Old/New Testament
1 தேவனிடமிருந்து ஒரு செய்தி. இது கர்த்தரிடமிருந்து வந்த ஒரு செய்தி. மல்கியா இச்செய்தியை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார்.
தேவன் இஸ்ரவேலை நேசிக்கிறார்
2 கர்த்தர், “ஜனங்களே, நான் உங்களை நேசிக்கிறேன்” என்றார்.
ஆனால் நீங்கள், “நீர் எங்களை நேசிப்பதை எது காட்டும்?” என்று கேட்டீர்கள்.
கர்த்தர், “ஏசா, யாக்கோபின் சகோதரன். சரியா? ஆனால் நான் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தேன். 3 நான் ஏசாவை ஏற்றுக்கொள்ளவில்லை, நான் ஏசாவின் மலை நாட்டை அழித்தேன். ஏசாவின் நாடு அழிக்கப்பட்டது. இப்பொழுது அங்கே காட்டு நாய்கள் மட்டுமே வாழ்கின்றன” என்றார்.
4 ஏதோமின் ஜனங்கள், “நாங்கள் அழிக்கப்பட்டோம். ஆனால் நாங்கள் திரும்பிப்போய் மீண்டும் எங்கள் நகரங்களைக் கட்டுவோம்” என்று சொல்லலாம்.
ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “அவர்கள் மீண்டும் அந்நகரங்களைக் கட்டினால் பிறகு நான் மீண்டும் அவைகளை அழிப்பேன்!” எனவே ஜனங்கள் ஏதோமை ஒரு கேட்டின் நாடு என்கின்றனர். கர்த்தர் என்றென்றும் வெறுக்கும் ஒரு தேசம்.
5 ஜனங்களாகிய நீங்கள் இவற்றைப் பார்த்து நீங்கள், “கர்த்தர் பெரியவர், இஸ்ரவேலுக்கு வெளியிலும் பெரியவர்” என்றீர்கள்.
ஜனங்கள் தேவனை மதிப்பதில்லை
6 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “பிள்ளைகள் தமது பெற்றோரை மதிப்பார்கள். வேலைக்காரர்கள் தம் எஜமானரை மதிப்பார்கள். நான் உனது தந்தை. நீ ஏன் என்னை மதிப்பதில்லை? நான் உனது ஆண்டவர். நீ ஏன் எனக்கு மரியாதை தருவதில்லை? ஆசாரியர்களாகிய நீங்கள் என் பெயரை மதிப்பதில்லை” என்றார்.
ஆனால் நீங்கள், “நாங்கள் உமது பெயருக்கு மரியாதை தரவில்லை என்று எச்செயல் மூலம் கூறுகின்றீர்?” எனக் கேட்கிறீர்கள்.
7 கர்த்தர், “நீங்கள் எனது பலிபீடத்திற்கு சுத்தமற்ற அப்பத்தைக் கொண்டு வருகிறீர்கள்” என்றார்.
ஆனால் நீங்கள், “அந்த அப்பத்தைச் சுத்தமற்றதாகச் செய்கிறது எது?” என்று கேட்கிறீர்கள்.
