Old/New Testament
யூதாவின் ராஜாவாகிய யோசியா
34 யோசியா ராஜாவாகும்போது அவனுக்கு 8 வயது. அவன் எருசலேமில் 31 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். 2 யோசியா சரியான செயல்களையே செய்தான். கர்த்தருடைய விருப்பப்படியே நல்ல காரியங்களையே அவன் செய்தான். அவன் தனது முற்பிதாவான தாவீதைப் போன்று நல்ல செயல்களைச் செய்துவந்தான். யோசியா நல்ல காரியங்களைச் செய்வதில் இருந்து திரும்பவே இல்லை. 3 யோசியா ஆட்சிப் பொறுப்பேற்ற எட்டாவது ஆண்டில் அவன் தனது முற்பிதாவான தாவீது தேவனைப் பின்பற்றியது போலவே பின்பற்ற ஆரம்பித்துவிட்டான். யோசியா தேவனைப் பின்பற்றும்போது மிகவும் இளையவனாக இருந்தான். யோசியா ராஜாவாகியப் பன்னிரண்டாம் ஆண்டில் அவன் மேடைகளையும், விக்கிரகங்களையும் அழித்தான். யூதா மற்றும் எருசலேமில் உள்ள அந்நிய விக்கிரகங்களையும் அகற்றினான். 4 பாகால் தெய்வங்களான எல்லா பலி பீடங்களையும் ஜனங்கள் உடைத்தனர். அவர்கள் யோசியாவின் முன்னிலையிலேயே இதனைச் செய்தனர். பிறகு ஜனங்களின் முன்னே உயரமாய் நின்றிருந்த நறுமணப் பொருட்களை எரிக்கும் பீடங்களை யோசியா இடித்தான். செதுக்கப்பட்ட விக்கிரகங்களையும், வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் அவன் உடைத்தான். அவன் அவற்றைத் தூளாக்கி, பாகால் தெய்வங்களை தொழுதுகொண்டு மரித்துப்போனவர்களின் கல்லறைகள் மீது தூவினான். 5 யோசியா பாகால் தெய்வத்துக்கு சேவைசெய்த ஆசாரியர்களின் எலும்புகளை அவர்கள் பலிபீடங்களிலேயே எரித்தான். இவ்வாறு யோசியா யூதா மற்றும் எருசலேமின் விக்கிரகங்களையும், விக்கிரக ஆராதனைகளையும் அழித்தான். 6 மனாசே, எப்பிராயீம், சிமியோன் மற்றும் நப்தலி செல்லும் வழி முழுவதுமான பகுதிகளில் இருந்த ஊர்களுக்கும் யோசியா அதையேச் செய்தான். அந்த ஊர்களுக்கு அருகாமையிலிருந்த பாழடைந்த பகுதிகளுக்கும் அவன் அதையே செய்தான். 7 யோசியா பலிபீடங்களையும், விக்கிரக தோப்புகளையும் அழித்தான். அவன் விக்கிரகங்களைத் தூளாக்குமாறு உடைத்தான். இஸ்ரவேல் நாட்டில் பாகாலை தொழுது கொள்ள வைத்திருந்த அனைத்து பலிபீடங்களையும் நொறுக்கினான். பிறகே அவன் எருசலேமிற்குத் திரும்பினான்.
8 யோசியா ஆட்சிப்பொறுப்பேற்ற 18வது ஆண்டில், சாப்பான், மாசெயா மற்றும் யோவா ஆகியோரை தனது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்டி அமைக்க அனுப்பினான். சாப்பானின் தந்தை பெயர் அத்சலியா. மாசெயா என்பவன் நகரத் தலைவன் ஆவான். யோவாவின் தந்தை பெயர் யோவாகாஸ் ஆகும். நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் எழுதுபவன் யோவா ஆவான். (அவன் பதிவு செய்பவன்).
