Old/New Testament
ஆகானின் பாவம்
7 இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுக்கு கீழ்ப்படியாமலிருந்தனர். சிம்ரி என்பவனின் பேரனும், கர்மீ என்பவனின் மகனுமாகிய யூதா கோத்திரத்தைச் சார்ந்த ஆகான் என்ற பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் அழிக்கப்பட வேண்டிய சில பொருட்களை எடுத்து வைத்திருந்தான். எனவே இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தர் மிகுந்த கோபமடைந்தார்.
2 அவர்கள் எரிகோவை தோற்கடித்த பிறகு, யோசுவா சில மனிதரை ஆயீக்கு அனுப்பினான். ஆயீ, பெத்தாவேனுக்கு அருகில், பெத்தேலுக்குக் கிழக்காக உள்ளது. யோசுவா அவர்களிடம், “ஆயீக்குச் சென்று அவ்விடத்தின் பெலவீனங்களைத் தெரிந்து வாருங்கள்” என்றான். அம்மனிதர்களும் அந்த இடத்தை உளவறிந்து வருவதற்கு சென்றனர்.
3 பின்னர் அவர்கள் யோசுவாவிடம் திரும்பி வந்து, “ஆயீ ஒரு பலவீனமான பகுதி. அவ்விடத்தை தோற்கடிக்க நம் ஜனங்கள் அனைவரும் தேவையில்லை. 2,000 அல்லது 3,000 ஆட்களை அங்கு போர்செய்ய அனுப்புங்கள். படை முழுவதையும் பயன்படுத்த வேண்டியிராது. நம்மை எதிர்த்துப் போர் செய்வதற்குச் சில மனிதர்களே உள்ளனர்” என்றார்கள்.
4-5 எனவே சுமார் 3,000 மனிதர் ஆயீக்குப் போனார்கள். ஆனால் ஆயீயின் ஜனங்கள், இஸ்ரவேலரில் சுமார் 36 பேரைக் கொன்றனர். இஸ்ரவேல் ஜனங்கள் ஓடிவிட்டனர். நகரவாசலிலிருந்து இஸ்ரவேலரை மலைச் சரிவு வரைக்கும் துரத்தினார்கள். ஆயீயின் ஜனங்கள் அவர்களைப் பயங்கரமாகத் தோற்கடித்தனர்.
இஸ்ரவேல் ஜனங்கள் இதைக் கண்டு அஞ்சி, துணிவிழந்தனர். 6 யோசுவா இதைக் கேட்டபோது, துயரமுற்றுத் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக விழுந்து வணங்கினான். மாலைவரைக்கும் அங்கேயே இருந்தான். இஸ்ரவேலரின் தலைவர்களும் அவ்வாறே செய்தனர். அவர்கள் தங்கள் துயரத்தை வெளிப்படுத்துவதற்கு சாம்பலைத் தலையில் தூவிக்கொண்டனர்.
7 யோசுவா, “எனது ஆண்டவராகிய கர்த்தாவே! எங்கள் ஜனங்களை நீர் யோர்தான் நதியைக் கடக்க வைத்தீர். ஏன் எங்களை இத்தனை தூரம் அழைத்து வந்து எமோரியரால் அழிவுற வைக்கிறீர்? நாங்கள் திருப்தியோடு யோர்தானின் அக்கரையில் வாழ்ந்திருக்கலாம்! 8 கர்த்தாவே! எனது உயிரின் மீது ஆணையிடுகிறேன், நான் சொல்லக்கூடியது எதுவுமில்லை. இஸ்ரவேலரைப் பகைவர்கள் சூழ்ந்துள்ளனர். 9 கானானியரும் இந்நாட்டின் எல்லா ஜனங்களும் நடந்ததை அறிவார்கள். அவர்கள் எங்களைத் தாக்கி அழிப்பார்கள்! அப்போது உமது மேலான பெயரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்வீர்” என்றான்.
10 கர்த்தர் யோசுவாவை நோக்கி, “உன் முகத்தைத் தரையில் கவிழ்த்து ஏன் விழுந்துகிடக்கிறாய்? எழுந்து நில்! 11 இஸ்ரவேல் ஜனங்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். அவர்கள் கீழ்ப்படியுமாறு கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறினார்கள். அழித்துவிடும்படி நான் கட்டளையிட்ட பொருட்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதை திருடிவிட்டனர். அவர்கள் பொய் கூறிவிட்டனர். அப்பொருட்களை அவர்களுக்காக எடுத்துள்ளனர். 12 அதனால்தான் இஸ்ரவேல் படை போரிலிருந்து புறமுதுகு காட்டித் திரும்பிவிட்டது. அவர்கள் தவறு செய்ததாலேயே அவ்விதம் நடந்தது. நான் உங்களுக்கு உதவமாட்டேன். நீங்கள் அழிக்கவேண்டுமென நான் கட்டளையிட்டவற்றை அழிக்காவிட்டால் நான் உங்களோடு இருக்கமாட்டேன்.
