத்திருக்க வேண்டும். அந்த பரிசுத்த தண்ணீர் அவள் பாவம் செய்திருந்தால் அவளுக்கு சாபத்தை உண்டாக்கும்.

19 “பிறகு, ஆசாரியன் அந்தப் பெண்ணிடம் அவள் பொய் சொல்லக்கூடாது என்றும், அவள் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றும் கட்டளையிட வேண்டும். ஆசாரியன் அவளிடம், ‘நீ இன்னொரு மனிதனோடு தொடர்பு வைக்காமல் இருந்திருந்தால், திருமணத்துக்கு பின் உன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்யாமல் இருந்திருந்தால், சாபங்களைக் கொடுக்கும் இந்த தண்ணீரானது உனக்குத் தீங்கு செய்யாது. 20 ஆனால் நீ உன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால், உன் கணவன் அல்லாத ஒருவனுடன் நீ தொடர்பு வைத்திருந்தால், நீ தூய்மையானவளல்ல. 21 இது உண்மையென்றால், இந்த பரிசுத்தமான தண்ணீரை நீ குடிப்பதால் உனக்குத் துன்பங்கள் வரும். உனக்குக் குழந்தை பெறுகிற பாக்கியம் கிடைக்காமல்போகும். ஒருவேளை நீ இப்பொழுது கருவுற்றவளாக இருந்தால் அக்குழந்தை மரித்துப்போகும். பிறகு உன் ஜனங்கள் உன்னை விலக்கி வைத்து, உன் மீது குற்றங்களைச் சுமத்துவார்கள்’ என்று கூறவேண்டும்.

“பிறகு கர்த்தருக்கு முன்பு ஒரு விசேஷ உறுதியளிக்கும்படி அப்பெண்ணிடம் ஆசாரியன் சொல்ல வேண்டும். பொய் சொன்னால் அவளுக்குத் தீமைகள் ஏற்படும் என்பதை அவள் உணரச் செய்ய வேண்டும். 22 நீ கேடு உண்டாக்கக் கூடிய தண்ணீரைக் குடிக்க வேண்டும். நீ பாவம் செய்திருந்தால், ‘உனக்குக் குழந்தை ஏற்படாமல் போகும். நீ கருவுற்றிருந்தால் அது பிறக்குமுன் மரித்துப்போகும்’ என்று ஆசாரியன் அப்பெண்ணிடம் கூறவேண்டும். அதற்கு அவள், ‘நீர் சொல்கிறபடி நான் செய்வேன்’ என்று கூற வேண்டும்.

23 “இந்த எச்சரிக்கைகளையெல்லாம் ஒரு நீண்டத் தோல் சுருளில் ஆசாரியன் எழுதி வைக்க வேண்டும். அதனைப் பிறகு பரிசுத்தத் தண்ணீரால் சிறிது கழுவ வேண்டும். 24 பின்னர் கேடு தருகிற அந்தத் தண்ணீரை அவள் குடிக்க வேண்டும். அதைக் குடித்ததும், அவள் பாவம் செய்தவளாக இருந்தால் அத்தண்ணீர் அவளுக்குப் பெருந்துன்பத்தைத் தரும்.

25 “பிறகு ஆசாரியன் அவள் கையில் உள்ள தானியக் காணிக்கையை வாங்கி அதனை கர்த்தரின் சமூகத்தில் தூக்கிப் பிடிக்க வேண்டும். பின் அதனைப் பலிபீடத்தில் வைக்க வேண்டும். 26 ஆசாரியன் அத்தானியப் பலியைக் கை நிறைய அள்ளி பலிபீடத்தின் நெருப்பில் போட்டு எரிந்துவிட வேண்டும். அதற்குப் பிறகு ஆசாரியன் அவள் தண்ணீரைக் குடிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். 27 அவள் தன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்தவளாக இருந்தால், அந்த தண்ணீர் அவளுக்குப் பெருந்துன்பத்தை அளிக்கும். அத்தண்ணீர் அவள் உடம்புக்குள் சென்று அவளுக்குப் பெருந்துன்பத்தைக் கொடுக்கும். அவள் கருவிலுள்ள எந்தக் குழந்தையும், அது பிறக்கு முன்னரே மரித்துப்போகும். அவள் என்றென்றும் குழந்தை பெற முடியாமல் இருப்பாள். அவள் அவளது ஜனங்களின் மத்தியில் சபிக்கப்பட்டவளாக இருப்பாள். 28 ஆனால் அவள் தன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்யாமல், சுத்தமானவளாக இருந்தால், ஆசாரியன் அவளைக் குற்றமற்றவள் என்று கூறுவான். பின் அவள் சாதாரணமானவளாக குழந்தைகளைப் பெறுவாள்.

