Print Page Options
Previous Prev Day Next DayNext

New Testament in a Year

Read the New Testament from start to finish, from Matthew to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 கொரி 3

மனிதனைப் பின்பற்றுவது தவறு

சகோதர சகோதரிகளே, கடந்த காலத்தில்ஆன்மீகமானவர்களிடம் பேசுவதைப் போல நான் உங்களிடம் பேச முடியாமல் போயிற்று. கிறிஸ்துவில் குழந்தைகளைப் போன்று, உலகின் சாதாரண மக்களிடம் பேசுவதைப் போன்று உங்களிடம் பேச வேண்டியதாயிற்று. நான் உங்களுக்குக் கற்பித்தவை பாலைப் போன்றது, திட உணவைப் போன்றவை அல்ல. ஏனெனில் திட உணவை உட்கொள்ளுமளவிற்கு நீங்கள் பக்குவம் பெறவில்லை. இப்போதும்கூட திட உணவை ஏற்கும் தகுதியை நீங்கள் பெறவில்லை. நீங்கள் இன்னும் ஆன்மீகமான மக்கள் அல்ல. உங்களுக்குப் பொறாமையும், வாதாடுகிற குணமும் உண்டு. இது நீங்கள் ஆன்மீகமானவர்கள் அல்ல என்பதைக் காட்டுகிறது. உலகின் சாதாரண மக்களைப் போலவே நீங்களும் நடந்துகொள்கின்றீர்கள். உங்களில் ஒருவன் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்”எனவும், இன்னொருவன் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” எனவும் கூறுகிறீர்கள். நீங்கள் அப்படிப்பட்டவற்றைக் கூறும்போது நீங்களும் உலகின் சாதாரண மக்களைப் போல நடந்துகொள்கிறீர்கள்.

அப்பொல்லோ முக்கியமானவனா? இல்லை. பவுல் முக்கியமானவனா? இல்லை. நீங்கள் விசுவாசிப்பதற்கு உதவிய தேவனுடைய பணியாட்களே நாங்கள். தேவன் எங்களுக்கு இட்ட பணியையே நாங்கள் ஒவ்வொருவரும் செய்தோம். நான் விதையை விதைத்தபோது, அப்பொல்லோ நீரூற்றினான். ஆனால் தேவன் ஒருவரே விதையைத் துளிர்த்து வளரும்படியாகச் செய்தார். எனவே விதையை விதைக்கின்ற மனிதன் முக்கியமானவன் அல்ல. அதற்கு நீரூற்றுகின்ற மனிதனும் முக்கியமானவன் அல்ல. எல்லாவற்றையும் வளர்ச்சியுறும்படி செய்கின்றவராகிய தேவன் ஒருவரே முக்கியமானவர். விதையை விதைப்பவனுக்கும், நீரூற்றிப் பேணுபவனுக்கும் குறிக்கோள் ஒன்றே. தன் வேலைக்குரிய வெகுமதியை ஒவ்வொருவனும் பெறுவான். நாங்கள் தேவனுக்காக ஒருமித்து உழைக்கிற வேலையாட்கள். நீங்களே தேவனுக்குரிய ஒரு நிலத்தைப் போன்றவர்கள்.

நீங்களே தேவனுக்குரிய ஒரு வீட்டைப் போன்றவர்கள். 10 சிறந்த வீட்டைக் கட்டும் வேலையாளைப் போன்று நான் வீட்டின் அஸ்திபாரத்தைக் கட்டினேன். தேவன் எனக்கு அளித்த வரத்தை நான் அதற்குப் பயன்படுத்தினேன். மற்றவர்கள் அந்த அஸ்திபாரத்தின் மீது கட்டுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவனும் அதனை எவ்வாறு கட்டுகிறான் என்பதில் கவனம் செலுத்தவேண்டும். 11 அஸ்திபாரம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. வேறெந்த அஸ்திபாரத்தையும் ஒருவரும் அமைக்க முடியாது. ஏற்கெனவே கட்டப்பட்ட அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவாகும். 12 பொன், வெள்ளி, மணிகள், மரம், புல், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தி ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மீது கட்டமுடியும். 13 ஒவ்வொருவனின் வேலையும் இறுதியில் (கிறிஸ்து மக்களை நியாயம் தீர்க்கிற நாளில்) பகிரங்கப்படுத்தப்படும். அந்த நாளில் ஒவ்வொருவனின் பணியையும் அக்கினி சோதிக்கும். 14 அஸ்திபாரத்தில் ஒருவன் கட்டிய கட்டிடம் நிலைக்குமாயின் அவன் தகுந்த நற்பலன் பெறுவான். 15 ஆனால், ஒருவனின் கட்டிடம் எரிந்து போகுமானால் அவன் நஷ்டம் அடைவான். அந்த மனிதன் காப்பாற்றப்படுவான். எனினும் அக்கினியினின்று தப்பி வந்தாற்போன்று ஒரு நிலையை அவன் அடைவான்.

16 நீங்களே தேவனுடைய ஆலயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாழ்கிறார். 17 தேவனுடைய ஆலயத்தை அழிக்கும் ஒருவனை தேவன் அழிப்பார். ஏன்? தேவனுடைய ஆலயம் பரிசுத்தமானது. நீங்கள் தேவனுடைய ஆலயமாவீர்கள்.

18 உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். உங்களில் ஒருவன் தன்னை இவ்வுலகில் ஞானமுள்ளவனாக நினைத்தால் அவன் முட்டாளாக வேண்டும். இந்த வகையில் அவன் உண்மையான ஞானியாகிறான். 19 ஏன்? ஏனெனில் இந்த உலகத்து ஞானத்தை தேவன் மடமையானதாகவே கருதுகிறார். அது வேத வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. “அவர் ஞானிகள் தங்கள் தந்திர வழிகளைப் பயன்படுத்துகையில் அவர்களை மடக்கிப் பிடிக்கிறார்” [a] என்று எழுதப்பட்டிருக்கிறது. 20 தேவன் ஞானிகளின் எண்ணத்தை அறிவார். அவர்களுடைய எண்ணங்கள் பயனற்றவை என்பதை தேவன் அறிவார். [b] 21 எனவே, நீங்கள் மனிதரைப்பற்றி பெருமைப் பாராட்டாதீர்கள். எல்லாப் பொருள்களும் உங்களுக்கு உரியனவே. 22 பவுல், அப்பொல்லோ, கேபா, உலகம், வாழ்வு, மரணம், நிகழ்காலம், எதிர்காலம் இவை எல்லாம் உங்களுடையவையே. 23 நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள். கிறிஸ்து தேவனுக்கு உரியவர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center