Print Page Options
Previous Prev Day Next DayNext

Read the New Testament in 24 Weeks

A reading plan that walks through the entire New Testament in 24 weeks of daily readings.
Duration: 168 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எபிரேயர் 6-7

ஆகையால் நாம் கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படைப் போதனைகளிலிருந்து முன்னேறிச்சென்று பூரணமடைய வேண்டும். செத்த செயல்களிலிருந்து விலகுதல் பற்றியும், தேவனில் விசுவாசம் வைப்பது பற்றியும் உள்ள அடிப்படை போதனைகளையே மீண்டும் மீண்டும் நாம் போதிக்க வேண்டாம். ஞானஸ்நானம் பற்றியும், கைகளைத் தலை மேல் வைப்பதுபற்றியும், மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் பற்றியும், என்றென்றைக்குமான நியாயத்தீர்ப்பு பற்றியும் ஏற்கெனவே நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. இப்போது, இதற்கு மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வம்கொண்டவர்களாக நாம் முன்னேற வேண்டும். தேவன் விரும்பினால் நாம் இதைச் செய்வோம்.

4-6 கிறிஸ்துவின் வழியிலிருந்து விலகிய மக்களை மீண்டும் அவ்வாழ்க்கைக்குக் கொண்டுவர முடியுமா? உண்மையைக் கற்றுக்கொண்டவர்களைப் பற்றி நான் பேசுகிறேன். அவர்கள் தேவனுடைய நன்மைகளைப் பெற்றுக்கொண்டனர். பரிசுத்த ஆவியானவரில் பங்குபெற்று தேவனுடைய செய்தியையும் வர இருக்கிற காலத்தின் வல்லமையையும் அவர்கள் ருசித்திருக்கிறார்கள். மேலும் அவை மிக நல்லவை என அவர்கள் தமக்குத்தாமே கண்டுகொண்டனர். ஆனால் பிறகு அவர்கள் கிறிஸ்துவின் வழியை விட்டு விலகினார்கள். மீண்டும் அவர்கள் கிறிஸ்துவுக்குள் வருவது கடினம். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவை மீண்டும் ஒருமுறை சிலுவையில் அறைந்து விட்டனர். அவர்கள் கிறிஸ்துவுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டனர்.

அவர்கள் ஒரு வயலைப் போன்றவர்கள். அந்நிலம் மழை நீரை உறிஞ்சி தன்னை உழுகிறவர்களுக்கு நல்விளைச்சலைக் கொடுத்தால், பிறகு அதைப் பற்றி மக்கள் நல்ல வார்த்தைகளைச் சொல்கிறார்கள். ஆனால் முள்செடிகளையும் களைகளையும் தவிர வேறு எதையும் கொடுக்காத நிலத்தை மக்கள் சபிப்பார்கள். மேலும், பிறகு அது எரியூட்டப்படும். ஆனால் அந்த நிலம் முட்களையும் பூண்டுகளையும் வளர்த்தால் அது பயனற்றதாகும். அந்நிலம் அபாயகரமானது. தேவன் அதனை சபிப்பார். அது நெருப்பால் அழிக்கப்படும்.

அன்பான நண்பர்களே, நாங்கள் இவற்றையெல்லாம் உங்களுக்குக் கூறுகிறோம். ஆனால் உண்மையில் உங்களிடமிருந்து சிறப்பானவற்றை எதிர்பார்க்கிறோம். இரட்சிப்பிற்குரியதை நீங்கள் செய்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். 10 தேவன் நீதியுள்ளவர். தேவன் நீங்கள் செய்த காரியங்களையும் நீங்கள் அவருடைய மக்களுக்கு உதவி செய்தபோதும், தொடர்ந்து உதவி செய்கிறபோதும் உங்கள் அன்பையும் உங்கள் செயல்களையும் அவர் மறக்கமாட்டார். 11 நீங்கள் நம்பிக்கொண்டிருக்கிற இரட்சிப்பை அடையும் பொருட்டு உங்கள் வாழ்க்கை முழுதும் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் ஆகும். 12 நீங்கள் சோம்பேறியாவதை நாங்கள் விரும்பவில்லை. தேவனால் வாக்குறுதி அளிக்கப்பட்டதைப் பெறப்போகிற மக்களைப் போன்று நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்களிடம் பொறுமையும் விடாமுயற்சியும் இருப்பதால் அவர்கள் தேவனுடைய வாக்குறுதியைப் பெறுவார்கள்.

13 தேவன் ஆபிரகாமிடம் ஒரு ஆணையிட்டார். மேலும் ஆணையிட்டுச் சொல்ல தேவனைவிட மிகப் பெரியவர் யாரும் இல்லாததால், 14 “நான் உன்மையாகவே உன்னை ஆசீர்வதிக்கிறேன். நான் உனக்கு ஏராளமான சந்ததிகளைக் கொடுப்பேன்” [a]என்று தன் பெயரிலேயே ஆணையிட்டுச் சொன்னார். 15 இது நிகழும் வரை ஆபிரகாம் பொறுமையாகக் காத்திருந்தான். இறுதியில் அவன் தேவனுடைய வாக்குறுதியின்படியே பெற்றுக்கொண்டான்.

