Old/New Testament
நாடுகளின் வளர்ச்சியும் பரவலும்
10 சேம், காம், யாப்பேத் ஆகியோர் நோவாவின் குமாரர்கள். வெள்ளப் பெருக்குக்குப் பின் இவர்கள் மேலும் பல பிள்ளைகளுக்குத் தந்தை ஆனார்கள். இங்கே அவர்களின் பிள்ளைகள் பற்றிய பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
யாப்பேத்தின் சந்ததி
2 கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் ஆகியோர் யாப்பேத்தின் குமாரர்கள்.
3 அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா ஆகியோர் கோமரின் குமாரர்கள்.
4 எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் ஆகியோர் யாவானின் குமாரர்கள்.
5 மத்தியத்தரைக் கடல் பகுதியில் வாழ்ந்த ஜனங்கள் யாப்பேத்தின் வழி வந்தவர்கள். ஒவ்வொரு குமாரனும் தனக்குரிய சொந்த நிலத்தைப் பெற்றிருந்தான். ஒவ்வொரு குடும்பமும் பெருகி வெவ்வேறு நாடுகளாயின. ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு தனி மொழியைப் பெற்றது.
காமின் சந்ததி
6 கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் ஆகியோர் காமின் பிள்ளைகள்.
7 சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா, ஆகியோர் கூஷின் பிள்ளைகள்.
சேபா, திதான் ஆகியோர் ராமாவின் பிள்ளைகள்.
8 கூஷ் நிம்ரோத்தை பெற்றான். நிம்ரோத் பூமியில் மிக வல்லமை மிக்க வீரன் ஆனான். 9 இவன் கர்த்தருக்கு முன்னால் பெரிய வேட்டைக்காரனாக இருந்தான். இதனால் “கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோத்தைப்போல” என்ற வழக்குச்சொல் உண்டானது.
10 நிம்ரோத்தின் அரசாட்சி பாபேலிலிருந்து ஏரேக், அக்காத், சிநெயார் நாட்டிலுள்ள கல்னேவரை பரவியிருந்தது. 11 நிம்ரோத் அசீரியாவுக்குப் போனான், அங்கு நினிவே, ரெகொபோத், காலாகு, ரெசேன் ஆகிய நகரங்களைக் கட்டினான். 12 (ரெசேன் நகரமானது நினிவேக்கும் காலாகுக்கும் இடைப்பட்ட பெரிய நகரம்)
13 லூதி, ஆனாமீ, லெகாபீ, நப்தூகீம், 14 பத்ருசீம், பெலிஸ்தர், கஸ்லூ, கப்தொர் ஆகியோரின் தந்தை மிஸ்ராயீம்.
15 கானான் சீதோனின் தந்தையானான். இவன் கானானின் மூத்தகுமாரன். கானான் கேத்துக்கும் தந்தை. கேத் கேத்தியர்களின் தந்தை ஆனான். 16 எபூசியர், எமோரியர், கிர்காசியர், 17 ஈவியர், அர்க்கீரியர், சீநியர், 18 அர்வாதியர், செமாரியர், காமாத்தியர், ஆகியோருக்கும் கானான் தந்தை ஆனான்.
இவனது சந்ததியினர் உலகின் பல பாகங்களிலும் பரவினர். 19 கானான் தேசத்தில் இருந்தவர்களுக்கு தம் எல்லையாக சீதோன் முதல் கேரார் வழியாய் காசா மட்டும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசா மட்டும் இருந்தது.
20 இவர்கள் அனைவரும் காமுடைய சந்ததியார்கள். இக்குடும்பத்தினர் அனைவரும் தங்களுக்கென்று சொந்த மொழியும் சொந்த பூமியும் உடையவர்களாய் இருந்தனர். அவர்கள் தனித்தனி நாட்டினராயும் ஆயினர்.
சேமின் சந்ததி
21 சேம், யாப்பேத்தின் மூத்த சகோதரன். அவனது சந்ததியில் ஒருவனே ஏபேர். எபேரே எபிரெய ஜனங்கள் அனைவருக்கும் தந்தையானான்.[a]
22 ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் ஆகியோர் சேமின் பிள்ளைகள்.