எனவே யோசியா ஆலயம் பழுது பார்க்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டான். அதன் மூலம் யூதாவையும், ஆலயத்தையும் சுத்தப்படுத்தலாம் என்று நம்பினான். 9 அவர்கள் தலைமை ஆசாரியனான இல்க்கியாவிடம் வந்தனர். தேவனுடைய ஆலயத்திற்காக ஜனங்கள் கொடுத்த பணத்தை அவர்கள் இலக்கியாவிடம் கொடுத்தனர். வாயிற்காவலர்களான லேவியர்கள் இப்பணத்தை மனாசே, எப்பிராயீம் மற்றும் வெளியேறிய இஸ்ரவேலர் அனைவரிடமிருந்தும் வசூலித்திருந்தனர். அவர்கள் யூதா, பென்யமீன் மற்றும் எருசலேமில் உள்ள அனைத்து ஜனங்களிடமிருந்தும் பணத்தை வசூலித்திருந்தனர். 10 பிறகு லேவியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் வேலையை மேற்பார்வை செய்பவர்களிடம் பணத்தைக் கொடுத்தனர். மேற்பார்வையாளர்களோ அப்பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்தில் வேலைச் செய்பவர்களுக்குக் கொடுத்தனர். 11 அவர்கள் அப்பணத்தை மரத்தச்சர்களிடமும், கொத்தனார்களிடமும் கொடுத்தனர். சதுரக் கற்களும், மரப்பலகைகளும் வாங்குவதற்காக அப்பணத்தை அவர்களிடம் கொடுத்தனர். மீண்டும் கட்டிடங்களைக் கட்டவும் உத்திரங்களை அமைக்கவும் பயன்பட்டன. முற்காலத்தில் யூதாவின் ராஜாக்கள் எவரும் ஆலயக் கட்டிடத்தைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. அக்கட்டிடங்கள் பழையதாகி அழிந்துக்கொண்டிருந்தன. 12-13 எல்லா ஆட்களும் உண்மையாக உழைத்தார்கள். யாகாத்தும், ஒபதியாவும் அவர்களின் மேற்பார்வையாளர்கள். இவர்கள் லேவியர்கள். இவர்கள் மெராரியின் சந்ததியினர். சகரியாவும் மெசுல்லாமும் மேற்பார்வையாளர்கள்தான். இவர்கள் கோகாத்தின் சந்ததியினர். இசைக்கருவிகளை இயக்குவதில் திறமை பெற்ற லேவியர்கள் வேலைச்செய்பவர்களை மேற்பார்வை பார்ப்பதும் மற்ற வேலைகளைச் செய்வதுமாய் இருந்தனர். சில லேவியர்கள் செயலாளர்களாகவும், அதிகாரிகளாகவும் வாயிற் காவலர்களாகவும் இருந்தனர்.
சட்டப் புத்தகம் கண்டுபிடிக்கப்படுகிறது
14 கர்த்தருடைய ஆலயத்தில் இருக்கிற பணத்தை லேவியர்கள் வெளியே கொண்டு வந்தனர். அதே நேரத்தில் இல்க்கியா எனும் ஆசாரியன் கர்த்தருடைய சட்ட புத்தகத்தைக் கண்டுபிடித்தான். அது மோசேயால் கொடுக்கப்பட்டிருந்தது. 15 இல்க்கியா காரியக்காரனான சாப்பானிடம், சட்டப் புத்தகத்தை கர்த்தருடைய ஆலயத்தில் கண்டு எடுத்திருக்கிறேன் என்றான். இல்க்கியா அந்தப் புத்தகத்தைச் சாப்பானிடம் கொடுத்தான். 16 சாப்பான் அந்தப் புத்தகத்தை யோசியா ராஜாவிடம் எடுத்துவந்தான். அவன் ராஜாவிடம், “உங்கள் வேலைக்காரர்கள் நீங்கள் சொன்னது போலவே அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். 17 அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த பணத்தை சேகரித்து அதனை மேற்பார்வையாளர்களுக்கும், வேலைக்காரர்களுக்கும் கொடுக்கின்றனர்” என்றான். 18 மேலும் சாப்பான் ராஜாவிடம், “ஆசாரியனான இல்க்கியா ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்திருக்கிறான்” என்றான். பிறகு சாப்பான் அந்தப் புத்தகத்தை வாசித்துக் காட்டினான். அவன் வாசிக்கும்போது ராஜாவுக்கு முன்பு இருந்தான். 19 யோசியா ராஜா சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது அவன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். 20 பிறகு அவன் இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனான அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனான அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டான். 21 ராஜா, “செல்லுங்கள் எனக்காக கர்த்தரிடம் கேளுங்கள். இஸ்ரவேலிலும், யூதாவிலும் மிச்சமுள்ள ஜனங்களுக்காகக் கேளுங்கள். கண்டுபிடிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள சொற்களைப்பற்றி கேளுங்கள். நமது முற்பிதாக்கள் அவரது வார்த்தைகளுக்கு அடிபணியவில்லை என்பதால் கர்த்தர் நம் மீது கோபமாக இருக்கிறார். இந்தப் புத்தகம் செய்ய சொன்னவற்றையெல்லாம் அவர்கள் செய்யவில்லை!” என்றான்.
22 இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் உல்தாள் எனும் தீர்க்கதரிசி பெண்ணிடம் சென்றனர். உல்தாள் சல்லூமின் மனைவி. சல்லூம் திக்வாதின் குமாரன். திக்வாத் அஸ்ராவின் குமாரன். அஸ்ரா ராஜாவின் ஆடைகளுக்குப் பொறுப்பாளன். உல்தாள் எருசலேமின் புதிய பகுதியில் வாழ்ந்து வருகிறாள். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் அவளிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்கள். 23 உல்தாள் அவர்களிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: ராஜாவாகிய யோசியாவிடம் கூறுங்கள்: 24 ‘நான் இந்த இடத்திற்கும், இங்கு வாழும் ஜனங்களுக்கும் தொந்தரவுகளைத் தருவேன். யூதா ராஜாவின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா கொடூரமானவற்றையும் கொண்டு வருவேன். 25 ஜனங்கள் என்னைவிட்டு விலகி அந்நிய தெய்வங்களுக்கு நறுமணப் பொருட்களை எரிக்க போய்விட்ட காரணத்தால் நான் இவற்றைச் செய்வேன். தம்முடைய தீயச்செயல்களால் அவர்கள் எனக்கு மிகுதியான கோபத்தை மூட்டிவிட்டார்கள். எனவே நான் இந்த இடத்தில் எனது கோபத்தைக் கொட்டுவேன். நெருப்பைப்போன்று கோபம் அவியாது.’