கர்த்தர், “நீங்கள் எனது மேஜைக்கு (பலிபீடம்) மரியாதை காட்டுவதில்லை. 8 நீங்கள் குருட்டு விலங்குகளைப் பலியாக கொண்டு வருகிறீர்கள். அது தவறு. நீங்கள் நோயுற்றதும் நொண்டியானதுமான விலங்குகளை பலியாக கொண்டுவருகிறீர்கள். அது தவறு. அந்நோயுற்ற விங்குகளை உங்கள் ஆளுநருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முயலுங்கள். அவன் நோயுற்ற விலங்குகளை அன்பளிப்பாக ஏற்றுக்கொள்வானா? இல்லை. அவன் அந்த அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டான்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
9 “ஆசாரியர்களே, நீங்கள் எங்களிடம் நல்லவராக இருக்கும்படி கர்த்தரிடம் கேளுங்கள். ஆனால் அவர் நீங்கள் சொல்வதைக் கேட்கமாட்டார். இது எல்லாம் உங்களுடைய தவறு” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
10 “உறுதியாக, ஆசாரியர்களுள் சிலர் ஆலய கதவுகளை அடைத்து சரியாக நெருப்பைக் கொளுத்த முடியும். நான் உங்களிடம் மகிழ்ச்சியாக இருக்கமாட்டேன். நான் உங்கள் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டேன்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
11 “உலகைச் சுற்றிலும் உள்ள ஜனங்கள் எனது நாமத்தை மதிக்கிறார்கள். உலகைச் சுற்றிலும் உள்ள ஜனங்கள் எனக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொண்டு வருவார்கள். அவர்கள் எனக்கு நறுமணப் பொருட்களை அன்பளிப்பாக எரிக்கிறார்கள். ஏனென்றால் எனது நாமம் அந்த ஜனங்கள் அனைவருக்கும் மிக முக்கியமானது” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
12 “ஆனால் நீங்கள் என் நாமத்தை மதிப்பதில்லை. கர்த்தருடைய மேசை (பலிபீடம்) சுத்தமற்றதாக உள்ளது என்று நீங்கள் சொல்கிறீர்கள். 13 நீங்கள் அந்த மேசையில் உள்ள உணவை விரும்புவதில்லை. நீங்கள் அந்த உணவை நுகர்ந்து பார்த்து அதனை உண்ண மறுப்பீர்கள். அது கெட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அது உண்மை இல்லை. பிறகு நீங்கள் நோயுள்ளதும், நொண்டியானதும், களவாடப்பட்டதுமான மிருகங்களை என்னிடம் கொண்டு வருகிறீர்கள். நீங்கள் எனக்கு நோயுற்ற விலங்குகளைப் பலியாகக் கொடுக்க முயல்கிறீர்கள். நான் உங்களிடமிருந்து அந்நோயுற்ற விலங்குகளை ஏற்றுக்கொள்ளமாட்டேன். 14 சில ஜனங்கள் நல்ல ஆண் மிருகங்களை வைத்திருப்பார்கள். அவர்களால் அவற்றை பலியாக கொடுக்கமுடியும். ஆனால் அவர்கள் அந்நல்ல மிருகங்களை எனக்குப் பலியாக கொடுக்கமாட்டார்கள். சிலர் எனக்கு நல்ல மிருகங்களைக் கொண்டு வருவார்கள். அவர்கள் அந்த ஆரோக்கியமான மிருகங்களை எனக்குத் தருவதாக வாக்குறுதியளிப்பார்கள். ஆனால் அவர்கள் ரகசியமாக அந்நல்ல மிருகங்களை மாற்றிவிட்டு எனக்கு நோயுற்ற மிருகங்களைத் தருவார்கள். அந்த ஜனங்களுக்குத் தீமைகள் ஏற்படும். நானே பேரரசன். நீங்கள் என்னை மதிக்க வேண்டும். உலகம் முழுவதுமுள்ள ஜனங்கள் என்னை மதிக்கின்றனர்!” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
ஆசாரியர்களுக்கான விதிகள்
2 “ஆசாரியர்களே, இந்த விதி உங்களுக்குரியது. என்னைக் கவனியுங்கள்! நான் சொல்கின்ற வற்றில் கவனம் செலுத்துங்கள்! எனது பேரைக் கனம்பண்ணுங்கள். 2 நீங்கள் என் நாமத்தை மதிக்காவிட்டால் பிறகு உங்களுக்குத் தீமை ஏற்படும். நீங்கள் ஆசீர்வாதம் சொல்வீர்கள். ஆனால் அவை சாபங்களாகும். நான் உங்களுக்குத் தீமை ஏற்படும்படிச் செய்வேன். ஏனென்றால் நீங்கள் என் நாமத்திற்கு மரியாதை செய்யவில்லை!” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