13 “இப்போதும் போய், ஜனங்களை பரிசுத்தப்படுத்து. ஜனங்களிடம், ‘உங்களை பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள், நாளைக்குத் தயாராகுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இங்கு சிலர், கர்த்தர் அழிக்குமாறு கட்டளையிட்ட பொருட்களை வைத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார். நீங்கள் அவற்றை அப்புறப்படுத்தாவிட்டால் உங்கள் பகைவர்களை ஒருபோதும் வெல்ல முடியாமல் போகலாம்.
14 “‘நானை காலையில் கர்த்தரின் முன்பாக எல்லோரும் வரவேண்டும். எல்லாக் கோத்திரத்தினரும் கர்த்தருக்கு முன்பு நிற்கும்போது, கர்த்தர் ஒரு கோத்திரத்தாரைத் தேர்ந்தெடுப்பார். அப்போது அந்தக் கோத்திரத்தினர் கர்த்தரின் முன் நிற்கவேண்டும். கர்த்தர் அந்தக் கோத்திரத்திலிருந்து ஒரு வம்சத்தை தேர்ந்தெடுப்பார். பின் அவ்வம்சத்திலிருந்து கர்த்தர் ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுப்பார். பின் கர்த்தர் அக்குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரையும் பார்ப்பார். 15 அழிக்க வேண்டிய பொருளை வைத்திருக்கிறவன் அப்போது அகப்படுவான். அம்மனிதனும், அவனுக்குச் சொந்தமானவையெல்லாம் அவனோடு நெருப்பினால் அழிக்கப்படவேண்டும். அம்மனிதன் கர்த்தரோடு செய்த உடன்படிக்கையை மீறினான். அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மிகுந்த தீமையான காரியத்தைச் செய்தான்!’ என்று சொல்” என்றார்.
16 மறுநாள் அதிகாலையில், யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தரின் முன்னால் நிற்கும்படி செய்தான். எல்லாக் கோத்திரத்தினரும் கர்த்தருக்கு முன் நின்றனர். கர்த்தர் யூதா கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார் 17 எனவே அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த எல்லாக் குழுக்களும் கர்த்தருக்கு முன்னே நின்றனர். கர்த்தர் சேரா குழுவினரைத் தேர்ந்தெடுத்தார். பின் சேரா குழுவினரின் எல்லாக் குடும்பத்தாரும் கர்த்தருக்கு முன்னே நின்றார்கள். சிம்ரியின் குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
18 யோசுவா அக்குடும்பத்தின் ஆண்களையெல்லாம் கர்த்தருக்கு முன் வருமாறு கூறினான். கர்த்தர் கர்மீயின் குமாரன் ஆகானைத் தேர்ந்தெடுத்தார். (கர்மீ சிம்ரியின் குமாரன், சிம்ரி சேராவின் குமாரன்.)
19 யோசுவா ஆகானை நோக்கி, “மகனே, உனது விண்ணப்பங்களைச் சொல். நீ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தி, உனது பாவங்களை அவரிடம் கூறு. நீ செய்ததை எனக்குக் கூறு. என்னிடமிருந்து எதையும் மறைக்காதே!” என்றான்.
20 ஆகான், “நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தது உண்மை. நான் செய்தது இதுவே: 21 நாம் எரிகோவையும் அந்நகரத்தின் பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டபோது பாபிலோனிலிருந்து கொண்டுவந்த அழகிய மேலாடையையும், சுமார் ஐந்து பவுண்டு வெள்ளியையும், ஒரு பவுண்டு பொன்னையும் கண்டேன். அவற்றை எடுத்துக் கொண்டேன். அப்பொருள்கள் எனது கூடாரத்திற்கடியிலுள்ள நிலத்தில் புதைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். மேலாடையின் கீழே வெள்ளி இருக்கிறது” என்றான்.
22 எனவே யோசுவா சிலரைக் கூடாரத்திற்கு அனுப்பினான். அவர்கள் கூடாரத்திற்கு ஓடிச் சென்று, அப்பொருட்கள் கூடாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். மேலாடையின் கீழே வெள்ளி இருந்தது. 23 அவர்கள் அப்பொருட்களைக் கூடாரத்திற்கு வெளியே எடுத்து வந்து, அவற்றை யோசுவாவிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கொண்டு சென்று, கர்த்தருக்கு முன் அவற்றைத் தரையில் போட்டனர்.