26 “ஆனால் யூதாவின் ராஜாவாகிய யோசியாவிடம் கூறு. அவன் உங்களைக் கர்த்தரைக் கேட்குமாறு அனுப்பியிருக்கிறான். சற்று நேரத்திற்கு முன்னர் நீ கேட்டவற்றைப்பற்றி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: 27 ‘யோசியா நீ மனம் இளகி பணிந்துகொண்டாய், உனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டாய், எனக்கு முன்பு நீ அழுதாய். இவ்வாறு உன் மனம் இளகியதால், 28 உன் முற்பிதாக்களுடன் இருப்பதற்கு நான் உன்னை அழைத்துச் செல்வேன். நீ உனது கல்லறைக்கு சமாதானத்தோடு போவாய். அதனால் நான் இந்த இடத்துக்கும், இங்குள்ள ஜனங்களுக்கும் கொடுக்கப்போகும் பயங்கரமான துன்பங்களை நீ காணமாட்டாய்’” என்றார். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் இந்த செய்தியை யோசியா ராஜாவிடம் கொண்டுவந்தனர்.
29 பிறகு யோசியா யூதா மற்றும் எருசலேமில் உள்ள மூப்பர்களை அழைத்து அவர்களைச் சந்தித்தான். 30 ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். யூதாவிலுள்ள ஜனங்களும், எருசலேமில் உள்ள ஜனங்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் ராஜாவோடு சென்றனர். உடன்படிக்கைப் புத்தகத்தில் உள்ள அனைத்தையும் ராஜா அவர்களுக்கு வாசித்துக் காட்டினான். அப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புத்தகம் ஆகும். 31 பிறகு ராஜா தனது இடத்தில் எழுந்து நின்றான். பிறகு அவன் கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்தான். கர்த்தரைப் பின்பற்றுவதாகவும் அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் அடிபணிவதாகவும் சொன்னான். முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் அவன் கீழ்ப்படிவதற்கு ஒப்புக்கொண்டான். உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதப்பட்ட அனைத்துக்கும் அடிபணிவதாக ஒப்புக்கொண்டான். 32 பிறகு யோசியா எருசலேம் மற்றும் பென்யமீன் நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களையும் உடன்படிக்கையை ஒப்புக்கொள்கிற வகையில் வாக்குறுதி தரச் செய்தான். தமது முற்பிதாக்கள் கீழ்ப்படிந்த தேவனுடைய உடன்படிக்கையை எருசலேம் ஜனங்களும் கீழ்ப்படிந்தார்கள். 33 இஸ்ரவேல் ஜனங்கள் பல் வேறு நாடுகளிலிருந்து விக்கிரகங்களைக் கொண்டு வந்து வைத்திருந்தனர். ஆனால் யோசியா அந்த கொடூரமான விக்கிரகங்களை எல்லாம் அழித்துவிட்டான். ராஜா இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தேவனாகிய கர்த்தருக்குச் சேவைசெய்யுமாறுச் செய்தான். யோசியா உயிரோடு இருந்தவரை ஜனங்கள் தமது முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்தனர்.
யோசியா பஸ்காவைக் கொண்டாடுகிறான்
35 எருசலேமில் கர்த்தருக்கு யோசியா ராஜா பஸ்காவைக் கொண்டாடினான். பஸ்கா ஆட்டுக்குட்டி முதல் மாதத்தில் 14வது நாளன்று கொல்லப்பட்டது. 2 யோசியா ஆசாரியர்களை அவர் தம் கடமைகளைச் செய்யத் தேர்ந்தெடுத்தான். அவன் ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை செய்யும்போது உற்சாகப்படுத்தினான். 3 யோசியா லேவியர்களோடு பேசினார். அந்த லேவியர்கள் இஸ்ரவேலர்களுக்குக் கற்பிக்கிறவர்கள். கர்த்தருக்குச் செய்யும் சேவைகளால் பரிசத்தமானவர்களாக ஆக்கப்பட்டவர்கள். அவன் அவர்களிடம், “சாலொமோன் கட்டிய ஆலயத்தில் பரிசுத்தப் பெட்டியை வையுங்கள். சாலொமோன் தாவீதின் குமாரன். தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தான். மீண்டும் நீங்கள் பரிசுத்தப் பெட்டியை உங்கள் தோளில் சுமந்து இடம்விட்டு இடம் அலையாதீர்கள். இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்யுங்கள். தேவனுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களுக்குச் சேவை செய்யுங்கள். 4 ஆலயத்தில் உங்கள் கோத்திரத்தின் சார்பாகச் சேவைசெய்ய தயாராகுங்கள். தாவீது ராஜாவும், சாலொமோன் ராஜாவும் உங்களுக்கு ஒதுக்கிய வேலைகளைச் செய்யுங்கள். 5 லேவியர்கள் குழுவுடன் பரிசுத்தமான இடத்தில் நில்லுங்கள். நீங்கள் இதனை வெவ்வேறு கோத்திரங்களினால் செய்யுங்கள். இது அவர்களுக்கு உதவியாக இருக்கும். 6 பஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொல்லுங்கள். கர்த்தருக்கு முன்பு பரிசத்தமாக இருங்கள். இஸ்ரவேல் ஜனங்களாகிய உங்கள் சகோதரர்களுக்கு ஆட்டுக் குட்டிகளைத் தயார் செய்யுங்கள். கர்த்தர் நமக்கு கட்டளையிட்டவற்றை எல்லாம் செய்யுங்கள். கர்த்தர் நமக்கு மோசே மூலம் பல கட்டளைகளை கொடுத்திருக்கிறார்” என்றான்.