23 ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் ஆகியோர் ஆராமின் பிள்ளைகள்.
24 அர்பக்சாத்தின் குமாரன் சாலா.
சாலாவின் குமாரன் ஏபேர்.
25 ஏபேருக்கு இரு குமாரர்கள். ஒருவன் பேர் பேலேகு. அவனுடைய நாட்களில்தான் பூமி பகுக்கப்பட்டது. யொக்தான் இன்னொரு குமாரன்.
26 அல்மோதாத், சாலேப் அசர்மாவேத், யேராகை, 27 அதோராம், ஊசால், திக்லா, 28 ஓபால், அபிமாவேல், சேபா, 29 ஒப்பீர், ஆவிலா, யோபா ஆகியோரை யொக்தான் பிள்ளைகளாகப் பெற்றான். 30 இவர்களின் பகுதிகள் மேசா துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழி மட்டும் இருந்தது.
31 இவர்கள் அனைவரும் சேமுடைய வாரிசுகள். இவர்கள் அனைவரும் தம் குடும்பங்கள், மொழிகள், நாடுகள், தேசங்கள், வழியாக வரிசைப்படுத்தப்பட்டவர்கள்.
32 நோவாவின் பிள்ளைகளால் உருவான குடும்பப்பட்டியல் இதுதான். இவர்கள் தங்கள் நாடுகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்குக்குப் பிறகு இக்குடும்பங்கள் தோன்றி பூமி முழுவதும் பரவினர்.
உலகம் பிரிக்கப்பட்டது
11 வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர். 2 ஜனங்கள் கிழக்கே இருந்து பயணம் செய்து சிநெயார் நாட்டில் ஒரு சமவெளியைக் கண்டு அங்கே தங்கினர். 3 ஜனங்கள், “நாம் செங்கற்களைச் செய்து, நெருப்பில் அவற்றைச் சுடுவோம். அது பலமுடையதாகும்” என்றனர். எனவே ஜனங்கள் கற்களைப் பயன்படுத்தாமல் செங்கற்களைப் பயன்படுத்தி வீடு கட்டினர். சாந்துக்கு பதிலாக தாரைப் பயன்படுத்தினர்.
4 மேலும் ஜனங்கள், “நமக்காக நாம் ஒரு நகரத்தை நிர்மாணிக்க வேண்டும். ஒரு பெரிய கோபுரத்தை வானத்தை எட்டுமளவு கட்ட வேண்டும். நாம் புகழ் பெறுவோம். அது நம்மை ஒன்றுபடுத்தும். பூமி எங்கும் பரவிப் போகாமல் இருக்கலாம்” என்றனர்.
5 கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்து அவர்கள் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதைப் பார்வையிட்டார். 6 கர்த்தர், “இந்த ஜனங்கள் அனைவரும் ஒரே மொழியையே பேசுகின்றனர். இவர்கள் சேர்ந்து இவ்வேலையைச் செய்வதை நான் பார்க்கிறேன். இவர்களால் சாதிக்கக் கூடியவற்றின் துவக்கம்தான் இது. இனி இவர்கள் செய்யத்திட்டமிட்டுள்ள எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். 7 எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்று சொன்னார்.
8 அவ்வாறே, கர்த்தர் ஜனங்களை பூமி முழுவதும் சிதறிப் போகும்படி செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தைக் கட்டி முடிக்க முடியாமல் போயிற்று. 9 உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச் செய்தார்.
சேம் குடும்பத்தின் வரலாறு
10 இது சேமின் குடும்பத்தைப்பற்றி கூறுகின்ற பகுதி: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சேமுக்கு 100 வயதானபோது அர்பக்சாத் என்னும் குமாரன் பிறந்தான். 11 அதன் பிறகு அவன் 500 ஆண்டுகள் வாழ்ந்தான். அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் இருந்தனர்.
12 அர்பக்சாத்துக்கு 35 வயதானபோது சாலா என்னும் குமாரன் பிறந்தான். 13 சாலா பிறந்த பின் அர்பக்சாத் 403 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்தனர்.