3 “பாருங்கள். நான் உங்கள் சந்ததிகளைத் தண்டிப்பேன். விடுமுறையில் உங்கள் ஆசாரியர்கள் எனக்குப் பலி கொடுக்கிறார்கள். நீங்கள் மரித்த மிருகங்களின் சாணத்தையும் மற்ற பகுதிகளையும் எடுத்து வெளியே எறிகிறீர்கள். நான் அந்தச் சாணத்தை உங்கள் முகத்தில் இறைப்பேன். நீங்கள் அதனோடு வெளியே எறியப்படுவீர்கள். 4 பின்னர் நான் ஏன் இந்தக் கட்டளையைக் கொடுத்தேன் என்பதைக் கற்றுக் கொள்வாய். நான் இவற்றை உனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். லேவியோடு நான் கொண்ட எனது உடன்படிக்கைத் தொடரும்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
5 கர்த்தர், “நான் அந்த உடன்படிக்கையை லேவியோடு செய்தேன். நான் அவனுக்கு வாழ்வையும், சமாதானத்தையும் கொடுப்பதாக வாக்குறுதியளித்தேன். நான் அவனுக்கு அவற்றைக் கொடுத்தேன். லேவி என்னை மதித்தான். அவன் எனது நாமத்திற்கு மரியாதைச் செலுத்தினான். 6 லேவி சத்திய வேதத்தைப் போதித்தான். அவன் பொய்யானவற்றை போதிக்கவில்லை. லேவி நேர்மையானவன். அவன் சமாதானத்தை நேசித்தான். லேவி என்னைப் பின் தொடர்ந்தான். அநேகர் தங்கள் பாவ வழிகளை விட்டுவிலகச் செய்தான். அவர்களைக் காப்பாற்றினான். 7 ஒரு ஆசாரியன் தேவனுடைய போதனைகளை கற்றிருக்கவேண்டும். ஜனங்கள் ஆசாரியனிடம் சென்று தேவனுடைய போதனைகளை கற்றுக்கொள்ளவேண்டும். ஒரு ஆசாரியன் தேவனுடைய தூதுவனாக ஜனங்களுக்கு இருக்க வேண்டும்” என்றார்.
8 கர்த்தர், “ஆசாரியர்களாகிய நீங்கள் என்னைப் பின்பற்றுவதை நிறுத்தினீர்கள். நீங்கள் பலர் தவறு செய்வதற்காக போதனைகளைப் பயன்படுத்தினீர்கள். நீங்கள் வேவியோடு செய்த உடன்படிக்கையை அழித்தீர்கள்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார். 9 “நீங்கள் நான் சொன்ன வழியில் வாழவில்லை. நீங்கள் என் போதனைகளை ஜனங்களுக்குப் போதிக்கையில் பட்சபாதம் காண்பித்தீர்கள். எனவே நான் உங்களை முக்கியமற்றவர்களாகச் செய்வேன். ஜனங்கள் உங்களுக்கு மரியாதை செலுத்தமாட்டார்கள்.”
யூதா தேவனுக்கு உண்மையாக இல்லை
10 நாங்கள் அனைவரும் ஒரே தந்தையை (தேவன்) உடையவர்கள். அதே தேவன் எங்கள் ஒவ்வொருவரையும் படைத்தார். எனவே ஜனங்கள் தமது சகோதரர்களை எதற்கு ஏமாற்ற வேண்டும்? அந்த ஜனங்கள் தம் உடன்படிக்கையை மதிக்கவில்லை என்பதை காட்டுகிறார்கள். அவர்கள் நமது முற்பிதாக்கள் தேவனோடு செய்த உடன்படிக்கையை மதிக்கவில்லை. 11 யூதாவின் ஜனங்கள் மற்ற ஜனங்களை ஏமாற்றினார்கள். எருசலேமிலும் இஸ்ரவேலிலும் உள்ள ஜனங்கள் பயங்கரமான காரியங்களைச் செய்தனர். யூதாவிலுள்ள ஜனங்கள் கத்தருடைய பரிசுத்தமான ஆலயத்தை மதிக்கவில்லை. தேவன் அந்த இடத்தை நேசிக்கிறார். யூதாவின் ஜனங்கள் அயல் நாட்டு தேவதைகளை தொழுதிடத் தொடங்கினார்கள். 12 கர்த்தர் யூதாவின் குடும்பத்திலிருந்து அந்த ஜனங்களை நீக்குவார். அந்த ஜனங்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டுவரலாம். ஆனால் அது உதவாது. 13 நீங்கள் அழமுடியும். கர்த்தருடைய பலிபீடத்தை கண்ணீரால் மூட முடியும். ஆனால் கர்த்தர் உங்கள் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டார். கர்த்தர் நீங்கள் கொண்டு வருகிற பொருட்களால் திருப்தி அடையமாட்டார்.