7 யோசியா 30,000 செம்மறியாடுகளையும், ஆட்டுக் கடாக்களையும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பஸ்காவில் பலியாகக் கொல்வதற்குக் கொடுத்தான். அவன் ஜனங்களுக்கு 3,000 கால்நடைகளையும் கொடுத்தான். இந்த விலங்குகள் அனைத்தும் யோசியா ராஜாவின் சொந்த விலங்குகள். 8 யோசியாவின் அதிகாரிகளும் இலவசமாக ஆடுகளையும் பொருட்களையும் ஜனங்களுக்கும், ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும் பஸ்கா காணிக்கைக்காக கொடுத்தனர். தலைமை ஆசாரியனான இல்க்கியா, சகரியா மற்றும் யெசியேல் ஆகியோர் ஆலயத்தின் பொறுப்பான அதிகாரிகள். அவர்கள் ஆசாரியர்களுக்கு 2,600 ஆட்டுக்குட்டிகளையும், 300 காளைகளையும் பஸ்கா பலியாகக் கொடுத்தார்கள். 9 மேலும், தனது சகோதரர்களான செமாயா மற்றும் நத்தானியேல் ஆகியவர்களுடனும் அசாபியா, ஏயேல் மற்றும் நத்தானியேல் ஆகியவர்களுடனும் இனணந்து கொனானியா, 500 செம்மறி ஆடுகளையும், காளைகளையும் பஸ்கா பலியாக லேவியர்களுக்குக் கொடுத்தான். அவர்கள் லேவியர்களின் தலைவர்கள்.
10 பஸ்கா சேவைத் தொடங்குவதற்கு அனைத்தும் தயாராக இருந்தபொழுது ஆசாரியர்களும், லேவியர்களும் அவர்களின் இடத்திற்குச் சென்றனர். இதுவே ராஜாவின் கட்டளையாகும். 11 பஸ்கா ஆடுகள் கொல்லப்பட்டன. பிறகு லேவியர்கள் தோலை உரித்தனர். இரத்தத்தை ஆசாரியர்களிடம் கொடுத்தனர். ஆசாரியர்கள் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தனர். 12 பிறகு அவர்கள் தகன பலிகளுக்காக வெவ்வேறு கோத்திரங்களுக்கு மிருகங்களைக் கொடுத்தனர். மோசேயின் சட்டம் தகனபலிகள் எவ்வாறு அளிக்கப்பட வேண்டும் என்று போதித்ததோ அவ்வாறே இது செய்யப்பட்டது. 13 லேவியர்கள் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே பஸ்கா பலிகளை தீயில் வறுத்தார்கள். அவர்கள் பரிசுத்தமான பலிகளைப் பானைகளிலும், கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்தனர். உடனடியாக அவர்கள் அவற்றை ஜனங்களுக்குக் கொடுத்தனர். 14 இவை முடிந்த பிறகு, லேவியர்கள் தங்களுக்கென்று இறைச்சியைப் பெற்றுக்கொண்டனர். ஆரோனின் சந்ததிகளான ஆசாரியர்களும் பெற்றுக்கொண்டனர். ஆசாரியர்கள் இருட்டுகிறவரை கடினமான வேலையை செய்தார்கள். அவர்கள் தகனபலிகளை எரிப்பதும், கொழுப்பை எரிப்பதுமாக இருந்தார்கள். 15 ஆசாப் குடும்பத்தைச் சேர்ந்த லேவியப் பாடகர்கள் ராஜா தாவீது தங்களுக்கு ஒதுக்கிய இடத்தை அடைந்தார்கள். அவர்கள் ஆசாப், ஏமான், ராஜாவின் தீர்க்கதரிசியான எதுத்தானும் சொன்னபடியே தங்கள் இடங்களில் நின்றுக்கொண்டிருந்தார்கள். வாசல் காவலர்கள் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள். அவர்கள் தங்கள் வேலையைவிட்டு விலகாமல் இருந்தார்கள். ஏனென்றால் அவர்களுக்காக அவர்களின் சகோதரரான லேவியர்கள் பஸ்காவில் அனைத்தையும் தயார் செய்துவிட்டனர்.