14 சாலாவுக்கு 30 வயதானபோது ஏபேர் பிறந்தான். 15 ஏபேர் பிறந்தபின் சாலா 403 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்தனர்.
16 ஏபேருக்கு 34 வயதானபோது பேலேகைப் பெற்றான். 17 பேலேக் பிறந்த பின் ஏபேர் 430 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்தனர்.
18 பேலேக்குக்கு 30 வயதானபோது அவனது குமாரன் ரெகூ பிறந்தான். 19 ரெகூ பிறந்த பின் பேலேகு 209 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்தனர்.
20 ரெகூவுக்கு 32 வயது ஆனதும் அவனது குமாரன் செரூகைப் பெற்றான். 21 செரூகு பிறந்தபின் ரெகூ 207 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்தனர்.
22 செரூகுக்கு 30 வயது ஆனதும் நாகோர் பிறந்தான். 23 நாகோர் பிறந்தபின் செரூகு 200 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்தனர்.
24 நாகோருக்கு 29 வயது ஆனதும் அவனது குமாரன் தேராகைப் பெற்றான். 25 தேராகு பிறந்ததும் நாகோர் 119 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு குமாரர்களும் குமாரத்திகளும் பிறந்தனர்.
26 தேராகுக்கு 70 வயதானபோது அவனது குமாரர்கள் ஆபிராம், நாகோர், ஆரான் பிறந்தார்கள்.
தேராகு குடும்பத்தின் வரலாறு
27 இது தேராகு குடும்பத்தின் வரலாறு ஆகும். தேராகு என்பவன் ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோரின் தந்தையானவன். ஆரான் லோத்தின் தந்தையானவன். 28 ஆரான் தனது பிறந்த நகரமான பாபிலோனியாவில் உள்ள ஊர் என்ற இடத்தில் மரணமடைந்தான். அப்போது அவனது தந்தையான தேராகு உயிரோடு இருந்தான். 29 ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்துகொண்டனர். ஆபிராமின் மனைவியின் பெயர் சாராய். நாகோரின் மனைவியின் பெயர் மில்காள். இவள் ஆரானுடைய குமாரத்தி. ஆரான் மில்காளுக்கும் இஸ்காளுக்கும் தந்தை. 30 சாராய் பிள்ளைகள் இல்லாமல் மலடியாய் இருந்தாள்.
31 தேராகு தனது குடும்பத்தோடு பாபிலோனியாவில் உள்ள ஊர் எனும் இடத்தை விட்டுப் போனான். அவர்கள் கானானுக்குப் போகத் திட்டமிட்டனர். தேராகு தனது குமாரன் ஆபிராமையும் பேரன் லோத்தையும், மருமகள் சாராவையும் தன்னோடு அழைத்துச் சென்றான். அவர்கள் ஆரான் நகரத்துக்கு போய் அங்கே தங்கிவிட முடிவு செய்தனர். 32 தேராகு 205 ஆண்டுகள் வாழ்ந்து அங்கேயே மரணமடைந்தான்.
தேவன் ஆபிராமை அழைக்கிறார்
12 கர்த்தர் ஆபிராமிடம்,
“நீ உனது
ஜனங்களையும், நாட்டையும்,
தந்தையின் குடும்பத்தையும்விட்டு வெளியேறி நான் காட்டும் நாட்டுக்குப் போ.
2 நான் உன் மூலமாக ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன்.
நான் உன்னை ஆசீர்வதிப்பேன்.
உனது பெயரைப் புகழ்பெறச் செய்வேன்.
ஜனங்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்க உன் பெயரைப் பயன்படுத்துவர்.
3 உன்னை ஆசீர்வதிக்கிற ஜனங்களை நான் ஆசீர்வதிப்பேன்.
உன்னை சபிப்பவர்களை நான் சபிப்பேன்.
நான் உன் மூலம் பூமியிலுள்ள
அனைத்து ஜனங்களையும் ஆசீர்வதிப்பேன்” என்றார்.