29 “இதுவே பொறாமை அல்லது சந்தேகம் பற்றிய சட்டமாகும். ஒருத்தி ஒருவனுக்குத் திருமணத்தின் மூலம் மனைவியான பிறகு, அவனுக்கு எதிராகப் பாவம் செய்தால், நீங்கள் இதையே செய்ய வேண்டும். 30 ஒரு கணவன் தன் மனைவி மீது பொறாமை கொண்டு அவளைச் சந்தேகப்பட்டாலும், அவன் இந்தப் பரிகாரத்தையே செய்ய வேண்டும். ஆசாரியன் அந்தப் பெண்ணை கர்த்தரின் முன்னிலையில் நிற்கச் செய்து இவற்றையெல்லாம் செய்ய வேண்டும். இதுதான் சட்டம். 31 அவள் தவறினிமித்தம் அவள் கணவனுக்கு எதுவும் நேரிடாது. ஆனால் அந்தப் பெண்ணோ தன் பாவத்தினிமித்தம் துன்பப்படுவாள்” என்று கூறினார்.

நசரேயர்கள்

கர்த்தர் மோசேயிடம், “இவற்றை இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தன் ஜனங்களிடமிருந்து தனியே பிரிந்து வாழ வேண்டும் என்று விரும்பலாம். இந்த விரதகாலம் ஒருவன் தன்னையே முழுக்க கர்த்தருக்கு சில காலம் ஒப்படைத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இத்தகையவனை ‘நசரேயன்’ என அழைப்பார்கள். இக்காலக் கட்டத்தில், அவன் திராட்சைரசமோ, போதை தரும் வேறு பானமோ குடிக்கக் கூடாது. அவன் திராட்சைரசம் மற்றும் மதுபானத்தின் காடியையோ குடிக்கக் கூடாது. திராட்சைரசத்தால் செய்த எவ்வித பானத்தையோ திராட்சைப் பழங்களையோ, காய்ந்த திராட்சைகளையோ உண்ணாமல் இருக்க வேண்டும். இந்த விரத காலத்தில் அவன் திராட்சைச் செடியின் எந்த உணவுப் பொருட்களையும், உண்ணக் கூடாது, அவன் திராட்சைப் பழத்தின் தோலையும் விதைகளையும் கூட உண்ணக்கூடாது.

“இந்த விரதகாலத்தில் அவன் தனது தலை முடியைக் கூட வெட்டிக் குறைத்துக்கொள்ளக் கூடாது. தனது விரத நாட்கள் முடியும் வரையில் அவன் பரிசுத்தமாக இருக்க வேண்டும். அவன் தன் தலைமுடியை வளரவிட வேண்டும். அவனது தலை முடியானது அவன் தேவனுக்குச் செய்த பொருத்தனையின் ஒரு பகுதியாகும். அவன் அந்த முடியை வெட்டாமலிருப்பது தேவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதின் அடையாளம். எனவே விரதகாலம் முடிகிறவரை தனது தலைமுடியை நீளமாக வளரவிட வேண்டும்.