14 நீங்கள், “கர்த்தரால் எங்கள் காணிக்கைகள் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை?” என்று கேட்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் செய்த தீமைகளைக் கர்த்தர் பார்த்தார். அவர் உங்களுக்கு எதிரான சாட்சி. நீங்கள் உங்கள் மனைவியரை ஏமாற்றியதை அவர் பார்த்தார். நீ இளமையாய் இருக்கும்போதே அப்பெண்ணை மணந்துகொண்டிருக்கிறாய். அவள் உனது பெண் சிநேகிதியாய் இருந்தாள். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துக்கொண்டீர்கள். அவள் உனது மனையியானாள். ஆனால் நீ அவளை ஏமாற்றினாய். 15 தேவன் கணவர்களும் மனைவிகளும் ஒரே உடலாகவும் ஒரே ஆவியாகவும் இருக்க வேண்டுமென விரும்பினர். ஏன்? அதனால்தான் அவர்கள் பரிசுத்தமான குழந்தைகளைப் பெறமுடியும். எனவே அந்த ஆவிக்குரிய கூடி வருதலை பாதுகாத்துக்கொள். உன் மனைவியை நீ ஏமாற்றாதே. அவள் உனது இளமைகாலம் முதற்கொண்டே உன் மனைவியாக இருக்கிறாள்.
16 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், “நான் விவாகரத்தை வெறுக்கிறேன். நான் ஆண்கள் செய்யும் கொடூரங்களை வெறுக்கிறேன். எனவே உன் ஆவிக்குரிய கூடிவருதலை காப்பாற்று. உன் மனைவியை ஏமாற்றாதே” என்று கூறுகிறார்.
நியாயத்தீர்ப்புக்கான சிறப்பான காலம்
17 நீ தவறானவற்றைக் கற்றுத் தந்திருக்கிறாய். அத்தவறான போதனைகள் கர்த்தரை மிகவும் துக்கமடையச் செய்தன. தீயவற்றைச் செய்யும் ஜனங்களை தேவன் விரும்புகிறார் என்று சொன்னீர்கள். அந்த ஜனங்கள் நல்லவர்கள் என்று தேவன் நினைப்பதாய் சொன்னீர்கள். தீயவற்றைச் செய்யும் ஜனங்களை தேவன் தண்டிக்கமாட்டார் என்று சொன்னீர்கள்.