ஆபிராம் கானானுக்குப் போகிறான்
4 எனவே, ஆபிராம் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஆரானை விட்டுப் போனான். லோத்து அவனோடு சென்றான். அப்போது ஆபிராமுக்கு 75 வயது. 5 ஆபிராம் ஆரானை விட்டு போகும்போது தன் மனைவி சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனான லோத்தையும், எல்லா அடிமைகளையும், ஆரானில் அவனுக்குச் சொந்தமான அனைத்தையும் எடுத்துக்கொண்டு போனான். அவர்கள் ஆரானை விட்டுக் கானானை நோக்கிப் பயணம் செய்தனர். 6 ஆபிராம் கானான் தேசத்தின் வழியாகப் பயணம் செய்து சீகேம் நகரம் வழியே மோரேயில் இருக்கும் பெரிய மரங்கள் உள்ள இடத்திற்கு வந்தான். அக்காலத்தில் அங்கு கானானியர் வாழ்ந்தனர்.
7 கர்த்தர் ஆபிராமுக்குக் காட்சியளித்து, “நான் உன் சந்ததிக்கு இத்தேசத்தைக் கொடுப்பேன்” என்றார்.
கர்த்தர் காட்சியளித்த இடத்தில் ஆபிராம் கர்த்தரைத் தொழுகைசெய்ய ஒரு பலிபீடத்தைக் கட்டினான். 8 பின் ஆபிராம் அந்த இடத்தை விட்டு பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போனான். அங்கு அவன் கூடாரம் போட்டான். பெத்தேல் நகரம் மேற்காக இருந்தது. ஆயீ நகரம் அதற்குக் கிழக்கே இருந்தது. அங்கு ஒரு பலிபீடத்தை கர்த்தருக்கு அமைத்து கர்த்தரைத் தொழுதுகொண்டான். 9 மீண்டும் ஆபிராம் பயணம் செய்து பாலைவனப் பகுதிக்குச் சென்றான்.
எகிப்தில் ஆபிராம்
10 அந்நாட்களில் பூமியில் பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லாததால் உணவுப் பொருட்களும் விளையாமல் இருந்தது. எனவே ஆபிராம் எகிப்திற்கு பிழைப்பதற்காகப் போனான். 11 தன் மனைவி சாராய் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று எண்ணிய அவன், எகிப்தை நெருங்குவதற்கு முன் சாராயிடம், “நீ வெகு அழகான பெண் என்பது எனக்குத் தெரியும். 12 எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது அவர்கள், ‘இவள் இவனுடைய மனைவி’ என்று பேசுவார்கள் பிறகு உன்னை அடைய விரும்பி என்னைக் கொன்றுவிடுவார்கள். 13 அதனால் நான் அவர்களிடம் நீ என் சகோதரி என்று கூறுவேன். பிறகு அவர்கள் என்னைக் கொல்லமாட்டார்கள். நான் உன் சகோதரன் என்பதால் அவர்கள் என் மீது கருணையோடு இருப்பார்கள். இவ்வகையில் நீ என் உயிரைக் காப்பாற்றலாம்” என்றான்.
14 எனவே ஆபிராம் எகிப்துக்குப் போனான். அங்குள்ள ஜனங்கள் சாராய் மிகவும் அழகானவளாக இருப்பதைப் பார்த்தனர். 15 சில எகிப்தின் தலைவர்களும் அவளைப் பார்த்தனர். அவள் மிகவும் அழகான பெண் என்று அவர்கள் பார்வோனிடம் கூறினர். அவர்கள் அவளை பார்வோனுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். 16 ஆபிராமை சாராயின் சகோதரனாக எண்ணி பார்வோனும் ஆபிராமிடம் அன்பாக இருந்தான். பார்வோன் அவனுக்கு ஆடுகள், மாடுகள், பெண் வேலையாட்கள், கழுதைகள், ஒட்டகங்கள் என்று பலவற்றைக் கொடுத்தான்.