24 சேராவின் குமாரனாகிய ஆகானை யோசுவாவும், ஜனங்களும் ஆகோர் பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றனர். அந்த வெள்ளி, மேலாடை, பொன், ஆகானின் குமாரர்கள், குமாரத்திகள், அவனது ஆடு மாடுகள், கழுதைகள் கூடாரம், பிற பொருட்களையும் ஆகோர் பள்ளத்தாக்கில் சேர்ப்பித்தனர். 25 அப்போது யோசுவா, “எங்களுக்கு நேர்ந்த தொந்தரவுகளுக்கு நீ காரணமாக இருந்தாய்! இப்போது கர்த்தர் உனக்குத் தொல்லையளிப்பார்!” என்றான். அப்போது ஜனங்கள் ஆகானின் மீதும் அவன் குடும்பத்தினர் மீதும் அவர்கள் மரிக்கும்படி கற்களை வீசினார்கள். பிறகு ஜனங்கள் அவர்களின் உடல்களையும் அவர்களின் பொருட்களையும் எரித்தனர். 26 ஆகானை எரித்த பின், அவன் உடம்பின் மீது கற்களைக் குவித்தனர். அவை இன்னும் அங்கு உள்ளன. தேவன் ஆகானின் குடும்பத்திற்குத் தொல்லை கொடுத்தார். அதனால் அவ்விடம் ஆகோர் (தொல்லை) பள்ளத்தாக்கு எனப்படுகிறது. அதன் பின் கர்த்தர் ஜனங்களிடம் கோபமாயிருக்கவில்லை.
ஆயீ அழிக்கப்படுதல்
8 கர்த்தர் யோசுவாவை நோக்கி, “அஞ்சாதே, முயற்சியைக் கைவிடாதே. போர் செய்யும் ஆண்களை ஆயீக்கு வழிநடத்து. ஆயீயின் ராஜாவை அழிக்க நான் உதவுவேன். அவன் ஜனங்கள், நகரம், தேசம் ஆகியவற்றை உனக்குத் தருகிறேன். 2 எரிகோவுக்கும் அதன் ராஜாவுக்கும் செய்தவற்றை நீ ஆயீக்கும், அதன் ராஜாவுக்கும் செய்வாய். இம்முறை எல்லா செல்வத்தையும், கால் நடைகளையும் உங்களுக்காக வைத்துக் கொண்டு உனது ஜனங்களோடு செல்வத்தைப் பங்கிட்டுக்கொள்வாய். இப்போது, நகரத்தின் பின்னே உன் வீரர்களில் சிலரை மறைந்துகொள்ளச் சொல்” என்றார்.
3 யோசுவா தனது சேனையை ஆயீக்கு நேராக வழி நடத்தினான். பின் 30,000 சிறந்த போர்வீரரைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரவில் அனுப்பினான். 4 யோசுவா அவர்களுக்குப் பின் வருமாறு கட்டளையிட்டு: “நான் உங்களுக்கு சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நகரத்திற்குப் பின்னாலுள்ள பகுதியில் நீங்கள் ஒளிந்திருக்க வேண்டும். தாக்குவதற்கேற்ற நேரத்துக்காக காத்திருங்கள். நகரத்திலிருந்து வெகு தூரம் செல்லாதீர்கள். தொடர்ந்து கவனித்தபடி தயாராக இருங்கள். 5 நகரத்திற்கு நேராக அணிவகுத்துச் செல்வதற்கு நான் என்னுடன் உள்ளவர்களை வழி நடத்துவேன். நகரத்தின் ஜனங்கள் எங்களை எதிர்த்து சண்டையிட வெளியில் வருவார்கள். நாம் முன்னர் செய்தபடியே, திரும்பி ஓடுவோம். 6 அம்மனிதர்கள் எங்களை நகரத்திற்கு வெளியே துரத்துவார்கள். முன்பைப் போல் நாம் நகரத்திற்கு வெளியே ஓடுகிறோம் என்று அவர்கள் நினைப்பார்கள். இவ்வாறு நாங்கள் ஓடிவிடுவோர்களைப் போலக் காண்பிப்போம். 7 அப்போது நீங்கள் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்து நகரத்தைக் கைப்பற்ற வேண்டும். வெற்றி பெறும் வல்லமையைத் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருவார்.
8 “கர்த்தர் கூறுகிறபடியே நீங்கள் செய்ய வேண்டும். என்னைக் கவனியுங்கள். நகரத்தைத் தாக்குவதற்கான கட்டளையை நான் இட்டதும் நகரத்தைக் கைப்பற்றி, அதற்குத் தீ மூட்டுங்கள்” என்றான்.
9 யோசுவா அம்மனிதர்களை மறைவிடங்களுக்கு அனுப்பியபின் காத்திருந்தான். அவர்கள் பெத்தேலுக்கும் ஆயீக்கும் மத்தியிலுள்ள ஓரிடத்திற்குச் சென்றனர். அது ஆயீக்கு மேற்கிலிருந்தது. அன்றிரவு யோசுவா தனது ஜனங்களோடு தங்கியிருந்தான்.
