New Testament in a Year
31 அந்தப் பெண் நகரத்திற்குள் இருந்தபோது இயேசுவின் சீஷர்கள், அவரை உண்ணும்படி வேண்டிக்கொண்டனர்.
32 ஆனால் இயேசுவோ, “என்னிடம் உண்பதற்கு உணவுண்டு. அதனைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்றார்.
33 “ஏற்கெனவே வேறு யாராவது அவருக்கு உணவு கொண்டுவந்திருப்பார்கள்” என்று சீஷர் கள் தமக்குள் பேசிக்கொண்டனர்.
34 “எனது உணவு என்னை அனுப்பிய தேவன் செய்யச் சொன்னதைச் செய்வதுதான்; எனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடிப்பதுதான் எனது உணவாக இருக்கிறது. 35 நீங்கள் பயிரை நடும்போது ‘அறுவடைக்காக இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும்’ என்று சொல்வீர்களல்லாவா? ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கண்களைத் திறவுங்கள், மக்களைப் பாருங்கள். அவர்கள் அறுவடைக்காகத் தயாராக இருக்கிற வயலைப்போன்று இருக்கிறார்கள். 36 இப்பொழுதுகூட அறுவடை செய்கிறவன் சம்பளம் பெறுகிறான். அவன் தனது நித்திய வாழ்வுக்கு அனுகூலமாக அறுவடை செய்துகொள்கிறவன். ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனோடு அறுவடை செய்கிறவனும் மகிழ்ச்சியடைய இயலும். 37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் இன்னொருவன் என்கிற பழமொழி இதனால் உண்மையாகிறது. 38 நீங்கள் பாடுபட்டு விதைக்காத நிலத்தை அறுவடை செய்யுமாறு உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் பாடுபட்டார்கள். நீங்கள் அவர்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கிறீர்கள்” என்று இயேசு கூறினார்.
39 அந்நகரத்தில் உள்ள ஏராளமான மக்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். அந்தப் பெண் இயேசுவைப்பற்றிக் கூறியவற்றால்தான் அவர்கள் அவரை நம்பினர். அவள், “நான் செய்த எல்லாவற்றையும் அவர் எனக்குச் சொல்லி விட்டார்” என்று கூறி இருந்தாள். 40 சமாரியர்கள் இயேசுவிடம் சென்றார்கள். இயேசுவை அவர்களோடு தங்கும்படி வேண்டினார்கள். ஆகையால் இயேசு அவர்களோடு இரண்டு நாட்கள் தங்கினார். 41 மேலும் மிகுதியான மக்கள், இயேசு சொன்னவற்றின் மூலம் அவரை நம்பினர்.
42 அவர்கள், “முதலில் நீ சொன்னவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை நம்பினோம். ஆனால் இப்பொழுது நாங்களாகவே அவர் சொன்னவற்றைக் கேட்டதால் விசுவாசிக்கிறோம். அவர் உண்மையாகவே இந்த உலகத்தை இரட்சிக்கப்போகிறவர் என்று நம்புகிறோம்” என்று அந்தப் பெண்ணிடம் சொன்னார்கள்.
அதிகாரியின் குமாரன் குணப்படுதல்
(மத்தேயு 8:5-13; லூக்கா 7:1-10)
43 இரு நாட்கள் கழிந்ததும் இயேசு அந்நகரத்தை விட்டு கலிலேயாவுக்குச் சென்றார். 44 (இயேசு ஏற்கெனவே “ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் மதிக்கப்படமாட்டான்” என்று சொல்லியிருந்தார்) 45 அவர் கலிலேயாவுக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் அவரை நல்ல முறையில் வரவேற்றனர். அந்த மக்கள் இயேசு எருசலேமில் பஸ்கா பண்டிகையில் செய்தவற்றையெல்லாம் நேரில் கண்டவர்கள். அந்த மக்கள் அப்பண்டிகையில் கலந்துகொண்டவர்கள்.
46 கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊருக்கு இயேசு மீண்டும் சென்றார். ஏற்கெனவே அவர் அங்குதான் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். ராஜாவின் முக்கியமான அதிகாரி ஒருவன் கப்பர்நகூமில் வசித்து வந்தான். அவனது குமாரன் நோயுற்றிருந்தான். 47 அந்த மனிதன், இயேசு இப்பொழுது யூதேயா நாட்டிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டான். ஆகையால் அவன் கானா ஊருக்குப் போய் இயேசுவைச் சந்தித்தான். கப்பர்நகூமுக்கு வந்து தன் மகனது நோயைக் குணமாக்கும்படி இயேசுவை வேண்டினான். அவனது குமாரன் ஏற்கெனவே சாகும் நிலையில் இருந்தான். 48 “நீங்கள் அற்புதங்களையும் அதிசயங்களையும் காணாவிட்டால் என்னை நம்பமாட்டீர்கள்” என்று இயேசு சொன்னார்.
49 அந்த அதிகாரியோ, “ஐயா, என் சிறிய குமாரன் சாவதற்கு முன் என் வீட்டிற்கு வாருங்கள்” என்று அழைத்தான்.
50 அதற்கு இயேசு, “போ, உன் குமாரன் பிழைப்பான்” என்றார்.
அந்த மனிதன் இயேசு சொன்னதில் நம்பிக்கை வைத்து தன் வீட்டிற்குத் திரும்பினான். 51 வழியில் அவனது வேலைக்காரர்கள் எதிரில் வந்தார்கள். “உங்கள் குமாரன் குணமாகிவிட்டான்” என்று அவர்கள் சொன்னார்கள்.
52 “என் குமாரன் எப்போது குணமாகத் தொடங்கினான்?” என்று கேட்டான் அவன். “நேற்று ஒருமணி இருக்கும்போது உங்கள் குமாரனின் காய்ச்சல் விலகி குணமானது” என்றார்கள் வேலைக்காரர்கள்.
53 இயேசு, “உன் குமாரன் பிழைப்பான்” என்று சொன்ன நேரமும் ஒரு மணிதான் என்பதை அந்த அதிகாரி உணர்ந்துகொண்டான். ஆகையால் அவனும் அவனது வீட்டில் உள்ள அனைவரும் இயேசுவின்மீது விசுவாசம் வைத்தனர்.
54 யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பிறகு, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் இது.
2008 by World Bible Translation Center