16 மக்கள் தங்களைவிடப் பெரியவர்கள் பேரில் ஆணையிடுவார்கள். அவர்கள் சொல்வது உண்மை என்பதை இந்த ஆணை நிரூபித்து, மேலும் விவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது. 17 தேவன் தன் வாக்குறுதியை உண்மையென்று நிரூபிக்க விரும்பினார். தன் ஆணையால் அதனை உறுதிப்படுத்தினார். தனது நோக்கம் மாறாதது என்று காண்பிக்க தேவன் விரும்பினார். அதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார். 18 அந்த இரண்டும் எப்பொழுதும் மாறாதவை. தேவன் பொய் சொல்லமாட்டார்.

ஆணையிட்ட பிறகு அது பொய்க்காது. அது நமக்கு ஆறுதலாய் இருக்கும். நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும். 19 நமக்கு இந்த நம்பிக்கை இருக்கிறது. இது நங்கூரம் போன்றது. அது உறுதியும் வலிமையும் உடையது. அது நமது ஆன்மாவைக் காப்பாற்றும். மிகவும் பரிசுத்தமான இடங்களுக்கு அது போகிறது. பரலோகத்து ஆலயத்தின் திரைக்குப் பின்னாலும் போகிறது. 20 இயேசு ஏற்கெனவே அங்கே நுழைந்திருக்கிறார். நமக்காக அங்கே வழியைத் திறந்திருக்கிறார். இயேசு பிரதான ஆசாரியராகி மெல்கிசேதேக்கைப்போல் நிலைத்திருக்கிறார்.

ஆசாரியன் மெல்கிசேதேக்

மெல்கிசேதேக் சாலேமின் அரசன். அவன் மிக உயர்ந்த தேவனுடைய ஆசாரியனுமாகவும் இருந்தான். அரசர்களை வென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்த ஆபிரகாமை மெல்கிசேதேக் சந்தித்து ஆசிவழங்கினான். அதன் பிறகு, பத்தில் ஒரு பங்கை ஆபிரகாம் அவனுக்குக் கொடுத்தான்.

(சாலேமின் அரசனான மெல்கிசேதேக் என்ற பெயருக்கு இரு பொருள் உண்டு. மெல்கிசேதேக் என்பதற்கு “நன்மையின் அரசன்” என்ற பொருளும் “சலேமின் அரசன்” என்பதற்கு “சமாதானத்தின் அரசன்” என்ற பொருளும் உண்டு.) இவனது தாய் தந்தையரைப் பற்றி எவருக்கும் தெரியாது. எங்கிருந்து வந்தான் என்றும் தெரியாது. எங்கே பிறந்தான், எப்போது இறந்தான் என்றும் ஒருவருக்கும் தெரியாது. இவன் தேவனுடைய குமாரனைப் போன்றவன். அவன் என்றென்றைக்கும் ஆசாரியனாகவே இருக்கிறான்.

போரில் கைப்பற்றிய பொருள்களில் பத்தில் ஒரு பங்கை ஆபிரகாம் இவனுக்குக் கொடுத்ததின் மூலம் இவன் எவ்வளவு முக்கியமானவன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். இப்போது லேவியின் வாரிசுதாரர்களாக உள்ள ஆசாரியர்கள் இஸ்ரவேலைச் சேர்ந்த மக்களிடமிருந்து பத்தில் ஒருபாகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென சட்டம் கூறுகிறது. அதாவது ஆபிரகாமின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் கூட மக்களிடமிருந்து இந்த பத்தில் ஒரு பங்கை அவர்கள் வசூலிக்கிறார்கள். இப்பொழுது மெல்கிசேதேக் ஆபிரகாமிடமிருந்து பத்தில் ஒன்றைப் பெற்றுக்கொண்டு தேவனுடைய விசேஷ வாக்குறுதிகளை பெற்ற ஆபிரகாமை ஆசீர்வதித்தான். மிகப் பெரிய மனிதர்களே சிறியவர்களை ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஒரு புறத்தில் வாழ்ந்து மடிகிற ஆசாரியர்களால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது. இன்னொரு புறத்தில் இன்னும் உயிருடன் இருப்பதாகச் சொல்லப்படுகிற மெல்கிசேதேக்கால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது. உண்மையில், ஆபிரகாமின் மூலமாக லேவியே பத்தில் ஒரு பாகத்தை மெல்கிசேதேக்குக்கு கொடுத்தான் என்று கூட நீங்கள் சொல்லக் கூடும். 10 ஏன்? ஏனெனில் மெல்கிசேதேக் ஆபிரகாமைச் சந்தித்தபோது லேவி இன்னும் பிறந்திருக்கவில்லை. தன் முன்னோரான ஆபிரகாமின் சரீரத்திலேயே இன்னும் அவன் இருந்தான்.