10 மறுநாள் அதிகாலையில் யோசுவா ஆண்களைக் கூடிவரும்படி அழைத்தான். பின் யோசுவாவும், இஸ்ரவேல் தலைவர்களும் அவர்களை ஆயீக்கு வழிநடத்தினர். 11 யோசுவாவோடிருந்த எல்லா வீரர்களும் ஆயீக்கு நேராக அணிவகுத்துச் சென்று நகரத்திற்கு முன்னே சென்று நின்றனர். நகரத்திற்கு வடக்கே படை முகாமிட்டது. பாளையத்திற்கும் ஆயீக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
12 அப்போது யோசுவா சுமார் 5,000 ஆண்களைத் தெரிந்துகொண்டு, பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவில், நகரத்திற்கு மேற்கேயுள்ள பகுதியில் மறைந்திருக்குமாறு கூறி, அவர்களை அனுப்பினான். 13 யோசுவா அவனது ஆட்களைப் போருக்குத் தயாராக்கினான். நகரத்திற்கு வடக்கே பெரிய முகாம் இருந்தது. மற்ற ஆட்கள் மேற்கே மறைந்திருந்தனர். இரவில் யோசுவா பள்ளத்தாக்கினுள் இறங்கிச் சென்றான்.
14 இஸ்ரவேலரின் படையைக் கண்டதும் ஆயீயின் ராஜாவும் அவனது ஆட்களும் எழுந்து இஸ்ரவேலரின் படையோடு போர் செய்வதற்கு விரைந்து வந்தனர். ஆயீயின் ராஜா நகரின் கிழக்குப் பகுதிக்குச் சென்றான். அதனால் நகருக்குப் பின்னே மறைந்திருந்த வீரர்களை அவன் பார்க்கவில்லை.
15 யோசுவாவும், இஸ்ரவேலின் மனிதர்களும் ஆயீயின் படையினர் தம்மைத் துரத்திவர இடம் கொடுத்தனர். யோசுவாவும் அவனது ஆட்களும் பாலைவனத்திற்கு நேராக கிழக்கே ஓட ஆரம்பித்தனர். 16 நகரத்து ஜனங்கள் சத்தமிட்டுக் கொண்டே, யோசுவாவையும் அவனது மனிதர்களையும் துரத்த ஆரம்பித்தனர். எல்லா ஜனங்களும் நகரத்திற்கு வெளியே வந்தனர். 17 ஆயீ, பெத்தேல் ஆகியவற்றின் எல்லா ஜனங்களும் இஸ்ரவேல் படையைத் துரத்தினார்கள். நகரம் திறந்திருந்தது. யாரும் நகரத்தைப் பாதுகாப்பதற்காகப் பின் தங்கவில்லை.
18 அப்போது கர்த்தர் யோசுவாவை நோக்கி, “உன் ஈட்டியை ஆயீ நகரத்திற்கு நேராக நீட்டு, நான் உனக்கு அந்நகரத்தைக் கொடுப்பேன்” என்றார். எனவே யோசுவா ஆயீ நகரத்திற்கெதிராக அவனது ஈட்டியை நீட்டினான். 19 மறைந்திருந்த இஸ்ரவேலர் இதைக் கண்டனர். அவர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவந்து நகரத்திற்குள் நுழைந்து அதைத் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர். பிறகு வீரர்கள் நகரத்திற்கு நெருப்பூட்டினர்.
20 ஆயீ நகர ஜனங்கள் திரும்பிப் பார்த்து, தங்கள் நகரம் எரிவதையும், வானத்திற்கு நேராகப் புகை எழும்புவதையும் கண்டனர். எனவே அவர்கள் தங்கள் வலிமையையும் துணிவையும் இழந்து, இஸ்ரவேலரைத் துரத்துவதைக் கைவிட்டனர். இஸ்ரவேலர் ஓடுவதை நிறுத்திவிட்டு திரும்பி ஆயீ நகர மக்களோடு போரிட்டனர். ஆயீ நகர ஜனங்கள் ஓடி ஒளிவதற்கு எந்த இடமும் அகப்படவில்லை. 21 யோசுவாவும் அவனது ஆட்களும், நகரம் தங்கள் வசமானதையும், நகரத்திலிருந்து புகையெழுவதையும் கண்டதும் ஓடுவதை நிறுத்தி, திரும்பிவந்து, ஆயீ நகர ஜனங்ககளை எதிர்த்தனர். 22 அப்போது ஒளிந்திருந்த மனிதர்களும் நகரத்திலிருந்து வந்து போரில் உதவினார்கள். ஆயீ நகர ஜனங்களை இஸ்ரவேலர் இருபுறமும் சூழ்ந்து வளைந்துகொண்டனர். இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்தனர். ஆயீ நகர மனிதர்கள் தப்பி, உயிரோடிராதபடி இஸ்ரவேலர் அவர்களோடு போரிட்டு அழித்தனர். 23 ஆனால், ஆயீ நகர ராஜாவை உயிரோடு பிடித்து யோசுவாவிற்கு முன்னால் வீரர்கள் கொண்டு வந்தனர்.