3 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நான் என் தூதனை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அவர் எனக்காகப் பாதையை ஆயத்தம் செய்வார். திடீரென்று அவர் தமது ஆலயத்துக்கு வருவார். அவரே நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஆண்டவர். அவரே நீங்கள் விரும்பும் புதிய உடன்படிக்கைக்கான தூதர். உண்மையில் அவர் வந்துக்கொண்டிருக்கிறார்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
2 “எவனொருவனும் அந்த நேரத்திற்காக தயார் செய்யமுடியாது. அவர் வரும்போது எவரொருவரும் அவருக்கு எதிரே நிற்க முடியாது. அவர் எரியும் நெருப்பைப் போன்றவர். அவர் ஜனங்கள் பொருட்களைச் சுத்தப்படுத்திட பயன்படுத்தும் சவுக்காரம் போன்றவர். 3 அவர் லேவியர்களைச் சுத்தமாக்குவார். அவர் நெருப்பினால் வெள்ளியைச் சுத்தமாக்குவதுபோன்று அவர்களைச் சுத்தமாக்குவார். அவர் அவர்களை சுத்தமான பொன்னையும், வெள்ளியையும் போன்று செய்வார். பிறகு அவர்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வருவார்கள். அவர்கள் எல்லாவற்றையும் சரியான வழியில் செய்வார்கள். 4 பிறகு கர்த்தர் யூதாவிலும் எருசலேமிலும் இருந்து வருகிற அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வர். இது கடந்த காலத்தில் உள்ளது போல் இருக்கும். இது வெகு காலத்திற்கு முன்னால் உள்ளதைப் போன்றிருக்கும். 5 பிறகு நான் உங்களிடம் வருவேன். நான் சரியானவற்றைச் செய்வேன். நான் ஜனங்கள் செய்த தீமைகளை குறித்து சொல்லுகிறவர் போன்று இருப்பேன். சிலர் தீய மந்திரங்களைச் செய்கிறார்கள். சிலர் விபச்சாரப் பாவத்தைச் செய்கிறார்கள். சிலர் பொய்யான வாக்குறுதிகளைச் செய்கின்றனர். சிலர் தமது வேலைக்காரர்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் தாம் வாக்குறுதியளித்ததுபோன்று பணம் கொடுப்பதில்லை. ஜனங்கள் விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் உதவுவதில்லை. ஜனங்கள் பரதேசிகளுக்கு உதவுவதில்லை. ஜனங்கள் என்னை மதிப்பதில்லை!” சர்வவல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
தேவனிடமிருந்து திருடுவது
6 “நானே கர்த்தர். நான் மாறமாட்டேன். நீங்கள் யாக்கோபுவின் குழந்தைகள். நீங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை. 7 ஆனால் நீங்கள் எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை. உங்கள் முற்பிதாக்களும் கூட என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டார்கள். என்னிடம் திரும்பி வாருங்கள். நானும் உங்களிடம் திரும்பி வருவேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றை சொன்னார்.
நீங்கள், “நாங்கள் எவ்வாறு திரும்பி வருவது?” என்று கேட்கிறீர்கள்.
8 “தேவனிடமிருந்து திருடுவதை நிறுத்துங்கள். ஜனங்கள் தேவனிடமிருந்து திருடக்கூடாது. ஆனால் நீங்கள் என்னிடமிருந்து திருடினீர்கள்!”
நீங்கள், “நாங்கள் உம்மிடமிருந்து எதைத் திருடினோம்?” என்று கேட்கிறீர்கள்.
“நீங்கள் உங்களது பொருட்களில் பத்தில் ஒரு பங்கை எனக்குக் கொடுத்திருக்க வேண்டும். நீங்கள் எனக்குச் சிறப்பான காணிக்கைகளையும் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அவற்றை எனக்குக் கொடுக்கவில்லை. 9 இந்த வழியில் உங்கள் நாடு முழுவதும் என்னிடமிருந்து திருடினீர்கள். எனவே உங்களுக்குத் தீயவை ஏற்படுகிறது.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
10 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “இந்தச் சோதனையை முயற்சிச் செய்து பார். உன்னிடமுள்ளவற்றில் பத்தில் ஒரு பங்கை என்னிடம் கொண்டு வா. அவற்றைக் கருவூலத்தில் போடு. என் வீட்டிற்கு உணவு கொண்டு வா. என்னைச் சோதனை செய். நீ அவற்றைச் செய்தால் பின்னர் நான் உண்மையாக உன்னை ஆசீர்வதிப்பேன். வானத்திலிருந்து மழை பெய்வது போன்று நல்லவை உன்னிடம் வரும். உனக்கு தேவைக்கு அதிகமாகவே பொருள் வரும். 11 நான் உங்கள் விளைச்சலை அழிக்கும் பூச்சிகளை அனுமதிக்கமாட்டேன். உங்கள் திராட்சைக்கொடிகள் எல்லாம் திராட்சைகளை விளையச்செய்யும்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
12 “பிற நாடுகளிலுள்ள ஜனங்கள் உங்களுக்கு நல்லவர்களாக இருப்பார்கள். நீங்கள் உண்மையில் ஓர் அற்புதமான நாட்டைப் பெறுவீர்கள்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
நியாயத்தீர்ப்புக்கான சிறப்பு நேரம்
13 கர்த்தர் “நீங்கள் என்னிடம் அற்பமானவற்றைப் பேசினீர்கள்” என்றார்.
