Print Page Options
Previous Prev Day Next DayNext

Read the New Testament in 24 Weeks

A reading plan that walks through the entire New Testament in 24 weeks of daily readings.
Duration: 168 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 தீமோத்தேயு 3-4

இறுதி நாட்கள்

இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள், இறுதி நாட்களில் ஏராளமான தொந்தரவுகள் நேரும். அந்தக் காலங்களில் மக்கள் தம்மையும் செல்வத்தையும் மட்டுமே விரும்புவர். அவர்கள் பெருமிதத்தோடும், செருக்கோடும் இருப்பார்கள். அவர்கள் மக்களைப்பற்றி தீயவற்றையே கூறுவர். பிள்ளைகள் பெற்றோருக்கு அடிபணியமாட்டார்கள். அவர்கள் நன்றியில்லாதவர்களாவர். இரக்கமற்றவர்களாயிருப்பர். அடுத்தவர்களிடம் அன்பற்றவர்களாய் மாறிவிடுவார்கள். அவர்கள் மற்றவர்களை மன்னிக்க மறுப்பார்கள். அவர்கள் தீயவற்றையே பேசுவார்கள். அவர்கள் சுயக் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பர். கொடிய வன்முறையாளர்களாய் மாறி நல்லவற்றை வெறுக்கத் தொடங்குவர். இறுதி நாட்களில் மக்கள் தம் நண்பர்களுக்கே எதிராகிப்போவர். அவர்கள் சிந்தனையின்றி முட்டாள்தனமாகச் செயல்படுவர். அவர்கள் வீண்பெருமை கொண்டவர்களாகவும் துரோகிகளாகவும் இருப்பர். அவர்கள் இன்பத்தை விரும்பி, தேவனை நேசிக்காதவர்களாக இருப்பர். அவர்கள் தேவனுக்கு சேவை செய்வதுபோலத் தொடர்ந்து நடிப்பார்கள். ஆனால் அவர்கள் வாழும் வழியோ, தேவனுக்கு அவர்கள் உண்மையிலேயே சேவை செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். தீமோத்தேயுவே இவர்களிடமிருந்து விலகி இரு.

சிலர் சில வீடுகளுக்குப் போய் அங்குள்ள பலவீனமும் பாவமும் உள்ள பெண்களை அடைவர். அப்பெண்கள் பாவம் நிறைந்தவர்கள். அவர்கள் செய்ய விரும்பிய பலதீய காரியங்களே அப்பெண்களைப் பாவத்தில் ஈடுபடத் தூண்டும். அப்பெண்கள் எப்போதும் புதிய போதனைகளை விரும்புவர். ஆனால் உண்மை பற்றிய அறிவைப் பெற முடியாதவர்களாக இருப்பர். யந்நேயையும், யம்பிரேயையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் மோசேக்கு எதிரானவர்கள். இவர்களும் அவர்களைப் போன்றே உண்மைக்கு எதிரானவர்கள். அவர்கள் குழம்பிய எண்ணமுடையவர்கள். அவர்கள் உண்மையைப் பற்றிய அறிவை அடைய தவறிவிட்டார்கள். ஆனால் அவர்கள் தம் செயலில் மேற்கொண்டு எந்த வளர்ச்சியையும் அடையமாட்டார்கள். அவர்களின் முட்டாள்தனத்தை அனைவரும் பார்ப்பர். இதுவே யந்நேயுக்கும், யம்பிரேயுக்கும் ஏற்பட்டது.