16 எனவே, யோசியா ராஜாவின் கட்டளைப்படி அன்று நடைபெற வேண்டிய வேலைகள் அனைத்தும் நடந்தேறின. கர்த்தருடைய பலிபீடத்தில் தகனபலிகள் கொடுக்கப்பட்டு பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. 17 அங்கிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்காவையும், புளிப்பில்லா அப்பப் பண்டிகையையும் ஏழு நாட்களாகக் கொண்டாடினார்கள். 18 தீர்க்கதரிசி சாமுவேல் காலத்திலிருந்து இன்றுவரை பஸ்கா பண்டிகை இதுபோல் எப்போதும் கொண்டாடப்படவில்லை. எந்தவொரு ராஜாவும் இஸ்ரவேலில் இதுபோல் பஸ்காவைக் கொண்டாடவில்லை. யோசியா ராஜா, ஆசாரியர்கள் லேவியர்கள், யூதா ஜனங்கள். எருசலேமில் இருந்த இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பஸ்காவைச் சிறப்பான முறையில் கொண்டாடினார்கள். 19 அவர்கள் யோசியா ஆட்சிப் பொறுப்பேற்ற 18வது ஆண்டில் இந்தப் பஸ்காவைக் கொண்டாடினார்கள்.
யோசியாவின் மரணம்
20 யோசியா ஆலயத்திற்கு அனைத்து நல்ல செயல்களையும் செய்து முடித்தான். பிறகு எகிப்து ராஜாவாகிய நேகோ தன் படைகளோடு ஐபிராத்து ஆற்றின் கரையிலுள்ள கர்கேமிஸ் நகரத்தின் மீது போர் செய்ய சென்றான். உடனே யோசியா ராஜாவும் அவனோடு போரிடச் சென்றான். 21 ஆனால் நேகோ யோசியாவுக்குத் தூதுவர்களை அனுப்பினான். அவர்கள்,
“யோசியா ராஜாவே! இந்தப் போர் உங்களுக்கு எதிரானது அல்ல. நான் உனக்கு எதிராகச் சண்டை செய்ய வரவில்லை. நான் என் பகைவர்களுக்கு எதிராகச் சண்டை செய்ய வந்திருக்கிறேன். தேவன் என்னை விரைவாகச் செல்லுமாறு சொன்னார். தேவன் என் பக்கத்தில் உள்ளார். எனவே எனக்கு எதிராகப் போரிடவேண்டாம். நீ எனக்கு எதிராகப் போரிட்டால் தேவன் உன்னை அழிப்பார்!” என்றனர்.
22 ஆனால் யோசியா அங்கிருந்து விலகவில்லை. அவன் நேகோவோடு போரிட முடிவுசெய்தான். எனவே அவன் உருவத்தை மாற்றிக்கொண்டு போரிட களத்துக்குச் சென்றான். தேவனுடைய கட்டளையைப் பற்றி நேகோ சொன்னதை யோசியா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். யோசியா போரிட மெகிதோ பள்ளத்தாக்குக்குச் சென்றான். 23 போர்க்களத்தில் ராஜா யோசியாவின்மேல் அம்புகள் பாய்ந்தன. அவன் தன் வேலைக்காரர்களிடம், “நான் பலமாகக் காயப்பட்டிருக்கிறேன். நீங்கள் என்னைத் தூக்கிச் செல்லுங்கள்!” என்றான்.
24 எனவே, வேலைக்காரர்கள் யோசியாவை அவனது இரதத்திலிருந்து இறக்கி, வேறொரு இரதத்தில் ஏற்றினார்கள். இரண்டாவது இரதமும் அவனால் போர்க்களத்துக்குக் கொண்டுவரப்பட்டதுதான். பின் யோசியாவை எருசலேமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவன் மரித்தான். அவன் முற்பிதாக்களின் கல்லறைகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான். யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்கள் அனைவரும் யோசியாவின் மரணத்திற்காகப் பெரிதும் துக்கப்பட்டார்கள். 25 யோசியாவிற்காக எரேமியா புலம்பல் பாடல்களை எழுதிப் பாடினான். இன்றும் ஆண் பெண் பாடகர்கள் அப்பாடல்களைப் பாடி வருகிறார்கள். அவை இன்றுவரை இஸ்ரவேலில் வழங்கிவருகிறது. புலம்பல் பாடல்கள் என்ற புத்தகத்தில் அவை எழுதப்பட்டுள்ளன.
26-27 யோசியாவின் தொடக்க காலமுதல் முடிவுவரை அவன் செய்த அனைத்து செயல்களும் யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. கர்த்தரிடம் அவன் எவ்வளவு உண்மையானவனாக இருந்தான் என்பதையும், கர்த்தருடைய சட்டங்களுக்கு எவ்வாறு அடிபணிந்தான் என்பதையும் அப்புத்தகம் விளக்குகிறது.