போரைப்பற்றிய விமர்சனம்
24 போரின்போது, இஸ்ரவேலின் படை வீரர்கள் ஆயீ நகர ஜனங்களை வயல்களுக்கும், பாலைவனத்திற்கும் துரத்தினார்கள். ஆயீயின் மனிதர்களை இஸ்ரவேல் சேனையினர் வயல்களிலும், பாலைவனத்திலும் கொன்று குவித்தனர். பின் இஸ்ரவேல் வீரர்கள் ஆயிக்குச் சென்று அங்கு உயிரோடிருந்த ஜனங்களையும் கொன்றனர். 25 ஆயீயின் எல்லா ஜனங்களும் அன்று மரித்தனர். அவர்கள் ஆண்களும் பெண்களுமாக 12,000 பேர் இருந்தனர். 26 தனது ஆட்கள் நகரை அழிப்பதற்கு அடையாளமாக யோசுவா அவனது ஈட்டியை ஆயீக்கு நேராக நீட்டிக்கொண்டிருந்தான். நகரத்தின் ஜனங்கள் அனைவரும் அழியும்வரைக்கும் அவ்வாறே நின்றிருந்தான். 27 இஸ்ரவேலர் மிருகங்களையும், பிற பொருட்களையும் தங்களுக்காக நகரத்திற்கு வெளியே கொண்டு வந்தனர். அவர்கள் இவ்வாறு செய்யும்படி கர்த்தர் ஏற்கெனவே யோசுவாவிடம் கூறியிருந்தார்.
28 யோசுவா ஆயீ நகரை எரித்தான். அந்நகரம் வெறும் கற்களின் குவியலாக்கப்பட்டது. இன்று வரைக்கும் அது அப்படியே உள்ளது. 29 ஆயீயின் ராஜாவை யோசுவா ஒரு மரத்தில் தூக்கிலிட்டான். மாலையில், ராஜாவின் உடலை அப்புறப்படுத்துமாறு தனது ஆட்களுக்குக் கூறினான். அவர்கள் நகர வாசலுக்கு வெளியே அவனது உடலை வீசி, பின் அவ்வுடலைக் கற்களால் மூடினார்கள். கற்களின் குவியலும் இன்றளவும் அங்கேயே உள்ளது.
ஆசீர்வாதமும் சாபமும் பற்றி வாசித்தல்
30 அப்போது யோசுவா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை ஏபால் மலைமீது கட்டினான். 31 இஸ்ரவேலின் ஜனங்களுக்குப் பலிபீடத்தை எப்படிக் கட்டுவதென்று கர்த்தருடைய தாசனான மோசே கூறியிருந்தான். மோசேயின் சட்ட புத்தகத்தில் விளக்கப்பட்டிருந்தபடி யோசுவா பலிபீடத்தைக் கட்டினான். வெட்டப்படாத கற்களால் பலிபீடம் கட்டப்பட்டது. அக்கற்களின் மீது எந்த கருவியும் பட்டிருக்கவில்லை. கர்த்தருக்குத் தகன பலிகளை அப்பலிபீடத்தில் செலுத்தினர். சமாதான பலிகளையும் செலுத்தினர்.
32 அவ்விடத்தில் யோசுவா மோசேயின் சட்டங்களைக் கற்களில் எழுதினான். இஸ்ரவேலின் ஜனங்கள் எல்லோரும் பார்க்கும்படியாக அவன் இதைச் செய்தான். 33 பரிசுத்தப் பெட்டியைச் சூழ்ந்து தலைவர்களும், அதிகாரிகளும், நியாயாதிபதிகளும், இஸ்ரவேலரும் நின்றனர். கர்த்தருடைய உடன்படிக்கையுள்ள பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து வந்த லேவி கோத்திரத்தின் ஆசாரியர்களுக்கு முன்னே அவர்கள் நின்று கொண்டிருந்தனர். இஸ்ரவேலின் ஜனங்களும், பிறரும் அங்கே நின்றிருந்தனர். பாதி ஜனங்கள் கூட்டத்தினர் ஏபால் மலைக்கு முன்பும், மற்றொரு பாதியினர் கெரிசீம் மலைக்கு முன்னேயும் நின்றார்கள். கர்த்தருடைய தாசனாகிய மோசே ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக இப்படி செய்யும்படி ஜனங்களிடம் கூறியிருந்தான்.
