Old/New Testament
34 பின்பு எலிகூ தொடர்ந்து பேசினான். அவன்:
2 “நான் கூறுபவற்றை கேளுங்கள், ஞானிகளே,
நான் சொல்வதைக் கவனியுங்கள், அறிஞர்களே.
3 உங்கள் நாவு, அது தொடுகிற உணவை ருசிக்கிறது.
உங்களது காது, அது கேட்கிறவார்த்தைகளைச் சோதிக்கிறது.
4 எனவே நாம் அந்த விவாதங்களைச் சோதிப்போம், எது சரியென நாமே முடிவு செய்வோம்.
எது நல்லதென நாம் ஒருமித்திருந்து கற்போம்.
5 யோபு, ‘யோபாகிய நான் களங்கமற்றவன்,
தேவன் என்னிடம் நியாயமுடையவராயிருக்கவில்லை.
6 நான் களங்கமற்றவன், ஆனால் நீதி எனக்கெதிராக வழங்கப்பட்டது, அது நான் பொய்யனெனக் கூறுகிறது.
நான் களங்கமற்றவன், ஆனால் மிக மோசமாகக் காயமுற்றேன்’ என்கிறான்.
7 “யோபைப்போல வேறெவனாகிலும் இருக்கிறானா?
நீங்கள் அவமானப்படுத்தினால் யோபு அதைப் பொருட்படுத்துவதில்லை.
8 யோபு தீயோரோடு நட்புடையவனாயிருந்தான்.
யோபு கெட்ட ஜனங்களோடிருக்க விரும்புகிறான்.
9 ஏன் நான் அவ்வாறு சொல்கிறேன்?
ஏனெனில் யோபு, ‘ஒருவன் தேவனைத் தவறான வழிகளில் சந்தோஷப்படுத்த முயற்சி செய்தால் அதனால் அவனுக்கு நன்மையேதும் வாய்க்காது’ என்கிறான்.
10 “உங்களால் புரிந்துகொள்ள முடியும், எனவே நான் சொல்வதைக் கேளுங்கள்.
தேவன் தீயவற்றை ஒருபோதும் செய்யமாட்டார்!
சர்வ வல்லமையுள்ள தேவன் தவறிழைக்கமாட்டார்!
11 ஒருவன் செய்யும் காரியங்களுக் கேற்றபடியே தேவன் பலனளிப்பார்.
ஒருவனுக்கு உரியதை தேவன் அவனுக்குக் கொடுக்கிறார்.
12 இதுவே உண்மை, தேவன் தவறிழைக்கமாட்டார்,
சர்வ வல்லமையுள்ள தேவன் எப்போதும் நியாயந்தீர்ப்பார்.
13 பூமிக்குப் பொறுப்பாக இருக்கும்படி தேவனை எந்த மனிதனும் தேர்ந்தெடுக்கவில்லை,
உலகம் முழுவதற்கும் பொறுப்பை தேவனுக்கு ஒருவனும் கொடுக்கவில்லை.
தேவன் எல்லாவற்றையும் படைத்தார்.
எல்லாம் அவரது ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றன.
14 தேவன் மனிதனது ஆவியை எடுக்க முடிவெடுத்தால்,
அவனது மூச்சை நீக்கிவிட முடிவெடுத்தால்,
15 அப்போது பூமியின் ஜனங்கள் எல்லோரும் மரிப்பார்கள்.
எல்லா ஜனங்களும் மீண்டும் மண்ணாவார்கள்.
16 “நீங்கள் ஞானிகளாயிருந்தால்,
நான் சொல்வதற்குச் செவிகொடுப்பீர்கள்.
17 ஒருவன் நியாயஞ்செய்வதை வெறுத்தால், அவன் அரசனாக இருக்கமுடியாது.
யோபுவே, தேவன் வல்லவரும் நல்லவருமானவர்.
அவரைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
18 தேவனே அரசர்களிடம், ‘நீங்கள் தகுதியற்றவர்கள்’ என்கிறார்.
தேவனே தலைவர்களிடம் ‘நீங்கள் தீயவர்கள்’ என்கிறார்!