யூதாவின் ராஜாவாகிய யோவாகாஸ்
36 எருசலேமில் யூதாவின் புதிய ராஜாவாக யோவாகாசை ஜனங்கள் தேர்ந்தெடுத்தனர். யோவாகாஸ் யோசியாவின் குமாரன். 2 யோவாகாஸ் தனது 23வது வயதில் யூதாவின் ராஜா ஆனான். அவன் எருசலேமில் மூன்று மாதங்களே ராஜாவாக இருந்தான். 3 பிறகு எகிப்து ராஜாவாகிய நேகோயோ வாகாசைக் கைதியாக்கினான். 3 1/4 டன் எடையுள்ள வெள்ளியும், 75 பவுண்டு எடையுள்ள தங்கமும் அபராதமாகச் செலுத்த வேண்டுமென யூதா ஜனங்களிடம் எகிப்து ராஜாவாகிய நேகோ சொன்னான். 4 யோவாகாசின் சகோதரனை யூதா மற்றும் எருசலேமின் புதிய ராஜாவாக நேகோ தேர்ந்தெடுத்தான். யோவாகாசின் சகோதரனின் பெயர் எலியாக்கீம் ஆகும். அவனது பெயரை யோயாக்கீம் என்று நேகோ மாற்றினான். ஆனால் நேகோ யோவாகாசை எகிப்திற்கு அழைத்துச்சென்றான்.
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம்
5 யோயாக்கீம் யூதாவின் புதிய ராஜாவாகிய போது அவனது வயது 25. அவன் எருசலேமில் 11 ஆண்டுகள் ஆண்டான். கர்த்தர் செய்ய வேண்டும் என்று விரும்பியவற்றை யோயாக்கீம் செய்யவில்லை. அவன் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தான்.
6 யூதாவை பாபிலோனில் இருந்த நேபுகாத்நேச்சார் தாக்கினான். அவன் யோயாக்கீமை கைது செய்து வெண்கலச் சங்கிலியால் கட்டினான். பிறகு அவனை பாபிலோனுக்கு இழுத்துச்சென்றான். 7 நேபுகாத்நேச்சார் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து பொருட்களை எடுத்துச்சென்றான். அவற்றை பாபிலோனுக்கு எடுத்துச்சென்று தனது அரண்மனையில் வைத்துக்கொண்டான். 8 யோயாக்கீம் செய்த மற்ற செயல்களும் பாவங்களும் அவனது பயங்கரமான தவறுகளும், இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. யோயாக்கீன் புதிய ராஜாவாக யோயாக்கீம் இடத்தில் ஆனான். இவன் யோயாக்கீமின் குமாரன்.
யூதாவின் மன்னனான யோயாக்கீன்
9 யோயாக்கீன் யூதாவின் ராஜாவாக ஆனபோது அவனது வயது 18 ஆகும். அவன் எருசலேமின் ராஜாவாக 3 மாதங்களும் 10 நாட்களும் இருந்தான். கர்த்தர் செய்யவிரும்பியதை அவன் செய்யவில்லை. அவன் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தான். 10 வசந்தகாலத்தின் தொடக்கத்தில் நேபுகாத்நேச்சார் வேலைக்காரர்களை அனுப்பி யோயாக்கீனை வரவழைத்தான். அவர்கள் அவனோடு கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள விலைமதிப்பற்ற பொருட்களையும் பாபிலோனுக்கு எடுத்துச்சென்றனர். நேபுகாத் நேச்சார் சிதேக்கியாவைத் தேர்ந்தெடுத்து யூதா மற்றும் எருசலேமின் ராஜாவாக்கினான். சிதேக்கியா யோயாக்கீனின் உறவினன் ஆவான்.
சிதேக்கியா, யூதாவின் ராஜா
11 சிதேக்கியா யூதாவின் ராஜாவாகியபோது அவனது வயது 21 ஆகும். அவன் எருசலேமில் 11 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். 12 சிதேக்கியா கர்த்தருடைய விருப்பப்படி செயல்களைச் செய்யவில்லை. சிதேக்கியா கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தான். எரேமியா என்ற தீர்க்கதரிசி கர்த்தரிடமிருந்து செய்தியைச் சொன்னான். ஆனால் சிதேக்கியா பணிவடையாமல் எரேமியாவின் பேச்சைக் கேட்கவில்லை.