34 சட்டங்களில் கூறப்பட்ட எல்லாவற்றையும் அப்போது யோசுவா வாசித்தான். ஆசீர்வாதங்களையும், சாபங்களையும் குறித்து வாசித்தான். சட்ட புத்தகத்தில் எழுதியிருந்த முறைப்படியே எல்லாவற்றையும் வாசித்தான். 35 இஸ்ரவேலரோடு வாழ்ந்த அந்நியரும், எல்லாப் பெண்களும், குழந்தைகளும் அங்கிருந்தனர். மோசே கொடுத்த ஒவ்வொரு கட்டளையையும் யோசுவா வாசித்தான்.
யோசுவாவிடம் கிபியோனியரின் தந்திரம்
9 யோர்தான் நதியின் மேற்கிலுள்ள எல்லா ராஜாக்களும் இந்த நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்டார்கள். அவர்கள் ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரின் ராஜாக்கள் ஆவார்கள். அவர்கள் மலைகளிலும், சமவெளிகளிலும் வாழ்ந்தனர். லீபனோன் வரைக்குமுள்ள மத்தியதரைக் கடலோரமாக அவர்கள் வாழ்ந்தனர். 2 இந்த ராஜாக்கள் ஒருமித்துக் கூடி, யோசுவாவோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும் போரிடுவதற்குத் திட்டமிட்டனர்.
3 எரிகோவையும் ஆயீயையும் யோசுவா தோற்கடித்த வகையை கிபியோனின் ஜனங்கள் கேள்விப்பட்டிருந்தனர். 4 அவர்கள் இஸ்ரவேலரை ஏமாற்ற முடிவெடுத்தனர். இதுவே அவர்கள் திட்டம்: அவர்கள் நைந்துபோன பழைய திராட்சைரசத் தோல் பைகளைச் சேகரித்தனர். அவர்கள் கழுதைகளின் முதுகில் அவற்றை ஏற்றினார்கள். பழைய சாக்குகளை அந்தக் கழுதைகளின் மேல் ஏற்றி, வெகுதுரத்திலிருந்து பயணம் செய்து வருவோரைப் போல் தோற்றம் அளித்தனர். 5 அவர்கள் பழைய செருப்புகளை அணிந்து, பழைய ஆடைகளை உடுத்திக்கொண்டு, உலர்ந்து, பூசணம் பூத்திருந்த பழைய அப்பங்களையும் எடுத்துக்கொண்டனர். தொலைவான இடத்திலிருந்து பயணம் செய்து வந்தவர்களைப் போன்றே அவர்கள் தோன்றினர். 6 பின்னர் அம்மனிதர்கள் கில்காலுக்கு அருகே இருந்த இஸ்ரவேலரின் முகாமிற்குச் சென்றனர்.
அம்மனிதர்கள் யோசுவா மற்றும் இஸ்ரவேலின் மூப்பர்களிடமும் சென்று, “நாங்கள் மிகவும் தூரத்திலுள்ள ஒரு தேசத்தில் இருந்து கிளம்பி வந்துள்ளோம். உங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறோம்” என்றனர்.
7 இஸ்ரவேலர் அந்த ஏவியரிடம், “நீங்கள் எங்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள், அருகே எங்கேயேனும் நீங்கள் வசித்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் வரைக்கும் உங்களோடு சமாதான ஒப்பந்தம் செய்யமாட்டோம்” என்றனர்.
8 ஏவியர்கள் யோசுவாவிடம், “நாங்கள் உமது பணியாட்கள்” என்றனர்.
ஆனால் யோசுவா, “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான்.
9 அந்த ஆட்கள் அதற்குப் பதிலாக, “நாங்கள் உங்கள் பணியாட்கள். நாங்கள் தூரத்திலுள்ள நாட்டிலிருந்து வந்துள்ளோம். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய மிகுந்த வல்லமையை அறிந்ததால் இங்கு வந்தோம். அவர் செய்த காரியங்களை அறிந்துள்ளோம். அவர் எகிப்தில் செய்தவற்றையும் அறிந்தோம். 10 யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள எமோரியரின் ராஜாக்களான அஸ்தரோத் தேசத்திலுள்ள எஸ்போனின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவர் தோற்கடித்ததைக் கேள்விப்பட்டோம். 11 எனவே எங்கள் மூப்பர்களும், ஜனங்களும் எங்களை நோக்கி, ‘உங்கள் பயணத்திற்குத் தேவையான உணவை எடுத்துச் செல்லுங்கள். இஸ்ரவேலரின் ஜனங்களைப் போய்ச் சந்தியுங்கள்.’ அவர்களிடம், ‘நாங்கள் உங்கள் பணியாட்கள். எங்களோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்கள்.