17 பார்வோன் ஆபிராமின் மனைவியை எடுத்துக்கொண்டான். எனவே பார்வோனும் அவனது வீட்டில் உள்ளவர்களும் கொடிய வியாதியுறுமாறு கர்த்தர் சபித்துவிட்டார். 18 எனவே பார்வோன் ஆபிராமை அழைத்தான். அவன், “நீ எனக்கு மிகக் கெட்ட காரியத்தைச் செய்துள்ளாய்! சாராய் உன் மனைவி என்று சொல்லாமல், 19 அவளை உன் சகோதரி என்று ஏன் சொன்னாய்? நான் அவளை எடுத்துக்கொண்டதால் அவள் எனது மனைவியாக இருந்திருப்பாளே. ஆனால் இப்பொழுது உன் மனைவியை உனக்கு நான் திரும்பிக் கொடுக்கிறேன். அவளை அழைத்துகொண்டு போய்விடு” என்றான். 20 பிறகு, பார்வோன் தன் வீரர்களிடம், ஆபிராமை நாட்டைவிட்டு வெளியே அனுப்புமாறு கட்டளையிட்டான். எனவே, ஆபிராமும் அவனது மனைவியும் அவர்களுக்குச் சொந்தமானவற்றை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.
இயேசுவுக்குண்டான சோதனைகள்
(மாற்கு 1:12-13; லூக்கா 4:1-13)
4 பின்னர் பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்துக்கு அழைத்துச் சென்றார். பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக இயேசு அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். 2 அங்கு நாற்பது நாள் இரவும் பகலும் இயேசு உணவேதும் உட்கொள்ளவில்லை. அதன் பின், இயேசுவுக்கு மிகுந்த பசியுண்டாயிற்று. 3 அப்போது அவரை சோதிக்கப் பிசாசு வந்து, அவரிடம், “நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால், இந்தக் கற்களை அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான்.
4 அதற்கு இயேசு, “‘மக்களை வாழவைப்பது வெறும் அப்பம் மட்டுமல்ல. மக்களின் வாழ்வு தேவனின் வார்த்தைகளைச் சார்ந்துள்ளது’(A) என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதிலளித்தார்.
5 பின்பு பிசாசு இயேசுவைப் பரிசுத்த நகரமான எருசலேமுக்கு அழைத்துச் சென்றான். பிசாசு இயேசுவை தேவாலயத்தின் மிக உயரமான இடத்தில் கொண்டுபோய் நிறுத்தி, 6 “நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால், இங்கிருந்து கீழே குதியும். ஏனென்றால்,
“‘தேவன் உமக்காகத் தன் தூதர்களுக்குக் கட்டளையிடுவார்,
தூதர்களின் கரங்கள் உன்னைப் பற்றும்.
ஆகவே உன் கால்கள் பாறைகளில் மோதாது’(B)
என்று வேதவாக்கியங்களில் எழுதியிருக்கிறது” எனக் கூறினான்.
7 அதற்கு இயேசு, “‘தேவனாகிய உன் கர்த்தரை சோதிக்கக் கூடாது’(C) என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதில் சொன்னார்.
8 பிசாசு பின்னர் இயேசுவை மிக உயரமான ஒரு மலைச் சிகரத்திற்கு அழைத்துச் சென்று, உலகின் எல்லா நாடுகளையும் அவற்றின் மகிமைகளையும் பொருட்களையும் காட்டினான். 9 பிறகு பிசாசு இயேசுவிடம், “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் நான் உமக்குத் தருவேன்” என்றான்.
10 இயேசு பிசாசை நோக்கி, “சாத்தானே, என்னை விட்டு விலகிச் செல்! “‘நீ உன் தேவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும். அவருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும்!’(D) என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது” என்று கூறினார்.
11 எனவே பிசாசு இயேசுவை விட்டு விலகினான். அதன் பிறகு சில தூதர்கள் வந்து அவருக்குச் சேவை செய்தனர்.