எருசலேம் அழிக்கப்பட்டது
13 சிதேக்கியா நேபுகாத்நேச்சார் ராஜாவுக்கு எதிராக ஆனான். முன்பு நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவிடம் தனக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று வாக்குறுதி வாங்கியிருந்தான். சிதேக்கியா தேவன் மேல் ஆணைச் செய்திருந்தான். ஆனால் அவன் கடின மனதுள்ளவனாக இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய பக்கம் திரும்பாமல் இருந்தான். 14 ஆசாரியர்களின் தலைவர்களும், யூதா ஜனங்களின் தலைவர்களும் கொடிய பாவங்களைச் செய்து கர்த்தருக்கு எதிராகிப்போனார்கள். அவர்கள் பிற நாடுகளின் தீயச்செயல்களைப் பின்பற்றினார்கள். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தை அழித்தார்கள். கர்த்தர் எருசலேமில் தன் ஆலயத்தைப் பரிசுத்தமாக வைத்திருந்தார். 15 அவர்களது முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எச்சரிக்கப் பல்வேறு தீர்க்கதரிசிகளை மீண்டும், மீண்டும் அனுப்பினார். கர்த்தர் அவர்களுக்காகவும், தமது ஆலயத்துக்காகவும் வருத்தப்பட்டார். அதனால் அவர் இவ்வாறுச் செய்தார். கர்த்தர் அவர்களையும், ஆலயத்தையும் அழித்துவிட விரும்பவில்லை. 16 ஆனால் தேவனுடைய ஜனங்கள் தேவனுடைய தீர்க்கதரிசிகளைக் கேலிச் செய்தனர். தேவனுடைய தீர்க்கதரிசனங்களைக் கேட்க அவர்கள் மறுத்தனர். அவர்கள் தேவனுடைய செய்திகளை வெறுத்தார்கள். இறுதியில் தேவனால் அவரது கோபத்தை அதற்கு மேல் அடக்க முடியவில்லை. 17 எனவே தேவன் பாபிலோனின் ராஜாவை யூதா மற்றும் எருசலேம் ஜனங்களைத் தாக்கிட அழைத்து வந்தார். பாபிலோன் ராஜா இளைஞர்களை அவர்கள் ஆலயத்தில் இருந்தபோதுங்கூட கொன்றான். அவன் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களிடம் இரக்கம் காட்டவில்லை. பாபிலோனிய ராஜா இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், நோயாளிகள், ஆரோக்கியமுடையவர்கள் என அனைவரையும் கொன்றான். யூதா மற்றும் எருசலேம் ஜனங்களைத் தண்டிக்கும்படி தேவன் நேபுகாத்நேச்சரை விட்டுவிட்டார். 18 நேபுகாத்நேச்சார் தேவனுடைய ஆலயத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் பாபிலேனுக்கு எடுத்துச்சென்றான். ஆலயம், ராஜாவின் அரண்மனை, அதிகாரிகளின் வீடு என எல்லா இடங்களிலும் இருந்த விலைமதிக்கமுடியாத பொருள்களையும் அவன் எடுத்துச் சென்றான். 19 நேபுகாத்நேச்சாரும் அவனது படையும் ஆலயத்தை எரித்தனர். எருசலேம் சுவர்களை இடித்தனர். ராஜா மற்றும் அதிகாரிகளின் வீடுகளை அடித்துச் சிதைத்து எரித்தனர். அவர்கள் விலையுயர்ந்த பொருட்களை அழிப்பதும், எடுத்து செல்வதுமாய் இருந்தனர். 20 நேபுகாத்நேச்சார் உயிரோடு மீதியாக உள்ள ஜனங்களை பாபிலோனுக்குக் கொண்டுபோய் அவர்களைக் கட்டாயப்படுத்தி அடிமையாக்கினான். பெர்சிய அரசு பாபிலோனிய அரசை அழிக்கும்வரை அவர்கள் அங்கு அடிமைகளாகவே இருந்தனர். 21 எரேமியா தீர்க்கதரிசி மூலம் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தர் சொன்னது யாவும் நடந்தது. கர்த்தர் ஏரேமியா மூலம் சொன்னது: இந்த இடம் இன்னும் 70 ஆண்டுகளுக்கு பாழாய் கிடக்கும். நிலங்களுக்கு ஜனங்களால் வழங்கப்படாமல் போன ஓய்வு ஆண்டுகளுக்காக சரி செய்வது போல் இது இருக்கும்.
22 பெர்சியா ராஜாவாகிய கோரேசின் முதலாம் ஆண்டில் கர்த்தர் கோரேசின் மூலமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவன் இதனைச் செய்ததால் கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் வாக்களித்ததும் நிறைவேறும். கோரேசு தன் அரசின் அனைத்து பகுதிகளுக்கும் தூதுவர்களை அனுப்பினான். அவர்கள் இந்தச் செய்தியை எடுத்துச் சென்றனர்.
23 பெர்சியா ராஜாவாகிய கோரேசு கூறுவது:
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் என்னை பூமி முழுவதற்கும் ராஜா ஆக்கினார். எருசலேமில் அவர் தனக்கொரு ஆலயத்தைக் கட்டும்படி பொறுப்பளித்துள்ளார். இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் எருசலேமிற்குப் போகும்படி விடுவிக்கிறேன். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருப்பாராக.
19 பிறகு பிலாத்து இயேசுவை அழைத்துப்போய் சவுக்கால் அடிக்குமாறு கட்டளையிட்டான். 2 போர்ச் சேவகர்கள் முள்ளினால் ஒரு முடியைப் பின்னினர். அவர்கள் அதை இயேசுவின் தலைமீது அணிவித்தனர். பிறகு சிவப்பான அங்கியை அவருக்கு உடுத்தினார்கள். 3 “யூதருடைய ராஜாவே, வாழ்க” என்று அடிக்கடி பலதடவை அவரிடம் வந்து சொன்னார்கள். அவர்கள் இயேசுவை முகத்தில் அறைந்தார்கள்.
4 மீண்டும் பிலாத்து யூதர்களிடம் போய் “பாருங்கள்! நான் உங்களுக்காக இயேசுவை வெளியே கொண்டு வருகிறேன். நான் இவனிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்றான். 5 பிறகு இயேசு வெளியே வந்தார். அவர் தலையில் முள்முடியும் சரீரத்தில் சிவப்பு அங்கியும் அணிந்திருந்தார். “இதோ அந்த மனிதன்” என்று யூதர்களிடம் பிலாத்து சொன்னான்.