19 தேவன் ஜனங்களைக் காட்டிலும் தலைவர்களை நேசிப்பதில்லை.
தேவன் ஏழைகளைக் காட்டிலும் செல்வந்தரை நேசிப்பதில்லை.
ஏனெனில், தேவனே ஒவ்வொருவரையும் உண்டாக்கினார்.
20 ஜனங்கள் நள்ளிரவில் திடீரென மரிக்க முடியும்.
ஜனங்கள் நோயுற்று மடிவார்கள்.
தெளிவான காரணமின்றி வலிமையான ஜனங்களும்கூட மரிப்பார்கள்.
21 “ஜனங்கள் செய்வதை தேவன் கண்ணோக்குகிறார்.
ஒருவன் வைக்கிற ஒவ்வோர் அடியையும் தேவன் அறிகிறார்.
22 தேவனிடமிருந்து ஒளிப்பதற்கேற்ற இருள் நிரம்பிய இடம்
எதுவும் தீயோருக்குக் கிடைப்பதில்லை.
23 ஜனங்களைச் சோதித்துப் பார்க்கும் நேரத்தை தேவன் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை.
தேவன், நியாயந்தீர்ப்பதற்குத் தனக்கு முன்னிலையில் ஜனங்களைக் கொண்டுவர தேவையில்லை.
24 வல்லமையுள்ள ஜனங்கள் தீய காரியங்களைச் செய்யும்போது, தேவன் கேள்விகளைக் கேட்கத் தேவையில்லை.
தேவன் அந்த ஜனங்களை அழித்துவிடுவார், வேறு ஜனங்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுப்பார்.
25 எனவே ஜனங்கள் செய்வது என்ன என்பதை தேவன் அறிகிறார்.
அதனால் விரைவில் தேவன் தீயோரைத் தோற்கடித்து அவர்களை ஒரே இரவில் அழித்துவிடுவார்.
26 கெட்ட ஜனங்கள் செய்த தீய காரியங்களுக்காக, தேவன் அவர்களைத் தண்டிப்பார்.
பிற ஜனங்கள் காணும்படியாக அந்த ஜனங்களை தேவன் தண்டிப்பார்.
27 ஏனெனில், கெட்ட ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள்.
தேவன் விரும்புகிறபடியே செய்வதற்கும் அந்த ஜனங்கள் கவலைப்படுவதில்லை.
28 அந்தக் கெட்ட ஜனங்கள் ஏழைகளைத் துன்புறுத்துகிறார்கள்.
தேவனை நோக்கி அவர்கள் உதவி வேண்டி அழும்படிச் செய்கிறார்கள். ஏழைகள் உதவி கேட்டு அழுவதை தேவன் கேட்கிறார்.
29 ஆனால் ஏழைகளுக்கு உதவ வேண்டாமென்று தேவன் முடிவுச் செய்தால், ஒருவரும் தேவனைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்க முடியாது.
தேவன் ஜனங்களிடமிருந்து தன்னை மறைத்து கொண்டாரானால் அப்போது அவரை ஒருவரும் பார்க்க முடியாது.
தேவனே ஜனங்களுக்கும் தேசங்களுக்கும் அரசர்.
30 ஒரு அரசன் தீயவனாக இருந்து பிறர் பாவம் செய்யும்படி பண்ணினால், அப்போது, தேவன் அவனை அரசாளும்படி அனுமதிக்கமாட்டார்.
31 “ஒரு மனிதன் தேவனிடம்,
‘நான் குற்றவாளி, இனிமேல் பாவம் செய்யமாட்டேன்.
32 தேவனே, நான் உம்மைப் பார்க்க முடியாவிட்டாலும் தக்க நெறியில் வாழும் வகையைத் தயவு செய்து எனக்குப் போதியும்.
நான் தவறு செய்திருந்தால், மீண்டும் அதைச் செய்யமாட்டேன்’ என்று கூறலாம்.
33 யோபுவே, தேவன் உனக்குப் பரிசளிக்க (பலன்தர) வேண்டுமென நீ விரும்புகிறாய்.