கலிலேயாவில் இயேசுவின் ஊழியம்
(மாற்கு 1:14-15; மத்தேயு 4:14-15)
12 யோவான் சிறையிலடைக்கப்பட்டதை இயேசு கேள்வியுற்றார். எனவே, இயேசு கலிலேயாவிற்குத் திரும்பிச் சென்றார். 13 இயேசு நாசரேத்தில் தங்கவில்லை. அவர் கலிலேயா ஏரிக்கு அருகிலிருந்த கப்பர்நகூம் நகருக்குச் சென்று வசித்தார். செபுலோனுக்கும் நப்தலிக்கும் அருகில் உள்ளது கப்பர்நகூம். 14 தீர்க்கதரிசி ஏசாயா கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறும்படி இயேசு இவ்வாறு செய்தார்:
15 “செபுலோன் என்னும் இடமும் நப்தலி என்னும் இடமும்
யோர்தான் நதியைக் கடந்து கடலுக்குப் போகும் சாலையில்
16 யூதர்கள் அல்லாத பிற இனத்தவர் வாழும் இடமாக உள்ளது கலிலேயா.
பாவ இருளில் வாழ்ந்த அவர்கள் மிகப் பெரிய வெளிச்சமொன்றைக் கண்டனர்.
ஒரு சுடுகாட்டைப் போல இருளடைந்து கிடக்கும்
அப்பூமியில் வாழும் மக்களை நோக்கி அந்த வெளிச்சம் வந்தது.”(E)
17 அச்சமயத்திலிருந்து இயேசு, “உங்கள் மனதையும் வாழ்வையும் திருத்துங்கள், ஏனென்றால் பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது” என்று போதனை செய்யத் தொடங்கினார்.
சீஷர்களைத் தேர்ந்தெடுத்தல்
(மாற்கு 1:16-20; லூக்கா 5:1-11)
18 இயேசு கலிலேயா ஏரிக்கரையோரம் நடந்துகொண்டிருந்தார். பேதுரு என்றழைக்கப்பட்ட சீமோனையும் அவன் சகோதரன் அந்திரேயாவையும் அவர் கண்டார். மீனவர்களான அச்சகோதரர்கள் இருவரும் ஏரியில் வலைவிரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். 19 இயேசு அவர்களிடம், “என்னைத் தொடர்ந்து வாருங்கள். உங்களை மாறுபட்ட மீனவர்களாக்குவேன். மீன்களை அல்ல மனிதர்களை சேகரிக்கும் வேலையைச் செய்வீர்கள்” என்று சொன்னார். 20 சீமோனும் அந்திரேயாவும் தங்கள் வலைகளை விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.
21 இயேசு கலிலேயா ஏரிக்கரையோரம் தொடர்ந்து நடந்து செல்லும்போது செபெதேயுவின் புதல்வர்களான யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய சகோதரர்களைக் கண்டார். அவர்கள் இருவரும் ஒரு படகில் தம் தந்தையோடு இருந்தனர். அவர்கள் மீன் பிடிப்பதற்காகத் தங்களது வலையைத் தயார் செய்து கொண்டிருந்தனர். இயேசு அந்தச் சகோதரர்களைத் தம்முடன் வருமாறு அழைத்தார். 22 எனவே, அச்சகோதரர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.
போதனையும் குணமாக்குதலும்
(லூக்கா 6:17-19)
23 இயேசு கலிலேயா நாடு முழுவதும் உள்ள இடங்களுக்குச் சென்றார். அவர்கள் ஜெப ஆலயங்களில் இயேசு தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்திகளைப் போதித்தார். மேலும், மக்களின் அனைத்து விதமான நோய்களையும் வியாதிகளையும் இயேசு குணப்படுத்தினார். 24 இயேசுவைப் பற்றிய செய்தி சீரியா தேசம் முழுவதும் பரவியது. நோயுற்ற மக்கள் அனைவரையும் இயேசுவிடம் அழைத்து வந்தனர். நோயுற்ற அம்மக்கள் பலவிதமான வியாதிகளாலும் வலியினாலும் அவதியுற்றனர். சிலர் மிகுந்த வலியினாலும், சிலர் பிசாசு பிடித்தும், சிலர் வலிப்புநோயினாலும், சிலர் பாரிச வியாதியாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். இயேசு அவர்கள் அனைவரையும் குணமாக்கினார். 25 பற்பல மக்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். அம்மக்கள் கலிலேயா, பத்துநகரங்கள், எருசலேம், யூதேயா மற்றும் யோர்தான் நதியின் அக்கரை முதலான பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.
2008 by World Bible Translation Center