“இவ்விரதக் காலத்தில் ஒரு நசரேயன் பிணத்தின் அருகில் செல்லக்கூடாது. ஏனென்றால் அவன் கர்த்தருக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இருக்கிறான். ஒரு வேளை அவனது தாயோ, தந்தையோ, அல்லது சகோதரனோ, சகோதரியோ கூட மரித்து போயிருக்கலாம். எனினும் அவன் அவர்களைத் தொடக் கூடாது. அது அவனைத் தீட்டு உள்ளவனாக ஆக்கும். அவன் தன்னைத் தனிப்பட்டவன் என்றும், தன்னை தேவனுக்கு முழுமையாகக் கொடுத்திருக்கிறான் என்பதையும் காட்ட வேண்டும். விரதகாலம் முழுமைக்கும் அவன் தன்னை முழுவதுமாக கர்த்தரிடம் ஒப்படைக்கிறான். நசரேய விரதம் கொள்பவன், இன்னொருவனோடு இருக்கும்போது, தீடீரென்று அந்த மற்றவன் மரித்துப் போனதாக வைத்துக்கொள்வோம். அவனையறியாமலேயே மரித்தவனைத் தொட்டிருப்பானேயானால், அவன் தீட்டுள்ளவனாகக் கருதப்படுகிறான். இவ்வாறு நிகழ்ந்தால் அவன் தலைமுடியை முழுக்க மழித்துக்கொள்ள வேண்டும். (அந்தத் தலை முடியானது அவனது விசேஷ அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும்.) ஏழாவது நாள் தன் முடியை வெட்டிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அன்றைக்குத்தான் அவன் தீட்டு இல்லாதவனாகிறான். 10 எட்டாவது நாள், நசரேய விரதம் கொள்ளும் அவன், இரண்டு புறாக்களையும் இரண்டு புறாக் குஞ்சுகளையும் ஆசாரியனிடம் கொண்டுவரவேண்டும். அவன் இவற்றை ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 11 பிறகு ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவப்பரிகாரப் பலியாகவும் இன்னொன்றைத் தகன பலியாகவும் தரவேண்டும். இந்த தகனபலியானது நசரேய விரதத்தில் அவன் செய்த பாவத்திற்குரிய காணிக்கையாகும். (அவன் பிணத்தின் அருகில் இருந்ததால் பாவம் செய்தவனாகக் கருதப்படுகிறான்.) அந்த வேளையில், அவன் தன் தலைமுடியை மீண்டும் தேவனுக்கு தருவதாக வாக்களிக்க வேண்டும். 12 அவன் மீண்டும் ஒருமுறை கர்த்தருக்காகத் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்து தனியாக சில காலம் நசரேய விரதம் இருக்க வேண்டும். அவன் ஓராண்டான ஆட்டுக் குட்டியைக் கொண்டு வந்து அதை குற்ற பரிகார பலியாகக் கொடுக்க வேண்டும். அவன் விரதம் இருந்த நாட்களெல்லாம் மறக்கப்படும். எனவே, அவன் புதிதாக விரதம் அனுசரிக்க வேண்டும். அவன் முதலில் விரதம் இருக்கும்போது, பிணத்தைத் தொட்டதினால் தீட்டானதே இதற்குக் காரணம்.

13 “அவனது விரதகாலம் முடிந்தபிறகு, ஒரு நசரேயன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குப் போக வேண்டும். 14 அவன் தனது காணிக்கையை கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும். அவன்:

தகன பலிக்காக ஒரு வயதான, எவ்விதக் குறைபாடும் இல்லாத ஆட்டுக்குட்டியையும்;

பாவப்பரிகார பலிக்காக ஒரு வயதான, குறைபாடுகளற்ற ஒரு பெண் ஆட்டுக்குட்டியையும்,

சமாதான பலிக்காக குறைபாடுகளற்ற ஆட்டுக் கடாவையும்,

15 தானிய காணிக்கைக்காக கூடை நிறைய எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவில் செய்த அதிரசங்களையும்,

எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும் காணிக்கையாக செலுத்த வேண்டும்.