11 லேவி பரம்பரை ஆசாரிய முறைமைகளை அடிப்படையாய்க் கொண்ட சட்டத்தை [b] இஸ்ரவேல் மக்கள் பெற்றார்கள். ஆனால் இம்முறைமையினால் மக்கள் ஆன்மீக முதிர்ச்சியை அடைய முடியவில்லை, ஆரோனைப் போல அல்லாமல் மெல்கிசேதேக் போன்ற வேறொரு ஆசாரியன் அவசியமானார். 12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டால் நியாயப்பிரமாணமும் மாற்றப்பட்டிருக்க வேண்டும். 13 எப்போதும் ஒரு ஆசாரியனாக சேவை செய்திராத ஒரு குடும்பக் குழுவினைச் சேர்ந்த ஒரு மனிதரைப் பற்றி இப்பகுதிகள் பேசுகின்றன. 14 நமது கர்த்தர் யூதாவின் குடும்பக் குழுவிலிருந்து வந்தவர் என்பது தெளிவு. மோசேயும் இந்தக் குடும்பக் குழுவிலிருந்து வரும் ஆசாரியர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை.

மெல்கிசேதேக்கைப் போன்று இயேசுவும் ஒரு ஆசாரியர்

15 மெல்கிசேதேக் போன்ற ஒரு வித்தியாசமான ஆசாரியர் வருவார் என்பதால் இது மேலும் தெளிவாகிறது. 16 மாம்சீகமான பரம்பரை பற்றிய சில சட்டங்களினால் ஆசாரியனாகாமல் அழிக்க முடியாத ஜீவனுக்குரிய வல்லமையால் அவர் ஆசாரியனாகிறார். 17 “நீர் மெல்கிசேதேக்கைப் போன்று என்றென்றைக்கும் உரிய ஆசாரியராக இருக்கிறீர்” [c]என்று வேதவாக்கியங்களில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது.

18 ஆகவே அந்தப் பழைய சட்டம் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. ஏனெனில் பழைய சட்டம் பலவீனமானதும், பயனற்றதுமாய் இருந்தது. 19 மோசேயின் நியாயப்பிரமாணமானது எதையும் முழுமை ஆக்கவில்லை. எனவே சிறிதளவேனும் நல்ல நம்பிக்கை நமக்கு கொடுக்கப்பட்டது. மேலும் அதன் மூலமாகத்தான் தேவனுக்கு அருகில் வருகிறோம்.

20 இது மிக முக்கியமானது. மற்றவர்களை ஆசாரியர்களாக்கியபோது ஆணை எதுவும் கொடுக்கப்படவில்லை. 21 ஆனால் இயேசுவைப் பிரதான ஆசாரியனாக்கியபோது தேவன் பிரமாணம் கொடுத்தார்.

“‘நீரே என்றென்றைக்கும் ஆசாரியனாக இருக்கிறீர்’
    என்று கர்த்தர் ஆணையிட்டுரைத்தார்.
மேலும் அவர் தன் மனதை மாற்றிக்கொள்ளமாட்டார்” (A)

என்றும் அவர் சொன்னார்.

22 மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு [d] இயேசுவே ஒரு நிரூபணமாக இருக்கிறார் என்பதே இதன் பொருள் ஆகும்.

23 ஏனைய ஆசாரியர்கள் இறந்தார்கள். எனவே நிறைய ஆசாரியர்கள் இருக்க வேண்டும். 24 இயேசுவே என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடியவர். எனவே மாறா ஆசாரியத்துவம் கொண்டுள்ளார். 25 எனவே தன் மூலமாக தேவனிடம் வருகிறவர்களை இயேசுவால் முழுமையாக இரட்சிக்க முடியும். ஏனெனில் நமக்காகப் பரிந்து பேச இயேசு எப்பொழுதும் வாழ்கிறார்.

26 ஆகவே, இயேசுவே நமக்குத் தேவையான சிறந்த பிரதான ஆசாரியர். அவர் பரிசுத்தமானவர். அவரிடம் எவ்விதப் பாவங்களும் இல்லை. அவர் குற்றமில்லாதவர். பாவிகளால் பாதிக்கப்படாதவர். இவர் பரலோகத்தில் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டார். 27 இவர் மற்ற ஆசாரியர்களைப் போன்றவரல்லர். அவர்கள் ஒவ்வொரு நாளும் பலிசெலுத்த வேண்டியிருந்தது. அவர்கள் முதலாவது தங்கள் பாவங்களுக்காகவும், பின்பு மக்களின் பாவங்களுக்காகவும் பலி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இவரோ அவ்வாறில்லை. அத்தகைய தேவையும் இவருக்கில்லை. இவர் தன்னையே பலிகொடுத்திருக்கிறார். அதுவே என்றென்றைக்கும் போதுமானது. 28 மோசேயின் சட்டம் மனிதர்களை ஆசாரியர்களாக நியமிக்கிறது. அம்மனிதர்களுக்கு பலவீனமிருந்தது. ஆனால் ஆணை அடங்கிய அந்தப் பகுதி சட்டத்திற்குப் பிறகு வருகிறது. மேலும் அது என்றென்றைக்குமாக பரிசுத்தமாக்கப்பட்ட தேவனுடைய குமாரனான இயேசுவைப் பிரதான ஆசாரியராக நியமித்தது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center