ஆனால் நீயோ உன்னை மாற்றிக்கொள்ள மறுக்கிறாய்.
யோபுவே, இது உம் முடிவு, என்னுடையதல்ல,
நீ நினைப்பதை எனக்குச் சொல்லு.
34 ஒரு ஞானி நான் சொல்வதைக் கேட்பான்.
ஒரு ஞானி,
35 ‘யோபு அறியாமையுடையவனைப் போலப் பேசுகிறான்.
யோபு சொல்கின்றவை பொருள்தருவன அல்ல,’ என்பான்.
36 யோபு இன்னும் அதிகமாகத் தண்டிக்கப்பட வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.
ஏனெனில் ஒரு தீயவன் பதில் சொல்கிறாற்போல, யோபுவும் எங்களுக்குப் பதில் சொல்கிறான்.
37 யோபு தனது பிற பாவங்களோடு இன்னும் பாவங்களை அதிகமாக்கினான்.
எங்களுக்கு முன்பாக யோபு அமர்ந்திருக்கிறான், அவன் எங்களை அவமானப்படுத்துகிறான், தேவனைக் கேலிச்செய்கிறான்!” என்றான்.
35 எலிகூ பேசுவதைத் தொடர்ந்தான் அவன்,
2 “‘யோபுவே, நான் தேவனைக் காட்டிலும் நியாயமானவன்’ எனக் கூறுவது சரியல்ல.
3 யோபுவே, நீ தேவனை, ‘ஒருவன் தேவனைச் சந்தோஷப்படுத்த விரும்பினால் அவனுக்கு லாபம் என்ன?
நான் பாவம் செய்யாதிருந்தால், அது எனக்கு என்ன நம்மையைத் தரும்?’ என்று கேளும்.
4 “யோபுவே, நான் (எலிகூ) உனக்கும், உன்னோடு இங்கிருக்கும் உமது நண்பர்களுக்கும் பதில் கூற விரும்புகிறேன்.
5 யோபுவே, வானத்தை நோக்கிப்பாரும்,
உனக்கும் மேல் உயர்ந்திருக்கிற மேகங்களை அண்ணாந்து பாரும்.
6 யோபுவே, நீ பாவஞ்செய்தால், அது தேவனைத் துன்புறுத்தாது.
யோபுவே உன்னிடம் பாவங்கள் மிகுதியாயிருந்தால், அது தேவனை ஒன்றும் செய்யாது.
7 யோபுவே, நீ நல்லவனாக இருந்தால், அது தேவனுக்கு உதவாது.
தேவன் உன்னிடமிருந்து எதையும் பெறமாட்டார்.
8 யோபுவே, நீ செய்யும் நல்ல காரியங்களோ, தீயகாரியங்களோ உன்னைப் போன்ற பிறரை மட்டுமே பாதிக்கும்.
அவை தேவனுக்கு உதவவோ, அவரைத் துன்புறுத்தவோ செய்யாது.
9 “தீயோர் துன்புறுத்தப்பட்டால், அவர்கள் உதவிக்காக கூக்குரலிடுவார்கள்.
அவர்கள் வல்லமையுள்ள ஜனங்களிடம் சென்று உதவிக்காக கெஞ்சி கேட்பார்கள்.
10 ஆனால் அத்தீயோர் தேவனிடம் உதவிக் கேட்கமாட்டார்கள்.
அவர்கள், ‘என்னை உண்டாக்கின தேவன் எங்கே? ஜனங்கள் மனக்கவலையோடிருக்கையில் தேவன் அவர்களுக்கு உதவுவார்.
எனவே அவர் எங்கிருக்கிறார்?
11 தேவன் நம்மை பறவைகள், மிருகங்களைக் காட்டிலும் ஞானமுள்ளவராக்குகிறார்.
எனவே அவர் எங்கிருக்கிறார்?’ என்று கேட்பார்கள்.
12 “அல்லது, அத்தீயோர் தேவனிடம் உதவிவேண்டினால் தேவன் அவர்களுக்குப் பதிலளிக்கமாட்டார்.