16 “இவை அனைத்தையும் கர்த்தருக்கு ஆசாரியன் கொடுக்கவேண்டும். பிறகு, அவன் பாவப் பரிகார பலியையும், தகன பலியையும் செலுத்த வேண்டும். 17 புளிப்பில்லாத அதிரசங்கள் நிறைந்த கூடையை கர்த்தருக்கு ஆசாரியன் கொடுக்க வேண்டும். சமாதான பலிக்காக அவன் ஆட்டுக் கடாவைக் கொல்ல வேண்டும். பிறகு அவன் தானிய காணிக்கையையும், பானங்களின் காணிக்கையையும் அளிக்க வேண்டும்.

18 “நசரேய விரதம் கொண்டவன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் செல்ல வேண்டும். அவன் அங்கே கர்த்தருக்காக வளர்த்த தலை முடியை மழித்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனை சமாதானப் பலிக்குக் கீழ் நெருப்பில் போட்டு எரிக்க வேண்டும்.

19 “நசரேய விரதம் கொண்டவன், தன் தலை முடியை மழித்தபிறகு ஆசாரியன் வேகவைத்த ஆட்டுக்கடாவின் தோள்பாகத்தையும், கூடையில் உள்ள புளிப்பில்லாத அதிரசம் மற்றும் அடையையும் அவனுடைய உள்ளங்கையில் வைக்க வேண்டும். 20 பின்னர் ஆசாரியன் இவற்றை கர்த்தருக்கு முன் அசைவாட்டும் பலியாக ஏறெடுக்க வேண்டும். அது அசைவாட்டப்பட்ட மார்க்கண்டத்தோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும் ஆசாரியனுக்கு உரியதாகும். ஆட்டுக் கடாவின் மார்க்கண்டத்தையும், தொடையையும் கர்த்தருக்கு முன்பு அசைவாட்டும் பலி செய்வார்கள். அவைகளும் ஆசாரியனுக்கு உரியதாகும். அதற்குப் பிறகு நசரேய விரதம் கொண்டவன், திராட்சை ரசம் குடிக்கலாம்.

21 “நசரேய விரதம் கொள்ளும் ஒருவன், கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவையாகும். அவன் அனைத்து அன்பளிப்புகளையும் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் ஒருவன் மிக அதிக அளவில் கர்த்தருக்கு அன்பளிப்பு தரும் வசதியைக் கொண்டிருக்கலாம். ஒருவன் அவ்வாறு மிகுதியாக அன்பளிப்பு கொடுப்பதாக வாக்குத்தந்தால் பிறகு அந்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் அவன் குறைந்தபட்சமாக நசரேய விதிகளில் சொல்லியபடியாவது காணிக்கை செலுத்த வேண்டும்” என்றார்.

ஆசாரியனின் ஆசீர்வாதங்கள்

22 கர்த்தர் மோசேயிடம், 23 “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும், சொல்ல வேண்டியதாவது: நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்போது,

24 “‘கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காப்பாற்றுவாராக!
25 கர்த்தர் உன்னிடம் நல்லவராக இருந்து
    அவர் உனக்குக் கருணை காட்டுவாராக!
26 உனது ஜெபங்களுக்கு கர்த்தர் பதில் தருவாராக!
    அவர் உனக்குச் சமாதானத்தைத் தருவாராக!’ என்று சொல்லுங்கள்” என்றார்.

27 “இவ்வாறு ஆரோனும், அவனது மகன்களும் எனது நாமத்தைச் சொல்லி இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டும். நானும் அவர்களை ஆசீர்வதிப்பேன்” என்று கூறினார்.

மாற்கு 4:1-20

உழவன்-விதை பற்றிய உவமை(A)

இயேசு மறுபடியும் கடற்கரையோரத்தில் போதிக்கத் தொடங்கினார். ஏராளமான மக்கள் இயேசுவைச் சூழ்ந்துகொண்டார்கள். ஆகையால் இயேசு படகில் ஏறி ஏரிக்குள் சென்றார். எல்லா மக்களும் ஏரிக்கரையில் நின்றுகொண்டனர். இயேசு படகில் இருந்த வண்ணம் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அவர் மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு பல உவமைகளைப் பயன்படுத்தினார்.