ஆனால் நீங்கள், “நாங்கள் உம்மைப்பற்றி என்ன பேசினோம்?” என்று கேட்டீர்கள்.
14 நீங்கள், “கர்த்தரை தொழுதுகொள்வது பயனற்றது. கர்த்தர் எங்களிடம் சொன்னவற்றை நாங்கள் செய்தோம். ஆனால் நாங்கள் எந்த நன்மையும் பெறவில்லை. நாங்கள் எங்கள் பாவங்களுக்காக மரித்துப்போனவர்கள் வீட்டில் ஜனங்கள் அழுவது போல் கதறினோம். ஆனால் அது எங்களுக்கு உதவவில்லை என்று கூறினாய். 15 தற்பெருமையுடைவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். தீயவர்கள் வெற்றி பெறுகிறார்கள். தேவனுடைய பொறுமையைச் சோதிக்க அவர்கள் தீயவற்றைச் செய்கிறார்கள். தேவன் அவர்களைத் தண்டிக்கிறதில்லை.”
16 தேவனை பின்பற்றுகிறவர்கள் ஒருவருக்கொருவர் பேசினார்கள். கர்த்தர் அவர்கள் பேசுவதைக் கேட்டார். அவருக்கு முன்பாக ஒரு புத்தகம் இருக்கிறது. அப்புத்தகத்தில் தேவனை பின்பற்றுகிறவர்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் கர்த்தருடைய நாமத்தை மதிக்கின்றவர்கள்.
17 கர்த்தர், “அந்த ஜனங்கள் எனக்குரியவர்கள். நான் அவர்களிடம் கருணையோடு இருப்பேன். ஒருவன் தனக்குக் கீழ்ப்படிகிற குழந்தைகளிடம் கருணையோடு இருப்பான். அதே முறையில் நான், என்னைப் பின்பற்றுகிறவர்களுடன் கருணையோடு இருப்பேன். 18 நீங்கள் என்னிடம் திரும்ப வாருங்கள். நீங்கள் நல்லதுக்கும் தீயவற்றிற்கும் உள்ள வேறுபாட்டைக் கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் தேவனை பின்பற்றுகிறவனுக்கும், தேவனை பின்பற்றாதவனுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துக்கொள்வீர்கள்.
4 “நியாயத்தீர்ப்புக்கான காலம் வந்து கொண்டிருக்கிறது. இது ஒரு வெப்பமான சூளைபோன்றது. தற்பெருமையுடைய ஜனங்கள் எல்லாம் தண்டிக்கப்படுவார்கள். தீயவர்கள் எல்லோரும் வைக்கோலைப்போல் எரிக்கப்படுவார்கள். அந்தக் காலத்தில், அவர்கள் நெருப்பில் எரிகிற பதரைப் போன்றிருப்பார்கள். அதிலுள்ள கிளையோ, வேரோ விடுபடாமல்போகும்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
2 “ஆனால், என்னைப் பின்பற்றுகிறவர்களே, உங்களுக்கு நன்மையானது உதய சூரியனைப் போன்று ஒளி வீசும். இது சூரியக்கதிர்களைப் போன்று குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டு வரும். நீங்கள் தொழுவத்திலிருந்து விடுபட்டகன்று குட்டிகளைப் போன்று சுதந்திரமும், மகிழ்ச்சியும் அடைவீர்கள். 3 பின்னர் அத்தீய ஜனங்கள் மேல் நடந்து செல்வீர்கள். அவர்கள் உங்கள் காலடியில் சாம்பலைப்போன்று கிடப்பார்கள். நியாயத்தீர்ப்புக்கான காலத்தில் நான் அவற்றை நிகழும்படிச் செய்வேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்!