12 “எங்கள் அப்பத்தைப் பாருங்கள்! நாங்கள் எங்கள் வீடுகளைவிட்டு உங்களிடம் வரும்படி பயணம் செய்யத் துவங்கியபோது அது சூடாகவும், புதியதாகவும் இருந்தது. ஆனால் இப்போது உலர்ந்து பழையதாகப் போய்விட்டது. 13 எங்கள் திராட்சைரசப் பைகளைப் பாருங்கள்! நாங்கள் வீட்டிலிருந்து வந்தபோது அவை புதிதாகவும் திராட்சைரசம் நிரப்பப்பட்டவையாகவும் இருந்தன. இப்போது அவை கிழிந்து, பழையனவாகிவிட்டன. எங்கள் உடைகளையும், பாதரட்சைகளையும் பாருங்கள்! நாங்கள் அணிந்து கொண்டிருப்பவை பயணத்தால் கிழிந்துபோயிருப்பதைக் காண்பீர்கள்” என்றனர்.
14 அந்த ஆட்கள் உண்மை பேசுகிறார்களா என்பதை அறிய இஸ்ரவேலர் விரும்பினர். எனவே அவர்கள் அப்பத்தை ருசி பார்த்தனர். ஆனால் அவர்கள் செய்யவேண்டியது என்னவென்று கர்த்தரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. 15 யோசுவா அவர்களோடு சமாதானம் செய்துகொள்ள உடன்பட்டான். அவர்களை வாழவிடுவதாக ஒப்பந்தம் செய்தான். யோசுவாவின் இந்த வாக்குறுதிக்கு இஸ்ரவேலின் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
16 மூன்று நாட்களுக்குப் பிறகு, இஸ்ரவேல் ஜனங்கள் அந்த ஆட்கள் தங்கள் முகாமிற்கு வெகு அருகாமையில் வாழ்பவர்கள் என்பதை அறிந்துகொண்டனர். 17 எனவே இஸ்ரவேலர் அம்மனிதர்கள் வாழ்ந்த இடத்திற்குச் சென்றனர். அவர்கள் மூன்றாம் நாள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத் யெயாரீம் என்ற நகரங்களை வந்தடைந்தனர். 18 ஆனால் இஸ்ரவேல் படையினர் அந்நகரங்களை எதிர்த்துப் போர் செய்யவில்லை. அந்த ஜனங்களோடு அவர்கள் ஒரு சமாதான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டனர். ஏனெனில் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு, முன்பு அவர்கள் ஒரு வாக்குறுதியைச் செய்திருந்தனர்.
ஒப்பந்தம் செய்த தலைவர்களை எதிர்த்து ஜனங்கள் குற்றம் சாட்டினார்கள். 19 ஆனால் தலைவர்கள், “நாங்கள் வாக்களித்துவிட்டோம். இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு முன்னால் வாக்களித்தோம், அவர்களை எதிர்த்து இப்போது போரிட முடியாது. 20 இப்படித்தான் நாம் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை உயிரோடு விடவேண்டும். அவர்களைக் காயப்படுத்தினால் நாம் அவர்களோடு செய்த வாக்குறுதியை மீறியதற்காக தேவன் நம்மிடம் கோபமடைவார். 21 எனவே அவர்கள் வாழட்டும். ஆனால் அவர்கள் நமது பணியாட்களாக இருப்பார்கள். அவர்கள் நமக்காக விறகு வெட்டுவார்கள். நம் ஜனங்களுக்காக தண்ணீர் மொண்டு வருவார்கள்” என்று பதிலளித்தார்கள். இவ்வாறு அந்த ஜனங்களுக்கு அளித்த சமாதானத்திற்கான வாக்குறுதியை தலைவர்கள் மீறவில்லை.
22 யோசுவா கிபியோனிய ஜனங்களை அழைத்து, “ஏன் எங்களிடம் பொய் சொன்னீர்கள்? உங்கள் தேசம் எங்கள் முகாமிற்கு அருகில் இருந்தது. ஆனால் நீங்களோ தூர தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றீர்கள். 23 இப்போது, நீங்கள் ஒரு சாபத்தினால் பிடிக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் ஜனங்கள் அனைவரும் அடிமைகள் ஆவர். அவர்கள் தேவனின் ஆலயத்திற்கு விறகு வெட்டவும், தண்ணீர் மொண்டு வரவும் வேண்டும்” என்றான்.
24 கிபியோனிய ஜனங்கள், “நீங்கள் எங்களைக் கொன்றுவிடுவீர்கள் என்ற பயத்தால் நாங்கள் பொய் சொன்னோம். தேவன் தம் ஊழியராகிய மோசேக்கு இந்த தேசத்தையெல்லாம் கொடுப்பதாக வாக்களித்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம். இத்தேசத்தில் வசிப்போரைக் கொல்லும்படியாக தேவன் உங்களுக்குக் கூறினார். எனவே நாங்கள் உங்களிடம் பொய் கூறினோம். 25 இப்போதும் நாங்கள் உங்கள் பணியாட்கள். நீங்கள் சரியென நினைப்பதை எங்களுக்குச் செய்யலாம்” என்றனர்.