இறுதி அறிவுரைகள்

10 ஆனால் உனக்கு என்னைப்பற்றி எல்லாம் தெரியும். நான் போதனை செய்வது பற்றியும் என் வாழ்க்கைமுறை பற்றியும் நீ அறிவாய். என் வாழ்வின் குறிக்கோள்பற்றியும் நீ அறிவாய். எனது விசுவாசம், பொறுமை, அன்பு ஆகியவற்றையும் நீ அறிவாய். நான் முயற்சியைக் கைவிடமாட்டேன் என்பதையும் அறிவாய். 11 எனது உபத்திரவங்களையும் நான் பட்ட துன்பங்களையும் பற்றி நீ அறிந்திருக்கிறாய். அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா ஆகிய நகரங்களில் எனக்கு ஏற்பட்டவற்றைப் பற்றியும் நீ அறிவாய். ஆனால் நான் அனுபவித்த எல்லா உபத்திரவங்களிலிருந்தும் கர்த்தர் என்னைக் காப்பாற்றி விட்டார். 12 தேவன் விரும்புகிறபடி இயேசு கிறிஸ்துவின் வழியில் செல்கிற எவருமே இத்தகைய துன்பங்களைக் கண்டிப்பாக அனுபவிக்கவேண்டி இருக்கும். 13 தீயவர்களும், பிறரை ஏமாற்றுகிறவர்களும் மேலும், மேலும் கெட்டுப்போவார்கள். அவர்கள் மற்றவர்களை முட்டாளாக்குவார்கள். ஆனால் அதே சமயத்தில் தம்மைத் தாமே முட்டாளாக்கிக்கொள்வார்கள்.

14 நீ அறிந்த போதனைகளின்படி தொடர்ந்து செல். அவை உண்மையான போதனைகள் என்பதை அறிந்திருக்கிறாய். ஏனெனில் அவ்விஷயங்களை உனக்குப் போதித்தவர்கள் மீது நம்பிக்கை வைக்கமுடியும் என்பதை நீ அறிவாய். 15 நீ குழந்தைப் பருவம் முதலாகப் பரிசுத்த வேதவாக்கியங்களை அறிந்திருக்கிறாய். அவை உன்னை ஞானவானாக மாற்றும் வல்லமைகொண்டது. அந்த ஞானம் உனக்கு இயேசு கிறிஸ்துவில் கொண்ட விசுவாசம் மூலம் இரட்சிப்பைப்பெற வழிகாட்டும். 16 அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. இவை போதிக்கப் பயன்படும், வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும். இது தவறுகளைத் திருத்தி நல் வழியில் வாழத் துணை செய்யும். 17 வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி, தேவனுக்கு சேவை செய்கிறவன், ஆயத்தமுள்ளவனாகவும், ஒவ்வொரு நல்ல வேலைக்கும் தேவையான அனைத்தையும் உடையவனாகவும் இருப்பான்.

தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் முன்னால் உனக்கு ஒரு கட்டளையை இடுகிறேன். வாழ்கிறவர்கள் மத்தியிலும், இறந்தவர்கள் மத்தியிலும் நியாயம் தீர்ப்பவர் இயேசு ஒருவரே. இயேசுவுக்கென்று ஒரு இராஜ்யம் உண்டு. அவர் மீண்டும் வருவார். எனவே நான் இந்தக் கட்டளையை வழங்குகிறேன். மக்களிடம் நற்செய்தியைக் கூற எப்பொழுதும் தயாராக இரு. மக்களிடம் அவர்கள் செய்யவேண்டியவற்றைச் சொல். அவர்கள் தவறானவற்றைச் செய்யும்போது எடுத்துச் சொல்லி தடுத்து நிறுத்து. நல்லதைச் செய்யும்போது உற்சாகப்படுத்து. இவற்றைப் பொறுமையுடனும் கவனத்துடனும் போதி.

மக்கள் உண்மையான போதனைகளைக் கவனிக்காத காலம் வரும். தம் ஒவ்வொரு விசித்திர விருப்பத்தையும் சந்தோஷப்படுத்தும் ஏராளமான போதகர்களை சேர்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு இது விருப்பமாக இருக்கும். மக்கள் கேட்க விரும்புவதையே அவர்கள் கூறுவர். மக்கள் உண்மையைக் கேட்பதை நிறுத்திவிடுவர். அவர்கள் பொய்க்கதைகளைப் போதிப்பவர்களைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவர். ஆனால் நீ எப்பொழுதும் உன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். துன்பம் வந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்க. நற்செய்தியைச் சொல்லும் வேலையைச் செய்க. தேவனின் ஊழியனாக அனைத்து கடமைகளையும் செய்க.