4 “மோசேயின் சட்டங்களை நினைவு கொண்டு கீழ்ப்படியுங்கள். மோசே எனது ஊழியகாரனாக இருந்தான். நான் அவனுக்கு ஒரேப் மலையிலே (சீனாய்) அந்த சட்டங்களை கொடுத்தேன். அந்தச் சட்டங்கள் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்கும் உரியது.”
5 கர்த்தர், “பாருங்கள், நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவேன். அவன் கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்குரிய பயங்கரமான நாளுக்கு முன்னால் வருவான். 6 எலியா, தமது பிள்ளைகளுடன் நெருக்கமாயிருக்கிற பெற்றோருக்கும் தமது பெற்றோருடன் நெருக்கமாயிருக்கிற பிள்ளைகளுக்கும் உதவுவான். இது நிகழவேண்டும், அல்லது நான் (தேவன்) வந்து உங்கள் நாடு முழுவதையும் அழிப்பேன்!”
22 பின்னர் அந்தத் தூதன் ஜீவதண்ணீர் ஓடுகின்ற ஆற்றினை எனக்குக் காட்டினான். அது பளிங்குபோன்று பிரகாசமாக இருந்தது. அது தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருந்த சிம்மாசனத்தில் இருந்து பாய்ந்தது. 2 அது நகரத் தெருவின் நடுவில் பாய்ந்தது. அந்த ஆற்றின் ஒவ்வொரு கரையிலும் வாழ்வின் மரம் இருந்தது. அது ஆண்டுக்குப் பன்னிரண்டு முறை கனிகளைத் தருகிறது. ஒவ்வொரு மாதமும் அது கனிதருகிறது. அம்மரத்தின் இலைகள் மக்களின் நோயைக் குணமாக்கும் தன்மையுடையவை.
3 தேவனால் குற்றம் என நியாயந்தீர்க்கப்படுகிற எதுவும் அந்நகருக்குள் இருக்காது. தேவனுடைய சிம்மாசனமும் ஆட்டுக்குட்டியானவரும் அங்கே இருப்பார்கள். 4 தேவனுடைய ஊழியக்காரர்கள் அவரை வழிபடுவர். அவர்கள் அவரது முகத்தைப் பார்ப்பார்கள். அவர்களின் நெற்றியில் தேவனுடைய பெயர் எழுதப்பட்டிருக்கும். 5 அங்கு மீண்டும் இரவு வராது. அங்குள்ள மக்களுக்கு விளக்கின் ஒளியோ சூரியனின் ஒளியோ தேவைப்படாது. தேவனாகிய கர்த்தரே அவர்களுக்கு வெளிச்சம் தருவார். அவர்கள் அரசர்களைப் போன்று எல்லாக் காலங்களிலும் அரசாளுவர்.
6 அந்தத் தூதன் என்னிடம், “இந்த வார்த்தைகள் உண்மையானவை, நம்பத் தகுந்தவை. பரிசுத்த தீர்க்கதரிசிகளின் ஆவிகளின் தேவனாக இருக்கிற கர்த்தர் உடனடியாக என்ன நடக்க வேண்டுமென தம் ஊழியர்களுக்குக் காட்டத் தன் தூதனை அனுப்பினார். 7 இதோ, சீக்கிரமாய் வருகிறேன். இந்த நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைப்பிடிக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றான்.