அவர் சொன்னார், “கேளுங்கள், ஓர் உழவன் தன் விதையை விதைக்கச் சென்றான். உழவன் விதைத்துக் கொண்டு இருக்கும்போது சில விதைகள் பாதையில் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டுச் சென்றன. சில விதைகள் பாறை போன்ற நிலத்தில் விழுந்தன. அதில் போதிய ஆழமான மண்ணில்லை. அதனால் அந்த விதைகள் வேகமாக முளைத்தன. ஆனால் சூரியன் ஏற வெப்பத்தால் அவை கருகிவிட்டன. அவற்றுக்கு ஆழமான வேர் இல்லாததால் பிழைக்கவில்லை. சில விதைகள் முட்புதர்களில் விழுந்தன. முட்புதர்கள் வளர்ந்து, விதைகள் முளைத்து வளராதபடி முடக்கிவிட்டன. எனவே, விதைகள் தானியங்களைத் தரவில்லை. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. விதைகள் அவற்றில் நன்றாக வளர ஆரம்பித்தன. அவை வளர்ந்து பலன் தர ஆரம்பித்தது. சில செடிகள் முப்பது தானியங்களையும், சில அறுபது தானியங்களையும், சில நூறு தானியங்களையும் தந்தன,”

பிறகு இயேசு, “நான் சொல்வதைக் கேட்கத்தக்கவர்கள் கவனிக்கட்டும்” என்றார்.

உவமைகள் ஏன்-விளக்கம்(B)

10 பிறகு இயேசு மக்களைவிட்டுத் தொலைவாகச் சென்றார். பன்னிரண்டு சீஷர்களும் மற்றும் அவரைச் சுற்றி இருந்தவர்களும் அவர் பயன்படுத்தும் உவமைகளைப் பற்றிக் கேட்டார்கள்.

11 இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். 12 நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்:

“‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது.
    அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும்,
மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” (C)

என்றார்.

விதைபற்றிய உவமை-விளக்கம்(D)

13 இயேசு தன் சீஷர்களிடம், “உங்களால் இந்த உவமையைப் புரிந்துகொள்ள முடிகிறதா? முடியாவிடில் மற்ற உவமைகளை நீங்கள் எப்படி புரிந்துகொள்ளப் போகிறீர்கள்? 14 இதில் உழவன் என்பவன் தேவனுடைய போதனைகளை மக்களிடம் நடுபவனே. 15 சில நேரங்களில் அப்போதனை வழிப்பாதையில் விழும். சிலர் தேவனின் போதனைகளைக் கேட்பார்கள். ஆனால் சாத்தான் வந்து அப்போதனை வளராதபடி எடுத்துச் சென்றுவிடுவான்.

16 “பாறைகளில் விழுந்த விதைகளைப்போலச் சிலர் காதில் போதனை விழுகின்றன. அவர்கள் அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வர். 17 ஆனால் அவர்கள் அப்போதனைகள் அவர்களது வாழ்வில் ஆழமாகச் செல்ல அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் அவற்றைக் கொஞ்ச காலமே வைத்திருப்பர். ஆனால் அந்தப் போதனையை ஏற்றதால் கஷ்டமோ, பிறர் மூலம் துன்பமோ வரும்போது அவர்கள் அவற்றை உடனே கைவிட்டு விடுவர்.

18 “இன்னும் சிலரோ, முட்செடிகளில் விழுந்த விதைகளைப்போன்று போதனையைக் கேட்டுக்கொள்கின்றனர். 19 வாழ்க்கைத் துன்பங்களும், பண ஆசைகளும் பிற எல்லாவிதமான காரியங்களின் மீதுள்ள விருப்பங்களும் இவர்களிடம் போதனைகள் வளராமல் செய்துவிடுகின்றன. எனவே இவர்கள் வாழ்க்கையில் போதனை எந்தவிதமான பலனையும் உண்டாக்குவதில்லை.

20 “மற்றவர்கள் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போன்று இருக்கின்றனர். அவர்கள் போதனையைக் கேட்டு, ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் முப்பது மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் நூறு மடங்காகவும் பலன் தருகின்றனர்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center