ஏனெனில் அவர்கள் மிகவும் பெருமை (அகந்தை) உடையவர்கள்.
அவர்கள் மிகவும் முக்கியமானவர்களென்று இன்னமும் நினைக்கிறார்கள்.
13 தேவன் அவர்களின் தகுதியற்ற கெஞ்சுதலுக்குச் செவிசாய்க்கமாட்டார் என்பது உண்மை.
சர்வ வல்லமையுள்ள தேவன் அவர்களைக் கவனிக்கமாட்டார்.
14 எனவே யோபுவே, நீ தேவனைப் பார்க்கவில்லை என்று கூறும்போது தேவன் உனக்குச் செவிசாய்க்கமாட்டார்.
தேவனைச் சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து நீ களங்கமற்றவனென்று நிரூபிக்கக் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறாய்.
15 “யோபுவே, தேவன் தீயோரைத் தண்டிப்பதில்லை எனவும்,
தேவன் பாவங்களைக் கவனிப்பதில்லை எனவும் நீ நினைக்கிறாய்.
16 எனவே யோபு அவனது தகுதியற்ற பேச்சைத் தொடருகிறான்.
யோபு தான் முக்கியமானவனாக பாவித்துக்கெண்டிருக்கிறான்.
யோபு தான் பேசிக் கொண்டிருப்பதைப்பற்றி அறியான் என்பதை எளிதாகக் காணமுடியும்” என்றான்.
எருசலேமில் சந்திப்பு
15 பின்பு யூதேயாவிலிருந்து அந்தியோகியாவுக்குச் சில மனிதர் வந்தனர். யூதரல்லாத சகோதரருக்கு அவர்கள் “நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள். இதைச் செய்யும்படியாக மோசே நமக்குக் கற்பித்தார்” என்று போதிக்க ஆரம்பித்தனர். 2 பவுலும் பர்னபாவும் இந்தப் போதனையை எதிர்த்தனர். அதைக் குறித்து இந்த மனிதரிடம் அவர்கள் விவாதித்தனர். எனவே அந்தச் சபையார் பவுலையும் பர்னபாவையும், வேறு சில மனிதர்களையும் எருசலேமுக்கு அனுப்பத் தீர்மானித்தனர். அங்கிருந்த அப்போஸ்தலரிடமும் மூப்பர்களிடமும் இதைக் குறித்து அதிகமாகப் பேசப் போகிறவர்களாக இந்த மனிதர்கள் இருந்தார்கள்.
3 அவர்கள் பயணத்திற்கு சபை உதவிற்று. பெனிக்கே, சமாரியா ஆகிய தேசங்களின் வழியாக அம்மனிதர்கள் சென்றனர். யூதரல்லாத மக்கள் உண்மையான தேவனிடம் திரும்பியது குறித்த அனைத்தையும் அவர்கள் கூறினர். இது எல்லா சகோதரர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. 4 பவுலும் பர்னபாவும் பிறரும் எருசலேமை வந்தடைந்தனர். அப்போஸ்தலரும், மூப்பர்களும் விசுவாசிகள் அனைவரும் சேர்ந்து அவர்களை வரவேற்றனர். பவுலும் பர்னபாவும், பிறரும் தேவன் தங்களிடம் செய்த அனைத்துக் காரியங்களையும் கூறினர். 5 எருசலேமின் விசுவாசிகளில் சிலர் பரிசேயர்கள். அவர்கள் எழுந்து “யூதரல்லாத விசுவாசிகள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு அவர்களுக்குக் கூற வேண்டும்” என்று கூறினர்.