6 பிரதான ஆசாரியரும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கண்டவுடன் “அவனைச் சிலுவையில் அறையுங்கள்” என்று சத்தமிட்டனர்.
ஆனால் பிலாத்துவோ, “நீங்கள் அவனை அழைத்துப்போய் நீங்களாகவே அவனைச் சிலுவையில் அறையுங்கள். நான் தண்டனை தரும்படியாக இவனுக்கு எதிராக எந்த குற்றத்தையும் கண்டு பிடிக்கவில்லை” என்று கூறிவிட்டான்.
7 யூதர்களோ, “எங்களுக்கென்று ஒரு சட்டம் உண்டு. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனென்றால் அவன் தன்னை தேவனின் குமாரன் என்று கூறியிருக்கிறான்” என்றனர்.
8 பிலாத்து இவற்றைக் கேட்டதும் மேலும் பயந்தான். 9 பிலாத்து மீண்டும் அரண்மனைக்குள் போனான். அவன் இயேசுவிடம், “நீ எங்கே இருந்து வருகிறாய்?” எனக் கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் சொல்லவில்லை. 10 அதனால் பிலாத்து, “நீ என்னோடு பேச மறுக்கவா செய்கிறாய்? நான் உன்னை விடுதலை செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவன். இதனை நினைத்துக்கொள். உன்னைச் சிலுவையில் அறைந்து கொல்லும் அதிகாரமும் எனக்கு இருக்கிறது” என்றான்.
11 “தேவனிடமிருந்து அதிகாரம் வந்தால் ஒழிய நீர் என்மீது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாது. எனவே, என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிகப் பாவம் உண்டு” என்று இயேசு பதிலுரைத்தார்.
12 இதற்குப் பிறகு இயேசுவை விடுதலை செய்யப் பிலாத்து முயற்சி செய்தான். ஆனால் யூதர்களோ, “எவனொருவன் தன்னை ராஜா என்று கூறுகிறானோ அவன் இராயனின் பகைவன். எனவே, நீங்கள் இயேசுவை விடுதலை செய்தால் நீங்கள் இராயனின் நண்பன் இல்லை என்று பொருள்” எனச் சத்தமிட்டார்கள்.
13 யூதர்கள் சொன்னவற்றைப் பிலாத்து கேட்டான். எனவே, அவன் இயேசுவை அரண்மனையை விட்டு வெளியே இழுத்து வந்தான். யூதர்களின் மொழியில் கபத்தா என்று அழைக்கப்பெறும் கல்தள வரிசை அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தான். அங்கே இருந்த நீதிபதியின் இருக்கையில் அமர்ந்தான். 14 அப்பொழுது அது பஸ்காவுக்குத் தயாராகும் நாளாகவும் மதியவேளையாகவும் இருந்தது. பிலாத்து யூதர்களிடம் “இதோ உங்கள் ராஜா” என்றான்.
15 அதற்கு யூதர்கள், “அவனை அப்புறப்படுத்துங்கள்! அவனை அப்புறப்படுத்துங்கள்! அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமிட்டனர்.
அவர்களிடம் பிலாத்து, “உங்களது ராஜாவை நான் சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.
அதற்குத் தலைமை ஆசாரியன், “எங்களது ஒரே ராஜா இராயன் மட்டுமே” என்று பதில் சொன்னான். 16 அதனால் பிலாத்து இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லும்படி அவரை அவர்களிடம் ஒப்படைத்தான்.
சிலுவையில் இயேசு
(மத்தேயு 27:32-44; மாற்கு 15:21-32; லூக்கா 23:26-39)
சேவகர்கள் இயேசுவை இழுத்துக்கொண்டுபோனார்கள். 17 இயேசு தனது சிலுவையைத் தானே சுமந்துகொண்டுபோனார். அவர் மண்டை ஓடுகளின் இடம் என்னும் கபாலஸ்தலம் என்று அழைக்கப்படும் இடத்துக்குப்போனார். (இதனை யூத மொழியில் கொல்கதா என்று அழைப்பர்) 18 கொல்கதாவில் சிலுவையில் இயேசுவை ஆணிகளால் அறைந்தார்கள். அவர்கள் வேறு இருவரையும் சிலுவையில் அறைந்தனர். இயேசுவை நடுவிலும் ஏனைய இருவரை இரு பக்கத்திலும் நட்டு வைத்தனர்.
19 பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் “நசரேயனாகிய இயேசு, யூதர்களின் ராஜா” என்று எழுதப்பட்டிருந்தது. 20 அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது. ஏராளமான யூதர்கள் இந்த அறிவிப்பை வாசித்தனர். ஏனென்றால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.
21 யூதர்களின் தலைமை ஆசாரியன் பிலாத்துவிடம், “யூதருடைய ராஜா என்று எழுதக்கூடாது. அவன் தன்னை யூதருடைய ராஜா என்று சொன்னதாக எழுதவேண்டும்” என்றான்.
22 அதற்குப் பிலாத்து, “நான் எழுதினதை மாற்றி எழுதமாட்டேன்” என்று கூறிவிட்டான்.
2008 by World Bible Translation Center