என் வாழ்க்கையை தேவனுக்கே காணிக்கையாகத் தந்துவிட்டேன். இங்கே என் வாழ்வு முடியும் காலம் நெருங்கி விட்டது. நான் போரிலே நன்றாகப் போராடியிருக்கிறேன். நான் பந்தயத்தை முடித்துவிட்டேன். நான் விசுவாசத்தைப் பாதுகாத்திருக்கிறேன். இப்பொழுது எனக்காக ஒரு கிரீடம் காத்திருக்கிறது. அந்த நாளில் தேவன் என்னிடம் இதைக் கொடுப்பார். கர்த்தரே நியாயம் தீர்க்கிறவர். அவர் சரியாகச் செய்வார். அந்த நாளில் அவர் எனக்குக் கிரீடத்தைத் தருவார். அவரது வருகையை விரும்பி, அவருக்காகவே காத்திருக்கிற அனைவருக்கும் அவர் கிரீடத்தைத் தருவார்.

தனிப்பட்ட வார்த்தைகள்

உன்னால் எவ்வளவு விரைவில் என்னிடம் வர இயலுமோ அவ்வளவு விரைவில் வர முயற்சி செய். 10 தேமா இந்த உலகை மிகுதியாக நேசித்தான். அதனாலேயே அவன் என்னை விட்டுப் போனான். அவன் தெசலோனிக்கே நகரத்துக்குப் போனான். கிரெஸ்கெ கலாத்தியாவுக்குப் போனான். தீத்து தல்மாத்தியாவுக்குப் போனான். 11 லூக்கா மட்டுமே என்னோடு இருக்கிறான். நீ வரும்போது உன்னோடு மாற்குவையும் அழைத்து வா. இங்கே அவன் எனது பணிக்கு உதவியாக இருப்பான். 12 நான் தீகிக்குவை எபேசுவுக்கு அனுப்பினேன்.

13 நான் துரோவாவில் இருந்தபோது எனது மேலங்கியை கார்ப்புவிடம் விட்டு, விட்டு வந்தேன். நீ வரும்போது அதை எடுத்து வா. எனது புத்தகங்களையும் எடுத்து வா. குறிப்பாக தோலால் ஆன என் புத்தகச்சுருளை எடுத்து வா. அவையே எனக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாகும்.

14 கொல்லனாகிய அலெக்சாண்டர் எனக்கு எதிராகப் பல தீய செயல்களைச் செய்தான். அவன் செய்த செயல்களுக்கு கர்த்தர் அவனைத் தண்டிப்பார். 15 அவன் உன்னையும் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொள். அவன் நம் போதனைகளை மோசமாக எதிர்த்தான்.

16 முதல் முறையாக நானே என்னைத் தற்காத்துக்கொண்டேன். எவரும் எனக்கு உதவவில்லை. எல்லோரும் விலகிவிட்டனர். அவர்களை மன்னிக்குமாறு தேவனிடம் வேண்டுகிறேன். 17 ஆனால் கர்த்தர் என்னோடு இருந்தார். அவர் எனக்கு பலம் தந்தார். இவ்வகையில் நற்செய்தியைப் போதிக்கும் என் வேலை முழுமையாக நடைபெறும். யூதர் அல்லாதவர்கள் அனைவரும் நற்செய்தியைக் கேட்கவேண்டும் என்று கர்த்தரும் விரும்பினார். நான் சிங்கத்தின் வாயில் விழாமல் காப்பாற்றப்பட்டேன். 18 எவராவது என்னை அழிக்க முயன்றால் கர்த்தர் என்னைக் காப்பாற்றுவார். அவர் பரலோகஇராஜ்யத்திற்கு பாதுகாப்பாகக் கொண்டுபோய் சேர்ப்பார். கர்த்தருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக.

இறுதி வாழ்த்துக்கள்

19 பிரிஸ்கில்லாளுக்கும், ஆக்கில்லாவுக்கும், ஓநேசிப்போரின் வீட்டாருக்கும் என் வாழ்த்துக்களைக் கூறு. 20 கொரிந்து நகரில் எரஸ்து இருந்துவிட்டான். மிலேத்துவில் தூரோப்பீமுவை நோயாளியாக விட்டு, விட்டு வந்தேன். 21 குளிர் காலத்துக்கு முன்னால் நீ வந்து சேருமாறு கடும் முயற்சி எடுத்துக்கொள். ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும் கிறிஸ்துவில் உள்ள எல்லா சகோதரர்களும் உன்னை வாழ்த்துகின்றனர்.

22 உன் ஆவியோடுகூட கர்த்தர் இருப்பாராக. அவரது கிருபை உங்களோடு இருப்பதாக.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center