6 அப்போது அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இந்தச் சிக்கலை ஆய்ந்து அறியக் கூடினர். 7 நீண்ட விவாதம் நடந்தது. பேதுரு எழுந்து அவர்களை நோக்கி, “சகோதரர்களே, தொடக்கக் காலத்தில் நிகழ்ந்தவற்றை நீங்கள் நினைவுகூருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியைப் போதனை செய்வதற்கு அப்போது உங்களுக்கிடையிலிருந்து தேவன் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் என் மூலமாக நற்செய்தியைக் கேட்டு விசுவாசம் வைத்தனர். 8 தேவன் மனிதரின் எண்ணங்களை அறிவார். அவர் யூதரல்லாத மக்களையும் ஏற்றுக்கொண்டார். எங்களுக்குச் செய்தது போலவே அவர்களுக்கும் பரிசுத்த ஆவியை அளித்து தேவன் இதனைக் காட்டினார். 9 இந்த மனிதர்கள் தேவனுக்கு நம்மிலிருந்தும் வேறுபட்டவர்களல்லர். அவர்கள் விசுவாசம் வைத்தபோது, தேவன் அவர்கள் இருதயங்களை பரிசுத்தமுறச் செய்தார். 10 எனவே யூதரல்லாத விசுவாசிகளிகளின் கழுத்தில் ஏன் பெரும் பாரத்தைச் சுமத்துகிறீர்கள். தேவனைக் கோபப்படுத்த நீங்கள் முயன்றுகொண்டிருக்கிறீர்களா? அந்தப் பாரத்தைச் சுமப்பதற்கு நமக்கும் நமது முன்னோர்களுக்கும் வலிமை இருக்கவில்லை! 11 நாமும் இந்த மக்களும் கர்த்தராகிய இயேசுவின் கிருபையினாலே இரட்சிக்கப்படுவோம் என்று நான் நம்புகிறேன்.” என்றான்.
12 அப்போது அந்தக் கூட்டம் முழுமையும் அமைதியாயிற்று. பவுலும் பர்னபாவும் பேசுவதைக் கவனித்தனர். யூதரல்லாத மக்களின் மத்தியில் தேவன் அவர்கள் மூலமாகச் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் விவரித்தார்கள். 13 பவுலும் பர்னபாவும் பேசி முடித்தனர். பின் யாக்கோபு பேசினான். அவன், “சகோதரரே, எனக்குச் செவி கொடுங்கள். 14 தேவன் யூதரல்லாத மக்களுக்குத் தமது அன்பை எவ்வாறு காட்டினார் என்பதை சீமோன் பேதுரு நமக்கு விவரித்தார். முதன் முறையாக யூதரல்லாத மக்களை தேவன் ஏற்று, அவர்களைத் தனது மக்களாக்கினார். 15 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் இதனோடு ஒத்துப்போகின்றன.
16 “‘இதற்குப் பிறகு நான் மீண்டும் திரும்புவேன்.
தாவீதின் வீட்டை மீண்டும் கட்டுவேன்.
அது விழுந்துவிட்டது.
அந்த வீட்டின் இடிந்த பகுதிகளை மீண்டும் கட்டுவேன்.
அவனது வீட்டைப் புதியதாக்குவேன்.
17 பின் பிற மக்கள் எல்லோரும் கர்த்தரைத் தேடுவர்.
யூதரல்லாத மக்களும் என் மக்களே.
கர்த்தர் இதைக் கூறினார்.
இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்பவர் அவரே.’(A)
18 “தொடக்கக் காலத்திலிருந்தே, இவை அனைத்தும் அறியப்பட்டிருந்தன.
19 “தேவனிடம் திரும்பிய யூதரல்லாத சகோதரரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது என்னுடைய நியாயம். 20 ஆனால் ஒரு கடிதத்தை நாம் அவர்களுக்கு எழுதவேண்டும். அதில்:
‘விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.
பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள்.
இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள் என்று எழுதுவோம்.’
21 ஒவ்வொரு நகரத்திலும் மோசேயின் சட்டத்தைப் போதிக்கும் மனிதர்கள் இருப்பதால், அவர்கள் இவற்றைச் செய்யக்கூடாது. ஒவ்வொரு ஓய்வு நாளன்றும் மோசேயின் போதனைகள் ஜெப ஆலயத்தில் படிக்கப்படுகின்றன. இவ்வாறு எழுதப்படவேண்டும்” என்று கூறினான்.
2008 by World Bible Translation Center