26 எனவே கிபியோனிய ஜனங்கள் அடிமைகளாயினர். ஆனால் யோசுவா அவர்களை உயிரோடுவிட்டான். இஸ்ரவேலர் அவர்களைக் கொல்வதற்கு அனுமதிக்கவில்லை. 27 கிபியோனிய ஜனங்களை இஸ்ரவேல் ஜனங்களுக்கு அடிமைகளாக யோசுவா ஆக்கினான். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் கர்த்தருடைய பலிபீடத்திற்கும் தேவையான விறகு வெட்டி, தண்ணீர் மொண்டு வந்தனர். தேவன் தெரிந்தெடுத்த இடத்தில் எல்லாம் அவர்கள் அவ்வேலைகளைச் செய்தனர். அந்த ஜனங்கள் இன்றைக்கும் அடிமைகளாக உள்ளனர்.
21 வெளியே சகரியாவுக்காக மக்கள் காத்திருந்தனர். அவன் ஆலயத்தின் உள்ளே வெகு நேரம் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். 22 அப்போது சகரியா வெளியே வந்தான். ஆனால் அவர்களோடு பேச முடியவில்லை. அவன் ஆலயத்திற்குள் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். சகரியாவால் பேச முடியவில்லை. மக்களுக்குச் சைகைகளையே காட்ட முடிந்தது. 23 சகரியா, ஆலயப் பணி முடிந்ததும் தன் வீட்டுக்குச் சென்றான்.
24 பின்னர் சகரியாவின் மனைவி எலிசபெத் கருவுற்றாள். ஆகவே, அவள் ஐந்து மாதங்கள் வீட்டை விட்டு வெளியே போகவில்லை. பின் எலிசபெத், 25 “தேவன் எனக்குச் செய்திருப்பதைப் பாருங்கள். எனது மக்கள் என் நிலையை எண்ணி வெட்கி இருந்தனர். ஆனால் கர்த்தர் அந்த அவமானத்தைப் போக்கி விட்டார்” என்று கூறினாள்.
கன்னி மரியாள்
26-27 எலிசபெத் கருவுற்ற ஆறாம் மாதத்தில் தேவன் காபிரியேல் என்னும் தூதனை கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் பட்டணத்தில் வாழ்ந்த ஒரு கன்னிப் பெண்ணிடம் அனுப்பினார். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு என்ற மனிதனை மணம் புரிவதற்கு அவள் நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவள் பெயர் மரியாள். 28 தூதன் அவளிடம் வந்து, “கர்த்தர் உன்னோடிருக்கிறார். அவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறார்” என்றான்.
29 தூதன் கூறியவற்றைக் கேட்டு மரியாள் மிகவும் குழப்பம் அடைந்தாள். “இதன் பொருள் என்ன?” என்று மரியாள் அதிசயித்தாள்.
30 தூதன் அவளிடம், “பயப்படாதே மரியாளே. தேவன், உன்னிடம் பிரியமாயிருக்கிறார். 31 கவனி! நீ கருவுறுவாய். ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாய். அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. 32 அவர் பெரியவராக இருப்பார். மகா உன்னதமான தேவனுடைய குமாரன் என்று மக்கள் அவரை அழைப்பர். அவரது முன்னோராகிய தாவீதின் அதிகாரத்தை கர்த்தராகிய தேவன் அவருக்குக் கொடுப்பார். 33 சதாகாலமும் யாக்கோபின் மக்கள்மீது இயேசு அரசாளுவார். இயேசுவின் ஆட்சி ஒருபோதும் முடிவுறுவதில்லை” என்றான்.
34 மரியாள் தூதனை நோக்கி, “இது எப்படி நடக்கும்? எனக்குத் திருமணம் ஆகவில்லையே!” என்றாள்.
35 தூதன் மரியாளிடம், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார். உன்னதமான தேவனின் ஆற்றல் உன்னை மூடிக்கொள்ளும். குழந்தை பரிசுத்தமுள்ளதாக இருக்கும். அவர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுவார். 36 உனது உறவினளாகிய எலிசபெத்தும் கருவுற்றிருக்கிறாள். அவள் மிகவும் வயதானவள். குழந்தை பெற முடியாதவள் என அவள் நினைக்கப்பட்டாள். ஆனால் ஒரு குமாரனைப் பெறப்போகிறாள். இது அவளுக்கு ஆறாவது மாதம். 37 தேவனால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியும்” என்றான்.
38 மரியாள், “நான் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும் பெண். நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். பின் தூதன் சென்றுவிட்டான்.
2008 by World Bible Translation Center