8 நான் யோவான், நானே இவற்றைக் காணவும் கேட்கவும் செய்தேன். இவற்றை நான் பார்த்தும் கேட்டும் முடிந்த பின்னால், இவற்றை எனக்குக் காட்டிய அத்தூதனின் கால்களில் விழுந்து வணங்கக் குனிந்தேன். 9 ஆனால் அத்தூதன் என்னிடம், “என்னை வணங்க வேண்டாம். நானும் உன்னைப் போல ஒரு ஊழியன் மட்டுமே. தீர்க்கதரிசிகளாகிய உன் சகோதரர்களைப் போன்றவன் நான். இந்நூலிலுள்ள வசனங்களுக்குக் கீழ்ப்படிகிற மற்றவர்களைப்போல நானும் ஒருவனே. நீ தேவனை வணங்கு” என்றான்.
10 மேலும் அத்தூதன் என்னிடம், “இந்நூலில் உள்ள தீர்க்கதரிசனமான வசனங்களை இரகசியம் போல் மூடிவைக்க வேண்டாம். இவை நிகழ்வதற்குரிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 11 அநியாயம் செய்கிறவன் தொடர்ந்து அநியாயம் செய்யட்டும். அசுத்தமாய் இருக்கிறவன் மேலும் அசுத்தமாய் இருக்கட்டும். பரிசுத்தவான் மேலும் பரிசுத்தவானாய் இருக்கட்டும்.
12 “கவனி! நான் விரைவில் வருவேன். என்னோடு பலன்களைக் கொண்டு வருவேன். ஒவ்வொருவனுக்கும் அவனவனுடைய செயல்களுக்கு பலன் அளிப்பேன். 13 நானே அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறேன்; நானே முந்தினவரும், பிந்தினவருமாய் இருக்கிறேன். நானே துவக்கமும் முடிவுமாய் இருக்கிறேன்.
14 “தேவனுடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு வாழ்வின் மரத்தில் உள்ள கனிகளைப் புசிப்பதற்கு உரிமை இருக்கும். அவர்கள் வாசல் வழியாக நகரத்துக்குள் நுழைய முடியும். 15 நகரத்துக்கு வெளியே, நாய் போன்றவர்களும், சூனியக்காரர்களும், விபசாரகர்களும், கொலைகாரர்களும், உருவ வழிபாடு செய்கிறவர்களும் பொய்யை விரும்பி, அதின்படி செய்பவர்களும் இருப்பார்கள்.
16 “இயேசுவாகிய நான் சபைகளில் இவற்றை உங்களுக்குச் சொல்லும் பொருட்டு என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் குடும்ப வாரிசு. நான் பிரகாசமான விடிவெள்ளியாக இருக்கிறேன்” என்றார்.
17 ஆவியானவரும் மணமகளும் “வாருங்கள்” என்கிறார்கள். இதைக் கேட்பவர்களும் “வாருங்கள்” என்று சொல்லவேண்டும். தாகமாய் இருக்கிறவன் வருவானாக. விருப்பம் உள்ளவன் ஜீவத் தண்ணீரைப் பெறுவானாக.
18 இந்நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறேன். “எவனாவது ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால் இந்நூலில் எழுதப்பட்டிருக்கிற துன்பங்களை தேவன் அவன் மேல் கூட்டுவார்.” 19 எவனாவது ஒருவன் தீர்க்கதரிசனப் புத்தக வசனங்களிலிருந்து எதையேனும் நீக்கினால் இந்நூலில் எழுதப்பட்டிருக்கிற வாழ்வின் மரத்திலிருந்தும் பரிசுத்த நகரிலிருந்தும் அவனுடைய பங்கை தேவன் நீக்கிவிடுவார்.
20 இவ்வார்த்தைகள் உண்மையென சாட்சியாய் அறிவிக்கிறவர் இயேசுவே. இப்போது அவர், “ஆம், நான் விரைவில் வருகிறேன்” என்று சொல்கிறார்.
ஆமென். கர்த்தராகிய இயேசுவே, வாரும்!
21 கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
2008 by World Bible Translation Center